Monday, March 31, 2008

கொத்தனாரின் டைரிக் குறிப்பு!சனிக்கிழமை, மார்ச் 29, 2008

இன்று மதியம் நம்ம ஆன்மீகச் செம்மல் கேஆர்எஸ் சொன்ன அவரைக்காய் பொரிச்ச கூட்டுதான் மெனு. நல்லாவே இருந்தது. முக்கியமா அவரு சொன்னா மாதிரி காயை வெட்டினது வித்தியாசமா இருந்தது.

நம்ம ஜூனியர் நேத்து ஒரு விஷயம் சொன்னாரு. நம்ம ரீச்சர் பதிவிலும் அதைப் பத்தி பின்னர் படிச்சேன். அதாவது நேத்து பூமிக்காக ஒரு மணி நேரம் அப்படின்னு பூமி பற்றிய விழிப்புணர்வுக்காக ஒரு மணி நேரம் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு இருக்க வேண்டுமாம். எவ்வளவோ செஞ்சுட்டோம், இதைச் செய்ய மாட்டோமா அப்படின்னு நாங்களும் அந்த திட்டத்திற்கு சரி என்று சொல்லியாகிவிட்டது. வீட்டில் பொதுவாக மெழுகுவர்த்தி எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்காக போய் சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்தோம். சீக்கிரமே சாப்பாட்டை எல்லாம் முடித்துக் கொண்டு விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு குடும்பமே அதனைச் சுற்றி அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினோம். நம்ம தங்கமணியின் தந்தை அவர் சிறுவயது நிகழ்வுகளை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார். ரொம்ப சுவாரசியமா இருந்ததால ஒரு மணி நேரம் போனதே தெரியலை. இந்த ஒரு மணி நேரமும் குடும்பத்தில் எல்லாரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்ததே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. உலகத்தைக் காக்கறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இப்படிப் பேசவாவது மாசம் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க?ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 2008

Horton hears a Who அப்படின்னு ஒரு திரைப்படம் போனோம். Dr.Seuss
என்பவர் குழந்தைகளுக்கான கதைகள் பலவற்றை எழுதி உள்ளார். எதுகை மோனையுடம் பாட்டுப் போல எழுதப்பட்டிருக்கும் இவரது கதைகள் குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி. இவருடைய கதைதான் இந்த திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காட்டில் ஒரு யானை. அதன் பெயர் ஹார்டன். அந்த யானையின் அருகே பறந்து செல்லும் ஒரு தூசில் இருந்து அபயக் குரல் ஒன்று கேட்டதாக நினைத்து அத்தூசின் பின் சென்று உதவ நினைக்கிறது ஹார்டன். தூசில் இருந்து குரல் கேட்பதாவது எனச் சொல்லி யானைக்குப் பயித்தியக்கார பட்டம் கட்ட நினைக்கின்றன சில மிருகங்கள். தூசினுள் ஒரு உலகம், அதில் ஹூ என்ற ஒரு வித உயிரினம், அவர்களின் வாழ்க்கை, அவர்களுக்கு உண்டான சோதனை எனப் படம் விரிகிறது. ஹார்டனால் ஹூக்களுக்கு உதவி செய்ய முடிகிறதா, பயித்திக்காரப் பட்டம் கிடைத்ததா என்பதுதான் படம்.
"I meant what I said, and I said what I meant" என்று பஞ்ச் டயலாக் பேசும் யானை அழகு! என் பையன் மட்டுமின்றி நானும் எங்களுடன் வந்திருந்த தங்கமணியின் தாயாரும் கூட ரசித்துப் பார்க்கும் வண்ணம் படத்தை எடுத்திருக்கும் குழுவினருக்கு ஒரு சபாஷ்!

இன்று இரவு ரீச்சரின் பள்ளிக்கூடத்தில் கற்றுத் தந்த பீர்க்கங்காய் வாட்டெவர் இட் இஸ் செய்தேன். நன்றாக இருந்தது. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாகவே இருக்கிறது.

