Tuesday, October 24, 2006

பிளேனில் போனா போலீஸ் புடிக்கும்

என்னடா இவன் இப்போதான் தமிழில் பேசினா போலீஸ் புடிக்கும் அப்படின்னு எழுதினான். இப்போ அமெரிக்காவில் பிளேனிலேயே போகக் கூடாதான்னு கேட்கும் மக்களே, இந்தப் பிரச்சனை நம் திருநாடாம் இந்தியாவில்தான். அட, ஆமாங்க ஆமாம். நேத்து ரீடிப் தளத்தில் இந்த செய்தியைப் படித்தேன். படிச்சதுலேர்ந்து வயத்தைக் கலக்குதப்பா. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். மேட்டர் இதுதான்.

நம் நாட்டில் 126 விமானநிலையங்கள் இருக்காம். அதில் இயங்குவதற்கான அனுமதி பத்திரங்கள் (Operating Licence) பெற்றுள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் ஐந்து. ஆமாம். அதிகமில்லை ஜெண்டில்மென் வெறும் ஐந்தே ஐந்து. தற்போதைய விதிமுறைகள் படி ஒரு விமான நிலையம் இயங்க வேண்டுமானால், இந்த அனுமதி பெற்றே தீர வேண்டும். ஆனால் இவ்வளவு நாட்களாக இந்த அனுமதி இல்லாமல் 121 நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த அனுமதியை வரும் மார்ச் மாத இறுதிக்குள் பெற வேண்டும். இல்லையென்றால் இந்நிலையங்கள் இயங்க முடியாதென்று இத்துறை அமைச்சரகம் தற்பொழுது கெடு விதித்துள்ளது.

இந்த அனுமதி பெற்றிருக்கும் விமானநிலையங்கள் ஐந்தும் இவைதான் - புது தில்லி, மும்பை, கொச்சின், புட்டபர்த்தி மற்றும் மிசோரத்தில் இருக்கும் லெங்புய். நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கொத்தா, ஹைதராபாத், பெங்களூர் போன்ற விமான நிலையங்கள் கூட அனுமதி பெறாமல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் புது தில்லி, மும்பாய் ரெண்டும் தனியார் வசம் சென்றாகிவிட்டது. சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் (International Civil Aviation Organisation) வற்புறுத்தலால்தான் இது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இப்பொழுது பாதுகாப்பு அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், ராணுவத் தலைமை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே இந்நிலையங்கள் DGCA (Directorate General of Civil Aviation) என்ற அமைப்பிடம் சென்று அனுமதி பத்திரம் பெற வேண்டும். அடுத்த ஐந்து மாதங்களில் இதைச் செய்ய வேண்டும். இது போன்று அவசரத்தில் அள்ளித் தெளித்தால் எவ்வளவு தூரம் இது முறையாகச் செய்யப்படுமோ தெரியவில்லை.

இந்த சமயத்தில் என் மனதில் சில கேள்விகள். உங்கள் கருத்தைத்தான் சொல்லுங்களேன்.
  • இது நாள் வரை எப்படி இவ்வளவு விமான நிலையங்களையும் அனுமதித்துள்ளனர்? ஒரு விமான நிலையம் கட்டும் பொழுது பெற வேண்டிய அனுமதிகள் பெறப் பெற்றனவா என்ற தணிக்கையே கிடையாதா?
  • இது சட்டபூர்வமான ஒன்றா? ஒரு விபத்தே நடந்தால் இது யார் பொறுப்பு?
  • இதனை இவ்வளவு நாள் அனுமதித்திருந்த அதிகாரிகள் தண்டிக்கப் படுவார்களா?
  • இப்பொழுது ராணுவமோ, சுற்றுச்சூழல் அமைச்சகமோ, உள்ளூர் அதிகாரிகளோ எதேனும் ஆட்சேபணை எழுப்பினால் என்னவாகும்?

Sunday, October 15, 2006

வீடு பேறும் வண்டிச் சத்தமும்

இந்த வாரயிறுதியிலும் உருப்படியா ஒண்ணும் பண்ணாம குண்டுசட்டியில் குதிரை ஓட்டியாச்சு. மடிக்கணினியை வைத்துக்கொண்டு ஒரு தவமோன நிலையை அடையும் பொழுது ஒரு விவாத மேடையைப் பார்த்தேன். தங்கள் திருமணத்தில் வந்த மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான பரிசுகளைப் பற்றிய விபரங்களும் அதன் மீதான விமர்சனங்களும் இருந்தன. அதில் ஒரு சம்பவம் இது -

" என் கணவரின் வீட்டில் அவருடன் சேர்த்து ஐந்து பேர். அதில் நால்வர் பெண்கள், என் கணவர் மட்டுமே ஆண்பிள்ளை. எங்கள் திருமணம் ஆகுமுன் மற்ற நால்வரின் திருமணமும் நடந்துவிட்டது. மிகப் பெரும் பணக்காரர்களான என் கணவரின் பெற்றோர்கள், தங்கள் பெண்களின் திருமணத்தின் போது அவர்களுக்குப் பரிசாக ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு வாங்கித் தந்தார்கள்.

எங்கள் திருமணத்தின் போது எங்களுக்கு வீடு வாங்கித் தராமல் இரண்டு புதிய கார்கள் மட்டுமே வாங்கிப் பரிசாக தந்தார்கள். பின்னர் மறைமுகமாக இது பற்றிய பேச்சு வந்த பொழுது ஒரு ஆண்பிள்ளை தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும். அடுத்தவர் கையினை எதிர்பார்க்கக் கூடாது என பொருள் படும்படியாக கூறினர். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
"


அத்தளத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட சம்பவம் இது. பெரும்பாலான கருத்துகளை இரு வகைகளில் பிரித்து விடலாம்.

கருத்து - 1

அ) இரண்டு கார்கள் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். இதில் குறை காண்கிறீர்களா? எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியே கிடையாதா? எத்தனை பேருக்கு இப்படி ஒரு பரிசு கிடைக்கும்?


ஆ) எல்லாவற்றிக்கும் பெற்றோரை நம்பி இருக்கலாமா? உங்கள் முயற்சியில் நீங்கள் வீடு வாங்கி அவர்களுக்குச் சமமாக உயர வேண்டுமென்பதே அவர்கள் ஆசையாய் இருக்கும்


இ) பெண்களுக்கு அவ்வளவு செய்து அவர்கள் நொடித்துப் போயிருக்கலாம். அல்லது மற்ற வழிகளில் பணக்கஷ்டம் வந்திருக்கலாம். உங்களுக்கு முழு விபரங்கள் தெரியுமா?



கருத்து -2

அ) என்ன கிடைத்தது என்பதைப் பற்றிய பிரச்சனை இல்லை இது. மகள்களுக்கு ஒரு அளவுகோல் மகனுக்கு வேறு அளவுகோல் என்பது எந்த விதத்தில் சரி?


ஆ) தன் முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற அறிவுரை அவர் மருமகன்களுக்குக் கிடையாதா?


இ) மற்றவர்களுக்குச் செய்தது போல், அவர்களுக்கு வீடு கொடுக்கப் போவதில்லை என்பதை முன்பே சொல்லி இருந்தால், இந்த எதிர்பார்ப்பு இருந்திருக்காது அல்லவா?


இப்படி ரொம்ப பேரு வந்து கருத்து சொன்னாங்கப்பா. ரொம்ப சுவாரசியமா இருந்தது. இந்த மாதிரி நிறையா பேரு வந்து கருத்து சொல்லற விஷயங்கள் எல்லாம் நமக்கு அல்வா மாதிரியா, அதான் எடுத்துப் போட்டாச்சு. உங்க கருத்து என்ன? மாற்று கருத்துகளுக்கு உங்க பதில் என்ன? எல்லாம் வந்து விவரமா போடுங்க.

வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும், இப்பவாவது வந்து கருத்து சொல்லுங்கப்பா. அப்புறம் தலைப்புக்கும் மேட்டருக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்டா, ஒரு பதிலும் இல்லைப்பா. இந்த மாதிரி எல்லாம் பேரு வெச்சாத்தானே வருவீங்க. அதான்.

Tuesday, October 03, 2006

தமிழில் பேசினால் தீவிரவாதியா?

விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த ஒருவர் தனது செல்பேசியில் தமிழில் பேசினாராம். அதனால் சந்தேகப்பட்டு போலீஸார் அவரை விசாரணைக்கு கொண்டு சென்றனராம். பாவம், அவரும் இதனால் தனது விமானத்தைத் தவற விட்டுவிட்டாராம். அதைப் பற்றிய ரீடிஃப் செய்தியைப் பாருங்கள். இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஒரு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கை என்ற போர்வையில் இதை அனுமதித்தாலும் கூட, இச்செய்தியின் கடைசி வரியைப் பாருங்கள். இனி விமான நிலையங்களில் அன்னிய மொழிகளில் பேசுவதில்லை என அவர் அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளாராம்.

என்ன கொடுமை இது சரவணன். இனி விமான நிலையத்திலிருந்து என் மனைவியிடம் பேச வேண்டுமானால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டுமா? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் சரி. ஆனால் என் தாயாரிடம் பேச வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அதையும் சொல்வார்களா? தமிழ் பேசும் நல்லுலகே, உங்கள் கருத்துகளைப் போட்டுத் தாக்குங்க.

இதுதான் அந்தச் செய்தி.

A Tamil-speaking man in the US missed his flight from Seattle over the weekend because at least one person thought he was suspicious.

According to a report in Seattle Post Intelligencer, the man was speaking Tamil and some English in a conversation over his cellphone about a sporting rivalry when getting ready to board an American Airlines flight to Dallas' Fort Worth International Airport.

An off-duty airline employee heard the conversation and alerted the flight crew.

"It's a big misunderstanding," said Bob Parker, the airport spokesman. "He had a perfectly innocent explanation that all added up."

The spokesman noted that it was mandatory for airport officials to investigate reports of suspicious activity. The man was supposed to be talking of a sporting rivalry involving his alma mater.

Parker had no explanation as to why a man speaking Tamil would be considered suspicious. The person who contacted airport officials could give an answer to that question, he added.

The detained person was said to be cooperative and later boarded a flight to Texas. He reportedly told airport officials that he will not speak a foreign language on his cellphone at an airport in the future.

Monday, October 02, 2006

புதுச்சேரி கச்சேரி... (கொஞ்சம் பெரிய பதிவு)

இரண்டு விஷயங்கள் பத்திப் பேசலாம்.

முதலில் இந்த மாதத்திலிருந்து பாண்டிச்சேரி புதுச்சேரி என அழைக்கப்படப் போகிறதாம். இந்த பெயர் மாற்றம் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் வாயில் நுழையாமல் மாற்றி வைத்த பேரை நாம் மாற்றுவது தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. பெரிய நகரங்களின் பெயர் மட்டும்தான் மாறுகிறதா? சிறிய ஊர்களின் பெயர்களும் மாற்றப் படுகின்றனவா? உதாரணமாக வத்திராயிருப்பின் பெயர் மாற்றப்பட்டுவிட்டதா? இப்படி மாற்றுவதற்கு என்ன செலவாகிறது? இதற்காக அங்கு இருக்கும் எல்லா அலுவலகங்களும் தங்கள் லெட்டர்ஹெட், விசிட்டிங் கார்ட் உட்பட எல்லாவற்றையும் மாற்ற நிர்பந்திக்கப் படுகின்றனரா? அதனால் விளையும் பொருள் சேதமென்ன? இந்த மாதிரி பெயர் மாற்றத்தினால பாதிக்கப் பட்ட யாராவது சொல்லுங்களேன்.

புதுச்சேரி கச்சேரி அப்படின்னு பேரு வெச்சாச்சு. அதான் புதுச்சேரி பத்தி பேச வேண்டியதாப் போச்சு. உண்மையில் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ஏன் வலையுலகில் பேசப்படறது இல்லைன்னு அப்படின்னு தெரியலை. பேசலாமே அப்படின்னு சொல்லறவங்க எல்லாம் வாங்க, இப்போ பேசலாம்.

இன்னைக்கு அடுத்த டாபிக் கச்சேரி. இன்னிக்கு கூட யாரோ வலைப்பதிவர் இந்த வார்த்தையை நீதிமன்றம் என்ற பொருளில் உபயோகப்படுத்தியுள்ளதைப் படித்தேன். இதைப் பல பழைய திரைப்படங்களிலும் இந்த பொருள் வருமாறு உபயோகப்படுத்தியதையும் கவனித்துள்ளேன். கன்னடத்தில் கூட கச்சேரி என்றாம் நீதிமன்றம்தான் என நினைக்கிறேன். இந்த வார்த்தை எப்படி சங்கீத கச்சேரி என்ற பொருளில் வருமாறு மாறியது? யாராவது விளக்குங்களேன்.

கச்சேரி என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது நம்ம பெரியவர் எழுதிய ஒரு நகைச்சுவை கட்டுரைதான். நிலாச்சாரலில் வெளிவந்த அந்த கட்டுரையை அவர் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன். (இதெல்லாம் போடலையின்னா வலையுலகில் போராட்டம் நடக்குமாமே ...:) )

கச்சேரிக்கு கூட்டமும், காணாமல் போன எஸ்.என்.ஜெ.வும்

எனது நண்பர் எஸ்.என்.ஜெ. ஒரு கர்நாடக இசை வல்லுநர். (ஆமாம், இவங்க எல்லாருமே மூணு எழுத்துல ஒரு பேர் வச்சுக்கராங்களே, நம்ம சிந்து பைரவி ஜே.கே.பி. மாதிரி. அது ஏன்?) அவரிடம் பேசும்போது அடிக்கடி அவர் வருத்தப்படுவது கச்சேரிகளுக்கு இளைஞர்கள் வருவதேயில்லை, சரியான கூட்டம் இருப்பதில்லை என்பதுதான். நம்மைப் பற்றி தெரிந்தும் இப்படி சொல்லலாமோ? எடுத்துவிட்டேன் கூட்டம் சேர்க்கும் வழிகளை. இதோ வரேன்னு சொல்லிட்டு போனவர்தான். ஆளையே காணும். அப்படி என்னதான்யா சொன்னே என்று கேக்கறீங்களா. மேலே படியுங்கள். சாரி, கீழே படியுங்கள்.

என்ன செய்யணும் என்பதற்கு முன்னால் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கச்சேரிக்கு என்று போனால், உள்ளே இருப்பது முக்கால்வாசி கிழங்கள்தான். அந்த வழுக்கைத் தலைகளையும், நரைத்த முடிகளையும் பார்த்தால், நமக்கும் வயசாகி விட்டதோ என்ற பயம்தான் வருகிறது. அதிலும் பாதி பேர் வீட்டில் மருமகள் பாடும் கோபப் பாட்டைக் கேட்க மனமில்லாமல் இங்கே வந்துவிட்டு மண்டையாட்டி ரசிப்பது போல் ஒரு குட்டி தூக்கம் போடும் வெரைட்டி. இவங்களைத்தாண்டி பார்வையை ஓட விட்டால், ராகம் பாடும் போது நெற்றி சுருக்கி, புருவத்தைத் தூக்கி, பின் கீர்த்தனை வரும் போது கர்நாடிக் கான்ஸர்ட் கைடில் அவசரம் அவசரமாய் ராகம் தேடும் கத்துக்குட்டிகள் ஒரு புறம். பட்டு புடவை சரசரக்க வந்து 'கோமதி மாமி பொண்ணு அமெரிக்கனை கல்யாணம் பண்ணிண்டுட்டாளாமே' என வம்படிக்கும் மாமிகள் மறுபுறம். நடு நடுவே ஒன்றும் புரியாவிட்டாலும், ஓரிடத்தில் அசையாமலிருந்து் எதையோ அனுபவிக்கும் குர்த்தா பைஜாமா வெள்ளைக்காரர்கள், கூடவே குங்கும நெற்றியும், கனகாம்பரமும், சல்வாருமாய் அவர்கள் சகதர்மிணிகள். இவர்களோடு இந்த சபாவில் பாடுவது யார் என்பதை விட காண்டீன் போடுவது யார் என்று ஆராய்ந்து வைத்துக் கொண்டு தனியாவர்த்தனத்தின் போது வெளிநடப்பு செய்து, பாடகர்களின் பிளட் பிரஷரை ஏத்தும் சாப்பாட்டு ராமர்கள். கடைசியாய், எனக்கு இவரைத் தெரியும் என்று அலட்டிக் கொள்ளவே வந்து, தப்பு தப்பாய் தாளம் போடும் பந்தா பார்ட்டிகள். இதுதான் கூட்டம்.

சரி இப்போ கச்சேரிக்கு வருவோம். வர்ணம், ஒரு பிள்ளையார் பாட்டு, ராக ஆலாபனையுடன் ஓரிரண்டு கீர்த்தனைகள், நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரங்கள், நடு நடுவே ஒரு வேகமான பாட்டு, தனி ஆவர்த்தனம், ராகம் - தானம் - பல்லவி (முடிந்தால்), துக்கடாக்கள், ஒரு தில்லானா, மங்களம் என ஒரு மாற்றமே இல்லாத ஒரு பழம் பாணி. இதில் 'சாருக்கு ஒரு காப்பி', என்பது போல் வரும் நேயர் விருப்ப சீட்டுகளும், அது தமிழில் வந்தால் படிக்கத் தெரியாமல் முழிக்கும் பாடகர்களும் ஒரு தனி காமெடி ட்ராக். சில இடங்களில் தமிழ்ப் பாட்டு, தமிழ்ப் பாட்டு என்ற ஏலம் வேறு தனியாக ஒரு பக்கம் நடக்கும். இவ்வளவுதான். அப்புறம் எங்கயிருந்தய்யா வரும் கூட்டம், அதுவும் இளைஞர் கூட்டம்?

சும்மா புதுசு புதுசா மாற்றங்கள் வேண்டாமோ? சாம்பிளுக்கு சிலது பார்ப்போம்.

- இனிமேல் பாடகர்கள் உட்கார்ந்து கொண்டு பாடக்கூடாது. சும்மா மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி நடனமாடிக் கொண்டே பாடவேண்டும். அதிலும் பாடகர்களும், பாடகிகளும் சேர்ந்து கும்பலாய்ப் பாடினால் இன்னும் விசேஷம். கூடவே துணைப்பாடகர்கள், பாடகிகள் எல்லாம் வெள்ளை கவுன் போட்டுக் கொண்டு பின்னாடி ஆடலாம்.

- அதிலும் ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உடை அணிந்து கொண்டு வந்தால் இண்டிரஸ்டிங்காய் இருக்கும். இதற்குத் தனியாய் ஸ்பான்ஸர்ஷிப் வேறு கிடைக்கும். பாடகிகள் அட்லீஸ்ட் ஒரு ஜன்னல் வைத்த ஜாக்கெட்டாவது போட்டுக் கொண்டு வர வேண்டும். அப்போதான் அதை பார்த்து காமெண்ட் அடிக்க ஒரு தாய்மார் கூட்டம் வரும்.

- ராகமாலிகை மாதிரி பாகவதர்மாலிகை என்று ஒரு முயற்சி செய்யலாம். ஒரே பாட்டை ஐந்தாறு பாகவதர்களைக் கொண்டு் பாட வைக்காலாம். அதிலும் ஹிந்திக்காரர்கள் இரண்டு பேர் வந்து முக்கி முக்கி பாடினால் நல்ல வரவேற்பு இருக்கும்.

- இரு பாடல்களுக்கு நடுவே ஒரு சேஞ்சுக்கு ஃபேஷன் ஷோ, மிஸ். கச்சேரி் என வெரைட்டி தரலாம்.

- ஸ்வரம் பாடும் போது நடுவில் கேட்பவர்களையும் பாடச் சொல்லி, கச்சேரியை இண்டராக்டிவாகச் செய்யலாம்.

- வயலின், மிருதங்கம், கஞ்சிரா என ஒவ்வொரு பாட்டுக்கும் வேறு வேறு ஆட்களை மேடைக்கு நடுவே கொண்டுவந்து வாய்பாட்டுக்காரரை ஒரு பக்கமாகத் தள்ளலாம். ஒரு வித்தியாசமாகவும் இருக்கும். சில பாடகிகள் மேல் ஸ்தாயியில் பாடும் போது, முகம் அஷ்டகோணலாய் போவதை பார்க்கவேண்டிய கட்டாயமும் இருக்காது.

- சும்மா 20 ரூபாய், 50 ரூபாய் என வெறும் டிக்கெட் போடாமல் தூங்குபவர்களுக்கு ஸ்பெஷலாய் பெர்த் டிக்கெட் குடுக்கலாம். அப்புறம் ஆர்.ஏ.சி., வெயிட்டிங் லிஸ்ட் என்று நல்ல பணம் பண்ணலாம். 65 வயதுக்கு மேலிருந்தால் லோயர் பர்த் கியாரண்டி எனப் புதுத் திட்டம் கொண்டு வரலாம். கூடவே, குறட்டை வித்துவான்களுக்கென, ஸவுண்ட் ப்ரூப் கம்பார்ட்மெண்ட் எல்லாம் போடலாம். நல்ல ஐடியாவாய் இருக்கும்.

- அப்படியே மெயின் ராகம் முடிஞ்சா மசால் தோசை, துக்கடா பாடும்போது பக்கோடா என்ற கணக்கில் முன்பே ஆர்டர் வாங்கி சீட்டுக்கு வந்து சப்ளை செய்தால் தனியாவர்தனத்தின் போது வாக்கவுட் செய்பவர்கள் இல்லாமல் செய்யலாம். புதுசா, செவிக்குணவு இருக்கும்போதே வயிற்றுக்கும் ஈயப்படும்ன்னு விளம்பரம் எல்லாம் கூட செய்யலாம்.

- புதிதாய் ஒரு பாட்டை பாட முயலுமுன் 'கர்நாடக சங்கீத உலகில் முதன்முறையாக' என்று அடிக்குரலிலோ ' சும்மா நச்சுனு இருக்கு இந்த பாட்டு' என்றோ விளம்பரம் செய்யலாம்.

- கச்சேரியின் இறுதியில் டிக்கெட்டை குலுக்கி போட்டு பரிசு தரலாம். கடைசி வரை கூட்டம் இருக்கும். கூடவே இன்றைய கச்சேரியின் மூன்றாவது பாடல் எந்த ராகம் என்ற ரேஞ்சில் கேள்விகள் கேட்டு ரகசிய புதையல் எல்லாம் குடுக்கலாம்.

- இன்னும் மங்களம் முதலில் என்று ஆரம்பித்து கடைசியாய் வர்ணம் பாடி முடிக்கலாம்.

- ரொம்ப முக்கியமான கச்சேரிகளுக்கு தலைக்கு 50 ரூபாய், பிரியாணி பொட்டலம் என ரேட் பேசி லாரி லாரியாய் ஆள் சேர்க்கலாம்.

முதல்ல இதெல்லாம் செஞ்சு பாருங்க. இதுக்கும் கூட்டம் வரலைன்னா திருப்பி வாங்க, இன்னும் கொஞ்சம் சொல்லறேன்னு சொன்னேன். என்ன தப்பா சொல்லிட்டேன்? ஏன் அப்போ போனவரை இன்னும் காணும்? நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.

Saturday, September 16, 2006

ஏனுங்க இப்படி?

நானும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். இந்த ஒரு விஷயம் மட்டும் பிடிபடவே இல்லை. ஏன் இப்படி பண்ணறாங்கன்னு தெரியவே மாட்டேங்குது. நீங்க யாராவது கொஞ்சம் கேட்டுப் பார்த்து சொல்லுங்களேன்.

நான் சொல்லறது இந்த கிரிக்கெட் மாட்சுங்களைப் பத்திதான். எப்ப , எங்க போட்டி வைக்கணமுன்னுங்கிறது போட்டியில் கலந்துக்கற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் எல்லாம் கலந்து பேசி முடிவு பண்ணற ஒரு விஷயம். இதுல ஐ.சி.சியின் கமிட்டி ஒண்ணு வேற இருக்கு. இவங்க எல்லாம் ஒண்ணாக் கூடி டீ, பிஸ்கெட்டு எல்லாம் சாப்பிட்டுக்கிட்டு எப்ப, எந்த ஊரில் யாரு விளையாடணமுன்னு முடிவு பண்ணறாங்க.

எல்லாம் நல்லா படிச்சவங்கதானே. இவங்களுக்கு எந்த ஊரில் எப்ப மழைக்காலம், எப்ப மழை வாராது அப்படின்னு தெரியாது? தனக்கா தெரியலைனாலும் அந்தந்த பகுதியில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மையங்கள் கிட்ட ஒரு பரிந்துரை வாங்கிக்க மாட்டாங்க? இப்படி எங்க போட்டி நடத்துனாலும் அங்க மழை பெய்யறதே ஒரு வாடிக்கையான நிகழ்வா ஆகிப் போச்சே.

சரி, இதையெல்லாம் பல மாதங்களுக்கு முன்னாடியே முடிவு பண்ணறாங்க. அதனால அந்த குறிப்பிட்ட நாளன்று வானிலை எப்படி இருக்குமுன்னு சொல்லறது முடியாத காரியம். ஆனா ஆகஸ்ட், செப்டம்பரில் கிழக்காசிய நாடுகளில் மழைக்காலம் என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லை?

மத்த விளையாட்டுங்களெல்லாமும் இந்த மாதிரிதானே முன்னாடியே முடிவு பண்ணறாங்க. இந்த அளவுக்கு வேறெந்த விளையாட்டும் மழைக் காரணமாக இந்த அளவு பாதிக்கப் படறதா தெரியலையே. அது ஏன்? ஒரு வேளை அங்க கமிட்டி எல்லாம் போடாம முடிவு பண்ணறதுனால சரியான முடிவுகள் எடுக்கறாங்களா? ஒண்ணும் புரியலையே.

இதுல மழை வரது இயற்கை நிகழ்வு. அதனால ஒரு பந்து கூட போடலையினாலும் டிக்கெட் காசை திருப்பி எல்லாம் தரமுடியாது அப்படின்னு ஏப்பம் வேற விடறாங்க. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் விளம்பரக் காசு எல்லாம் வராம போகுதுன்னு அதுக்கு வேற தனியா இன்ஷூரன்ஸ் பண்ணி அங்க வேற பணம் வாங்கிக்கறாங்க. ஒரு வேளை இதுக்கெல்லாம்தான் மழைக்காலமா பாத்து போட்டியை வைக்கறாங்களா?

சரி. அப்படி என்னதான் யோசிச்சு முடிவு எடுத்தாலும், அது என்னவோ தெரியலை என்ன மாயமோ தெரியலை, கிரிக்கெட் போட்டி நடத்துனா மட்டும் மழை வருது அப்படின்னு சொன்னீங்கன்னா, மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

இப்படிக்கு,
இணையத்தில் கிரிக்கெட் மாட்ச் பார்க்க முடியாவிட்டாலும் வர்ணனையையாவது படிக்கலாம் என தூக்கத்தைக் கெடுத்து எழுந்து உட்கார்ந்து இருக்கும்

அப்பாவி ரசிகன்.

Sunday, September 10, 2006

விடைபெறுகிறேன்

ஆஹா! தொல்லை விட்டுதுன்னு ஜாலியா பதிவை திறக்கும் மக்கள்களே. உங்களை அவ்வளவு சீக்கிரம் விடறதா இல்லை. கடந்த இரு நாட்களில் இரண்டு விடைபெறுதல்கள் நடந்தன. தத்தம் விளையாட்டுகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இருவர், விளையாடியது போதும் என முடிவெடுத்து விட்டனர். எனது ஹீரோக்களான அவர்களை வாழ்த்திடவே இந்தப் பதிவு.



முதலில் சனிக்கிழமை அன்று யூ.எஸ். ஓப்பன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தனது 50ஆவது வயதில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மார்டினா நவரத்திலோவா. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக டென்னிஸ் உலகில் தனது முத்திரையைப் பதித்த இவரது வெற்றிகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். தனது கடைசி ஆட்டத்திலும் மிகத் திறமையாய் விளையாடி கோப்பையை வென்ற இவருக்கு நமது வாழ்த்துக்கள்.



அடுத்ததாக இன்று இத்தாலிய கிராண்ட் பிரி போட்டியில் வெற்றிக் கனியை பறித்த கையோடு தனது ரிட்டயர்மெண்டை அறிவித்த மைக்கேல் ஷுமாக்கர். 90 வெற்றிகள், 68 முதலிடத் தகுதிகள், 1354 வெற்றிப் புள்ளிகள், 7 முறை உலக சாம்பியன் பட்டம் - வேறேதாவது சொல்ல வேண்டுமா? இந்த வருடமும் உலக சாம்பியன் பட்டம் பெற இவரை வாழ்த்தி, இவரின் இடத்திற்கு வர இருக்கும் கிமி ரெய்க்கோனனையும் வருக வருக என வரவேற்போம். ஃபெராரியில் மைக்கேலின் பங்கு என்னவென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இருவரும் மனதே இல்லாமல்தான் பிரிவதாகத் தோன்றுகிறது. எல்லா வகைப்பட்ட சாதனைகளும் புரிந்திட்ட நிலையிலும் தாங்கள் பங்கு பெறும் ஒவ்வொரு போட்டியையும் ஒரு புதுமுகத்திற்குண்டான உற்சாகத்துடன் எதிர் கொண்ட இவர்கள் வாழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடம். இவர்களைப் பற்றி விரிவான பதிவுகள் வரும். வரவில்லையென்றால் நாமே போட வேண்டியதுதான்.

இந்த இருவருமே ஒரு வெற்றியோடு தாம் விலகுவதை அறிவித்த பாங்கு என்னைக் கவர்ந்தது. Way to go Champions!

படங்கள் இணையத்தில் திருடப்பட்டவை. தந்த தளங்களுக்கு நன்றி.

Tuesday, September 05, 2006

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நம்ம மக்கள் பியர் குடிக்கும்போது சும்மா குடிச்சாத்தான் தேவலையே. ஆனா சும்மா இருக்காம காரமா சைட் டிஷ் தேடி அலையறாங்க. அதுவும் வறுத்த ஐட்டமா இருந்தாதான் வசதியா இருக்கு. அது முறுக்கு, சிப்ஸ் அப்படின்னு ஆரம்பிச்சு சிக்கன் 65, சில்லி சிக்கன் அப்படின்னு போயி முடியுது. பியரை விட இந்த ஐட்டங்களில்தான் தொப்பை, தொந்தின்னு வந்து தங்கமணிங்க வாயில விழுந்து புறப்பட வேண்டியதா இருக்கு. அது மட்டுமில்லாம கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிஸரைட்ஸ் அது இதுன்னு வேற பயமுறுத்தறாங்க. இதுக்கெல்லாம் பயந்து அவனவன் பியர் குடிக்கறதையே விட்டுடுவான் போல இருக்கு.

இந்த போக்கே சரி இல்லையே. இவங்களுக்கு எல்லாம் நல்லதா எதாவது பண்ணணுமே அப்படின்னு ராத்திரி பகலுன்னு பார்க்காம நம்ம பக்கத்துல ஒரு ஆள் யோசிக்கிட்டே இருந்தாரு. அப்போ அவரு மூளையில திடீருன்னு உதிச்ச ஒரு உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய இந்த விஷயம்.



இதுதாங்க சில்லி பியர். மேட்டர் என்னான்னு படத்தைப் பார்த்தாலே புரிஞ்சு இருக்கும். " இந்த பியருக்கும் மத்த பியருக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மிளகாய். ஒரே ஒரு மிளகாய்" அப்படின்னு தமிழ் தெரியாத மெழுகு பொம்மை வந்து சொன்னாதான் புரியும் அப்படின்னு உங்களை நான் குறைச்சு மதிப்பிடாததுனாலதான் அதெல்லாம் பண்ணலை.

ஹேலப்பீனோ (Jalapeno) என்ற வகை மிளகாய் ஒன்றை எடுத்து ஒரு பாட்டில் பியருக்குள் போட்டு ஊற வைத்து விட்டார்கள். அதிலுள்ள காரம் எல்லாம் மெதுவாக இந்த பியருள் இறங்கி பியர் மிகுந்த சுவையோடு இருக்கிறது. நல்ல காரமாய் இருப்பதால் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். நமக்கு புரியற வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் -"அப்படியே சாப்பிடலாம்".

ஆகவே இந்த மாதிரி நம்ம மக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்த மாதிரி ஒரு புதுமையான ஐட்டத்தைக் கண்டுபிடித்த மகானுபாவருக்கு ஒரு 'ஓ' போட்டுட்டு ஆக வேண்டிய வேலையைப் பாருங்கப்பா!

Friday, September 01, 2006

அட்லாஸ்(ட்) நன்றி

என்னடா இவன் நன்றி சொன்னா கிண்டல் பதிவு போடறான், இப்போ இவனே நன்றி சொல்லறான்னு பாக்கறீங்களா? இது விஷயம் வேற. நம்ம பசங்க எல்லாம் என்ன நீங்க எங்க எங்கயோ போயி பதிவு போடறீங்க. நாங்க எல்லாம் பதிவு படிக்கறதா இருந்தா உங்க பதிவுல மட்டும்தான் படிப்போம் அப்படின்னு ஒரே ரவுசு. இந்த அன்புக்கும் பாசத்துக்கும்தான் நன்றி. இந்த பசங்களுக்கு இப்படி எல்லாம் இருக்கக் கூடாது, அப்படின்னு சொல்லி இங்க சுட்டி தரேன் அப்புறமாவது போயி படிங்கன்னு சொல்லவும்தான் இந்த பதிவு.

ஜுலை மாதம் நம்ம வ.வா.சங்கத்தில நம்மளை அட்லாஸ் வாலிபரா தேர்ந்தெடுத்து வாரம் ஒரு பதிவு போடச் சொன்னாங்க. ஆடிக்கு ஒரு பதிவு, அமாவாசைக்கு ஒரு பதிவு போடற நம்மளால வாரம் ஒரு பதிவு போடமுடியுமான்னு ஒரே கவலை. ஓடினேன் பாரு ஒரு ஓட்டம். வாழ்க்கையின் எல்லை வரை ஓடலைன்னாலும் கிட்டத்தட்ட இந்த உலகின் எல்லை வரை ஓடி நம்ம துளசி டீச்சர் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவங்கதான் சொன்னாங்க, " கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டு இரு. நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு. அதை வெச்சி வாரம் ஒரு பதிவு என்ன, ஒரு நாளைக்கு ஒரு பதிவு வேணாலும் போடலாம்." அப்படின்னு சொன்னாங்க. நாமளும் அதை சிரமேற்கொண்டு கண்ணை நல்லா திறந்து வெச்சுக்கிட்டு அலைஞ்சேன். அப்படித்தான் நான் போட்ட நாலு பதிவும் மாட்டிச்சு. ஒண்ணொண்ணா பார்க்கலாம்.

போட்ட முதல் பதிவு மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு. நமக்கு வேண்டப்பட்ட ஆளு ஒருத்தரோட பேசிக்கிட்டு இருந்தம்போது வந்த ஐடியா இது. அது யாருன்னு கேட்டீங்கன்னா, வேற யாரும் இல்லை. நம்ம தளபதி நாமக்கல்லார்தான். அவரு நமக்கு புதுக்கவிதை பத்தி கிளாஸ் எடுக்கப் பாத்தாரு. நாம் அவருக்கு திறனாய்வு கிளாஸ் எடுத்துட்டோமில்ல!

அடுத்துப் போட்ட பதிவு - பரிணாம வளர்ச்சி. நம்ம தெக்கி போட்ட ஒரு பதிவு பத்தி அவரோட சாட் பண்ணும் போது வந்த ஐடியா இது. பேசிக்கிட்டே இருக்கும் போது வெகு வேகமா டெவலப் ஆச்சு. பதிவின் நீளம் கருதி யோசிச்ச சில ஐடியாக்கள் போட முடியாமப் போச்சு. தனக்கு ஒரு வளர்ச்சியும் சொல்லலையேன்னு செல்லமா திட்டினவங்க கூட உண்டு!

பரிணாம வளர்ச்சிக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 574. இது ஓடிக்கிட்டு இருக்கும் போதே ஒரு வாரம் போனதுனால அடுத்த பதிவு போடச் சொல்லி கைப்பு கிட்ட இருந்து ஒரே பிரஷர். அந்த சமயத்தில நம்ம போலிஸ்கார் வேற பின்னூட்டக் கயமைத்தனம் பத்தி போட்டாரா, நாமளும் அதைச் சாக்கா வைச்சு அடுத்த பதிவு ரெடி பண்ணியாச்சு - வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம்.

கடைசியாப் போட வேண்டியது நன்றி நவிலல்தானே. ஆனா அப்போ நம்ம தேன்கூடு போட்டி முடிஞ்சு எல்லாரும் நன்றி சொல்லிக்கிட்டு இருந்தாங்களா? நமக்குக் கொஞ்சம் டென்ஷனாகிப் போச்சு. சரின்னு அதை வெச்சே ஒரு நன்றி பதிவு போட்டாச்சு. அதான் தேன்கூடு போட்டி - நன்றி நவில்தல் .

இப்படித்தான் நம்ம அட்லாஸ் மாதம் ஓடிச்சு நண்பர்களே. இந்த பதிவுகளுக்கு காரணிகளாக இருந்த நண்பர்களுக்கும், இப்படி எல்லாம் கவனமா இருக்கச் சொன்ன டீச்சருக்கும், வந்து படிச்சவங்களுக்கும், செய்ய வேண்டியதை சரியா செஞ்ச நண்பர்களுக்கும், எனக்கு ஒரு சவுண்டிங் போர்டாக இருந்த (இருக்கும்)எஸ்.கே அவர்களுக்கும் நம்ம நன்றி.

Wednesday, August 30, 2006

வாள மீனுக்கும்.....


இது இன்றைய தினமலர் இணையப் பதிப்பில் வந்த புகைப்படம். பார்த்தவுடன் மனதில் தோன்றிய வரிகள்.....

"வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" . என்ன வைகோதான் விரலை நீட்டாம விட்டுட்டார்.

திஸ்கி:

இது வெறும் நகைச்சுவைக்காகத்தான். படத்தில் இருக்கும் தலைவர்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் இல்லை. கொஞ்சம் டென்சன் ஆகாம சிரிச்சு வையுங்க மக்களே.

Monday, August 07, 2006

யோகன் பாரிஸ் அவர்கள் கவனத்திற்கு

நண்பர் லதா அவர்கள் தனி மடலில் அனுப்பியது. யோகன் பாரிஸ் அவர்களைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் வந்துள்ள செய்தி. அவர் பார்த்துள்ளாரா எனத் தெரியவில்லை. ஆகவே இந்தப் பதிவு. அவரிடம் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் தயவு செய்து அவரிடம் இந்த சேதியை தெரிவிக்கவும்.

இனி செய்தி. இது 13 08 2006 தேதியிட்ட ஆனந்த விகடன் சுஜாதா கற்றதுப் பெற்றதும் பகுதியில் எழுதியது.

====
விகடன் 23.07.06 இதழ் க.பெ.பகுதியில் பத்மநாதனின் கவிதையில், 'கடகம்' என்ற சொல்லுக்குச் 'சும்மாடு' என்ற விளக்கம் தவறு என்று, யோகன் பாரிஸ் மின்னஞ்சல் செய்துள்ளார். ஈழத்தில் கடகம் என்று குறிப்பிடுவது , பொருள்களைச் சுமக்க பாவிக்கும், பனையோலையால் இழைத்து அதன் வெளிப்பகுதிக்குப் பனை நாரால் மேலிழைப்பு செய்து, வாய்ப்பக்க விளிம்பில் தடித்த நார் வைத்த பெட்டி. அது இன்றும் பாவனையில் உள்ளதாம். (பாவனை - பயன்பாடு)

====

வாழ்த்துக்கள் யோகன் பாரிஸ்.