Wednesday, October 29, 2008

புதசெவி - 10/30/2008

புயலுக்குப் பின்னே அமைதி அப்படின்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நம்ம பதிவுல புதிருக்குப் பின்னே புதசெவிதானே. ஆனா ஒண்ணு பஞ்சார் கமெண்ட் எல்லாம் பார்த்தா இங்க அமைதிக்குப் பின்னே புயல் அப்படின்னுதான் சொல்லணும் போல!

செய்தி 1

வழக்கம் போல இல்லாம இந்த முறை முதல் செய்தி இந்தியாவில் இருந்து இல்லை. ஆனா வலையுலகில் இருந்து. நாம எல்லாம் பதிவு போடறோம் சரி. ஆனா ஜப்பானில் ஒரு செடி பதிவு எழுதுதாம் தெரியுமா? அதன் இலைகளில் சென்சார்களை பொருத்தி அங்கு ஏற்படும் ரசாயன மாற்றங்களைக் கணினியைக் கொண்டு வார்த்தைகளாக மாற்றி பதிவில் ஏற்றுகிறார்களாம். இன்றைக்கு நல்ல வெயில் என்ற ரேஞ்சுக்கு இருக்கிறது பதிவுகள். மேலும் செய்திக்கு
இங்கே.

பஞ்ச்: இலை பதிவு போட்டா சூரியனைக் குறை சொல்லும்ன்றது நம்ம ஊர் விதி! அது ஜப்பான் வரைக்கும் போயிடுச்சா? அதே மாதிரி சூரியன் பளிச்சுன்னு இல்லை, ஒரே மேக மூட்டம் அப்படின்னுதான் பதிவு போடுது. இலைப் பதிவா இலைக்காரன் பதிவான்னு சந்தேகம் வருது. நல்லாப் பாருங்க - மாங்கா செடி எழுதற பதிவா இல்லை செடி எழுதற மாங்காப் பதிவான்னு.. (மாங்கான்னா ஜப்பான்ல கார்ட்டூனாமே!)


செய்தி 2

ஜப்பானிய செடி பதிவு போட்டா ஆப்பிரிக்க யானை குறுஞ்செய்தி அனுப்பக்கூடாதா?! அனுப்புதே. கென்யா நாட்டில் காடுகள் அருகே இருக்கும் வயல்களில் வந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் அங்கு யானைகளோடு மக்களுக்குப் பெரிய போராட்டமே நடந்து வருகிறது. அதனால் இப்பொழுது ஒரு யானையின் கழுத்துப் பட்டையில் ஒரு சிம் கார்டைப் பொருத்தி அது ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வரும் பொழுது பலருக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பும்படி செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் யானை உலவும் இடத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ற மாதிரி தற்காப்பு செய்து கொள்கிறார்களாம். மேலும் செய்திக்கு
இங்கே.

பஞ்ச்: யோவ்.. வரவர உம்ம செய்திகள்லே நம்பகத்தன்மை குறைஞ்சுகிட்டே வருது.. செடி ப்ளாக் எழுதுது, யானை எஸ் எம் எஸ் அனுப்புதுன்னு.. போற பாக்கைப் பார்த்தா தமிழ்நாட்டுல கரெண்ட் இருக்குது, காவிரில வெள்ளம் பாயுதுன்னு கூட எழுதுவீங்க போல! ஆனா, போலீஸ்காரன் வரான் அப்படின்னு எஸ் எம் எஸ் வந்தா அதைப் பார்த்துட்டு தமிழின உணர்வு பொங்கணுமா அல்லது வீட்டில் சத்தியமா அர்ஜெண்ட் ஜோலி இருக்குன்னு பம்மணுமான்னு முடிவு செய்ய வசதியா இருக்கும்.


செய்தி 3

இவருக்கு வயசு 66. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு வீட்டுக் கடன் மாசம் 600 டாலர் அதிகமாயிருச்சு. பணம் கட்டாததுனால வங்கி வந்து இவரோட காரைத் தூக்கிட்டுப் போயிடுச்சு. அதோட கூட தனியா சமாளிக்க முடியாம மகள் தன்னோட இரண்டு குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு இவர் வீட்டுக்கே வந்துட்டா. இவ்வளவு கஷ்டங்களும் போதாதுன்னு இப்போ இவரு ஜெயிலில் இருக்காரு. பெயில் கூடக் கிடையாது. ஏன்னு தெரியுமா? வீட்டு வாசலில் புல்லு வளர்க்கலையாம்! இவரு தங்கி இருக்கும் குடியிருப்பின் விதிகள் படி இவரு வாசலில் புல்தரை போட்டு இருக்கணுமாம். இவரு அப்படிப் போடாததுனால இவரு மேல கேஸ் போட்டு இருக்காங்க. அங்க இவருக்கு எதிரா தீர்ப்பு வந்தது. அதற்குப் பின்னும் புல்தரை போடாததுனால இவரைத் தூக்கி உள்ள வெச்சுட்டாங்க. ஒரு வங்கியைக் கொள்ளை அடிச்சுட்டு வேணா புல்தரை போடறேன். அப்படிச் செஞ்சு மாட்டிக்கிட்டாக்கூட பெயில் உண்டு. இது என்ன கொடுமை சரவணான்னு டயலாக் பேசறாரு
பாருங்க.

பஞ்ச்: கமெண்டு சொல்றதுக்கு செய்தியிலே சரியான விவரம் இல்லையே! "பக்கத்து வீட்டில் புல் வளர்க்காதவன் பல் தேய்க்கிறான்.. எதிர் வீட்டில் புல் வளர்க்காதவன் ஃபுல் அடிக்கிறான். இவருக்கு மட்டும் புல் வளர்க்காததால் தண்டனை என்றால் அந்த இறையாண்மையைக் கொளுத்திப் போடுவோம் வாருங்கள்"ன்னும் சொல்லலாம். "அரசு என்ன புலி வளர்க்கவா சொன்னது, புல் வளர்க்கத்தானே சொன்னது? இதைக் கூடக் கேட்கத் திராணியில்லாத நபர்கள் வந்த கணவாய் வழியே திரும்பப் போக வேண்டியதுதானே"ன்னும் சொல்லலாம். எல்லாம் அவர் என்ன இனம்ன்றதைப் பொறுத்தது. அந்தத் தகவலைச் சொல்லுங்க சாமி!


செய்தி 4

கழிவு நீர்க் குழாயை மாற்றுவதற்காக வேலை நடக்கிறது. எப்படி நடக்கிறது தெரியுமா? காலையில் வந்து 20அடி ஆழம், 20 அடி அகலம், 20 அடி நீளம் ஒரு குழி வெட்டறாங்க. அதில் வேலை நடக்கிறது. சாயங்காலம் ஆனா காலையில் வெட்டிய குழியை மூடிவிட்டு அதன் மேல் தார் பூசி வாகனங்கள் செல்ல வசதி பண்ணறாங்க. மீண்டும் அடுத்த நாள் காலையில் வந்து மறுபடியும் குழி வெட்ட ஆரம்பிக்கறாங்க! ஒரு நாளைக்குப் பன்னிரெண்டு மணி நேரம் வேலை பார்த்தா அதில் சரி பாதி இப்படி வெட்டறதுக்கும் மூடறதுக்குமே சரியாப் போகுதாம். இது எங்க தெரியுமா?
இங்க பாருங்க.

பஞ்ச்: ஆஹா .. இதான்யா விஞ்ஞானம்! குழி வெட்ட ஒரு காண்ட்ராக்ட், மூட ஒண்ணு, குழாய் போட ஒண்ணு.. அதுவும் நித்ய சிரஞ்சீவியா காமதேனுவா தினம் தினம் பொழிஞ்சுகிட்டு இருக்கு. ஆமாம் எதுக்கு நீ இதை எல்லாம் ஒரு நியூஸா போட்டுக்கிட்டு இருக்க? நம்ம ஊர் பொதுப்பணித்துறை கண்ணில் பட்டா அனுமதி வாங்காம எங்க டெக்னிக்கை யூஸ் பண்ணறதாச் சொல்லி கோப்பிரைற் வழக்குப் போடப் போறாங்க.

செய்தி 5

இவரு தன் பையனைக் கூப்பிட்டுக் கார் ஒட்டச் சொல்லுவாரு. அதுவும் மெதுவா ஓட்டணும். இவரு பக்கத்தில் உட்கார்ந்துக்கிட்டு கையை லேசா ஜன்னல் வழியா வெளிய நீட்டிக்குவாரு. அவரு கையில் இருக்கும் கயிற்றின் மறுமுனை அவரோட நாயின் கழுத்தில் இருக்கும். கார் ஓட ஓட நாயும் கூடவே வரும். ஒரு வாரத்தில் நாலு மைல் வரை இப்படி இந்தக் கார் ஓடுதாம். என்னடான்னா இவரு நாயை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போறாராம். கேட்டா மழை பெஞ்சா நனைய மாட்டேன். என் கால் வலிக்காம இருக்குன்னு பதில் சொல்லறாரு. இது மட்டும் இல்லை. மாடியில் படுக்கையில் படுத்துக்கிட்டு டீவி பார்க்கும் பொழுது சேனல் மாத்தணமுன்னா ஒரு குரல் குடுப்பாராம். கீழ இருந்து பையன் வந்து சேனல் மாத்துவானாம். இவருக்கு சமீபத்தில் இவங்க ஏரியாவின் மிகப் பெரும் சோம்பேறி பட்டம் குடுத்து இருக்காங்க! மேலும் படிக்க
இங்க.

என் கேள்விகள் இவரு என்ன வேலை பார்க்கிறாரு? அரசாங்க உத்யோகமாத்தான் இருக்கணும். பையன் கார் ஒட்டறதுக்குப் பதிலா நாயை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போகலாமே! டீவிக்கு ரிமோட் இல்லையா? அவரோட பசங்க இம்புட்டு நல்லவங்களா?


பஞ்ச்: இவரைப்பத்தி என்னான்னு சொல்றது.. வீட்டுக்குள்ளே அவர் சொல்ற வேலைய உடனே செய்ய ஒரு தற்கொலைப்படையையே தயார் பண்ணி வச்சிருக்காரு. எந்தப்பக்கம் பேசினாலும் கைது - பயம்! நாய் சங்கிலியை காரில் பிடிச்சுக்கிட்டு போறாரு. இதுக்கும் மனிதச் சங்கிலியைக் காரில் போய் பார்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடின்னு சொன்னாலும் ஆட்டோ நிச்சயம். அதனால இவரு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எந்த இயர்லே பாஸ் பண்ணாருன்னு மட்டும் கேட்டுகிட்டு அப்பீட் ஆகிக்கறேன்.


செய்தி 6

கடைசியா நம்ம ஊர் செய்தி ஒண்ணு! ஹிமாசலப் பிரதேசத்தில் நடக்கும் மேட்டர் இது. குடும்பத்துக்கு இருக்கிறது கொஞ்சமே கொஞ்சம் நிலம். இதில் அண்ணன் தம்பி ரெண்டு பேரு சேர்ந்து விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கல்யாணமாகி தனக்கென குடும்பம் ஒண்ணு வந்து அப்புறம் சண்டை சச்சரவு தொடங்கி இருக்கும் நிலத்தை ரெண்டா பாகம் பிரிக்க வேண்டி வந்தா ஆளுக்குக் கொஞ்சம் கூட மிஞ்சாதே என்ன செய்யன்னு பார்த்தாங்க. இந்த மாதிரி எல்லாம் நடக்காம இருக்க ரெண்டு பேரும் ஒரே பொண்ணைக் கட்டிக்கிட்டாங்க. இவங்க மட்டும் இல்லை இவங்க ஊரில் அனேகம் பேர் இப்படித்தானாம்.
இங்க பாருங்க.

பஞ்ச்: சொத்து நிறைய இருந்தா வடக்கு தம்பிக்கு, தெற்கு அண்ணனுக்கு, வடவடக்கு தங்கைக்குன்னு பாகம் பண்ணிடலாம். கம்மியா இருந்தா என்ன பண்ணறதாம்? ஆனா, இது பெருந்தன்மை எல்லாம் இல்லீங்க.. சம்சாரத்தோட தரும் தன்மை 100%னா, இவங்களுக்கு ஆளுக்கு 50% பெரும்தன்மை இருந்தா போதுமே! குழந்தை பெரும் தன்மை இன்னோரு மேட்டர் - அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர்.

கடைசியா ஒரு போனஸ்!என்ன கொடுமை இது சரவணன்!


பஞ்ச்:
இந்தக்கொண்டாட்டத்தில் கூட ஆடினால் தப்பில்லை. ஆனால் அஃதை விவரித்து எழுதப் போந்தால் அஃது ரோம் நகரம் எரிகையில் நீரோ பிடில் வாசித்ததாகப் கொள்ளப்படும்! நம் இனத்தவர்கள் தினம் தினம் செத்துக்கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதி வந்தேறிப் பட்டம் பெற இந்தப் பரமசிவம் விரும்பவில்லைல். நீரோவாகக் கருதப்படாமல் இருக்க, சினிமா விமர்சனங்களுக்கும் நமீதா போட்டோவுக்கும் மட்டும்தான் தற்போது பெரும் தன்மையோடு விலக்களிக்கப்பட்டிருக்கிறதுல். இருந்தாலும் வற்புறுத்துவதால் ஒரு கமெண்டைக் கூறிவிடுகிறேன்: இது கட்டவுட்டுக்குக் கல்யாணம்னு நான் எங்கே சொன்னேன்? கல்யாணமா இருந்திருந்தா நல்லா இருக்கும்னுதானே சொன்னேன்!

Tuesday, October 28, 2008

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - அக்டோபர் 2008

வழக்கமான உற்சாகத்தோட நிறையா பேரு இந்த முறையும் புதிரை விடுவிக்க முயற்சி செஞ்சாங்க. இந்த முறை கொஞ்சம் எளிதாக இருக்கிறதோ என நான் நினைத்தது சரியே என்பதை நிரூபிப்பது போல் இந்த முறை பதினாறு பேர் சரியான விடைகளைத் தந்துள்ளார்கள்.

 1. பெனாத்தல் சுரேஷ்
 2. யோசிப்பவர்
 3. சின்னவன்
 4. ஸ்ரீதர் வெங்கட்
 5. அரசு
 6. சங்கர்
 7. திவா
 8. எஸ் பி சுரேஷ்
 9. தமிழ்ப்பிரியன்
 10. வடகரை வேலன்
 11. மஞ்சுளா ராஜாராமன்
 12. வசுப்ரதா சுப்ரமணியன்
 13. நிஜமா நல்லவன்
 14. ஹரிஹரன்ஸ்
 15. கௌசிகன்
 16. வி.ஆர். பாலகிருஷ்ணன்
அனைவருக்கும் வாழ்த்துகள்! ஒன்றோ இரண்டோ போடமல் விட்டவர்கள் அனேகம். அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.இப்படி தொடர்ந்து வந்து ஆர்வமாய் முயற்சிப்பதுதான் நம்மை மேலும் மேலும் புதிர் போட ஊக்கம் அளிக்கிறது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

இனி விடைகளைப் பார்க்கலாமா?இடமிருந்து வலம்

5 வள்ளுவர் நிற்கச் சொன்ன விதம், இரு முறை வந்தால் ஜொலிக்கும் (2)
தக. வள்ளுவர் நிற்க அதற்குத் தகன்னு சொன்னாரு. தகதகன்னு ஜொலிக்கும் எனச் சொல்வது வழக்கம்தானே. கலந்து கொண்ட அனைவரும் போட்ட விடை இதுதான். வள்ளுவரின் வீச்சு!

6 முடியாத திமிரும் தொடங்காத மொழியும் பாலூட்டியானதே! (6)
திமிங்கிலம். முடியாத திமிர் என்றால் திமி. தொடங்காத மொழி எனும் பொழுது ஆங்கிலம் என்பதில் இருந்து ங்கிலம் என்பது வந்து திமிங்கிலம் என்ற பாலூட்டியாகிறது. திமிங்கலம் என்றும் தெரியப்பட்டாலும் திமிங்கிலம் என்பதும் சரியான சொல்லே. மற்ற விடைகளை பாதிக்காததால் திமிங்கலம் எனச் சொன்னவர்களுக்கும் மதிப்பெண் தந்திருக்கிறேன்.

7 பழமொழிக் கழுதைக்கு இப்படித்தான் விளங்குமா? (4)
தெரியுமா. பழமொழிக் கழுதை எனச் சொல்லும் பொழுது கழுதை பற்றிய பழமொழிகளை யோசிக்க வேண்டும். அதில் அதிகம் நினைவுக்கு வருவது கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பதுதானே. விளங்குமா எனத் தந்தது தெரியுமா என விடை இருக்க வேண்டும் என்பதிற்காகத்தான்.

8 நேசத்தின் இடைமாறி வருவதை நோகலாமா? (3)
அம்பு. அன்பு என்றால் நேசம். அதன் இடையெழுத்து மாறி வரும் சொல்தான் விடை. எய்தவன் இங்கிருக்க அம்பை நோகலாமா என்ற பழமொழியை நினைவில் வைத்துதான் நோகலாமா என்ற குறிப்பைத் தந்தேன்.

9 வெடிப்பதைப் பார்க்க கலையின் தொடக்கத்தைத் திருப்பிக் குடு (3)
கடுகு. கலையின் தொடக்கம் க. திருப்பிக் குடு என்றால் டுகு. இவை இணைந்தால் வருவது கடுகு. அது அன்றாடம் வெடிப்பதுதானே!

11 பங்கின் தலை மாற ஏற்றது ஆனதே(3)
தகுதி. பங்கு என்றால் பகுதி. அதன் முதலெழுத்து மாற வரும் விடை தகுதி. தகுதி என்றால் ஏற்றது என்பதுதானே பொருள்.

13 இந்த மாதம் வாரந்தோறும் வந்திடுமே (4)
திங்கள். ரொம்பவே எளிதான விடை. திங்கள் என்றால் மாதம். அதுவே திங்கட்கிழமை எனப் பொருள் கொண்டால் வாரமொருமுறை வந்திடும்.

16 ஐயர் வீட்டுப் பையன் காதறுந்து அழுந்தக் காவியத் தலைவனானானே! (6)
அம்பிகாபதி. ஐயர் வீட்டுப் பையனை அம்பி என்று சொல்லுவார்கள். காது அறுந்து கா என்னும் எழுத்து கிடைக்கிறது. அழுந்த என்றால் பதி, பதித்தல் என்ற பொருள். அதுவே இவை அனைத்தும் ஒன்று சேர என்ற பொருளும் தருகிறது. அப்படி ஒன்று சேர்ந்தால் வருவது அம்பிகாபதி என்னும் காவியத்தலைவனின் பெயர்.

17 கன்னத்தில் வரும் கட்டியினால் குண்டு ஆகு (2)
பரு. மீண்டும் எளிமையான குறிப்புதான். பரு என்றால் கன்னத்தில் வரும் கட்டி. அதுவே பருத்தல் என்ற வகையில் எடுத்துக் கொண்டோமானால் குண்டு ஆகு என்ற பொருளையும் தருகிறது.

மேலிருந்து கீழ்

1 வயதானால் தெரியும் தன் விலாசம் (4)
முகவரி. எனக்குப் பிடித்த குறிப்பு இதுதான். விலாசம் என்றால் முகவரி. வயதானால் முகத்தில் வரும் சுருக்கங்களை முக வரி என்று சொல்லலாமே.

2 எருவாகப் போனதில் திரும்பவும் தொடங்க ரத்தமாகக் கொட்டுகிறதே (5)
உதிரமாக. எருவாக என்பதை உரமாக என்று சொல்லலாம். அதில் திரும்பவும் என்ற சொல்லின் முதல் எழுத்தை இட உதிரமாக என்ற விடை கிடைக்கிறது. ரத்தமாக என்றால் உதிரமாக . மேலிருந்து கீழ் என்பதால் கொட்டுகிறது என்பது இயல்பாகப் பொருந்தி வருகிறது.

3 அசங்குவதில் காணலாம் அரங்கன் தரித்ததை (3)
சங்கு. அசங்குவதில் என்ற சொல்லில் சங்கு என்னும் விடையைக் காணலாம். சங்கு சக்ரதாரி என வழங்கப்படும் திருமால் தரிப்பது சங்குதானே. அரங்கன் சங்கு தரிப்பதில்லை என கேஆர்எஸ் என்ற நக்கீரர் நெற்றிக்கண்ணைத் திறந்தார். இங்கு அரங்கன் என்பது வெறும் அரங்கனைக் குறிக்காமல் திருமாலைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்ட குறியீடுதான் என்று அவர் வாயை அடைத்து விட்டேன்.

4 அமளி அகல கம்பை நம்பு (4)
கலகம். அகல கம்பை என்ற சொற்களின் ஊடே கலகம் இருக்கிறது. அமளி என்ற சொல் இதற்கு தேவையான குறிப்பைத் தருகிறது.

10 துள்ளி விழுந்திட முடியாத குடத்தில் இனித்திடு (5)
குதித்திட. முடியாத குடம் என எடுத்துக் கொண்டால் குட. குடத்தில் எனச் சொல்வதால் அதனுள், இனித்திடு என்பதற்கு ஒரு சொல்லை புகுத்தினால் விடை கிடைக்கும். மூன்றெழுத்தில் இனித்திடு எனப் பார்த்தால் தித்தி எனச் சொல்லலாம். குட என்ற எழுத்துக்கள் இடையே தித்தி என போட்டால் குதித்திட என விடை கிடைக்கும். துள்ளி விழுந்திட என சொல்லும் பொழுது குதித்திட என்ற பொருள் வருகிறது.

