Tuesday, October 29, 2013

அவையத்து முந்தி இருப்ப...

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என் மகன் சொன்னான். “You know Dad, I wasn't comfortable".

வீட்டிற்கு அருகிலேயே உள்ள மால், அங்கே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஐமாக்ஸ் திரையரங்கம், முழு உடலையும் உள்ளே இழுத்துக்கொள்ளும் குஷன் நாற்காலிகள், பாப்கார்னா ஐஸியா என்று பார்த்துப்பார்த்து உபசரிக்கும் தேவதைகள் - இதில் எதுதான் அன்கம்ஃபர்டபிள் என்று எனக்குப் புரியவில்லை. கேட்டேன்.

“I cant see these types of movies with you dad" என்றான். இத்தனைக்கும் அனிமேட்டட் படம். அவன் வளர்ந்துவிட்டானாம். நிழலிலேயே வளர்ந்தவனுக்குத் தெரியுமா நிழலின் அருமை?

அவனுக்கு என்ன தெரியும்? அப்பாவுடன் படம் பார்ப்பதில் உள்ள அருமை அப்பாவுடன் சினிமா என்ற ஏக்கம் என் நெஞ்சை விட்டு அகலாத பெருஞ்சோகம்.

சின்ன வயதில் நான் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன்.எல்லாம் வைராவி அண்ணா திரையரங்கில். திரையரங்கு என்ற பெயருக்குச் சற்றும் சம்மந்தமில்லாமல் சுவரே இல்லாத திறந்த கொட்டகை, மாலை ஆன உடன் வீசத் தொடங்கும் மெல்லிய குளிர் கொண்ட காற்று, அதே போல குளிரத் தொடங்கி இருக்கும் மணல், ஆண்கள் பெண்கள் பகுதிகளுக்கிடையே ஆன மரத்தடுப்பு, பின்புறம் பெஞ்ச் மற்றும் சேர்கள், துப்பிய புகையிலையும் பிடித்த பீடியும் கலந்த ஒரு வாசம், முறுக்கு விற்கும் சிறுவர்கள், தீ என்று எழுதப்பட்ட துருப்பிடித்த சிவப்பு வாளிகளில் மண், அதைத் தாண்டி மூத்திர வாடை அடிக்கும் வேலியோரம் என்று டூரிங் கொட்டகைகளுக்கேயான அடையாளங்கள் அனைத்தும் அதற்கு உண்டு. மீன்கொடி நாட்டிய தேவா பாடல் கேட்டதும் உடல் சிலிர்க்கும்- படத்துக்குப் போயே ஆகவேண்டும் என்று நாடி நரம்பெல்லாம் புடைக்கும். அப்பாவிடம் நேராகப் பேச பயந்துகொண்டு மூர்த்தி மாமாவிடம் சொல்வேன்.

மூர்த்தி மாமா அப்பாவிடம் பேசும்போது ”அதானே பார்த்தேன்.சாயங்காலம் ஆறுமணியாச்சே. சனிக்கிழமை வேற.இன்னும் அலாரம் அடிக்கலையேன்னு..”என்ற நக்கலான பதில் கேட்கும். தொடர்ச்சியாக “நீங்களும் வாங்களேன் அத்திம்பேர்” என்பார் மாமா.

“உனக்குதான் எல்லாம் தெரியுமே.. நான் என்னிக்கு படம் பார்க்க வந்திருக்கேன்”

சினிமா போகும் அவசரத்தில் அப்பா ஏன் சினிமா வருவதில்லை என்ற கேள்வி எழவே எழாது. நம் சுயநலங்கள் மட்டுமே பூதாகாரமாக நின்ற தருணங்கள். என்னைப்பற்றி நானே வெட்கித்து நிற்கும் தருணங்கள் அவை.

இந்த சஸ்பென்ஸுக்கும் ஒருநாள் முடிவு வந்தது. கிளிக்கு இறக்கை முளைத்துவிட்டு, கட்டடித்து சினிமா போக ஆரம்பித்துவிட்ட நேரம் அது. ஒரு நாள் சினிமாவெல்லாம் பார்த்துவிட்டு வரும்போது இரவு 10மணி. வரும்வழியில்தான் நினைவுக்கு வந்தது, மூர்த்திமாமாவிடம் கூடச் சொல்லாமல் சென்றிருந்தது. அப்பா அம்மா மாமா எல்லாரும் வாசலிலேயே காத்திருந்தனர்.

“ஏண்டா.. எங்கேடா போயிட்டே சொல்லாம கொள்ளாம?” அம்மாவை அவ்வளவு கோபமாக நான் பார்த்ததே இல்லை.

“சினிமாவுக்கு” என் குரல் எனக்கே கேட்கவில்லை.

“சொல்லியிருந்தா நானே கூட்டிப்போயிருப்பேனேடா” என்றார் மூர்த்தி மாமா.

அப்பா கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. “ போய் சாப்பிடு. யாரும் திட்டாதீங்க. சினிமாக்குதானே போயிருக்கான்” என்றார் பொறுமையாக.

சூறாவளியை எதிர்பார்த்துக் காத்திருந்த எனக்கு அதிர்ச்சி. இவரோ ஒரு சினிமாவுக்கும் போனதில்லை - சினிமாவே பிடிக்காத ஆசாமி. சொல்லாமல் போனதற்கும் கோபமில்லை என்றால் ஆச்சரியமாக இருக்காதா? இத்தனைக்கும் கோபமே வராதவர் எல்லாம் இல்லை. ஒருமுறை காலாண்டுத் தேர்வு மார்க்குக்காக ரெண்டு தெரு துரத்தித் துரத்தி அடித்தவர்.

சாப்பிட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவரிடம்.. “அப்பா..ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?” என்றேன்.

“என்னடா? ஏன் இவனுக்குக் கோபமே வரலைன்னுதானே கேக்கப்போறே?” என்றார்.

கொஞ்சம் அமைதியாக இருந்தவர், “எனக்கும் சினிமா எல்லாம் பிடிக்காம இல்லைடா.. நிறையப்படம் பார்த்திருக்கேன். ஒரு படம் கூட விடாமப் பார்த்துக்கிட்டிருந்தவன்தான்”

“ஒரு நாள் படம் பார்க்கக் காசில்லை. அப்பாவோட வெத்தல செல்லத்தில் இருந்த பழைய நாலணாக் காசை எடுத்துக்கிட்டு ஓடிட்டேன்.”

”திரும்பி வந்தா பெல்டால அடிச்சுப் பின்னிட்டாரு.. அவரைச்சொல்லியும் குத்தமில்லை. அந்தக்காசு அவரோட அப்பா போனப்போ நெத்தியில் வெச்சு எடுத்த காசாம். ஞாபகமா வெச்சிருந்தாராம். அதுவும் கூட எனக்கு ரொம்பநாள் கழிச்சுதான் தெரிஞ்சுது.”

“அன்னிக்குப் போட்ட சண்டைல மும்முரத்துல, உன்னையும் ஒரு சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்.. அதுவும் என் காசுல.. அன்னிவரைக்கும் நானும் சினிமா பார்க்க மாட்டேன். இனிமேல் என் மேலே கைய வச்சே..”ன்னு கத்திட்டேன்”

அப்புறம் ஒரு நாலஞ்சு வருஷம் படிச்சு, வேலைக்குப்போய்..சம்பளம் கிடைச்சவுடனே முதல் வேலையா சினிமா தியேட்டருக்குத்தாண்டா போய் நின்னேன். நீளமான க்யூ. புதுப்படம் வேற. இந்தாளுக்குமா சேர்த்து ரெண்டு டிக்கட் வாங்கிட்டு - பழிக்குப்பழி வாங்கணுமில்ல - வீட்டுக்கு வந்தா..

“காலையில இருந்து ஒரே ஆட்டம்.. என் புள்ள சம்பாதிக்கறான், இன்னிவரைக்கும் நானே வாங்காத சம்பளம் முதல் முறையே வாங்கறான்னு ஊரெல்லாம் தண்டோரா போட்டுகிட்டிருந்தாராம். வீட்டுக்கு வந்தவர் நெஞ்சைப் பிடிச்சுகிட்டு கீழே விழுந்தவர்தான்.. எழுந்துக்கவே இல்லையாம்.”

அந்த தியேட்டருக்குப் போய் க்யூல ஒரு மணி நேரம் நிக்காம இருந்திருந்தா.. ஒருவேளை ஹாஸ்பிடலுக்குப் போய் காப்பாத்தி இருக்கலாம். ஏன்.. ஒரு வார்த்தையாச்சும் பேசியிருக்கலாம்.. ஆனா எதுவும் நடக்கலை.

அன்னிக்கு விட்டவந்தாண்டா இந்த சினிமா எழவை.” அப்பாவின் குரல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

அதற்குப்பிறகு நானும் பல சினிமா தியேட்டர்களைப்பார்த்துவிட்டேன் - ஆனாலும் அப்பாவின் நினைவு வராமல் ஒரு சினிமாகூடப் பார்க்க முடிந்ததில்லை.அவர் குஷனைப்பார்த்ததில்லை. ஏசியைப் பார்த்ததில்லை. நான் எதையும் அவர் நினைவில்லாமல் பார்த்ததில்லை.

மகனைப் பார்த்தேன். “உனக்கு அப்பாவோட பார்க்கிறது வசதியா இல்ல. எனக்கு அப்பா இல்லாமப் பார்க்கறது வசதியே இல்லை” என்றேன், கண்களை அனிச்சையாகத் துடைத்துக்கொண்டே.

Tuesday, October 08, 2013

வாஆஆஆன் மேகம் பூப்பூவாய் மாறும்.....!!

முதல் முறை விமானத்தில் பயணம் செய்யும் அனைவரையும் பிரமிக்கச் செய்வது பஞ்சுப் பொதிகள் போன்ற மேகங்களுக்கூடாகவும் அவற்றின் மேலும் பறப்பதுதான். அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்ளும் எனக்கு இந்தக் காட்சி மீண்டும் மீண்டும் பார்த்துப் பழகி, அலுத்து, ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்ப்பதில் ஆர்வமே இல்லாது ஆகிவிட்டது. முக்கால்வாசி நேரங்களில் வேறு ஒன்றும் தெரியாமல் வெறும் வெள்ளைப் பஞ்சால் நெய்த துணியின் மேல் இருப்பது போல இடைவெளி இல்லாத மேகங்களுக்கு மேலே பறந்து செல்லும் பொழுது எதைத்தான் பார்ப்பது? அதனால் பெரும்பாலும் நடைபாதையை ஒட்டி இருக்கும் இருக்கைகளில் ஒன்றினையே தெரிவு செய்து பயணிப்பது வழக்கம்.

ஆனால் நியூயார்க்கில் இருந்து டொராண்டோ செல்லும் பொழுது ஜன்னல் சீட்டையே தேர்ந்தெடுப்பேன். காரணம் - நயாக்ரா அருவியை மேலிருந்து பார்க்க முடியும். எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத தரிசனம் அது. இன்றும் வழக்கம் போல இடப்பக்க ஜன்னல் அருகே இருக்கும் இருக்கை ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்.  

புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கு!
வெளியே பார்த்துக் கொண்டு வரும் பொழுது இது வரை பார்க்காத காட்சி ஒன்றைக் கண்டேன். கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். இந்தப் பகுதி அதிகம் மேடு பள்ளங்கள் கொண்ட மலைப்பகுதி. பெரும்பாலும் மேகங்களால் மூடியே இருக்கும். பெரிதாகப் பார்க்க ஒன்றும் இருக்காது. ஆனால் இன்று மேகங்கள் கம்பளம் போல முழுவதும் மூடி இருக்கவில்லை. மலைமேடுகள் இடையே இருக்கும் பள்ளங்களில் மட்டும் ஒரு நதி ஓடுவதைப் போல மூடி இருந்தது. பச்சைப்பசேலென்ற மலைமுகடுகள், அவரின் உயரத்திற்குக் கீழே மேகமூட்டம் என்று வித்தியாசமான ஒரு காட்சி.

நதியே நதியே வெள்ளை நதியே நீயும் முகில்தானே...

வெண்மேகம் ஒரு நதியானதே...
ஒரு இடத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து இப்படியே இருந்தது ஆச்சரியமாகவே இருந்தது. இது எப்பொழுதுமே இப்படி இருந்து நான் தான் பார்க்காமல் இருந்தேனா அல்லது இன்றைய சீதேஷண நிலையால் இப்படித் தாழ்வான பகுதிகளில் மட்டும் மேகங்கள் சூழ்ந்திருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. மனிதர்களின் காலடித்தடமே பதிந்திராத உறைபனியாற்றைப் போலப் பரந்து விரிந்து கிடந்த மேகங்களைப் பார்க்கும் பொழுது எதோ ஒரு இனம்புரியாத உணர்ச்சி மேலிட்டது.

அப்பகுதியைத் தாண்டிய பின் தெளிவான கொஞ்சமும் மேகங்கள் இல்லாத வானிலை. அங்கு மேலிருந்து பார்க்கும் பொழுது ஓடுவதே தெரியாமல் தேங்கி நிற்பது போல் இருக்கும் பிரம்மாண்டமான நதி. ஒரு பள்ளத்தாக்கில் வானைத் தொடும்படி புகை போல உயரே எழும் நீர்த்திவலைகள் தெறிக்க விழும் அருவி - நயாக்ரா. எத்தனை முறை பார்த்தாலும், வானில் இருந்து, கரையில் இருந்து, படகில் அருகே சென்று என எப்படிப் பார்த்தாலும் எனக்கு நயாக்ரா அலுப்பதே இல்லை. இன்றும் அருமையான தரிசனம்.

விரையும் நதி, வீழும் அருவி, வானவில் பாலம்
ஆற்றைத் தாண்டினால் அடுத்த நாடு
மேகக்கூட்டங்களையும் அருவியையும் படம் பிடிக்கும் பொழுது முன்பு எங்கோ படித்த வேறு ஒரு விஷயத்தையும் செய்து பார்த்துவிடத் தோன்றியது. இன்று நான் பயணம் செய்த டர்போப்ராப் ரக விமானங்களில் இருக்கும் விசிறியை விடியோ படமெடுத்தால் அவை கழண்டு விழுவது போலவும் மீண்டும் மந்திரம் போட்டாற்போல் வந்து ஒட்டிக் கொள்வது போலவும் தெரியும் எனப் படித்திருக்கிறேன். அதையும் செய்து பார்த்தேன். எப்படித் தெரிகிறது என நீங்களும் பாருங்களேன்.


நியூயார்க்கிற்குப் பின் நான் அடிக்கடி வந்து போகும் பெருநகரம் டொராண்டோ. வேலை முடிந்த பின் பல வகைகளில் பொழுதுபோக்க ஏராளமான இடங்கள் உள்ள நகரம். பொதுவாக ஓரிரவேனும் தங்குவேன். இன்று காலை வந்து வேலையை முடித்துவிட்டு மாலையே திரும்ப வேண்டியக் கட்டாயம். ஆனாலும் வேலை முடித்த பின் கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் நண்பர்கள் @rasanai @donion இருவரையும் சந்திக்க முடிந்தது இன்றைய மகிழ்ச்சி. ஆனால் பேச்சு சூடு பிடிக்கும் பொழுது விமானத்தைப் பிடிக்க விடை பெற வேண்டியதானது வருத்தமே.

சிஎன் டவர், டொராண்டோ
நீண்ட இடைவெளிக்குப் பின் பயணத்தின் போதே பதிவினைத் தட்டச்சினேன். ஐபேடில் பாரா சொன்ன Plaintext என்ற செயலியைப் பயன்படுத்தினேன். நன்றாகவே இருக்கிறது. இது போன்ற அவசரடிகளுக்கு நன்றாகவே கைகொடுக்கும்.

மீண்டும் வருவேன்.

Tuesday, October 01, 2013

வெண்பா வழியாக வேங்கடவன் வந்தானே!

இன்று(ம்) சொக்கன் ஒரு வெண்பா எழுதினார்.

காளிங்கன் மீது களிநடனம் செய்ததுவும்
கேளிரைக் காக்கக் கிரியொன்றை ஏந்தியதும்
வாளியொன்றால் சீரிலங்கை வல்லவனை வென்றதுவும்
கேளிக்கை தானவனுக் கே

சும்மா அவரை வம்புக்கு இழுக்க

கண்ணனாய்ச் செய்த களிகள் இரண்டோடு
மன்னனாய்ச் செய்த மரணத்தை ஒன்றாக்கி
அண்ணாவே நீரும் அவியலாய்ச் செய்தீரே
பண்ணாதே இப்படி பார்த்து!

என்று நான் எழுதினேன்.  அவர் ரெண்டுமே திருமால் அவதாரம்தானேன்னு பதில் வெண்பா எழுதினார்.

இருவேடம் போட்டால் எனக்கென்ன ஆங்கே 
திருமாலும் ஒன்றே, தெளி

வெண்பா எழுதும் பொழுதெல்லாம் க்ரேசி மோகன் ஞாபகம் வந்துவிடுகிறதே. அதனால் சொக்கனுக்குப் பதில் எழுதும் பொழுது க்ரேசியின் படைப்பையே உதாரணமாகத் தந்து ஒரு வெண்பா எழுதினேன்.

அப்புசெய்த வேலைக்கு அப்பாவி ராஜாவும்
தப்பாக மாட்டியே தான்தவித்தான் - செப்புவேன்
வேடங்கள் தானவை வேறான பின்னாலே
பாடலில் பார்த்துப் பகு

சொக்கனும் இந்தப் பேச்சு நியாயம்தான்னு ராமனுக்கு ஒன்று, கண்ணனுக்கு ஒன்று என்று

வாளியொன்றால் சீரிலங்கை வல்லவனை வென்றவன்,
தூளியொன்றால் பெண்ணின் துயர்துடைத்து நின்றவன்,
ஆளியெனச் சோதரரை ஆக்கிமகிழ் வல்லவன்
தோளிரண்டை எண்ணித் தொழு

[வாளி = அம்பு, தூளி = தூசு (ராமன் பாததூளி அகலிகையை மீண்டும் பெண்ணாக்கியது), ஆளி = ஆள்பவன் (முறையே அயோத்திக்குப் பரதன், கிஷ்கிந்தைக்குச் சுக்ரீவன், இலங்கைக்கு விபீஷணன்)]

காளிங்கன் மீது களிநடனம் செய்ததுவும்
கேளிரைக் காக்கக் கிரியொன்றை ஏந்தியதும்
வாளின்றி போர்க்களத்தில் வாகைமலர் சூடியதும்
கேளிக்கை தானவனுக் கே

என்று ரெண்டு வெண்பா எழுதினார்.

இப்படி வெண்பாவில் விளையாடிக் கொண்டு இருந்த பொழுது இவர் ஒரு வெண்பாவில் ரெண்டு அவதாரம்தானே தொட்டார். நாம ஏன் பத்து அவதாரத்தையும் கொண்டு வரக்கூடாதுன்னு ஒரு எண்ணம் தோன்ற எழுதிப் பார்த்தேன்.
முதலில் பத்து அவதாரங்களையும் சொல்ல ஐந்து அடிகள் எடுத்துக் கொண்டேன்.  அது

கயலும் கமடம் கனலியும் ஆனான்
பயமற்ற சீயம் பலியும்தான் ஆனான்
முயன்றவன் ராமர்கள் மூவராய் ஆனான்
கயவனாம் கண்ணனே கல்கியும் ஆவான் 
அயனவன் தோற்றம் அறி!

[கயல் - மீன், கமடம் - ஆமை, கனலி - பன்றி, சீயம் - சிங்கம், பலி - மகாபலி (வாமனன்), ராமர் மூவர் - பரசுராமன், ஜானகிராமன், பலராமன்]

பின்பு அதை கொஞ்சம் செதுக்கி நாலு வரிக்குள்ள கொண்டு வந்துட்டேன். அந்த வெர்ஷன் இது.

கயலும் கமடம் கனலியும் சிங்கம்
பயலாம் பலியொடு பார்மூன்று ராமர்
கயவனாம் கண்ணனே கல்கியும் ஆவான்
அயனவன் தோற்றம் அறி

ரொம்பப் பெருமையா சொக்கனிடம் போய்ச் சொன்னால் நாலு வரி எதுக்கு? அன்னிக்கே காளமேகம் ரெண்டு வரியில் எழுதிட்டாரேன்னு ஒரு குட்டு வெச்சார்.

மெச்சு புகழ் வேங்கடவா வெண்பாவில் பாதியில்என்
இச்சையில்உன் சென்மம் எடுக்கவா, மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வாய்

இதுக்கு விளக்கம் வேணுமானா சொக்கன் எழுதின இந்தப் பதிவில் பார்த்துக்குங்க. காளமேகம், டெக்னிக்கலா ரெண்டு அடிக்குள்ள எழுதலை என்று சொல்லி கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கிட்டேன். ஹிஹி.

இப்படியாக இன்னிக்குத் திருமால் பெருமையை வெண்பாவா எழுதிப் பொழுது போச்சு. ஆரம்பிச்சு வெச்சதும் இல்லாம தொடர்ந்து எசப்பாட்டும் எதிர்பாட்டுமாய் அள்ளி விட்ட சொக்கருக்கு நன்றி!

(பதிவில் இருக்கும் படம் இணையத்தில் திருடப்பட்டது)

அபூர்வ சகோதரர்கள், அழகிய பெருமாள்ன்னு கலந்து கட்டி எழுதி இருக்கோமேன்னு க்ரேசி மோகனுக்கு பதிவின் சுட்டியை அனுப்பினேன். உடனே வந்த பதில் இது - தசாவதாரத் திருப்புகழ்!

"மீனமென வந்துமறை காத்தமுகம் ஒன்று
        மேருமலை தாங்கவரும் ஆமைமுகம் ஒன்று
 ஏனமென பூமிதனை ஏந்துமுகம் ஒன்று
         தூணதிர சீயமென தோன்றுமுகம் ஒன்று
தானமுற மாபலிமுன் ஓங்குமுகம் ஒன்று
         மூணுவித ராமனென மூண்டமுகம் ஒன்று
கானமுர ளீதரமு ராரிமுகம் ஒன்று
         ஞாலபரி பாலதச மானபெரு மாளே"

சந்தக் கவிதை என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் பாட்டு! இதுக்காக நான் எழுதின வெண்பா 

மந்தை வெளிராயர் மன்னுபுகழ் க்ரேசியவர்
தந்த கவியிதனைத் தான்படிப்பீர் மேன்மக்காள்
சந்த விளையாட்டுச் சாகரம் தானிவரே
அந்த கிரியார்க்(கு) அடுத்து!