Wednesday, January 30, 2008

பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு!! (பாகம் 2)

எல்லாரும் பிறந்த நாள் கொண்டாடினா அடுத்தவங்கதான் பரிசு குடுப்பாங்க. ஆனா நம்ம நண்பர் ஒருத்தருக்கு இன்னிக்கு பிறந்தநாள். ஆனா அவரு என்ன தெரியுமா செஞ்சு இருக்காரு. நமக்கு ஒரு பரிசு குடுத்து இருக்காரு. அதுதான் இந்தப் பதிவு. நான் கேட்டுக்கிட்டதுக்கு இணங்க நம்மளை ஆப்புரேசல் பண்ணி இருக்காரு பாலராஜன் கீதா. Happy Birthday Bala!!

இனி பாலா.

உங்களின் 2007 வருட இடுகைகளின் ஆப்புரேசலை எழுத என்னையும் அழைத்ததற்கு நன்றி.


டிஸ்கி:
இதற்கே இன்னும் எல்லா பின்னூட்டங்களையும் படிக்க நேரமில்லை. படித்திருந்தால் வாசகர்களின் பின்னூட்டம் குறித்தும் ஏதேனும் எழுதியிருக்கலாம். ஆகவே இந்த ஆப்புரேசல் உங்கள் இடுகைகளைக் குறித்து மட்டுமே என்று டிஸ்கிக்கிறேன்.


ஆனாலும் கொத்ஸின் ஆப்புரேசலில் பின்னூட்டம் பற்றி பேசாமல் எப்படி என அது பற்றி ஒரு சிறு குறிப்பு. இன்று வரை வந்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5503. ஆக சராசரியாக ஒரு இடுகைக்கு 85 பின்னூட்டங்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஆனால் புதிர்களின் இடுகைகளில் வந்துள்ள பின்னூட்டங்கள் 481, 393, 396, 230, 121 ; ஜிராவின் ஆப்புரேசலுக்கு வந்த பின்னூட்டங்கள் 382. இவற்றை நீக்கிவிட்டுக் கணக்கிட்டால் சராசரியாக 59 பின்னூட்டங்கள் என்று வைத்துக்கொள்ளலாம். எனவே கண்னை மூடிக்கொண்டு உங்களுக்குப் பின்னூட்ட நாயகன் என்ற பட்டத்தை அளித்துவிடலாம்
.

அடுத்தது சென்ற வருட இடுகைகளில் எனக்குப் பிடித்தது எனச் சொல்ல வேண்டுமானால் தமிழ், ஆங்கிலம், கணக்கு, வரலாறு, அறிவியல், புவியியல், வணிகம், கணினியியல், விளையாட்டு என்ற தலைப்புகளில் வந்த புதிர்களும் பிறகு நன்றிக்கு உரியவர்களையும் புதிர்களாக கேட்டிருந்த இடுகைகள். சில கேள்விகள் பலரையும் முதலில் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடும். அந்த வாரத்தில் பல வாசகர்களை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்திருந்தீர்கள் என்றுதான் கூறவேண்டும். கூகிளாண்டவரும் நன்றாக உதவினார். என்னால் முழு மதிப்பெண்கள் பெறமுடியவில்லையே என்று சற்றே வருத்தம் இருந்தது.

அடுத்ததாகப் பிடித்தது கைப்புள்ளயின் கோச்சிங் செண்டர் நோட்டீஸ். இந்த இடுகையைப் படிக்கும்போது நடிகர்கள் வடிவேலுவும் பார்த்திபனும் அப்படியே நடிப்பது போல நினைவிற்கு வரும். இந்த பிட் ஏன் இன்னும் ஏதேனும் திரைப்படத்தில் வரவில்லை என்று சந்தேகமாகவே உள்ளது.

எல்லா இடுகைகளையும் படித்துவிட்டேன் என நிரூபணம் செய்யும் வகையில் சென்ற வருடம் வந்த எல்லாப் பதிவுகள் பற்றியும் ஒரு சிறு குறிப்பு!
ரெண்டு பேர் ஆப்புரேசியாச்சே, இதோட முடிஞ்சுதான்னு பெருமூச்சு விடற ஜனங்களே, நல்லாப் படிச்சுப் பாருங்க. நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லை!!

Tuesday, January 22, 2008

பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு!! (பாகம் 1)

2008ஆம் ஆண்டு என அழைப்பதை விட தொடர் விளையாட்டு ஆண்டு அப்படின்னே சொல்லிடலாம் போல இருக்கு. அம்புட்டு விளையாட்டு விளையாட வைக்கிறாங்க. புடிச்ச படம் என்ன, போடற மொக்கை என்ன அப்படின்னு எல்லா விளையாட்டும் விளையாடியாச்சு. அடுத்து வரிசையில் நிற்பது பிடிச்ச பதிவாம். போன வருஷம் போட்ட பதிவிலேயே பிடிச்ச பதிவு எதுன்னு சுட்டி குடுக்கணுமாம். சர்வேசன் ஆரம்பிச்சு வெச்ச இந்த விளையாட்டுக்கு நம்மளைக் கூப்பிட்டது ஒருத்தர் இல்லை, மூணு பேரு. அவங்க நம்ம நாச்சியார் வல்லிம்மா, வெட்டி பாலாஜி, வாத்தியார் இளவஞ்சி.

