இன்றைக்குப் பொங்கல். எல்லோரும் பொங்கலிட்டு மகிழ்ந்திருக்கும் இந்த வேளை எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே இனிக்கிறது. வலையுலகில் பல காலம் படித்தும் பின்னூட்டம் அளித்தும் வந்திருந்தாலும் நான் பதிவுகள் எழுத வந்து ஒரு வருடம் ஆகிறது. ஆமாம் கடந்த ஆண்டு ஜனவரியில்தான் நான் என் வலைப்பூவைத் தொடங்கினேன். ஒரு வருடமாக நாமும் எழுதிக் கொண்டு இருக்கிறோமே, நாம் எழுதுவதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிந்து கொள்ள ஒரு ஆவல். யாரைக் கேட்பது என யோசித்துக் கொண்டே பழைய பதிவுகளைப் புரட்டினால், என் முதல் இடுகையின் முதல் பின்னூட்டம் அளித்து என்னை இந்த வலையுலகிற்கு வரவேற்றவர் நம் ஜிரா எனப் பார்த்தேன். சரிதான், முதன் முதலில் நம்மை வாழ்த்தி வரவேற்ற அவரையே நம் முதல் வருட அப்ரெய்சலைச் செய்யச் சொல்லலாம் எனக் கருதி அவரை அணுகினேன். என் வேண்டுகோளை மதித்து அவர் ஒரு பதிவாகவே எழுதி அனுப்பி வைத்தார். இதுவே எனது பொங்கல் போனஸ். எனக்காக பதிவு எழுதி, அதனை பொங்கல் பரிசாக எழுதி அனுப்பியதற்கு நன்றி ஜிரா. அந்தப் பரிசினை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லி எனது நிறை குறைகளை சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இனி ஜிராஜனவரி மாதம் பத்தாம் நாள் 2006ல் ஜனங்களுக்கு வரி போடும் அரசாங்கங்கள் உலகமெங்கும் இருக்கையில் இலவசமாக ஒரு வலைப்பூ பூத்தது. பூ இருந்தால் பழமும் இருக்கத்தானே வேண்டும். மாதுளையும் கூடக் கிடைத்தது. மாதுளை என்றால் இந்தியில் அனார். அதுவும் ஒன்று இரண்டு அல்ல. ஒரு கொத்து. அதாவது கொத்து அனார். அதாகப்பட்டது கொத்தனார். இலவசக் கொத்தனார்.
வரும் போதே
வந்துட்டேன் வந்துட்டேன்னு இரண்டு தடவை சொல்லிக்கொண்டு வந்தார். ஏன் இரண்டு முறை? இலவசமாக ஒன்று கிடைக்கிறதென்றால் அந்தப் பொருளை ஒருமுறையா வாங்குவோம்? இரண்டாம் முறையும் வாங்குவோம் அல்லவா. அதனால்தான் இரண்டு முறை சொன்னார். அது அவரது பின்னவீனத்துவ கருத்தாய்வுத் திறனின் ஆழத்தின் உச்சத்தை விளங்கச் சொல்லும் வகையில் இருந்தது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. அதனால்தான் அவரது பதிவில் முதல் பின்னூட்டமிட்ட வலைஞர் என்ற பெருமையை எனக்களித்துப் பெருமைப் படுத்தினார்.
(மயிலார் : கொத்சோட தலையெழுத்து. உருப்படியா யாராவது போட்டிருக்கக் கூடாது. பெருமையில இருக்குற பெக்கு பதிலா எ போட்டா சரியாயிருக்கும்.)வந்ததுமே...
இரண்டாவது பதிவில் "There is sex for money and there is sex for free. And sex for free costs more!" என்று நகைச்சுவையாக குறும்போடு சொன்னார். திடீர்னு என்னாச்சோ ஏதாச்சோ தெரியலை
எவன்ன, மல்மல், வர்ளம்வர், குமழைடை, மனமத்தாப்பூசு-னு சொன்னாரு. என்னடான்னு கேட்டா ரீபஸ்சாம்.
(மயிலார்: ரீபஸ்னா? சுரங்கள்ள ஸ-பஸ்சுக்கும் க-பஸ்சுக்கும் நடுவுல வருமே அந்த ரீபஸ்சா?)சொடக்குப் போடும் பழக்கம் நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. ஆனால் சூடோகு போடும் பழக்கம் நல்லதாம். ஏனென்றால் சூடோகு என்பது கணக்கு விளையாட்டு. அதை நன்றாக விளையாடினால் கூட ஒரு இலவசம் கிடைக்குமாம். அதுதான்
நீண்ட ஆயுள். இத்தோடு சேர்த்து பத்துப் பதிவு கூட வந்திருக்காது. ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் 150, 350 என எகிறிக் குதித்தன. இது கயமைத்தனமா என்று போலீஸ் வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் கண் பட்டதோ....அவருக்கும் வந்தது ஒரு
சோதனை.
