Saturday, November 01, 2025

தயிர்த் தாய் வாழ்த்து!

 

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் என் மகளுக்கு இந்திய உணவு வேண்டும் அதிலும் தென்னக, தமிழக உணவுகள் இருக்க வேண்டும். எங்கேனும் பயணம் செய்யும் பொழுது கூட மூன்று நான்கு நாட்கள் நம் உணவு கிடைக்கவில்லை என்றால் தோசைக்கடை ஒண்ணைப் பாரப்பா என்பாள். தயிர் சாதத்திற்குத் தொட்டுக்க என்ன பிடிக்கும் என்ற குறிப்புக்குக் கட்டுரை எழுத வேண்டும் என அவளிடம் சொன்னேன்.  அதற்குப் பதிலாக, “தயிர்சாதத்திற்கு எதுக்குப்பா தொட்டுக்க ஏதேனும்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டாள். 


நான் செய்யும் தயிர்சாதம் அவளுக்குப் பிடிக்கும். அப்படியே சாப்பிடலாம் என்ற விளம்பரம் போல, அதை அப்படியே சாப்பிடுவாள். அந்தத் தயிர்சாதம் பற்றித் தெரிந்து கொள்ள கல்லிடைக்குறிச்சிக்குத்தான் செல்ல வேண்டும். 


மார்கழி மாதம். பனிக்கொட்டும் அதிகாலை நேரம். பஜனைக்கு நேரமாச்சு என்று எழுப்பிவிட்டுவிடுவார்கள். நாங்கள் வசித்த தெரு முனையில் மூன்று கோயில்கள். வாய்க்காலை ஒட்டிப் பிள்ளையார் கோயில். அதற்கு இந்தப் பக்கம் ஒரே சுற்றுச் சுவருக்குள் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும். இந்த பெருமாள் கோயிலில் ஒரு பஜனை மடம் உண்டு. அங்கிருந்து கிளம்பி கோயில்களைச் சுற்றி இருக்கும் நான்கு தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே செல்லவேண்டும். சில பெரியவர்கள் முன்னே பாடிக் கொண்டு செல்ல, சிறுவர்கள் அவர்கள் பின்னே அவர்கள் பாடியதைத் திரும்பப் பாடிக் கொண்டே செல்ல வேண்டும். தம் வீடுகளின் வழியே செல்லும் பொழுது பிரதான பாடகர் வைத்திருக்கும் துணிப்பையில் அரிசி போடுவார்கள். 


இப்படி நான்கு தெருக்களையும் சுற்றி வந்த பின்னும் பஜனை மடத்தில் உட்கார்ந்து பாடல்கள் தொடரும். சிறுவர்கள் எல்லாரும் எப்படா முடிப்பார்கள் எப்படா பிரசாதம் கிடைக்கும் என்ற நினைப்பிலேயே அமர்ந்திருப்போம். புளியோதரை, எலுமிச்சை சாதம், எள்ளு சாதம் என கலந்த சாதம் ஏதாவது கிடைக்கும். கூடவே தயிர் சாதம். தொன்னை (இலைகளால் செய்த கிண்ணம்) வழிய இரண்டையும் தருவார்கள். அது தனித்தனியாக எல்லாம் இருக்காமல், ஒன்றோடொன்று கலந்து ஒரு புதப் பதார்த்தமாக உருவெடுக்கும்.  சில நாட்களில் வெறும் தயிர்சாதம்தான் இருக்கும். கையில் பிடிக்க முடியாத சூட்டில் இருந்தாலும் அந்த அதிகாலை குளிருக்கு அருமையாக இருக்கும். 


குழைய வடித்த சாதம். சாதம் வடித்த கஞ்சியால் கொஞ்சம் சொதசொத என்றே இருக்கும். அதை நன்றாகப் பிசைந்து, அதில் போடப்பட்ட கல் உப்பு, கொஞ்சம் பால், கொஞ்சம் தயிர். அவ்வளவுதான். ஆனால் அதன் மேல் தாராளமாக பச்சை மிளகாய், இஞ்சி, உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து கொட்டி மேலே கொத்தமல்லித் தழையைத் தூவி  இருப்பார்கள். அந்த வாசம் பாத்திரத்தைத் திறக்கும் பொழுதே மூக்கைத் துளைக்கும். வாயில் உமிழ் நீர் ஊறும். வயிற்றில் கடா முடா எனச் சத்தம் வரும். இதை எழுதும் பொழுது கூட பஜனை மடத்தின் பழைய வாசனை, பூ வாசனை, ஊதுப்பத்தி வாசனை, எண்ணெய் விளக்குகளின் வாசனை, அந்த எண்ணெய் பிசுக்கோடு  இருக்கும் அழுக்குத்துணி வாசனையோடு இந்தத் தயிர்சாத வாசனையையும் என்னால் முகர முடிகிறது. 


