Saturday, December 26, 2009

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள் - நவம்பர் 2009

வேலை ரொம்பவும் அதிகமாகி விட்டது. வேறு ஏதுவும் செய்ய முடியாத நிலமை. அனைவரும் மன்னிக்கவும்.

நவம்பர் மாதம் போட்ட போட்டியின் விடைகள் இவை. அடுத்த முறை முடிந்த பொழுது மற்றுமொரு புதிரோடு வருகிறேன்.

நன்றி வணக்கம்.

Thursday, November 05, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - நவம்பர் 2009

வழக்கம் போல்
 • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
 • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
 • விடைகளை அனுப்பும் பொழுது குறுக்கு நெடுக்கு எனப் பிரித்து குறுப்பிற்கான எண்களுடன் அனுப்பினால் சரி பார்க்க எளிதாக இருக்கும்.
 • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
 • நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.
 • இணையாசிரியர் அண்ணன் பெனாத்தலார் அவர்களுக்கு என் நன்றிகள்.
 • இந்த வார திண்ணை இதழிலும் வெளிவந்துள்ளது.

வழக்கம் போல் இல்லாமல்
 • வெறும் விடைகள் அனுப்பாமல், அது வந்த விதத்தையும் அனுப்பினால்தான் முழு மதிப்பெண்கள்!


இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.


1
2
3
4
5
6

7

8910


1112

1314


15


16
17குறுக்கு

5 ஆனந்த கானத்தின் ஆரம்பங்கள் கேட்டேன். பலே! (2)
6 ஜோக்கைக் கேட்ட பின் நரசிம்மராவாய் இராதே, முன்னாள் ஜனாதிபதியே! (6)
7 ஆணவமா? சிதைந்த செருப்புக்கா? (4)
8 அத்தை இருக்கையில் இந்த மெத்தையா இறவா வரம் பெற்றது? (3)
9 திரும்பவும் எண்ண கொடுங்கள் (3)
11 இங்கிதம் பெரும்பாலும் தரும் இன்பம் (3)
13 நூறாயிரம் கட்லட் சம்பாதிக்கப் பார் (4)
16 அம்மையப்பரிடம் அண்ணன் கேட்டது ஔவையாரிடம் தம்பி சொன்னது (3,3)
17 சந்திரகுலத்தில் உதித்த சூரிய வம்சம் (2)

நெடுக்கு

1 காமேஸ்வரன் தலையை வாசனை சூழ பொன்மலை கிடைத்தது (4)
2 சுவைக்காத என்றாயோ இல்லை, சுவையில்லாத என்பாயோ? (5)
3 உறுதி தரவாக் குடும்பமே வந்தது? (3)
4 நாயைப் போல கலாட்டா நடுவே வாடி (4)
10 இது இருந்தால் ”ஐயோ! எண் தலை மாறி விட்டதே!” என்பேனோ? (5)
12 உயிரும் மெய்யுமின்றி உத்தமி சேர்ந்த அரை அழகன் தலை நிமிர்ந்து நிற்பானா? (4)
14 எனக்குக் கிடைச்ச வரம் சாமரம் வீசுவதா? (4)
15 பானை சோற்றுக்கு ஒரு வார்த்தை?(3)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

ஸ்டார்ட் மியூஜிக்!

Saturday, October 31, 2009

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள் - அக்டோபர் 2009

போன மாதம் எளிது எளிது என எல்லாரும் சொன்னதால் இந்த முறை கொஞ்சம் கஷ்டமாக்கினேன். ஆட்கள் எல்லாம் அம்பேல் ஆகிட்டாங்களே!! அவ்வளவு கஷ்டமாவா இருக்கு? நல்ல வேளை! வி.ஆர். பாலகிருஷ்ணனும் லக்ஷ்மி சங்கரும் சரியான விடைகளைத் தந்தார்களோ, நான் தப்பிச்சேன்!

தலைவர் வாஞ்சியின் அறிவுரைப்படி இந்த முறை விடைகள் வந்த விதத்தை விளக்கப் போவது இல்லை. விடைகளைத் தந்து விடுகிறேன். வந்த விதத்தை நீங்கள் பின்னூட்டமாகச் சொல்லலாமே.


Friday, October 09, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - அக்டோபர் 2009

வழக்கம் போல்
 • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
 • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
 • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
 • நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.
 • இந்த வார திண்ணை இதழிலும் வெளிவந்துள்ளது.இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.


1
2
345
6

7
89
10
11

12
13
14

15
16


குறுக்கு

3 வானம்பாடியோ வீழ்த்திடும் வில்லோ (5)
6 தலை வகிடெடுத்து நகையோடு பிணைத்துக் கயிலாயம் பார்க்கலாம் (4)
7 நெஞ்சில் கம்பு கொண்டு அடித்த திங்கள்(4)
8 கபடமாக யானை கையா எனக் குழம்பியது (6)
13 இனாமா இடையில்லாப் பயன் கலந்து செய்யுள் தா (6)
14 சிறப்பான தடை தரும் துருவை (4)
15 உள்ளிருந்து வந்து வக்கணையாய் ஆரம்பிக்க (4)
16 யோசித்தால் தானைத்தலைவன் தலை குழப்பி இரு (5)

நெடுக்கு

1 தோகையில் மறைந்த முடியாத மனது படிப்பதைக் குறிக்கும் (5)
2 திக்கி தலைகீழாய் விழுந்த பிஞ்சை பொறுப்பில் எடுத்து நடத்து (5)
4 சரமாகக் கோர்த்தது சாறாக ஓடியது (4)
5 தலை மேல் சுமை ஏற்றி ஆடிடும் ராசி (4)
9 இறந்தவன் பெரும்பாலும் ஊர்க்காவலன் (3)
10 அத்தி கத்துவது ஆட்கள் கொப்பளிப்பது (5)
11 முடிவிலாப் பாசம் கொண்ட உலகர் பெரும்பாலும் ஆராதிப்பவர் (5)
12 முதலும் முடிவும் முனைந்து தொடங்கி தாக்குதல் நடக்குமிடம் (4)
13 மண்டையில் ஏறாதா என்று உணர் அம்மாவா திரும்பியது? (4)


இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

ஸ்டார்ட் மியூஜிக்!

Friday, October 02, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - செப்டெம்பர் 2009
விடைகள் வந்த விதத்தை விளக்கமாக பார்க்கலாம்

குறுக்கு

3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5)

அசராமல்
- சளைக்காமல் என்பது பொருள். முதல் என்றால் அசல் என்ற பொருளும் உண்டு. அசல் ராம என்ற ராம நாமத்தை முழுங்கினால் அசராமல் வரும்.


6 தாகம் தீர்த்திடும் சின்ன சரஸ்வதி (4)

சிறுவாணி
- கோவைப் பகுதி மக்களின் தாகம் தீர்த்திடும் சிறுவாணி. சின்ன சரஸ்வதி என்றால் சிறு வாணிதானே!

7 அடிக்கடி தம்பியை அழைக்க புறாவா வரும்? (4)
கடிதம்
- அடிக்கடி தம்பி என்ற சொற்றொடரின் உள்ளேயே இருக்கிறது. அழைக்கப் புறா என்பதின் மூலம் அதன் காலில் இருக்கும் கடிதம் என்பதைக் குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.


8 நாத்திகம் முடிய பரம்பொருள் தொடங்க ஆடையின்றி அலைவோம் (6)
திகம்பரம் - ஆடையில்லாத நிலை திகம்பரம் என்று வழங்கப்படும். நாத்திகம் முடியும் என்பதில் இருந்து திகம் என்பதும் பரம்பொருள் தொடங்க என்பதில் இருந்து பரம் என்பதும் சேர்ந்து விடையைத் தருகிறது.

13 திருவந்தாதி பாடிய இயற்கை விவசாயி (6)
நம்மாழ்வார்
- திருவந்தாதி என அழைக்கப்படும் திவ்வியப் பிரபந்தத்தை நமக்கு அளித்தது நம்மாழ்வார். இதே பெயரில் புகழ்பெற்றவர் இயற்கை விவசாயத்தை பெரிய முறையில் மக்களிடையே கொண்டு சேர்க்கும் நம்மாழ்வார்.


14 இருபாதி தங்கம் ஒன்றாகி ஜொலிக்கும் (4)
தகதக
- தங்கத்தில் பாதி தக. அது இரு முறை வந்தால் தகதக. இது ஜொலிப்பதைக் குறிக்கும் சொல்.


15 சுகமான முற்றத்தில் சுற்றிவந்த உறவுகள் (4)

சுற்றம்
- சுகமான முற்றம் என்பதில் சில எழுத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றைக் கலைத்து சரியான வரிசையில் போட்டால் வரும் விடை உறவுகளைக் குறிக்கும் சொல்லான சுற்றம்.

16 வலிப்பொழுதில் வாயரற்றும் தாயை ஈன்றவள் (5)

அம்மம்மா
- வலிக்கும் பொழுது அனைவரும் சொல்வது அம்மம்மா என்பது. அம்மாவை பெற்றவளையும் அம்மம்மா எனச் சொல்வோம்தானே!


நெடுக்கு


1 எடைக்குள் சிக்கிய மாற்றாந்தாய் சொன்னாளோ விரதமிரு என்று? (5)

பசித்திரு
- பரு என்றால் எடை என்று பொருள். அதனுள்ளே மாற்றாந்தாய் என்பதற்கு ஈடான சித்தி நுழைந்தால் உண்ணாமல் விரதம் இரு என்பதான பசித்திரு என்ற விடை வரும்.

2 ஆசையில் கிளம்பி ஏழுநாளும் பூஜை துவங்க மணக்கும் (5)

ஆவாரம்பூ
- மணக்கக்கூடிய மலர் ஆவரம்பூ. ஆசையில் கிளம்பி என்பது ஆ என்பதையு, ஏழுநாளும் என்பது வாரம் என்பதையும், பூ என்பது பூஜை துவங்க என்பதையும் குறிப்பாகத் தருகின்றன.

4 சதி கிளம்பி அங்கம் உயிரிழந்தால் தமிழ் வளருமா? (4)
சங்கம்
- தமிழ் வளர சங்கம் அமைப்பார்கள். சதி கிளம்பி என்பது ச, அங்கம் என்பதில் உள்ள உயிர் எழுத்தான அ போக மீதம் உள்ளது ங்கம். இவை சேர்ந்து சங்கம் என்ற விடையைத் தருகின்றன.


5 இந்திரனின் நாட்டில் தருமம் கலையுமா (4)
மருதம்
- மருத நாட்டின் தலைவன் இந்திரம். தருமம் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்கள் கலைய மருதம் என்ற சொல் கிடைக்கும்.


9 கொடி செழித்துயர தம்முடையதை தந்தானே வள்ளல் (3)
ரதம்
- முல்லைக் கொடி வளர தனது தேரை தந்தான் பாரி. செழித்துயர தம்முடைய என்ற சொல்லில் தேர் என்பதற்கு ஈடான ரதம் மறைந்துள்ளது.


10 பட்டை அடிக்காட்டா வீணாகும் முன்னந்தலை எனப் பாட்டியும் சொன்னாளே (2,3)
பாழ் நெற்றி - விபூதி பூசாத நெற்றியைப் பாழ் நெற்றி எனப் பெரியவர்கள் சொல்வார்கள். வீணாகும் என்றால் பாழ். முன்னந்தலை என்பது நெற்றி என விடைக்குக் குறிப்பு இருக்கிறது.

11 ஊமையர் முதலும் கடைசியுமாக கிட்டத்தட்ட வரம்பு மீறிப் பேசியது தீ போலப் பரவிடும் (2,3)
ஊர்வம்பு
- தீ போல பரவிடும் ஊரார் அடிக்கும் வம்பு. ஊமையர் என்பதில் முதலெழுத்தும் கடைசி எழுத்தும் ஊர் என்பதையும் கிட்டத்தட்ட வரம்பு என்பது வம்பு என்பதையும் தரும்.


12 நான் வாசிச்ச கடம் உருண்டா போச்சு? (4)
சகடம்
- சகடம் என்றால் சக்கரம். உருள்வது சகடம். வாசிச்ச கடம் என்பதில் சகடம் ஒளிந்து கொண்டு இருக்கிறது.


13 பெரிய ஊரில் நல்லது ஆரம்பிக்கக் கை வரும் (4)
நகரம் - பெரிய ஊர். நல்லது ஆரம்பிக்க என்றால் ந, கை என்றால் கரம். இரண்டும் சேர்ந்தால் நகரம்.

புதிரை முழுமையாக விடுவித்த அனைவருக்கும் வாழ்த்துகள். முயற்சி செய்த அனைவருக்கும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த புதிருடன் சந்திக்கலாம்.

திண்ணை இதழில் இந்த விடைகள் வெளிவந்துள்ள பக்கத்தின் சுட்டி இது.

Friday, September 25, 2009

உலை!!

செப்டம்பர் 28, 2009 தேதியிட்ட குங்குமம் இதழில் எனது கதை வெளியாகி இருக்கிறது. முதன் முதலாக அச்சில் வந்திருக்கும் கதை என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. வெளியிட்டதற்கும், அதனை இங்கு போட அனுமதி தந்ததற்கும் அவ்விதழுக்கு நன்றி.

மறக்காம நல்லா இருக்குன்னு பின்னூட்டம் போடுங்கப்பூ!! :)

Ulai

Friday, September 04, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - செப்டெம்பர் 2009

வழக்கம் போல்
 • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
 • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
 • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
 • நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.
 • இந்த வார திண்ணை இதழிலும் இந்தப் புதிர் வெளிவந்துள்ளது.

புதிரின் இணையாசிரியர் பெனாத்தலாருக்கு என் வந்தனங்கள்.

இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.

1
2
345
6

7
89
10
11

12
13
14

15
16


குறுக்கு

3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5)
6 தாகம் தீர்த்திடும் சின்ன சரஸ்வதி (4)
7 அடிக்கடி தம்பியை அழைக்க புறாவா வரும்? (4)
8 நாத்திகம் முடிய பரம்பொருள் தொடங்க ஆடையின்றி அலைவோம் (6)
13 திருவந்தாதி பாடிய இயற்கை விவசாயி (6)
14 இருபாதி தங்கம் ஒன்றாகி ஜொலிக்கும் (4)
15 சுகமான முற்றத்தில் சுற்றிவந்த உறவுகள் (4)
16 வலிப்பொழுதில் வாயரற்றும் தாயை ஈன்றவள் (5)

நெடுக்கு

1 எடைக்குள் சிக்கிய மாற்றாந்தாய் சொன்னாளோ விரதமிரு என்று? (5)
2 ஆசையில் கிளம்பி ஏழுநாளும் பூஜை துவங்க மணக்கும் (5)
4 சதி கிளம்பி அங்கம் உயிரிழந்தால் தமிழ் வளருமா? (4)
5 இந்திரனின் நாட்டில் தருமம் கலையுமா (4)
9 கொடி செழித்துயர தம்முடையதை தந்தானே வள்ளல் (3)
10 பட்டை அடிக்காட்டா வீணாகும் முன்னந்தலை எனப் பாட்டியும் சொன்னாளே (2,3)
11 ஊமையர் முதலும் கடைசியுமாக கிட்டத்தட்ட வரம்பு மீறிப் பேசியது தீ போலப் பரவிடும் (2,3)
12 நான் வாசிச்ச கடம் உருண்டா போச்சு? (4)
13 பெரிய ஊரில் நல்லது ஆரம்பிக்கக் கை வரும் (4)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

Friday, August 28, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - ஆகஸ்ட் 2009

இந்த மாத புதிரின் விடைகள்
விடைகள் வந்த விதத்தை விளக்கமாகப் பார்த்தோமானால்

குறுக்கு

3 முடியாத சலாம் போட வா என சுற்றி சுற்றி வந்த கேள்வியா (3)
சவாலா - கேள்வியா என்பதற்கு மற்றொரு சொல் சவாலா. முடியாத சலாம் என்பது சலா. அது வா என்னும் எழுத்தைச் சுற்றி வருவதனால் சவாலா.

5 மாலையின் பின்னே ராசி இடை மாற வரும் பொறுப்புணர்வு (5)
தார்மீகம் - பொறுப்புணர்வு என பொருள் கொண்ட சொல். தார் என்றால் மாலை என்ற பொருள் உண்டு. ராசிகள் பன்னிரெண்டில் ஒன்று மீனம். அதன் இடைமாறி மீகம் என வர தார்மீகம் என்ற சொல் கிடைக்கும்.

6 பாதி திப்பிலி தடுமாறியதைச் சொல்லும் எழுத்து (2)
லிபி - லிபி என்றால் எழுத்து. திப்பிலி என்ற சொல்லில் பாதி பிலி. தடுமாற என்பது அந்த எழுத்துகள் இடம் மாறுவதைக் குறிக்கிறது.

7 பல் மருத்துவரோடு பலரும் தேடுவது (3)
சொத்தை - பல் மருத்துவர் பற்களில் சொத்தை இருக்கிறதா எனப் பார்ப்பார். வாழ்வில் பலரும் சொத்தை தேடித்தானே செய்கிறார்கள்.

8 முடிவில்லா கிஸ்தியை தீயிலிட்டு மகிழ் (5)
சுகப்படு - மகிழ் என்ற பொருள் தரும் சொல். தீயில் என்பது சுடு எனக் குறிக்கிறது. கப்பம் என்றால் கிஸ்தி. அது முடியாமல் போனதால் கப்ப. இந்த சொல்லை தீயில் இட்டு அதாவது சுடு என்பதில் இட்டால் சுகப்படு என்றாகிறது.

11 வேஷம் போட பத்துமாம் என்றதில் குழப்பம் (5)
பம்மாத்து - வேஷம் போடுவதையே பம்மாத்து என்பர். இது பத்துமாம் என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் குழப்பினால் வருவது.

12 இறந்தவர் சடங்கு நடக்க பெரும்பாலும் ஒலிக்க வேண்டியது (3)
சங்கு - இறந்தவருக்கான சடங்குகள் செய்யப்படும் பொழுது ஒலிப்பது சங்கு. சடங்கு என்ற சொல்லில் உள்ள பெரும்பான்மையான எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் சங்கு என வரும்.

14 குப்பி தா என அப்பாவைக் கேட்கலாமோ (2)
பிதா - அப்பாவை குறிக்கும் இந்த சொல் குறிப்பின் உள்ளேயே ஒளிந்துள்ளது.

16 முக்கால் கலயம் கலையும் முன் நடராஜர் காலில் விழுந்தவன் (5)
முயலகன் - நடராஜர் சிலைகளின் அவரின் காலின் கீழே இருக்கும் அசுரனின் பெயர் முயலகன். கலயம் என்ற சொல்லின் முக்கால்வாசி எழுத்துகள் கலய. இவற்றோடு முன் என்ற இரு எழுத்துகள் சேர்ந்து கலைந்து வந்தால் முயலகன் என்ற விடை கிட்டும்.

17 ஆலின் காலில் அரைகுறையாய் விழுந்து ஆவதென்ன (3)
விழுது - ஆல் என்றால் ஆல மரம். ஆல மரத்தின் காலாக விழுதுகளைக் கருதலாம். விழுந்து என்ற சொல்லை அரைகுறையாக, அதாவது அச்சொல்லின் எழுத்துக்களில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டால் விழுது என்ற விடை கிடைக்கும்.

நெடுக்கு

1 பர்தாவைக் கலைத்து மொத்தம் தலையிழக்கத் தரும் தின்பண்டம் (6)
பதார்த்தம் - தின்பண்டம் என்பது பொருள். பர்தா என்ற சொல்லின் எழுத்துக்களை இடம் மாற்றி மொத்தம் என்ற சொல்லின் முதல் எழுத்தை மட்டும் விட்டு (தலை இழந்து) மற்ற எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் பதார்த்தம் என்ற விடை வரும்.

2 ஆமைபோல் வீட்டை அழிப்பவன் உகாண்டா தலைவனா? (3)
அமீனா - உகாண்டாவின் தலைவன் இடி அமீன். தலைவனா எனக் கேள்வியாக மாற்றினால் அமீனா என்று விடையையும் கேள்வியாகத் தர வேண்டும். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது பழமொழி. ஆக ஆமை போல் அழிப்பவன் அமீனா.

3 சிவனைக் கூப்பிட்டால் பெரும்பாலும் சுகம் என சேர்ந்திடு (5)
சம்போகம் - சிவனை கூப்பிடுவதில் ஒரு விதம் சம்போ மகாதேவா என்பது. சம்போ என்பதை எடுத்துக் கொண்டு அதன் பின் சுகம் என்பதில் இருந்து கம் என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் சம்போகம் என்றாகும். சேர்ந்திருப்பது சம்போகம்.

4 லலிதா கொடு எனக் கேட்காமல் நீட்டி முழக்கிப் பாடியது நான் தூங்கவா? (2)
லாலி - லலிதா என்பதில் கொடு என கேட்காமல், அதாவது தா என்பது இல்லாமல் ஆனால் லலி. அதை நீட்டி முழக்கினால் லாலி. தூங்கப் பாடுவது லாலி.

9 சின்னஞ்சிறு செடியா இல்லை துள்ளி வரும் குட்டியா (6)
பசுங்கன்று - பலரையும் படுத்திய குறிப்பு இது. பசுவின் கன்று பசுங்கன்று. பசுமையான செடியும் பசுங்கன்று. இந்த சிலேடையைப் பயன்படுத்தி வந்த குறிப்பு.

10 இளமை கதவை சாத்த முதுமை கொண்டு வரும் ரசம் (5)
சாத்தமுது - ஐயங்கார் வீடுகளில் ரசத்தினை சாத்தமுது என்பர். இந்த விடை குறிப்பின் உள்ளேயே ஒளிந்திருக்கிறது.

13 வாராவதி உடைந்ததால் உறுதி ஆனதா (3)
பலம் - வாராவதி என்றால் பாலம். அது உடைந்தால் பலம் என்றாகும். பலம் என்றால் உறுதி.

15 மேதாவி குதித்தா விழுந்தான் (2)
தாவி - குதித்து விழுவதை தாவி என்கலாம். குறிப்பின் உள்ளே இரு முறை தாவி என்ற சொல் ஒளிந்து கொண்டிருக்கிறது. குறிப்பை சற்று மாற்றி மீண்டும் மீண்டும் மேதாவி குதித்தா விழுந்தான் எனக் கேட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

புதிரை முழுமையாக விடுவித்த அனைவருக்கும் வாழ்த்துகள். முயற்சி செய்த அனைவருக்கும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த புதிருடன் சந்திக்கலாம். விடைகளை இந்த வார திண்ணை இதழில் பார்க்க இங்கு சொடுக்கவும்.

Wednesday, August 05, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - ஆகஸ்ட் 2009

தொடர்ந்து புதிர்கள் போட்டு வந்ததில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. பெரிய இடைவெளியாகவே விழுந்து விட்டது. இனி இது போல் நிகழாதிருக்க பதிவர்களின் குலதெய்வமாய் விளங்கும் மகரநெடுங்குழைக்காதன் அருள் புரிவானாக.

இந்த மாதக் குறுக்கெழுத்துப் புதிர் இந்தப் பதிவில் மட்டுமல்லாது திண்ணை இதழிலும் வெளி வந்திருக்கிறது. என் முயற்சிகளை கண்டு, அதனை இன்னும் பெரிய வட்டத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கும் திண்ணை நிர்வாகத்தினருக்கு என் நன்றிகள்.

வழக்கம் போல்
 • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
 • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
 • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
வழக்கம் போல் அல்லாது இந்த முறை மதிப்பெண்களைத் தொகுத்துப் போட நேரம் இல்லாமல் இருப்பதால் அதனைச் செய்யப் போவதில்லை. மன்னிக்கவும். இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.
1
2
34

5
6


7
89


10


11
12
13

1415
16

17குறுக்கு

3 முடியாத சலாம் போட வா என சுற்றி சுற்றி வந்த கேள்வியா (3)
5 மாலையின் பின்னே ராசி இடை மாற வரும் பொறுப்புணர்வு (5)
6 பாதி திப்பிலி தடுமாறியதைச் சொல்லும் எழுத்து (2)
7 பல் மருத்துவரோடு பலரும் தேடுவது (3)
8 முடிவில்லா கிஸ்தியை தீயிலிட்டு மகிழ் (5)
11 வேஷம் போட பத்துமாம் என்றதில் குழப்பம் (5)
12 இறந்தவர் சடங்கு நடக்க பெரும்பாலும் ஒலிக்க வேண்டியது (3)
14 குப்பி தா என அப்பாவைக் கேட்கலாமோ (2)
16 முக்கால் கலயம் கலையும் முன் நடராஜர் காலில் விழுந்தவன் (5)
17 ஆலின் காலில் அரைகுறையாய் விழுந்து ஆவதென்ன (3)

நெடுக்கு
1 பர்தாவைக் கலைத்து மொத்தம் தலையிழக்கத் தரும் தின்பண்டம் (6)
2 ஆமைபோல் வீட்டை அழிப்பவன் உகாண்டா தலைவனா? (3)
3 சிவனைக் கூப்பிட்டால் பெரும்பாலும் சுகம் என சேர்ந்திடு (5)
4 லலிதா கொடு எனக் கேட்காமல் நீட்டி முழக்கிப் பாடியது நான் தூங்கவா? (2)
9 சின்னஞ்சிறு செடியா இல்லை துள்ளி வரும் குட்டியா (6)
10 இளமை கதவை சாத்த முதுமை கொண்டு வரும் ரசம் (5)
13 வாராவதி உடைந்த்தால் உறுதி ஆனாதா (3)
15 மேதாவி குதித்தா விழுந்தான் (2)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

Tuesday, August 04, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - மார்ச் 2009

புதிர் ஆர்வலர்கள் அனைவரும் மன்னிக்கவும். எதிர்பாராத காரணங்களினால் புதிர் போடுவது சற்றே நின்று போய் விட்டது. இனி தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன். இப்பொழுது கடைசியாகப் போட்ட மார்ச் மாத புதிரின் விடைகள்.


இந்த முறை ஒவ்வொரு குறிப்புக்கும் விளக்கம் தரப் போவதில்லை. யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும். விளக்கம் தருகின்றேன்.

இந்தப் புதிரில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள். நடுவில் சிலரது மதிப்பெண்களை அதற்கான பக்கத்தில் சேர்க்காமல் விட்டேன். அதற்கு மன்னிக்கவும். அனைத்து விடைகளையும் சரியாக விடுவித்தவர்களுக்கு வாழ்த்துகள்.

விரைவில் அடுத்த புதிருடன் சந்திக்கலாம்.

Tuesday, March 17, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - மார்ச் 2009

போன முறை எல்லாரும் போட்டுத் தாக்கிய பின் இந்த முறை புதிர் போடவே பயமாக இருக்கிறது. சென்ற முறையை விடக் கொஞ்சமேனும் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

வாத்தியார் வாஞ்சி, எங்கள் கூகிள் குழுமத்தில் சொல்லிக் கொடுத்ததன்படி இனி இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்பதற்குப் பதிலாக முறையே குறுக்கு, நெடுக்கு என்ற பதங்களைப் பாவிக்கலாம் என இருக்கிறேன்.

வழக்கம் போல்
 • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
 • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
 • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
 • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
 • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
 • இந்த புதிரமைக்க பேருதவியாக இருந்த பெனாத்தலாருக்கு என் வந்தனங்கள்.
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.

1
2
345
6

7
89
10
11

12
13
14

15
16


குறுக்கு

3 புத்திரன் தலைமாறியதால் பிள்ளையார் ஆனானே! (5)
6 இந்தப் பண் மதத்தில் ஒரு பாதி (4)
7 யோசித்து ஆரம்பிக்க வேண்டிய இந்த தொழிலில் கண்ணாயிரு (4)
8 உடன்பிறந்தவள் வீசிய வலையில் பாதி பெற்ற பொன் உருவம் (6)
13 சமமில்லா இந்தக் சரணாகதிக்குக் காசும் வேண்டும் (6)
14 உலகத்தில் தலை இழந்த முதல் மகள் (4)
15 கலவரமும் கலகமும் ஆரம்பித்தால் சிரிப்பா? (4)
16 தேர் கொண்ட பூவிற்குமா குலப்பாசம்? (2,3)

நெடுக்கு

1 இசையின் பிறப்பிடத்தை இரவில் மறை (2,3)
2
உலகெங்கும் பரவி தங்கள் முறைகளை எண்ணிப் பார்த்தனர் (5)
4 இந்த ஊர் பேர் தெரியுமெனக் கருதக் கலை ஞானம் வேண்டும் (4)
5
அவன் மம்தாவைக் கண்டான், தீராப்பகை கொண்டான் (4)
9 சிலம்புச் செல்வரின் அடியும் முடியும் அறிந்த கொஞ்சம் பேர் (3)
10 பணமும் உறுதியும் கலந்து வந்த நல்ல நேரம் (5)
11 தாமிரத்தால் செய்த கப்பலில் ஒரு பகுதி சண்டை நடந்த இடம் (5)
12 வசந்தியின் இடை மாறியதாய் வெட்டிப் பேச்சு (4)
13 அவிக்க ஆரம்பித்து சமையலில் முடிந்த கலப்பு (4)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

Tuesday, March 10, 2009

கட்டிங் கபாலியால் கவுந்த வங்கிகள்!

இடம்: ராயபுரம் டாஸ்மாக் பார்

மன்னாரும் கபாலியும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

கபாலி: தலைவா, மினிம்மா க்ளீன் பண்ணற ஆபீசில் என்னமோ பேசிக்கினு இருந்தாங்களாம். பெரிய பெரிய பேங்கு எல்லாம் அப்பீட் ஆவுதாமே. இன்னா மேட்டர் தல?

மன்னார்: சரியான மேட்டரைத்தான் புடிச்சு இட்டாந்துருக்க. நமக்கு பிரியற மாரி சொல்லணுமுன்னா, கொஞ்சம் வேற மாரி சொல்றேன் கேட்டுக்க.

தேர்தல் வரசொல்லதான் நம்ம கைல காசு பொரளும். ஆனா அதுவரை நம்ம வாயும் வயிறும் சும்மா இருக்குமா? இருக்காது. கட்டிங் கேக்காது? அப்போ நீ இன்னா செய்வே? நேரா நம்ம டாஸ்மேக் கோவாலாண்ட வந்து மாமே கொஞ்சம் கவ்னின்னுவே. செய்வதானே? உன்னிய மாரி எத்தினி பேரு அவனாண்ட வருவானுங்க. அவனும் சரின்னு சொல்லி ரெகுலர் பார்ட்டிங்க எல்லாம் அக்கவுண்ட் வெச்சு கட்டிங் அடிக்கலான்னு சொல்றான்.

உடனே நீ கோயிந்து பீட்டருன்னு உன் தோஸ்த் அல்லாரையும் கூட்டு சேத்துக்கினு கோவாலு கடையே கதின்னு கெடப்பதானே. கோவாலுக்கு பிஸ்னஸ் சும்மா பிச்சிக்கினு போவும். இதான் சாக்குன்னு அவனும் உங்களை மாரி கடனுக்கு குடிக்கிறவங்களுக்கு நைசா ரேட்டை வேற ஏத்திருவான்.

இந்த கடைக்கு எதுத்தா மாரி இருக்கிற பேங்குகாரன் இதைப் பாத்து, கோவாலு கோவாலு, உனக்கு சரக்கெடுக்க காசு தேவைப்படுது. இந்த மாதிரி கடனில் வர வேண்டிய காசை எல்லாம் வெச்சு என்னாண்ட லோன் வாங்கிக்கன்னு சொல்லறான். கோவாலுவும் கொஞ்சம் யோசிச்சு சரி ரொட்டேசனுக்கு காசு தேவப்படுதுன்னு நினைச்சு இவனாண்ட ஒரு லோன் எடுக்கறான்.

இப்போ இந்த பேங்கோட பெரிய ஆபீஸ்ல இருக்கிறவன் ஒருத்தன், நம்ம பேங்கு இருக்கிற காசை எல்லாம் இப்படிக் கடனா குடுத்தா எப்படி சரிப்படும்ன்னு நினைச்சு இந்த கடன் மூலமா வர வேண்டிய காசை எல்லாம் அடமானமா வெச்சு கடன்பத்திரம் தயாரிச்சு அதை பங்குச் சந்தையில் வித்துடறான். அங்க இந்த விவரமெல்லாம் தெரியாமா சொம்மா வாங்கி வாங்கி வித்து இந்த மாதிரி பத்திரங்க ரேட்டை எல்லாம் கன்னாப்பின்னான்னு ஏத்தி விடறாங்க. என்ன விலைக்கு வாங்கினாலும் அதுக்கும் மேல ரேட் ஏறாசொல்லோ அல்லாரும் ஹேப்பியா இருக்காங்க.

இப்டி அல்லாரும் சந்தோசமா இருக்கங்காட்டி, இந்த பேங்க்ல வேலை பாக்கிற ஒருத்தன் கோவாலாண்ட போயி கோவாலு கோவாலு கடன் ரொம்ப ஏறிப் போச்சே, கொஞ்சம் அசலைக் கட்டக்கூடாதான்னு கேட்ருதான். கோவாலு உன்னாண்ட வந்து கபாலி கொஞ்சம் காசு குடுறான்னு கேட்டா நீ இன்னா சொல்லுவே? அட என்னாண்ட இருந்தா தர மாட்டேனா பிரதர். கொஞ்சம் வெயிட் பண்ணு ரெண்டு மாசந்தள்ளி தேர்தல் வருது. மொத்த அக்கவுண்டையும் செட்டில் பண்றேம்ப. கோவாலு பேங்கு ஆள் கிட்ட போயி இப்போ என் கிட்ட காசு இல்லைன்னு சொல்லுவான். இந்த பேங்குகாரன் புத்தி எப்டி வேலை செய்யுமுன்னா உன்னாண்ட காசு இருக்கசொல்லோ கடனை வாங்கிக்கோன்னு கெஞ்சுவான். ஆனா உனக்கு எப்போ முடையாக்கீதோ அப்போ வந்து கடன கட்டுன்னு கயுத்து மேல கை வெப்பான். அந்தா மாரி கோவாலு காசு இல்லைன்னு சொன்னதுதான், உடனே கேசை போட்டு அத்தைப் போட்டு இத்தைப் போட்டு கோவாலை ஒரு வயி பண்ணிடுவான். கோவாலு ஒரு ஸ்டேஜ்ல போடாங்கோன்னு சொல்லி மஞ்சக் கடுதாசி குடுத்துட்டு கடையை மூடிக்கினு போயிடுவான்.

இப்போ கோவாலுக்கு நடந்ததுதான் அவனுக்கு கடன் குடுத்த பேங்குக்கும் நடக்கும். எப்போ கோவாலு மஞ்சக்கடுதாசி குடுத்தானோ, அப்போவே ஷேர்மார்க்கெட்டுக்கு நியூஸ் போயிரும். இந்தா மாரி இந்த பேங்கு குடுத்த கடன் வராது. அதனால அந்த பேங்கு பத்திரத்தை எல்லாம் வாங்காதீங்கோன்னு சொல்லிருவானுங்க. சக்கைப் போடு போட்டுக்கினு இருந்த பத்திரம் எல்லாம் குப்பையாயிரும். இந்த பேங்கு பத்திரம் எல்லாம் குப்பையாப் போச்சுன்னு நியூஸ் வந்தா உடனே, அதுல டெபாசிட் போட்டவனெல்லாம் உடனே வெளிய எடுக்கப் பாப்பான். ஆனா உடனடியா கேஷ் இருக்குமா? இருக்காது. ஆக அங்கேயும் ஆப்பு. உடனே அரசாங்கம் கைல கால்ல வியுந்து காசு வாங்கி இவங்களை செட்டில் பண்ணுவானுங்க. அரசாங்கமும் வரிப்பணத்தை எல்லாம் வாரி வயங்கி இவனுங்களைக் காப்பாத்தும். ஆனா பத்திரத்தை கடைசியா வாங்குன பரதேசிக்கு ஆப்புதான்.

இதெல்லாம் ஒரு சைடில் நடக்கும் போது, இன்னொரு பக்கம் கோவாலுக்கு கடனுக்கு சரக்கு குடுத்த கம்பெனிக்கும் இப்போ காசு வராதா? அவனுங்க எல்லாம் அப்பீட் ஆவானுங்க. 100 வருசமா இருக்கிற பிராந்தி கம்பெனி படுத்துக்கும். எதிர்கட்சிக்காரன் பீர் பேக்டரியை ஆளுங்கட்சிக்காரன் கம்பெனி வாங்கும். இந்த கம்பெனிக்காரன் கண்ட்ரோலில்கீற மத்த கம்பெனிங்களும் அடி வாங்கும். அவனுங்க செலவைக் கட்டுப்படுத்த ஆளுங்களை வீட்டுக்கு அனுப்புவானுங்க. இந்த வேலை போனவனுங்க வாங்குற கடைங்க, கைவண்டிங்க அல்லாருக்கும் வியாபாரம் படுத்துக்கும். இப்படி மொத்த ஊருக்குமே ஆப்புதான்.

இதுதாண்டா நடக்குதுன்னு சொல்லிக்கிட்டு கடனுக்குக் குடுத்த கோவாலு கட்டிங்கைத் திருப்பி கேட்குமுன் வாயில் கவுத்துக் கொண்டு மப்பானான் மன்னாரு.

டிஸ்கி 1:
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்பதால் ஒரு கபாலி, ஒரு கோவாலு, ஒரு வங்கி, ஒரு பத்திரம் எனச் சொல்லி இருக்கிறேன். உண்மையில் உள்ள சிக்கல் ரொம்பவே இடியாப்பம் ரேஞ்ச் என்பது எல்லாருக்கும் தெரியும். இதான் எனக்குத் தெரியுமே எனச் சொல்ல வரும் நிபுணர்களுக்காகவே இந்த டிஸ்கி.

Friday, March 06, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - பிப்ரவரி 2009

இந்த மாதம் தந்த குறிப்புகள் ரொம்பவும் எளிதாக இருந்ததா அல்லது தொடந்து பங்கெடுத்து வருவதால் என்னுடைய குறிப்பெழுதும் விதம் புரிந்து விட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் பின்னி எடுத்துவிட்டனர் மக்கள்! கலந்து கொண்ட 31 பேர்களில் 26 பேர் சரியான விடைகளைத் தந்திருக்கின்றனர்! அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்

 1. சீனா
 2. ஹரிஹரன்ஸ்
 3. பாசமலர்
 4. சகாதேவன்
 5. சதீஸ்
 6. தமிழ்ப்பிரியன்
 7. ஜி3
 8. மகேஷ்
 9. இராம்
 10. சந்தானம் குன்னத்தூர்
 11. ச சங்கர்
 12. யோசிப்பவர்
 13. பூங்கோதை
 14. ராசுக்குட்டி
 15. வடகரை வேலன்
 16. மஞ்சுளா ராஜாராமன்
 17. சௌமியா அருண்
 18. வசுப்ரதா
 19. திவா
 20. வாஞ்சிநாதன்
 21. வி ஆர் பாலகிருஷ்ணன்
 22. அரசு
 23. ஏஸ்
 24. கப்பி
 25. லதா சதீஷ்
 26. ராமையா நாராயணன்
அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?

இடமிருந்து வலம்

3 உறிஞ்சிக் குடி என குப்பியின் நடுவே சாபமிடு (3)
சப்பி - உறிஞ்சி என்பதற்கு மற்றொரு சொல். சாபமிடு என்பதை சபி எனக் கொண்டு அதில் குப்பியின் நடுவே இருக்கும் ப் என்ற எழுத்தை நுழைத்தால் சப்பி என வரும்.

5 சீட்டு விளையாட்டில் சுயத்தின் தலையை இழத்தல் அற்புதமான அழகு (5)
ரம்மியம் - கொஞ்சம் ஆங்கிலக் கலப்பு கொண்ட குறிப்பு. ஆனால் தமிழிலும் அவ்விளையாட்டை ரம்மி எனத்தானே சொல்கிறோம். ரம்மி என்ற சீட்டு விளையாட்டுடன் சுயம் என்ற சொல்லின் தலையான சு போய் மீதம் இருக்கும் யம் என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் அற்புதமான அழகு என்ற பொருள் கொண்ட ரம்மியம் வரும்.

6 லலிதாவைத் திரும்பிப்பார், அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியும் (2)
தாலி - லலிதா என்ற பெயரில் தாலி திரும்பி இருக்கிறது.

7 தீவிரவாதத்தின் எல்லைகளுக்குள் பசு தலையை நீட்டும் என விளக்கு (3)
தீபம் - தீவிரவாதம் என்ற சொல்லின் எல்லைகள் தீ மற்றும் ம் என்ற எழுத்துகள். இவைகளிடையே பசுவின் தலையான ப வர தீபம் என்ற விடை கிடைக்கும். விளக்கு என்பதை விளங்கச் செய் என்ற பொருள் இருந்தாலும் தீபம் என்ற பொருளும் இருக்கிறது அல்லவா!

8 பக்குவம் மக்களிடை வரப்பெறும் மார்பணி (5)
பதக்கம் - பக்குவம் என்பதைப் பதம் என்றும் சொல்லலாம். அதனிடையே மக்கள் என்ற சொல்லின் இடையான க்க என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் பதக்கம் என வரும். மார்பில் அணிவதுதானே பதக்கம்.

11 தாய் இஞ்சியின் தலை வெட்டி போட மாமன் மகன் வருவான் (5)
அம்மாஞ்சி - தாய் என்றால் அம்மா. இஞ்சியின் தலையை வெட்ட ஞ்சி என ஆகும். இரண்டும் சேர்ந்தால் அம்மாஞ்சி - மாமம் மகன்.

12 அடிக்காத கும்மிக்கு ஈடாகும் (3)
தகும் - ஈடாகும் என்பதற்கு ஈடான தகும் என்ற சொல் குறிப்பின் உள்ளேயே இருக்கிறது.

14 முடிவில்லா வானம். அடடா அருமை! (2)
ஆகா - அடடா அருமை எனச் சொல்ல ஆகா என்போம். ஆகாயம் முடியாமல் போனால் ஆகா வரும்.

16 தலையிழந்த வீரம் தந்தியடிக்கத் தொடங்கி குழப்பிடும் உபாயம் (5)
தந்திரம் - தந்தி எனத் தொடங்கி வீரம் என்பதில் இருந்து ரம் என்ற எழுத்துக்களைச் சேர்த்து உபாயம் என்பதற்கு விடையாக வருகிறது.

17 தெப்பம் பார்க்க வந்த தருமியை இடை ஒடித்து தலைகீழாக வை (3)
மிதவை - தருமியின் இடையை ஒடித்தால் தமி. அதனைத் தலைகீழாக மாற்றினால் மித. இதோடு வை என்ற சொல்லைச் சேர்த்தால் மிதவை. தெப்பம் என்றாலும் மிதவை.

மேலிருந்து கீழ்

1 மரத்தோடு மூன்று ஸ்வரங்கள் சேர்ந்தே ஆடும் விளையாட்டு (6)
பரமபதம் - மரம் என்ற சொல்லோடு பதப என்ற மூன்று ஸ்வரங்களை சேர்த்து ஆட்டினால் (எழுத்துக்களின் வரிசையை மாற்றினால்) பரமபதம் என்ற விளையாட்டு வரும்.

2 திமிரில் ரிஷபம் போனால் துடித்திடும் அதன் பாகம் (3)
திமில் - ரிஷபம் என்றால் காளை என்றும் ரி என்ற ஸ்வரம் என்றும் இரு பொருட்கள் உண்டு. திமிரில் ரி போனால் திமில். அது காளையின் ஒரு உடற்பகுதி.

3 நூறு மரம் நடுவே வெட்டித் தொங்கிட தரும் ஒப்பு (5)
சம்மதம் - நூறு என்றால் சதம். அதன் நடுவே மரம் என்பதின் நடுவை வெட்டி தலைகீழாக சேர்த்தால் சம்மதம் என்றாகும். ஒப்புக் கொள்கிறீர்களா?

4 காப்பி தா என்றார் என் அப்பா (2)
பிதா - அப்பா என்பதற்கு ஈடாக பிதா என்பது குறிப்பினுள்ளேயே இருக்கிறது.

9 சோறோடு உண்ணும் பதார்த்தங்கள் இரண்டு, மெய் சேர்த்தால் அசைவ அட்டகாசம் (2,4)
கறி குழம்பு - கறியும் குழம்பும் சாதமுடன் சேர்த்து உண்ணப்படுபவை. அதில் க் என்ற மெய்யெழுத்து சேர்ந்தால் கறிக்குழம்பு என்றாகும். மெய் இருந்தால்தானே அசைவம்!

10 தஞ்சாவூரில் ஊரோட அவைதனில் வந்து குழம்பினாலும் பயப்படாதவை (5)
அஞ்சாதவை - தஞ்சாவூரில் இருந்து ஊரை எடுத்துவிட்டு அவை என்ற சொல்லைச் சேர்த்து எழுத்துக்களின் வரிசையை மாற்றினால் அஞ்சாதவை என வரும்.

13 உடன்கட்டை ஏறியவர் ஒருவர் கடைசியில் ஆடிய ஆட்டம் (3)
சதிர் - உடன்கட்டை ஏறியவர் சதி. ஒருவரில் கடைசி ர். இரண்டும் சேர்ந்தால் வருவது சதிர் என்ற ஆட்டம்.

15 சிவகாமியை பேச்சுவழக்கில் காட்டச் சொல்லிப் பார்ப்பது (2)
காமி - காட்டு என்பதின் பேச்சு வழக்கு. குறிப்பின் உள்ளேயே இருக்கிறது.

இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

அடுத்த மாத புதிரில் வழக்கம் போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் என் நன்றிகள்.

Wednesday, February 25, 2009

புதசெவி - 02/25/2009

வழக்கம் போல புதிரைப் போட்டுவிட்டு விடையளிக்கும் முன் ஒரு புதசெவி பதிவு. ஆஸ்கார், பேரணி, அது இதுன்னு நடந்துக்கிட்டே இருக்கிறப்ப நாம தனியா புதசெவி பதிவு போடணுமான்னு நினைச்சேன். அப்புறம் அப்படி எல்லாம் பார்த்தா நாம பதிவு எண்ணிக்கையை ஏத்தறது எப்படின்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு.. இதோ உங்களுக்கான இந்த மாத புதசெவி பதிவு!

செய்தி 1
நைஜீரியா நாட்டு நடப்பு இது. கார் திருடர்கள் இருவரைப் பிடிக்க போலீஸர் அவர்களை விரட்டிச் சென்றிருக்கிறார்கள். ஒருவன் தப்பிவிட அடுத்தவன் ஒரு நொடியில் தன்னை ஒரு ஆடாக மாற்றிக் கொண்டுவிட்டானாம். அதனால் அந்த ஆட்டைப் பிடித்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். விரிவான செய்தி இங்கே.

பஞ்ச்: ஆட்டையப் போட்டவங்களுக்கு பதிலா ஆட்டை போட்டாங்களா,,
நம்ம ஊர்லே கொலை கொள்ளை பண்ணவன் எல்லாம் காலாகாலத்துல அண்ணல் ஆகறதை அஞ்சாம பாத்தவங்க நாங்க! அண்ணனுங்க அண்ணல் ஆகும்போது ஆட்டைய போட்டவங்க ஆடு ஆக முடியாதா?

செய்தி 2
இது கனடா செய்தி. சமீபத்தில் துளசி ரீச்சர், ஒரு வீட்டை அப்படியே பெயர்த்து எடுத்து அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்றதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இங்கே பாருங்கள், பழங்கால வீடு ஒன்றை வாங்கியவர், அதனை உறைந்த ஏரியின் மேல் அப்படியே கொண்டு செல்வதை! அருமையான நகர்படம். பார்க்க இங்கே சுட்டுங்கள்.

பஞ்ச்: அரசியல்ல இல்ல போலிருக்கு! அதான் சொந்தமா வீட்டை வாங்கி அதைக் கட்டி இழுத்துகிட்டு இவ்ளோ கஷ்டப்படறாரு! நம்மக்கள் கிட்ட கத்துகிட்டிருந்தா இதே ஐஸ் வீட்டை (ஹவுஸ்னு சொல்லமாட்டேன்) தமிழ்வளர்ப்புக்கு உஷார் பண்ணி பர்மணண்ட்டாவே வச்சிருப்பாரு. ஆனா, நம்ம மக்களும் இவர்கிட்ட கத்துக்க மேட்டர் இருக்கு! ரெய்டு கிய்டு வந்தா வீட்டை ஓட்டிகிட்டே இருக்கலாம்!

செய்தி 3
இது இங்கிலாந்தில் நடந்தது. இந்த வார தினமலர் வாரமலரில் பிரியமான நடிகை புகைப்பிடிக்கையில் வட்ட வட்டமாக புகை விடுவதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இம்மாம் பெரிய வட்டம் விட முடியுமா? நல்ல வேளை இது நம்ம ஊரில் நடந்து இருந்தா அன்புமணி ரொம்பவே ரென்சன் ஆகி இருப்பாரு. எதானால் வந்தது எனத் தெரியாத இந்த ராட்சத புகைவட்டங்கள் பற்றிய செய்திக்கு இங்கே போகவும்.

பஞ்ச்: இந்த பஞ்ச் பயத்துக்கே பயத்தை காட்டறவன் - அவனுக்கு ஒரு மேட்டர்லே கருத்து சொல்ல பயம்னா பாதுகாப்பு வளையம், மலர்வளையம் இந்த மாதிரி வளையம் மேட்டர்தான்.. சோ, மீ த எஸ்கேப்பு!

செய்தி 4
ஜெர்மனி செய்தி. தேசீய லாட்டரியின் பரிசுத்தொகை 35 மில்லியன் யூரோக்களாக உயர்ந்து விட நாட்டில் அனைவரும் லாட்டரி மோகம் பிடித்து அலைகிறார்களாம். அரசியல்வாதிகளும் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம். ஏழ்மை ஒழிப்பு பற்றிய விவாதத்தின் பொழுது அந்நாட்டின் நிதி அமைச்சர் லாட்டரி முடிவுகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். தற்பொழுதுள்ள தேக்க நிலை இவரையும் விட்டு வைக்கவில்லை போல. செய்தி இங்கே.

பஞ்ச்: நாங்க எல்லாம் லாட்டரி நடத்துவோம். இப்போ எலக்‌ஷென் வருதேன்னு நம்ம பெயரில் இருக்கிறதை வேற பெயரில் மாத்தி வைப்போம். இப்படி பிச்சைக்காரன் மாதிரி லாட்டரி டிக்கெட் வாங்கிக்கிட்டு இருக்கறவன் எல்லாம் நிதி மந்திரியா இருந்தா அப்புறம் எப்படி அந்த ஊர் எகானமி இம்ப்ரூவ் ஆகுங்கறேன்.

செய்தி 5
பழங்கால கதைகளில் எல்லாம் ஒருத்தன் தவம் இருப்பான். கடவுள் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டால் சாகா வரம் வேண்டும் என்பான். ஆண்டவனும் சாரி அது என்னால முடியாதுன்னு சொல்லுவாரு. ஆனா இங்க ஒரு அண்ணாத்த சாகா வரம் வாங்கிக்கிட்டு வந்திருக்காரு பாருங்க. செய்தி இங்கே.

பஞ்ச்: சாகாவரம் எல்லாம் யாருக்கு கிடைக்குதுன்றதை பொறுத்து! கோவக்காரனுக்கு கிடைச்சா சண்டைக்கும் சாகாவரம் கிடைக்கும், அரசியல்வாதிக்கு கிடைச்சா வாரிசுக்கு வயிரெரியும், சாதா ஆளுக்கு கிடைச்சா போரடிச்சே செத்துப்போவான் ஆனா சாவமாட்டான். ஆமாம், இப்படி சாகாவரம் வாங்கிட்டு வந்ததுகளை அப்படியே வேகவச்சா வேகுமா வேகாதா?

செய்தி 6
அண்ணன் வெயிட் கிட்டத்தட்ட 325 கிலோ. வெளிய எல்லாம் போக முடியாது. ஆனா வீட்டில் இருந்துக்கிட்டே மருத்தவர் சீட்டு கொண்டு மட்டுமே வாங்க முடியும் மருந்துகளை எல்லாருக்கும் விற்பனை செஞ்சு மாட்டிக்கிட்டாரு. ஆள் மாட்டிக்கிட்ட பின்னாடி, என்னால் கோர்டுக்கு வர முடியாது நீதிபதியை வேணா விட்டுக்கு வரச் சொல்லு எனச் சொல்லி இருக்காரு. அது நடக்காமல் போகவே அண்ணன் கோர்ட்டுக்குப் போக வேண்டியதாப் போச்சு. எதுல போனாராம் தெரியுமா? வீடு மாற்றும் பொழுது சாமான்களைக் கொண்டு செல்லும் யூஹால் எனப்படும் லாரி ஒன்றில். நீதிபதி போனால் போகிறது என்று லாரியை நிறுத்திய இடத்திற்கு வந்து பெயில் கொடுத்துவிட்டுப் போய் இருக்கிறார். செய்தி இங்கே.

பஞ்ச்: மருத்துவர் சீட்டு வாங்கிகிட்டு ஆட்சியே நடத்தறாங்கப்பா எங்க ஊர்லே.. கேவலம் நீதிபதி வெளியே வந்தாராம் - இதெல்லாம் ஒரு மேட்டரு! சரி, கொடுக்கறதுதான் கொடுக்கறாரு, யாருக்கெல்லாம் கொடுப்பாரு? நடக்கறதுக்கே கஷ்டப்படற ஆளுக்கு மட்டுமா, ஸ்ட்ரைக் பண்ணி கஷ்டப்படுத்தற ஆளுங்களுக்குமா? லாரியில வந்த குண்டனுக்கு மட்டுமா, லாரியை ஹைஜாக் பண்ணிக்கிட்டு வர தொண்டர்களுக்குமா?

கடைசியா ஒரு நகர்படம்.

நியூசிலாந்தில் ஒரு விலங்கை இரு கைதிகளின் கையில் பூட்டியுள்ளனர். அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் பொழுது இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். அதற்குப் பின் நடந்தது நீதிமன்ற வளாக பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.பஞ்ச்: கட்டுண்டோம் காத்திருப்போம்னு இருந்தாங்களா? நாமார்க்கும் குடியல்லோம்னு ஓடினாங்க ஓடினாங்க! பிணைப்பா, Post ஆ அப்படின்னு காம்படிஷன் வந்தா பிணைப்புதான் ஜெயிக்கும்ன்றது சங்ககாலம் முதல் சமீபகாலம்வரை வரலாறு! இது கூட தெரியாத முட்டாப்பசங்க!!

Wednesday, February 18, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - பிப்ரவரி 2009

எல்லோரும் மன்னிக்க! பணிச்சுமை ரொம்பவே அதிகமாகிவிட்டது. அதனால் வழக்கம் போல் புதிரை 15ஆம் தேதிக்குள் வெளியிட முடியவில்லை. போன பதிவின் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் புதிர் எங்கே என பின்னூட்டத்தின் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கேட்டு உற்சாகமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்க ஆர்வத்திற்காகவே இந்தப் புதிர், குறிப்புகளைச் செம்மைப்படுத்த நேரம் இல்லை. அதனால் கொஞ்சம் கவனமாகவே போடவும்! :)

வழக்கம் போல்
 • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
 • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
 • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
 • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
 • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.
1
2
34

5
6


7
89


10


11
12
13

1415
16

17இடமிருந்து வலம்

3 உறிஞ்சிக் குடி என குப்பியின் நடுவே சாபமிடு (3)
5 சீட்டு விளையாட்டில் சுயத்தின் தலையை இழத்தல் அற்புதமான அழகு (5)
6 லலிதாவைத் திரும்பிப்பார், அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியும் (2)
7 தீவிரவாதத்தின் எல்லைகளுக்குள் பசு தலையை நீட்டும் என விளக்கு (3)
8 பக்குவம் மக்களிடை வரப்பெறும் மார்பணி (5)
11 தாய் இஞ்சியின் தலை வெட்டி போட மாமன் மகன் வருவான் (5)
12 அடிக்காத கும்மிக்கு ஈடாகும் (3)
14 முடிவில்லா வானம். அடடா அருமை! (2)
16 தலையிழந்த வீரம் தந்தியடிக்கத் தொடங்கி குழப்பிடும் உபாயம் (5)
17 தெப்பம் பார்க்க வந்த தருமியை இடை ஒடித்து தலைகீழாக வை (3)
மேலிருந்து கீழ்

1 மரத்தோடு மூன்று ஸ்வரங்கள் சேர்ந்தே ஆடும் விளையாட்டு (6)
2 திமிரில் ரிஷபம் போனால் துடித்திடும் அதன் பாகம் (3)
3 நூறு மரம் நடுவே வெட்டித் தொங்கிட தரும் ஒப்பு (5)
4 காப்பி தா என்றார் என் அப்பா (2)
9 சோறோடு உண்ணும் பதார்த்தங்கள் இரண்டு, மெய் சேர்த்தால் அசைவ அட்டகாசம் (2,4)
10 தஞ்சாவூரில் ஊரோட அவைதனில் வந்து குழம்பினாலும் பயப்படாதவை (5)
13 உடன்கட்டை ஏறியவர் ஒருவர் கடைசியில் ஆடிய ஆட்டம் (3)
15 சிவகாமியை பேச்சுவழக்கில் காட்டச் சொல்லிப் பார்ப்பது (2)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

Thursday, January 29, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - ஜனவரி 2009

இந்த மாதம் போட்ட புதிரில் எனக்கு நிறைவே இல்லை. வேலைப் பளு அதிகமாக வேறு இருந்தது. இருந்தாலும் விடாது போட வேண்டும் என்பதால்தான் புதிரினை வெளியிட்டேன். அதற்கேற்ற மாதிரியே இந்த முறை பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கையும் சரி, முழுவதற்கும் சரியான விடை அளித்தவர்கள் எண்ணிக்கையும் சரி மிகக் குறைவாகவே இருந்தது. எதனால் இந்த முறை அனைவரையும் கவரும்படியாக புதிர் இல்லை என்பதைச் சொன்னால் அடுத்த முறை திருத்திக் கொள்ள முயல்வேன். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்
 1. ஜி3
 2. ராம்
 3. மஞ்சுளா
 4. ராமையா நாராயணன்
 5. ஏஸ்
 6. திவா
 7. அரசு

அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?


இடமிருந்து வலம்

5 ஆசாரமாய் இருக்க மடக்கு அல்லது மரணமடை (2)
மடி
- ஆசாரமாய் இருப்பதை மடி எனச் சொல்வார்கள். மடக்கு என்றாலும் மரணமடை என்றாலும் மடி என்ற பொருள் வருகிறது அல்லவா.

6 நடராசர் பார்க்க வருவதில்லை? வந்திடும் இங்கே (3,3)
தில்லை வாரும்
- இதுதான் எனக்கு சரியாக அமையாத குறிப்பு. நடராசர் பார்க்க தில்லை வாரும். இதில் வருவதில்லை என்பதில் இருந்து தில்லை என்பதும் அதைத் தொடர்ந்து வரும் வந்திடும் என்பதற்கு இணையான சொல்லாக வாரும் என்பதையும் போட்டு இருந்தேன். பலரும் சரியாக சொன்னது எனக்கே ஆச்சரியம்தான்.

7 கிழவி தைத்ததைப் பார்த்தால் முளைக்கப் போட்டது கிடைக்கும் (4)
விதைத்த
- கிழவி தைத்த என்ற சொற்களின் உள்ளேயே விதைத்த என்ற விடை இருக்கிறது. முளைக்கப் போட்டது என்பது விதைத்த என்ற பொருளை உணர்த்துகிறது.

8 மகளை நதியின் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா? (3)
பெண்ணை
- மகளை என்பதற்குப் பெண்ணை எனச் சொல்லலாம். பெண்ணை என்பது நதியின் பெயரும் கூட.

9 கொஞ்சம் காரமாய் அம்மா திரும்பினால் மனைவியா ஆவாள்? (3)
தாரமா
- கொஞ்சம் க்ரிப்டிக்கான குறிப்புதான். அம்மா என்னும் சொல்லுக்கு ஈடாக மாதா என்ற சொல்லை எடுத்துத் திருப்பினால் தாமா என வரும். அதன் நடுவே கொஞ்சமாய் காரம் என்பதால் அதிலிருந்து ஒரு எழுத்து - ர என்ற எழுத்தைப் போட்டால் மனைவியா என்ற பொருள் தரும் தாரமா என்ற சொல் வரும்.

11 நகரம் திரும்பினால் நாட்டை ஆளுமே (3)
கமுதி
- நகரத்தின் பெயர். திருப்பிப் போட்டால் திமுக. தற்பொழுது நாட்டை ஆளும் கட்சி.

13 சங்கடம் இங்கு இல்லா வட்டம் (4)
சகடம்
- சகடம் என்றால் வட்டம். சங்கடம் என்ற சொல்லி ‘ங்’ என்ற எழுத்தை எடுத்தால் சகடம் வந்திடும். ‘ங்’ என்ற எழுத்தை இங்கு என உச்சரிப்பதால் இங்கு இல்லா என்று குறிப்பில் கூறியுள்ளேன்.

16 புத்தியற்ற புரவி இறுதியில் மெதுவாகச் சென்றது (6)
விவேகமற்ற
- புத்தியற்ற என்பது இதற்குப் பொருள். புரவியின் இறுதி = வி. மெதுவாக = வேகமற்ற. இரண்டும் சேர்ந்தால் விவேகமற்ற வருதா!

17 இரவில் தெரியும் சூரியன் (2)
ரவி
- மிக எளிதான குறிப்பு. சூரியன் என்பது பொருள் இரவில் என்ற வார்த்தையினுள்ளேயே விடை இருக்கிறது என்பதை உணர்த்த தெரியும் என்ற குறிச்சொல்லும் இருக்கிறது.

மேலிருந்து கீழ்
1 காயம் பட பாதம் கொண்டு மிதி (2,2)
அடிஉதை
- கொஞ்சம் யோசித்தல் ரொம்ப எளிமையான குறிப்புதான். காயம் பட அடி உதை. பாதம் என்றால் அடி. மிதி என்றால் உதை.

2 அரை முத்தம் கொடு என்றால் தாக்கியதா? (5)
பாதித்ததா
- கொஞ்சம் வேண்டுமென்றே குழப்பிய குறிப்பு. அரை என்றால் பாதி. அரை முத்தம் என்றால் முத்தம் என்ற சொல்லி பாதி = த்த. ஆக அரை என்ற சொல் இங்கு டபுள்ட்யூட்டி செய்கிறது. கொடு என்றால் தா. பாதி+த்த+தா = பாதித்ததா. தாக்கியதா என்பது பொருள்.

3 கலையின் தலையெடுத்து தலைகீழாய் பிச்சை கேட்கும் சிற்பமா? (3)
சிலையா
- கலை என்ற சொல்லின் தலையை எடுத்துவிட்டால் மிஞ்சுவது லை. பிச்சை கேள் என்றால் யாசி. இது தலைகீழாக மாற சியா. இதனுள் லை என்ற எழுத்து நுழைய சிலையா. சிற்பமா என்பது பொருள்.

4 லட்சுமி நிலபுலன் கொண்டு வந்தால் நாமம்தான் (4)
திருமண்
- என்னோட பேவரைட் குறிப்பு இதுதான். திரு என்றால் லட்சுமி. மண் என்றால் நிலபுலன். திருமண் என்பது நாமத்தைக் குறிக்கும்.

10 மாது சற்றே ஓசை குறைத்துக் கொள்ள தூய்மையானது (5)
மாசற்றது
- மாது சற்றே என்ற எழுத்துக்களை எடுத்து அதில் றே என்பதின் ஓசையைக் குறைத்து ற என மாற்றிப் போட்டால் மாசற்றது என்ற சொல் கிடைக்கும். தூய்மையானது என்பது பொருள்.

12 முப்பத்திரண்டையும் பாதுகாத்திட முருகனுக்குத் தேவையானது (4)
முனைவேல்
- இது ரொம்ப எளிதான் குறிப்பு என நினைத்தேன். ஆனால் நிறையா பேர் போடாதது ஆச்சரியம்தான். முப்பத்திருபல் முனைவேல் காக்க என கந்த சஷ்டிக் கவசத்தில் வரும்.

14 உலோக முரசைக் கொட்டியதால் இப்படிச் செவிடாகும் (4)
டமாரம்
- உலோக முரசு மற்றும் டமாரச் செவிடு என இரு வகையான அர்த்தம் கொண்ட சொல்.

15 பாடு படாத ஈடுகோள் மட்டம் (3)
சமன்
- சமன்பாடு என்றால் ஈடுகோள். ஆங்கிலத்தில் Equation. அதில் பாடு போக மீதம் இருப்பது சமன். மட்டம் என்பது பொருள். ஈடுகோள் என கூகிளாண்டவரை வேண்டி இருந்தால் எளிதாக இருந்திருக்கும். சமம் என்ற விடையை சரியானதாகக் கருதவில்லை.


இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

அடுத்த மாத புதிரில் வழக்கம் போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் என் நன்றிகள்.