Wednesday, April 24, 2013

Happy Birthday Sachin! - ஒரு விருத்த விளையாட்டு.


இன்னுமோர் நூற்றாண்டிரும்! 

இன்றைய விருத்த விளையாட்டு - Happy Birthday Sachin! 

இந்த ஈற்றடி வெச்சுத்தான் போன முறை நாம எல்லாம் வெண்பா எழுதினோம்  - http://elavasam.blogspot.com/2012/04/blog-post.html

சொக்கனும் நானும் சேர்ந்து விருத்தம் எழுதப் பழகிக்கிட்டு இருக்கோம். இந்தத் தளத்தில் போனா இதுவரை எழுதிய விருத்தங்களைப் பார்க்கலாம் - http://6seer.wordpress.com

இன்னிக்கு விருத்தம் வழியே சச்சினுக்கு வாழ்த்து சொல்லிடலாம்ன்னு எழுதிட்டோம்.
எண்ண முடியா ஓட்டங்கள்
...எடுத்தாய் நீயே வல்லவனே
பண்ண ஏதும் பாக்கியுண்டா
...பாரினில் வேறு சாதனையே
மண்ணில் இருந்து மாறாகால்
...மனத்தில் இருத்து வேண்டுமதே
அண்ணன் சொல்லைக் கேட்டதினால்
...அமைதி தானுன் வாழ்வதிலே

உலகம் முழுதும் ரசித்திடுமே
...உந்தன் பேட்டிங் தானதையே
பலநாள் அதையே பார்த்தாலும் 
...பழசே ஆகா கலையதுவே
சிலபேர் பலதும் சொல்வார்கள்
...சிந்தை தனிலே ஏற்றாதே
விளையா டிடுவாய் பலகாலம்
...விருந்தாய் ரசிப்போம் நாங்களுமே!

வரிகள் நூறு போதாது
...வார்த்தை வழியே சொல்லிடவே
அறிந்தோம் ஆட்டம் அதனழகை
...அற்பு தமாய்நீ ஆடிடவே 
சிறந்த மனிதன் நீதானே
...சிரித்தே இருக்கும் வரம்பெறுவாய்
பிறந்த நாளாம் இன்றைக்கு
...பிரியம் தருவோம் பரிசாக!

சொக்கன் எழுதியது 
பால்மணம் கமழ்கிற பாலகனாய்ப்
....பாரதம் பார்த்தது அப்பயலை,
‘நூல்தரம் உணர்ந்திட அட்டையினை
....நோக்குதல் போதுமா?’ என்றவனும்
வேல்கரம் ஏந்திய முருகனைப்போல்
....வெறியுடன் ஆடினன் தாண்டவமே,
ஆல்மரம் போலவே தன்விதையை
....ஆடிய களம்தொறும் பதித்துவிட்டான்!

சுருள்கிற முடியினில் சூட்சுமமோ?
....சுழல்கிற பந்துகள் சிதறடிப்பான்,
வெருட்டிடும் விரைவுடன் வீசிடினும்
....வேகமாய் பவுண்டரி அவன்குவிப்பான்,
கருத்தினைக் குவித்தெவர் முனைந்திடினும்
....கட்டிடக் கூடுமோ காற்றினைத்தான்?
வருத்திய பவுலரென் றெவருமில்லை,
....வாமனன் இவன்புகழ் குறையவில்லை!

இவன்பொழி ரன்மழை தினங்களிலே,
....இந்திய தேசமே திளைத்திருக்கும்,
உவப்புடன் கண்ணிமை கொட்டாமல்
....ஊரெலாம் அவன்திறம் பார்த்திருக்கும்,
நவமணி ஒருஉரு எடுத்ததுபோல்
....நாயகன் ஆட்டமும் ஜொலிப்பதனால்,
தவம்புரி வோர்பலர் டீவிமுன்பு,
....தாமதம் தான்பிற வேலையெல்லாம்!

சோர்வினில் கிடக்கிற மனத்துக்கும்,
....சுமைகளில் களைக்கிற உடலுக்கும்,
ஓர்மருந் தாகிடும் இவன்ஆட்டம்,
....உடனடி வைட்டமின், கொண்டாட்டம்!
சீர்நிறை குணங்களின் உறைவிடமாய்ச்
....செந்நெறி உணர்த்திடும் சீராளன்!
பார்புகழ் குறைவறக் கிடைத்ததுவே,
....பண்புடன் உழைப்பினைக் கலந்ததனால்!

செஞ்சுரி செஞ்சிரு தொடங்கிஇவன்
....செய்தவை எழுதிடத் தாள்போதா,
எஞ்சிய சாதனை ஒன்றிரண்டே,
....இமயமும் இவனது இணையாமோ?
விஞ்சிட ஒருவரும் இலைஎனினும்
....வெற்றியில் கருவமும் கொள்ளாதோன்,
கொஞ்சிடத் துடித்திடும் இந்நாடே,
....கோமகன் சச்சினின் புகழ்பாடி!

இதைப் பார்த்த பெனாத்தலால சும்மா இருக்க முடியுமா? 
அடித்துக் களைப்பான் என்றெதிரி
... ஆவல் கொண்டே இருக்கையிலே
வெடித்துக் களத்தில் அதகளமாய்
... வேரை அறுத்து ஓட்டத்தை
முடித்துக் கொடுத்து வந்திடுவான்
...முழுமை தந்தே தான்சிரிப்பான்
படித்து மாளா சாதனையே
... பலநாள் சுகமாய் வாழ்ந்திடுநீ!

Happy Birthday Sachin! May you live another 100 years!

Sunday, April 21, 2013

இத்தாம்ப பெர்ய மன்சன்றது....

ஞாயிற்றுக்கிழமை கார்த்தால. வீட்டுல வேலையா உள்ள இருக்காங்க. இவன் சும்மாத்தானே இருக்கான், எப்படி, சும்-மாத்-தா-னே இருக்கான் அப்படின்னு குழந்தையை இவன் இருக்கிற ரூமில் விட்டுட்டுப் போய் இருக்காங்க. இவன் போனில் பேசிக்கிட்டு இருக்கான். அன்னிக்கு என்ன ஆபீஸ் மேட்டராப் பேசப் போறான், சாயங்காலம் என்ன சினிமாப் போகலாம்ன்னு ப்ளான் பண்ண ஒரு போன். 

இவன் இப்படி போனில் பேசும் போது குழந்தை அழுவுது. இவன் இப்படித் திரும்பி பேசறான் அப்படித் திரும்பிப் பேசறான் ஆனா குழந்தை அழுதுக்கிட்டே இருக்கு. இவனுக்குப் போனையும் விட மனசில்லை. உடனே உள்ள பார்த்து, ஏ இவளே இந்த சனியன் கத்திக்கிட்டே இருக்கு கொஞ்சம் என்னான்னு பாருங்கறான். என்னாது, இந்த சனியன். இப்படித்தான் பொதுவா எல்லாருமே சொல்லறது. 

புலவர் கீரன் கானடாவுல பேசின ஒரு சொற்பொழிவோட ஒலிப்பதிவு கிடைச்சுது. தொடர்ந்து பல நாட்கள் ராமாயணம் பத்திப் பேசறார். கிஷ்கிந்தா காண்டம். அனுமன் ராமனைப் பார்க்கறான். அது பத்தி உணர்ச்சிகரமாப் பேசறார். அனுமன் மனத்தில் ஏற்பட்ட மரியாதை பத்திப்பேசும் பொழுது குரல் கம்முது. குரலை அப்படியே கீழ இறக்கி அது பத்திப் பேசறார். 

அப்போ ஒரு குழந்தை வீல்வீல்ன்னு கத்துது. அந்த குழந்தையோட அம்மா, குழந்தையை அடக்க முடியாம, அந்த மண்டபத்துக்கு வெளிய குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போகப் பார்க்கறாங்க. அதனால கூட்டத்துல ஒரு சின்ன சலசலப்பு. 

நார்மலா என்ன நடக்கும்? கூட இருக்கறவங்க எல்லாம் உஷ் உஷ்ம்பாங்க. பேசறவரு பேசறதை நிறுத்திட்டு மூஞ்சியில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அப்படியே பார்த்துக்கிட்டு இருப்பாரு. முன்ன சொன்ன மாதிரி சனியனேன்னு வாயால சொல்லலைன்னாலும் சொன்னா மாதிரியே இருக்கும். 

இவரு என்ன பண்ணறாரு.”குழந்தைன்னா அழத்தான் செய்யும் கத்தத்தான் செய்யும். அழுதாத்தான் குழந்தை கத்துனாத்தான் குழந்தை. அதுக்கு எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன்?

நீங்க எல்லாம் தொலைவுலேர்ந்து வரீங்க. வர ஒரு மணி நேரம் போக ஒரு மணி நேரம். நான் பாட்டுக்கு ஒன்றரை மணி நேரம் கேப் விடாமப் பேசிக்கிட்டு இருக்கேன். மொத்தமா மூணு நாலு மணி நேரம் ஆயிடுது. சினிமாப் போனாலே ஒரு மணி நேரம் ஆச்சுதுன்னா இண்டர்வல் விடறான். நாம் அதை எல்லாம் செய்யறது இல்லை. பாஆஆவம் குழந்தைங்க. எவ்வளவு நேரம்தான் சும்மா இருக்கும். 

அதுக்காக குழந்தையை எடுத்துக்கிட்டு வெளிய எல்லாம் போகாதீங்க. அது ஒரு கட்டை குரலில் அழுதா நான் ஒன்றரைக் கட்டை குரலில் பேசிட்டுப் போறேன். இங்க சொல்லறது ராமனோட கதை. அது குழந்தை காதுல விழுந்தா நல்லது. குழந்தை இங்கவே இருக்கட்டும். குழந்தைகளோட வந்திருக்கிற தாய்மார்கள் பெரியோர்கள் இது பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம். அப்படியே உக்காந்து கதையைக் கேளுங்க.” 

பெரிய மன்சன் பெரிய மன்சன்றாங்களே. இந்தோ இவருதான்யா பெரிய மன்சன்! 

(நடந்த இந்த நிகழ்வைப்  பத்தி புலவர் கீரன் அவர்களே பேசி இருந்தா எப்படிப் பேசி இருப்பாருன்னு அவரோட ஸ்டைலில் எழுதிப் பார்த்தேன். அவர் பேசிக் கேட்டவர்கள் அவர் குரலிலேயே படிச்சுக்குங்க!)

Saturday, April 13, 2013

ராம காதைக்குக் கொத்தனார் நோட்ஸ்

நம்ம சொக்கன் இருக்காரே சொக்கன், கொஞ்ச நாளா கம்பராமாயணத்தில் மூழ்கி இருக்காரு. பாட்காஸ்ட் என்ன, பதிவுகள் என்னன்னு புகுந்து விளையாடிக்கிட்டு இருக்கார். 

இதெல்லாம் போறாதுன்னு இன்னிக்கு நம்ம ஹரி அண்ணா தலைமையில் வாரம் 100 கம்பராமாயணப் பாடல்களைப் படிப்பதும் அதற்கு விளக்கம் சொல்வதும் என்று ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்து இருக்கிறார்.

இதை எல்லாம் வெளியூர்காரர்கள் தவற விடுகிறோமே எப்படிக் கலந்து கொள்வது எனப் பார்த்தால் பெங்களூர் வந்து சேர் என்கிறார். சரி கம்பன் தந்த ராமாயணம் கை வரவில்லை என்றால் என்ன கொத்தனாரே ராமாயணம் எழுதுவான் என களத்தில் இறங்கி விட்டேன்.

அறுசீர் விருத்த பா வகையில் சுருக்கமாக கதையின் முக்கிய இடங்களைச் சொல்ல ஒரு முயற்சி செய்தேன். படித்து கருத்தினைத் தெரிவித்தால் மகிழ்வேன்.

பக்தியோடு இக்காதையைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சம்பத்துகளும் வாய்க்கும், மோட்ச பலன் கிட்டும்! :)


முத்துப் போன்ற மூவருக்கு
...முன்னம் வந்தான் முதல்வனவன்
தத்தை போன்ற பெண்ணவளை
...தனுசை உடைத்துக் கைப்பிடித்தான்

சித்தி சொன்ன காரணத்தால்
...சிரித்தே சென்றான் காட்டுக்கு
தொத்திக் கொண்டான் தம்பியுமே
...தொண்டு செய்யத் துணையாக


பத்தில் பாதி ஐந்தாக
...பரமன் கண்டான் குகனைப்பின்
பத்தி முத்திப் பாட்டியவள்
...பழங்கள் கடித்துத் தந்தனளே

பத்து தலையன் ராவணனும்
...பற்று வைத்தான் பிறன்மனைமேல்
எத்தன் மாரீ சன்துணையால்
...எடுத்தே சென்றான் இலங்கைக்கு

பித்தம் பிடித்தப் பெருமானும்
...பிரிய அனுமன் தனைக்கண்டான்
சித்தம் மாறி வாலியினை
...சீறும் அம்பால் அவன்வென்றான்

பக்தன் அனுமன் இலங்கைக்கு
...பறந்து சென்று பார்த்தவுடன்
ரத்தம் கொதித்து அவ்விடத்தை
...ரணமும் செய்து வந்தானே

மொத்தக் குரங்குப் படைகொண்டு
...மோத ராமன் முடிவெடுத்தான்
சத்தக் கடல்மேல் கல்போட்டு
...சாதித் திடத்தென் திசைசென்றான்

வித்தை பலவும் செய்தாலும்
...வீணாய்ப் போனர் இலங்கையரும்
யுத்தம் தனிலே யுவராசர்
...யுதிரம் கொட்டி வீழ்ந்தனரே

செத்துத் தொலைந்தான் ராவணனும்
...சேர்ந்தாள் சீதை ராமனுடன்
அத்தி தாண்டி அவர்களெல்லாம்
...அயோத்தி சென்று அடைந்தனரே!

நோட்ஸ்! 

பாடலைக் காண்பித்த பொழுது நண்பர்கள் சிலர் அது என்ன சத்தக்கடல் என்று கேட்டார்கள். அலையோசை மிகுந்த கடலே சத்தக்கடல்.

சரி, அது என்ன அத்தி? அத்தி என்றால் கடல். பாற்கடலில் படுத்துறங்கும் திருமாலுக்கு அத்திசயனன் என்று ஒரு பெயர் உண்டு.