இன்று தீக்ஷிதரின் மாமவ மீனாக்ஷி எனத் தொடங்கும் வராளி ராகத்தில் அமைந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் மீனாக்ஷி, ராஜமாதங்கி, மாணிக்ய வல்லகி பாணி, மதுர வாணி என்றெல்லாம் அன்னையைத் துதிக்கும் பொழுது நாமும் இதுபோல எழுதினால் என்ன எனத் தோன்றியது.
இன்று சரஸ்வதி பூஜை. எனவே சரஸ்வதியின் மேல் எழுதலாம் என முடிவு செய்தேன்.
இந்த வருடம் எங்கள் இல்லம் வந்தவள் ஞானசரஸ்வதி. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள சிலையின் பிரதி. கையில் ருத்திராக்ஷ மாலையும், கமண்டலமும் புத்தகமும் கொண்ட இவ்வடிவம் ஞானத்தைத் தரும் குருவின் வடிவமாகக் கருதப்படுகிறது.

தீக்ஷிதரின் வரிகளால் ஈர்க்கப்பட்டு ஞானசரஸ்வதியின் மேல் எழுதிய வெண்பா இது.
கமலி உலகத்தைக் காத்திடும் காநீவிமலி இசைவாணி வேணி - அமரியிச்சின்னவன் எந்தனின் சிந்தனையும் முன்னேறஅன்னை அருள்வாய் அறிவு!
கமலி - கமலமாகிய தாமரை மேலமர்ந்தவளே
கா - சரஸ்வதியின் மற்றொரு பெயர்
விமலி - மலங்களற்ற தூய்மையானவளே
இசைவாணி - இசையை மொழியாகக் கொண்டவளே
வேணி - அழகிய கூந்தலையுடையவளே
அமரி - துர்க்கை (கமலி விமலி என எழுதிய பின் அதற்கு இணையாக ஒரு சொல் தேடினேன். அமரி என்றால் துர்க்கை என அறிந்தேன். நவராத்திரி காலம் என்பதால் துர்க்கையும் அவளே என சேர்த்துவிட்டேன்)
ஞானசரஸ்வதியை எங்கள் இல்லம் சேர்த்த நண்பனுக்கு நன்றி! Lalitharam Ramachandran
1 comments:
எளிமை, ஆனாலும் அருமை.
Post a Comment