Friday, February 22, 2008

IP, பதிவு, அறிவு, திருட்டு - ஒரே கொயப்பமாக் கீதே!

எல்லா விவாதங்களிலும் பங்கேற்று பல கருத்துக்களை தரும் வவ்வால்அவர்களின் இரு பின்னூட்டங்களைப் பார்த்ததினால் வந்த எண்ணங்கள் இவை. இரு விஷயங்களுமே அறிவுசார் காப்புரிமை (Intellectual Property Rights, இதுக்கு வேற தமிழ்ச் சொல் இருக்கா?) பற்றியவை என்பதால் இது பற்றி கொஞ்சம் பேசலாமே என்றுதான் இந்தப் பதிவு. எந்த விதமான தலைப்பென்றாலும் சளைக்காமல் தகவல்களை அள்ளி வீசும் வவ்வால் அவர்களுடைய கருத்தே தவறோ என்ற எண்ணம் வரும் பொழுது மற்ற சாமான்யர்களுக்கும் (சாமான்யன் சிவா, உங்களை மட்டும் இல்லை) இது பற்றிய புரிதல் எந்த அளவு இருக்கும் என்ற சந்தேகமும் உடன் எழுகிறது. அந்த இரு விஷயங்கள் எவை, அதில் எனக்கு புரியாத விஷயங்கள் எது என்று பார்த்துவிடுங்கள். கடைசியாக இரண்டே இரண்டு கேள்விகள் கேட்கிறேன். அதற்கு உங்கள் பதிலைக் கட்டாயமாகச் சொல்லுங்கள்.

பின்னூட்டம் 1: என்றென்றும் அன்புடன் பாலா ஒரு பதிவு போட்டு இருக்காரு. பதிவு வழக்கம் போல மென்பொருள் துறையை போட்டுத் தாக்கும் பதிவுதான். வழக்கம் போல நம்ம பதிவர்களும் இரண்டு பக்கமும் நின்னுக்கிட்டு தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அப்படின்னு பல விஷயங்களைச் சொல்லி பட்டையைக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க. நானும் வழக்கம் போல வேடிக்கை பார்க்கும் கும்பலில் ஒருவனா நின்னுக்கிட்டு இருந்தேன். அங்க வவ்வால்போட்ட பின்னூட்டத்தில் ஒரு பகுதி இது.

//
அப்புறம் ஏற்கனவே சொல்லிட்டேன் ,சிட்டி பேங்க் ஆகட்டும் என்னவாகட்டும் அதுக்குலாம் பேரு மென்பொருள் சேவைனு, அதை எல்லாம் மென்பொருள் என்று சொல்லிக்காதிங்க, நான் சொன்னது , போட்டோ ஷாப், கோரல் டிரா, ஆட்டோ கேட், மாயா, விண்டோவ்ஸ், இதை எல்லாம் தான் மென்பொருள்னு, நீங்க சொல்றத எல்லாம் மென்பொருள்னு எந்த கடைல நுகர்வோர்க்கு விக்குறாங்க சொல்லுங்க? (உங்களுக்கு மென்பொருள் சேவைனா என்னா, மென்பொருள் பொது மக்களுக்காக என்னனு தனியா சொல்லனும் போல, ஆனால் இங்கே சிவா என்பவர் அது சரியா புரிஞ்சுக்கிட்டாரே எப்படி?)//

அதாவது பொதுமக்கள் கடையில் சென்று வாங்கினாதான் மென்பொருள் மற்றவை எல்லாம் மென்பொருள் சார்ந்த சேவைகள் அப்படின்னு பொருள் வருவது மாதிரி சொல்லி இருக்காரு. அதுக்கு எடுத்துக்காட்டா அவர் சொல்லி இருக்கும் மென்பொருட்கள் எல்லாமே பொதுவாக பலரும் பயன்படுத்துவையாகவே இருக்கின்றன. அவர் குறிப்பிட்டிருக்கும் சிட்டி பேங்க் பற்றிய குறிப்பு என்னவென்றால் வேறொருவர் சிட்டி பேங்க் பயன்படுத்தும் ஒரு மென்பொருளைப் பற்றிச் சொல்லி இருந்ததற்குப் பதில். இதில் வவ்வால் அவர்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லாமல் போனதால் நானும் ஒரு பின்னூட்டம் போட வேண்டியதாகப் போயிற்று. அது இதுதான்.

ஒரே நம்பரா இருக்கு, அதுல எது நம்பறாப்புல இருக்குன்னே தெரியலை! போகட்டும். ஆனா இந்த ஒரு விஷயம் டக்குன்னு கண்ணில் பட்டுச்சு. கொஞ்சம் அதைப் பத்தி மட்டும் பேசலாமேன்னுதான் வந்தேன். மத்தபடி மென்பொருள் துறை என்ற கைப்புளையை காப்பாத்தி கூட்டிக்கிட்டுப் போற அளவுக்கு நமக்கு நேர வசதியோ அல்லது எண்களைக் கரைத்துக் குடிக்கும் பொறுமையோ இல்லை. அதனால சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு அப்படியே சைடில் குந்திக்கறேம்பா.

எது மென்பொருள், எது மென்பொருள் சேவை அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். ஒரு பொருளின் காப்புரிமை அதனை தயாரித்தவரிடம் இருக்க, அதனை பயன்படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்குத் தருவது என்பது மென்பொருள் என்பதின் விளக்கமாகக் கொள்ளலாம். அதுவே காப்புரிமை வேறொருவரிடம் இருக்க, அதனை நிறுவவோ அல்லது பேணவோ தனது சேவைகளைத் தருவது மென்பொருள் சேவை எனக் கொள்ளலாம். பொது மக்களுக்காகத் தயாரிக்கப்படும் மென்பொருட்கள் தவிர்த்த மற்ற அனைத்தும் சேவை என்பது சரியான வாதமே அல்ல.