இந்த விளையாட்டை சுயதம்பட்டம் அப்படின்னு சிலர் சொல்லிக்கிறாங்க, எந்தக் கண்ணு நல்ல கண்ணு அப்படின்னு கேட்கறாங்க இன்னும் சிலர். இதையெல்லாம் பார்த்தா எழுதணுமா வேண்டாமான்னு ஒரே ரென்சனா இருக்கு. அப்புறம்தான் போன வருசம் போட்ட ஆப்புரேசல் ஞாபகத்துக்கு வந்தது. (அது ஞாபகத்துக்கு வந்தது அது வாங்கின 382 பின்னூட்டங்களுக்காக அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.) போன தடவை மாட்டுனது ஜிரா. இந்த முறை மாட்டப் போவது வேற ரெண்டு பேரு. ரெண்டு பேருமே பதிவெல்லாம் எழுதாத நல்லவங்க. ஆனா நிறையாப் படிக்கிறவங்க. அவங்களையே போன வருஷம் எழுதின பதிவுகளில் எது நல்லா இருக்குன்னு சொல்லிட்டு அப்படியே ஒரு ஆப்புரேசலும் பண்ணச் சொல்லிடலாமுன்னு ஐடியா.

இந்த நினைப்பு வந்ததும் முதலில் மாட்டினவர் நம்ம ஸ்ரீதர் வெங்கட் அவர்கள்தான். இவரோட பின்னூட்டங்களின் மூலமாவே அனேகமா எல்லாருக்கும் இவரைத் தெரிஞ்சு இருக்கும். தவறாம நம்ம பதிவுக்கு வந்து உள்ளேன் ஐயா (அதுக்கு மேலேயும்) சொல்லும் இவரைத்தான் முதலில் ஆப்புரேசலுக்கு அழைக்கிறேன். இனி ஸ்ரீதர்.

2007-ல் எழுதப்பட்ட பதிவுகளில் பிடித்தது எது என்று சொல்ல சொன்னால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. பல சமயம் பதிவுகளில் செலவழித்த நேரத்தை விட பின்னூட்ட விளையாட்டில்தானே அதிக நேரம் செலவிட்டிருப்போம். இதற்காக உக்காந்து (இனிமேதான் :-)) படிக்கணுமான்னு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் சுவாரசியமான வேலைதான் :-)

2007 புத்தாண்டு தினத்தன்று ஒரு புதிய செய்தியோடு வந்து நம்மை (மருதக்காரய்ங்களை) 'காலர தூக்கி விட்டுக்குங்க' என்று மகிழ்வித்ததினாலோ என்னவோ, தமிழ்மண நட்சத்திரமாகவும் ஜொலித்தார். அந்த பதிவிற்கும் பின்னர் வேறோரு சமயத்தில் எழுதப்பட்ட இந்த பதிவுக்கும் எதுவும் தொடர்பிருக்கா என்பதை உங்கள் புரிதலுக்கே விட்டுவிடுகின்றேன்.

இவருடைய எல்லா பதிவுகளிலும் அநேகமாக ஒரு பின்னூட்டமாவது போட்டிருப்பேன் ஒரே ஒரு பதிவை தவிர. இதைப் போல இன்னொரு இ.கொ. பதிவிருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

சரி நம்மை கவர்ந்த பதிவுகள் சில -

லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவிற்கான எதிரிவினை. பலதரப்பட்ட கருத்துகளுடன் நடத்தப்பட்ட விவாதம். இந்த பதிவில் பேசப்பட்ட அந்த தொலைக்காட்சி தொடரில் பிறகு சில வரவேற்கத்தக்க மாறுதல்களும் நடந்தேறின. "lets agree to disagree" என்ற முறையில் விவாதம் முடிந்து போனது.

முரண்பட்ட செய்திகளை சேர்த்து எழுதிய விலங்குகள் உரிமை ஒரு 'கண் திறப்பான்' (eye opener) என்று சொல்லலாம். ஒரே நோக்கதிற்கு வெவ்வேறு செயல்வடிவங்கள் காணக் கிடைக்கின்றன.

நான் எப்பேர்ப்பட்ட கிறுக்கு அப்படின்னு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் (அ) சுயதம்பட்டம். இதில் நானும் ஒரு துணை வாக்குமூலம் கொடுத்திருந்தேன்.

இந்த பதிவை படித்தவுடன் நான் சொன்னது - "Beauty is in the Beholder's eyes அப்படின்னு சொல்லுவாங்க. உங்க பார்வையும் அழகாவே இருக்கு."

