Thursday, September 01, 2022

கேதாரமும் கரும்பும் பின்னே கந்தசாமியும்!

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது சொலவடை. இதையே கிராமத்தில் இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்காதும்பாங்க. அதாவது வாள் எடுத்துச் சண்டை போடறவனும், சிரங்கு வந்து அரிப்பினால் சொறிஞ்சிக்கிறவனும் சுலபத்தில் நிறுத்த மாட்டாங்களாம். இவங்களோட இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவங்க இந்த வெண்பா எழுதும் கோஷ்டி. சும்மாவே இருக்க மாட்டாங்க. 

ஒண்ணு, 'ஈற்றடி என்றும் இனிப்பு', 'பட்டொளி வீசிப் பற', இப்படி கடைசி வரியை (இதைத்தான் ஈற்றடிம்பாங்க) தந்து இதுக்கு வெண்பா எழுதும்பாங்க. இல்லை, யாருக்காவது பொறந்த நாளு, நினைவு நாளுன்னு வந்துட்டா அவங்களைப் பத்தி வெண்பா சமை அப்படிம்பாங்க (வெண்பா எழுதறதுக்குப் பேரு சமைக்கிறதாம்). இப்படி எதுனா ஒரு சாக்கு கண்டுபிடிச்சு, தான் எழுதறோமோ இல்லையோ, அடுத்தவனை எழுத வெச்சுடணும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலைவாங்க. நம்ம ஐயப்பன், சின்னக்கண்ணன், ஆசாத் பாய், சொக்கன், பெனாத்தல்ன்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. இதுல உச்சக்கட்ட வன்முறை என்னான்னா சம்பந்தமே இல்லாத எதாவது ரெண்டு ஐட்டத்தை எடுத்துக்கிட்டு இது ரெண்டுக்கும் ஒத்து வர மாதிரி சிலேடையா வெண்பா எழுதும்பாங்க. 

அப்படித்தான் இந்த ஐயப்பன் எப்பவோ சொன்னதை, இன்னிக்குச் சின்னக்கண்ணன் எடுத்துக்கிட்டு வந்தாரு. மயிலுக்கும் கரும்புக்கும் சிலேடையில் எழுதணுமாம். கரும்புக்கும் மயிலுக்கும் என்னடா சம்பந்தம்ன்னு ஒருத்தர் கூட கேட்கலை. எல்லாரும் உடனே இதுக்கும் தோகை இருக்கு, அதுக்கும் தோகை இருக்குன்னு எழுத ஆரம்பிச்சுட்டாங்க. 


எழுதாம இருந்தா நம்மளைத் தள்ளி வெச்சுடுவாங்களேன்னு நானும் ஒண்ணு எழுதினேன். எல்லாரும் தோகையைப் பத்தியே பேசறாங்களே, நாம வேற எதுனா செய்வோம்ன்னு கண்களில் ஆரம்பிச்சேன். 
கண்கள் பலவுண்டு கண்கவரும் தோகையுண்டு
கண்ணன் நிறத்தில் கழுத்துண்டு - விண்ணவர்கோன்
கந்தபிரான் கோயிலிலே காண்பதற்குத் தானுண்டு
கன்னலுடன் கேதாரம் காண்
சரிடா, எதோ நாலு வரி எழுதிட்டானேன்னு சும்மா இருக்காங்களா! கரும்புக்குக் கண் உண்டா? கேதாரம்ன்னா என்ன? கரும்புக்கும் கந்தனுக்கும் என்னய்யா தொடர்புன்னு கேள்வி மேல கேள்வி. நம்ம வெண்பாவுக்கு எல்லாம் நாமதான் பொருளும் சொல்லணும் போல. 

மயிலுக்குக் கண்கள் உண்டு. முகத்தில் இருக்கும் கண்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு சிறகிலும் இருக்கும் வடிவத்தையும் கண் என்றே சொல்வார்கள். ஆனா கரும்புக்கு? கரும்பு துண்டு துண்டா ஒட்ட வெச்சது மாதிரிதானே இருக்கும். அப்படி ஒட்ட வெச்ச மாதிரி இருக்கிற பகுதிக்குக் கணு எனப் பெயர். கடிக்க முடியாதபடி ரொம்ப கடினமா இருக்கும் பகுதி. அதுக்கு இன்னொரு பேரு கண். ஆக, கரும்புக்கும் கண் உண்டு. 

தோகையில் தொடங்கலைனாலும் கரும்பையும் மயிலையும் பத்திப் பேசும் போது தோகையைச் சொல்லாம இருக்க முடியுமா? அதனால அது ரெண்டாவது. 

கண்ணன் நிறத்தில் கழுத்துண்டு. முதலிலேயே சொல்லிடறேன். இது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போட்ட வரிதான். பொயட்டிக் லைசன்ஸ்! கண்ணன் கருநிறத்தான். கருநீலம்ன்னு சொல்லுவாங்க. கருப்புதான்னும் சொல்லுவாங்க. மயிலோட கழுத்து அப்படி கருநீலமா இருக்கும். கரும்புக்கு தோகையும் தண்டும் சேரும் இடம் பேரு கழுத்து. அதுக்கு மேல பச்சையாகவோ, காய்ந்த சருகாகவோ தோகை இருக்கும் ஆனா அங்கிருந்து கருஞ்சிவப்பா இருக்கும். ஆக கரும்போட கழுத்தும் மயிலோட கழுத்தும் கருமை நிறம் கொண்டவைதாம். அம்புட்டுதான். ரொம்ப அடிக்காதீங்கடே, அடுத்த வரிக்குப் போயிடுவோம். 

மாமனைச் சொன்னால் மருமகனைச் சொல்ல வேண்டாமா. அதனால கண்ணனுக்குப் பின்னாடி கந்தனைப் போட்டுட்டேன். முருகனுக்கு மயில் உண்டு, சரி. ஆனா கந்தனுக்கும் கரும்புக்கும் என்ன தொடர்பு? முருகன் கையில் வேல்தானே இருக்கும் கரும்புக்கு எங்க போக? விடை ரொம்ப சுலபம். ரெண்டு கைகள் மட்டுமே இருந்தா ஒரு கையில் வேலை வெச்சுக்கிட்டு மறு கையால் அருள் பாலிக்கலாம். ஆனா எங்காளுக்குத்தான் பன்னிருகைகள் உண்டே. அப்படி இருக்கும் போது வேல் மட்டுமில்லாமல் கொடி, வில், அம்பு, சங்கு, சக்கரம், சூலம் என எல்லாம் அவர் கையில் இருக்கும். அப்படி இருப்பவற்றில் ஒன்று கரும்பு. கரும்பு வில் என்று சொல்வார்கள். சங்கு, சக்கரம், சூலம், கரும்பு வில் என மற்றவர்கள் கையில் இருப்பதை எல்லாம் இவரே எடுத்துக்கிடுவார் போல. கடவுளை பல வடிவங்களில் பார்த்தாலும் அனைவரும் ஒண்ணுதான்னு சொல்ல இப்படி செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கறேன். நான்கு கைகள் கொண்ட வடிவத்திலும் கரும்புவில், மலரம்பு ஏந்திய வடிவமும் உண்டாம். 

சரிடா, இது எதாவது கோயிலில் இருக்கான்னு கேட்டா, இருக்கே!. திருச்சி - பெரம்பலூர் இடையே இருக்கும் செட்டிகுளம் என்ற கோயிலில் கரும்பு ஏந்திய முருகர் இருக்காரு. அவர் இப்படி இருக்கிறதுக் கதையும் இருக்கு. இந்தச் சுட்டியில் போய் படிச்சுக்குங்க. 


கடைசியா கன்னல் என்றால் கரும்பு. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரைக்கும் கன்னல் என்ற பெயர் உண்டு. இது பழந்தமிழ் இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களின் பயன்படுத்தப்பட்ட சொல்லே. ஈற்றடியில் கன்னல், காண் அப்படின்னு எழுதினதுனால மயிலுக்கும் ககரத்தில் ஆரம்பிக்கும் பெயர் இருந்தால் நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். அதுக்குத் தேடப் போய் கிடைச்சது கேதாரம். 

ஆனாலும் ஒரு நாலு வரியில் வெண்பா எழுதுனதுக்கு இப்படி நானூறு வார்த்தை விளக்கம் தர வெச்சுட்டீங்களேடே! 

(படங்கள் எல்லாம் எப்பொழுதும் போல் இணையத்தில் திருடப்பட்டவையே!)

Wednesday, August 31, 2022

விநாயகர் தந்த வீட்டுப் பாடம்

இன்றைக்கு விநாயக சதுர்த்தி. விளையாட்டாய் விநாயகன், வின் நாயகன் என வார்த்தை விளையாட்டு ஒன்றினை விளையாடினேன். 

அதனாலோ என்னவோ, ஒரு நண்பன் வடிவில் அவரே வந்து வீட்டுப் பாடமொன்றைத் தந்துவிட்டார். கைத்தல நிறைகனி பாட்டுக்குப் பொருள் ஓரளவு தெரிந்தாலும் வரிக்கு வரி பொருள் சொல் என்பதே அந்த நண்பன் கேட்டது. எத்தனையோ பெரியவர்கள் இதற்கு முன் எழுதியதுதான் என்றாலும் பிள்ளையார் சதுர்த்தி அன்று என்னைக் கேட்டதால் நான் கற்றதை எழுத முனைகிறேன். 

இப்பாடல் அருணகிரிநாதர் அளித்த திருப்புகழில் வரும் விநாயகத் துதி. எந்த வேலையைத் தொடங்கும் பொழுதும் விநாயகனைத் துதித்துப் பின் தொடங்க வேண்டும் என்ற மரபினை ஒட்டி திருப்புகழையும் விநாயகனைத் துதித்தே தொடங்குகிறர் அருணகிரிநாதர். இந்தப் பாடலில் மெய்யெழுத்துகளை விட்டு எண்ணிப் பார்த்தால் இருநூறு எழுத்துகள் வரும். நூறு என்பதைப் பிள்ளையார் எனச் சொல்லும் வழக்கமுண்டு. எனவே இப்பாடலை இரட்டைப் பிள்ளையார் என்பர். வண்ண விருத்தம் என்ற எழுதக் கடினமான விருத்தவகையில் எழுதப்பட்டது திருப்புகழ். விருத்த இலக்கணத்திற்குள் போனோமானால் அதுவே பல பதிவுகளுக்கு இழுத்துவிடும். அதனை மற்றொரு சமயத்திற்கு வைத்துக் கொள்வோம். 

முதலில் பாடலைப் பார்க்கலாம். பாடலைப் படிக்கும் பொழுது வாரியார் சுவாமிகள் குரலில் கேட்கவும் செய்வோம். கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.
அப்பம் தெரியும் அரிசிப்பொரி தெரியும். முட்டைப்பொரி கூடத் தெரிஞ்சிருக்கலாம். ஆனா அது என்னடா டவல் பொரி, துண்டுல பார்சல் பண்ணித் தருவாங்களான்னு எல்லாம் மிரள வேண்டாம். பாடலைப் பதம் பிரிச்சுப் படிச்சா, எவ்வளவு எளிமையான மொழியில் எழுதி இருக்காருன்னு தெரியும். 

1) கைத்தலம் நிறை கனி, அப்பமொடு, அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடி பேணி
2) கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் என வினை கடிது ஏகும் 
3) மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன்
மல் பொரு திரள் புய மதயானை
4) மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே
5) முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
6) முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடி செய்த அதி தீரா
7) அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும்
அப்புனம் அதன் இடை இபமாகி
8) அக்குறமகள் உடன் அச்சிறு முருகனை 
அக்கணம் மணம் அருள் பெருமாளே! 

ஒரு சில சொற்களைத் தவிர நேரடியாகப் பொருள் புரிந்துவிடும் என்றாலும் வரிக்கு வரி பொருள் சொல் என நண்பன் பணித்ததால் அப்படியே பார்ப்போம். 

1) கைத்தலம் நிறை கனி, அப்பமொடு, அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிப் பேணி - கைகளிலே கனி அப்பம் அவல் பொரி ஆகியவற்றை எடுத்து உண்ணும் யானை முகத்தானின் திருப்பாதங்களை வணங்கி

கைத்தலம் நிறை - தலம் என்ற சொல்லுக்கு உடலின் ஒரு பகுதி என்ற பொருளும் உண்டு. எனவே கைத்தலம் நிறை என்றால் கையாகி பகுதியில் நிறைந்து இருக்கும் 

கனி, அப்பமொடு, அவல் பொரி - பிள்ளையார் கையில் கனி வந்த கதை நமக்கு எல்லாம் தெரியும். விரிவாகச் சொன்னால் முருகன் கோச்சுப்பான். அப்படி கனி, அப்பம், அவல் பொரி எல்லாம் எடுத்துக் கொண்டு 

கப்பிய - கப்பு என்பதற்கு விரைவாக உண்ணுதல் எனப் பொருள். அகராதி ஆங்கிலத்தில் Eat voraciously எனப் பொருள் சொல்கிறது. எங்கம்மா வார்த்தைகளில் சொல்லணும்ன்னா காணாததைக் கண்டா மாதிரி அடைச்சுக்கிறது. பிள்ளையார் கனி, அப்பம், அவல் பொரி எல்லாத்தையும் கையிலே எடுத்து வாயில் அடைச்சுக்கிட்டுச் சாப்பிடுவாராம். 

கரிமுகன் - கரி என்றால் யானை. கரிமுகன் என்றால் யானை முகம் கொண்டவன். 

அடி பேணி - பேணுதல் என்றால் மதித்தல். 

2) கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் - நல்ல நூல்களைக் கற்றுத் தெளியும் பக்தர்களின் மனத்தில் இருப்பவனே. கற்பக மரம் போல வேண்டும் அனைத்தையும் தருபவனே எனத் துதிக்க, தீயவை விட்டு விலகி ஓடும் 

உறைபவ - உறைபவனே என்று கூப்பிடும் சொல். 

கடிது - விரைவாக 

ஏகும் - போகும் 

தமிழகத்திலேயே பழைமையான பிள்ளையார் கோயில் எனக் கருதப்படும் பிள்ளையார்பட்டி கோயிலில் பிள்ளையார் கற்பக விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

3) மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மதயானை - ஊமத்தம் பூவையும் பிறை நிலவையும் வைத்துக் கொண்டு இருக்கும் சிவனின் மகனே, மல்யுத்தம் செய்ய உகந்த திரண்ட தோள்களைக் கொண்டவனே, மத யானை போன்றவனே 

மத்தம் - ஊமத்தம் பூ. சிவனைப் பற்றிச் சொல்லும் பொழுது மற்றவர்களுக்கு வேண்டாததை விரும்பி ஏற்றுக் கொள்ளும் கடவுள் என்பார்கள். பட்டாடை கிடையாது, புலித்தோல்தான். ஊருக்குள்ளே இடம் கிடையாது சுடுகாடுதான். தங்கத்தட்டு கிடையாது கபாலம்தான். அது போல எதற்கும் பயனில்லாத ஊமத்தம் பூவை விரும்பி ஏற்றுக்கொள்பவன் சிவன். 

மதியம் - நிலவு. மாசில் வீணையும் மாலை மதியமும் என்ற பாடலில் வருவது போல. அப்படி ஊமத்தம் பூவையும் நிலவையும் கொண்ட சிவன் என வர்ணிக்கிறார். 

மல்பொரு திரள் புய - மல்யுத்தம் செய்ய உகந்த திரண்ட தோள்களைக் கொண்ட, புஜம் என்ற சொல் தமிழில் புயம் என்று ஆகும். 

4) மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே - மத்தளம் போன்ற தொந்தியைக் கொண்ட கண்பதி, உத்தமியாம் பார்வதியின் புதல்வன். 

அப்பாவைச் சொன்ன பின் அம்மாவைச் சொல்லாமல் இருக்க முடியுமா? போன வரியில் சிவன் மகனே என்றதும் இந்த வரியில் சிவகாமி என்ற உத்தமியின் மகனே என அழைக்கிறார். கூடவே தவிர்க்கவே முடியாத அவரோட தொந்தியையும் சொல்லிடறார். 

மட்டு - மட்டு என்றால் கள். இதழ்களை விரித்தால் கள் சொட்டக் கூடிய மலர்களைத் தந்து கும்பிடுவேன் என்பதை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே என்கிறார். 

5) முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே - முத்தமிழுக்கான இலக்கணத்தை மேரு மலையில் முதன்முதலாக எழுதித் தந்த மூத்தவனே 

அடைவு - அடைவு என்றால் விதம். Form என்கிறது அகராதி. நாட்டியங்களில் அடவு எனப்படும் இலக்கணம் இந்த அடைவே. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கான இலக்கணத்தை வேறு யாரு தருவதற்கு முன் தந்தவர் பிள்ளையார். அவர் மேரு மலையில் இதனை எழுதியதாக ஐதிகம்.

6) முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா - திரிபுரங்களை எரித்த சிவனின் தேர் அச்சினைப் பொடிப் பொடியாக உடைத்த தீரத்தைச் செய்தவனே. 

திரிபுரம் என்ற மூன்று கோட்டைகளை எரித்து அழித்தவர் சிவன். அவர் அப்போருக்குச் செல்லும் பொழுது விநாயகனை வணங்கிச் செல்ல மறந்துவிட்டார். அப்பா என்றாலும் ஒரு செயலைத் தொடங்கும் பொழுது முழுமுதற்கடவுளை வணங்கி இருக்க வேண்டுமல்லவா. அப்படி வணங்காது சென்றதால் சிவன் ஏறிய தேரின் அச்சினை முறித்துவிட்டாராம் பிள்ளையார். தன் தவற்றினை உணர்ந்து பிள்ளையாரை வணங்கி மீண்டும் தேரில் ஏறி திரிபுரத்தை சிவன் எரித்தார் எனக் கதை போகும். அதைத்தான் இங்கே சுட்டிக் காட்டுகிறார். 

இந்நிகழ்ச்சி நடந்த இடம், சென்னைக்கு அருகே, செங்கல்பட்டுக்கு மிக அருகே, மதுராந்தகத்தைத் தொட்டடுத்த அச்சிறுப்பாக்கம். அச்சு இறு பாக்கம் என்பதே அச்சிறுபாக்கம் என்றானது என்பார்கள்.

7) அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதன் இடை இபமாகி - காதல் பிணி கொண்ட தம்பி சுப்பாமணிக்காக, அவன் பிணியைத் தீர்க்கும் பொருட்டு வயற்காட்டில் யானையாகி வந்தவரே 

புனம் - காடு. Land suitable for dry grain, commonly on hills என்கிறது அகராதி. வயற்காடு, தினைக்காடு என்பதைத்தான் புனம் என்கிறார். 

இபம் - யானை. தமிழில் யானைக்குத்தான் அத்தனை சொற்கள். அத்தி, ஆனை, கரி, குஞ்சரம், தந்தி, திண்டி, நாகம், பிடி, வேழம் என யானையைக் குறிக்க நூற்றுக்கும் மேலான சொற்கள் உண்டு. தமிழர்தம் வாழ்வோடு அத்தனை இயைந்தது யானை. 

8) அக்குறமகள் உடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே! - வள்ளியுடன் முருகன் திருமணம் நடக்க அருள் புரிந்தவனே!

பெருமாளே - பொதுவாகத் திருமாலைப் பெருமாள் என்றாலும் கூட பெருமாள் என்பது கடவுளுக்கான பொதுப்பெயர்தான். திருப்புகழில் முருகனைப் பெருமாளே என்றழைத்துப் பாடும் அருணகிரிநாதர், இப்பாடலில் விநாயகரைப் பெருமாளே என்றே துதித்து வணங்கி இருக்கிறார்.  

விநாயக சதுர்த்தியான இன்று, நானும் அவரை வணங்கிக் கொள்கிறேன். இந்தப் பதிவு எழுத காரணமாக இருந்த நண்பனுக்கு என் நன்றி.  அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்! 

என் தமிழுக்கு வழிகாட்டியாக, என் ஆசானாக இருக்கும் ஹரியண்ணா அவர்களுக்கு, அவர்தம் மகன் திருமண நிகழ்வையொட்டி, ஒரு சிறு பரிசாக இந்தப் பதிவினை சமர்ப்பணம் செய்கிறேன். எதேனும் பிழை இருந்தால் பொறுத்தருளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Friday, July 29, 2022

Amma

My mother was born in a different era. Daughters had to be married off early, the sooner the better. My maternal grandfather was a man of his times, and my mom was married to her own cousin when she was just eleven. (Marriages between cousins, subject to certain conditions, were an accepted norm then.) 

Her marital life was troubled, to put it mildly. She had her first son when she was just fifteen. And a couple of years into motherhood, her son turned out to be an invalid, who needed full time support. Two other sons followed and each one had their own health scares, thanks to marrying within the family. Financially too, they were not well off as my dad was not one to hold a stable job. An accident left him disabled and he had limited mobility. All of this is hearsay to me as I was not born then. 

I was born to my mom when she was thirty-six, a full twenty-one years after her first born. My eldest brother was stuck to his chair. My second brother was off to college and my third brother was completing high school when I was born. I was raised in Kallidaikurichi, a village near the southern end of India. Despite the passage of time, things were not much different at home. But my mother provided a stable household for us to grow. We may not have had luxury, but we were never left wanting. 


She was tenacious, she was street smart and she was positive. She might have had her bitterness on what life dealt her, but she never let it contaminate how she lived. She instilled the values we stand by, and she led by example. She was a survivor. She survived the loss of her first born after taking care of him full time for thirty-seven years. She survived the near loss of her third son twice over. She survived being uprooted and made to start laying roots in different places time and again. She had lived in the quaint village in a large household first and then be on her own, she managed in a single room when one of her sons was recuperating in a hospital after an accident. She had moved from one rental place to another before she had a place, she could call her own. She survived the loss of her husband. She survived cancer. And she never let any of these get to her. 


Having gotten married at such an early age, her formal education was not past elementary school. But she was a woman of many talents. She was a wonderful cook and even today there are people who talk of one meal they were served many decades ago. She never let anyone who visited us go with an empty stomach. We shared what we had. She would make appalams, vadaams and pickles and send them out to the extended family. She could sew and stitch, she could knit, she could string a garland with flowers from the backyard and loved swimming in the nearby river. Her kolam skills were legendary and she was sought after during weddings and other occasions. 

Despite the lack of formal education, she read a lot and was ready to learn new things. She was an avid listener of carnatic music and was a regular in attending concerts. Till late in her life, would complain that her parents stopped her from learning the music. She knew tomes and tomes of shlokas by heart and was an active participant in temple activities. She moved with the times and mastered use of smart phones and tablets too. Despite language barriers, she was enterprising enough to fly back to India from the US on her own when she was in her seventies. 


She, through her actions, instilled strong values in us. The three remaining sons of her, have our own interests and lifestyles. But we all have common traits of compassion, righteousness, hospitality, etc. that we have ingrained from her. I do not consider myself as the ideal son by any measure. I have been silly, I have quarreled, I have been immature and in retrospect should have done many things that I did not and not have done many that i did do. But she loved us the same, nevertheless. 

All three of us were fortunate to have her and our dad with us as we climbed the ladder of financial independence and were able to take care of her to the best of our abilities. We tried to provide her, at least during her later life, what she did not have at her prime. She saw her sons get married, her grandsons and granddaughter growing up and the birth of her great grandson. She lived a full life. She was no saint. She was a regular woman with her own minuses, her grey areas, her misgivings. Let us keep them aside just today. 

But time left its effect on her. Cancer ravaged her body and weakened her mind. She fought and survived cancer but it did take its toll. It was difficult to see the brave woman reduced to a shadow of herself. Someone who started forgetting everything, someone who slowly lost the will to fight. I am halfway across the globe and was helpless, but I know my brothers and my sisters in law gave her their best during her sunset years. 


At 86, she breathed her last this morning. Her end, in a way is a relief, as she need not suffer any more. She may have left her mortal coils, but she has left behind her indelible stamp on us and a truck load of memories. 

Thank you, Mom, for everything. Take rest now.

Thursday, May 19, 2022

ஆசானோடு ஓர் அருமையான மாலை!

ஆற்றொழுக்கு என்பது ஆற்றின் நீரோட்டத்தைக் குறிப்பது. மலையில் தொடங்கி கடலில் சேரும் ஆறு, சிறு ஓடையாகத் தொடங்கும், அங்கிருந்து அதிவேகமாகப் பொங்கி வரும், அருவியாகக் கொட்டும், பரந்தும் விரிந்துமானப் பெருநதியாக மாறும், சலனமின்றி நிற்பது போலத் தோன்றினாலும் வேகமாக ஓடும், பாறைகளில் மோதி கலைந்து சுழலும் நுரையுமாகப் பாயும், சில இடங்களில் தன் ஆர்ப்பரிப்பை எல்லாம் குறைத்துக் கொண்டு மனிதனும் மற்ற உயிர்களும் தன்னுடன் உறவாட வகை செய்யும். 

எழுத்திலும் பேச்சிலும் இப்படி பிரவாகமாக எழுதுவதையும் பேசுவதையும் ஆற்றொழுக்கான நடை என்போம். அப்படி அமைய வேண்டும் என்பதால்தான் என்னவோ கம்பராமாயாணம் ஆகட்டும், கந்தபுராணமாகட்டும், கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து ஆற்றுப்படலம் என ஆறுகளின் பெருமையைச் சொல்லியே ஆரம்பிக்கின்றன. அதிலும் கம்பன், 'கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்' என்றது என்னைத்தானோ என எனக்கு ஒரு மயக்கம். கல்லிடையில் பிறந்ததும், போந்ததும் நிகழ்ந்து விட்டது. கடைசி காலத்தில் ஏதேனும் தீவு ஒன்றில் வசிக்கும் ஊழும் இருக்கிறதோ என்னவோ. போகட்டும். மீண்டும் ஆற்றொழுக்குக்கே வருவோம். 

ஆற்றொழுக்காகப் பேசுவது என்பது சிலருக்கே அமைவது. ஒரு தலைப்பில் தயார் செய்து கொண்ட உரையை மேடையில் பேசுவதை விட மிகக் கடினமானது பரந்துபட்ட பல தலைப்புகளில் தடைகளில்லாமல், கேட்பவர் கவனம் கெடாமல், சுவாரசியமாக , தொடர்ந்து பேசுவது. அப்படி மணிக்கணக்காகப் பேசக்கூடிய திறமை கொண்டவர் எழுத்தாளர் ஜெயமோகன். நேற்று மாலை அவருடன் சுமார் ஐந்து மணி நேரம் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

ஜெயமோகனோடு உரையாடப் போகிறேன் எனச் சொன்னதற்கு, நண்பரொருவர் அவர் பேசிக் கேட்கப் போகிறேன் எனச் சொல் என்று வேடிக்கையாகத் திருத்தினார். ஆனால் நடந்ததென்னவோ அதுதான். மறுநாள் விடிகாலை எழுந்து பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் இரவு முழுவதும் கூடப் பேசி இருப்பார் போல. பேசிய அவருக்கும் சரி, கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கும் சரி, கொஞ்சமும் அயர்ச்சியே இல்லை. தன் எழுத்து குறித்த விமர்சனம், சக எழுத்தாளர்களுடன் கொண்ட நட்பு, இந்திய வரலாறு, தெருப் பெயர்களை மாற்றுவது, இந்தியாவின் முன்னேற்றத்தில் ஆங்கிலேயர் பங்களிப்பு, அவர்கள் வரலாற்றினை ஆவணப்படுத்துவதிலும் வரைபடங்களாக நிலத்தினை வரைந்து கொள்வதிலும் காண்பித்த ஆர்வம், கர்நாடக சங்கீதம், தமிழ்ப்பாடல்கள், குணங்குடி மஸ்தான் சாகிப், பெரியசாமி தூரன், கோபாலகிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், விருத்தங்கள் பாடுவது, கம்ப ராமாயணம், டிகேசி, கம்பன் கழகம், நாஞ்சில் நாடன், அலங்காரப் பேச்சு அலங்கோலங்கள், மேடைப் பேச்சு அனுபவங்கள், மொழிபெயர்ப்பு, தமிழ் இலக்கணம், எழுவாய் பயனிலை சார்ந்த சங்கடங்கள், மலையாளம், அதற்கு முன்பான மலையாண்மை என்ற மொழிவடிவம், தத்துவம் சார்ந்த எழுத்துகளைத் தமிழிலும் மலையாளத்திலும் கொண்டு வருவதற்கான மொழி சார்ந்த சிக்கல்கள், அமெரிக்க அனுபவங்கள், ஆஸ்டினில் பார்க்க முடிந்த இடங்கள், நேரமின்மையால் பார்க்க முடியாமல் போன ஓ. ஹென்றி நினைவில்லம், அதிபர் ஜான்சன் நூலகம், ஆஸ்டின் பொது நூலகம், அமெரிக்க நூலகங்களில் நாம் படித்த ஆங்கில எழுத்தாளர்கள், சிறுகதை நாவல் போன்ற வடிவங்களுக்கான இலக்கணம், 1990ஆம் ஆண்டு தான் எழுதிய 'ரப்பர்' நாவலுக்குப் பரிசு கிடைத்த மேடையில் பேசியது, அதில் கிடைத்த ஊக்கத்தில் நாவல் கோட்பாடு எழுதியது, பா. ராகவன் நாவல்கள், அவர் முன்னெடுத்திருக்கும் எழுத்தாளர்களுக்கான வகுப்பு, புத்தகங்களை வாசிப்பதற்கும் கேட்பதற்கும் உண்டான வித்தியாசங்கள், புத்தகங்கள் திரைப்படங்களாகுதல், திரைப்பிரபலங்களுடான நட்பு, திரைப்பட அனுபவங்கள், சென்னை ரவுடிகள், திரைப்பட நடிகர்கள் மேல் வரும் அசூயை, கட்டப்படும் கதைகள், கவிஞர் கண்ணதாசன் குறித்த கதைகள், என் எஸ் கிருஷ்ணன் பட்ட சிரமங்கள், எம் கே தியாகராஜ பாகவதரின் இறுதிக் காலம் குறித்த கட்டுக்கதைகள், அவர் குற்றம் சாற்றப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த முறை, இந்தியாவில் இருந்த - அமெரிக்காவில் இருக்கும் ஜூரி சிஸ்டம், ஐஏஎஸ் அதிகாரிகள், அவர்கள் துறை விட்டுத் துறை மாற்றப்படுவது, நம் வரலாறு குறித்த ஆவணங்கள் வெளிநாடுகளில் இருப்பது, அவற்றைப் பார்க்க லிஸ்பன் போர்த்துகல் செல்ல ஆசை இருப்பது, தமிழ் விக்கி என மாலை நீண்டு கொண்டே இருந்தது. 

நான் மறந்து போய் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இன்னும் பல. இடையிடையே வந்திருப்பவர்களின் கேள்விகள், அதற்கான பதில்கள், அவர்களது பார்வை என்று கச்சேரி களைகட்டியே இருந்தது. பிரபல எழுத்தாளர் குறித்த அவர் புதிர் ஒன்றிற்குப் பதில் அளிக்க முடியாமல் விழித்தேன். விழித்தது நான் மட்டுமல்ல என்பது மட்டுமே ஆறுதல். 

பார்த்துப் பத்து வருடங்களுக்கு மேலாகி இருந்தாலும் என்னை நினைவில் வைத்திருந்து இது இலவசக்கொத்தனார் என மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சிதான். அங்குள்ள பலரும் 'நீதானா அது?' எனப் பார்த்த பார்வையால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. புதிய நட்புகள் சில கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சி. கூடுதல் பரிசாக எனக்காகக் கையெழுத்திட்ட புத்தகம் ஒன்றினையும் வழங்கினார். 


ஜெயமோகனின் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நண்பரொருவர், ஜெயமோகனின் புத்தகம் போன்ற கேக் ஒன்றைச் செய்து கொண்டு வந்திருந்தார். அளவிலும் ஜெயமோகன் எழுதும் புத்தகங்களை ஒத்து இருந்தது. அருமையான சாக்லேட் கேக். அதனை வெட்டி, உடன் வந்திருக்கும் அருண்மொழிக்கு ஊட்டி விட்டபின், இயேசுவின் உடல் அப்பமாக வழங்கப்படுவது போல் எங்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு ஒரு துண்டு ஊட்டி விடப்பட்டது. ஜெயமோகன் இலக்கிய சந்திப்புகளின் விதிமுறைகள் அறிந்ததால் அப்பத்தோடு வைன் கிடைக்குமா என்ற நப்பாசை கிஞ்சித்தும் இல்லை. 


வந்தவர்களை வரவேற்றுக் கவனிப்பது, இடையிடையே தேநீர், பின் இரவுணவு, கேக் என அருமையாகக் கவனித்துக் கொண்ட நண்பர் சௌந்தர் அவர்களுக்கு என் நன்றி. நான் ஒன்றிரண்டு புகைப்படங்களுக்கு மேல் எடுக்கவில்லை. எடுத்தவர்கள் பகிர்ந்தால் அதனை இந்தப் பதிவில் சேர்க்கிறேன். 

நல்லதொரு மாலைப்பொழுது அமையச் செய்த ஜெயமோகனுக்கு நன்றி.