இன்று இந்தியாவில் i-flex solutions (தமிழ்ப்'படுத்தாம' ஆங்கிலத்திலேயே எழுதறேன்.) உருவாக்கி இருக்கும் வங்கிகளுக்கான மென்பொருள் கடந்த 5 வருடங்களாக உலகத்திலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட வங்கிகளுக்கான மென்பொருள். இவர்களுக்குப் போட்டியாக TCS மற்றும் Infosys நிறுவனத்தாரும் மென்பொருட்கள் தயாரித்துள்ளனர். இவைகளை பொது மக்கள் பயன்படுத்தவில்லை என்பதால் இவைகள் சேவையாக மாறிவிடுமா? முன்பு சொல்லப்பட்ட ATM மென்பொருளும் இது போலத்தான். (எந்த நிறுவனம் எனத் தெரியாது.) இது மட்டுமின்றி மிகச் சிலரே பயன்படுத்தும் பல பொருட்கள் இங்கு செய்யப்படுகின்றன. இதனை ஓகை அவர்களும் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆக நுகர்வோராக பொதுமக்கள் இல்லாமல் போனாலும் கூட இவை எல்லாம் மென்பொருட்களே.

ஆனால் வவ்வால் அவர்களின் அளவுகோல் வேறாக இருக்கும் போலிருக்கிறதே. என்னைப் போல் இரண்டாம் வகுப்பு முடிக்காதவர்களும் வந்து போகும் இடமாக இருப்பதால் தனியாச் சொல்லணுமா எனக் கேட்காமல் தனியாகச் சொல்லிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பின்னூட்டம் 2: இது வந்து வவ்வால் எழுதின பழைய பதிவு ஒண்ணு. இது சமீபத்தில் பின்னூட்டமிடப்பட்டதால் மீண்டும் தமிழ்மண முகப்பில் வந்து நம்ம கண்ணில் பட்டது. அதில் ஜிரா சொல்லியிருந்த ஒரு தகவலுக்கு வவ்வால்சொல்லி இருக்கும் பதில் இது .

//
மூனு சுரத்துல ஒரு ராகம் மகதி. அதுல ராஜா ஒரு தெலுங்குப் பாட்டு போட்டாராம். அதை மேடையில சொல்லி....விளக்கி...டீவியில வருது. ஆனா பாருங்க. அந்த ராகத்த மொதமொதலாப் போட்டது எம்.எஸ்.வி. அதை எடுத்து இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.//

ஆஹா இளையராஜா அந்த வேலை எல்லாம் செய்து இருக்காரா , நான் கேள்விபடாத தகவல் ,ஏற்கனவே சிம்பொனி போடாமலே போட்டதாக வெற்று பெருமை அடித்துகொண்டு இருக்கார் ராஜா இதில் அறிவு திருட்டு வேறா?

இதுல எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. அதைப் பத்தி யாராவது சொல்லி இருக்காங்களான்னு பார்க்க வவ்வால் பதிவு, அங்க இருந்து ஜிரா பதிவு, அங்க இருந்து இசை இன்பம் அப்படின்னு போய் பார்க்கும் போது சந்தேகம் அதிகமாச்சே தவிர பதில் கிடைக்கலை. சரி இதில் என்னென்ன கேள்வின்னு பார்க்கலாமா? முதலில் அந்த மூணு ஸ்வரங்களில் பாட்டு போட்டது நான் மட்டுமேன்னு இளையராஜா சொல்லலை. அது மகதி ராகம் என்றும் சொல்லலை. அந்த இசைஇன்பம் பதிவில் கே.ஆர்.எஸ் சொன்னா மாதிரி மகதி நாலு ஸ்வரம் அப்படின்னுதான் இந்தத் தளமும் சொல்லுது. ஆனா திரச அவர்கள் வந்து மகதிக்கும் மூணு ஸ்வரங்கள் எனச் சொல்ல இளையராஜா போட்ட மூணு ஸ்வரப் பாட்டும் மகதி ராகம் அப்படின்னு முடிவுக்கு வந்துட்டாங்க போல!!

அது எல்லாத்தையுமே விட்டுடலாம். எம்.எஸ்.வி. ஒரு பாடலில் பயன்படுத்திய ராகத்தில் இளையராஜா வேறு ஒரு பாட்டு போட்டா அது அறிவுத் திருட்டா? அப்படிப் பார்த்தால் எந்த ஒரு ராகத்திலும் முதலில் பாடல் புனைந்தவருக்கு அந்த ராகத்துக்கான அறிவுசார் காப்புரிமை தரணுமா? கர்நாடக சங்கீதத்தில் (ராகங்கள் என வந்ததால்தான் இதைப் பத்தி சொல்லறேன். இதுக்காக தனியா முத்திரை எல்லாம் குத்தாதீங்கப்பா!) தோடி, கல்யாணின்னு போனா நூத்துக்கணக்குல பாட்டு இருக்கே. அந்த ராகத்தில் எல்லாம் யாரு முதலில் பாடினாங்க அப்படின்னு பார்த்து மத்தவங்க மேல எல்லாம் அறிவுத் திருட்டு அப்படின்னு வழக்கு போடணுமா?

இப்போ சொல்லுங்க

1)
மென்பொருள் என்றால் என்ன, மென்பொருள் சார்ந்த சேவை என்றால் என்ன என எப்படி வரையறுப்பது?
2) எது அறிவுத் திருட்டு (குறிப்பாக இசையில்) என எப்படி வரையறுப்பது?