டிஸ்கி: என்னிடம் கேள்வி கேட்டுப் பதிவு போட்ட பொழுது ஆபாசப் பின்னூட்டங்கள் அதிகம் வருவதாக நண்பர் டிபிசிடி சொன்ன பொழுது மிக வருத்தமாய் இருந்தது. நான் இது வரை எழுதியது எதுவுமே கண்ணியம் குறைந்து இல்லை. என் நண்பர்கள் யாரும் அது போல செய்பவர்கள் இல்லை. இது வரை இந்த மாதிரி குற்றச்சாட்டு வந்ததும் இல்லை. அது பற்றிய விபரங்கள் (பெயர், ஐபி முகவரி போன்றவை) இருந்தால் அவைகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது எனக்கு அவற்றைப் பின்னூட்டமாக தந்தால் நான் வெளியிடுகிறேன். இப்படி ஒரு டிஸ்கி போட வேண்டிய நிலையில் தமிழ்வலையுலகம் இருப்பதற்காக வருந்துகிறேன்.

Wednesday, March 26, 2008

நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!

அன்பு வாத்தியாருக்கு வணக்கங்கள். தங்களின் நட்சத்திர வாரப் பதிவுகளை ஆவலுடன் படித்துக் கொண்டு வருகிறேன். என்னைப் போன்றவர்களுக்கு போன தலைமுறை தலைவர்களைப் பற்றி நீங்கள் தரும் அறிமுகங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பதிவைப் படித்த உடன் என் மனதில் எழும் உணர்ச்சிகள் குறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை. நிற்க.

நான் அண்ணாவின் காலத்தில் பிறக்கவே இல்லை. அதனால் என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் தயவு செய்து திருத்தவும். ஆனால் பிறந்தது முதலாக இந்தக் கழகங்கள் அடிக்கும் கூத்துக்களுடனே வளர்ந்தவன் என்கின்ற முறையில் எனக்கு இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது எழுந்த உணர்வுகள் இவைதான்.

அவரின் பேச்சுத் திறனைப் பற்றி நீங்கள் பெருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். அது பற்றிப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் பேச்சுக்களை அதிகமாய்க் கேட்டதோ படித்ததோ கிடையாது. அப்படி இருக்கையில் நீங்கள் இங்கு காட்டாகத் தந்திருக்கும் சிறு பகுதியைப் படித்த பொழுது எனக்கு இதுவா இவரின் பேச்சுத் திறன் என்றே தோன்றுகிறது. சினிமா வசனம் போல் எதுகை மோனைகளும் அடுக்குத் தொடர்களும் இருந்தால் நல்ல பேச்சு என்றே நாம் வளர்ந்து விட்டோமா? அந்த பேச்சின் சாரம் என்ன என்பது பற்றிப் பார்க்கவே வேண்டாமா? நீங்கள் கலக்கல் என்று குறிப்பிட்டு இத்தனை வருட காலம் உங்கள் நினைவில் இருக்கும் இந்தப் பேச்சில் என்ன சொல்ல வருகிறார்? புராண காலங்களில் ரயில் ஓடியதா? டெலிபோன் இருந்ததா? ரேடியோ இருந்ததா? வெயர்லெஸ் இருந்ததா? என்றெல்லாம் கேட்கிறார். இதில் என்ன சொல்ல வருகிறார்? என்ன கருத்து இருக்கிறது? இன்றைக்கு நாம் பார்க்கும் ஹிந்து மத துவேஷம் அன்றே இருந்தது என்பது மட்டும்தான் தெரிகிறது. அன்றைக்கு அவர் ஆரம்பித்து வைத்த அடுக்கு மொழி தமிழில் பேசினால் போதும் ஆனால் அர்த்தம் தொனிக்கப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற சூத்திரம்தான் இன்றைக்கும் நம்மிடையே இருக்கிறது என்று தெரிகிறது. இன்று கூட வேறொரு வலைப்பதிவில் படித்தேன். முதல்வர் கேட்டு இருக்கும் கேள்வி ஒன்று என்ன தெரியுமா? "சீதையை ராவணன் அபகரிச்சுகிட்டுப் போனபோது எந்த போலீஸ்காரர் தடுக்க முயற்சிசெஞ்சார்னு முதல்வர் கருணாநிதி லேட்டஸ்டா கேட்டிருக்காரு." ரெண்டு பேர் பேச்சுக்கும் ரொம்பவும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அண்ணாவின் வழி நடப்பவன் என்று கலைஞர் சொல்லும் பொழுது உண்மையைத்தான் சொல்கிறார். இந்த அளவிலாவது.

