Tuesday, March 27, 2007

எக் மசாலாவும் எடுபட்ட பயலும்!!

நம்ம வீட்டுல எல்லாருக்கும் பிடிச்ச ஒரு ஐட்டம் முட்டை மசாலா. தமிழில் சொல்லணுமுன்னா எக் மசாலா. முழு முட்டையை வேக வெச்சு, க்ரேவி செஞ்சு அதுல போட்டு சாப்பிடற ஒரு மேட்டர் அது. ஆனாப் பாருங்க, நமக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தின்னு டாக்டர் சொன்ன உடனே முதலில் கட் ஆனது இந்த முட்டைதான். மஞ்சள் கருவில் ரொம்ப கொலஸ்ட்ரால் ஜாஸ்தியாமே. முட்டை வாங்கறது நின்னு போனதுனால இந்த ஐட்டம் செய்ய முடியாமப் போச்சு.

அப்புறமா Egg Substitutes எனப்படும் பதப்படுத்தப்பட்ட வெள்ளைக்கருவை வாங்க ஆரம்பிச்சோம். இதுல வந்து கொலஸ்ட்ரால், கொழுப்புச்சத்து எதுவுமே கிடையாது. அது திரவ வடிவில் அட்டை டப்பாவில் கிடைக்கும் சமாச்சாரம். ஆம்லேட் போன்ற முட்டையை உடைத்து அடித்து உபயோகப்படுத்தும் ஐட்டங்களுக்கு இது சரி வரும். ஆனாலும் எக் மசாலா செய்ய முடியாமலேயே இருந்தது. இந்த வார இறுதியில் சரி, புதுசா எதுனா செய்து பார்க்கலாம் அப்படின்னு ஒரு ஐட்டம் செய்யப் போக அது சூப்பராவே வந்தது. அதை உங்களோட பகிர்ந்துக்கத்தான் இந்தப் பதிவு.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - மீடியம் 1
பட்டாணி (உரித்தது) - 1 சிறிய கப்
வெங்காயம் - பெரிது 1 1/2
தக்காளி - பெரிது 1
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிதளவு
கசகசா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பொரிகடலை - 2 தேக்கரண்டி
மிளகு - 8
கொத்துமல்லி இலைகள் - அரை கப்
கறிவேப்பில்லை - கால் கப்
மஞ்சள் பொடி - சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு, 2 மிளகாய்ப் பழம் - தாளிக்க
எண்ணெய், உப்பு தேவையான அளவு
முட்டை - 4

செய்முறை

 • உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டங்களாய் வெட்டி, பட்டாணியுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். அரைகுறையாக வெந்திருந்தால் போதும்.
 • முட்டையை உடைத்து கலக்கி வைத்துக் கொள்ளவும். வெறும் வெள்ளையை எடுத்து அடித்து வைத்தால் உடம்புக்கு நல்லது.
 • தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, பூண்டு, இஞ்சி, சீரகம், கசகசா எல்லாவற்றையும் வதக்கிக் கொள்ளவும்.
 • வதக்கி வைத்ததுடன் கொத்துமல்லி, கறிவேப்பிலை, பொரிகடலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் அரைத்து வைத்துக் கொண்ட விழுதைப் போடவும். தேவையான அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் போடவும்.
 • அது நன்றாக காய்ந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் வேக வைத்த காய்கறிகளைப் போட்டு கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம்.
 • நன்றாகக் கொதித்த பின் அதில் முட்டையை விட்டு நன்றாகக் கிளறவும்.
 • கொதிக்கும் க்ரேவி சட்டென்று நல்ல கெட்டியாகும். அதற்கேற்ற மாதிரி தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்.
 • சிறிது நேரம் கொதித்த பின் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம்.
 • கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்ப் பழத்தை தாளித்து க்ரேவியில் இடவும்.
 • காரம் வேண்டுபவர்கள் அதற்கேற்ப பச்சை மிளகாய் அதிகம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
 • உருளைக் கிழங்கு, பட்டாணியுடன் வேறு காய்கறிகளையும் போடலாம்.
 • அரைக்கும் பொழுது சிறிது தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.
சப்பாத்தி, ப்ரெட் போன்றவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும். தோசை, இட்லியுடனும் சாப்பிடலாம். இது நானே முயன்று செய்த ஒரு ஐட்டம். அதனால் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எனச் சொன்னால் தெரிந்து கொள்வேன். இதுவே தொட்டுக் கொள்ளும் ஐயிட்டம் என்பதால் தொட்டுக் கொள்ள ஒன்றும் சொல்லவில்லை!

Saturday, March 24, 2007

விலங்குகள் உரிமை என்றால் என்ன?

