பா. ராகவன் என் தமிழாசான்களில் ஒருவர். எழுத வேண்டும், தவறில்லாமல் தமிழில் எழுத வேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருக்கிறது என்றால் அதற்கு பாராவும் ஒரு காரணம் என்பது நான் பல முறை சொல்லி இருப்பதுதான்.
இன்றைக்கு அவரிடம் தமிழுக்காக நான் வாதாட வேண்டி வந்தது காலத்தில் கோலம் என்பதல்லாமல் வேறென்ன.
முதலில் அவர் என்ன எழுதி இருக்கிறார் என்று பார்த்துவிடுவோம்.
நேரடியாகப் பார்த்தால் சரியாகத்தானே இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? அது கை வந்த எழுத்தாளரின் கலை. அதற்கான அங்கீகாரத்தை நாம் முதலில் தரத்தான் வேண்டும். ஆனால் அதே சமயம் அதில் பொருட்குற்றம் இருக்கிறதென்றால் அதையும் நாம் சொல்லத்தானே வேண்டியிருக்கிறது. ஆனானப்பட்ட சிவபெருமான் எழுதியதில் பொருட்குற்றம் இருந்த பொழுது நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என நிமிர்ந்து நின்ற நக்கீரர் பரம்பரையல்லவா நாம். அவர்வழி நடப்பதுதானே நம் நெறி. செய்வோம்.
ஐயா பாரா, தமிழ் எப்பேர்பட்ட மொழி. புலவர்கள் அறம் பாடினால் அது நடந்து விடும் சக்தி கொண்ட மொழியல்லவா நம் மொழி. அதில் ஒரு பயன்பாடு வருகிறதென்றால் அது உண்மையாகத்தானே இருக்க முடியும். தவறான பயன்பாடு நிலைக்குமா? நம் மொழியின் வீரியம் அதைப் புடம் போட்ட தங்கமாக மாற்றிவிடும் என்பதல்லவா உண்மை? உதாரணத்திற்கு நீங்கள் அங்கலாய்க்கும் வாங்க என்ற சொல்லையே எடுத்துக் கொள்ளலாம்.
ஓர் ஆணைக் குறிக்க ஒருவன் என்கிறோம். ஒரு பெண்ணைக் குறிக்க ஒருத்தி என்கிறோம். ஓயாது குரைக்கும் குணம் உடையவளை ஒருவள் என்கிறோம் எனச் சிலர் சொல்வதை இப்போதைக்குத் தள்ளி வைப்போம். மாதர் சங்கம் திரண்டால் நமக்காகாது. ஒருவனையோ ஒருத்தியையோ வரச் சொன்னால் வா என்கிறோம். போகச் சொன்னால் போ என்கிறோம். ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அழைக்கும் பொழுது நீ என்பது நீங்கள் என்றும் வா என்பது வாங்க என்று பன்மையாக மாறுகிறது.
இதுவே மரியாதைக்குரியவர் என்றால் அவரைச் சொல்லும் பொழுது நீங்கள் வாருங்கள் என்று எழுத்திலும் நீங்க வாங்க எனப் பேச்சுத் தமிழிலும் சொல்கிறோம். ஒன்றுக்கும் மேற்பட்டவர்க்கு இணையானவர் நீங்கள் என்பதை உணர்த்தும் வகையில்தான் நாம் இப்படிச் சொல்கிறோம் என்பதற்காகத்தான் மேலே பன்மைக்குச் சொன்ன அதே சொல்லை இங்கு மரியாதை ஒருமைக்குச் சொல்கிறோம் என்பது தமிழ் மொழியின் அற்புதத்தை நமக்குப் பறைசாற்றுகிறதல்லவா?
சரி. வயதில் மூத்தவர் இருவர் இருக்கும் பொழுது நீங்க வாங்க எனச் சொன்னால் அதில் ஒருவரை அழைக்கிறோமா அல்லது இருவரையும் அழைக்கிறோமா என்ற மயக்கம் வருகிறதல்லவா? அங்கேதான் தமிழின் நெகிழ்வுத்தன்மை நமக்கு உதவுகிறது. அப்படி இருவரையும் நாம் வரச் சொன்னோமானால் நீங்க வாங்கங்க என இயல்பான ஒரு திரிவு நிகழ்கிறது. குழப்பமில்லாமல் பேச நமக்குத் தமிழ் வழிவகை செய்கிறது.
“வாங்க வாங்க” என வீட்டுக்கு வருபவர்களை வாய் நிறைய அழைக்கிறோம். “வாங்க வா” என ஒருவனைக் கடைக்கு அழைக்கிறோம். இதைப் போலத்தானே அந்தத் தொடர்களில் சொல்வதும். ஓர் உதாரணம் தருகிறேன். கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் என் நண்பனின் தாத்தா திண்ணையில் அமர்ந்திருப்பார். போவோர் வருவோரை நிறுத்திப் பேசுவதுதான் அவருக்குப் பொழுதுபோக்கு. கீரை விற்பவரிடம், “கீரையா விக்கற? என்ன கீரை? கட்டு எவ்வளவு?” என்று விசாரிப்பார். அவ்வளவுதான். வாங்க எல்லாம் மாட்டார்.
