விடுகதையா இந்த வாழ்க்கை என்ற கேள்வியோடு ஆரம்பித்த புதிர் விளையாட்டுக்கு இன்று விடை தருவேன் நானே என முடிவுரை! ரொம்ப நாள் கழித்து நான் போட்ட புதிர். வழக்கமாக வருபவர்கள் வருவார்களா? புதிதாக யாரேனும் வருவார்களா? புதிர் பதிவுகளுக்கு ஆதரவு இருக்குமா? என என்னை நானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டுதான் பதிவையே போட்டேன். எந்த விதமான மசாலாவு சேர்க்காமல் வீட்டுச் சமையல் போல் இருந்தால் அதற்கு உணவகங்களில் மதிப்பிருக்குமா என்ற பயம்தான்.
ஆனால் பாருங்கள் என்ன ஒரு ரெஸ்பான்ஸ். (இதற்கு எதிர்வினை என்பதைத் தவிர்த்து வேறு சொல்லே இல்லையா? அது ஒரு நெகடிவ் பீலிங்கை தருதே.) நான் உண்மையைச் சொல்லறேன். எதிர் பார்க்கவே இல்லை. அதிலும் நான் கஷ்டம் என நினைத்த கேள்விகளை சடாரென்று சிலர் கண்டுபிடித்தது, நான் உண்மையில் எல்லோரும் கஷ்டப்படுவார்கள் எனக் கணித்த குறிப்பில் அனேகமாக எல்லாரும் மாட்டியதிலும் ஆச்சரியம்தான்.
சரி முதலில் விடைகளைப் பார்த்துவிடலாம்.
அமடல்வா - ஆசையில் ஓர் கடிதம்முதல் குறிப்பு. மிகவும் எளிதானது. அவா என்றால் ஆசை. மடல் என்றால் கடிதம். அவாவிற்குள் ஒரு மடல் இருப்பதால் ஆசையில் ஓர் கடிதம். (இலக்கணப்படி ஆசையில் ஒரு கடிதம்தானே வரவேண்டும்? அந்த படம் பேரு அதுதான். அதனால நானும் அதை அப்படியே கேட்டேன்.)
சகத்வன்திரம் - ஆயிரத்தில் ஒருவன்சகத்திரம் என்றால் ஆயிரம். வடமொழியில் சகஸ்ரம் என்றால் ஆயிரம்தானே? இங்கிருந்து அங்க போச்சா அங்க இருந்து இங்க வந்ததான்னு தெரியாது. ஆனா ஆக மொத்தம் சகத்திரம் என்றால் ஆயிரம். ஆயிரத்திற்குள் ஒரு வன் இருப்பதால் ஆயிரத்தில் ஒருவன். மற்ற எல்லாவற்றையும் போட்ட பாலா இதற்கு கடைசி வரை கஷ்டப்பட்டதுதான் ஆச்சரியம்.
நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஓர் ராகம்இது முதல் குறிப்பைப் போன்றதுதான். கல்யாணி என்று ஒரு ராகம் இருக்கிறதல்லவா? கல்யாணி என்றவுடம் பியர் ஞாபகத்துக்கு வந்து ஜில் ஜில் என எழுதியவர்கள் அனைவரும் என் பேரைச் சொல்லி நல்ல பியரா வாங்கிச் சாப்பிடுங்கள்.
விவரி - பச்சை விளக்குவிவரித்தல் என்றால் விளக்குதல் என்றுதானே பெயர்? அந்த சிலேடையை வைத்துப் போட்ட குறிப்பு இது. பச்சைக் கலரில் எழுதப்பட்ட விளக்கு - பச்சை விளக்கு.
ஓவியலூசு - படகோட்டிஇது நெல்லை மாவட்டக்காரங்களுக்கு ரொம்ப எளிதாக இருந்து இருக்கும். (இல்லையா டுபுக்கு!) ஏனென்றால் இதில் முக்கியமான குறிப்பு அந்த வட்டார வழக்கில் இருக்கிறது. ஆனால் ரொம்பவே புழக்கத்தில் உள்ள சொல்தானே! ஓவியம் என்றால் படம். ஓவிய என்றால் பட. கோட்டி என்றால் பயித்தியம், லூசுதானே. ஆகவே பட கோட்டி.
சிரிப்ஏழைபு - ஏழையின் சிரிப்பில்இது ரொம்ப நேரான விடைங்க. ஏழை in சிரிப்பில். சரிதானே ஜிரா.
தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - திருவிளையாடல் ஆரம்பம்திருவிளையாடல் 'தி'யில்தானே ஆரம்பிக்கிறது!! இது கொஞ்சம் கடினமான குறிப்புதான். ஆனா போட்டவங்களைக் கேட்டுப் பாருங்க. அப்படி ஒண்ணும் புரியவே இல்லாத மாதிரி குறிப்பு எல்லாம் இல்லை. தனுஷ் படம் என்றால் நேராக பதில் வந்திருக்கும். அவ்வளவு எளிதான குறிப்பாகத் தர வேண்டாமே என்றுதான் இன்னும் பல படங்களில் நடித்து இருக்கும் பிரகாஷ்ராஜ் பெயரைப் போட்டது.
என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!) - உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்இருப்பதிலேயே இதுதாங்க கடினமான குறிப்பு. அதே மாதிரி பாலாவைத் தவிர வேறு யாருமே இதனைப் போடவில்லை. பாலா, Hats of to you!! கமல் படம் இல்லைன்னு சொல்லியாச்சு. ஆனாலும் கமல் படம்தான் அதிகம் விடையாக வந்தது. கமல் படம் பேரு என்னங்க? உன்னால் முடியும் தம்பி. இங்க என்ன சொல்லி இருக்கேன்? என்னால் முடியும் தம்பி. ஆக மொத்தம் 'உன்' இடத்தில் நான் 'என்'னைத் தந்திருக்கிறேன். எனவே உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். சரியா? :)) இதில் தம்பி என்ற வார்த்தையைக் கொண்டு பரதன், இலக்குவன், ஸ்டாலின் எனப் பல தம்பிகள் வந்தார்கள்.
ஆ - உயிரெழுத்துநேரான குறிப்புதான். அது ஏன் ஆ? ஏன் அ, இ, ஈ என எதையும் குறிப்பிடவில்லை? பெரிதாய் காரணம் ஒன்றும் கிடையாது. ஆவும் ஒரு உயிர்தானே? :)) இந்த சிலேடையும் அ.ஆவை வைத்து குழப்பலாம் என்ற ஒரு எண்ணமும்தான். அப்படிக் குழம்பியவர்களும் உண்டுதானே!
ஆலஜானிவாக்கர்யம் - குடியிருந்த கோயில்நம்ம பசங்க எல்லாம் சரியாக விடை தந்த குறிப்பு இது! எளிதான குறிப்புதான். ஆலயம் என்றால் கோயில். இங்கு அதில் என்ன இருக்கிறது? ஜானிவாக்கர் என்ற குடி. ஆகவே குடியிருந்த கோயில்.
வேல் வினை - வேலுண்டு வினையில்லைஇருப்பதிலேயே எளிதான குறிப்பு இதுதான். வேல் இருக்கு வினை இல்லை. முதலில் நான் வெறும் வேல் என குறிப்பு தரலாம் என இருந்தேன். அப்படிச் செய்து இருந்தால் எத்தனை பேர் சரியாகப் போட்டு இருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் எல்லா குறிப்பையும் அதி கடினமாக ஆக்க வேண்டாமே என்றுதான் அந்த வினையையும் சேர்த்தது.
