சென்ற முறை நான்கு பேர்கள் எல்லா விடைகளையும் சரியாகச் சொல்லி இருந்தார்கள். இந்த முறை இந்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்திருக்கிறது. சரியான விடைகளைச் சொன்ன பெனாத்தல் சுரேஷ், அரசு, வடகரை வேலன், வெட்டிப்பயல், கௌசிகன், யோசிப்பவர், பாலராஜன் கீதா, திவா ஆகிய எட்டு பேருக்கும் என் வாழ்த்துகள்! மதிப்பெண்கள் இந்த பக்கத்தில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. புதிரைப் பார்க்கவில்லையே எனச் சொல்பவர்கள் இங்கே போய்விட்டு வரவும்.
இனி விடைகள்.
பழநி - படமும் தொடங்கி என்பதில் இருந்து ப, நிழலும் தொடங்கி என்பதில் இருந்து நிழ என்ற மூன்று எழுத்துக்களைச் சேர்த்தால் பழநி வரும். கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது பழநியிலே என்ற பாடல் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அது குறிப்பின் இரண்டாம் பாகம்.
நிலைக்காத - ஸ்வரங்கள் என்றால் சரிகமபதநி இவைகளில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களோ வரும் என்பதற்கான குறிப்பு. இங்கு ’காதலைக்’ என்னும் சொல்லோடு ’நி’ என்ற ஸ்வரத்தைச் சேர்த்தோமானால் நிலைக்காத என்ற சொல்லின் எல்லா எழுத்துக்களும் கிடைக்கும். உறுதியில்லாத என்ற குறிப்பின் பகுதி நிலைக்காத என்பதற்கான நேர் பொருளைத் தரும்.
6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)
லாடு - ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் என்ற உடன் பலருக்கும் நினைவில் தோசைதான் வந்திருக்கும். ஆனால் பொருத்தமாக இல்லையே என யோசித்திருப்பார்கள். லாடு என்பது லட்டுவைப் போன்று உருண்டை வடிவம், தித்திப்புச் சுவை கொண்ட ஒரு உணவுப் பொருள். தணலாடும் என்ற சொல்லின் உள்ளேயே விடை இருக்கிறது என்பதை உணர்த்ததான் பார்க்கலாம் என்ற சொல் இருக்கிறது. பலரும் லாடு என்றால் என்ன என கேட்டார்கள் என்பது எனக்கு ஆச்சரியமே.
சுயம் - தானாய் வந்தது சுயம்பு. அது முடியாமல் போனதால் சுயம். தான் எனப் பொருள் உண்டு என்பதால் தன்னை அறிந்து கொள் என பொருள் வருமாறு குறிப்பைத் தந்திருந்தேன்.
கறவை மாடு - பால் தரன்னு சொன்ன உடனேயே கறவை மாடுன்னு நிறையா பேர் சொல்லிட்டாங்க. ஆனா குறிப்பின் மற்ற பகுதி கொஞ்சம் குழப்பமாவே இருக்குன்னும் சொல்லிட்டாங்க. அது எப்படின்னா கசப்புக்கு கடு என்ற ஒரு சொல் இருக்கிறது. கடு மாற வை என்ற எழுத்துக்களைச் சரியாகப் போட்டால் கறவை மாடு வரும். மாற வை என்ற எழுத்துக்களே, விடை மாற்றிப் போடும் போது வரும் எனக் குறிக்கவும் செய்கின்றன.
அலைமகள் - ரொம்ப எளிமையான குறிப்புன்னு நினைச்சேன். ஆனா நிறையா பேரு கஷ்டப்பட்டாங்க. திரை கடலோடியும் திரவியம் தேடுன்னு படிச்சது மறந்து போச்சு போல. திரைன்னா அலை. அலைகள் என்ற சொல்லின் இருக்கும் எழுத்துகள் விலகி ம (மங்கலம் தொடங்கி) என்ற எழுத்து சேர்கையில் இலக்குமி என்ற அலைமகள் வருவாள் என்பது குறிப்பு. இதில் மலைமகள் கலை மகள் எல்லாம் போட்டவங்க அலைமகளுக்குக் கஷ்டப்பட்டாங்க. எந்த விடை போட்டாலும் குறிப்பின் இரு பகுதிகளுக்கும் சரியா வருதான்னு பார்க்கணும். வந்தால்தான் சரியான விடை.
அறுவை - கிட்டத்தட்ட எல்லாரும் மாட்டின குறிப்பு இதுதான். வெட்டி = அறு. திட்டி = வை (திட்டுதல் = வைதல்). இது ரெண்டும் சேர்ந்தா அறுவை. ஆனா அது என்ன துணி? அறுவை என்றால் துணி எனப் பொருள். தெரியுமா?! நம்ம அகராதி என்ன சொல்லுது பாருங்க.
அறுவை (p. 43) [ aṟuvai ] , s. cloth, garment, 2. the 14th lunar mansion.
அறுவையர் , weavers, cloth dealers
14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)
சகா - அருமையான நண்பன் அப்படின்னு வந்த உடனே சகா அப்படின்னு சொல்லிட்டங்க. ஆகாச என்னும் வார்த்தையில் ஆ(பசு) என்ற மிருகம் போக சகா மிஞ்சுது. அது என்ன புளுகன் எனக் கேட்டவங்களுக்கு, ஒண்ணும் விசேஷமில்லை. ஆகாசப் புளுகன் அருமை நண்பன் என எழுத கவுஜ மாதிரி இருந்தது.
16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5)
கஸ்தூரிபா - எனக்கு ரொம்ப பிடிச்ச குறிப்பு இது. மஞ்சள் என்ற உடன் கஸ்தூரி மஞ்சள் நினைவுக்கு வரும். மரபுக்கவிதை என்றால் ‘பா’. ஆக கஸ்தூரிபா - காந்தியின் மனைவி. கஸ்தூர்பா என ஹிந்திக்காரன் போல் எழுதிய கைப்ஸுக்கும் மதிப்பெண் குடுத்தாச்சு. மின்னரட்டையில் மஞ்சள் என்ற உடன் தோணுவது மஞ்சள் பத்திரிகை என்ற நண்பருக்கு - நல்லா இருடே!
17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)
துகள் - வாழ்த்துகள் உள்ளவே துகள் இருக்கே. பொடிப்பொடியா ஆனாத் துகள்தானே.
அநியாய விலை - குறிப்பின் முதல் பகுதி ஒரு சொலவாடை. அநியாய விலை வைப்பதைப் பற்றி இப்படிச் சொல்வார்கள். ரேஷன் கடையைத் தமிழில் நியாய விலைக் கடை எனச் சொல்கிறோமே. அங்கு அநியாய விலை இருக்காதே.
பாக்கு - தாம்பூலத்தின் ஒரு பகுதி, தலைப்பாக்குள்ளே இருக்கு. மீண்டும் பாரு என்பது விடை உள்ளேயே இருப்பதைக் குறிக்கிறது.
பதற்றம் - தடுமாற்றம் என்பது பதற்றத்தைக் குறிப்பது. சுற்றத்தின் தலை போனதால் ற்றம் என்னும் எழுத்துக்களும் அதனோடு பத என்ற இரு ஸ்வரங்கள் சேர்ந்தால் பதற்றம் வருகிறது.
நிலா - சிவனின் தலையில் நிலா இருக்கும் நிழலா என்ற சொல்லின் இடையில் இருக்கும் எழுத்து போனால் நிலா வரும்.
மாற்றுப்பாதை - ஒரு இடத்துக்கு நேராகவும் போகலாம் இதிலும் போகலாம் என குறிப்பை எடுத்துக் கொண்டால் விடை எளிதாகத் தெரியும். நடுவில் இருப்பது வேறு கவிதை, அதாவது மாற்றுப்பா மற்றும் ஒரு மாதம் - தை!
நகங்கள் - வகைகளுக்கு வேறு சொல் தேடினால் ரகங்கள் என்ற சொல் கிடைக்கும். இதன் முதல் சொல்லை மாற்றினோமானால் ஆத்திரத்தில் கடித்துத் துப்பும் நகங்கள் வரும்.
ஸ்தூபி - இது ஒரு நேரடி குறிப்பு. இதுக்கு க்ரிப்டிக் முறையில் குறிப்பு ஒண்ணும் சரியா அமையலை. அதனால நேரடிக் குறிப்பாகவே குடுத்துட்டேன். இது போல ஒன்றிரண்டு குறிப்புகள் வரலாம்.
காது - காதே சொல்லுவது போன்ற குறிப்பு இது. அதில் காது என்பதும் இருக்கிறது என்பது மேற்குறிப்பு.
இந்த மாதப் புதிர் எப்படி இருந்தது. இன்னும் அதிகம் பேரைச் சென்றடைய என்ன செய்யலாம் அப்படின்னு உங்க கருத்தைப் பின்னூட்டமாச் சொல்லுங்க. இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம்.
மீண்டும் அனைவருக்கும் நன்றி!