நான் வளர்ந்தது கல்லிடைக்குறிச்சி என்ற கிராமம். எங்கள் தெருவின் முடிவில் கன்னடியன் கால்வாய் தண்ணீர் முட்ட முட்ட ஓடிக்கொண்டிருக்கும். அது போதாதென்று அதைத் தாண்டி வயல்வெளிகளினூடே கொஞ்சம் தூரம் நடந்தால் வற்றாத ஜீவநதி, தாமிரபரணி. நன்னீர் எங்களுக்குத் தண்ணீர் பட்ட பாடு. வீடுகளில் குளியலறை இருந்தாலும் எல்லாருமே பெரும்பாலும் கால்வாயிலோ நதியிலோ குளிப்பதுதான் வழக்கம். ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம் என்றில்லாமல் நிதக்குளியலே ஓடும் நீரில்தான். வேட்டி, துண்டுகளை துவைத்து எடுத்துக் கொண்டு வந்தால் வீடு வருமுன் காய்ந்துவிடும். மடித்து வைத்துவிட வேண்டியதுதான்.
இப்படி ஒரு சூழ்நிலை அமைந்தால் சிறுவர்கள் நிலையைச் சொல்லவும் வேண்டுமா? நினைத்தால் குளிக்கக் கிளம்பிவிடுவோம். வீட்டுக்குத் தெரிந்த குளியல், வீட்டுக்குத் தெரியாமல் போடும் குளியல், காலையில் குளியல், மாலையில் குளியல் எனத் திரைகள் இல்லாத காலத்தில் கரைகளில்தான் வாழ்வோம். புளி, உப்பு, வெல்லம் என்றெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் அங்கிருக்கும் கல்லை வைத்து அரைத்து ஆளுக்கொரு பந்தாக்கி உண்பது போன்ற வழக்கங்கள் உண்டு. திருட்டு மாங்காய், திருட்டு இளநீர் போன்றவை வேறு அவ்வப்பொழுது துணைக்கு சேரும். ஆடிப் பதினெட்டன்று ஊரே திரண்டு ஆற்றங்கரையில்தான் இருக்கும். குளிப்பதும், உண்பதும், மீண்டும் குளிப்பதும் என ஆடிப்பெருக்கு ஓர் அட்டகாசமான பண்டிகை.
கால்வாய்க்கும் சரி, ஆற்றுக்கும் சரி, கரைகளில் கற்களால் அமைந்த படிகளும், பெண்கள் குளிக்கத் தனியாக கற்கூரைகள் வேய்ந்த மண்டபங்களும் உண்டு. இவற்றிற்குப் படித்துறைகள் எனப் பெயர். கால்வாய் மேல் சிறு பாலம் ஒன்றும் உண்டு. சிறுவர்கள் போனால் குளித்தோம் வந்தோம் என்றிருக்க மாட்டார்கள். மணிக்கணக்கில் தண்ணீரில் விளையாடி வெளியே வரும் பொழுது கண்களெல்லாம் சிவந்து, உள்ளங்கைத் தோலெல்லாம் சுருங்கி வீட்டுக்குப் போனால் இவ்வளவு நேரம் ஆட்டம் போட்டதைக் காண்பித்துக் கொடுத்து அடி வாங்க வைத்துவிடும். மேல் படிகளில் இருந்து குதிப்பது, பாலத்தில் இருந்து குதிப்பது, மறுகரையைத் தொட்டு வரும் போட்டிகள் என களேபரமாகத்தான் இருக்கும்.
![]() |
சிறுவர்களுக்கு மட்டுமல்ல விளையாட்டு! |
நான் மட்டும் படிகளை விட்டு நகர மாட்டேன். எல்லாரும் நீச்சல் கற்றுக் கொண்ட பொழுது எனக்கு ஏனோ கற்றுக் கொள்ள வாய்க்கவில்லை. என் அண்ணன்கள் இருவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் அதிகம் என்பதாலோ என்னவோ அவர்களிடம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. கடைசிப்படிக்குச் சென்றால் கழுத்தளவுத் தண்ணீர் வரும். அதுதான் என் எல்லை. அதைத்தாண்ட ஏனோ இனம்புரியாத பயம்.
இத்தனைக்கும் என் நண்பர்கள் சொல்லித் தர முயலாமல் இருந்ததே இல்லை. நல்லபடியாகச் சொல்லிப் பார்ப்பார்கள், திட்டுவார்கள், கேலி செய்வார்கள், கெஞ்சிக்கூடப் பார்ப்பார்கள். ஆனால் கடைசிப் படியை விட்டு என்னை நகர்த்துவது அவர்களுக்கு முடியாத காரியமாகவே இருந்தது. கால் கொஞ்சம் படியை விட்டு நகர்ந்தால் கூட உடனே முதற்படிக்குப் போய் விடுவேன்.
எனக்கும் கற்றுக் கொள்ள வேண்டாம் என்றெல்லாம் இல்லை. தைரியம் வரும் நாட்களில், “சரி, இன்றைக்குக் கற்றுக் கொள்கிறேன்” என்பேன். ஆனால் அந்தத் தைரியம் எல்லாம் தண்ணீரில் இறங்கும் வரைதான். தண்ணீரில் கால் வைத்த பின் பழைய குருடி கதவைத் திறடி எனப் படி வாசம்தான். அந்த வயதில் எனக்கிருந்த ஆஸ்த்துமா தொந்தரவோ பல நாட்கள் தண்ணீரில் இறங்கவே தடைபோட்டுவிடும்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் நான்கைந்து பேர் ஆற்றுக்குப் போகலாம் எனக் கிளம்பி கால்வாயின் பாலமேறி நடந்தோம். பாதி பாலம் கடந்த பொழுது என் இரு பக்கத்திலும் இருந்த நண்பர்கள் என்னை அலேக்காகத் தூக்கி தண்ணீரில் வீசி விட்டனர். பாலத்திற்கு அடியில் இன்னும் சிலர் இருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. விழுந்த வேகத்தில் தண்ணீரில் மூழ்கி எழுந்தேன், தண்ணீரைக் குடித்தேன். அங்கிருந்த நண்பர்கள் பாலத்தின் தூண்களை பிடித்துக் கொண்டு, தண்ணீரிலேயே மிதக்கச் செய்து ஆசுவாசப்படுத்தினர். பிறகு மெதுவாக என்னைக் கையையும் காலையும் அடிக்கச் சொல்லிக் கரை சேர்த்தனர்.
![]() |
இது ஆற்றுப்பாலம் |
அதன் பின்னரும் பயம் விலகவில்லை. ஆனால் என்னமோ நானே வலிய பாலத்தில் இருந்து குதித்தாற் போல, “பாலத்தில் இருந்தே குதித்துவிட்டாய், படியில் இருந்து கொஞ்ச தூரம் வா” என்றெல்லாம் சொல்லி எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நீச்சல் அடிக்க சொல்லித் தந்தனர். ஓரளவு பிடிபட்ட உடனே எனக்குள் இருந்த பயம் மறைந்து விட்டது. நானும் பாலத்தில் இருந்து குதிப்பது, இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போவது என அவர்களைப் போலவே கும்மாளம் அடிக்கத் தொடங்கி விட்டேன். “நீ ஒருத்தன் தான் தண்ணீரை மேலே தெறிக்காமல் இருந்த, இப்போ நீயும் ஆரம்பிச்சுட்டியா?” எனத் தெருவில் இருக்கும் அக்கா ஒருவர் ஆவலாதி சொன்னது எனக்கு என்னமோ சான்றிதழ் தந்த உணர்வைத்தான் தந்தது.
ஓடும் நீரில், கண்டபடி நீந்திக் கற்றுக் கொண்டதால் முறையாக மூச்சிழுத்து விடும் உத்திகளெல்லாம் இன்றைக்கும் எனக்குத் தெரியாது. அதனால் என் நீச்சல் ஏனோதானோ என்றுதான் இருக்கும். ஆனால் ஆறு, குளம், அருவி, கடல் என எங்கு தண்ணீரைப் பார்த்தாலும் பயமின்றி இறங்கும் தைரியம் வந்தது என்னை கால்வாயில் வீசிய நண்பர்களால்தான்.
குழந்தைகள் பிறந்த பின், அவர்களுக்கு தண்ணீரின் மேல் பயம் வருவதற்கு முன்னரே அவர்களை நீச்சல் வகுப்புகளில் சேர்த்து விட்டேன். அவர்களும் நன்றாகக் கற்றுக் கொண்டு நீச்சலடிக்கத் தொடங்கிவிட்டனர். இதைச் செய்ததற்கு எனக்கு ஒரே ஒரு காரணம்தான்.
அவர்களை யாரும் பாலத்திலிருந்து வீச வேண்டாம் பாருங்கள்!
0 comments:
Post a Comment