Saturday, October 31, 2009

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள் - அக்டோபர் 2009

போன மாதம் எளிது எளிது என எல்லாரும் சொன்னதால் இந்த முறை கொஞ்சம் கஷ்டமாக்கினேன். ஆட்கள் எல்லாம் அம்பேல் ஆகிட்டாங்களே!! அவ்வளவு கஷ்டமாவா இருக்கு? நல்ல வேளை! வி.ஆர். பாலகிருஷ்ணனும் லக்ஷ்மி சங்கரும் சரியான விடைகளைத் தந்தார்களோ, நான் தப்பிச்சேன்!

தலைவர் வாஞ்சியின் அறிவுரைப்படி இந்த முறை விடைகள் வந்த விதத்தை விளக்கப் போவது இல்லை. விடைகளைத் தந்து விடுகிறேன். வந்த விதத்தை நீங்கள் பின்னூட்டமாகச் சொல்லலாமே.


Friday, October 09, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - அக்டோபர் 2009

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.
  • இந்த வார திண்ணை இதழிலும் வெளிவந்துள்ளது.இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.


1
2
345
6

7
89
10
11

12
13
14

15
16


குறுக்கு

3 வானம்பாடியோ வீழ்த்திடும் வில்லோ (5)
6 தலை வகிடெடுத்து நகையோடு பிணைத்துக் கயிலாயம் பார்க்கலாம் (4)
7 நெஞ்சில் கம்பு கொண்டு அடித்த திங்கள்(4)
8 கபடமாக யானை கையா எனக் குழம்பியது (6)
13 இனாமா இடையில்லாப் பயன் கலந்து செய்யுள் தா (6)
14 சிறப்பான தடை தரும் துருவை (4)
15 உள்ளிருந்து வந்து வக்கணையாய் ஆரம்பிக்க (4)
16 யோசித்தால் தானைத்தலைவன் தலை குழப்பி இரு (5)

நெடுக்கு

1 தோகையில் மறைந்த முடியாத மனது படிப்பதைக் குறிக்கும் (5)
2 திக்கி தலைகீழாய் விழுந்த பிஞ்சை பொறுப்பில் எடுத்து நடத்து (5)
4 சரமாகக் கோர்த்தது சாறாக ஓடியது (4)
5 தலை மேல் சுமை ஏற்றி ஆடிடும் ராசி (4)
9 இறந்தவன் பெரும்பாலும் ஊர்க்காவலன் (3)
10 அத்தி கத்துவது ஆட்கள் கொப்பளிப்பது (5)
11 முடிவிலாப் பாசம் கொண்ட உலகர் பெரும்பாலும் ஆராதிப்பவர் (5)
12 முதலும் முடிவும் முனைந்து தொடங்கி தாக்குதல் நடக்குமிடம் (4)
13 மண்டையில் ஏறாதா என்று உணர் அம்மாவா திரும்பியது? (4)


இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

ஸ்டார்ட் மியூஜிக்!

Friday, October 02, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - செப்டெம்பர் 2009
விடைகள் வந்த விதத்தை விளக்கமாக பார்க்கலாம்

குறுக்கு

3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5)

அசராமல்
- சளைக்காமல் என்பது பொருள். முதல் என்றால் அசல் என்ற பொருளும் உண்டு. அசல் ராம என்ற ராம நாமத்தை முழுங்கினால் அசராமல் வரும்.


6 தாகம் தீர்த்திடும் சின்ன சரஸ்வதி (4)

சிறுவாணி
- கோவைப் பகுதி மக்களின் தாகம் தீர்த்திடும் சிறுவாணி. சின்ன சரஸ்வதி என்றால் சிறு வாணிதானே!

7 அடிக்கடி தம்பியை அழைக்க புறாவா வரும்? (4)
கடிதம்
- அடிக்கடி தம்பி என்ற சொற்றொடரின் உள்ளேயே இருக்கிறது. அழைக்கப் புறா என்பதின் மூலம் அதன் காலில் இருக்கும் கடிதம் என்பதைக் குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.


8 நாத்திகம் முடிய பரம்பொருள் தொடங்க ஆடையின்றி அலைவோம் (6)
திகம்பரம் - ஆடையில்லாத நிலை திகம்பரம் என்று வழங்கப்படும். நாத்திகம் முடியும் என்பதில் இருந்து திகம் என்பதும் பரம்பொருள் தொடங்க என்பதில் இருந்து பரம் என்பதும் சேர்ந்து விடையைத் தருகிறது.

13 திருவந்தாதி பாடிய இயற்கை விவசாயி (6)
நம்மாழ்வார்
- திருவந்தாதி என அழைக்கப்படும் திவ்வியப் பிரபந்தத்தை நமக்கு அளித்தது நம்மாழ்வார். இதே பெயரில் புகழ்பெற்றவர் இயற்கை விவசாயத்தை பெரிய முறையில் மக்களிடையே கொண்டு சேர்க்கும் நம்மாழ்வார்.


14 இருபாதி தங்கம் ஒன்றாகி ஜொலிக்கும் (4)
தகதக
- தங்கத்தில் பாதி தக. அது இரு முறை வந்தால் தகதக. இது ஜொலிப்பதைக் குறிக்கும் சொல்.


15 சுகமான முற்றத்தில் சுற்றிவந்த உறவுகள் (4)

சுற்றம்
- சுகமான முற்றம் என்பதில் சில எழுத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றைக் கலைத்து சரியான வரிசையில் போட்டால் வரும் விடை உறவுகளைக் குறிக்கும் சொல்லான சுற்றம்.

16 வலிப்பொழுதில் வாயரற்றும் தாயை ஈன்றவள் (5)

அம்மம்மா
- வலிக்கும் பொழுது அனைவரும் சொல்வது அம்மம்மா என்பது. அம்மாவை பெற்றவளையும் அம்மம்மா எனச் சொல்வோம்தானே!


நெடுக்கு


1 எடைக்குள் சிக்கிய மாற்றாந்தாய் சொன்னாளோ விரதமிரு என்று? (5)

பசித்திரு
- பரு என்றால் எடை என்று பொருள். அதனுள்ளே மாற்றாந்தாய் என்பதற்கு ஈடான சித்தி நுழைந்தால் உண்ணாமல் விரதம் இரு என்பதான பசித்திரு என்ற விடை வரும்.

2 ஆசையில் கிளம்பி ஏழுநாளும் பூஜை துவங்க மணக்கும் (5)

ஆவாரம்பூ
- மணக்கக்கூடிய மலர் ஆவரம்பூ. ஆசையில் கிளம்பி என்பது ஆ என்பதையு, ஏழுநாளும் என்பது வாரம் என்பதையும், பூ என்பது பூஜை துவங்க என்பதையும் குறிப்பாகத் தருகின்றன.

4 சதி கிளம்பி அங்கம் உயிரிழந்தால் தமிழ் வளருமா? (4)
சங்கம்
- தமிழ் வளர சங்கம் அமைப்பார்கள். சதி கிளம்பி என்பது ச, அங்கம் என்பதில் உள்ள உயிர் எழுத்தான அ போக மீதம் உள்ளது ங்கம். இவை சேர்ந்து சங்கம் என்ற விடையைத் தருகின்றன.


5 இந்திரனின் நாட்டில் தருமம் கலையுமா (4)
மருதம்
- மருத நாட்டின் தலைவன் இந்திரம். தருமம் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்கள் கலைய மருதம் என்ற சொல் கிடைக்கும்.


9 கொடி செழித்துயர தம்முடையதை தந்தானே வள்ளல் (3)
ரதம்
- முல்லைக் கொடி வளர தனது தேரை தந்தான் பாரி. செழித்துயர தம்முடைய என்ற சொல்லில் தேர் என்பதற்கு ஈடான ரதம் மறைந்துள்ளது.


10 பட்டை அடிக்காட்டா வீணாகும் முன்னந்தலை எனப் பாட்டியும் சொன்னாளே (2,3)
பாழ் நெற்றி - விபூதி பூசாத நெற்றியைப் பாழ் நெற்றி எனப் பெரியவர்கள் சொல்வார்கள். வீணாகும் என்றால் பாழ். முன்னந்தலை என்பது நெற்றி என விடைக்குக் குறிப்பு இருக்கிறது.

11 ஊமையர் முதலும் கடைசியுமாக கிட்டத்தட்ட வரம்பு மீறிப் பேசியது தீ போலப் பரவிடும் (2,3)
ஊர்வம்பு
- தீ போல பரவிடும் ஊரார் அடிக்கும் வம்பு. ஊமையர் என்பதில் முதலெழுத்தும் கடைசி எழுத்தும் ஊர் என்பதையும் கிட்டத்தட்ட வரம்பு என்பது வம்பு என்பதையும் தரும்.


12 நான் வாசிச்ச கடம் உருண்டா போச்சு? (4)
சகடம்
- சகடம் என்றால் சக்கரம். உருள்வது சகடம். வாசிச்ச கடம் என்பதில் சகடம் ஒளிந்து கொண்டு இருக்கிறது.


13 பெரிய ஊரில் நல்லது ஆரம்பிக்கக் கை வரும் (4)
நகரம் - பெரிய ஊர். நல்லது ஆரம்பிக்க என்றால் ந, கை என்றால் கரம். இரண்டும் சேர்ந்தால் நகரம்.

புதிரை முழுமையாக விடுவித்த அனைவருக்கும் வாழ்த்துகள். முயற்சி செய்த அனைவருக்கும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த புதிருடன் சந்திக்கலாம்.

திண்ணை இதழில் இந்த விடைகள் வெளிவந்துள்ள பக்கத்தின் சுட்டி இது.