குறுக்கெழுத்தில் ஒரு முக்கியமான விதி, விடை குறிப்பினைப் போன்றே இருக்க வேண்டும். துள்ளி விழுந்திட எனச் சொல்லும் பொழுது குதித்திடு எனச் சொல்லக் கூடாது. உதிரமாக என விடை எதிர்பார்க்கும் பொழுது உதிரமாகி எனத் தரக் கூடாது. குதித்திடு எனச் சொன்னால் முடியாத குடம் என்பதும் சரியாக வரவில்லை அல்லவா. அனேகம் பேருக்கு கடைசி எழுத்தைச் சரி பார்க்கவும் எனச் சொல்ல வேண்டியதாகி விட்டது.

12 பாதிக் காசு வாங்கி குழம்பிப் புகும் சேட்டை (4)
குசும்பு. பாதி காசுன்னு சொன்னா கா அல்லது சு. இதோட குழம்பிப் புகும் எனச் சொன்னால் புகும் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை கலைத்து சேர்பது. ஆக பு கு ம் என்ற எழுத்தோடு கா அல்லது சு சேர்ந்தால் சேட்டை என்ற பொருள் வரும் சொல் ஒன்று வரும். சு என்ற எழுத்தை சேர்த்தால் குசும்பு கிடைக்கும்.

14 தடியைத் தா வயிரியம் கிட்டும் (4)
கம்பளி. வயிரியம் என்றால் கம்பளி. நம்ம அகராதி என்ன சொல்லுதுன்னா

வயிரியம் (p. 847) [ vayiriyam ] , s. a woollen cloth, a cloth made of hair.
தடியைத் தா என்பதை கம்பு அளி எனச் சொல்லமே. அதை சேர்த்துச் சொன்னால் கம்பளி. சரியாப் போச்சா!

15 பசுவின் உடற்பாகம் ஒருவருக்கும் ஒவ்வாது (3)
ஆகாது. ஆ என்றால் பசு. காது என்ற உடற்பாகத்துடன் சேர்த்தால் வருவது ஆகாது. ஒவ்வாது என்ற பொருளும் உண்டல்லவா!

புதிர் நல்லா இருந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

மீண்டும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு புதிய புதிருடன் சந்திக்கும் முன் வரும் மற்ற பதிவுகளையும் மறக்காமல் படியுங்கள்!

Wednesday, October 15, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - அக்டோபர் 2008

எதையும் தொடர்ந்து செய்வதில்லை என்ற பழி என் மேல் விழுவது பழக்கமான ஒன்றுதான். ஆனால் குறுக்கெழுத்து புதிர் மட்டும் ரெண்டு போட்டு விட்டு நிறுத்திவிட்டாயே என்று மட்டும் கேட்க முடியாது. ஏனென்றால் இதோ மூன்றாவது! :)

இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன். அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!


1
2
3
4
5
6

7

8910


1112

1314


15


16
17


இடமிருந்து வலம்

5 வள்ளுவர் நிற்கச் சொன்ன விதம், இரு முறை வந்தால் ஜொலிக்கும் (2)
6 முடியாத திமிரும் தொடங்காத மொழியும் பாலூட்டியானதே! (6)
7 பழமொழிக் கழுதைக்கு இப்படித்தான் விளங்குமா? (4)
8 நேசத்தின் இடைமாறி வருவதை நோகலாமா? (3)
9 வெடிப்பதைப் பார்க்க கலையின் தொடக்கத்தைத் திருப்பிக் குடு (3)
11 பங்கின் தலை மாற ஏற்றது ஆனதே(3)
13 இந்த மாதம் வாரந்தோறும் வந்திடுமே (4)
16 ஐயர் வீட்டுப் பையன் காதறுந்து அழுந்தக் காவியத் தலைவனானானே! (6)
17 கன்னத்தில் வரும் கட்டியினால் குண்டு ஆகு (2)

மேலிருந்து கீழ்

1 வயதானால் தெரியும் தன் விலாசம் (4)
2 எருவாகப் போனதில் திரும்பவும் தொடங்க ரத்தமாகக் கொட்டுகிறதே (5)
3 அசங்குவதில் காணலாம் அரங்கன் தரித்ததை (3)
4 அமளி அகல கம்பை நம்பு (4)
10 துள்ளி விழுந்திட முடியாத குடத்தில் இனித்திடு (5)
12 பாதிக் காசு வாங்கி குழம்பிப் புகும் சேட்டை (4)
14 தடியைத் தா வயிரியம் கிட்டும் (4)
15 பசுவின் உடற்பாகம் ஒருவருக்கும் ஒவ்வாது (3)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

Tuesday, October 14, 2008

சினிமா! சினிமா! - தொடர் விளையாட்டு

மாயண்ணன் வந்தாக, மாப்ள மொக்கைச்சாமி வந்தாக அப்படின்னு அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்த சினிமா தொடர் விளையாட்டு நம்ம ஸ்ரீதர் அண்ணாச்சி புண்ணியத்தில நம்ம கிட்ட வந்திருக்கு. கிட்டத்தட்ட முழு நீளத் தேர்வு அளவு கேள்விகள். முக்கி முனகி முடிச்சுட்டேன். படிச்சுத் தொலைக்க வேண்டியது உங்க பொறுப்பு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதன் முதலில் என்ன படம் பார்த்தேன் என்பது எல்லாம் சத்தியமாக ஞாபகம் இல்லை. ஆனா சின்ன வயசில் அடிக்கடி சினிமா போய் இருக்கிறேன். வைராவி அண்ணா அப்படின்னு ஒரு டூரிங் டாக்கீஸ் இருக்கு (இருந்தது?). அதில் மீன் கொடி நாட்டிய தேவா அப்படி பாட்டு போட்ட உடனே வீட்டில் இருந்து ஓடினா நியூஸ் ரீல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி போயிடலாம். மணல், பெஞ்ச், இரும்பு சேர் என்று மூணு க்ளாஸ் உண்டு. அம்மா பெஞ்சுக்குக் காசு குடுத்தால் கூட தரை டிக்கெட் வாங்கிக்கிட்டு மீதி பைசாவில் முறுக்கு வாங்கி தின்பதுதான் நடக்கும். அங்க மண்ணைக் குவிச்சு உட்கார்ந்துக்கலாம். நாய் எல்லாம் வந்து உரசிக்கிட்டுப் போகும். சாயங்கால நேர காத்து சிலு சிலுன்னு அடிக்கும். எம்ஜியார் படங்கள்தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழில் தசாவதாரம்தான் பார்த்தேன்னு நினைக்கிறேன். அது பத்திதான் இங்க ஏற்கனவே பேசியாச்சே!

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சன் டிவியில் போட்ட ஆயிரம் பொய் என்ற படம்தான் கடைசியில் முழுதாக உட்கார்ந்து பார்த்ததுன்னு நினைக்கிறேன். இல்லை அதற்குப் பின் பார்த்த மைக்கேல் மதன காமராஜனா? சரியா ஞாபகம் இல்லையே. சபாபதி, பெண் ரெண்டும் பதிவு செஞ்சு வெச்சு இருக்கேன். பார்க்கணும். நேரமே இல்லை.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே. நாம அப்படி எல்லாம் உணர்ச்சிபூர்வமா எல்லாம் படம் பார்க்கறதே இல்லை. தேவர் மகன், குணா ரெண்டும் பார்த்தப்போ கொஞ்சம் பிரமிப்பா இருந்தது. அது தாக்கமான்னு எல்லாம் சொல்லத் தெரியலையே. அதிலும் தேவர் மகன் படத்தில் நவீன கமல் மாறி பெரிய மீசை வெச்சுக்கிட்டு கிராமத்துக் கமலாக மாறி வரும் சீன் பார்த்தப்போ ரொம்ப பிரமிப்பா இருந்தது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இது என்ன தாக்கம் தாக்கம் அப்படின்னே கேள்வி கேட்கறீங்க? தமிழ் சினிமா எல்லாம் சும்மா ரெண்டு மணிநேர பொழுது போக்கிற்காக பார்க்கும் ஆசாமிங்க நான். சீரியஸ் படமெல்லாம் பார்க்கக்கூட மாட்டேன். இந்த மாதிரி தாக்கம் எல்லாம் இல்லைன்னுதான் நினைக்கிறேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
சினிமா பார்த்துட்டு இவ்வளவு தாக்கம் வருமா? தாக்கிய சினிமா, தாக்கிய அரசியல், தாக்கிய தொழில்நுட்பம் அப்படின்னு தாக்கு தாக்குன்னு தாக்கறீங்களே! இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா நான் எல்லாம் என்னத்த சொல்ல? சின்ன வயசில் ஜெகன்மோகினி சினிமா பார்த்துட்டு ஜெயமாலினி அடுப்புக்குள்ள காலை விட்ட காட்சியை பத்தி ரொம்ப நாள் பேசிக்கிட்டது உண்டு. இதைச் சொன்னா இந்த கேள்விக்கு விடையா சேர்த்துப்பீங்களா?

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
நம்ம வாசிப்பு எல்லாம் லைட்ஸ் ஆன் சுனில் ரேஞ்சுக்குதாங்க. சமீப காலத்தில் சினிமாப் பொன்னையா எழுதறது எல்லாம் கூடப் படிக்கிறது இல்லைன்னாப் பார்த்துக்குங்களேன். :)

7.தமிழ்ச்சினிமா இசை?
இசை கேட்பது என்பது எப்பவுமே உண்டு. முன்னமே சொன்ன மாதிரி
தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். இப்போ வர சினிமாப் பாடல்களில் வெகு சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் வெறும் இரைச்சலாகவே இருப்பதால் அந்தப் பக்கமே போவதில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் படம் பார்த்தது மிகவும் குறைவுதான். அதுவும் பெரும்பாலும் சிரிப்பு வர வைக்கக்கூடிய படங்கள்தான் பார்ப்பது. ஆங்கிலத்தில் வெளி வரும் வரைசித்திரப் படங்களைப் பார்த்து வியந்து போவது என்பது ஒவ்வொரு முறையும் நிகழும் ஒன்று. ஸ்ரீதர் கிட்ட சொன்ன ப்ரெஞ்ச் படமெல்லாம் நான் பார்த்த ரெண்டு மூணு படங்களில் ஒன்று. அதுவும் நம்மைப் பற்றி தெரிந்த நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்துப் பார் எனச் சொன்னதுதான். விமானப் பயணங்களில் பொழுது போகாமல் சில வேற்று மொழிப் படங்களைக் கண்டது உண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
கல்லூரி காலத்தில் முத்து திரைப்படம் எடுத்த இடத்தில் ரஜினியோடு படம் எடுத்துக்கொண்டதுதான் சினிமா உலகுடனான நேரடி தொடர்பு. என்ன செஞ்சேனா? ரஜினி பக்கத்தில் நின்னேன். அவரு தோளில் கையைப் போட்டுக்கிட்டாரு. படம் எடுத்துக்கிட்டோம். பிடிச்சுதான்னா என்ன? பிடிச்சுதுதான். :) மீண்டுமா? வாய்ப்பு வந்தா செஞ்சுட்டாப் போச்சு. என்னோட சேர்ந்து ரஜினி படம் எடுத்துக்கிட்டதால தமிழ் சினிமா மேம்படுமான்னு கேட்டா என்ன பதில் சொல்ல? ;-)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த மாதிரி பார்முலாப் படங்கள் என்ற வட்டத்தில் இருந்து வெளி வரும் என்றே நினைக்கிறேன். ஆனால் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். ஒரே படத்தில் காமெடி சண்டை பாட்டு என்றெல்லாம் இல்லாமல் அந்தந்த வகையில் இருக்கும் படங்கள் வரத் தொடங்கினால் நன்றாக இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இப்பக்கூட நான் ரொம்ப எல்லாம் படிக்கிறது இல்லை. அதனால ரொம்ப பிரச்சனை இருக்காதுன்னுதான் நினைக்கிறேன். ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இது நடந்தா சினிமா மேல இருக்கும் அப்ஸெஷன் குறையலாம் என நினைக்கிறேன். நடக்குமா?