சமீபகாலமா நான் ஊடகங்களில் படித்து வரும் ஒரு விஷயம்தான் இந்த விலங்குகள் உரிமை (Animal Rights). இது பற்றி பல கட்டுரைகள், பதிவுகள், அப்பதிவுகளுக்கான எதிர்மறை கருத்துகள் என படித்து வருகிறேன். ஆனால் என்னால் இது பற்றி சரியாக புரிந்து கொள்ளவே முடியவில்லை. படிக்கும் பொழுது எது சரி எது சரியில்லை என்ற முடிவுக்கே வர முடியாத நிலமைதான். சரி, எல்லாக் கருத்தையும் மொத்தமா ஒரே இடத்தில் படிக்கலாமே என்றுதான் இந்த இடுகை. இதை எழுதத் தூண்டியது சமீபத்தில் படித்த இரு விஷயங்கள்.

முதலாவது இந்தத் தெரு நாய்கள் பற்றிய விபரம். பெங்களூர், கொடைக்கானல், கோவை, மணிப்பூர் எனப் பல இடங்களிலும் நாய்கள் கடித்ததால் பலர் இறந்த செய்திகள் வந்திருக்கிறது. இதன் காரணமாக தெரு நாய்களை கொன்றுவிட வேண்டும் எனச் சொல்லும் மக்கள் ஒரு பக்கம். தெரு நாய்களை கொல்வது தவறு. இந்த பிரச்சனைக்கு வேறுவிதங்களில்தான் முடிவு காண வேண்டும் எனச் சொல்லும் அணி மறுபுறம். மனேகா காந்தி, அமலா என பிரபலங்கள் பலர் இருக்கும் பக்கம் இது. நாய்களைக் கொல்வதே நல்லது என்ற கருத்தை முன் வைக்கும் சமீபத்திய பதிவு ஒன்று இங்கே. மற்ற அணியினரின் பதிவு எதுவும் சிக்கவில்லை. யாரேனும் சுட்டி கிடைத்தால் தாங்களேன்.

இது இப்படி இருக்க, சமீபத்தில் படித்த இந்த செய்தியைப் பாருங்கள். ஜெர்மனியில் பெர்லின் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள பனிக்கரடி ஒன்று கடந்த டிஸம்பரில் இரு குட்டிகளை ஈன்றது. ஆனால் என்ன காரணமோ அந்த தாய்க்கரடி இந்த குட்டிகளைப் பேணாமல் விட்டு விட்டது. அதனால் ஒரு குட்டி இறந்தும் விட்டது. அந்த மிருகக்காட்சி சாலையின் காப்பாளர்கள், மற்றொரு குட்டியை எடுத்து, அதற்கு க்நட் எனப் பெயரிட்டு, பாலூட்டிச் சீராட்டி வளர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இது ஒரு பெரிய பிரச்சனையைக் கிளப்பி விட்டு இருக்கிறது.

விலங்குரிமை ஆர்வாளர்கள் இவர்கள் செய்தது தவறு என்றும் ஒரு காட்டு விலங்கை இந்த மாதிரி ஊட்டி வளர்ப்பது தவறென்றும் இந்தக் கரடியைக் கொன்றுவிட வேண்டும் எனவும் குரலெழுப்புகின்றனர். தாய்க்கரடியினால் கைவிடப்பட்ட குட்டி இறந்து போவதுதான் இயற்கை நியதி. அதில் மனிதனின் தலையிடல் கூடாது . அப்படி மனிதரால் வளர்க்கப்படும் குட்டியால் இயற்கையில் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொல்கிறார்கள். முன்பு இத்தாலியில் இம்மாதிரி வளர்த்து விடப் பட்ட கரடி ஒன்று தென் ஜெர்மனி பக்கம் வந்ததால் பீதியுற்ற மக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக் காண்பிக்கின்றனர்கள் இவர்கள்.

ஆனால் இதனை மறுக்கின்றனர் இந்த குட்டியை வளர்ப்பவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். "இந்த மாற்றுக் கருத்துக்களைக் கேட்டால் எனக்கு கோபம்தான் வருகிறது. அவர்கள் சொல்லுவதற்கு எந்த விதமான முக்கியவத்துமும் குடுக்க முடியாது" என்று சொல்கிறார் அந்த மிருகக் காட்சி சாலையின் வைத்தியர். பனிக்கரடிகள் இயற்கையிலேயே தனியாக வாழும் மிருகங்கள்தான் அதனால் இங்கு இது தனியாக வளர்வதில் எந்தத் தவறும் இல்லை. பனிக்கரடிகள் அருகி வரும் இந்த நேரத்தில் இந்த கரடியைக் கொண்டு மற்ற கரடிகளை கருத்தரிக்க வைக்கலாம் என்பது இவர்கள் வாதம்.

எனக்கு ஒண்ணும் புரியலைங்க. அவ்வளவு பிரச்சனைகளும் உயிர்ச்சேதமும் நடக்கக் காரணமாக இருக்கும் நாய்களைக் கொல்லக் கூடாதென்பதும் மிருகவள ஆதரவாளர்கள். நன்றாக இருக்கும் இந்த குட்டியைக் கொல்வதுதான் சரி என வாதாடுபவர்களும் இவர்கள்தான். நான் சொன்னா மாதிரி தனித்தனியாப் பார்த்தா எல்லாருமே சரின்னுதான் தோணுது. ஆனா எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு தெரியலையே. மக்கள்ஸ் நீங்க வந்து உங்க கருத்தைச் சொல்லுங்கப்பா.

க்நட் செய்திக்கும் படங்களுக்கும் நன்றி - msnbc.com

நாய்க்கடி பட உதவி அபிஅப்பா

Wednesday, March 21, 2007

என்னமோ என்னமோ பிடிச்சிருக்கு!!

எல்லாரும் தங்களை weird weird அப்படின்னு சொல்லிக்கறாங்களே, என்னடா இது கிறுக்குத்தனமுன்னு பார்த்து சிரிச்சுக்கிட்டு இருந்தா இப்போ நம்மளையும் கூப்பிட்டு விட்டுட்டாரு இந்த யோசிப்பவர். இவரு புதிர் போட்ட போதெல்லாம் அங்க போய் முயற்சி செஞ்சப்பவே முடிவு பண்ணிட்டாரு போல! சரி, ஊரோட ஒத்து வாழணமுன்னு நம்மளை மாதிரி புத்திசாலி கூட பைத்தியக்காரப் பட்டம் கட்டிக்க வேண்டியதா இருக்கு. என்ன பண்ண.

முதலாம் கிறுக்குத்தனம்

நமக்கு எல்லாமே ஒரு சீஸனுக்குத்தான் மதிப்பு. அதனால பிடிச்ச விஷயங்கள், பண்ணுற விஷயங்கள் வந்து அப்பப்போ மாறிக்கிட்டே இருக்கும். சின்ன வயதில் தீப்பெட்டி கலெக்க்ஷனா இருக்கட்டும் அதன் பின் ஆங்கில பாடல்கள், தமிழ்த்திரைப்படப் பாடல்கள், கர்நாடக சங்கீதம் என மாறும் ரசனையாக இருக்கட்டும் எல்லாமே சீஸனல். பிடித்த உணவகங்கள், பொழுது போக்கு அப்படின்னு எல்லாமே இந்த சுழற்சி முறைதான். தற்பொழுது சீஸனில் இருக்கும் ஐட்டங்கள் சமையல், கர்நாடக சங்கீதம் மற்றும் வலையுலகம். :)

இரண்டாம் கிறுக்குத்தனம்

இது முதலாம் கிறுக்குத்தனத்தின் தொடர்ச்சிதான். ஒண்ணு பிடிச்சா ஒரேடியா பிடிக்கும் இல்லைன்னா பிடிக்காமலேயே போயிடும். உதாரணத்துக்கு இப்போ கர்நாடக சங்கீதம் பிடிக்குதா, அதைத் தவிர வேறு எதையும் கேட்பதில்லை. விழுந்து விழுந்து கேட்ட ஆங்கிலப் பாடல்கள் இப்பொழுது வேப்பங்காயாகக் கசக்கிறது. இது போன்றுதான் குறுக்கெழுத்தாகட்டும், சுடோகுவாகட்டும். ஒரு நாளைக்கு நாலைந்து புதிர்கள் போடுவதிலிருந்து இப்பொழுது திரும்பிக் கூடப் பார்க்காத நிலை வரை. வலைப்பூப் பக்கம் எப்போ வராம இருக்கப் போறீங்கன்ன்னு எல்லாம் கேட்கக் கூடாது!

மூன்றாம் கிறுக்குத்தனம்

தொழில்நுட்ப சாதனங்களின் மேல் காதல். இது காசைக் கரியாக்கும் ஒரு விஷயம். புதிதாக சந்தையில் என்ன வருகிறது, என்ன வாங்கலாம், எதன் விலை குறைந்து கொண்டே இருக்கிறது எனப் பார்த்துக் கொண்டே இருப்பது. அதீத ஆர்வத்தால் பல சாமன்கள் வாங்கிக் குமித்து வைப்பது. வாங்கும் சாமன்களில் உபயோகப்படுத்தாமல் இருப்பவை எத்தனை எத்தனையோ. மடிக்கணினி, கம்பியில்லா இணைய இணைப்பு, கம்பியில்லா ஒலிப்பான்கள், வெளிச்சத்தம் குறைக்கும் ஒலிப்பான்கள், ஐ-பாடுகள், அதன் ஒன்று விட்ட சகோதரர்கள், நீலப் பல் சமாச்சாரங்கள்.... என நீண்டு கொண்டே போகும் பட்டியல். நான் வாங்குவது போதாது என்று அடுத்தவர்களையும் வாங்க வைத்து விடுவேன். அதே போல நம்மிடம் கேட்காமல் எதையும் வாங்க மாட்டார்கள் நம் நண்பர்கள். :)

நான்காவது கிறுக்குத்தனம்

ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலை மாத்திரம் செய்ய முடியாது. தொலைபேசியில் பேசும் பொழுது வேறு எதாவது படிப்பது அல்லது ஒரு நேரத்தில் நான்கு டாகுமெண்ட்டுகளைத் திறந்து வைத்துக் கொண்டு வேலை செய்வது. வேலை செய்யும் பொழுது கூடவே நான்கு சாட் சாளரங்கள், தமிழ்மணம் எனத் திறந்து வைத்துக் கொள்வது, ட்ரெட்மில்லில் நடக்கும் பொழுது காதிற்குப் பாட்டு, கண்ணிற்கு புத்தகம் அல்லது மடிக்கணினி, சாப்பிடும் பொழுது பாட்டும் புத்தகமும் என பல வேலைகளை செய்யாமல் இருக்கவே முடிவதில்லை. சில மீட்டிங்கள் சென்றால் நாம் படும் அவஸ்தை எனக்குத்தான் தெரியும்! :)

ஐந்தாவது கிறுக்குத்தனம்

அஞ்சாவதா என்னத்தை சொல்லறது?
 1. ஒரு புத்தகத்தை எடுத்தா அதை முடிக்கும் வரையில் இரவும் பகலுமாகப் படிப்பதைச் சொல்லவா? (அது எத்தைகைய குப்பையாக இருந்தாலும் சரி!)
 2. மனதில் தோன்றுவதைச் சொல்லியே தீர வேண்டும் என வேண்டாத நேரங்களில் வாயைத் திறந்து விடுவதைச் சொல்லவா? (அதான் இந்த மாசத்திலேயே ரெண்டுவாட்டி மாட்டிக்கிட்டாச்சே!) :)
 3. ஒரு உணவகம் பிடித்திருந்தால் அங்கு அடிக்கடி சென்று மெனு கார்ட்டில் இருக்கும் ஐட்டங்கள் முழுவதையும் ஒவ்வொன்றாக ஒரு கை பார்த்துவிடுவதைச் சொல்வதா? (அதான் உடம்பையும் கொல்ஸ்ட்ரால் லெவலையும் பார்த்தா தெரியுதே - தங்கமணி)
 4. வீட்டில் சமைக்கும் பொழுது எதாவது சமையல் குறிப்பைப் பார்த்து அப்படியே செய்யாமல் அதனை மாற்றி எதையாவது செய்து விட்டு, அதை அடுத்த முறை செய்யும் பொழுது நான் செய்த மாற்றங்கள் என்னவென்று தெரியாமல் முழிப்பதைச் சொல்லவா? (என்ன தப்பு செஞ்சோமுன்னு தெரியாம அதையே திரும்பச் செஞ்சு மாட்டிகிறதுதான் வழக்கம்!)
 5. சொல்ல முடியாது!! ( :)) )
சரி, நாம கிறுக்குத்தான் என நிரூபிச்சாச்சு. இனி துணைக்கு ஆள் சேர்க்க வேண்டுமல்லவா. நம்ம சேக்காளிகள் சிலரைப் பிடிப்போமா? எந்த ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் இல்லாமல் (in no particular order)

கிறுக்கு நம்பர் 1 - பெனாத்தல் சுரேஷ்
கிறுக்கு நம்பர் 2 - ரஷ்ய மருத்துவர் இராமநாதன்
கிறுக்கு நம்பர் 3 - தம்பி தேவ்
கிறுக்கு நம்பர் 4 - நடிப்புப் புயல் டுபுக்கு
கிறுக்கு நம்பர் 5 - நகைச்சுவைப் புயல் அபிஅப்பா

டிஸ்கி (இப்போ எல்லாம் இது போடாம எழுதவே பயமா இருக்கே)

இந்த பாருங்க முன்னாடி நடந்த நாலு விளையாட்டாகட்டும் இல்லை அதுக்குப் பின்னாடி வந்த ஆறு விளையாட்டாகட்டும், நாம கூப்பிட்டவங்கள்ள பாதி பேர் எழுதறதையே கிட்டத்தட்ட நிறுத்திட்டாங்க. அதுக்கும் மேல சொன்ன லிஸ்டுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை!

விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும்!

சமீபத்தில் வித்யா எழுதியிருந்த இந்தப் பதிவைப் படித்ததால் என்னுள் எழுந்த சில கேள்விகள்.

1) இந்தப் பதிவெழுதக் காரணம் ஒரு தொலைக்காட்சித் தொடரில் திருநங்கையாக வரும் ஒருவரை வில்லத்தனம் செய்ததாகக் காண்பித்ததால் வந்த கோபம். என் கேள்வி எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சித் தொடராக இருந்தாலும் சரி, ஆண்கள் வில்லன்களாக வரலாம். பெண்கள் வில்லிகளாக வரலாம். ஆனால் திருநங்கைகளை அப்படிக் காண்பிக்கக் கூடாதா?

(நல்ல ஆண்கள் இருக்கிறார்கள், நல்ல பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் நல்ல திருநங்கைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த திரைப் படங்களில் என திரும்பிக் கேட்பது சரியான வாதமாக எனக்குப் படவில்லை. காண்பித்து இருக்கலாம். ஏன் காண்பிப்பது இல்லை என்பது வேறு விவாதம். ஆனால் இதற்கான பதில் இல்லை என்பது என் கருத்து.)

2) இத்தொடரைத் தயாரிக்கும் ராடான் நிறுவனத்தின் படைப்புக் குழுத் தலைவர் (கெட் என்றால் என்ன என்று புரிவதற்கே சற்று நேரமானது. ஹெட் என எழுதி இருந்தால் கொஞ்சம் எளிதாகப் புரிந்து இருக்கும்.) ராதிகாவைப் பற்றி மிக மோசமாக, அருவருக்கத்தக்க வகையில்தான் எழுதி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் ராதிகா இதைப் படித்தால் இவர் மீது அவதூறு வழக்கு கூட போட முடியும்.

ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை எதிர்க்காமல் அந்த கருத்தைக் கொண்டவர் மீது தனிமனித விமர்சனம் வைக்கும் வழக்கம் நமக்கு வந்ததேன்? இது வித்யா மட்டுமில்லை. நம்மிடையே பலர் செய்து வருவதுதான். ஒருவர் எதிர்கருத்து சொன்னால் நீர் மட்டும் ஒழுக்கமோ என்றுதானே பெரும்பாலும் பதில் வருகிறது. இது வலையுலகில் மட்டும் இல்லை, அரசியலாகட்டும், சாமானியர்கள் சிலரிடையே நடக்கக்கூடிய விவாதங்களில் ஆகட்டும், கருத்தை விடுத்து கருத்து சொல்பவர் மீது தாக்குதல்கள் நடத்துவது எந்த விதத்தில் சரி? எந்த விதத்தில் ஆரோக்கியமானது? நம்மிடையே ஏன் இது இவ்வளவு தூக்கலாக உள்ளது?

3) இன்னும் ஒரு கேள்வி. இந்தத் திருநங்கை வேடம் ஏற்று நடிப்பவர் பிருத்வி என்ற நடிகராம். அவரைப் பார்த்து வித்யா கேட்டிருப்பது -
(எப்பா பிருத்வி எத்தனை முறை உன் குதத்தை காயப்படுத்தி சம்பாதித்திருக்கிறாய்..? அல்லது அத்தகைய அபாக்கியசாலிகளில் எத்தனை பேரை நேரில் கண்டிருக்கிறாய்...?)
பிருத்வி ஒரு நடிகர். அவர் டாக்டர் வேடம் ஏற்று நடிக்க டாக்டருக்குப் படிக்க வேண்டுமா? அல்லது பிரதமராகவோ முதல்வராகவோ நடிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா? ஆனால் திருநங்கையாக நடிக்க வந்தால் மட்டும் ஏன் குதத்தை வாடகைக்கு விட்டு சம்பாதித்து இருக்கிறாய் என்ற கேள்வி? தெரியவில்லை.

டிஸ்கி 1: நான் குறிப்பிட்ட தொடரைப் பார்ப்பது இல்லை. அதனால் அதில் வரும் சம்பவங்கள் எனக்குத் தெரியாது. என் கேள்விகள் வித்யாவின் பதிவைப் படித்ததால் மட்டுமே.

டிஸ்கி 2: இதன் மூலம் திருநங்கைகளைத் தவறாகத்தான் காண்பிக்க வேண்டும் எனச் சொல்ல வரவில்லை. ஊனமுற்றவர்களை, சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களை, சில குறிப்பிட்ட சமுதாயங்களைச் சார்ந்தவர்களை, இவர்கள் போன்றே திருநங்கையர்களையும் தனியாகக் கட்டம் கட்டி கேலி செய்யாதிருத்தல் நலம்.

டிஸ்கி 3: நான் என் கேள்விகளில் தவறாகவோ மனதைப் புண்படுத்துவது போலவோ எதுவும் சொல்லவில்லை என்றே நம்புகிறேன். அப்படியே ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் மாற்றிவிடுகிறேன். அதே சமயம் இங்கு ஆரோக்கியமான விவாதங்களை மட்டுமே அனுமதிக்க இருக்கிறேன். என் அடிவருடித்தனத்தைப் பற்றியோ, என் வந்தேறித்தனத்தைப் பற்றியோ அல்லது என் குதம் விற்பனைக்கோ வாடகைக்கோ கிடைக்குமா என்பது போன்ற பின்னூட்டங்களை அனுமதிப்பதாக இல்லை. (கட்டாயம் இவைகள் வரும். வலையுலகில் நான் இருக்கும் சில காலத்தில் அறிந்து கொண்டது இது. காரணம் கேள்வி நம்பர் 2)

டிஸ்கி 4 : இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம் அப்படின்னு எல்லாம் கேட்கக் கூடாது. அதைப் பார்த்துதானே வந்தீங்க. அதுக்காகத்தான். அர்த்தம் எனக்கும் தெரியாது.

