‘Butter Fingers’ என்ற ஆங்கிலப் பதத்திற்கு உருவம் கொடுத்தால் அது என்னைப் போலத்தான் இருக்கும். சாப்பிடும் பொழுதும் சரி, குடிக்கும் பொழுதும் சரி, சிந்தாமல் சிதறாமல் உண்ணவோ குடிக்கவோ தெரியாது. எல்லாச் சட்டைகளிலும் கறை இருக்கும். கறை நல்லது எனச் சலவைத் தூள் விளம்பரம் போல நானும் நகரப் பார்ப்பேன் ஆனால் குடும்பத்தார் விட மாட்டார்கள்.
சமைக்கும் பொழுது எதையாவது கொட்டிவிடுவேன், அம்மணி கண்ணில் படுவதற்கு முன் துடைக்கலாம் எனத் துடைத்து வைத்தாலும் அவர் பார்வையில் ஒன்று துடைக்காமல் விட்ட இடம் படும் அல்லது அந்த ஒரு இடம் மட்டும் கொஞ்சம் சுத்தமாக இருப்பதைப் பார்த்து, “இன்னிக்கு என்னத்த கொட்டின?” என்று ‘அன்பாக’ விசாரிப்பார்கள்.
இப்படி எல்லாவற்றையுமே கொட்டுவதையும் உடைப்பதையும் ஒரு கலைவடிவமாகச் செய்யும் என் கையில் இருக்கும் தொலைபேசி நிலையை நினைத்துப் பாருங்கள். போ(ன்)ன ஜென்மத்தில் ரொம்பவே பாவம் பண்ணிய தொலைபேசிகள்தான் என்னிடம் வரும் என்று நினைக்கிறேன். சட்டைப்பையில் வைத்தால் கீழே விழும், பேண்ட் பாக்கெட்டில் இருந்து கீழே விழும், பேசிக் கொண்டே இருக்கும் பொழுது கை நழுவிக் கீழே விழும். அவ்வளவு ஏன் மேஜையில் வைத்திருக்கும் பொழுது கூட என் பார்வை பட்டால் கீழே விழுந்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
எனக்குச் சவால்விடும் வகையில் ஆப்பிள்காரனும் கொரில்லாக் கண்ணாடி, பீங்கான் கவசம் என விதவிதமான வலிமையும் பாதுகாப்பும் கொண்ட திரைகளைக் கொண்டு வந்தாலும், என் சக்திக்கு முன்னால் அவர்கள் முயற்சிகள் எல்லாம் பொடிப்பொடியாக உதிர்ந்துவிடும். என் தொலைபேசித் திரைகளைப் போலவே. அவர்களுக்குத் துணையாக ஆட்டர்பாக்ஸ், பெலிக்கன் என்றெல்லாம் பெயர்கொண்ட தொலைபேசி உறைகள் சந்தையில் வரத் தொடங்கின. முதலில் வாங்கிய உறைகள் எல்லாம் அவ்வளவு வலிமை இல்லாதவை. இரண்டு மூன்று முறை கீழே விழுந்தாலே விரிசல் விடத் தொடங்கிவிடும். அதன்பின் திரையில் சிலந்திவலை போல் அழகான வடிவங்கள் தோன்ற அதிக நாட்களாகாது.
அவர்களும் சளைக்காமல் இது குண்டு துளைக்காத பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டது, இது ராணுவத் தரத்திற்கு செய்யப்பட்டது, இது பத்தடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் கூட தொலைபேசியைப் பாதுகாக்கும் என்றெல்லாம் அவர்களால் முடிந்ததைக் கொண்டு வந்தார்கள். நானும் சளைக்காமல் அவற்றை வாங்கி தொலைபேசிக்கு அணிவிப்பேன். புவியீர்ப்பும் சளைக்காமல் அதன் வேலையைச் செய்யும். புதுத் தொலைபேசி, புதிய உறை என்று காலச்சக்கரம் சளைக்காமல் சுழன்று கொண்டே இருக்கும்.
கடந்த முறை வாங்கிய உறை ரொம்பவே விசேஷமானது. தொலைபேசி விலையை நெருங்கும் அளவு விலை. இருபத்தி ஐந்து அடியில் இருந்து விழுந்தால் கூட உடையாது, இரும்பை விட உறுதியான ஆரமிட் இழைகளால் நெய்யப்பட்டது, இரண்டு படிம வடிவமைப்பு என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்ட உறை. ஆஹா, நம்முடைய நல்லூழ்தான் இப்படியோர் உறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என மகிழ்ந்து உறையை வாங்கி தொலைபேசிக்கு மாட்டியாகிவிட்டது.
அவர்கள் கூறியது எல்லாம் உண்மைதான் என்று நிரூபிக்கவும் தருணம் வாய்த்தது. வழக்கம் போல தொலைபேசியைக் கீழே போட்டேன். என்ன ஆச்சரியம், தொலைபேசித் திரை உடையவில்லை. அது மட்டுமில்லை, இந்த உறையில் ஒரு சிறிய சிராய்ப்பு கூட இல்லை. சபாஷ், வல்லவனுக்கு வல்லவன் இந்த வையத்தில் உண்டு என நிரூபித்து விட்டார்களடா என மனம் மகிழ்ந்தேன். கீழே விழுந்ததே என்று தொலைபேசியைத் துடைக்க உறையைக் கழட்டினேன். இந்தப் புதிய வகைத் தொலைபேசியில் முன்பக்கம் மட்டுமல்ல பின்பக்கமும் கண்ணாடியால் செய்யப்பட்டது. உறைக்கு ஒன்றுமாகவில்லை என்றாலும் உள்ளிருந்த தொலைபேசியின் பின்பக்கக் கண்ணாடி மட்டும் எப்படியோ உடைந்து சுக்குநூறாகி இருந்தது. எப்படித்தான் இப்படி உடைக்கிறாயோ என்று அம்மணியின் ஆசிர்வாதமும் கிடைத்தது.
தொலைபேசியும் உறையும் வாங்கியே சேமிக்கும் அனைத்தையும் செலவு செய்துவிடுவாய் என்று அவர் சொல்லும் பொழுதுதான் ஒரு முடிவு செய்தேன். என்னை மாதிரி எத்தனை பேர் உலகத்தில் இருப்பார்கள். அதனால் இனி தொலைபேசி வாங்குகிறோமோ இல்லையோ ஆப்பிள் கம்பெனி பங்குகளை வாங்கி வைக்க வேண்டும் என்பதே அந்த முடிவு!
பிகு: நீங்கள் எதையாவது போட்டு உடைத்த அனுபவத்தை இங்கு போட்டு உடையுங்கள் என்ற தலைப்புக்காக எழுதியது.
பிபிகு: மீனாட்சி அம்மாளின் சமைத்துப் பார் என்ற புத்தகத் தலைப்பு நினைவுக்கு வந்ததால், இந்தக் கட்டுரைக்கு அப்படி ஒரு தலைப்பு.
0 comments:
Post a Comment