நான்: சும்மா, இப்படிக் கடைக்குப் போய் சாமான் வாங்கங்க. உங்களுக்கும் வாங்க எதாவது இருந்தா நீங்களும் பாட்டியும் வாங்கங்க. இல்லை நீங்க மட்டுமாவது வாங்க வாங்க.
இதில் என்ன குழப்பம் கண்டீர்? என்ன பிழை கண்டீர்? வாங்குவதற்காகத்தானுங்க என்பதை வாங்கங்க எனச் சுருக்கினாலா தவறு? அல்லது நீங்கள் வாருங்கள் என்பதை மரியாதை ஒருமையில் நீங்க வாங்க என்றும், நீங்களும் பாட்டியும் வாருங்கள் என்பதை மரியாதைப் பன்மையாக வாங்கங்க என்பது தவறா? சுருக்கமாகச் சொன்னால்
வா. ஒருத்தன் / ஒருத்தி வர.
வாங்க. பல ஒருத்தன்கள் / ஒருத்திகள் வர. அல்லது மரியாதைக்குரிய ஒருவர் வர.
வாங்கங்க. பல ஒருவர்கள் வர.
இப்படி மிகைத் திருத்தம் செய்வது இவர் மட்டுமல்ல. இவர் வளர்த்துவிட்டவர்கள் அனைவருமே ஒரு விதப் பண்டிதத்திமிரோடுதான் அலைகிறார்கள். முன்னேர் செல்லும் வழிதானே பின்னேரும் செல்லும். முக்கியமாக இலவசக்கோனாரோ கொத்தனாரோ. அப்படி ஒருத்தன் அலைகிறான். மிகைத் திருத்தச் செம்மல். அண்மை என்பதை அருகாமை என்று சொல்லக் கூடாது. முயற்சித்தல் என்றால் தவறு. அவைகள் இவைகள் என்றெல்லாம் சொல்லக் கூடாது என்று எதற்கெடுத்தாலும் தொல்காப்பியரின் எள்ளுப்பேரன் மாதிரி எப்பொழுதும் எதையாவது சொல்லிக்கொண்டு திரிகிறான். இவற்றில் எதுவய்யா பிழை? எல்லாமே தமிழ்தானே.
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது ஒரு பழமொழி. ஏன் அப்படி என்ற கதைக்குள் போக வேண்டாம். அது நம்மை வேறு பக்கம் இழுத்துச் சென்று விடும். ஆனால் வழிவழியாக வந்த மொழி தவறாகுமா என்ன? வீடு உருப்படாது என்றால் வீட்டில் உள்ள செல்வம் போய்விடும், நிம்மதி போய்விடும், மகிழ்ச்சி போய்விடும். இப்படி எல்லாமே விட்டு விலகி விடும். ஆனால் அதே ஆமை கண்ணில் படாதவாறு அருகிப் போனால் அங்கு என்ன நடக்கும்? அந்த வீட்டில் நிம்மதி இருக்கும். செல்வம் இருக்கும். பணம் இருக்கும். பொருள் இருக்கும். இப்படி எல்லாமே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும். இப்படிக் குறைவில்லாமல் எல்லாமே பக்கத்தில் இருப்பதைத்தான் ஆமை அருகியது போல எனச் சொல்லத் தொடங்கி அது அருகாமை என்று ஆனது. கைக்கு எட்டும் தூரத்தில் வளங்கள் இருப்பதை அருகாமை எனச் சொல்லத் தொடங்கி அது பக்கத்தில் இருப்பதை, அண்மையைக் குறிக்கும் சொல்லாக மாறியது. அதனால் அண்மை என்பதைச் சொல்ல அருகாமை என்பது நல்ல தமிழே அன்றி இந்த இணையப்பண்டிதர்கள் சொல்லித் திரிவது போலத் தவறொன்றுமில்லை.
அடுத்து முயற்சித்தலுக்கு வருவோம். முயல்வது முயற்சி. வள்ளுவப் பெருந்தகை முயற்சி திருவினையாக்கும் என்கிறார். முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும் என மு. வரதராசனார் அதற்கு உரை எழுதி இருக்கிறார். ஆக முயற்சி என்பதே வெற்றி என்பது தமிழர் பண்பாடு. அதைத்தானேய்யா முயற்சித்தலும் சொல்கிறது. சித்தித்தல் என்றால் வாய்த்தல். காரியம் சித்தித்தது என்றால் கைகூடியது எனப்பொருள். முயல்வது திருவினையானது என்பதை முயல்வது சித்தித்தது என்று சொல்கிறோம். முயல்+சித்தித்தது புணர்ச்சி விதிகளின்படி முயற்சித்தித்தது என்றானது. அது காலப்போக்கில் முயற்சித்தது என்றானது. வள்ளுவன் வாக்கை மெய்யாக்கும் சொல் ஐயா இது. இதையா பிழை என்கிறீர்?