ஜொள்ளுபாண்டியோட நோட்டீஸ் வச்சு ஒரு கைப்பு கலக்கல். அருமையான அங்கதம். வடிவேல் ஏதாவது படத்தில் காமெடி டிராக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல் சர்வைவல் ஆப் பிட்நெஸ் பதிவும். உடல் இளைக்க இந்த பதிவை சில முறை படிக்கலாம். விழுந்து விழுந்து சிரித்தால் கொஞ்சம் கொழுப்பு குறையலாம்.

நட்சத்திர வாரத்தில் குயி.. குயி.. குயிஜு என்று கூவிக்கொண்டு 9 தலைப்புகளில் நடத்திய போட்டி நிறைய பேரை கவர்ந்தது. பங்கேற்பாளர்கள் எல்லோருடைய விடையையும் தொகுத்து அதற்கு பதிலளித்து, மேலும் சில க்ளூக்கள் தந்து என்று நிறைய நேரத்தையும், தேடலையும் கொண்ட முயற்சி. மிகப் பெரும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். நிறைய பதிவர்கள் கலந்து கொண்டார்கள்.

சக பதிவர்களை கொண்டு புதுமையான பட்டிமன்றம் நடத்தியது மிகவும் அருமையாக இருந்தது. தலைப்பும், தீர்ப்பும் பட்டிமன்றத்து இலக்கணப்படி இருந்தாலும், விவாதங்களும் பின்னூட்டங்களும் நகைச்சுவைக்கு கியாரண்டி.

இதைத் தவிர அவருடைய வெண்பா பதிவுகள், வ.வா.சங்க ஆப்புரேசல் போன்ற பல பதிவுகளும் பெருவாரியான வாசகர்களை கவர்ந்தவையே.சமையல் குறிப்பு, பயண்க் கட்டுரை, செய்தித் தொகுப்புகள், தமிழ்மணத்திற்கு ஆலோசனை(?!), எடிஸனில் வரலாறு காணாத வலைப்பதிவர் மாநாடு, 'நச்'னு ஒரு கதை என்று இன்னும் பல பதிவுகள் மிகவும் பாப்புலர்தான்.

எல்லாவற்றையும் விட பெரிதும் கவர்ந்தது அவருடைய ரீபஸ் புதிர் போட்டிதான். பலரையும் கிறுக்கு பிடிக்க வைத்த போட்டி. கிட்டதட்ட 250 விதவிதமான பதில்களை தொகுத்து பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தி ப்ரபொஷனலாக நடத்தப் பட்ட போட்டி. அந்த போட்டியில் சில புதிர்கள் யாராலுமே பதிலளிக்க முடியாமல் போனது, (பாலராஜன் கீதாவை தவிர).

ஆக மொத்தம் போன வருடப் பதிவுகளிலேயே எனக்கு பிடித்தது - விடுகதையா இந்த வாழ்க்கை என்ற பதிவுதான்!

இப்போ இ.கொ.விற்கு சில கேள்விகள் -
  1. அப்புறம் கே.ஆர்.எஸ் உங்களை பலூனில கூட்டிகிட்டு போனாரா?
  2. அவுஸ்திரேலியா போறதுக்கு டீச்சர்கிட்ட டிக்கட் எடுத்திட்டாங்களா?
  3. ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஜொள்ளு மட்டும்தான் விட்டுட்டிருந்தீங்களா?
  4. அடுத்த புதிர் போட்டி எப்போ?
  5. புதிர்கள் போடுவதற்காக தனி வலைப்பக்கம் தொடங்கலாமே? வேணும்னா சொல்லுங்க ஒரு prototype பண்ணிடுவோம்.
  6. போட்டோ போட்டாச்சு, கதை எழுதியாச்சு. அடுத்து கவிதைதானே?
  7. டிஸ்கி போடாம உங்களால பதிவு எழுத முடியுமா?

என்னங்க, படிச்சீங்களா? ஒரு அப்ரேய்சல் செய்யச் சொன்னா எம்புட்டு கேள்வி கேட்கறாரு பாருங்க. இவர் இப்படின்னா அடுத்து நான் கேட்டவரு இன்னும் சுவாரசியம். அவர் யாரு, அவர் என்ன சொன்னாருன்னு அடுத்த பதிவில் பார்ப்போமா? (சும்மாவா பாகம் 1 அப்படின்னு தலைப்பு வெச்சிருக்கு. இனிமே யாரும் தொடர் விளையாட்டுக்குக் கூப்பிடக்கூடாதுன்னு செஞ்சிட மாட்டோம்!)

Sunday, January 20, 2008

வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும்!

அவுஸ்திரேலியாவில் இந்த டெஸ்ட் போட்டித் தொடர் முடிந்த உடன் நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியினரின் இடாப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் சில பெருந்தலைகளுக்கு இடமில்லை. அதனால நம்ம ஆட்கள் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்து அடுத்தவனை முட்டாள் மூடன் என்றெல்லாம் திட்டி பதிவுகள் போடத் தொடங்கியாயிற்று. நம்ம பாலா போட்டு இருக்கும் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. ஆனா இந்த உணர்ச்சிகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை என்ன ஏதென்று பார்க்கலாமா?

கங்குலி, திராவிட், லக்ஷ்மண் அணியில் இல்லை. இதுதானே இவ்வளவு கொந்தளிப்புக்குக் காரணம்? நம் வழக்கமான முறைப்படி அதெப்படி இவர்கள் எல்லாம் இல்லாமல் ஒரு அணி, அதுவும் அவுஸ்திரேலியாவிற்கு எதிராகவா என்றெல்லாம் சொல்லி தேர்வாளர்களுக்கு எளிதாக முட்டாள் பட்டம் கட்டி விடலாம். ஆம், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த அணியின் மட்டையாளர்களுக்கு அவ்வளவு அனுபவம் இல்லைதான். சேவாக்கும் டெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய பின் வருபவர்கள் அனைவருமே இளைஞர்கள். நடுவே யுவராஜ், தோணி என கொஞ்சம் அனுபவம் இருக்கத்தான் இருக்கிறது என்றாலும் மற்றவர்களின் அனுபவம் பெரும்பாலும் 20-20 ஆட்டங்களில்தான். ஆனால் கம்பீர், கார்த்திக், உத்தப்பா, ரெய்னா என நல்ல தகுதியுடையவர்கள்தானே அணியில் இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பொழுதெல்லாம், 20-20 உலகக்கோப்பை உட்பட, சாதித்துக் காட்டியவர்கள்தானே இவர்கள்.

இவர்களை மெதுவாக ஒவ்வொருவராக அணிக்குள் கொண்டு வரலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட போட்டியில் மொத்தமாக களமிறக்கி அவர்களை பழக்கப்படுத்தலாம். நம் தேர்வாளர்கள் இரண்டாம் முடிவினைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டிக்கு இருப்பது போலில்லாமல் ஒரு நாள் ஆட்டத்திற்கு பீல்டிங் செய்வது மிகத் தேவையான ஒன்று. அதற்கான இளமைத் துடிப்பு இந்த அணியினரிடையே இருக்கிறது. அதே போல் ரன்கள் ஓடுவதிலும் கூட. திராவிட்டும் லக்ஷ்மணும் டெஸ்ட் போட்டிகளில் எத்தனை முறை மூன்று ஓட்டங்கள் எடுக்க இடங்களில் இரு ஓட்டங்களும், இரு ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு ஓட்டத்துடனும் நின்றிருக்கிறார்கள்? இது மட்டுமே ஒரு 30 - 40 ஓட்டங்களாக மாறினால் அது வெற்றியை நிர்ணயிக்கும் அல்லவா?

அதே சமயம் நமது அடுத்த முக்கியமான இலக்கு 2011 உலகக் கோப்பை. அதற்கான அணியினை தயார் செய்வதில் நாம் முனைப்பாக இருக்க வேண்டும். இந்த இளைஞர்கள்தான் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கப் போகிறவர்கள். அவர்களுக்கு அந்த போட்டிக்கு முன் எவ்வளவு அனுபவம் கிடைக்கிறதோ அவ்வளவு நல்லது. முதலில் அனுபவமின்மையால் தோற்றுத்தான் போவார்கள். ஆனால் அதனை சகித்துக் கொண்டு அவர்களைக் கொண்டே தொடர்ந்து விளையாடினால் நல்ல அனுபவம் பெற்று உலகக் கோப்பையைத் தட்டிவரத் தயாராவார்கள் என்பது நிச்சயம். இந்த அணியினருக்கு அணித்தலைவர் தோணியின் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரால் நமக்கு உலகக்கோப்பை வர வேண்டுமானால் அவருக்கு உகந்த அணியினைத் தர வேண்டியது அவசியம். அதைத்தான் இந்த தேர்வாளர்கள் செய்திருக்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் இது போன்று ஒரே நேரத்தில் பெரும் மாற்றங்கள் கொண்டு வருவது அவ்வளவு சரி இல்லை. ஆனால் ஒரு நாள் அணியில் செய்வது தவறில்லை என்றே நினைக்கிறேன்.

சேவாக்கும் பார்மில் இல்லாமல் இருந்து இப்பொழுதுதான் மீண்டும் சரியாக விளையாடத் தொடங்கி இருக்கிறார், யுவராஜோ சொதப்பிக் கொண்டு இருக்கிறார். இந்நிலமையில் நன்றாக ஆடி வரும் இம்மூவரையும் ஒரேடியாக தூக்கி இருக்காமல் திராவிட் அல்லது கங்குலி இவர்கள் இருவரில் ஒருவர் அணியில் இருந்திருக்கலாம். ஆனால் இதுதான் நாம் செல்ல வேண்டிய பாதை என முடிவு செய்த பின் அதன் வழியே செல்வது அவசியம். முதலில் சில தோல்விகள் வந்தாலும் இந்த அணியில் பெரும் மாற்றங்கள் இல்லாமல் ஆதரித்து இவர்களை உலகக்கோப்பையினை வெல்லும் அணியாக மாற்ற வேண்டியதுதான் சரி.

