Friday, October 17, 2025

அரை அம்மண ஆண்டி!

 

1931ஆம் ஆண்டு. இந்திய அரசியல் சட்டத் திருத்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். அதன் பகுதியாக இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய காங்கிரஸின் ஒரே பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. தங்களின் ஆட்சியாளர்களோடு இந்தியர்கள் சரிசமமாக அமர்ந்து பேசுவது ஆங்கிலேயர்கள் பலருக்கு உறுத்தலாக இருந்தது. பின்னாட்களில் இங்கிலாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு படி மேலே சென்று, “இங்கு வக்கீலுக்குப் படித்துவிட்டு, கிழக்கு நாடுகளில் காணப்படும் அரை அம்மண ஆண்டிகளின் தோற்றத்தில், பிரிவினைவாதம் பேசித் திரிபவர், நம் மாளிகைப் படியேறி, நம் அரச பிரதிநிதிகளுக்குச் சமமாக அமர்ந்து பேசப் போகிறார்” என்று அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையால் காந்திக்கு அரை அம்மண ஆண்டி (Half Naked Fakir) என்ற அடைமொழி கிடைத்ததுதான் மிச்சம். 

இன்று நமக்கு காந்தி என்றவுடன் நினைவுக்கு வருவது கையில் ஒரு கம்புடன் முட்டிக்கு மேல் தூக்கிக் கட்டப்பட்ட வேட்டியும், மேலுடலை மறைக்கப் போர்த்தப்பட்ட துண்டும் கொண்ட உருவம்தான். ஆனால் ஆரம்பத்தில் காந்தி அணிந்து கொண்ட உடைகள் இவை இல்லை. அவர் இந்த உடைகளுக்கு மாறியதற்குப் பின் ஒரு கதை இருக்கிறது, அரசியல் இருக்கிறது, சமுதாயத்தின் மீதான அக்கறை இருக்கிறது. 

https://www.cartoonistsatish.com/gandhi/

காந்தியின் தந்தையின் மரணத்திற்குப் பின் அவரின் குடும்பம் ஒரு சராசரிக் குடும்பமாகத்தான் இருந்தது. அவர் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல முடிவான பின்பு அதற்கான செலவுகளுக்குப் பணம் திரட்டுவது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் இங்கிலாந்தில் அணிவதற்கு ஏற்ற உடைகளைக் காந்தி வாங்கிக் கொண்டதாகத் தன் சுயசரிதையில் எழுதி இருக்கிறார். அப்பொழுது வாங்கிய கோட்டுகளும் கழுத்துப்பட்டைகளும் ஆரம்ப காலத்தில் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் பின்னாட்களில் கோட்டுகளையும் கழுத்துப்பட்டைகளையும் விரும்பி அணியத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற உடைகள் அங்கிருந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவையாக இல்லை என்று உணர்ந்து லண்டனில் புதிய உடைகளை காந்தி வாங்கிக் கொண்டார். கோட்டு சூட்டும், கழுத்துப்பட்டையும், தங்க கைக்கடிகாரமும், தொப்பியுமாக அவர் ஐரோப்பிய உடைகளுக்கு முழுதும் மாறினார். ஆனால் ஒரு கட்டத்தில் படிக்க வந்திருக்கும் மாணவனுக்கு இத்தனை படாடோபம் தேவை இல்லை என்று செலவுகளைக் குறைத்தும் கொண்டார். 

அங்கிருக்கையில் அவர் தமக்குப் பின் இங்கிலாந்து வரும் இந்தியர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு, உதவியாக இருக்கும் வரையில் லண்டன் கையேடு (Guide to London) என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகத்தை எழுதினார். அதிலும் கூட ஐரோப்பிய பாணி உடைகளான overcoat, morning coat, waistcoat, jacket suit, pairs of trousers, drawers (woollen, cotton or merino), woollen vests போன்றவற்றைக் கொண்டு வர வேண்டும் எனப் பட்டியலிட்டுள்ளார். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பி வந்து பாரிஸ்டராகப் பணிபுரிய முனைந்த பொழுதும் அவரின் உடைகளில் மாற்றங்கள் ஏதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், தன்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்த பொழுது அண்ணனின் குழந்தைகளையும் தன் பையனையும் கூட ஐரோப்பிய பாணி உடை அணியச் செய்ததாக காந்தியே எழுதி இருக்கிறார். 