சங்கப்பாடல்கள் படித்திருக்கிறீர்களா? பண்டையத் தமிழர் வாழ்வுமுறை தெரியுமா? அவர்கள் இயற்கையோடு எப்படி ஒன்றியிருந்தார்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களாய்யா? சொல்கிறேன் கேளுங்கள்.
தமிழர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். விருந்தோம்பல் என்று ஐயன் வள்ளுவன் ஓர் அதிகாரமே எழுதி இருக்கிறார் அல்லவா. அன்றைய விருந்தோம்பலில் முக்கியமான பங்கு வகித்தது வந்தவர்களுக்கு கள் அருந்தத் தருவது. அன்று அருந்தப்பட்டவை இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கள். இதனால் உடலுக்குக் கேடு ஏற்படாது மாறாக அவை வலு சேர்க்கும் என்று நம்பப்பட்டது. கள் அன்றைக்கு மன்னர் முதல் மக்கள் வரை அனைவரும் பருகிய பானமாக விளங்கியது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கள் பருகியது குறித்து எத்தனையோ பாடல்கள் உள்ளன.
“சிறிய கள் பெறினே எமக்கீயும், பெரிய கள் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்துண்ணும்.. “ என ஔவை அதியமானைக் குறித்துப் பாடும் பொழுது அரசர் முதல் அன்றாடங்காய்ச்சிகள் வரை, ஆணும் பெண்ணும் என்று அனைவரும் பருகிய பானம், அதிலும் கொஞ்சமே இருந்தால் வந்தார்க்குத் தர வேண்டும் என்ற எண்ணம் என அனைத்தையும் இப்பாடல் ஒன்றே சொல்லிவிடுவதைக் காணலாம்.
அரிசியை நொதிக்க விட்டுப் பெறப்படும் தோப்பி, தென்னையிலிருந்தும் பனையிலிருந்தும் இறக்கப்படும் மகிழ், நன்றாக வடிகட்டப்பட்ட தேறல், பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பூக் கள் என வகைவகையான கள் பருகப்பட்ட காலம் அது. விருந்தினர் வரும் பொழுது பானைகளில் ஊறல் போடப்பட்டிருக்கும் கள் பானைகளைக் காட்டி அவை கள் என விவரிப்பார்கள். அருந்தியவர்கள் அக்கள்ளின் சுவையைப் பாராட்டும் படி இவை(யல்லவோ) கள் என்று சொல்வார்கள். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கள்ளை இப்படி அவை கள் என்று விவரிப்பதும் இவை கள் எனப் பாராட்டுவதும் நாளடைவில் இயற்கையில் காணப்படும் அழகானவை அனைத்திற்கும் பொதுப்பெயராயின. தமிழர்களின் இயற்கை வழிக் கள் போய் யவனர்கள் கொண்டு வந்ததைக் குடிக்கத் தொடங்கியதால்தான் வள்ளுவர் கள்ளுண்ணாமை பற்றி எழுதினார் என்பதை நாம் உணர வேண்டும்.
வானில் பறக்கும் பறவைகளை அவைகள் என்றும் காலைச் சுற்றி வரும் நாய்களை இவைகள் என்றும் சொல்லத் தொடங்கினர். அஃது அஃறிணைப் பொருட்கள் அனைத்தையுமே குறிப்பதாக ஆனது. இதனால் இன்றைக்கு அவைகள் இவைகள் எனச் சொன்னால் அது சங்க காலத்திற்கும் நமக்குமான மொழி சார்ந்த இழை. இரண்டாயிரம் வருடங்களாக நம்மை ஒரே இனமாகக் காட்டும் தொடர்ச்சி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதைத் தவறு எனத் தவிர்க்க முனைந்தால் அந்த இழையை நாமே அறுத்துக் கொள்கிறோம், நம் முன்னோர்களுடனான தொடர்பை நாமே உதறித் தள்ளுகிறோம். இதைச் செய்பவர்கள் தமிழர்கள் அல்லர்.
உண்மையில் தமிழில் என்ன சொன்னாலும் அது சரியாகவே இருக்கும், நாம் சொல்லும் எல்லாமே தமிழ்தான் என்பதை உணர்ந்து கொண்டால் இந்த மிகை திருத்தங்களைச் செய்யத் தோன்றாது. இனியேனும் இந்த இணையப்பண்டிதர்கள் திருந்துவார்களா? மிகை திருத்தங்களைக் கை விடுவார்களா? அந்தத் தமிழன்னைக்கே வெளிச்சம்.


