எங்கள் தெருவில் இருக்கும் வீடுகள் எல்லாம், கிராமப்புற அக்கிரகார வீடுகளின் இலக்கணம் மாறாமல், ஓடு வேய்ந்த கூரை, திண்ணை, ரயில் பெட்டிகளைக் கோத்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாக அறைகள் என்று நீண்டு செல்லும். இதில் எங்கள் வீடு கொஞ்சம் வித்தியாசப்படும். அது இரண்டு வீடுகளை இணைத்துக் கட்டப்பட்ட ஒன்று. வெளியில் இருந்து பார்த்தால் இரண்டு வாயில்கள், இரண்டு கதவிலக்கங்கள் என்றிருக்கும். ஆனால் பாதி தூரத்தில் இரண்டு வீடுகளும் ஒன்றாகி விடும். இப்படி இரண்டு வாயில்கள் இருந்ததால் இரண்டு திண்ணைகள் உண்டு.
தாத்தா இருந்த வரை, இடப்பக்கத் திண்ணை அவர் ராஜ்ஜியம். மரத்தாலான கணக்குப்பிள்ளை மேஜை ஒன்றைப் போட்டுக் கொண்டு எதோ கணக்கு எழுதுவார். அந்த மேஜையில் மேல் புறம் ஒரு கதவு போல திறக்கும். அதற்குள் பேப்பர் வைக்க, ரூபாய் நோட்டுகள் வைக்க, காசு வைக்க என்று அறைகள் இருக்கும். பேங்கர் மாமா என்று அழைப்படும் அவர் வேட்டியும், மேலுடலை மூடிய அங்க வஸ்திரமும், கோபி சந்தனமுமாய் நெடிய உருவமுமாய் மேஜைக்குப் பின் அமர்ந்திருக்கும் பாங்கே தெருவில் போய் வருபவர்களை ஒரு கும்பிடு போடச் செய்யும், பேங்கர் மாமா எனக் கூப்பிடச் சொல்லும்.
சமயத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பார். அப்பொழுது வேட்டி மடிப்பில் ஆரஞ்சு வில்லையோ அல்லது பைசா வடிவத்தில் இருக்கும் பிஸ்கட்டோ அள்ளி வைத்திருப்பார். தெருவில் அலையும் சிறார்களுக்கு எல்லாம் அது ஈயப்படும். இதனால் சிறுவர்களிடையே அவருக்கு வில்லைத்தாத்தா என்ற பெயரும் உண்டு. குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தை பிறந்திருந்தால், மூட்டை நெல்லைப் பிரித்து வைத்துக் கொண்டு தெருவில் போவோர்க்கெல்லாம் ஒரு படி நெல் அளிக்கும் வழக்கம் அன்றிருந்தது.
காலையில் பத்து பத்தரை மணிக்கெல்லாம் சாப்பாட்டுக் கடை முடிந்துவிடும். இன்று போல காலையில் டிபன் பின் மதியம் என்ற வழக்கம் அப்பொழுது கிடையாது. சாப்பிட்ட பின் திண்ணையில் கொஞ்சம் சாய்ந்து கொண்டோ அல்லது நன்றாகவே படுத்துக் கொண்டோ ஒரு தூக்கம் போடும் வழக்கமும் அவருக்கு இருந்தது. அதிகம் வீட்டுக்குள்ளே செல்லக்கூட மாட்டார். சாயங்காலம் காப்பி எல்லாம் திண்ணையில்தான். அதற்குப் பின் அவர் நண்பர்களோடு ஜமா சேர்ந்து கொண்டு சீட்டு விளையாட்டு தொடங்கிவிடும். அவர்களுக்கெல்லாமும் காப்பி பக்ஷணம் என்று உபச்சாரம் நடக்கும். அதெல்லாம் போதாது என்று அவர் மடியில் சொருகி வைத்திருக்கும் டப்பியில் இருந்து மூக்குப்பொடி விநியோகம் வேறு நடக்கும்.
அவர் காலத்துக்குப் பின் திண்ணை அப்பா வசம் வந்தது. ஆனால் அப்பாவுக்கு ஏனோ வலப்பக்கத் திண்ணைதான். மற்றபடி அப்பாவுக்குத் தப்பாத மகனாக அவரும் திண்ணைக் காப்பி, சீட்டாட்டம் என்று காலத்தைக் கழித்தார். காய்கறி விற்பவர், அரைக்கீரை முளைக்கீரை தண்டுக்கீரை என வகைவகையாக கீரை விற்பவர், மோர் தயிர் வெண்ணெய் கொண்டு வருபவர், பேப்பர் போடுபவர் எனத் தெரு வழியாக வியாபாரம் செய்து கொண்டு போகும் அனைவரும் ஒரு நிமிடமாவது எங்கள் வீட்டுத் திண்ணையில் பாரத்தை இறக்கி வைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் போவர். ஒரு புறம் அவர்களிடம் கறாராகப் பேரம் பேசும் அம்மா, வியாபாரம் முடிந்தது அவர்கள் குடிக்க வெண்ணெய் எடுத்த மோரைத் தருவதும் பழைய துணிகள் இருந்தால் தருவதும் எனக் கருணை வடிவாக மாறிவிடுவார். வியாபாரம் இல்லை என்றாலும் கூட அம்மா எனக் குரல் கொடுத்துக் கொண்டு அவர்கள் ஆஜராகாமல் போனதே இல்லை.