நாமும் இன்று பேசலாம் அண்ணாவின் ஆட்சியில் இண்டர்நெட் இருந்ததா, அண்ணா காலத்தில் டாட்டா நேனோ உண்டா, இல்லை ஐபாட்தான் உண்டா? இப்படிப் பேசினால் என்ன பயன்? இல்லை உருப்படியாக எதாவதுதான் சொல்ல வருகிறோமா? இப்படி அர்த்தமற்ற அடுக்கு மொழி பேசியே நாட்டு மக்களை மயக்கி வாக்குகளை அள்ளிச் செல்வதை விடுத்து இதுவரை செய்தது என்ன, இனி செய்யப் போவது என்ன என்று சொல்லி வாக்கு கேட்கும் நிலை என்றாவது வருமா? இப்படிப்பட்ட பேச்சு ஒன்றைக் கலக்கல் பேச்சு என நீங்கள் சொல்வதால் இதில் அப்படி என்ன கலக்கலை கண்டு கொண்டீர்கள் எனப் புரியாமல் விழிக்கிறேன். கதைகளில் எழுதப்பட்ட வர்ணனைகள் என்றால் சரி அல்லது ஒரு இலக்கிய கூட்டமென்றால் கூட சரி. அரசியல் மேடையில் இது போன்ற பேச்சுக்கு என்ன அவசியம் என்றுதான் புரியவில்லை.

உண்மைத்தமிழன் சொல்லி இருக்கிறார் "பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்கின்ற தலைப்பிலேயே ஒரு மனிதர் 2 மணி நேரம் பேச முடிகிறதெனில் அவருடைய அறிவுத் திறனை பற்றி யாரால் மதிப்பிட முடியும்.." உண்மைதான். இப்படி எந்தவிதமான தலைப்பில் அழகாகப் பேச தனித்திறமைதான் வேண்டும். ஆனால் அந்தத் திறமையை இலக்கிய மேடைகளோடு நிறுத்திக் கொள்வதுதானே நியாயம். அரசியல் மேடையிலும் இந்த மாதிரி அழகான தமிழில் பேசினால் போதுமே தவிர அர்த்தம் என்ற ஒன்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதா சரி? வாத்தியார் என அழைக்கப்படும் நீங்களே இதனை இவ்வளவு பாராட்டிப் பேசுகிறீர்களே. இதுதான் என்னைக் குழப்புகிறது. இன்றைக்கு தமிழ்வலைப்பதிவுகளில் இது போல் கேட்கவேண்டுமானால் புதசெவி என்று சொல்ல வேண்டுமாமே. நானும் சொல்கிறேன். புதசெவி!

உங்கள் அளவுக்கு, நீங்கள் சிலாகித்த பேச்சில் எந்த ஒரு ஆழமான பொருளும் இல்லை என்று நினைப்பதால், நேரடியாகவே கேட்டுவிடலாமே என்றே இந்தக்கேள்வி. அண்ணாவைப் பற்றி சரியாகவோ, தவறாகவோ பேசும் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. அண்ணாவின் பிம்பமும் கேள்விகள் கேட்கக்கூடாத அளவுக்குக் கட்டமைக்கப்பட்டுவிட்டதா, கேள்வி கேட்டால் தமிழினத் துரோகி என்று பட்டம் கட்டப்படுவேனா - அதுவும்தான் தெரியாது. அப்படியே சொன்னாலும் -- புதுசா என்ன?

Friday, March 21, 2008

பிரம்ம ரசம் பொங்க சூப்பர் மூளைப் பயிற்சி!!

நம்ம வவாசங்கத்தினர் அவங்களோட ரெண்டாவது வயதைக் கொண்டாட பிரம்ம ரசத்தை ஓடவிடும் போட்டி ஒண்ணை அறிவிச்சு இருக்காங்க. கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியில் ஜெயிக்க உங்களுக்கு உதவலாமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவில் நான் சொல்லித் தரப் போவது ஒரு எளிமையான உடற்பயிற்சி. இதை தொடர்ந்து செய்து வந்தீங்கன்னா உங்க மூளைக்கு அதிக அளவில் சக்தி கிடைத்து சூப்பர் மூளையாகிடுமாம். அது என்ன அப்படின்னு பார்க்கறதுக்கு முன்னாடி எதுக்காக உடற்பயிற்சி அப்படின்னு பார்க்கலாம்.

உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம். அப்படியே மனதை ஒருமுகப்படுத்துவது, அல்சைமெர்ஸ் போன்ற வியாதிகள் வருவதைத் தாமதப்படுத்துவதுன்னு ஏகப்பட்ட பயன்கள் உள்ளனவாம். எப்படின்னா உடற்பயிற்சியின் மூலம் மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. அதனால் மூளையில் அதிக சக்தி வர ஏதுவாகி அவை நல்ல முறையில் இயங்க உடற்பயிற்சி உதவி புரிகிறதாம். முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

இப்போ நாம அந்த சூப்பர் மூளைப் பயிற்சி என்னன்னு பார்க்கலாம். யோகாசனங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது அக்யூபஞ்சரின் நலன்களையும் தருதாம். யேல் பல்கலைக்கழகத்தின் யூஜீனியஸ் ஆங் என்பவர் கண்டறிந்து இருக்கும் தகவல் இது. மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.

4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.

சரியாக புரிந்து கொள்ள இந்தப் படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்!

ஆமாங்க ஆமாம். அதேதான். நம்ம ஊர் தோப்புக்கரணம் போடறதைத்தான் இந்த சூப்பர் மூளைக்கான பயிற்சியா சொல்லறாங்க! இந்த செய்தியின் மூலத்தைப் பார்க்க இங்க போங்க. அதுல மாஸ்டர் சோவா கோக் சூய் என்பவரின் சூப்பர் ப்ரெயின் யோகா என்ற தளத்திற்கு சுட்டி குடுத்து இருக்காங்க. அங்க இதை இன்னும் விளக்கமாச் சொல்லி இருக்காங்க.

எங்க உறவினர் ஒருவர் அனுப்பின இந்த சுட்டியைப் பார்த்துட்டு எங்க அண்ணன் அடிச்ச கமெண்டு - "யோகா எல்லாம் செய்ய வேண்டியதுதாண்டா, ஆனா இந்த யோகாவைச் செய்யும் பொழுது எதிரில் தங்கமணி இல்லாமப் பார்த்துக்குங்க. ஏற்கனவே உங்க பேருஒரு மாதிரியாத்தான் இருக்கு!!" அண்ணன் சொன்னதை அப்படியே சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு ரிப்பீட்டேய் எனச் சொல்லி, அனைவரும் இந்த யோகாசனத்தை செய்து சூப்பர் மூளை பெற்று நம்ம சங்கத்துப் போட்டியில் வெல்ல வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!

Thursday, March 13, 2008

விண்ணோடும் முகிலோடும்....

லாரா கண்டுபிடித்து இருக்கும் விண்கலத்தில் முதல் முதலாகப் பயணம் செய்ய நான் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி இப்பொழுதுதான் என்னை எட்டியது. இறுதிகட்டத்தில் என்னையும் சேர்த்து மூன்று பேர் இருந்தார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். வரலாற்றில் என் பெயர் இடம் பெறப் போகிறது. சந்தோஷமாக மட்டுமே இருக்க வேண்டிய இந்த வேளையில் ஏனோ என் மனம் வெறுமையாக உணர்கிறது. இதற்குத்தான் எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள். இந்தப் பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டுமா, இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம் மேலிட, அதனை மறக்க சற்றே பழைய காலத்தை அசைப் போடத் தொடங்குகிறேன்.

