Tuesday, October 14, 2025

செந்தூர் முருகனுக்கு அரோகரா!


“அந்த செந்தூர் பில்டிங்தானே?” 


மும்பையில், என் அண்ணன் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது, போக வேண்டிய இடத்திற்கு அடையாளமாக நான் சொன்னது அவரைக் குழப்பியது. “செந்தூர் பில்டிங்கா?” என்றார். 


“அதாம்பா. அந்த ஏர்போர்ட்க்குத் திரும்பற வழியில், வட்டமா இருக்குமே. செந்தூர் பில்டிங்”  


“வட்டமாவா? அது செந்தூர் பில்டிங் இல்லடா. அது செண்ட்டார் (Centaur) பில்டிங்” என்றார் அண்ணன். 


எனக்கு அந்தக் கட்டடத்தின் பெயர் செண்ட்டார் என்று தெரியும்தான். ஆனால் அது செந்தூர் பில்டிங்காக மாறியதற்குப் பின் ஒரு கதை இருக்கிறது. 


இந்த நிகழ்வுக்கு பல வருடங்கள் முன் அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தேன். அப்பொழுது அவரிடம் வேலை பார்த்த ஓட்டுநர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சண்முகம் எனப் பெயர். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் சண்முவமண்ணாச்சி. 


அமெரிக்காவில் இருந்து தம்பி வந்திருக்கார். அவருக்கு  மும்பையைச் சுற்றிக் காட்ட வேண்டியது தன் பொறுப்பு என அவராகவே முடிவு செய்து கொண்டார். அதற்கு முன் நான் மும்பை வந்திருக்கிறேனா, சுற்றிப் பார்த்திருக்கிறேனா, எனக்கு எந்த அளவு மும்பை பழக்கம் என்பது பற்றி எல்லாம் அவருக்கு கவலையே இல்லை. 


எங்கு சென்றாலும் கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்பவர்களைப் போல் நிறுத்தாது, வழியில் தென்படுபவை, அந்த இடங்களின் சிறப்பு என எதையாவது பேசிக்கொண்டே வருவார். அத்தனையும் உண்மையான தகவலாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை எல்லாம் அவர் தமக்கு விதித்துக்கொள்ளவும் இல்லை. நயம் நெல்லைத் தமிழில் பேசுவார் என்பதால் எனக்குக் கேட்பதில் மகிழ்ச்சிதான். எனவே அவர் பேசுவதைத் தடுக்காமல் கேட்டுக் கொண்டே வருவேன். 


ஒரு சமயம் என்னை அவர் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. வழக்கம் போல போகும் வழியில் தென்பட்ட கோயில், ஏறிய மேம்பாலம், அந்தப் பக்கத்தில் இருக்கும் அண்ணனின் நண்பர்கள் இல்லங்கள் என வர்ணனை தொடர்ந்தது. விமானநிலையத்தை நெருங்கும் பொழுது வட்ட வடிவத்தில் அமைந்த ஒரு கட்டடம் இருந்தது. 


“அண்ணாச்சி, இந்தா பாத்தியளே, எல்லா இடத்திலும் பெட்டி பெட்டியா கெட்டி வெச்சிருக்காவள்ளா, ஆனா இங்க பாருங்க. ஒரு மாத்தா இருக்கணும்ன்னு வட்டமா கெட்டி இருக்காவ பாருங்க. இது ஓட்டலாக்கும். யாரு கெட்டி இருக்கா தெரியும்லா. நம்ம ஆளுவதான். தூத்தூடி பக்கம்ன்னு நெனைக்கேன். நம்ம ஆளுவளுக்கு எங்க போனாலும் ஊர் நெனப்புதான் பாத்துக்கிடுங்க. இங்க வந்து இவ்வளவு பெரிய கட்டடம் கட்டுனாலும் பேரு என்ன வெச்சிருக்காவ தெரியுமா? செந்தூர் ஓட்டல். நம்ம திருச்செந்தூர் சாமி பேரைத்தான் வெச்சிருக்காவ பாத்துக்கிடுங்க. ஓட்டல் சாப்பாடும் நம்ம ஊர்ச் சாப்பாடாத்தான் இருக்கும். ஆனா நான் போனதில்லை, வெல சாஸ்தில்லா” என்றபடி என்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.  



May be an image of text



அது செண்ட்டார் ஹோட்டல். அன்றைய ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஹோட்டல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தங்குமிடம். அதன் இலச்சனை மேல் பாதி மனித உடலாகவும், கீழ்ப்பகுதி குதிரை போலவும், கைகளில் வில்லும் அம்பும் வைத்திருக்கும் கிரேக்க தொன்ம மிருகமான செண்ட்டார் என்பதை எல்லாம் அவரிடம் நான் சொல்லவில்லை. 


இன்று அந்தக் கட்டடமும் இல்லை, அண்ணாச்சியுமில்லை. ஆனால் அவரது அப்பாவித்தனமான விளக்கத்தால் செந்தூர் பில்டிங் மட்டும் என்னுள்ளே இருக்கிறது. 


0 comments: