Friday, September 13, 2019

பயணப்படியும் பரலோகப் பயணமும் பின்னே பஸ் ஆல்டரினும்

எனக்கு ஒரு மேலாளர் இருந்தார். தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை எனக்குச் சொல்லித் தந்தவர். அதோடு கூடவே விதிகளை நமக்கேற்ற மாதிரி எப்படி வளைத்துக் கொள்வது என்பதையும் சொல்லித் தருவார். கை நிறைய சம்பளம் வாங்கினாலும் இப்படிச் செய்கிறாரே என நாம் யோசிக்கும் அளவு இது போல விதிகளை வளைப்பதில் வல்லவர்.
அலுவல் காரணமாக மேற்கொள்ளப்படும் பயணங்களில் ஏற்படும் செலவினை சமாளிக்கப் பயணப்படி தருவது வழக்கம். பொதுவாக ஒரு நாளைக்கு இவ்வளவு என்பதுதான் கணக்கு. அந்தத் தொகையை விட அதிகமாகச் செலவழித்தோமானால் அதை நம் கையிலிருந்து தர வேண்டும். அதை விடக் குறைவாகச் செலவு செய்தால் மீதி இருப்பது நமக்கு. இதுதான் கணக்கு. நம்ம மேலாளர், அவர் பெயரை ராஜன் என்று வைத்துக் கொள்வோமே, எப்படிக் குறைவாகச்  செலவு செய்வது என்பதை ஒரு கலையாக மாற்றி இருந்தார். டாலர், பௌண்ட் என்பதைப் போல தினப்படி என்பதை ஒரு நாணய முறையாக கொண்டிருப்பார். அந்த பெட்டி இவ்வளவு டாலர் விலை, அந்த சட்டை இவ்வளவு டாலர் என்பதைக் கூட மூன்று நாள் தினப்படி, நாலு நாள் தினப்படி என்று சொல்லும் அளவுக்கு அவருக்குத் தினப்படி மோகம்.
வெளியூர் செல்லும் பொழுது சாப்பாடிற்கு என்று ஒரு பெட்டியைக் கொண்டு வந்துவிடுவார். அதில் சிறிய குக்கர், பருப்பு, அரிசி, ரசப்பொடி என சமைக்கத் தேவையான அத்தனை உபகரணங்களும் இருக்கும். கூடவே மேகி நூடில்ஸ், உடனடி பொங்கல், உடனடி பிசிபேளாபாத் போன்ற ஆயத்த உணவுப் பொட்டலங்களையும் வைத்திருப்பார். நம்ம ஊர் உணவு உண்பதற்கான வழியும் ஆச்சு, கூடவே வெளியில் சென்று அதிக விலை கொடுத்து உண்ண வேண்டிய கட்டாயத்தையும் தடுத்தாற்போல் ஆச்சு. நம்மையும் சாப்பாட்டுக்கு அழைப்பார் ஆனால் வெறும் கையுடன் போய் விட முடியாது. நாம் கொண்டு வந்திருக்கும் ஆயத்த உணவு பொட்டலங்களைத் தந்துவிட வேண்டும். அத்தனை கறாராக இருப்பார்.
முதன் முறை அவருடன் வெளிநாடு செல்ல நேர்ந்த பொழுது விமானம் புறப்பட வேண்டிய நேரம் காலை மூன்று மணி. ஆனால் முந்திய இரவு பத்து மணிக்கெல்லாம் விமான நிலையம் வரச்சொல்லி விட்டார். சீக்கிரம் குடிவரவுச் (Immigration) சோதனைகளை முடிக்க வேண்டும் கிளம்பு கிளம்பு என்று அவசரப்படுத்தினார். ஏன் என்று தெரியாவிட்டாலும்  மேலாளர் சொல்கிறார் என்று சீக்கிரமே அத்தனை சோதனைகளையும் செய்து உள்ளே சென்று விமானம் ஏறும் நேரம் வரை தேவுடு காத்தோம். ஆனால் திரும்ப வரும் பொழுது மெதுவாகப் போகலாம் என்ன அவசரம் என்று ரொம்பவும் நிதானமாக இருந்தார். எங்கள் விமானத்தில் இருந்தவர்களிலேயே நாங்கள்தான் கடைசியாக குடிவரவு சோதனைகளை முடித்துக் கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்தோம்.
என்னால் சும்மா இருக்க முடியாமல், “ஏன் போகும் போது அவ்வளவு அவசரப்படுத்தினீர்கள் ஆனால் இறங்கிய பின் இத்தனை நிதானம்? எனக்கேட்டேன். ராஜன் உடனே “போகும் பொழுது நடு இரவுக்கு முன் குடிவரவுச் சோதனை செய்தோமானால் அன்றைய தேதியில் முத்திரை குத்தி விடுவான். பன்னிரெண்டு மணிக்குப் பின் அடுத்த நாள் முத்திரை வந்துவிடும். ஆகவே முன்னரே சென்றுவிட்டோமானால் ஒரு நாள் தினப்படி அதிகம்  கிடைக்கும். திரும்ப வரும் பொழுது நிதானமாக நடுநிசிக்குப் பின் குடிவரவுச் சோதனையை செய்தோமானால் அதே போல் அடுத்த நாள் முத்திரை விழும். இன்னுமொரு நாள் வெளிநாட்டில் இருந்த கணக்கில் ஒருநாள் தினப்படி அதிகம் கிடைக்கும். எனவேதான் போகும் பொழுது அவசரமும் இறங்கிய பின் நிதானமும். புரிந்ததா என்றார்!” 
இதற்காகவே அதிக செலவுகள் ஏற்படும் ஐரோப்பியப் பயணங்களைத் தவிர்த்து ஆப்பிரிக்கா ஆசிய பயணங்களைத் தேர்ந்தெடுப்பார். எந்த நேரமும் பயணம் செய்யத் தயாராக இருப்பார்.  இப்படிச் சேர்த்த பணத்தை வைத்தே மூன்று நான்கு வீடுகளை வாங்கிய சமர்த்தர் ராஜன். இவர் அளவு இல்லை என்றாலும் தானே சமைத்துச் சாப்பிட்டு அதிகம் செலவு செய்யாமல் தினப்படியை சேர்த்து முதலீடு செய்தவர்கள் இந்தத் தொழிலில் அநேகர் உண்டு. இவர்கள் செய்யாத செலவுக்கு ரசீது தருவது, அல்லது முன்பதிவு செய்த ரசீதை வைத்துக் கொண்டு பயணப்படி வாங்கி விட்டு பயணம் செய்யாமல் முன்பதிவை ரத்து செய்வது போன்ற தகிடுதத்தங்கள் செய்யமாட்டார்கள். விதிகளை மீறாமல் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதுதான் இவர்கள் குறிக்கோள்.
ஆனால் எத்தனுக்கும் எத்தன் இவ்வுலகில் உண்டு என்பதற்கு உதாரணமாக கணக்குவழக்குப் பிரிவில் குமார் என்று ஒருவர் இருந்தார். எவ்வளவு கவனமாக கணக்கு வழக்குகளை எழுதித் தந்தாலும் அதில் எதாவது குற்றம் கண்டுபிடித்து கேள்விகள் கேட்பதில் சமர்த்தர். இந்த ஹோட்டலில் காலையுணவு தருவார்களே, அந்த வாடிக்கையாளரின் அலுவலகத்தில் அனைவருக்கும் மதிய உணவு உண்டே அப்பொழுது நாம் ஏன் முழு தினப்படி தரவேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்பார். ராஜனின் திட்டத்தை முறியடிக்க இவர் குடிவரவு முத்திரையில் தேதியை மட்டும் பார்க்காமல் நேரத்தையும் பார்த்து கேள்வி கேட்பார். வெளியூர் செல்லவே ஆளைத் தேடும் நிலைமையில் இருக்கும் மேலாளர்கள் இவரைக் கட்டுப்படுத்தி வைப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள்.
இந்த பயணப்படி கதைகள் இன்று நினைவுக்கு வரக் காரணம் மற்றுமொரு பயணப்படி கதையை படித்ததினால்தான். மனிதன் நிலவில் காலடி வைத்தது 1969 ஆம் ஆண்டு. இவ்வருடம் அந்நிகழ்வு நடந்து ஐம்பது வருடங்கள் ஆனதால் அது குறித்து ஏராளமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலவுக்கே போய் வந்தாலும் நம் அரசு அலுவலங்களின் சிகப்பு நாடாவில் இருந்து தப்ப முடியாது என்ற ஒரு கட்டுரை மிக சுவாரசியமானது. நிலவில் இருந்து திரும்பிய பின்னர், ஹவாய் தீவுகளில் கரையேறிய விண்வெளி வீரர்கள் அங்கு சுங்கப் படிவத்தை நிரப்பி அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே அமெரிக்காவில் நுழைய முடிந்தது. ப்ளோரிடா மாநிலத்தின் கேப் கென்னடியில் இருந்து கிளம்பி நிலவின் வழியாக ஹானலூலூ வந்தடைந்ததாகவும் தங்களுடன் நிலவில் இருந்து கொண்டு வந்திருக்கும் கற்களும் துகள்களும் இருப்பதாக படிவத்தில் எழுதி விண்வெளிக்கு சென்ற நீல் ஆர்ம்ஸ்டிராங், பஸ் ஆல்டரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் கையொப்பமிட்ட சுங்கப் படிவம் இவர்கள் நிலவில் இறங்கியதன் 40ஆவது வருடக்கொண்டாட்டங்களின் பொழுது வெளியிடப்பட்டது. 