இந்தச் சூழலில்தான் அவரது தென்னாப்பிரிக்கப் பயணம் அமைந்தது. அங்கு முதலில் அவர் அணிந்த கோட்டும் தலைப்பாகையும் அவரை அந்நியப்படுத்திக் காட்டினாலும் அவர் அதையே அணிந்தார். அங்கு சென்ற சில நாட்களிலேயே காந்திக்கு மாவட்ட நீதிமன்றம் ஒன்றிற்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் அமர்ந்திருந்த பொழுது அவரின் தலைப்பாகையை நீக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டார். ஆனால் காந்தியோ அதற்கு ஒத்துக்கொள்ளாமல் அந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். பின் வெகு நாட்களுக்கு அவர் அங்கு தலைப்பாகை அணியும் பழக்கத்தைக் கைவிடவில்லை. இது குறித்து அவர் நாளிதழ்களில் எழுத, அவரின் பெயர் பலருக்கும் தெரிய வந்தது. காந்தி தான் அணியும் உடையை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது இங்கேயே தொடங்கிவிட்டது. 

காந்தி இந்த தலைப்பாகை அணியும் உரிமையை தனக்கு மட்டும் வேண்டுமெனப் போராடவில்லை. பாலசுந்தரம் என்ற தமிழர் அங்கு ஒப்பந்தக் கூலிக்காரராக வேலை பார்த்து வந்தார். அவருடைய முதலாளி கோபத்தில் கண்டபடி அவரை அடித்துக் காயப்படுத்திவிட அவர் காந்தியின் உதவி நாடி அவரைப் பார்க்க வந்தார். அப்பொழுது சமூகத்தில் தம்மை விட மேலான நிலையை இருந்தவர்களைப் பார்க்கும் பொழுது தலைப்பாகையைக் கழட்டி வைத்துக் கொள்வது வழக்கம். அதன்படி பாலசுந்தரமும் காந்தியைப் பார்க்கும் முன் தன் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்துக் கையில் வைத்துக் கொண்டு காந்தியை வணங்கினார். சக மனிதன் இப்படி வணங்க நேர்ந்ததைக் கண்டு திகைப்படைந்த காந்தி அவரை மீண்டும் தலைப்பாகையை அணிய நிர்பந்தித்தார். மிகுந்த தயக்கத்தோடு பாலசுந்தரம் தலைப்பாகையை அணிந்தாலும் அவர் முகத்தில் தென்பட்ட பெருமிதம் தனக்கு மகிழ்ச்சியை அளித்தது என்று காந்தி குறிப்பிட்டு இருக்கிறார். 

ஆனால் தேவைப்பட்ட நேரத்தில் காந்தி உடை விஷயத்தில் சமரசம் செய்யவும் தயங்கவில்லை. ஒரு முறை, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் காந்தி வழக்காட நேர்ந்த பொழுது அங்கிருந்த தலைமை நீதிபதி வக்கீல்களுக்கான உடை குறித்த விதிகளை குறிப்பிட்டு காந்தி தலைப்பாகையை அணியக் கூடாது என்று சொன்ன பொழுது அவ்வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி காந்தி அந்த கோரிக்கைக்கு உடன்பட்டு தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு வாதாடினார். அவரின் நண்பர்களுக்கு அந்தச் செய்கையில் ஒப்புதல் இல்லை என்பதை அறிந்து, அவர்களிடையே தான் ஏன் அப்படிச் செய்ய நேர்ந்தது என்பதை விளக்கினார். சில நேரங்களில் பெரிய இலக்கினை அடைய இது போன்ற சிறிய சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டும் என்ற தன் நம்பிக்கையை எடுத்துச் சொன்னார். அவரின் சத்யாகிரகப் போராட்ட வழியில் இந்தச் சமரசங்கள் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தன. 