இந்த அணியினரே நன்றாக விளையாடினால் அப்பொழுது யார் யாரை முட்டாள் எனச் சொல்வது. அடுத்தவரை முட்டாள்கள் எனச் சொல்வது ரொம்ப சுலபம். ஆனால் அதுவே நம்மை நோக்கி வர அதிக நேரமாகாது. சில மாதங்கள் முன்பு நம் நண்பர்களால் கிழவர்கள் என வர்ணிக்கப்பட்ட வீரர்கள்தான் பாகிஸ்தானோடும் சரி அவுஸ்திரேலியாவுடனும் சரி பட்டையைக் கிளப்பினார்கள். அது பற்றிய சத்தத்தையே காணும். அதுபோல் இந்த அணியினரும் நன்றாக விளையாடி நம் எதிர்ப்பார்ப்பை விட அதிகமாக செய்து காட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Let us not look for instant gratification. Let us give this team some time and groom them. They are going to be the back bone of our 2011 World Cup Team. They need our support and belief.

Go India Go! Go with an eye on 2011 World Cup!!

Sunday, January 13, 2008

படப் பெட்டியில் பல சரக்கு

மாசம் ஒரு முறை பதிவு போட நல்ல வாய்ப்பு தராங்க நம்ம PIT வலைக்குழுவினர். என்னமோ ரெண்டு படம் எடுத்தோமா பதிவைப் போட்டோமான்னு அப்படின்னு ஒரே ஜாலியா இருக்குங்க. ஆனாப் பாருங்க, இந்த முறை அவங்க குடுத்து இருக்கும் தலைப்பு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாம். எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு ஒரே குழப்பம்தான். எடுத்ததில் தேறிய இந்த ஐந்து படங்களைப் போட்டு இருக்கிறேன். முதலிரண்டு படங்களை போட்டிக்கு அனுப்ப உத்தேசம். (பிற்சேர்க்கை : முதல் படம் தலைப்பிற்கேற்றதா என்ற குழப்பம் இருப்பதால் இரண்டாவது மற்றும் நான்காவது படங்களைப் போட்டிக்கு அனுப்புகிறேன்.)

இது வந்து அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் சேர்த்தியான்னு தெரியலை. ஆனா அன்றாடம் பயன் படுத்தும் இடங்களில் ஒன்று. வாயில் கதவைத் திறந்து வீட்டினுள் வரும் வழி. இதைப் பயன்படுத்தாம இருக்க முடியுமா? இதை சேர்த்துக்கலாமுன்னா இதுதாங்க நம்ம சாய்ஸ்!இப்பருவத்தில் பொதுவாக அரிதான சூரிய வெளிச்சம் இந்த முறை சக்கை போடு போடுகிறது. அது ஜன்னல் வழியே வரும் காட்சியை படம் பிடிச்சது. கொஞ்சம் வடக்கே போனாக்கூட பனி கொட்டுது. ஆனா எங்களுக்குத்தான் ஒண்ணுமே இல்லை! :-(என்னங்க தொழில் அப்படின்னு கேட்டா விற்பனை துறை அப்படின்னு சொல்லாம கையில் பை, கழுத்தில் டை, வாயில் பொய் அப்படின்னு சொல்லுவாங்க. இங்க நம்ம டை கழுத்தில் இல்லாம கீழ கிடக்கு. இந்த டைகள் எல்லாம் இப்படி சுத்தி வெச்சது நம்ம ஜூனியர்.உலகத்தில் எல்லா அசைவிலும் இசை இருக்குன்னு சொல்லுவாங்க. இந்த சிடி அசைந்தால் இசை வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கு? நான் அசைந்தால் இசையும் அகிலமெல்லாமே!போன் கண்டார் போனே கண்டார்...அடுத்த மாசமாவது இம்புட்டு யோசிக்காம படம் எடுக்கற மாதிரி தலைப்பு குடுங்கப்பா. அப்புறம் எல்லாருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துகள்! உலகில் இன்று முக்கியமான தேவை அமைதிதான். அதனால இந்த அமைதி நாயகன் படத்தையும் போடறேன். நீங்களும் வேண்டிக்குங்க.பி.கு. - இது போன வருடம் பொங்கலுக்குப் போட்ட பதிவு!

Thursday, January 10, 2008

இசலிகளின் இடாப்பும் இன்ன பிற டிஸ்கிகளும்!!