Sunday, March 18, 2007

சடுதியில் சாம்பார் சாதம்!!

இந்த பதிவு நம்ம வெட்டிப் பயலுக்கு சமர்ப்பணம்! நம்ம முந்தைய சமையல் குறிப்பைப் பாராட்டினது மட்டும் இல்லாமல் அடிக்கடி பண்ணி சாப்பிடறோம் அப்படின்னு வேற சொல்லி நம்ம மனசைத் தொட்டுட்டாரு. அதனால நம்மளோட இந்த சமையல் குறிப்பு அவருக்காகவே!

அதாவது ரொம்ப வேலை இல்லாம சாம்பார் சாதம் செஞ்சு சாப்பிடுவது எப்படின்னு பார்க்கலாம். சாம்பார் பொடி எல்லாம் இல்லாம, சீக்கிரமா ஆனா சுவையா சாம்பார் சாதம் செய்ய ஒரு குறிப்பு இது. முதலில் என்னென்ன சாமான் வேணும் அப்படின்னு பார்க்கலாமா?

குக்கரில் வைக்க
அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் பொடி
பெருங்காயம்

பொடி செய்து கொள்ள
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பழம் - 4
மிளகு - 10
கசகசா - 1 தேக்கரண்டி

காய்கறிகள்
வெங்காயம் - பெரிதாக 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
கத்திரிக்காய் - சிறிதாக 2
காரட் - பெரிதாக 1
உருளைக்கிழங்கு - பெரிதாக 2

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை
கொத்து மல்லி

தாளிக்க
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணை - தேவையான அளவு
நெய் - சிறிதளவு (வேண்டுமானால்)

எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கிட்டீங்களா? இப்போ என்ன செய்யணும் அப்படின்னு பார்க்கலாம். ரொம்ப மெனக்கட வேண்டாம். ஒரு பத்து, பனிரெண்டு ஸ்டெப்களில் சுவையான சாம்பார் சாதம் தயார் செய்யலாம் வாங்க.

 1. முதலில் அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் எல்லாத்தையும் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்துவிடுங்க. சாதாரணமாக சாதத்திற்கு வைப்பதை விட ஒன்று அல்லது இரண்டு விசில்கள் அதிகம் வரலாம்.
 2. பொடி செய்வதற்கு அப்படின்னு சொல்லி இருக்கிற சாமான்கள் அனைத்தையும் ஒரு வாணலியில் அப்படியே எண்ணை விடாமல் வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொள்ளவும்.
 3. காய்கறிகள் அனைத்தையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
 4. புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிழிந்து சாறெடுத்துக் கொள்ளவும்.
 5. குழம்பு செய்வதற்கான வாணலியை எடுத்துக் கொண்டு சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.
 6. அதில் முதலில் வெங்காயத்தையும் மிளகாயையும் போட்டு வதக்கவும்
 7. வெங்காயம் நன்றாக வதங்கிய பின் மீதமுள்ள காய்களைப் போட்டு வதக்கவும்.
 8. காய்கறிகள் வதங்கிய பின் அதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரை விட்டு , தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
 9. பச்சை வாசனை போன பின்னாடி, நாம் பொடி செய்து வைத்துள்ள பொடியைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 10. சிறிது கொதித்த பின் குக்கரில் இருக்கும் சாதம் பருப்பை எடுத்து இதில் சேர்த்து நன்றாகக் கிளரவும்.
 11. நன்றாகச் சேர்ந்தவுடன் அதன் மேல் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் போட்டு கிளறிவிடவும்.
 12. சாப்பிடும் முன் சிறிது நெய்யை விட்டு கிளறினால் வாசனையாக இருக்கும்.
இதில் காய்கறிகள் தேவையான அளவு கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பூண்டு, பீன்ஸ், பட்டாணி, கவிப்பூ (காலி பிளவர்) என பிடித்த காய்கறி எல்லாம் போடலாம். பொடி செய்து கொள்ளும் பொழுது அதிலும் சிறிது பெருங்காயம் போடலாம். புளித் தண்ணீருடம் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போடலாம்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் செய்து சாப்பிட்டு விட்டு, அதற்குப் பின் டீவி, தமிழ்மணம் என அலையாமல் ஒரு தூக்கம் போட்டால் சுகானுபவம்தான். செஞ்சு பார்த்திட்டுச் சொல்லுங்களேன். நீங்க எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா இதையும் பரோட்டா பதிவை விக்கியில் போட்டா மாதிரி இதையும் போட்டுடலாம்.

Thursday, March 08, 2007

துளசி டீச்சரும் உஷாக்கா பதிவும்!

நம்ம வெண்பா பதிவையும் சேர்த்து ஒரு 50 பதிவாவது வந்திருக்கும் நம்ம மகளிரை வாழ்த்தி. ஆனாலும் மகளிர் தினமானதுனால அவங்களுக்கு வாழ்த்துச் சொல்லி ஆரம்பிக்கறதுதானே மரியாதை.

வாழ்த்துக்கள் உலகப் பெண்ணினமே!

இப்போ நம்ம சொல்ல வந்த ஸ்பெஷல் மேட்டர். தமிழ் வலையுலகின் மூத்த பதிவாளர்களில் ஒருவரும், எங்கள் கிளாஸ் டீச்சரும், பின்னூட்ட நாயகியும், நம்ம விக்கி பசங்களில் ஒருவருமான துளசி டீச்சர் அவர்கள் இன்னைக்கு அவங்களோட 500ஆவது பதிவு போட்டு இருக்காங்க! ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் இல்லைங்க. உண்மையிலேயே 500ஆவது பதிவு! அது மட்டுமில்லை இதுல அவங்க வலைப்பூவான துளசிதளம் இல்லாமல், விக்கியில் எழுதிய பிரியாணிப் பதிவு உட்பட மற்ற இடங்களில் எழுதிய பதிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.

இன்னைக்கு 50க்கு 100க்கும் விழா எடுக்கிற இந்த நேரத்தில் இந்த மாபெரும் சாதனையை அவங்க பதிவின் கடைசியில் ஒரே ஒரு வரியா போட்டு இருக்கும் தன்னடக்கத்தை என்னவென்று சொல்வது. ஒரு லெவலுக்கு மேல Numbers do not matter என்பது சரிதான் போல இருக்கிறது. வரலாறு, சமையற் குறிப்பு, கதைகள், மொக்கைப் பதிவு என எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து, எந்த விதமான சண்டை சச்சரவிலும் பங்கு கொள்ளாமல் அனைவரும் தன் மீது பெரு மரியாதை கொள்ளுமாறு இருக்கும் துளசி டீச்சரை மனதார வாழ்த்துவோம். இதே போல் தொடர்ந்து எழுதி விரைவில் ஆயிரம் பதிவு தந்த அபூர்வ துளசி என்ற பட்டம் பெற எங்கள் வாழ்த்துக்கள் டீச்சர். படிக்கும் நீங்களும் பின்னூட்டத்தில் உங்க மரியாதையை செலுத்திடுங்க!

அடுத்தது நம்ம உஷாக்கா போட்ட பெண் பதிவர்கள் டாப் என்ற பதிவு! பெண் வலைப்பதிவர்கள் பத்தி உஷாக்கா எழுதின இந்த பதிவில் கொஞ்சம் ஓவராகவே அவங்க நல்லவங்க அப்படின்னு எழுதி இருந்தாங்க. அதிலிருந்து

கும்மி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை.
அதை நம்ம பாணியில் நான் கொஞ்சம் கலாய்க்கப் போயி அந்த சமயத்தில் நம்ம இட்லிவடையார் போட்டு இருக்கும் எந்த பெண் பதிவர் டாப் என்ற பதிவையும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் பத்தி இப்படிப் பேசப் போக

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உஷாக்கா, நீங்க இந்த ஒற்றுமை பத்தி எல்லாம் எழுதினதுனால உங்க கிட்ட கேட்கறேன். நம்ம இட்லி வடை இந்த பதிவு ஒண்ணு போட்டு இருக்காரு. அதுல பாருங்க வந்து இருக்கற எதிர்ப்பில் பெண்கள் எதிர்ப்புதான் அதிகம் இருக்கு. நமக்கு பிடிச்ச 5 பேரை சொல்லச் சொன்னா எதுக்குங்க இவ்வளவு எதிர்ப்பு? கொஞ்சம் விளக்குங்களேன்.
நம்ம பிரேமலதாக்கா கன்னாப்பின்னான்னு டென்ஷனாகிட்டாங்க. அவங்க நம்ம கருத்துக்களை ஆணாத்திக்க கருத்துகள் என்ற ரீதியில் சொல்லப் போக, நானும் பதிலுக்கு வாயாட, கூட நம்ம தம்பி நாகை சிவா வந்து அவர் பங்குக்கு பிட்டைப் போட விவாதம் நல்லா களை கட்டுற நேரத்தில் உஷாக்கா தூங்கப் போயிட்டாங்க. போட்ட பின்னூட்டம் எல்லாம் தேங்கிப் போச்சு! அந்த பதிவில் 40 பின்னூட்டங்களுக்கு மேல போனதுனால இது ஒரு ஸ்பெஷல் விளம்பரம். எல்லாரும் இந்த ஆரோக்கியமான விவாதத்தில் பங்கெடுத்துக்கிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க மக்கள்ஸ்.