காந்தி தென்னாப்பிரிக்க அரசியலில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா வந்திருந்தார். அந்நேரம் அவர் கர்சன் பிரபு, இந்தியா கிளப் என்ற இடத்தில் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். பொதுவாக இந்தியா கிளப்பிற்கு இந்திய உடைகளில் வருபவர்கள் அன்று கோட்டும் பூட்ஸும் அணிந்து வந்திருந்ததைக் கண்டு வியந்த அவர், அப்படி உடையணிந்த நண்பர் ஒருவரிடம் ஏன் இப்படி உணவகத்தில் பரிமாறும் சிப்பந்திகளைப் போல உடையணிந்து வந்திருக்கிறீர்கள் என வினவினார். அதற்கு அந்த நண்பர், நாங்கள் கர்சன் பிரபுவிற்கு வேலையாட்கள்தானே. அதனால் இந்த வேஷத்தை அணிய வேண்டியிருக்கிறது என மனம் நொந்து பதில் சொன்னார். இந்நிகழ்வு, மற்றவர்களுக்காக நம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வியை காந்தியின் மனத்தில் எழுப்பியது. 

தென்னாப்பிரிக்காவிற்குத் திரும்பிய காந்தி, தான் அணியும் உடைகளில் அடுத்த மாற்றத்தைக் கொண்டு வந்தார். ஐரோப்பிய பாணி உடைகளை விடுத்து இந்திய பாரம்பரிய உடைகளை உடுத்தத் தொடங்கினார். இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்த ஒன்றல்ல. காந்தி படிப்படியாக இந்த மாற்றத்திற்குத் தன்னை உட்படுத்திக் கொண்டார். தான் போராடும் மக்களோடு தன்னை இணைத்துக் கொள்ள இது ஒரு வழியாக அவருக்குப் பட்டது. 

தென்னாப்பிரிக்காவில் தன் பணி முடிந்து லண்டன் வழியாக இந்தியாவிற்கு 1915ஆம் ஆண்டு நிரந்தரமாக திரும்பினார் காந்தி. லண்டனில் இருந்து இந்தியா வரும் பொழுதே இந்திய பாரம்பரிய ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டார். அதன்படி அவர் ஒரு வேட்டியும் மேற்சட்டையும், வட இந்திய பாணி தலைப்பாகையுமாகத்தான் கப்பலில் பயணம் செய்தார். கஸ்தூர்பாவும் ஒரு சாதாரணமானச் சேலையையே உடுத்தி இருந்தார். இந்த எளிமையான கோலத்தில் இவ்விருவரையும் பார்த்த மக்கள் திகைத்து நின்றார்கள். அவரின் இந்த உடை சராசரி மக்களோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. காந்தி இந்தியாவிற்கு திரும்பி வந்த நிகழ்வின் நூறாவது ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக இந்திய தபால்துறை கஸ்தூர்பா, காந்தி இருவரின் எளிமையான தோற்றத்தின் படங்களைக் கொண்ட தபால்தலைகளை வெளியிட்டது. 


PC - Hariharan Sankaran


பணக்காரர்களும் தலைவர்களும் ஐரோப்பிய நாகரிகத்தை பின்பற்றி வந்த நேரத்தில், இப்படி எளிமையான உடைகளில் மேடை ஏறிய காந்தியை வியந்து பார்த்தனர் இந்திய மக்கள். காந்தி தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள இப்படி உடை அணியவில்லை, தான் எது சரி என்று நம்பினாரோ அதைத்தான் செய்தார். தனது நம்பிக்கைகள் மாறும் பொழுது அதற்கேற்ற மாதிரி தன் நடவடிக்கைகளில் மாற்றங்களைச் செய்து கொள்வதில் அவர் தயங்கியதே இல்லை. 