Everybody! Wish you all a happy new year!!என்னடா இவன் புது வருஷம் பொறந்து இம்புட்டு நாளாச்சு, இப்ப போயி வாழ்த்து சொல்லறானே, அதுவும் 1982ஆம் வருஷ பாட்டு வேற போடறானேன்னு பார்க்கறீங்களா? சும்மா தேமேன்னு இருந்த என்னை இந்த மாதிரி புத்தாண்டு பதிவு போட வெச்சது நம்ம கீதாம்மாதான். அதனால குடுக்க வேண்டிய தண்டனை எல்லாம் நேரா அங்க பார்ஸேஏஏஏல். புத்தாண்டு பத்திப் பதிவு அப்படின்னா இந்த பாட்டு போட்டு ஆரம்பிக்கறாதுதானே நம்ம தமிழ்க்கலாச்சாரம். அதான் இப்படி. ஆனா புத்தாண்டு வாழ்த்து சொல்லி பதிவு போட்டா போறாதாம். அப்போ எடுத்துக்கிற சபதம் பத்தி எழுதணுமாம். இதைப் படிச்ச உடனே எப்படி தெரியுமா இருந்தது.

சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும் பொழுது இந்த டீச்சருங்க எல்லாம் புது வருஷம் பொறக்குதோ இல்லையோ, அதுக்காகவே காத்துக்கிட்டு இருந்தா மாதிரி உங்க புது வருஷ தீர்மானங்களைப் பத்தி கட்டுரை எழுதுன்னு சொல்லுவாங்க. அது வந்து இந்த "If you were the prime minister..", "If a wish of yours can come true.." ரேஞ்சில் நடக்காத விஷயம்தானேன்னு தெரிஞ்சதுனால என்ன வேணாலும் எழுதலாம். பொதுவா இனிமே சரியா ஹோம்வொர்க் பண்ணுவேன், கிளாசில் தூங்கினால் குறட்டை விடாமல் இருப்பேன், வாத்தியார் வேட்டியில் இங்க் அடிக்க மாட்டேன் அப்படின்னுலாம்தான் எழுதி வெச்சு இருப்போம். படிக்கிறவங்களுக்கு இது கட்டுரையா இல்லை இம்போசிஷனான்னே சந்தேகம் வரும்.

அப்புறம் கொஞ்சம் வளர்ந்தா ஒரு டைரி எழுதும் மோகம் பத்திக்கும். என்னமோ வருஷம் பூராவும் எழுதிக் கிழிக்கிற மாதிரி ஒரு நாளைக்கு ஒரு பக்கம் இருக்கிற டைரிதான் வேணும் அப்படின்னு தேடுவோம். தேடுவோமுன்னா காசு குடுத்து கடையில் வாங்கறது எல்லாம் இல்லை. ஓசியில் எங்க கிடைக்குதுன்னு பார்க்கத்தான். கடைசியில் எதாவது டாக்டர் வீட்டில் அனாதையாய் கிடக்கும் மருந்து கம்பெனி டைரி ஒண்ணு மாட்டும். அதில் ஜம்பமா பேரு அட்ரஸ் எல்லாம் எழுதிட்டு ஆரம்பிப்போம். முதல் நாள் பொதுவா இந்த வருஷம் பூராவும் டைரி எழுதுவேன் அப்படின்னு ஆரம்பிக்கறதுதான் சம்பிரதாயம். நிறையா வருஷங்களில் அது ஒண்ணு மட்டும்தான் எழுதி இருப்போம். அப்புறம் அம்மா சலவை கணக்கு எழுத புத்தகம் தேடும் பொழுது பெருந்தன்மையோட இதைத் தானம் பண்ணிடுவோம். அதுக்கு முன்னாடி பெர்சனல் விஷயங்களை எல்லாம் அடுத்தவங்க படிக்கக் கூடாதுன்னு அதை ஸ்டைலா கிழிச்சுட்டு குடுக்கறதில ஒரு பெருமை.

அப்புறம் கொஞ்ச வயசாச்சுன்னா ஒரு கவுஜ எழுதும் கிறுக்குப் பிடிக்கும். கவுஜ எழுதற கிறுக்குன்னு தனியா இருக்கா, கவுஜ எழுதினாலே அப்படித்தானேன்னு எல்லாம் கேட்கப்பிடாது. அப்போ பள்ளிக்கூடத்தில் நேர் நேர் தேமான்னு சொல்லிக் குடுத்தா அதை காதிலேயே போட்டுக்காம வெண்பா, விருத்தமுன்னு வீணா பேசிக்கிட்டு இருக்காரேன்னு வருத்தப்படறவன் இங்க வந்து
நான்
படித்தேன்
பா -
அவளோ
சொன்னாள்
போ!!!
அப்படின்னு ஆச்சரியக்குறி போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். அந்த டைரி முழுசும் இப்படி உடைச்சுப் போட்ட உரைநடை வரிகளால் ரத்தக்களறி ஆகி இருக்கும். இதுக்கு நடுவில் காதல் கிறுக்கு வேற பிடிச்சுது அம்புட்டுதான். ஒரு மாசத்தில் ஒரு வருஷ டைரி காலி ஆகி இருக்கும். ஆனா இந்த பித்து எல்லாம் நிறையா பேருக்கு கொஞ்ச நாள்தான். சரியாகிடும். அப்படி சரியாகாம போனாத்தான் பாவம் கவிஞரா ஆகிடறாங்க. என்ன செய்ய எல்லாம் விதி.

அப்புறம் ஒரு வழியா படிச்சு முடிச்சு, வேலை தேடி, கல்யாணம் பண்ணிக்கிட்டு, குண்டாகி, (ஆத்தாடி எம்புட்டு ஜிம்பிளா சொல்லிப்புட்டோம்!) மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் பார்த்து டென்ஷனாகும் பொழுது இந்த வருஷம் பூரா நொறுக்குத் தீனி திங்கக் கூடாது, ஒழுங்கா உடற்பயிற்சி எல்லாம் செய்யணும், சும்மா ஒரு மாசத்தில் அர்னால்ட் ஷ்வாஷ்னெக்கர் மாதிரி ஆகணும் அப்படின்னு ஒரே ஒரு நாள் எதையாவது செஞ்சு கண்ணாடி முன்னாடி போய் பைசெப்ஸ் எல்லாம் முறுக்கி பார்க்கறது. அடுத்த நாள் காலையில் உடம்பில் இதுவரை இருந்ததே தெரியாத இடங்கள் எல்லாம் வலிக்க ஆரம்பிக்க வழக்கம் போல் ரீவி முன்னால் உக்காந்துக்கிட்டு பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டே என்னடா ஆடறாங்க இந்தப் பசங்க? ஒரு ஓவர்பிட்ச் பாலை ட்ரைவ் பண்ணத் தெரியலை அப்படின்னு விமர்சனம் பண்ணிக்கிட்டு கிரிக்கெட் பார்க்க வேண்டியதுதான்.

சரிடா, விஷயத்துக்கு வா. இந்த வருஷத்து சபதம் என்ன அதைச் சொல்லுன்னு ரென்ஷன் ஆகறீங்களா? புது வருட காலையில் அவசர அவசரமா குளிச்சுட்டு கோயிலுக்கு போய் பல மணி நேரம் வரிசையில் நின்னு, அரையே அரை நொடி சாமியைப் பார்த்து ஏடு கொண்டலவாடா, வேங்கடரமணா, கோவிந்தா கோஓவிந்தா அப்படின்னு சொல்லிட்டு உண்டியலில் கொஞ்சம் பச்சை நோட்டை நுழைச்சுட்டு, கீழ கேண்டீன் வந்து மீண்டும் சில மணி நேரம் வரிசையில் நின்னு ஒரு புளியோதரை, தயிர்சாதம் சாப்பிட்டுவிட்டு அப்படியே வீட்டுக்கு வந்து அப்பாடான்னு உக்கார்ந்தா எவ்வளவு டயர்டா இருக்கு. இதுல சபதம் போட எங்க நேரம் இருக்கு சொல்லுங்க!!

டிஸ்கி 1 : ஏற்கனவே லேட்டு, இதுல இன்னும் நாலு பேரைக் கூப்பிட்டு புதுவருஷ சபதம் எல்லாம் பத்தி எழுதச் சொன்னா காறி துப்புவாங்க. அதனால நான் அந்த பார்ட்டை மட்டும் சாய்ஸில் விடறேன். அப்படி யாரும் பதிவு போட வேற மேட்டரே இல்லாம இதை எழுத துடிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா நான் கூப்பிட்டதா நினைச்சுக்கிட்டு பதிவு போடுங்க. போட்டுட்டு இங்க வந்து இலவசமா போஸ்டர் ஒட்டிக்குங்க.

டிஸ்கி 2: இது எல்லாம் போறாதுன்னு மொக்கைப் பதிவு தொடர் ஒண்ணு ஓடுதாமே. அதுக்கு யாரும் கூப்பிடறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன். அதுக்கும் சேர்த்துதான் இந்தப் பதிவு.

டிஸ்கி 3: இந்தப் பதிவுக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு யோசிக்கறீங்களா? அதுவும் தமிழ்தாங்க. இசலி அப்படின்னா சபதம், இடாப்பு அப்படின்னா அட்டவணை. சபதங்களின் அட்டவணை அப்படின்னு தலைப்பு வெச்சா வருவீங்க? ஆனா இசலிகளின் இடாப்புன்னு கரெக்ட்டா வந்து ஆஜராவீங்க இல்ல. அதான்! வர்ட்டா!!

Sunday, January 06, 2008

பனியாய் பரவும் புகைப்படத் தொடர்

இந்த வருஷ ஆரம்பமே தொடர் விளையாட்டுக்களா இருக்கு. முதலில் நம்ம பாபா வந்து போன வருஷம் எடுத்த படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படம் எது அப்படின்னு சொல்லுங்க அப்படின்னு கூப்பிட்டாரு. அவரு கிட்ட டிமிக்கி குடுத்துடலாம் அப்படின்னு பார்த்தா பின்னாடியே நம்ம வெங்கட்டும் வந்து படத்தைப் போடய்யான்னு மிரட்டிட்டுப் போயிட்டாரு. வெங்கட் எடுத்த படத்தைப் பார்த்தால் நமக்கு அவ்வளவு பிரமிப்பா இருக்கு. இப்படி எல்லாம் படம் எடுக்கிற பார்ட்டி வந்து நம்மளைக் கூப்பிடறாரே அப்படின்னு ஒரு யோசனை. அப்புறம் கமல் ரஜினி படத்துக்கே வடிவேலு தேவையா இருக்கே. அந்த மாதிரி இவங்க எல்லாம் விளையாடுற இடத்தில் நம்மளை ஊறுகாயா தொட்டுக்கறாங்க போல அப்படின்னு மனசைத் தேத்திக்கிட்டு துணிஞ்சு பதிவைப் போடலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.