பரபரப்பான அந்த விவாதத்தில் இருந்து சில பகுதிகள்

இப்படி கோபம் உண்டுபண்ணிவிட்டுட்டுப் போற ஆணின் "ஸ்பெஷல்", மற்றும் "புத்திசாலித்தனமான" ஸ்பெஷல் குணங்களைக் கொண்ட இலவசம் மற்றும் சாத்தான்(குளத்தான்) இன்னும் வரபோகும் மற்றும்பல "the great"களும் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்.
எல்லா சராசரி மனிதர்கள் கிட்ட இருக்கற குணங்கள் எதுவுமே பெண் பதிவர்கள் இடையே இல்லை அப்படின்னு உஷாக்கா சொன்னாங்க பாருங்க. அதுதான் கொஞ்சம் இடிச்சுது.

அதாவது போட்டி மனப்பான்மை ஆண்களுக்கே உரியதுன்னு சொல்ல வறீங்களா பிரேமலதாக்கா? நீங்களே இதை திரும்பி படிக்கும் போது உங்களுக்கு சிரிப்பு வரல?

இலவசம்,சாத்தான்(குளத்தான்), நீங்க ரெண்டுபேரும் MCP கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, சிலசமயம் "நல்லா இருங்க"ன்னு மட்டும் வாழ்த்திட்டுப் போற psychology தெரிஞ்சிருக்கணும்.
நார்மலா இருக்குறவங்க எல்லாரும், ஆம்பிள்ளையானாலும் சரி, பெண்பிள்ளையானாலும் சரி, சில நேரங்களில் சில இடங்களில், கும்மி, பாலிடிக்ஸ், வம்பு தும்பு எல்லாம் செய்யத்தான் செய்வாங்க. அதெல்லாம் இல்லை. அது ஆண்கள் மட்டுமே செய்வாங்க. பெண்கள் செய்ய மாட்டாங்கன்னு உஷாக்கா சொன்னதும், இப்போ நீங்க அதையே உங்க கன்க்ளூஷனா சொல்வதும்தான், முரணா இருக்கு. அதைச் சொல்ல வந்த எனக்கு நீங்க குடுத்த புத்திசாலி பட்டம் நல்லாவே இருக்கு.

Sunday, March 04, 2007

இளம் சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு

இன்றைக்கு வீட்டில் சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதுடன் அதைப் பற்றி உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம் என நினைத்தே இந்த இடுகை.

என் நண்பன் அவர் குடும்பத்துடன் இந்த வாரயிறுதியை எங்களுடன் கழிக்க வந்திருந்தார். அவரது பையனுக்கு மூன்றரை வயதாகிறது. என் பையனுக்கு ஐந்தரை வயது. இருவரும் நல்ல நண்பர்கள். வாய் ஓயாமல் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். இவர்களை வேடிக்கை பார்ப்பதே எங்களுக்கு ஒரு பொழுது போக்கு.

இன்று காலை இவர்களுள் ஒரு பலத்த வாக்குவாதம் நடந்தது போல் தோன்றியது. என்னவென்று சென்று பார்த்தால் இருவரும் அவரவர் தந்தையின் பெருமைகளைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். என் தந்தைதான் பலம் மிக்கவர், என் தந்தை செய்யும் வேலைதான் பெருசு என்றெல்லாம் பேசிக் கொண்டு இருந்தார்கள். இருவரும் தத்தம் தந்தைகளை ஒரு ஹீரோ அளவுக்கு உயர்த்திப் பேசியதும், தாங்கள் வளர்ந்த பின் தத்தம் தந்தைகளைப் போல் இருப்போம் எனச் சொன்னதும் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ வொர்ஷிப் அளவிற்கு இருந்தது.

இது எங்களிடையே ஒரு சுவாரசியமான பேச்சு ஒன்றைத் தொடங்கி வைத்தது. அதில் எழுந்த சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

 • அது எப்படி இவர்களுக்குத் தம் தந்தைதான் உயர்வானவர் என்ற எண்ணம் வருகிறது? தம் தந்தையரை விட்டுக் கொடுக்காமல் பேச வேண்டும் எனத் தோன்றுகிறது?
 • இவர்கள் இருவரும் ஆண் பிள்ளைகளாக இருந்ததினால்தான் தந்தையரைப் பற்றிப் பேசினார்களா? இதுவே பெண் குழந்தைகளாக இருந்தால் தாய்மார்களைப் பற்றிப் பேசி இருப்பார்களா?
 • முதலில் பெற்றோர், பின் பள்ளி ஆசிரியர், பின் திரைப்பட நாயகர்கள் என்று எப்பொழுதும் நமக்கு ஏன் இப்படி வழிபாட்டிற்கு யாரேனும் தேவைப் படுகிறது?
 • இப்படி ஹீரோவாக இருப்பவர் சிறிய காலத்திற்குப் பின் மாறிக்கொண்டே இருப்பது ஏன்?

கேள்விகளை கேட்டாச்சு. 40க்கு எல்லாம் பயப்படாமா வந்து கருத்துக்களைச் சொல்லுங்கப்பா. இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு, உங்க இளமைக்கால ஹீரோக்கள் பத்தியும் சொல்லுங்க. தனிப் பதிவா போட்டா மறக்காம லிங்க் குடுங்க! :-D