இப்படி ரீபஸ் பதிவுகளாகப் போட்டுக்கொண்டிருந்தவர்
மைசூர் அரண்மனைக்குப் போனார். அங்கு சிவாவைச் சந்தித்தார். ஆமாம். கால்காரி சிவாவைத்தான். மைசூர் அரண்மனை கால்காரியில்தானே இருக்கிறது. மைசூர் போண்டோ கிடைக்கிறதோ இல்லையோ...காலிபிளவர் வறுவல் கிடைக்கும்.
(மயிலார்: திங்கிற பண்டம் எங்க எது கெடைக்கும்னு சரியாச் சொல்லீருவயே!)பெண்பா எல்லாம் என்பா என்று வெண்பா வடிக்கும் கூட்டத்திற்கு நடுவில் தன்பா எல்லாம் நிறத்திலும்
வெண்பா என்று கொத்தனார் எழுதத் தொடங்கினார். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமென்று பலபா ஏற்கனவே எழுதப்பட்ட நிலையில் கண்பார் குமரனை வைத்து நண்பார் எனப் புகழ்ந்து ஒரு தண்பா எழுதினார். இதற்குக் கிடைத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 134. ஜீவ்ஸோடு சேர்ந்து கொண்டு
இயன்ற அளவில் இனிய தமிழில் என்று வெண்பாக்களாக எழுதித் தள்ளினார்.
(மயிலார்: எழுத்து விளையாட்டாக்கும்? நெனப்புதான் பொழப்பக் கெடக்குது! ஒழுங்கா எழுதுனாலே ஒன்னும் புரியாது. இது மட்டும் யாருக்காவது முழுசா சரியாப் புரிஞ்சிருச்சு...அவங்களுக்கு பரிசு ஒரு மயிலிறகு!)பரோட்டா பரோட்டா நான் குத்தும் பரோட்டா.......என்று ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாட்டு போட்டிருக்கிறார். கொத்தனாரோ பதிவு போட்டிருக்கிறார்.
முட்டை பரோட்டா குத்தியதை அழகாகச் சொல்லி அவர் அள்ளிய பின்னூட்டங்களின் எண்ணிக்கை முன்னூற்றுக்கு இருபத்தைந்து குறைவு. அத்தோடு விட்டாரா? தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும்...தள்ளாடி நடந்தா உல்லாசம் கிடைக்கும்....ஓ பார்வதீன்னு கமல் ஒரு படத்தில் பாடுவாரே...அந்த அளவிற்கு ஒரு
பதிவு. அதைப் படித்தவர்கள் எல்லாம் நம்ம சிங்காரிச் சரக்கு நல்ல சரக்கு என்று பாடிப் புலம்பியதாகத் தகவல். தகவல் மட்டுமே.
இப்படிப் பதிவுகளாகப் போட்டுக் கொண்டு பின்னூட்டங்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்த கொத்தனாரின் வாழ்விலும் திருப்பம் வந்தது. பக்கிப் பசங்க என்று அனைவராலும் அன்போடும் பண்போடும் குணத்தோடு மணத்தோடு நிறத்தோடு திடத்தோடும் அழைக்கப்படும்
விக்கிப் பசங்க என்ற குழும வலைப்பதிவில் அவர் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து அவர் அறிவாளி போலக் காட்டிக் கொள்ளப்பட வேண்டிய நிலை வந்தது. அதற்கெல்லாம் அசரவில்லை கொத்தனார். ஏமாந்தவர்களைச் சேர்த்துக் கொண்டார். கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விக்கிப்பசங்களை ஊரறியச் செய்தார். பின்னூட்ட நாயகிக்கு அடுத்த வாரிசு என்று பிரகடணம் செய்தார். அதை இன்றும் மறுப்பார் இல்லை. இதுதான் இலவசக் கொத்தனாரின் ஓராண்டுக்குள் நிகழ்ந்த மாபெரும் இமாலயச் சோதனை...சீச்சீ சாதனை. அவரை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம்.
(மயிலார்: வாழ்த்துவோம். வாழ்த்துவோம். இதுக்குத்தான் நம்மளக் கூப்புடுறாங்க)அன்புடன்,
கோ.இராகவன்