இந்தியா திரும்பிய காந்தி, தனது அரசியல் குருவான கோகலே அவர்களின் அறிவுரைப்படி, ஒரு வருட காலம் இந்தியாவைச் சுற்றிப் பார்த்து, இம்மக்களோடு பழகி, அவர்களது தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு, அதற்காக தீர்வுகளை யோசித்துவிட்டு, தீவிர அரசியலில் இறங்கலாம் என முடிவு செய்தார். சாதாரண மக்களோடு பழக மூன்றாம் வகுப்பிலேயே பெரும்பாலும் பயணம் செய்தார். எளிமையான உடைகளை அணிந்து மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் பயணம் செய்த தலைவர்களை பார்த்தே இராத மக்களுக்கு காந்தியின் நடவடிக்கைகள் ஆச்சரியத்தை அளித்தன. இந்த எளிமை எதிர்பார்க்கப்பட்டதில்லை என்பதால் காந்திக்கு சில இடங்களில் அவரை அடையாளம் தெரியாமல் ஒரு தலைவருக்கு உண்டான மரியாதை கிடைக்காமல் சிரமங்கள் ஏற்பட்டதும் உண்டு. அவற்றை எல்லாம் அவர் தன் போக்கில் எதிர்கொண்டாரே தவிர தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. 

உதாரணமாக 1915ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்த பொழுது காந்தியை வரவேற்க ரயில்நிலையத்தில் குழுமி இருந்த தலைவர்கள் அவரைத் தேடி முதல் வகுப்புப் பெட்டிகளை நோக்கிச் செல்ல, மூன்றாம் வகுப்புப் பெட்டியில் இருந்து இறங்கிய காந்தியை யாருமே கண்டு கொள்ளவில்லை. அவரே தம்மை வரவேற்க வந்தவர்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலைமை உண்டாயிற்று. 

பொதுவாக தலைவர்களும் சமூகத்தில் பெரும் அந்தஸ்து கொண்டவர்களும் வெளிநாட்டுத் துணிகளை அணிவது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல, இந்தியர்கள் இந்தியாவில் தயார் செய்யப்படும் உடைகளையே அணிய வேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கத் தொடங்கினார் காந்தி. காதி எனப்படும் கைத்தறி ஆடைகளை மாற்றாக அடையாளம் காட்டினார். இந்திய கைத்தறியை மீண்டும் மக்களுக்கானதாகச் செய்யவும் முயற்சிகளை முன்னெடுத்தார். அந்த முயற்சியைத் தனது ஆசிரமத்தில் இருந்தே தொடங்கினார். 

இந்தியாவில் தனது முதல் ஆசிரமத்தை அகமதாபாத்தில் அமைக்க காந்தி முடிவு செய்ததில் ஆச்சரியம் இல்லை. அவர் ஒரு குஜராத்தி, எனவே அங்கே இருந்து தன் சேவையைத் தொடங்க அவர் முடிவு செய்தது நியாயமே. ஆனால் அம்முடிவுக்கு பின் வேறு ஒரு காரணமும் இருந்தது. அகமதாபாத் கைத்தறிக்குப் பெயர் போன நகரம். ஆனால் அச்சமயத்தில் அந்தத் தொழில் அங்கே நசிந்து போயிருந்தது. அதனை மீட்கும் வகையில் தனது ஆசிரமத்தை அங்கே அமைக்கப் போவதாக காந்தி முடிவெடுத்தார். தனது ஆசிரமத்தில் கைராட்டை மூலம் நூல் நூற்பதற்கும், அந்த நூலை துணியாக நெய்யத் தேவையான ஏற்பாட்டையும் செய்தார். 