அப்புறமா நம்ம கிட்ட இருக்கும் படங்களை எல்லாம் பார்த்தா இப்படி பொதுவில் போடற மாதிரி எதுவும் பெருசா இல்லை. முதலில் நம்ம எடுக்கும் முக்கால்வாசி படங்களில் நம்ம குடும்பத்தார் பல்லைக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க இருக்கும் படத்தைப் போடும் அளவு நம்ம தமிழ் வலைப்பதிவுலகம் மேல நம்பிக்கை வரலை. அதனால அவை அனைத்தும் காலி. மீதி இருக்கும் கொஞ்சமே கொஞ்சம் படங்களில் சிலவற்றை ஏற்கனவே பல பதிவுகளில் போட்டாச்சு. அதனால போடாத படங்கள் அப்படின்னு பார்த்தா ரொம்பவே கொஞ்சம்தான் தேறுது. அதில் எனக்குப் பிடிச்சது இந்த படம்தான்.இந்தப் படத்தை எடுத்தது நியூயார்க் நகரில் உள்ள ப்ராக்ன்ஸ் மிருகக்காட்சி சாலையில் எடுத்தது. நாங்கள் சென்ற வேனிற்கால விடுமுறை நேரத்தில் வண்ணத்துப் பூச்சிகளின் சிறப்புக் கண்காட்சி ஒண்ணு வெச்சு இருந்தாங்க. ஒரு பெரிய கூடாரத்தின் உள்ளே விதவிதமான வண்ணத்துப் பூச்சிகள். நம் தோள் மேலே வந்து உட்காருது, காது அருகே படபடவென சிறகடிச்சுக்கிட்டுப் போகுது, சிறிதும் பெரிதுமாய், வண்ண வண்ணமாய் ஒரே பட்டாம்பூச்சிக் கொண்டாட்டம்தான். என் மகனைப் போலவே ஒரு இடத்தில் நிலைகொள்ளாத இந்த வண்ணத்துப்பூச்சிகளை படமெடுப்பது ஒரு சவாலாகவே இருந்தது. அங்கு சுட்டுத் தள்ளியவற்றில் எனக்குப் பிடித்தது இந்தப் படம்தான். இதில் பிற்தயாரிப்பு எதுவும் செய்யவில்லை.

அப்புறம் ஒத்த போட்டோ போட்டா வாஸ்து படி பதிவுக்கு ஆகாதாமே. அதுனால போன வருஷம் எடுத்த படங்களில் பிடித்தது இவை கூட. இது பத்தி முன்னமே இந்தப் பதிவில் சொல்லியாச்சு. படங்களில் விசேஷம் என்னன்னா சுமார் 300 அடி உயரத்தில் அந்தரத்தில் ஊஞ்சலாடிக்கிட்டு இருக்கும் போது எடுத்த படங்கள். இவ்வளவு நல்லா வரும் அப்படின்னு எதிர்பார்க்கவே இல்லை.அப்புறம் கடைசியா இந்த விளையாட்டு விளையாட இன்னும் பலரைக் கூப்பிடணுமாம். அதுல பாபா நாலு பேரை கூப்பிட்டு இருக்காரு. ஆனா அப்புறமா வந்த வெங்கட்டாகட்டும், அவர் கூப்பிட்டு வந்த சீவிஆர் ஆகட்டும் தலைக்கு மூணு பேரைத்தான் கூப்பிட்டு இருக்காங்க. அதிலேயும் இந்த சீவீஆர் நான் நினைச்ச ரெண்டு பேரை கூப்பிட்டுட்டாரு. அதனால நானும் மூணு பேரோட நிறுத்திக்கறேன். இவங்க எல்லாருமே படம் போட்டு பட்டையைக் கிளப்பறவங்கதான். அதுனால நல்ல பதிவா வரும் அப்படின்னு நம்பறேன். வந்து படத்தைப் போடுங்க அப்படின்னு நான் கூப்பிடும் மூவர்
  1. வைத்தியர் இராமநாதன்
  2. தல கைப்புள்ள
  3. மாதாமகி துளசி ரீச்சர் (அப்பாடா, நானும் 33% ஒதுக்கீடு குடுத்துட்டேன்!)
டிஸ்கி: அடுத்த பதிவும் ஒரு தொடர் பதிவுதாங்க. அதுக்கு வெயிட்டீஸ்!