பெரியவர்கள் அப்படி என்றால் சிறுவர்களுக்குத் திண்ணைகள் எல்லாம் விளையாட்டுத் திடல்கள். தாயம், ஆடுபுலி ஆட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள், சீட்டு, செஸ், கேரம் போர்ட் என்று நவீன விளையாட்டுகள், ஒரு சுவரில் துணியைக் கட்டி திரைப்பட அரங்கில் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி வந்த பிலிம்களை வைத்துப் படம் காட்டுதல் என்று விதவிதமாக விளையாடுவது உண்டு. திண்ணைக்குக் கீழ் இருக்கும் சுவரில் செங்கல்லால் ஸ்டம்ப் வரைந்து அதன் முன் பேட்ஸ்மன் இருக்க, விக்கெட் கீப்பர் திண்ணையில் சப்பளமிட்டு அமர்ந்து விளையாடும் விநோதமெல்லாம் ஊரில் உண்டு.
![]() |
| கையை விட்டுப் போன பின் அழகு அழிந்து போன எங்கள் வீடு. |
தொலைக்காட்சிப் பெட்டிகள் வரத் தொடங்கிய காலத்தில் அவை திண்ணைக்கு அடுத்து இருக்கும் அறையில்தான் வைக்கப்பட்டிருக்கும். அந்த வீட்டில் உள்ளவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களோடு அறையில் உட்கார்ந்து பார்க்க, எங்களைப் போன்ற அரை டிக்கெட்டுகள் திண்ணையில் அடித்துப் பிடித்து அமர்ந்துகொண்டு அங்கிருக்கும் ஜன்னல் வழியாகப் பார்ப்போம். மாலை நேரங்களில் மின்சாரம் போய்விட்டால் தெருவில் இருக்கும் அனைவரும் திண்ணைக்கு வந்துவிடுவர். வயதான ஆண்கள் ஒரு வீடு, வயதான பெண்கள் ஒரு வீடு, இளம் வயதுப் பெண்கள் வேறு ஒரு வீடு எனப் பிரிந்து அவரவர் வயதுக்கேற்ற அரட்டையை அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆண்கள் எல்லாரும் ஒரு வேட்டியை விரித்துக்கொண்டு திண்ணையிலேயே படுத்துத் தூங்கவும் செய்வர்.
சில வீடுகளில் வேறு எந்த வேலையும் இல்லாத தாத்தன்மார் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் போவோரிடம் யார், எங்கிருந்து வருகிறார், எங்கே போகிறார், எந்த விஷயமாகப் போகிறார் என்றெல்லாம் ஸ்காட்லாந்து யார்டு லெவலுக்கு விசாரணை நடத்துவர். வேலையாய்ப் போகிறவர்கள் நிற்கவும் முடியாமல் போகவும் முடியாமல் அவஸ்தைப் படுவர். உள்ளிருந்து பாட்டி, என்ன வேலையாய் போகிறார்களோ அவர்களை நிறுத்தி வைத்துக் கொண்டு என்ன நாட்டாமை என்று ஒரு குரல் விட்ட உடன் இவருக்கு விடுதலை கிடைக்கும், சிட்டாய் பறந்து விடுவர்.
தெருவில் இருப்பவர் எல்லோரும் பெரும்பாலும் உற்றார் உறவினராக இருப்பர். அதனால் செய்திருக்கும் பண்டங்கள் இந்த வீட்டுத் திண்ணையில் இருந்து அந்த வீட்டுத் திண்ணைக்கு அனுப்பப்படும். சிறு வயதுப் பயல்கள்தான் பெரும்பாலும் கூரியர் வேலை பார்ப்பர். அவரவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு உள்ளூர் உலகச் செய்திகளோடு தம் வீட்டுச் செய்திகளையும் ஒலிபரப்புவர். இப்படி பல்சுவை விருந்தளிப்பதால்தானோ என்னவோ இப்படி வம்படிப்பதற்குத் திண்ணைக் கச்சேரி என்று பெயர்.
இன்று தெருவில் முக்கால்வாசி பேர் வீடுகளை விற்றுவிட இந்த குடும்பப் பின்னணி குலைந்து போய்விட்டது. வீடு வாங்கியவர்களும் ஒட்டி இருக்கும் வீடுகளை இடித்துவிட்டுத் தனித்தனியாக இருக்கும்படி வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். திண்ணை இருந்த இடத்தில் இன்று பெரிய கேட் போட்டு மூடிய வண்ணம் பல வீடுகள் இருக்கின்றன.
திண்ணைக் கச்சேரிக்கு மங்களம் பாடியாகிவிட்டது.


0 comments:
Post a Comment