1916ஆம் ஆண்டு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவினை ஒட்டி ஹார்டிங் பிரபுவை பாராட்டி அளிக்கப்பட்ட விருந்தில் காந்தி கலந்து கொண்டார். இந்த விருந்தில் கலந்து கொண்ட அரசர்கள் பட்டாடைகளும், நகைகளும், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தலைப்பாகைகளும், தங்க உறைகளில் தொங்கிய கத்திகளுமாக இருந்தது காந்தியின் கண்களை உறுத்தியது. அவர்களில் சிலரும் கூட தாங்கள் வேண்டாவெறுப்பாகவே இப்படி வர வேண்டி இருக்கிறது எனச் சொன்னது காந்திக்கு புகழுக்கும் பதவிக்கும் இவர்கள் இப்படி எல்லாம் செய்ய வேண்டியிருப்பதை நினைத்து வெறுப்பாக இருந்தது. அனைவரும் இந்திய துணிகளை அணிய வேண்டும் என்ற முழக்கத்திற்கு இது சரியான தூண்டுகோலாக இருந்தது. 

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு என்ற போராட்டத்தை காந்தி அறிவித்தார். ஜூலை 31, 1921, அன்று மும்பையில் அந்நிய துணிகள் கொளுத்தப்பட்டன. ஆங்கிலேய உடைகள் நம் அடிமைத்தனத்தின் அடையாளம் என முழங்கினார் காந்தி. இப்போராட்டம் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. கதர் அணிவது தேசபக்தியின் அடையாளம் என்றானது. 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு நிகழ்வு அந்த வருடம் காந்தி தமிழகம் வந்த பொழுது நிகழ்ந்தது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த காந்தி மதுரைக்குச் செல்லும் வழியில் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கே அவரை வரவேற்ற விவசாயிகள் மேலாடை அணியாமல் இருந்ததைக் கண்ட காந்தி, அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டார். தாங்கள் வறுமையில் இருப்பதால் காதி உடைகள் வாங்கும் வசதி இல்லை, அதனால் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு மேலாடை இல்லாமல் இருக்கிறோம் என அவர்கள் சொன்னது காந்தியின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. 

மதுரை வந்து சேர்ந்த காந்தி, செப்டம்பர் 22ஆம் தேதி தான் இனி ஒரு நான்கு முழ வேட்டியும் மேலே ஒரு துண்டும் மட்டுமே அணிவது என்ற முடிவினை எடுத்தார். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன், தனது வேட்டியை இரண்டாகக் கிழித்து அதையே தன் உடையாக அணிந்து கொண்டு வந்தார். வறுமையில் இருக்கும் மக்களின் உணர்வினைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தான் இந்த ஆடைக்குறைப்பு என்ற முடிவுக்கு வந்ததாக காந்தி எழுதி இருக்கிறார். அன்றிலிருந்து அதுவே அவர் நிதமும் அணியும் உடையாக நிலைத்தது. அந்த உடையிலேயே லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தவும் போக ‘அரை அம்மண ஆண்டி’ என்ற பட்டமும் கிடைத்தது. 

இன்றும் காந்தி என்றாலே அவரது எளிமையான உடையும், கைராட்டையும்தான் நம் மனத்தில் முதலில் தோன்றும். அந்த அளவிற்கு அவரது உடையின் தாக்கம் இன்றளவிற்கு நீடித்து இருக்கிறது. ஆரம்ப காலத்தில் காந்தி தன்னைத் தனியாகத் தெரியச் செய்யும் உத்தியாகவோ அல்லது ஒரு புரட்சியாகவோ இதனைச் செய்யவில்லை. ஆனால் உடையையும் ஓரு போராட்டக் கருவியாகப் பயன்படுத்த முடியும் என உணர்ந்த பின் அதனை அவ்வகையில் கையில் எடுக்க அவர் தயங்கவில்லை. இந்திய கைத்தறியை அரசியல் அடையாளமாக முன்வைத்து, அதனை தேசியவாதிகளின் சீருடையாக அவர் செய்தததால் இன்றும் கூட தலைவர்கள் கதர் அணிவது என்பது ஒரு பழக்கமாகவே இருக்கிறது. அதுவே காந்தியின் உடை அரசியலின் வெற்றி. 

(யாவரும் மின்னிதழின் காந்தி சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை - https://www.yaavarum.com/arai-ammana-aandi/)

0 comments: