Thursday, August 28, 2008

புதசெவி - 8/28/2008

புதிர் போட்டி எல்லாம் போட்டா புதசெவியை மறந்து போயிடுவியான்னு பஞ்ச் அண்ணா விட்ட குத்து ஒண்ணோட விளைவா இந்த மாதத்துப் புதசெவி பதிவு. அதனால இந்தப் பதிவு பிடிச்சு இருந்தா அவருக்கு நன்றி சொல்லுங்க. தானிப்படையும் அவர் வீட்டுக்கே அனுப்பிடுங்க.

செய்தி - 1

வழக்கம் போல நம்ம நாட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம். நம்ம மத்திய அரசு கவிழாம இருக்க என்னென்னமோ பேரம் எல்லாம் நடந்து இருக்கு. மாநில அரசு, பல கோடி பணம் அப்படின்னு எல்லாம் நடந்தது எல்லாம் பற்றிப் படிச்சு இருப்பீங்க. ஆனா கடவுளோட போட்ட ஒரு ஒப்பந்தம் பற்றித் தெரியுமா? அரசைக் காப்பாற்ற கடவுளுக்குக் கொடுத்த விலை நாலு எருமைகளும் இருநூறு ஆடுகளும். நடந்தது அஸ்ஸாம் மாநிலத்தில். மேற்கொண்டு படிக்க இங்க போங்க.

பஞ்ச் : 4 எருமை, 200 ஆடா? சில பல கோழிகளையும் சேத்தா 271 வருதா பாரும் அய்யா! பலி ஆனதும் மேஜிக் பிகரா இருக்கும்! அது மட்டுமில்லாம சிவப்பு சட்டைக்காரங்க தோல்விக்கு கோயிலையே சிவப்பு சாயம் பூசிட்டாங்களாக்கும். நல்ல வேளை அஸ்ஸாமில் அம்மா ஆட்சி இல்லை.

செய்தி - 2

மாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடிச்சு இருக்காங்கன்னா பெரும்பாலான மாடுகள் மேயும் பொழுதோ, களைப்பாறும் பொழுதோ தெற்கு - வடக்காகத்தான் நிற்கின்றனவாம். இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் மேலும் மாடுகளுக்கு இயற்கையிலேயே வடதிசை அறியக் கூடிய ஆற்றல் இருக்கிறதா என சோதனைகள் மேற்கொள்ளப் போகிறார்களாம். தேனீக்கள், கறையான்கள் போன்றவற்றிக்கு இது போன்ற பூமியின் காந்தசக்தியின் உதவி கொண்டு வடதிசை அறியும் ஆற்றல் உண்டு என்பது நிரூபணமான ஒன்றாம். மாடுகள் தவிர்த்து மற்ற பெரிய மிருகங்களும் இது போன்ற ஆற்றல் உண்டா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவிருக்கிறதாம். செய்தி இங்கே.

பஞ்ச்: தெற்கு வடக்கா நின்னா மட்டும் மாட்டுக்கு ராஜ்யசபா சீட்டா கிடைக்கப்போவுது? யாராச்சும் கருணை காமிச்சு, நிதி கொடுத்து, பிச்சை போடணும்.. அட அட்லீஸ்ட் சரியான குடும்பத்திலாவது பிறக்கணும். அப்பதான் அதெல்லாம் நடக்கும்!

செய்தி - 3

லண்டனில் ஒருவர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பொழுது அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வர ஒரு ஓரமாய் ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அங்குள்ள தடங்களில் மின்சாரம் பாய்வதினால் அவர் சிறுநீர் கழிக்கையில் அதன் மூலம் கடத்தப்பட்ட மின்சாரம் அவர் உடலைத் தாக்கி அவர் இறந்தே விட்டார்! மனிதர் போலந்தில் இருந்து லண்டனைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த ஒரு உல்லாசப் பயணி. மேலும் விபரங்கள் இங்கே.

பஞ்ச்: தண்ணீரில் இருந்து ரிவர்ஸுல மின்சாரம் எடுக்க முயற்சித்த விஞ்ஞானியைப் பற்றி கிண்டலாகச் செய்தி வெளியிடும் கொத்தனாருக்கு பலத்த கண்டனங்களும், மின்சார மூச்சா போனவருக்கு அழ்ந்த அனுதாபங்களும்! ஆனா நம்ம ஊர் ரயில் நிலையங்கள் சுத்தமாக ஒரு வழி கிடைத்தாற்போல இருக்கிறதே!

செய்தி - 4

அப்படியே நம்ம துளசி ரீச்சர் ஊருக்குப் போகலாம். அங்க உள்ள நீதிமன்ற உத்தரவு ஒண்ணைப் பார்த்து புதுசா அப்பா அம்மா ஆகப் போறவங்களுக்கு எல்லாம் கலக்கமா இருக்காம். விஷயம் என்னன்னா, குழந்தைகளுக்கு கிறுக்குத்தனமான பெயரை எல்லாம் வைப்பது அவர்களுக்கு கொடுமை இழைப்பதாகும் அப்படின்னு சொல்லி அப்படி ஒரு பெயரை வைத்த பெற்றோரிடம் இருந்து குழந்தையைப் பிரித்தே விட்டார்கள். அதனால் வித்தியாசமாகப் பெயர் வைக்க வேண்டும் என நினைத்தவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்கிறார்களாம். செய்தி இங்கே.

பஞ்ச் : அப்ப நியூசிலாந்துல கிவிநிதி, நியூசிகொண்டான் அப்படின்னு எல்லாம் தலைவருங்க பேரு வைக்கறதில்லையா?அப்படியே பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப் படுத்தறேன் பேர்வழி எனச் சொல்லி நம்ம நாக்கை உடையச் செய்பவர்களுக்கும் இப்படி எதாவது செஞ்சாத் தேவலாம்.

செய்தி - 5

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி. ஜப்பானில், ஷிபுகாவா என்ற நகரில் சமீபத்தில் ஒரு திருவிழா நடைபெற்றது. தொப்புளின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இந்தத் திருவிழா நடைபெற்றதாம். உடலின் பாதியில் இருக்கும் தொப்புள் முக்கியமான ஒரு பாகமாக ஜப்பானில் கருதப்படுகிறதாம். அதனைக் கொண்டாடும் இந்த விழா நடைபெறும் இந்த நகரோ ஜப்பானில் நடுவாக உள்ள இடமாம். தொப்புளைப் பிரதானமாகக் காண்பிக்கும் வகையில் வயிற்றில் பலவித படங்கள் வரைந்து கொண்டு ஆட்டமும் பாட்டமுமாக அன்றையப் பொழுதைக் கழித்தார்களாம் இந்த விழாவில் பங்கு கொண்டவர்கள். மேலும் படிக்க.

பஞ்ச்: அட.. ஜப்பான் கரங்க எல்லாத்துலையும் லேட்டுதான். நாங்க பம்பரம் மட்டுமா வுட்டோம்? ஆம்லெட்டு சுட்டோம், தக்காளி உருட்டுனோம்.. தேமுதிக எப்ப ஜப்பான் கிளை ஆரம்பிக்கப்போறாங்க? சின்னக்கவுண்டர் டோக்யோ தலைமை மன்றத்துக்கு flex digital பேனருக்கு ஆர்டர் கொடுத்தாச்சா?

செய்தி - 6

இனப் பாகுபாடு காரணமாக தண்ணீர் கிடைக்காமல் தவித்த மக்களுக்கு நீதிமன்றம் இழப்பீடு தர உத்தரவு. தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதப்பட்டதால் மற்றவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட பொழுது இவர்களுக்கு இணைப்பு மறுக்கப்பட்டதாம். பொது நீர் இணைப்பு இல்லாததால் தங்கள் நிலத்தில் கிணறு தோண்டியோ அல்லது மழைத் தண்ணீரை சேர்த்து வைத்து அதனையே குடிக்க, குளிக்க, சமைக்க என்று உபயோகித்து வந்தனராம். எங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் இப்படியே செய்ததால் எனக்கு என் குழந்தைப் பருவத்தில் நாங்கள் செய்வது வித்தியாசமாகப் படவில்லை என்று சொல்கிறார் ஒருவர். இவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடக்கப்பட்டு அதன் மீது தீர்ப்பும் வந்துவிட்டது. இவர்களுக்கு இழப்பீடாக கிட்டத்தட்ட 44 கோடி ரூபாய் தர வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. மேலும் இது பற்றிப் படிக்க.

பஞ்ச் - ஈராயிரம் ஆண்டுகளாக எம்மக்களை வாட்டி வந்த கொடுமை எங்கெங்கிலும் வந்து ஏறியிருப்பதை முதலில் காணாமல் கொலை வாளினை எடுக்க உ பி களுக்கு ஆணை இட்டுவிட்டேனே! சரி போகட்டும்.. ஜனநாயக ஆட்சி அமையும் வரையில் அமைதி காக்கச் சொல்லி விட்டால் போகிறது!

கடைசியா ஒரு போனஸ்!

மெய்ப்புல அறைக்கூவலர் என்றால் என்ன? சரியான பதில் சொல்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகவும். மற்றவர்கள் இங்கே சொடுக்கிப் பார்க்கவும்.

பஞ்ச் - இதுக்கு மேல என்ன சொல்ல! மெய்ப்புல கைத்தொப்பியர் அப்படின்னு போடாம விட்டாங்களேன்னு வேணா சந்தோஷப்பட்டுக்குங்க. அம்புட்டுதான்.

Wednesday, August 20, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - விடைகள்

கொஞ்சம் பயந்துக்கிட்டேதான் புதிரைப் போட்டேன். தமிழில் குறுக்கெழுத்து என்பது எவ்வளவு தூரம் வரவேற்கப்படும்? ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படின்னு எஸ்கேப் ஆயிடுவாங்களோ? இல்லை என்னய்யா குறிப்பு இது அப்படின்னு துப்பிடுவாங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். ஆனா நிறையா பேரு ஆர்வமா கலந்துக்கிட்டதுல ரொம்ப மகிழ்ச்சி.

பொதுவா எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க, யார் யார் எந்தெந்த கேள்விக்கு சரியான விடைகள் சொல்லி இருக்காங்க அப்படின்னு எல்லாம் ஒரு கட்டம் போட்டு காட்டி இருப்பேன். இந்த தடவை அளவு கடந்த ஆணி. அதனால அதெல்லாம் செய்ய முடியலை. அடுத்த முறை நல்லாச் செஞ்சுடலாம். மன்னிச்சுடுங்க. எனக்குத் தெரிஞ்சு ஸ்ரீதர் நாராயணன், கைப்புள்ள, திவா, வடகரை வேலன் இவங்க நாலு பேரும்தான் எல்லா விடைகளையும் சரியாச் சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன். வாழ்த்துகள்!! வேற யாராவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்க. சரி பண்ணிடறேன்.

இனி விடைகள்.


இதுதான் நம்ம வலைப்பதிவில் முதல் முறை என்பதால் கொஞ்சம் விரிவாக விடைகளைப் பார்க்கலாம்.

இடமிருந்து வலம்

1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
வம்பு - தவம் என்ற வார்த்தையின் எல்லைகளான த மற்றும் ம் போனால் மிஞ்சுவது வ. இதனோடு மருந்துக்கு இன்னொரு சொல்லான களிம்பு என்னும் சொல்லை எடுத்து அதில் மகிழ்ச்சிக்கு இணையான களி என்ற பகுதியை நீக்கிவிட்டால் ம்பு என்பது மிஞ்சுகிறது. இவை இரண்டையும் சேர்த்தால் வம்பு என்னும் சொல் தீச்சொல் என்னும் பொருள் கொண்டு வருகிறது. வசவு என்ற விடையை பலரும் தந்திருந்தார்கள். ஆனால் அதற்கு குறிப்பு எப்படிப் பயன்படும் என்பதை யோசிக்கவே இல்லை.

2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3)
கருது - முதலில் கருணை என்பது கருணை என்னும் சொல்லின் முதல் எழுத்தைக் குறிக்கும் - க. இடபம் (ரிஷபம்) என்றால் எருது. அதில் தலையிழந்த என்று சொன்னதினால் ருது என்னும் எழுத்துகள் மிஞ்சுகின்றன. இவை இரண்டும் சேர்ந்தால் நினை என்னும் பொருள் வர கருது என்றாகிறது

4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2)
மலை - இது எளிதான குறிப்புதான். பெரிய குன்று என்பது மலை. பிரம்மிப்பது என்றால் மலைப்பது என்பது நமக்குத் தெரியும். ஆக பிரமி என்றாலும் மலை!

5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4)
கையூட்டு - இங்கு தாய் என்ற சொல் சரியாகப் பார்த்தால் தேவையே இல்லை. ஆனால் ஊட்டு என்பது உடனடியாகத் தெரிய வேண்டும் என்பதால் அதனைச் சேர்த்தேன். தன் கரத்தால் என்பது கை என்றும் உண்ணச் செய்வது என்பது ஊட்டு எனப் பொருள்படும்படிச் செய்தால் கையூட்டு என்பது ஊழல் என தெரிய வரும்.

7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3)
இதம் - இங்கிதம் என்ற சொல்லின் இடை ஒடிந்தால், அதாவது நடுவே இருக்கும் சில எழுத்துக்களைக் களைந்தால் இதம் என்று வருகிறது. இதம் என்ற சொல்லுக்கும் பொருள் இனிமை என்பதுதானே.

9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3)
அம்மா - அந்த மாம்பழம் என்பதைச் சொல்ல அம்மா என்று சொல்லலாம். அம்மா என்றாலே அன்புதானே.

10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
இந்தியா - வடமொழியா என்று கேட்பதை தமிழில் 'இந்தி'யா எனக் கேட்கலாம். இந்தியா என்பது ஒரு நாடு.

12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2)
காலை - நண்பகலுக்கு முன்பான நேரம் காலை. ஒருவரை வணங்க அவர் காலைத்தானே பிடிக்க வேண்டும்.

13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3)
திருடு - செல்வம் என்றால் திரு. கடைசியாக எடு என்றால் எடு என்ற சொல்லின் கடைசி எழுத்து டு. இவை சேர்ந்தால் திருடு என்றாகிறது. சொந்தக்காரருக்குத் தெரியாமல் எடுப்பது என்பது திருடுவதுதானே.

14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)
கரம் - கரம் என்ற சொல் குறிப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறதே! பலரும் இதை மரம் எனச் சொல்லி இருந்தார்கள். ஆனால் மரம் வர குறிப்பு ஒத்து போவதில்லையே.

மேலிருந்து கீழ்

1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3)
வருகை - ஒரு விதம் என்பதை வகை என்று சொல்லலாம். அதில் பாதி குரு அதாவது ரு என்ற எழுத்தைப் போட்டால் விஜயம் என்ற பொருள் வரக்கூடிய வருகை என்ற விடை கிடைக்கும்.

2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2)
கலை - சறுக்கலைப் பார்க்கும் பொழுது அதில் கலை என்ற சொல் தெரிகிறது. ஆயக் கலைகள் 64 என்பது நமக்குத் தெரியுமே.

3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4)
துயரம் - முதல் துன்பம் - து. முடிவில்லா ரம்யம் - ரம்ய. இவை கலைந்திருக்கின்றன து + ரம்ய = துயரம் = துக்கம்!

4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2)
மடு - ஓரமாய் மன்றாடு என்பது அச்சொல்லின் ஓரங்களைக் குறிக்கிறது = மடு. மடு என்றால் பள்ளம் என்ற பொருளில் இவ்விடை சரியாக வருகிறது.

6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3)
யூகம் - படை வகுப்பு வியூகம். அதில் ஒரு பகுதி யுத்தி என்ற பொருள் கொண்ட யூகம்.

8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3)
தந்தி - இருப்பதிலேயே எளிமையான குறிப்பு இதுதான் என நினைக்கிறேன். வதந்தியில் இருக்கும் தந்தி வீணையிலும் உண்டு.

9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4)
அந்தாதி - செவிலித்தாய் என்றால் தாதி. அந்த தாதி என்ற சொற்களில் இருக்கும் எழுத்துக்களை கலைத்துப் போட்டால் அந்தாதி வரும். ஆனால் ஒரு 'த' அதிகமிருக்கும். அதனைக் குறிப்பதற்காகத்தான் ஏறக்குறைய எனச் சொன்னது. அந்தாதி என்பதின் முடிவே தொடக்கமாக இருப்பதால் அது மாலை என்றும் அழைக்கப்படுகிறது.

10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2)
இலை - தழை என்பதைப் பார்த்து இலை என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இலை என்பதற்கு ருசியற்று என்ற பொருள் இருப்பது நமக்குத் தெரியுமா?
நான் பாவிக்கும் அகரமுதலி சொல்வதைப் பாருங்கள் -

இலை (p. 88) [ ilai ] , VI. v. i. be tasteless, ருசியற்றிரு; 2. lose taste for a thing, வாயரோசி.

இலைத்தகரி, a tasteless curry.

இலைத்தபேச்சு, a useless, vain talk.

இலைத்தல், being insipid or tasteless.

11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3)
யாகம் - இதுவும் எளிதுதான். கொடை என்றால் தியாகம். அதன் தலையை எடுத்தால் யாகம். அதாவது வேள்வி.

12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2)
காடு - முக்காடு என்ற சொல்லில் வனம் என்ற பொருள் கொண்ட விடை இருக்கிறது. அது உள்ளேயே இருக்கிறது என்று உணர்த்தத்தான் தெரியுமோ என்ற குறிப்பு.

இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம்.

மீண்டும் அனைவருக்கும் நன்றி!

Sunday, August 17, 2008

குறுக்கெழுத்துப் புதிர்!

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து. புதிர் போட்டும் ரொம்ப நாள் ஆச்சு. சரி நம்ம வாஞ்சி அண்ணா என்னும் புலியைப் பார்த்து நாமளும் சூடு போட்டுக்கலாமேன்னு ஒரு குறுக்கெழுத்து தயார் பண்ணியாச்சு. எல்லாம் செஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா கட்டம் 7x7 என்று இல்லாம 7X8 என்று ஆகிப் போச்சு. இதைத் தயார் செய்யும் பொழுதுதான் மனுசன் ஒவ்வொரு மாசமும் எவ்வளவு கஷ்டப்படறாருன்னு தெரியுது. Hats off to you, Vanchi!

இனி நான் தயார் செய்த புதிரைப் பாருங்க. இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.


1
23


4
56
78
9
1011

12

13
14

இடமிருந்து வலம்

1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3)
4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2)
5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4)
7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3)
9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3)
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2)
13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3)
14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)

மேலிருந்து கீழ்

1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3)
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2)
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4)
4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2)
6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3)
8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3)
9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4)
10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2)
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3)
12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2)

புதிருக்கான ஆலோசனைகளைத் தந்த வாஞ்சிக்கும் இது போன்று நிரப்பக் கூடிய கட்டங்களை செய்து தந்த கே.ஆர்.எஸ்ஸுக்கும் எனது நன்றிகள்.

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.