அப்படித் தயிர்சாதத்தை வீட்டில் செய்தால் எவ்வளவு செய்தாலும் பாத்திரம் காலி ஆகிவிடும். சட்டென வாயில் அகப்படும் கல் உப்பு, தூக்கலாக இருக்கும் இஞ்சிக் காரம், கொத்தமல்லி வாசம், கடித்துச் சாப்பிட வேண்டிய கஷ்டமெல்லாம் இல்லாத தயிர்சாதத்தை உண்ணத் தொட்டுக் கொள்ள எல்லாம் ஒன்றுமே வேண்டாம். தேவாமிர்தம் தேவாமிர்தம் என்பார்களே, அது கூட இதுக்கு அடுத்த படிதான். “அது என்னவோ நீ செய்வதைப் போல அம்மா செய்வது ருசிப்பதில்லை” என்ற பாராட்டு கொஞ்சம் கூடுதல் ருசியை வேறு தரும். 


நானே சமைச்சதுன்னா நம்பணும்!

இந்த திராட்சைப்பழம், மாதுளம் பழம், முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை எல்லாம் போட்ட ஹோட்டல் தயிர்சாதம் எல்லாம் கணக்கிலேயே சேர்த்துக் கொள்ளக்கூடாது. சிலர் நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவுவார்கள். அது சாம்பர்வடைக்குப் பொருத்தமே தவிர தயிர்சாதத்திற்குச் சேராது. உள்ளி என நாங்கள் சொல்லும் சின்ன வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறு உப்பில் பிரட்டித் தொட்டுக் கொள்ளலாமே தவிர அதைச் சாதத்தில் எல்லாம் போடக்கூடாது. இந்த சேமியா பகளாபாத் என்ற கொடுமையை எல்லாம் தயிர்சாத வகைகள் வரிசையில் சேர்க்கவே கூடாது. 


கலந்த சாதம் செய்தால் அந்தப் புளியோதரைக்கோ எலுமிச்சை சாதத்திற்கோ தயிர்சாதத்தைத் தொட்டுக் கொள்வது உண்டு. ஒரே தொன்னையில் கலந்து கட்டிய நினைவினைக் கிளறுவதாலோ என்னவோ இந்தக் கலப்புப் பிடிக்கும். மத்தபடி ஒரு கரண்டி ரசம், வத்தக் குழம்பு, வடு மாங்காய், ஆவாக்காய் தொக்கு என மாங்காய் ஊறுகாய்,  பூண்டு, நெல்லிக்காய், உப்பு எலுமிச்சை, கார எலுமிச்சை, ஈர நார்த்தங்காய், காய்ந்த நார்த்தங்காய் போன்ற ஊறுகாய் வகைகள், வேப்பிலைக்கட்டி என வழங்கப்படும் கறிவேப்பிலைக்கட்டி மோர் மிளகாய், கார வேர்க்கடலை, மசாலா வேர்க்கடலை, மிக்ஸர் என்பதை எல்லாம் மற்றவர்கள் சொல்வதுதான். 


மாங்காயைத் தோலைச் சீவி விட்டு பல் போன்ற அளவில் வெட்டி அதில் உப்புக் காரம் போடும் மிளகாய் மாங்காயை ஏனோ யாரும் சொல்வதில்லை. அது போல காலையில் வைத்து மீதமான குழம்பையும் கீரையையும் ஒன்றாகச் சேர்த்து கட்டியான பதம் வரும் வரை கொதிக்க விடும் குழம்புங்கீரையையும் அதிகம் தெரிவதில்லை.


சின்ன வயதில் விடுமுறைக்கு வந்திருக்கும் சொந்தக்காரப்பிள்ளைகள் எல்லாரும் முற்றத்தில் அரைவட்டமாக உட்கார்ந்து கொள்ள ஒரு சட்டியில் தயிர்சாதத்தைப் பிசைந்து, ஒரு கவளம் எடுத்து அதில் தன் கட்டைவிரலால் அழுத்திப் பள்ளமொன்றைச் செய்து, அந்தப் பள்ளத்தில் குழம்புங்கீரையையோ வத்தக்குழம்பையோ நிரப்பி அம்மா ஒவ்வொருவர் கையிலும் தருவாள். அதை வாயில் போட்டு முழுங்குவதற்குள் மற்றவர்களுக்கு ஒரு முறை கொடுத்து மீண்டும் நம் முறை வந்துவிடும். எதேதோ கதைகள் சொல்லி அவள் இப்படித் தரும் பொழுது எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாமல் வயிறுமுட்டத் தின்போம். தின்று முடிக்கும் பொழுது தூக்கம் கண்களைச் சுற்றிக் கொண்டு வந்துவிடும். 



தயிர்த்தாய் வாழ்த்து எனச் சொன்ன பின் ஒரு வெண்பாவேனும் எழுத வேண்டாமா. 

முன்னொரு நாளெங்கள் முற்றத்தில் வைத்தெனக்கு

அன்னையும் தந்தாள் அமிர்தமதை - அந்தோ

உயிரினும் மேலாம் உறவைத் தொலைத்தேன்

தயிர்சாதம் தந்த தவிப்பு! 

அம்மா, முற்றம், அவள் கதைகள், சுற்றி அமர்ந்து உண்ணும் பழக்கம் என எல்லாவற்றையும் தொலைத்தாகிவிட்டது. தயிர்சாதம் ஒன்றுதான் எஞ்சி இருக்கிறது.  

0 comments: