அப்புறமா Egg Substitutes எனப்படும் பதப்படுத்தப்பட்ட வெள்ளைக்கருவை வாங்க ஆரம்பிச்சோம். இதுல வந்து கொலஸ்ட்ரால், கொழுப்புச்சத்து எதுவுமே கிடையாது. அது திரவ வடிவில் அட்டை டப்பாவில் கிடைக்கும் சமாச்சாரம். ஆம்லேட் போன்ற முட்டையை உடைத்து அடித்து உபயோகப்படுத்தும் ஐட்டங்களுக்கு இது சரி வரும். ஆனாலும் எக் மசாலா செய்ய முடியாமலேயே இருந்தது. இந்த வார இறுதியில் சரி, புதுசா எதுனா செய்து பார்க்கலாம் அப்படின்னு ஒரு ஐட்டம் செய்யப் போக அது சூப்பராவே வந்தது. அதை உங்களோட பகிர்ந்துக்கத்தான் இந்தப் பதிவு.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - மீடியம் 1
பட்டாணி (உரித்தது) - 1 சிறிய கப்
வெங்காயம் - பெரிது 1 1/2
தக்காளி - பெரிது 1
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிதளவு
கசகசா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பொரிகடலை - 2 தேக்கரண்டி
மிளகு - 8
கொத்துமல்லி இலைகள் - அரை கப்
கறிவேப்பில்லை - கால் கப்
மஞ்சள் பொடி - சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு, 2 மிளகாய்ப் பழம் - தாளிக்க
எண்ணெய், உப்பு தேவையான அளவு
முட்டை - 4
செய்முறை
- உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டங்களாய் வெட்டி, பட்டாணியுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். அரைகுறையாக வெந்திருந்தால் போதும்.
- முட்டையை உடைத்து கலக்கி வைத்துக் கொள்ளவும். வெறும் வெள்ளையை எடுத்து அடித்து வைத்தால் உடம்புக்கு நல்லது.
- தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, பூண்டு, இஞ்சி, சீரகம், கசகசா எல்லாவற்றையும் வதக்கிக் கொள்ளவும்.
- வதக்கி வைத்ததுடன் கொத்துமல்லி, கறிவேப்பிலை, பொரிகடலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் அரைத்து வைத்துக் கொண்ட விழுதைப் போடவும். தேவையான அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் போடவும்.
- அது நன்றாக காய்ந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் வேக வைத்த காய்கறிகளைப் போட்டு கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம்.
- நன்றாகக் கொதித்த பின் அதில் முட்டையை விட்டு நன்றாகக் கிளறவும்.
- கொதிக்கும் க்ரேவி சட்டென்று நல்ல கெட்டியாகும். அதற்கேற்ற மாதிரி தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்.
- சிறிது நேரம் கொதித்த பின் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம்.
- கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்ப் பழத்தை தாளித்து க்ரேவியில் இடவும்.
- காரம் வேண்டுபவர்கள் அதற்கேற்ப பச்சை மிளகாய் அதிகம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
- உருளைக் கிழங்கு, பட்டாணியுடன் வேறு காய்கறிகளையும் போடலாம்.
- அரைக்கும் பொழுது சிறிது தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.