மீண்டும் மீண்டும் - மறுபடியும்இதுவும் நேரான குறிப்பு. மீண்டும் என்றாலே மறுபடியும்தானே, எதற்கு இரு முறை தந்தது? மீண்டும் மீண்டும் என்ற சொல் வந்தால் அதுவே மறுபடியும் வருகிறது அல்லவா? :))
அட்சி இரதன் - கண்ணும் கண்ணும்பழைய தமிழ் சொற்கள் இரண்டினைத் தந்து இருக்கிறேன். இரு சொற்களுமே கண் என்ற பொருள் கொண்டவை. மீன் போன்ற அட்சியைக் கொண்டவள் மீனாட்சி அல்லவா? இதைப் பத்தி
டீச்சர் பதிவில் கொஞ்சம் வேறு மாதிரி பிரதீப் சொன்னதை ஞாபகமாக குறிப்பிட்டு இருந்தார் கதிரவன்.
இரதன் என்றாலும் கண்தான். ஆகவே கண்ணும் கண்ணும். இதுதான் விடை. அட்சியும் இரதனும் எனச் சொல்லி இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார் ஒருவர். ஆமாம், செய்து இருக்கலாம் தான்.
உயர்ளம்ந்த - உயர்ந்த உள்ளம்.உயர்ந்த என்ற சொல்லின் உள் ளம் இருக்கிறது. ஆகவே உயர்ந்த உள்ளம். இதில் இல்லாத குழப்பங்களை எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு கஷ்டப்பட்டனர் சிலர்.
என்விதிகை - சட்டம் என் கையில்போன குறிப்பு மாதிரிதான். விதி என்றால் சட்டம், அது என் கையில் உள்ளது. ஆகவே சட்டம் என் கையில்.
சஹானா ஆதி ரூபகம் - ராக தாளங்கள்சஹானா ஒரு ராகம். ஆதி தாளம், ரூபக தாளம். இவை எல்லாத்தையும் ஒண்ணா எடுத்துப் போட்டா ராக தாளங்கள். அதாவது ஒரு இராகம் ப்ளஸ் அட்லீஸ்ட் இரண்டு தாளங்கள். வந்திருச்சா?
அஜீத் அடானா - ஒருதலை ராகம்இது நம்மாளுங்க எல்லாரும் போடுவாங்கன்னு எதிர் பார்த்தேன். சிலவங்க மிஸ் பண்ணினது ஆச்சரியம்தான். 'தல' அஜீத். ஒரு தல. ஒருவரே தல! அடானா என்பது ஒரு ராகம். ஆக இது ஒரு தல ராகம் = ஒரு தலை ராகம்.
காததோழன்லி - நண்பனின் காதலிநண்பன் in காதலி!! இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல?
இந்தியா - நம் நாடுஎன்னங்க இதை போய் சிலவங்க மிஸ் பண்ணி இருக்கீங்க!! இந்திய நாடு நம் நாடு!!
இள இள இள (வேர்ட் ஆர்ட் - சர்க்கிள்) - இளவட்டம்'இள' என்ற சொல்லால் ஆன வட்டம் ஆகவே இளவட்டம். இளமை ஊஞ்சல் ஆடுகிறது என சிலர் சொல்லி இருந்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்த பதில் இளவட்டம்தான்.
வெற்றி பெற்றவர்கள்
இந்த போட்டியில் 20 குறிப்புகளையும் சரியாகச் சொன்ன ஒரே ஆள் நம்ம
பாலராஜன் கீதா அவர்கள்தான். அவரை வெற்றியாளராக அறிவிப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பாலா. உங்களுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றதிற்காக ஒரு புதிர் புத்தகம் பரிசாகத் தரலாம் என இருக்கிறேன். நல்ல ரீபஸ் புத்தகமே தேடுகிறேன். அது கிடைக்கவில்லை என்றால் வேறு புதிர்கள் கொண்ட புத்தம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன்.
பல முறை நான் தொடர்ந்து தவறான விடை என்றாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் (அதாவது, மறுபடியும்!) வந்து தொடர்ந்து முயன்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிக முக்கியமாக
கோகிலவாணி கார்த்திகேயன் அவர்கள்.
கலந்து கொண்ட அனைவரின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள
இங்கே சுட்டுங்கள்.
அனைவரும் இப்புதிர்களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.