விஞ்ஞானிகள் பலர் இருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என் தாய். எந்த வித சூதுவாதும் அறியாத, எளிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரின் கருப்பையை நிறைத்துவிட்டுக் காணாமல் போன என் தந்தை. இதுதான் என் கதையின் ஆரம்பம். தந்தை யாரென்று அறியாமலே பிறந்தோம். ஆமாம் நான் தனியாகப் பிறக்கவில்லை. என்னுடன் பிறந்தவர் என் இரு சகோதரர்கள். எந்த விதமான கவலையும் இல்லாதபடி நல்லபடியாகத்தான் என் தாயார் எங்களை வளர்த்து வந்தார்கள். ஆனால் மூன்று குழந்தைகளையும் தனியாக வளர்ப்பது என்றால் சாதாரணமா? மூவரையும் சமாளிக்க முடியாமல் அம்மா கஷ்டப்பட, எங்களை தத்துக் கொடுக்க முடிவு செய்தனர் என் குடும்பத்தினர். மற்றவர்களை விட்டாலும் என்னைப் பிரிவதை சற்றும் தாங்க முடியாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்த இக்குடும்பத்தின் மூத்த பெண் லாராவின் பிடிவாதத்தினால் நான் மட்டுமே தத்துப் போகாமல் தப்பித்தேன். "உன் கண்ணின் அழகில் மயங்கித்தான் பெண்ணே, உன்னைத் தத்துக் கொடுப்பதைத் தடுத்தேன்" என்று இன்னும் என்னைக் கொஞ்சும் பொழுதுதெல்லாம் சொல்லி மகிழ்வாள் லாரா. இந்த கதை எல்லாமும் அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும், இல்லை என்றால் சிறு வயதில் நிகழ்ந்தது எல்லாம் எனக்கு எப்படித் தெரியும்.

சகோதரர்களை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்து கொண்டிருந்த என் வாழ்வில் அடுத்து வீசிய புயல் என் தாயின் சுகவீனம். நன்றாக இருந்த அவரின் சிறுநீரகங்கள் திடீரென்று பாதிக்கப்பட்டு, எந்த வித சிகிச்சையும் பயனளிக்காமல் சில நாட்களிலேயே போய் சேர்ந்துவிட்டாள். யாருமே இல்லாமல் நின்ற எனக்கு அன்று தாயாய் இருந்து பார்த்துக் கொண்டது லாராதான். அவள் மட்டும் இல்லாமல் இருந்தால் நான் இன்று இந்த நிலமைக்கு வந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். குடும்பத்தில் பலரைப் போல விஞ்ஞானத்தில் திறமையுடையவளான லாரா தேர்ந்தெடுத்த துறை விண்வெளி ஆராய்ச்சி. பூமியைத் தாண்டிச் சென்றால் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவற்றின் ஒரு பகுதியையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும். நம் அண்டத்தின் எல்லைகளுக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பாள். அதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆராய்ச்சிக்கூடமே கதி என்று கிடப்பாள். எனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் சுத்தமாய் புரியாது என்றாலும் அவளுக்குத் துணையாக நானும் அங்கேயே இருப்பேன். அவளின் ஆராய்ச்சி பற்றி எல்லாம் என்னிடம் பேசிக்கொண்டே இருப்பாள் லாரா. எனக்குப் புரிகிறதோ இல்லையோ நானும் கேட்டுக் கொண்டே இருப்பேன். உன்னிடம் வாய்விட்டுப் பேசும் பொழுது நான் செய்யும் தவறுகள் எனக்குத் தெரிகின்றன. நான் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றேன் என்றால் அதில் உனக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பாள். அவளே உலகம் என வளர்ந்து வந்த எனக்கும் அவள் அப்படிச் சொல்வது பெருமையாகவே இருக்கும்.

ஒவ்வொரு முறை அவள் ஆராய்ச்சி தோல்வி அடையும் பொழுதும் துவண்டுவிடுவாள் லாரா. ஆராய்ச்சிக் கூடத்தின் பக்கமே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடப்பாள். அவளை சமாதானப் படுத்தி மீண்டும் அங்கு செல்ல வைக்க வேண்டிய வேலை என்னுடையது. வேலையைத் தொடங்கிய பின் எனக்கு நன்றி சொல்லி அணைத்துக் கொள்வாள். ஆராய்ச்சி வெற்றியை நோக்கிச் செல்லும் பொழுதெல்லாம் ஆனந்தமாய் என்னைக் கட்டிக் கொள்வாள். இப்படி அவளுடனே இருப்பது எனக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. பல தோல்விகளுக்குப் பின் அவள் நினைத்ததை சாதித்து விட்டாள். விண்வெளிப் பயணத்திற்கான கலம் ஒன்றை தயார் செய்து விட்டாள். அதுவரை விண்ணில் ஏவப்பட்ட கலங்களை விட நேர்த்தியான கலம் ஒன்றை வடிவமைத்து விட்டாள். இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் பலராலும் சோதனை செய்யப்பட்டு லாராவின் கண்டுபிடிப்பு வெற்றி என்றே அறிவிக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. அப்பொழுதுதான் அந்த குண்டை வீசினாள் லாரா. அவளே அப்பயணத்தை மேற்கொள்ள ஆசைப்பட்டதாகவும் அதற்கு அரசாங்கம் அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் சொன்னாள்.

அந்த கலத்தில் முதன் முறையாகச் செல்லும் பெருமை அவளுக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அது நம் குடும்பத்தில் ஒருவருக்காவது கிடைக்க வேண்டும். அதனால் நீதான் போக வேண்டும் என்றும் சொல்லிவிட்டாள். இந்த ஆராய்ச்சியில் என்னை தொடர்ந்து ஈடுபட வைத்து என்னளவு ஆராய்ச்சிக் கூடத்தில் நேரம் செலவிட்டது நீதான். நான் போக முடியாத கட்டத்தில் நீதான் போயாக வேண்டும் என்று அவள் கூறும் பொழுது எனக்குப் பெருமையாகவே இருந்தாலும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமா என்று கவலையாகவே இருந்தது. ஆனால் நான் போயாக வேண்டும் என்பதில் லாரா உறுதியாகவே நின்றாள். அப்பொழுதுதான் அவள் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக வந்தான் அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் தலைவன்.

