Monday, October 13, 2025

மதுரையில் கடற்கரை!

 

படம் வரையும் ஒருவரிடம் சென்று சரஸ்வதி படம் வேண்டும் என்றால் அவர் ஒரு குறிப்பிட்ட வகையில்தான் வரைந்தாக வேண்டும். அவள் தாமரையில் அமர்ந்திருக்க வேண்டும், கையில் வீணை இருக்க வேண்டும், வெண்பட்டு உடுத்தியவளாக இருக்க வேண்டும். கொஞ்சம் மாற்றம் வேண்டுமானால் நான் சில நாட்கள் முன் எழுதிய ஞானசரஸ்வதி போல குருவடிவில் இருக்கலாம். இதனை மீறினால் பெரும் பிரச்சனை வரும் என்பதை நம் வாழ்நாளிலேயே பார்த்திருக்கிறோம். ஆனால் விநாயகரை வரைய இந்த அளவு கட்டுப்பாடுகள் கிடையாது. அவர் கிரிக்கெட் விளையாடலாம், ஆப்பிள் கணினியில் பேஸ்புக் பார்க்கும் படி வரையலாம். ஒரு கூடுதல் சுதந்திரம் உண்டு. 

அது போல ஒரு நேரடியான கேள்விக்குப் பதிலாக நாம் எழுதுவதில் அந்தப் பதிலை ஒட்டிய செய்திகளைத்தான் தர முடியும். சுருக்கமாக எழுதலாம், விரிவாக எழுதலாம். ஆனால் கருத்து அப்பதிலாகத்தான் இருக்க முடியும். ஆனால் ஆங்கிலத்தில் abstract எனச் சொல்லும் வகையில் இதுதான் என்றில்லாத கேள்வி வரும் பொழுது அதற்குப் பதிலாக எழுத நமக்குக் கூடுதல் சுதந்திரம் கிடைக்கிறது. அதில் நாம் எழுத நினைத்தவை, நம் கருத்துகள், பூடகமாகச் சொல்ல வேண்டியவை என எல்லாவற்றையும் கலந்து எழுதலாம். 

ஏரணமே இல்லாத ஒன்றைச் சொல்லி அது பற்றி எழுது என்றால் என் போன்றவர்களுக்குக் கொண்டாட்டம்தான். சொக்கன் எழுதப் பணித்த தலைப்புகளில் ஒன்று அப்படிப்பட்டது. அதற்கு நான் எழுதியது எனக்கே பிடித்தது என்பதால் இங்கும் பகிர்கிறேன். அவர் எழுதத் தந்த குறிப்பு - 

அன்புடையீர், நாங்கள் மதுரையில் ஒரு கடற்கரை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பொதுநலத் திட்டத்துக்கு உங்களால் இயன்ற நன்கொடையை வாரி வழங்கி உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். இக்கடிதத்துக்கு உங்கள் உடனடிப் பதிலை எதிர்பார்க்கிறோம்.

என் பதில் கடிதம் 

அன்புடையீர்


மதுரையில் கடற்கரை பற்றிய தங்கள் கடிதம் வந்தது. சென்னைவாழ் மக்கள் அவர்களுடைய மெரீனா கடற்கரையைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் நமக்கு இது போலப் பேச வழியில்லையா எனக் குமுறும் மதுரை மக்களின் ஆதங்கத்தைத் தீர்க்கும் வகையில் இது அமையும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. 


ஆனால் இந்தத் திட்டத்தில் எனக்கு இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன. அதனைத் தீர்த்து வைத்தபின் நாம் அதற்கான நிதியுதவி பற்றிப் பேசலாம்.


முதலாவது சங்கம் வைத்து வளர்த்த, தமிழுக்கே தலைநகர் எனத் திகழும் மதுரையில் தமிழின் நிலை. இன்று தமிழில் மெரீனா பீச் என்றே வழங்கப்படும் சென்னையின் சிறப்பை முன்மாதிரியாகக் கொண்டதால், Beach எனப்படும் ஆங்கிலச் சொல்லை கடற்கரை என மொழிப்பெயர்த்திருக்கிறீர்கள். ஆனால் ஒரு பரந்த பொருளில் பயன்படுத்த வேண்டிய சொல்லை மிகக்குறுகிய ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்திருக்கிறீர்கள்.


ஆங்கிலத்தின் முதன்மையான அகராதியான ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி, இந்தச் சொல்லுக்கான விளக்கத்தை “An area of sand, gravel, or small stones alongside a body of water” எனத் தருகிறது. இதில் நாம் முக்கியமாகக் கருத வேண்டியது அவர்கள் ‘alongside a sea or an ocean’ எனக் குறிப்பிடவில்லை. எனவே அச்சொல்லை நீங்கள் கடற்கரை என்று எழுதியது எந்த விதத்தில் நியாயமாகும் என்று நினைத்துப் பாருங்கள். அந்நிய மொழியான ஆங்கிலத்தின் வளம் நம் தமிழுக்கில்லை என்றாகுமல்லவா. இது நம் மொழிக்கு, நமக்குமே இழுக்கு என்பதை உணராமல் நீங்கள் இத்தவற்றைச் செய்திருக்கலாமா? 


கடலே இல்லாத மதுரைக்குக் கடற்கரை வேண்டுமென நிதி திரட்டினால் அது இல்லாத நதியின் மேல் பாலம் கட்டிய கணக்கெழுதிய இந்திய அரசியல்வாதியின் கதை போலக் கேலிக்குரியதாகுமல்லவா? பீச் என்பதற்கு இணையான சொல் கரைதானே. அது ஏரிக்கரையாக இருக்கலாம், நதிக்கரையாக இருக்கலாம், கடற்கரையாக இருக்கலாம். இப்படிக் கடற்கரை என்ற குறுகிய நோக்கில் பார்க்காமல் இருந்தால் நாம் செய்ய வருவது மதுரை மக்களுக்குப் பொழுது போக்க ஒரு வழி செய்து கொடுப்பது என்ற உயரிய நோக்கம் சரியாக வெளிப்படுமே. அதனைக் கேளிக்கைக்கரை எனச் சொல்வதில் ஏன் தயக்கம்? 


இன்று நான் வசிக்கும் ஆஸ்டின் நகரும் மதுரையைப் போல கடற்கரையில் இல்லை. ஆனால் இங்கிருக்கும் டிராவிஸ் ஏரியில் Pace Bend Park, Sandy Creek Park, Hippie Hollow Park, Windy Point Beach, Volante Beach என ஏராளமான கேளிக்கைக்கரைகளை உருவாக்கி, குளிப்பதற்கும், நீர் விளையாட்டுகளுக்கும், வயது வந்தோருக்கு மட்டுமானது என்றும் விதவிதமாகச் செய்திருக்கிறோமே. கடற்கரையேதான் வேண்டும் என அடம்பிடிக்கவில்லையே. 


உங்கள் கடிதத்தைப் பார்க்கும் பொழுது மதுரைக்கு வேண்டியது கடற்கரையா தமிழ்ப்பள்ளியா என்ற கேள்விதான் என்னுள்ளே எழுகிறது. பேசாமல் கடற்கரைத் திட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்ப் பலகை ஒன்றை உருவாக்கி மீண்டும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மாநகர் என்ற பெயரை மதுரைக்கு மீட்டுத் தருவோமா? 


இல்லை, கேளிக்கைக்கரைதான் வேண்டுமென்றால் நான் சொன்ன இரண்டாவது பிரச்சனை தலையெடுக்கிறது. நாம் எங்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்? கரை என்ற சொல்லுக்கு ஒரு நீர்நிலையின் எல்லையில் மணலும் சரளைக்கற்களும், கூழாங்கற்களும் இருக்கும் இடம் என்பதுதானே பொருள். ஆக நீர்நிலையை ஒட்டி இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இடமில்லையே. மதுரை, நீர் நிலை என்றால் என் நினைவுக்கு, நம் நினைவுக்கு, ஏன் இந்த உலகத்தில் மதுரையைத் தெரிந்த அனைவருக்குமே நினைவுக்கு வருவது இரண்டு இடங்கள்தான். ஒன்று மீனாட்சி அன்னை கோயிலின் தெப்பக்குளம், இரண்டாவது வைகை நதி. மற்ற நீர்நிலைகள் இருந்தாலும் இவை இரண்டும்தானே புகழ்பெற்றவை. அதனால் இவற்றுள் ஏதாவது ஒன்றின் அருகே இத்திட்டம் அமைவதுதான் சிறப்பு. 


ஆனால் தெப்பக்குளம் இத்திட்டத்திற்கு சரி வராது. அது கோயில் பகுதி. அங்கு ஏற்கனவே கற்படிக்கட்டுகள் இருக்கின்றன. கோயில் செல்பவர்கள் கூடக் கம்பிக் கிராதிகள் வழியாகப் பார்க்கக்கூடிய ஓர் இடமாக அது இன்று இருக்கின்றது. கேளிக்கைக்கான இடமாக அதை மாற்றுவது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆகவே அதை நாம் பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்வதில் எந்த வித நியாயமும் இல்லை. அதை விட்டுவிடுவோம். 


அடுத்தது வைகை. மதுரையின் உயிர் நாடி வையை என்று அழைக்கப்படும் வைகை நதி என்றால் அது மிகையே இல்லை. வைகை இல்லையேல் மதுரை இல்லை என்பது முழு உண்மை. மதுரைக்காரர்களுக்குக் கள்ளழர் ஆற்றில் இறங்கும் காட்சியைப் போல உவகை தரும் காட்சி உலகிலேயே வேறேதும் உண்டா?  வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்றல்லவா சிலப்பதிகாரம் சொல்கிறது. வைகை வரண்டு போகாதாம், அது போல பொய்யே இல்லாத பாண்டியன் ஆட்சியாம். நான் சொல்லவில்லை, இளங்கோவடிகள் சொல்கிறார். ஆனால் மன்னராட்சி போய் மக்களாட்சி வந்தபின் நமக்கு வாய்த்திருக்கும் ஆட்சியாளர்களைச் சொல்லும் விதமாகவோ என்னவோ வைகையும் வரண்டு போய் இருக்கிறது. நீரே இல்லாத இடத்தில் கரையை நினைத்துப் பார்க்க முடியுமா? 


அப்படி நீரே இல்லாத வைகையின் ஓரம் நம் கேளிக்கைக்கரையை கட்டினால் என்ன? கட்டாவிட்டால் என்ன? ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்று கூடச் சொல்ல முடியவில்லையே. மூழ்குவதற்கும் நீரல்லவா வேண்டும். கேளிக்கைக் கரை வேண்டுமென்ற ஆர்வம் சரிதான். ஆனால் அது வேண்டுமானால் அதற்கு முன் வைகையில் நீர்வரத்து, சங்கப்பாடல்களில் சொன்னாற்போல, வர வழிவகைகளை முதலில் செய்ய வேண்டும். இப்படிச் செய்ய ஆயத்தமாக உங்கள் குழு இருக்குமானால் சொல்லுங்கள். வெறும் பிள்ளையார் சுழி இல்லை நம் மாநகருக்கு அணி சேர்க்கும் முக்குறுணிப் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவோம். 


ஆனால் இந்த இரண்டையும் சரி செய்யாத வரை கேளிக்கைக்கரைத்திட்டத்திற்கு என் ஆதரவு இல்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடுச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். என் கோரிக்கைகளில் இருக்கும் நியாயம் உங்களுக்குப் புரிந்திருக்கும். அதைக் கருத்தில் கொண்டு திட்டத்தை மீளுருவாக்கம் செய்வீர்கள். மதுரைக்கு சிறப்பு சேர்க்க எனக்கும் பங்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் உங்களிடம் பேசும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்குகிறேன். 


வாழ்த்துகள்.


அன்புடன்

இலவசம் 


0 comments: