Tuesday, October 08, 2013

வாஆஆஆன் மேகம் பூப்பூவாய் மாறும்.....!!

முதல் முறை விமானத்தில் பயணம் செய்யும் அனைவரையும் பிரமிக்கச் செய்வது பஞ்சுப் பொதிகள் போன்ற மேகங்களுக்கூடாகவும் அவற்றின் மேலும் பறப்பதுதான். அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்ளும் எனக்கு இந்தக் காட்சி மீண்டும் மீண்டும் பார்த்துப் பழகி, அலுத்து, ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்ப்பதில் ஆர்வமே இல்லாது ஆகிவிட்டது. முக்கால்வாசி நேரங்களில் வேறு ஒன்றும் தெரியாமல் வெறும் வெள்ளைப் பஞ்சால் நெய்த துணியின் மேல் இருப்பது போல இடைவெளி இல்லாத மேகங்களுக்கு மேலே பறந்து செல்லும் பொழுது எதைத்தான் பார்ப்பது? அதனால் பெரும்பாலும் நடைபாதையை ஒட்டி இருக்கும் இருக்கைகளில் ஒன்றினையே தெரிவு செய்து பயணிப்பது வழக்கம்.

ஆனால் நியூயார்க்கில் இருந்து டொராண்டோ செல்லும் பொழுது ஜன்னல் சீட்டையே தேர்ந்தெடுப்பேன். காரணம் - நயாக்ரா அருவியை மேலிருந்து பார்க்க முடியும். எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத தரிசனம் அது. இன்றும் வழக்கம் போல இடப்பக்க ஜன்னல் அருகே இருக்கும் இருக்கை ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்.  

புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கு!
வெளியே பார்த்துக் கொண்டு வரும் பொழுது இது வரை பார்க்காத காட்சி ஒன்றைக் கண்டேன். கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். இந்தப் பகுதி அதிகம் மேடு பள்ளங்கள் கொண்ட மலைப்பகுதி. பெரும்பாலும் மேகங்களால் மூடியே இருக்கும். பெரிதாகப் பார்க்க ஒன்றும் இருக்காது. ஆனால் இன்று மேகங்கள் கம்பளம் போல முழுவதும் மூடி இருக்கவில்லை. மலைமேடுகள் இடையே இருக்கும் பள்ளங்களில் மட்டும் ஒரு நதி ஓடுவதைப் போல மூடி இருந்தது. பச்சைப்பசேலென்ற மலைமுகடுகள், அவரின் உயரத்திற்குக் கீழே மேகமூட்டம் என்று வித்தியாசமான ஒரு காட்சி.

நதியே நதியே வெள்ளை நதியே நீயும் முகில்தானே...

வெண்மேகம் ஒரு நதியானதே...
ஒரு இடத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து இப்படியே இருந்தது ஆச்சரியமாகவே இருந்தது. இது எப்பொழுதுமே இப்படி இருந்து நான் தான் பார்க்காமல் இருந்தேனா அல்லது இன்றைய சீதேஷண நிலையால் இப்படித் தாழ்வான பகுதிகளில் மட்டும் மேகங்கள் சூழ்ந்திருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. மனிதர்களின் காலடித்தடமே பதிந்திராத உறைபனியாற்றைப் போலப் பரந்து விரிந்து கிடந்த மேகங்களைப் பார்க்கும் பொழுது எதோ ஒரு இனம்புரியாத உணர்ச்சி மேலிட்டது.

அப்பகுதியைத் தாண்டிய பின் தெளிவான கொஞ்சமும் மேகங்கள் இல்லாத வானிலை. அங்கு மேலிருந்து பார்க்கும் பொழுது ஓடுவதே தெரியாமல் தேங்கி நிற்பது போல் இருக்கும் பிரம்மாண்டமான நதி. ஒரு பள்ளத்தாக்கில் வானைத் தொடும்படி புகை போல உயரே எழும் நீர்த்திவலைகள் தெறிக்க விழும் அருவி - நயாக்ரா. எத்தனை முறை பார்த்தாலும், வானில் இருந்து, கரையில் இருந்து, படகில் அருகே சென்று என எப்படிப் பார்த்தாலும் எனக்கு நயாக்ரா அலுப்பதே இல்லை. இன்றும் அருமையான தரிசனம்.

விரையும் நதி, வீழும் அருவி, வானவில் பாலம்
ஆற்றைத் தாண்டினால் அடுத்த நாடு
மேகக்கூட்டங்களையும் அருவியையும் படம் பிடிக்கும் பொழுது முன்பு எங்கோ படித்த வேறு ஒரு விஷயத்தையும் செய்து பார்த்துவிடத் தோன்றியது. இன்று நான் பயணம் செய்த டர்போப்ராப் ரக விமானங்களில் இருக்கும் விசிறியை விடியோ படமெடுத்தால் அவை கழண்டு விழுவது போலவும் மீண்டும் மந்திரம் போட்டாற்போல் வந்து ஒட்டிக் கொள்வது போலவும் தெரியும் எனப் படித்திருக்கிறேன். அதையும் செய்து பார்த்தேன். எப்படித் தெரிகிறது என நீங்களும் பாருங்களேன்.


நியூயார்க்கிற்குப் பின் நான் அடிக்கடி வந்து போகும் பெருநகரம் டொராண்டோ. வேலை முடிந்த பின் பல வகைகளில் பொழுதுபோக்க ஏராளமான இடங்கள் உள்ள நகரம். பொதுவாக ஓரிரவேனும் தங்குவேன். இன்று காலை வந்து வேலையை முடித்துவிட்டு மாலையே திரும்ப வேண்டியக் கட்டாயம். ஆனாலும் வேலை முடித்த பின் கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் நண்பர்கள் @rasanai @donion இருவரையும் சந்திக்க முடிந்தது இன்றைய மகிழ்ச்சி. ஆனால் பேச்சு சூடு பிடிக்கும் பொழுது விமானத்தைப் பிடிக்க விடை பெற வேண்டியதானது வருத்தமே.

சிஎன் டவர், டொராண்டோ
நீண்ட இடைவெளிக்குப் பின் பயணத்தின் போதே பதிவினைத் தட்டச்சினேன். ஐபேடில் பாரா சொன்ன Plaintext என்ற செயலியைப் பயன்படுத்தினேன். நன்றாகவே இருக்கிறது. இது போன்ற அவசரடிகளுக்கு நன்றாகவே கைகொடுக்கும்.

மீண்டும் வருவேன்.

11 comments:

Nat Sriram said...

That turbo thing is super cool :)

இராஜராஜேஸ்வரி said...

நதியே நதியே வெள்ளை நதியே நீயும் முகில்தானே.

அருமையான காட்சிப்பதிவுகள்.. பாராட்டுக்கள்..!

writerpara said...

ப்ளைன் டெக்சுடுவை எனக்கு அறிமுகப்படுத்தியது @ThePayonஆவார். உமது நன்றியை அவருக்கு பார்வர்டு செய்கிறேன்.

writerpara said...

ப்ளைன் டெக்சுடுவை எனக்கு அறிமுகப்படுத்தியது @ThePayonஆவார். உமது நன்றியை அவருக்கு பார்வர்டு செய்கிறேன்.

துளசி கோபால் said...

நான் இன்னும் நயாக்ராவைப் பார்க்கலை என்பதை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

இனி அடுத்த பயணம் அங்கெதான். ரெடியா இருங்க:-))))

இலவசக்கொத்தனார் said...

Yes Natraj,

I have read about that before. But it was amazing to see that happen.

இலவசக்கொத்தனார் said...

இராஜைராஜேஸ்வரி

நன்றி.

இலவசக்கொத்தனார் said...

பாரா,

எனக்குச் சொன்ன ஐடிக்குதானே நான் நன்றி சொல்ல முடியும்! :)

இலவசக்கொத்தனார் said...

ரீச்சர்,

சீக்கிரம் ஓடியாங்க. நானே சாரதியா வரேன்.

துளசி கோபால் said...

// நானே சாரதியா வரேன்.//

ஆஹா.... 'பார்த்த' சாரதி:-))))

maithriim said...

Nice post :-)

amas32