Saturday, October 29, 2022

கையிரண்டு போதாது காண்!

இன்று ஒரு சமயச் சொற்பொழிவு கேட்டேன். பேச்சாளர் திருச்செந்தூர் முருகனின் பெருமைகளைப் பேசினார். அந்த உரையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பற்றியும் சொன்னார். கவிமணி எக்ஸிமா என்ற தோல்வியாதியினால் அவதிப்பட்டார் எனவும், அந்த நோயின் காரணமாக அவரது உடம்பில் சிரங்குக் கட்டிகள் வந்ததால் அவற்றை அளித்த முருகனுக்கு சிரங்கப்பராயன் எனச் சிறப்புப் பட்டமளித்து வெண்பா எழுதினார் என்றும் குறிப்பிட்டார். 

அந்த வெண்பாவைத் தேடிப் படித்தேன். தனக்கு வந்த சிரங்கு பற்றி நகைச்சுவை மேலிட நான்கு பாடல்களை எழுதி இருக்கிறார் கவிமணி. 
உண்ட மருந்தாலும் உடமுழு தும்பூசிக்
கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு
சிரங்கப்ப ராயா சினம்மாறிக் கொஞ்சம்
இரங்கப்பா ஏழை எனக்கு 

வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்
சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம்
குறைந்திடக் காணேன்; குமரா! சிரங்கு
மறைந்திடத் தாநீ வரம்
அவர் உடலில் வந்த சிரங்குக் கட்டிகள் வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு என பல நிறங்களில் இருந்ததாம். அதை அவர் முருகன் தந்த செல்வமாகக் கருதி எழுதிய வெண்பா 
முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீசு பதக்கமெலாம் - சித்தன்
சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம் 
அரிப்பு தாங்காமல் அவதிப்பட்ட அவர், சொரிந்து கொள்ள இரண்டு கைகள் போதவில்லையே என பன்னிருகையனைப் பார்த்து எழுதிய வெண்பா 
செந்தில் குமரா திருமால் மருகாஎன்
சிந்தை குடிகொண்ட தேசிகா - நொந்தஎன்
மெய்யிற் சிரங்கை விடியுமட் டும்சொரியக்
கையிரண்டு போதாது காண்

உடல்நிலை வருத்தும் பொழுதும் அந்த வேதனையை வெண்பாவாக எழுதினார் என்றால் அவருக்குத் தமிழ் மேல் எவ்வளவு ஆர்வம் இருந்திருக்க வேண்டும். அதிலும் எத்தனை அழகான ஓசை. இப்படி எல்லாம் வெண்பா எழுத எவ்வளவு தமிழ்ப்புலமை வேண்டும். 

போகட்டும். சொல்ல வந்ததைச் சொல்கிறேன். 

இந்த கடைசி வெண்பாவைப் படித்த பொழுது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. அவள் இல்லை, இருப்பவை இந்த ஞாபகங்கள்தானே. 

    
அம்மாவிற்குப் பிடிக்காத வேலைகளை நான் செய்யும் பொழுது, குறிப்பாக இளவயதுக் குறும்புகளையும் அசட்டுத்தனங்களையும் பார்த்து, "பெத்தேனே உன்னை. பெத்த வயித்தில் அடிச்சுக்க ரெண்டு கை போறாது' என்பாள். இந்த கையிரண்டு போதாது காண் ஈற்றடி எனக்கு அவள் சொல்லும் அடிச்சுக்க ரெண்டு கை போறாது என்பதைத்தான் ஞாபகப்படுத்தியது. 

சரி, அதையே வெண்பாவாகவே எழுதி வைப்போமே என்று இதை எழுதினேன். 
பண்ணும் படுத்தலால், பெத்தேனே போதுமென,
மண்ணில் எனைப்பெற்ற மாதரசி தான்சொல்வாள்
மெய்யில் அடித்துன்னை மெச்சியே கொண்டாடக்
கையிரண்டு போதாது காண்!
இருந்து இதைப் படித்திருந்தால், இதுக்கெல்லாமா வெண்பா எழுதுவாங்க, பெத்தேனே உன்னை என்றிருப்பாளே என்னவோ.

6 comments:

said...

ரொம்ப புடிச்ச மாமி, ரொம்ப புடிச்ச கவிதை

said...

//அந்த உரையில் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை// தேசிக விநாயகம்பிள்ளை (ஆனைக்கும் அடி சறுக்கும்/)

said...

நன்றிம்மா... எவ்வளவு படிச்சாலும் எதாவது விட்டுடறேன் பாருங்க. திருத்திட்டேன்.

said...

samalips! ok ok ok!

said...

இந்த வெண்பாவை ரசித்துச் சித்தியும் நிச்சயமாக சந்தோஷப்பட்டிருப்பாள், எங்களைச் போல.

said...

Nicely written. Thatta Kai irandu podume