இந்த ஆறு விளையாட்டுக்கு நம்மளை அழைத்தது
குமரன். என்ன எழுதலாமுன்னு யோசிக்கும் போது எண்ணங்கள் ஆறா ஓடுனதுல ஒரு ஆறு சங்கதிகள் மட்டும் சொல்லறேன். அட இதுக்கே ஓடினா எப்படி? ஆறு மனமே ஆறு.
ஆறுதான் நம்ம எண்களிலேயே முதல் மாசறு எண் (Perfect Number). அதாவது ஒரு எண்ணை வகுத்தால் வரும் முழு எண்களைப் பெருக்கினாலோ, கூட்டினாலோ, வகுக்கப்பட்ட அதே எண் வந்தால் அது மாசறு எண்ணாகும். இங்கு ஆறை வகுத்தால் வரக்கூடிய எண்கள் 1,2 மற்றும் 3. இந்த மூன்று எண்களை கூட்டினாலோ, பெருக்கினாலோ 6 வருவதால் அது மாசறு எண் என அழைக்கப்படுகிறது. (இதுக்கு வேற பேர் இருக்காங்க? எனக்கு தெரியலை. சும்மா மாசறு எண் அப்படின்னு நானா மொழிபெயர்ப்பு செஞ்சுக்கிட்டேன்). சரி கணக்கு தெரியும் என கணக்கு காட்டியாகிவிட்டதா? இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்.
1) ஆறு பற்றி சொல்ல வந்தா முதலில் நம் ஆறுமுகனின் ஆறுபடைவீடுகள்தான் ஞாபகம் வரும். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒரு வரி செய்தி. தெரிந்தவர்கள் மேலதிக விபரங்கள் சொல்லுங்களேன். எல்லாம் பலவேறு இடங்களில் படித்தது. தப்பா இருந்தா சொல்லுங்கப்பூ.
திருப்பரங்குன்றம் - நக்கீரர் திருமுருகாற்றுப்படை எழுதியது இங்குதான்.
திருச்செந்தூர் - குன்றில் அமையாமல் கடற்கரையில் அமையப் பெற்ற கோயில் என கூறப்பட்டாலும் இக்கோயிலின் கருவறை அமைந்த இடம் ஒரு சிறு குன்று.
திருவாவினன்குடி - பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவில்தான் அறுபடை வீடுகளில் ஒன்று. அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாக புராணங்கள் கூறுகின்றன.
சுவாமிமலை - இங்கு கோயிலுக்கு செல்ல 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை பழைய தமிழ் முறைப்படி இருந்த 60 வருடங்களைக் குறிக்கின்றன.
திருத்தணி - முருகனே தனக்குப் பிடித்த மலையாக திருத்தணியை கூறியதாக கந்தபுராணம் கூறுகின்றது.
பழமுதிர்சோலை - சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம்.
2) விளையாட்டை எடுத்துக்கிட்டீங்கன்னா, பல விளையாட்டுகளில் இந்த எண் முக்கியமானதா இருக்கு. கிரிக்கெட்டில் ஆறு ரன்கள்தான் அதிகமாகப் பெறக்கூடியது. அதே போல் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள். டென்னிஸில் ஒரு செட் முடிய ஆறு ஆட்டங்கள்தான் பொதுவாக ஜெயிக்க வேண்டும். அமெரிக்காவில் விளையாடும் ஃபுட்பாலில் டச்டவுண் செய்தால் ஆறு புள்ளிகள். ஆஸ்திரேலியாவில் விளையாடப்படும் ஒரு விதமான ஃபுட்பாலிலும் ஒரு கோல் அடித்தால் ஆறு புள்ளிகள். வாலிபாலில் ஒரு அணியில் ஆறு பேர்கள்தான் விளையாடுவார்கள். அதே கதைதான் ஐஸ் ஹாக்கியிலும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி என்ன ஆறுக்கும் விளையாட்டுக்கும் சம்பந்தம்? யாராவது கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.
3) இப்போ நமக்குப் பிடித்தமான ஒரு விஷயம் - சாப்பாடு! அறுசுவை விருந்து எனச் சொல்கிறோம். அந்த ஆறு சுவைகள் என்னன்னு கேட்டா தித்திப்பு, காரம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு அப்படின்னு ஒரு லிஸ்ட்டும் போடுவோம். ஆனா நம்ம ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில்லெல்லாம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு சக்தி இருக்கிறதாவும் அதனால எல்லா விதமான சுவையையும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அளவாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். இந்த பலன்கள் என்னவென்று பார்ப்போமா?
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
ஆனா நம்ம அலோபதி மருத்துவத்தில் இந்த மாதிரி இல்லை. இதைப் பற்றி அந்த துறை சார்ந்தவர்கள் கொஞ்சம் விவரமா சொல்லுங்க. எது சரி?
4) அடுத்ததா நம்ம மற்றொரு விருப்பமான விஷயமான சினிமாவுக்கு போகலாம். கெவின் பேக்கனின் ஆறு பாகைகள் (Six Degrees of Kevin Bacon ) அப்படின்னு ஒரு விளையாட்டு இருக்கு. இந்த கெவின் பேக்கன் ஒரு அமெரிக்க நடிகர். உலகத்தில் எந்த நடிகரை எடுத்துக் கொண்டாலும் அவருடன் இணைந்து நடித்தவர்களைச் சங்கிலியாகக் கொண்டு கெவின் வரை வர ஆறு இணைப்புகளே போதும் என்பதுதான் இந்த விளையாட்டு. உதாரணமாக நம்ம ரஜினியை எடுத்துக் கொண்டால் அவர் நடித்த கிஷன் கன்னேயா என்ற திரைப்படத்தில் உடன் நடித்தவர் சாயீத் ஜாப்ரி. இவர் டே ஆப் த சைரன்ஸ் என்ற படத்தில் ஜான் மொராய்ட்டிஸ் என்பவருடன் நடித்துள்ளார். ஜான், வேர் த ட்ரூத் லைஸ் என்ற படத்தில் கெவினுடன் நடித்துள்ளார். ஆகவே சூப்பர் ஸ்டாரின் கெவின் எண் 3. இதே போல் கமலை எடுத்துக்கொண்டால் அவர் இதே சாயீத்துடன் சாகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆகவே இவரின் கெவின் எண்ணும் 3. (அப்பாடா ரெண்டு பக்கமும் அடிக்க மாட்டாங்க). யாராக இருந்தாலும் ஆறு படிகளில் கெவினை அடைந்து விடலாமாம்.
இதற்காக வெர்ஜினியா பல்கலைகழகத்தில் ஒரு
வலைப்பக்கம் அமைத்து இந்த விளையாட்டுக்காக வசதி செய்துள்ளார்கள். நீங்கள் விளையாடிப் பார்த்து யாருக்காவது ஆறு படிகளுக்கு மேல் வருகிறதா எனப் பாருங்களேன். (நம்ம புரட்சிக் கலைஞர் இந்த லிஸ்ட்டில் இல்லவேயில்லை. நீங்கள் அவர் பெயரைப் போட்டு விட்டு காணவில்லை என என்னை அடிக்க வராதீர்கள்.)
5) சினிமா பத்தி பேசும் போது மற்றொரு முக்கியமான விஷயம் ஞாபகத்துக்கு வருது. நம்ம தளபதி சிபி இருக்காரே. அவரோட ஃப்ரெண்டு (பின்ன என்ன வெறும் நட்புன்னுதானே அறிக்கை எல்லாம் விட்டுக்கறாங்க) நயன்தாராவிற்கு ஒரு கையில் ஆறு விரலாம். ஆனா அது வெளிய தெரியாத மாதிரி பாத்துக்கறாங்களாம். மெய்யாலுமாப்பா?
6) கடைசியா (உண்மையில் முதலிலேயே) ஆறு என எண்ணத் தொடங்கிய உடன் நினைவுக்கு வருவது சிக்ஸ் பேக் பியர்தான். அடிக்கிற வெயிலுக்கு அதுதான் சரிப்படும். வாங்கிட்டு வந்ததை கவனிக்கணும். அதனால இதோட ஆட்டம் க்ளோஸ்.
போறதுக்கு முன்னாடி நான் யாரையாவது ஆறு பேரைக் கூப்பிடணும். போன தடவை இந்த மாதிரி
நாலு விளையாட்டு விளையாடும் போது கூப்பிட்ட நாலு பேரில் மூணு பேர் இப்ப எழுதவே காணும். அதனால வேண்டியவங்களைக் கூப்பிடவே பயமா இருக்கு. சரின்னு அந்த ஆறுமுகன் மேல பாரத்தைப் போட்டுவிட்டு கூப்பிடறேன். இதில் யாராவது ஏற்கனவே கூப்பிடப் பட்டிருந்தால் சொல்லுங்க. மாத்திடலாம்.
1.
வெண்பா வாத்தி ஜீவா2.
வரலாற்று டீச்சர் துளசி 2.
பாலர் கதை சொல்லும் பரஞ்சோதி 2.
சங்கச் சிங்கம் ஜொள்ளுப்பாண்டி3.
டா கில்லி கோட் தந்த பெனாத்தலார்3.
செய்திகளைச் சூடாகத் தரும் ஆவி பறக்கும் இட்லிவடையார்4.
நம்ம ர.ம.செ.த, தேவு தம்பி5.
பமகவின் நிரந்தர தலை முகமூடியார் (உள்குத்து எல்லாம் இல்லாம சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு தலைவா.)
5.
காமெடி ஸ்பெஷலிஸ்டாக உருவாகி வரும் கோவி.கண்ணன்6.
பெரியவர் ஹரிஹரன்ஸ் (இப்போவாவது மீண்டும் பதிவு போட ஆரம்பிக்கறாரான்னு பார்ப்போம்)
(சிலர் பல முறை அழைக்கப்பட்டு விட்டதால், அதே எண்களில் இன்னும் சிலர்.)
கஷ்டப்பட்டு எழுதியாச்சு. ஒரு 'ஆறு'தல் பரிசாவது தாங்கப்பா.