இன்னும் ஐந்து பேரை சேர்க்கணுமாமே. நமக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் சேர்த்தாச்சு போல இருக்கே. இன்னும் யாரைச் சேர்க்க?

1) இந்த வார நட்சத்திரம் இளா
2)என்றென்றும் நட்சத்திரம் வல்லியம்மா
3) ஆன்மீக சூப்பர்ஸ்டார் குமரன்
4) ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணாமல் இருக்கும் சின்னவன்
5) பிட் போட்டிக்கு மட்டுமே பதிவு போடும் எங்கள் கைப்புள்ளை
நீங்க எல்லாம் நான் ஸ்ரீதரைத் திட்டின மாதிரி திட்டாம நல்லவங்களா எழுதி இந்தத் தொடர் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துங்கப்பா!

டிஸ்கி: இந்த மாதத்துக் குறுக்கெழுத்துப் புதிர் இன்னும் இரண்டு நாட்களில் வெளி வரும்!

Wednesday, October 08, 2008

புதசெவி - 10/08/2008

செப்டம்பர் மாதம் புதிர், சாரு அப்படின்னு விறுவிறுப்பா போனதினால புதசெவி போடாமா விட்டுப் போச்சு. அதான் இந்த மாத துவக்கத்திலேயே, பஞ்ச் அண்ணா காதைப் பிடிச்சு திருகறதுக்கு முன்னாடியே, இதை போட்டாச்சு.

செய்தி 1

இது நம்ம ஊர் செய்தி. ஆனா நம்ம ஊர் பத்திரிகைகளிலேயோ அல்லது பதிவுகளிலேயோ படிக்கவே இல்லை. தில்லி அருகே நோய்டாவில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கிட்டத்தட்ட நூறு பேர் பணி நீக்கம் செய்யப் பட்டார்களாம். அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த பொழுது தகராறு முற்றி அந்நிறுவனத்தின் தலைவரைப் போட்டுத் தள்ளிவிட்டனராம் அந்த ஊழியர்கள். முழு செய்திக்கு இங்கே போகலாம்.

பஞ்ச்:
வன்முறை மூலம் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு வராது என்பதிலும், தொழில்முனைவோர் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பதிலும், இவ்வாறு செய்பவர்கள் நம் மாநிலத்தைப் பின்னுக்கு இழுத்துச் செல்கிறார்கள் என்பதிலும் எள்ளளவும் சந்தேகமில்லை - யோவ் முதல்லியே சொல்றதில்லையா? நம்ம ஊர் இல்லைன்னு.. பிரச்சினையை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்த தொழிலாளச் சகோதரர்களுக்கு ஒரு செவ்வணக்கம்! பூர்ஷ்வாக்கள் தோழர்களின் ரத்தம் உறிஞ்சும்முன் சிந்திக்கவேண்டும் - இப்படி மாத்தி எழுதிக்கோ.


செய்தி 2

இது நேபாள் செய்தி. மனுசனுக்கு 49 வயசு ஆகுது. இதுவரை 24 கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டாரு. எதுவும் சரியா அமையலை. ஆனா சற்றும் மனம் தளராமல் 25ஆவது கல்யாணத்தையும் செஞ்சுக்கிட்டாரு. இந்தக் கல்யாணத்திற்கு அப்புறம் வாழ்வில் வசந்தம் வீசுதாம். பழைய மனைவிகள் பல பேரோட பெயர் கூட ஞாபகத்தில் இல்லையாம். ரொம்பவே சுவாரசியமான மனிதர்தான். நம்ம பெனாத்தல் வைப்பாலஜி வகுப்புக்கு வேணா பாடம் எடுக்க வரச் சொல்லலாம் போல இருக்கே! படத்தோட இருக்கும் செய்தி இங்கே.

பஞ்ச்: அந்தாளுக்கு அப்சசிவ் கம்பல்ஸிவ் டிஸ் ஆர்டர். இல்லாட்டி இத்தனை முறை தற்கொலை முயற்சி செய்வானா? பெர்ப்பெச்சுவல் ஹனிமூன்ல இருக்க ஆசைப்பட்டு பெர்ப்பெச்சுவல் நரகத்துல இருக்க பைத்தியக்காரன்! ஆனா ஒண்ணு.. இவரு நம்ம ஊருக்கு வந்தா அரசியல்வாதி ஆகறதுக்கான முதல் தகுதி பரிபூர்ணமா இருக்கு- எத்தனை மனைவி, துணைவி-- வாரிசு பத்தி ஒண்ணும் சொல்லல.. இல்லாமலா இருக்கும்?

செய்தி 3

இது சீனாவில் நடந்தது. இவருக்கு வயசு நாலுதான் ஆகுது. இவரை வழிக்குக் கொண்டு வர வாழைப் பழத்திற்குள் ஹெராயின் போதை மருந்தை அடைத்து குடுத்து இருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து நடந்ததால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் இவர். அதிகாரிகள் தக்க சமயத்தில் இவரைக் காப்பாற்றி போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுபட மருத்துவமனைக்கு அனுப்பி விட்டார்கள். அங்கு சாதாரணமாக தரப்படும் மருந்தைவிட ஐந்து மடங்கு அதிகம் வலிமையுடைய மருந்தினைத் தந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வருட சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் வெளியே வந்திருக்கிறார் இவர். இவர் சிகுவாங் என அழைக்கப்படும் ஒரு யானை! செய்தி இங்கே.

பஞ்ச்:
இதான்யா கட்டாய மதமாற்றம். மதங் கொண்ட யானைக்கு மாற்று மதத்தைக் காட்டறாங்க பாருங்க - அதுவும் ஸ்ட்ராங்கா!
ஆனா இங்க கட்டாய மத மாற்றச் சட்டம் கொண்டு வந்தா யாரும் எதிர்க்க மாட்டாங்க.

செய்தி 4

வீட்டைத் தலைகீழா செய்யறான் அப்படின்னு பல பேர் சொல்லிக் கேட்டு இருப்பீங்க. இந்த வீட்டின் சொந்தக்காரர் சின்ன வயசா இருக்கும் போது அப்படி அடிக்கடி பேச்சு வாங்கி இருப்பாரு போல. வீட்டையே தலைகீழா கட்டி இருக்காரு பாருங்க. கூரை தரையில் இருக்கு. வீட்டுக்குள்ள எல்லாமே தலைகீழா இருக்கு. அந்த பாத்ரூமைப் பயன்படுத்த மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்!! செய்தி இங்கே. இங்க இன்னும் கொஞ்சம் படங்கள்.

பஞ்ச்: மாவுபோ லேமே மாவுபோ ழேகீ ள்பிப்ஆ லடுட்வீ தந்அ.. ட்வுட ருஒ. ஸ்டார் ஹோட்டலுக்கு முதல்முறையா போய், க்ளீன் பண்ண வெளியாளைக் கூப்பிட்ட சர்தார்ஜி ஜோக் ஞாபகம் வருதே!

செய்தி 5

இந்த அம்மாவின் கதை வழக்கமான ஒரு வறுமையில் இருந்து வந்து கோடீஸ்வரி ஆன கதைதான். ஆனால் கதை முழுவதும் திருப்பங்கள். யாரோடும் ஒத்துப் போகாத குணம், தேவையற்ற ஆடம்பரம், அரசாங்கத்துடன் கூட வரி கட்டாமல் சண்டை என வாழ்ந்த இவர் சமீபத்தில் இறந்து விட்டார். அவரது உயிலின் படி அவருடைய நாய்க்குக் கிடைத்தப் பங்கு கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அது போக இவர் ஒரு ட்ரஸ்ட் மூலம் நாய்கள் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக தந்திருப்பது 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்! என்னாத்த சொல்ல. நீங்களே படிச்சுக்குங்க.

பஞ்ச்: //யாரோடும் ஒத்துப் போகாத குணம், தேவையற்ற ஆடம்பரம், அரசாங்கத்துடன் கூட வரி கட்டாமல் சண்டை// பு த செ வி பதிவுல வழக்கமா நான் தான் லோக்கல் அரசியல் பேசுவேன் - இலவசம் - இப்ப நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா?

செய்தி 6

கடைசியா மீண்டும் நம்ம ஊர் மேட்டர். லக்னோ புகை வண்டி நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகமா இருக்காம். அவைகளை பயமுறுத்தி விரட்ட என்ன வழி அப்படின்னு யோசிச்ச பெரியவர்கள் கடைசியா மனுசன் ஒருத்தனுக்குக் குரங்கு வேஷம் போட்டுவிட்டு அங்க இங்க அலைய விட்டுட்டாங்களாம். இங்க போய் அந்த நகர்படத்தைப் பாருங்க. என்ன கொடுமை இது சரவணன்!

பஞ்ச்: சரியான ஐடியா! நாம் எத்தனை குரங்கைப் பாத்து மனுஷன்னு ஏமாந்திருக்கோம்! குரங்குகளுக்கும் ஏமாற ஒரு சான்ஸ் கொடுத்திருக்காங்க! பிரில்லியண்ட்! ஆனா சில சமயத்துல மத்த குரங்குகளுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்டணும். சில சமயத்துல காட்டக்கூடாது. தந்தி கொடுக்கவேண்டிய நேரத்துல சரியா கொடுத்திரணும். காலை வார வேண்டிய டயத்தில் அதையும் செய்யணும். இல்லாட்டி மத்த குரங்குங்க நம்ம இடத்தை ஆக்கிரமிச்சுடும். இதான்யா பகூத் அறிவு! அதை நல்லா எடுத்தாண்டு இருக்காங்க பாரு!