மேலும் தேடும் பொழுது, விண்வெளிக்கு சென்று வந்த பின் பஸ் ஆல்டரின் பயணப்படி கேட்டு எழுதிய படிவமும் கிடைத்தது.  
20 நாள் பயணமாக ஹ்யூஸ்டனில் இருந்து கிளம்பி கேப் கென்னடி வழியாக நிலவுக்குச் சென்று பசிபிக் பெருங்கடலில் வந்து விழுந்து ஹவாய் வழியாகத் திரும்ப ஹ்யூஸ்டன் வந்ததற்கு வெறும் 33 டாலர்தான் பயணப்படியா என்று நினைத்தேன். பயணம் செய்ய ராக்கெட், தங்கிட விண்கலம், உண்ண உணவு எல்லாம் அரசு தரும் பொழுது என்ன செலவாகிவிடும், எதற்குப் பயணப்படி என்று கேட்கும் நாஸாவின் குமார் சார் குரல் மனத்தினுள் அசரீரியாய் ஒலித்தது. கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு கட்டுரையை எழுதிவிட்டேன். 
  1. Buzz Aldrin’s Travel Voucher Courtesy – https://www.quora.com/How-much-was-Neil-Armstrong-paid-to-land-on-the-moon/answer/Andy-Burns-22?ch=99&share=c89b3a53&srid=RcoL
  2. Apollo 11 Customs Form Courtesy – https://www.thevintagenews.com/2019/03/25/apollo-11-customs/ 
சொல்வனம் மின்னிதழுக்காக எழுதியது - https://solvanam.com/2019/08/28/பயணப்படியும்-பரலோகப்-பயண/


Monday, September 02, 2019

சுந்தர காண்டத்து சூட்சுமம் தெரியுமா?

வழக்கம் போல் ட்விட்டரில் வளர்த்த வம்புதான். 