இந்தப் பயணத்திற்குத் தகுந்தவர் என என்னை விட அறிவு கூர்மையானவர், திறமையானவர் என ஒருவரைச் சொல்லி அவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வாதிடத் தொடங்கினான். அவனுக்கு ஆதரவாய் ஆராய்ச்சிக் கூடத்தில் பலரும் பேசத் தொடங்கினர். பிரச்சனை பெரிதாகத் தொடங்க அரசாங்கமும் இதில் பங்கு கொள்ளத் தொடங்கியது. இத்துறையின் அமைச்சர் தன் சார்பில் ஒருவரைக் கொண்டு வந்து அவர்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மேலும் குட்டையைக் குழப்பினார். இப்படி ஆளாளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என குரல் கொடுக்கத் தொடங்க பிரச்சனை பெரிதாகத் தொடங்கியது. எனக்கு இந்த பயணத்தில் ஆசையே இல்லை. லாராவுடனே இருக்கத்தான் எனக்குப் பிடித்திருந்தது. அதே சமயம் அவள் வேண்டுமென்றதை மறுக்கவும் மனதில்லை. என்ன செய்ய என்று நான் குழம்பிக் கிடந்த அந்த வேளையில் நாடே இந்த விஷயத்தால் குழம்பி இருந்தது. இறுதியில் யாரைத் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்ய ஒரு நிபுணர் குழு ஒன்றை அமைத்து அவர்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. லாராவின் சிபாரிசினால் அதில் ஒன்றாக என் பெயரும் இருந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு கடுமையான பயணத்தை மேற்கொள்ள முடியுமா என அறிவதற்காக வித விதமான சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு இருக்கையில் கட்டி வைத்து மிகுந்த வேகத்தில் சுற்றுவது, தலைகீழாக நெடு நேரம் இருப்பது, எடையில்லாத சூழலில் இருப்பது என எத்தனையோ சோதனைகள் நடத்தப்பட்டன. இரத்தம் தலைக்குப் பாயும் போதும், தலைசுற்றி வாந்தியும் மயக்கமும் வரும் போதும், என்னை விட்டு விடுங்கள் எனச் சொல்லிவிட்டு விலக நினைத்தாலும் லாராவின் ஆசை நிறைவேற வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன். அவ்வளவு சோதனைகளையும் முடித்த பின் தேர்வுக்குழு தன் பரிந்துரையை இன்று அளித்துள்ளது. கடைசி வரை பரிசீலிக்கப்பட்ட மூவரில் என் பெயரைச் சொல்லி இருக்கிறார்கள். என்னைத் தேர்ந்தெடுத்ததை விட லாராவின் எண்ணம் ஈடேறியதனால் எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அவளை விட்டு பிரிந்து செல்லப் போகிறோம் என்ற எண்ணமும் உடன் வருவதால்தான் மனதில் அத்தனை வெறுமை.

அப்பொழுது குதூகுலமாக வந்து "லாய்கா, என் கனவு பலித்து விட்டது! என் கலத்தில் முதன் முதலில் செல்லப் போவது நீதான்!" எனச் சொல்லி என்னை ஆரத் தழுவும் லாராவிற்குத் தெரியாமல் என் கண்ணீரை அடக்கிக் கொண்டு நானும் வாலாட்டி, அவள் முகத்தை நக்கி என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

நவம்பர் 1957

Wednesday, March 12, 2008

தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும்!

"தனி ஒரு மனிதனுக்கு பதிவிட நேரமில்லையெனில்......" இதுதாங்க நம்ம தன்னிலைச் செய்தி! அப்படி ஒரு செய்தி போடற அளவுக்கு நமக்கு ஆணி! அந்த தன்னிலைச் செய்தியைத் தொடர்ந்து அடுத்ததா ".... பதிவை குழுமப் பதிவாய் ஆக்கிடுவோம்!" அப்படின்னு சொல்லி இலவசத்தில் எழுத வாருங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணக்கூட தயார் ஆகிட்டேன். ஆனாப் பாருங்க, ஒரு வேலையாய் மேற்கு கடற்கரை வரை சென்று வர வேண்டியதாக ஆயிற்று. ஆறு மணி நேர விமானப் பயணம். கையில் மடிக்கணினியையும் கூடவே கடந்த இரு மாதங்களாக படிக்காமல் வைத்திருந்த தென்றல் இதழ்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பியாகி விட்டது. (இணையத்தில் படிக்கக் கிடைக்கும் தென்றல் இதழைப் படித்துப் பாருங்கள். நல்ல மாத இதழ். அதிலும் என்னைக் கவர்ந்தது நண்பர் வாஞ்சி தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்.)

இந்த மாத இதழில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களுடனான நேர்காணல் இடம் பெற்று இருந்தது, மிகச் சுவையாக பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருந்தார். அதில் பதிவு போட விஷயம் கிடைத்ததுதான் விசேஷமே!!

அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!

கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?

பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.

பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.

கேள்வி: தென்றல் வாசகர்களுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்: பொதுவாக, இந்தியாவிலுள்ள பள்ளிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ளவர்கள் நிதி திரட்டி கணிப்பொறிகள் இதர தளவாடங்களை வாங்கி அனுப்பிவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இது நல்ல பணிதான். இருந்தாலும் ஒன்று சொல்வேன். இந்தியா ஒரு மாபெரும் நாடு. இதன் பிரச்சனைகளை உங்களால் தீர்த்து வைக்க முடியாது. அதற்குப் பதிலாக வசதிமிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள், மொரிஷியஸ், பிஜி, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தம் அடையாளத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைப் பற்றி எண்ணி ஏற்றது செய்ய உதவுவதே சாலச் சிறந்தது. (எனத் தொடங்கி ஒரு நீண்ட பதிலை தந்துள்ளார்)

இந்த இரண்டு கருத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் ஒன்றில் உடன்படுகிறேன், மற்றொன்றில் வேறுபடுகிறேன். முதலாவது கருத்தின் சாரத்தை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன். சொல்லி இருக்கும் காரணங்களிலும் முறையிலும் சற்றே வேறுபடுகிறேன். என்னளவில் எதையுமே இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டளை இடுவது என்பது தவறான ஒரு அணுகுமுறை. ஒரு மாணவன் தனக்கு எதன்பால் ஈர்ப்பு இருக்கிறதோ அதனைத்தான் படிக்கச் சொல்லவேண்டுமே தவிர்த்து இதைத்தான் படித்தாக வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதல் தவறு. நம்மிடையே கூட படிக்கும் காலத்தில் வேப்பங்காயாகத் தமிழ் கசந்தது எத்தனை பேருக்கு என நம்மை நாமே கேட்டுக் கொண்டு பாருங்களேன். எனக்கு இப்பொழுது தமிழின் மேல் இருக்கும் ஆர்வத்தில் ஒரு பங்கு கூட படிக்கும் பொழுது கிடையாது. அவ்வகை கற்பித்தலை மாற்றி நல்ல ஆர்வம் வரக்கூடிய முறையில் கற்பிக்கும் முறையைக் கொண்டு வருதல் அவசியம். அப்படி ஆகுமே ஆனால் தமிழை விரும்பி படிப்பவர் எண்ணிக்கை தன்னால் ஏறும். இன்று பல இடங்களில் நாம் காணும் கட்டாயத் தமிழ் பாடம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்படி ஒரு தமிழார்வலரின் எண்ணமும் அது போல் இருப்பது ஆச்சரியமே!

அடுத்த பதிலைப் பார்த்தோமானால் அதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. நாம் இன்று தமிழகத்தில் இந்தியாவில் இருக்கும் பள்ளிகளுக்கு உதவி செய்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நாம் பிறந்த மண்ணில் நம்மால் ஆன உதவி செய்ய வேண்டும், நமக்குக் கிடைத்த / கிடைக்காத சந்தர்ப்பங்கள் இன்றைய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதானே குறிக்கோளாக இருக்கும். இதில் எனது மண் செழிக்க வேண்டும் என்ற சுயநலம் இழையோடுவதை மறுக்க முடியுமா? அது என் பள்ளி, என் ஊர், என் மாவட்டம், எனது மாநிலம் என எல்லைகள் விரியும். அவ்வளவுதான். ஆனால் இதை விடுத்து மொரிஷியசில் தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் என்னால் யோசிக்க முடியவில்லை. நான் என் சுயநலம் கலந்த உதவிகளைச் செய்யப் பார்க்கின்றேன். தமிழை வளர்க்க என்னை விடப் பெரியவர்கள், அவர்கள் நடத்தும் அரசாங்கம் பாடுபடட்டும் .

என்ன சொல்லறீங்க?

டிஸ்கி: முனைவர் குழந்தைசாமி அவர்கள் என் பதிவைப்படிக்கமாட்டார், எனவே "ஐயோ! என்னை மட்டும் குறிவச்சு எழுதறாண்டா!" என்ற அவச்சொல் இந்தப்பதிவுக்கு வராது! அவரை மட்டும் குறிவைத்துக் கேள்வி கேட்கப்படவில்லை என்பதால் நீங்களும் உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள்.