Thursday, September 01, 2022

கேதாரமும் கரும்பும் பின்னே கந்தசாமியும்!

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது சொலவடை. இதையே கிராமத்தில் இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்காதும்பாங்க. அதாவது வாள் எடுத்துச் சண்டை போடறவனும், சிரங்கு வந்து அரிப்பினால் சொறிஞ்சிக்கிறவனும் சுலபத்தில் நிறுத்த மாட்டாங்களாம். இவங்களோட இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவங்க இந்த வெண்பா எழுதும் கோஷ்டி. சும்மாவே இருக்க மாட்டாங்க. 

ஒண்ணு, 'ஈற்றடி என்றும் இனிப்பு', 'பட்டொளி வீசிப் பற', இப்படி கடைசி வரியை (இதைத்தான் ஈற்றடிம்பாங்க) தந்து இதுக்கு வெண்பா எழுதும்பாங்க. இல்லை, யாருக்காவது பொறந்த நாளு, நினைவு நாளுன்னு வந்துட்டா அவங்களைப் பத்தி வெண்பா சமை அப்படிம்பாங்க (வெண்பா எழுதறதுக்குப் பேரு சமைக்கிறதாம்). இப்படி எதுனா ஒரு சாக்கு கண்டுபிடிச்சு, தான் எழுதறோமோ இல்லையோ, அடுத்தவனை எழுத வெச்சுடணும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலைவாங்க. நம்ம ஐயப்பன், சின்னக்கண்ணன், ஆசாத் பாய், சொக்கன், பெனாத்தல்ன்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. இதுல உச்சக்கட்ட வன்முறை என்னான்னா சம்பந்தமே இல்லாத எதாவது ரெண்டு ஐட்டத்தை எடுத்துக்கிட்டு இது ரெண்டுக்கும் ஒத்து வர மாதிரி சிலேடையா வெண்பா எழுதும்பாங்க. 

அப்படித்தான் இந்த ஐயப்பன் எப்பவோ சொன்னதை, இன்னிக்குச் சின்னக்கண்ணன் எடுத்துக்கிட்டு வந்தாரு. மயிலுக்கும் கரும்புக்கும் சிலேடையில் எழுதணுமாம். கரும்புக்கும் மயிலுக்கும் என்னடா சம்பந்தம்ன்னு ஒருத்தர் கூட கேட்கலை. எல்லாரும் உடனே இதுக்கும் தோகை இருக்கு, அதுக்கும் தோகை இருக்குன்னு எழுத ஆரம்பிச்சுட்டாங்க. 


எழுதாம இருந்தா நம்மளைத் தள்ளி வெச்சுடுவாங்களேன்னு நானும் ஒண்ணு எழுதினேன். எல்லாரும் தோகையைப் பத்தியே பேசறாங்களே, நாம வேற எதுனா செய்வோம்ன்னு கண்களில் ஆரம்பிச்சேன். 
கண்கள் பலவுண்டு கண்கவரும் தோகையுண்டு
கண்ணன் நிறத்தில் கழுத்துண்டு - விண்ணவர்கோன்
கந்தபிரான் கோயிலிலே காண்பதற்குத் தானுண்டு
கன்னலுடன் கேதாரம் காண்
சரிடா, எதோ நாலு வரி எழுதிட்டானேன்னு சும்மா இருக்காங்களா! கரும்புக்குக் கண் உண்டா? கேதாரம்ன்னா என்ன? கரும்புக்கும் கந்தனுக்கும் என்னய்யா தொடர்புன்னு கேள்வி மேல கேள்வி. நம்ம வெண்பாவுக்கு எல்லாம் நாமதான் பொருளும் சொல்லணும் போல. 

மயிலுக்குக் கண்கள் உண்டு. முகத்தில் இருக்கும் கண்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு சிறகிலும் இருக்கும் வடிவத்தையும் கண் என்றே சொல்வார்கள். ஆனா கரும்புக்கு? கரும்பு துண்டு துண்டா ஒட்ட வெச்சது மாதிரிதானே இருக்கும். அப்படி ஒட்ட வெச்ச மாதிரி இருக்கிற பகுதிக்குக் கணு எனப் பெயர். கடிக்க முடியாதபடி ரொம்ப கடினமா இருக்கும் பகுதி. அதுக்கு இன்னொரு பேரு கண். ஆக, கரும்புக்கும் கண் உண்டு. 

தோகையில் தொடங்கலைனாலும் கரும்பையும் மயிலையும் பத்திப் பேசும் போது தோகையைச் சொல்லாம இருக்க முடியுமா? அதனால அது ரெண்டாவது. 

கண்ணன் நிறத்தில் கழுத்துண்டு. முதலிலேயே சொல்லிடறேன். இது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போட்ட வரிதான். பொயட்டிக் லைசன்ஸ்! கண்ணன் கருநிறத்தான். கருநீலம்ன்னு சொல்லுவாங்க. கருப்புதான்னும் சொல்லுவாங்க. மயிலோட கழுத்து அப்படி கருநீலமா இருக்கும். கரும்புக்கு தோகையும் தண்டும் சேரும் இடம் பேரு கழுத்து. அதுக்கு மேல பச்சையாகவோ, காய்ந்த சருகாகவோ தோகை இருக்கும் ஆனா அங்கிருந்து கருஞ்சிவப்பா இருக்கும். ஆக கரும்போட கழுத்தும் மயிலோட கழுத்தும் கருமை நிறம் கொண்டவைதாம். அம்புட்டுதான். ரொம்ப அடிக்காதீங்கடே, அடுத்த வரிக்குப் போயிடுவோம். 

மாமனைச் சொன்னால் மருமகனைச் சொல்ல வேண்டாமா. அதனால கண்ணனுக்குப் பின்னாடி கந்தனைப் போட்டுட்டேன். முருகனுக்கு மயில் உண்டு, சரி. ஆனா கந்தனுக்கும் கரும்புக்கும் என்ன தொடர்பு? முருகன் கையில் வேல்தானே இருக்கும் கரும்புக்கு எங்க போக? விடை ரொம்ப சுலபம். ரெண்டு கைகள் மட்டுமே இருந்தா ஒரு கையில் வேலை வெச்சுக்கிட்டு மறு கையால் அருள் பாலிக்கலாம். ஆனா எங்காளுக்குத்தான் பன்னிருகைகள் உண்டே. அப்படி இருக்கும் போது வேல் மட்டுமில்லாமல் கொடி, வில், அம்பு, சங்கு, சக்கரம், சூலம் என எல்லாம் அவர் கையில் இருக்கும். அப்படி இருப்பவற்றில் ஒன்று கரும்பு. கரும்பு வில் என்று சொல்வார்கள். சங்கு, சக்கரம், சூலம், கரும்பு வில் என மற்றவர்கள் கையில் இருப்பதை எல்லாம் இவரே எடுத்துக்கிடுவார் போல. கடவுளை பல வடிவங்களில் பார்த்தாலும் அனைவரும் ஒண்ணுதான்னு சொல்ல இப்படி செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கறேன். நான்கு கைகள் கொண்ட வடிவத்திலும் கரும்புவில், மலரம்பு ஏந்திய வடிவமும் உண்டாம். 

சரிடா, இது எதாவது கோயிலில் இருக்கான்னு கேட்டா, இருக்கே!. திருச்சி - பெரம்பலூர் இடையே இருக்கும் செட்டிகுளம் என்ற கோயிலில் கரும்பு ஏந்திய முருகர் இருக்காரு. அவர் இப்படி இருக்கிறதுக் கதையும் இருக்கு. இந்தச் சுட்டியில் போய் படிச்சுக்குங்க. 


கடைசியா கன்னல் என்றால் கரும்பு. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரைக்கும் கன்னல் என்ற பெயர் உண்டு. இது பழந்தமிழ் இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களின் பயன்படுத்தப்பட்ட சொல்லே. ஈற்றடியில் கன்னல், காண் அப்படின்னு எழுதினதுனால மயிலுக்கும் ககரத்தில் ஆரம்பிக்கும் பெயர் இருந்தால் நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். அதுக்குத் தேடப் போய் கிடைச்சது கேதாரம். 

ஆனாலும் ஒரு நாலு வரியில் வெண்பா எழுதுனதுக்கு இப்படி நானூறு வார்த்தை விளக்கம் தர வெச்சுட்டீங்களேடே! 

(படங்கள் எல்லாம் எப்பொழுதும் போல் இணையத்தில் திருடப்பட்டவையே!)

8 comments:

said...

வாயனம் அரைச்ச வாயும் வெண்பா எழுதின கையும் சும்மா இருக்காது..ன்னு சொன்னவங்க(யாராவது சொல்லியிருப்பாங்க 😀) சரியாத்தான் சொல்லிருக்காங்க.
கன்னலுக்கு மோனையா கானமயில்னு மூதாட்டி சொல்லிட்டு போய்ட்டாங்களே...
கேதாரம் போனஸ். 👌

said...

வணக்கம் உஷா

வாயனம் என்றால் என்ன? கானமயிலை அவங்க எடுத்துக்கிட்டதால்தான் நமக்குன்னு ஒண்ணு தேட வேண்டியதாப் போச்சு!

said...

TIL https://agarathi.com/word/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

Thanks @Usha

said...

செட்டிகுளம் கோயில் தகவல் புதிது. அருமையான சிலேடைக்கும் விளக்கத்துக்கும் நன்றி.

said...

கீதாம்மா வாயால பாராட்டு!! :))

said...

சங்கர், வெறும் தித்திப்புப் பண்டம்ன்னா போதுமா?அல்வாவா அதிரசமான்னு எல்லாம் தெரிய வேண்டாமா?

said...

சொல்லுங்க, தெரிஞ்சிப்போம்.

said...

அதான்யா அவங்களைக் கேட்கறேன்.. நீங்க நடுவில் வந்து ஒரு சுட்டியைப் போட்டுட்டு ஓக்கே TIL அப்படின்னா என்ன அர்த்தம்..