அன்பர் @mosqueraider இன்று எதற்காகவோ நட்புக்காக என்ற திரைப்படத்தில் வரும் சின்னச் சின்ன முந்திரியா என்ற பாடலை கேட்டாராம். ரொம்பவே உன்னித்து கேட்டார் போல. அதனால் பாடல் வரிகளில் அவருக்கு ஒரு சந்தேகம். பாடலில் சுத்துது சுத்துது செவ்வரி வண்டு, சுந்தர காண்டத்துச் சூட்சுமம் கண்டு என்ற ஒரு வரி வருகிறது. அதற்கு என்ன பொருள் என அவர் ட்விட்டரில் கேட்க, அதை சில பலர் நண்பர் @ragavanG அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டனர்.  ஜிரா இது மெட்டுக்கு உட்கார வைக்கப்பட்ட சொற்களாகத்தான் தெரிகின்றன என்றார். 

நம்ம கை சும்மா இருக்காமல் நான் வேணா இதற்கு விளக்கம் சொல்லட்டுமா என்று கேட்கப் போக, விளைவு இந்தப் பதிவு.

சுந்தர காண்டத்தில் என்ன நடந்தது என்றால் உடனே ராமன் சொல்லி அனுமன் இலங்கைக்குச் சென்றான், சீதா தேவியைக் கண்டான், ராவணன் சபையில் வம்பிழுத்து வாலில் தீயை வைக்கும் படிச் செய்தான், இலங்கையை எரித்தான், மீண்டும் ராமனிடம் வந்து கண்டேன் சீதையை என்றான். இப்படிப் பாட்டுப் புத்தகத்தில் வரும் கதைச் சுருக்கம் மாதிரி சொல்லுவாங்க. அதிலும் இந்தக் கண்டேன் சீதையை என்பதை எல்லாரும் சொல்லிச் சொல்லி ஆயிரம் முறையாவது கேட்டு இருப்போம். கம்பன் கண்டேன் சீதையை என்று சொல்லவே இல்லை. 

அவன் சொன்னது

கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக! இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

இந்தப் பாட்டைப் பத்தி எழுதிக்கிட்டே இருக்கலாம். இங்க இருந்து இலங்கைக்குப் பறந்து போனேனா, போன வழியில் என்ன ஆச்சு தெரியுமான்னு வளவளன்னு கதை சொல்லலை. ராமனுக்கு கவலையா இருக்குமே அதனால விஷயத்தை எவ்வளவு எளிமையா, எவ்வளவு சீக்கிரம் சொல்லிட முடியுமோ அப்படிச் சொல்லிடலாம்ன்னு மொதல் வார்த்தையா பார்த்துட்டேன்னு சொல்லறான். போன காரியம் முடிஞ்சுது. பார்த்துட்டேன், கற்புக்கே அணியாக இருக்கும் அன்னையை, அதுவும் என் இரு கண்களால் என்று ஆரம்பித்தானாம். சீதை என்று ஆரம்பித்தால் கூட அவளுக்கு என்ன ஆச்சோன்னு ராமன் மனசு சங்கடப்படுமே என்பதால் இப்படி ஒரு வரிசையில் சென்று வந்ததைச் சொல்கிறானாம். எப்படி எல்லாம் தோணுது பார்த்தீங்களா நம்ம கம்பனுக்கு. 

ஆனா இன்னிக்கு நமக்கு இந்தப் பாட்டு வேண்டாம். ரெண்டு பாட்டு பின்னாடி போகலாம். 

ராமனுக்குக் கவலை. சீதைக்கு என்ன ஆச்சோ, அவள் உயிரோடுதான் இருக்கிறாளோ? இல்லையோ என வருந்திக் கொண்டு இருக்கிறான். இலங்கையில் இருந்து திரும்பிய அனுமன் அங்கு வருகிறான். வந்த உடனே ஒரு வேலை செய்கிறான், அதைப் பார்த்து ராமனுக்குப் போன உயிர் திரும்ப வந்துவிட்டது. என்ன செஞ்சான்னா, எப்போதும் போல ராமனின் காலடியில் விழுந்து வணங்காமல், சீதை இருக்கும் தென்திசையை நோக்கி விழுந்து வணங்கினானாம். கம்பன் வார்த்தைகளில்

எய்தினன் அனுமனும். எய்தி, ஏந்தல் தன்
மொய்கழல் தொழுதிலன். முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வைகினன் 

அனுமன் திரும்பி வந்தான். வந்து, பெருமையில் சிறந்த ராமனின், வீரக்கழல்களை அணிந்த கால்களைத் தொழாமல், தாமரை மலரில் இருந்து அவதரித்த சீதை இருக்கும் இடத்தை நோக்கிய தலையும், தலை மேல் கூப்பிய கைகளை உடையவனுமாய் பூமியில் விழுந்து வணங்கினான். இதான் பொருள். இதைப் பார்த்த ராமன், அனுமன் வாயைத் திறக்கும் முன்பே சீதை நலமாக இருப்பது அறிந்து மகிழ்ந்தான். 

ஏந்தல் - உயர்ச்சி, முளரி - தாமரை, வையகம் தழீ - நிலத்தில் விழுந்து இப்படிச் சில சொற்களுக்கு மட்டும் பொருள் புரிந்தால் நேரடியாக கம்பன் எழுதினதையே வாசித்து விடலாம். கம்ப ராமாயணப் பாடல்கள் அவ்வளவு எளிது. 

இதில் மொய்கழல் என்பதற்கு இன்னும் ஒரு விளக்கம் தருவார்கள். ராமனின் கால்கள் பார்ப்பதற்குத் தாமரை மலர் போல் இருப்பதால் அவற்றை வண்டுகள் மொய்க்குமாம். அப்படி வண்டுகளால் மொய்க்கப்பட்ட திருவடிகள் என்றும் கொள்ளலாம் என்பார்கள். 

இதைத்தான் நம்ம பாடலாசிரியர் காளிதாசன் எடுத்துக்கிட்டாரோ என்னவோ. எப்படி ராமனின் பாதங்களை தாமரை என்று நினைத்து வண்டுகள் மொய்த்தனவோ அப்படி நம்ம திரைப்பட நாயகியைக் கண்டு அவள் அன்றலர்ந்த மலரோ என நினைத்து ஏமாந்து அவளைச் சுற்றிச் சுற்றி வந்து மொய்த்தனவாம் இந்தச் செவ்வரி வண்டுகள். சூட்சுமம் என்ற சொல்லுக்கு நுட்பம், திறமை என்ற பொருள் உண்டு. நம்ம வண்டுகளுக்கு இப்படி ஏமாந்து போய் மொய்க்கும் திறமை எங்க இருந்து வந்ததுன்னு யோசிக்காதீங்க. அவங்களுக்கு கம்பராமாயணத்தில் இப்படி ஏமாந்து மொய்த்த வண்டுகளிடமிருந்து இந்தத் திறன் வந்திருக்கின்றது என்கிறார் பாடலாசிரியர்! 

ஜிரா இப்படி எல்லாமா யோசிச்சுப் பாட்டு எழுதி இருப்பாருன்னு நினைக்கறீங்கன்னு கேட்டுட்டார். எனக்கும் அப்படி எல்லாம் இருந்திருக்காது என்றாலும் நாயகியை பூவாய் நினைத்து மொய்த்த வண்டு என்றதும், கூடவே சுந்தர காண்டம் என்றும் சொன்னதால் உடனடியாக நினைவுக்கு வந்தது மொய்கழல் தொழுதிலன் என்பதுதான். அவர் என்ன நினைச்சு எழுதினாரோ ஆனா அதனால  திரும்பவும் இந்த இரண்டு பாடல்களைப் படித்துப் பரவசம் அடைய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது. அதுக்கு அவருக்கும், கேள்வி கேட்ட அன்பருக்கும், அதை நம்ம பார்வைக்குக் கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றியும் சொல்லியே ஆகணும். 

எனக்கு அந்தப் பாட்டைப் பார்த்தே, கேட்டே ஆகணும் என்று அடம் பிடிப்பீர்களானால் உங்களைக் காப்பாற்ற அந்த ராமனாலும் முடியாது - https://youtu.be/wXc1oZ3lziM