பொன்னியின் செல்வன் முதல் பாகம் பார்த்தாகிவிட்டது.
படம் பார்ப்பதற்கு முன் சில விஷயங்களில் உறுதியாக இருந்தேன்.
- முன்னோட்டங்கள், பாடல் காட்சிகள் என எதையும் பார்க்கப் போவதில்லை.
- எனக்கு முன் பார்த்தவர்கள் எழுதிய விமரிசனங்கள் எதையும் படிக்கப் போவதில்லை.
- பல முறை படித்திருந்தாலும் நாளாகி விட்டதால் அத்தனை காட்சிகளும் விபரங்களும் ஞாபகத்தில் இல்லை. ஆனாலும் கையில் புத்தகம் இருந்த பொழுதும் படிக்கப் போவதில்லை.
- புத்தகமும் திரைப்படமும் வேறு வேறு விதமான ஊடகங்கள் அதனால் புத்தகத்தில் இருக்கும் அனைத்தும் படத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் போவதில்லை.
- படக்குழுவினரின் பழைய படைப்புகளால் சில கவலைகள் இருந்தாலும் எந்த வித முன்முடிவோடும் படம் பார்க்கப் போவதில்லை.
படம் பார்க்கும் வரையில் இவற்றை பெருமளவில் கடைப்பிடிக்கவே செய்தேன். இன்று படமும் பார்த்தாகிவிட்டது.
இவ்வளவு பெரிய கதைக்களன். அதுவும் பலரிடம் போய்ச் சேர்ந்திருக்கும் கதை. ஐந்து பாகங்களில், ஏகப்பட்ட விவரணைகளோடு எழுதப்பட்ட கதை. இதில் பாதியை திரைப்படத்தின் முதல் பாகத்தில் சுருக்கித் தருவதில் வெற்றி பெற்றுதான் இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
மூலக்கதையில் இருந்து விலகவில்லை. அதை திரைப்படமாக வழங்க எவ்வளவு சுருக்க வேண்டுமோ அவ்வளவு சுருக்கி இருக்கிறார். ஆசான் ஜெயமோகனின் துணை இதற்குப் பெரும்பலமாக இருந்திருக்கும். பாந்தமான நடிகர் தேர்வு. அழகாக படம் பிடித்திருக்கும் ரவிவர்மனின் திறமை. நம் மனத்தில் விரிந்திருக்கும் பிரம்மாண்டத்தைத் திரையில் கொண்டு வர உதவி இருக்கும் கலை இயக்குநர் தோட்டாதரணி என சிறப்பாக அமைந்திருக்கும் கூட்டணி. பாதிக் கதையை இப்படிக் கொண்டு சென்றிருக்கிறார்களே, அடுத்த பாகம் எப்படி இருக்குமோ எனப் பெரிய எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறார்கள்.
நான் அதிகம் திரைப்படம் பார்ப்பவனல்ல. அதுவும் திரையரங்கு சென்று பார்ப்பது என்பது வெகுவாக குறைந்து போய்விட்ட நேரத்தில், இந்தப் படம் ஒரு நல்ல மாற்றாகத்தான் அமைந்திருக்கிறது. சுருக்க வேண்டிய கட்டாயம் என்றாலும் ரொம்பவே சுருக்கி விட்டாற் போல் எனக்குத் தோன்றியது. அழுத்தமான காட்சிகள் போதுமான அளவிற்கு இல்லை. அருள்மொழி வர்மனுக்கு (அருண்மொழி ஆனது ஏனோ) யானைகளுடனான உறவு, பூங்குழலியுடன் பொன்னியின் செல்வன் படகில் சென்றதை எல்லாம் போகிற போக்கில் ஒரு வசனத்தில் சொல்லி இருப்பது ஒரு வித ஒட்டுதல் இல்லாமல் செய்து விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.
படத்தில் எல்லாரும் செந்தமிழில்தான் பேசுகிறார்கள் ஆனால் அது உறுத்தலாகவே இல்லை. பார்ப்பவர்களுக்குப் புரியாது என பேச்சுத்தமிழில் வசனத்தை அமைத்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாதது கல்கிக்குச் செய்த மரியாதையாகத்தான் நினைக்கிறேன். அதனால் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை. கொஞ்சம் நீளம் அதிகமென்றாலும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருப்பதால் சலிப்பின்றி பார்க்க முடிந்தது.
நடிகர்களில் ஜெயராம், ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகிய நால்வரின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தது. அந்தக்காலப் பேரழகி ஐஸ்வர்யா இன்னும் நினைவில் இருப்பதால் இப்படிப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. சரத்குமார் எதோ வந்து போவது போல் இருந்தார். எனக்கென்னவோ அவரிடத்தில் நாசர் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றே தோன்றியது. என்ன காரணத்தினாலோ இத்தனை நட்சத்திரங்கள் இருக்கும் படத்தில் அவருக்கு ஒரு கௌரவ வேடம்தான் அமைந்தது. விக்ரமின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. செந்தமிழில் பேசும் பொழுது உச்சரிப்பு சரியாக இல்லை என்றால் கடுப்பினைத்தான் கிளப்புகிறது. அதில் மேலும் கவனமெடுத்திருக்கலாம். அதே மாதிரி எழுத்துரு. என்னமோ பாதி மலையாள எழுத்துகளை வைத்து எழுதின மாதிரி ஏன் அப்படி எனத் தெரியவில்லை. அதையும் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம்.
சில காட்சிகளில் அதிலும் முக்கியமாக சண்டைக்காட்சிகளில் மேற்கத்திய நெடுந்தொடர்கள் Vikings, Game of Thrones போன்றவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அது படத்தின் தமிழ்த்தன்மையை கெடுத்துவிட்டாற்போல் இருந்தது. ஒரு வேளை அது போன்ற தொடர்களை நான் அதிகம் பார்த்ததால் எனக்கு மட்டும்தான் அப்படித் தோன்றியதோ என்னவோ. தெரியவில்லை.
கதை தெரியாதவர்களுக்கு யார் யாரோடு சண்டை போடுகிறார்கள், ஏன் சண்டை போடுகிறார்கள், யார் நல்லவர், யார் கெட்டவர், பொன்னியின் செல்வன் என்பது திரைப்படத்தின் பெயராக இருந்தாலும் யார் கதாநாயகன் என்பதெல்லாம் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் வில்லன் யாரென்பதில் எனக்குக் குழப்பமே இல்லை. அது ஏ ஆர் ரஹ்மான் தான்!
கதறலான இசை, சூழ்நிலைக்குச் சற்றும் பொருத்தமில்லாத இசைக்கோவை, இந்துஸ்தானி இசைத்துணுக்குகள், கதை போக்குக்கும் கதைக்களனுக்கும் சம்பந்தமில்லாத பாடல்கள், அதிலும் அவரின் பழைய பாடல்களையே நினைவுபடுத்தும் இசை என படத்தின் கரும்புள்ளியாக இருப்பது பாடல்களும் பின்னணி இசையும்தான். அடிக்கடி பாடல்கள் வந்து கொண்டே இருந்தது போல் ஒரு மயக்கம். சில பாடல்களையாவது தவிர்த்திருந்தால் மேலும் சில காட்சிகளுக்கு நேரம் கிடைத்திருக்குமோ என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. ஒரு வேளை இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் என்ற ஏக்கமும் வரத்தான் செய்தது.
இந்த ஒரு விஷயத்தை மட்டும் சரியாகச் செய்திருந்தால் மற்ற சிறுகுறைகள் மறைந்து மிகப்பெரும் வெற்றிப் படமாகி இருந்திருக்கும். ஆனாலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் அதற்கு ஓரளவு ஈடுசெய்யக் கூடிய விதத்தில்தான் மணிரத்னம் தந்திருக்கிறார். இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ என்ற ஆர்வத்தை தூண்டி இருப்பதில் வெற்றி பெற்று இருக்கிறார். கட்டாயம் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டிய படம். பாருங்கள். அப்படியே மூலக் கதையைப் படித்ததில்லை என்றால் படித்தும் பாருங்கள்.
பிகு: PS1 அப்படின்னு சொல்லாதீங்கப்பா, எதோ விடியோ கேம் பேரு மாதிரி இருக்கு. அழகா பொன்னியின் சொல்வன் என்றே சொல்லுங்க.
4 comments:
பார்க்க முடியுதானு தெரியலை. ஆனால் பெரும்பாலோர் பாராட்டி இருக்காங்க. மிகச் சிலரே சோழர்களின் சிவபக்தியை மறைத்துக்காட்டி இருப்பதற்கு வருந்தி இருக்கின்றனர். மணிரத்னத்துக்கு என்ன நெருக்கடியோ? :(
ரஹ்மான் பற்றிய கருத்துடன் முற்றிலும் ஒப்புகிறேன்.
எனக்கும் பாடல்களின் மீது பெரிய ஈர்ப்பு ஒன்றும் இல்லை.
திரும்ப, திரும்ப எங்கும் ஒலிப்பதால் ஒரு familiarity ஏற்பட்டு, பிடிப்பது போன்ற ஒரு மாயைதான் மட்டுப்படுகிறது
இளையராஜா இருந்திருக்கலாம்….
ராஜா மட்டுமில்லை. வைரமுத்துவும் இருந்திருக்கலாம். வைரமுத்து இல்லாத மணிரத்னம் - ரகுமான் காம்போ உப்பே இல்லாத உப்புமா மாதிரி இருக்கிறது. பொன்னிநதி பாக்கணுமே பாடலெல்லாம் கேட்க பரவாயில்லை. படத்தோடு சேர்த்து பார்க்கும்போது கொடூர அனுபவமாகி விட்டது.
உண்மை
Post a Comment