Sunday, January 29, 2006

போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்

எல்லோரும் எழுதிட்டாங்க. நான் என்ன புதுசா எழுதப்போறேன். இந்த மாதிரி எதாவது பேர் வச்சா நிறைய பேர் வருவாங்களே. அதான். சரி நம்ம வேலையைப் போய் பார்ப்போமா.

என்ன தமிழ்மணத்திலே இருக்கணும் அதனால இனி மறுமொழிகள் மட்டுறுத்தப்படும். இதனால் நான் உறங்கும் சமயத்தில் இடப்படும் மறுமொழிகள் பதிவில் வர தாமதம் ஆகலாம். இனி word verification தேவையில்லை, அதை இலவசமாகவே எடுத்துவிட்டேன். ஆகையால் உங்கள் ஆதரவை வழக்கம்போல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் சில ரீபஸ்கள். காட்டுங்கள் உங்கள் கைவண்ணத்தை. விடைகள் இன்னும் சில நாட்களில்.

1) உலஇளைஞன்கம்
2) ரோஜா ரோஜா ரோஜா
3) பாலமஞ்சரி, ஊர்மிகா, சைந்தவி, பூஷாவளி
4) முருகன் அல்லது விநாயகன்
5) ராஎன்சா
6) கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், ஆயில்யம்
7) பசபிக் ஹைக்கு, அட்லாண்டிக் வெண்பா, இந்து மாக்கடல் கலிப்பா, அரபிக்கடல் ஆசிரியப்பா
8) ஹௌரா எக்ஸ்பிரஸ்
9) கோகிலா கோகிலா
10) சோழ, சேர, பாண்டியர்
11) எம்.குமரன், s/o மஹாலட்சுமி, 7ஜி, ரெயின்போ காலனி, சென்னை-67
12) ராமன், கல்யாண ராமன், தசரத ராமன், கோதண்ட ராமன், சீதா ராமன், கௌசல்ய ராமன்

ஒரு க்ளூ. விடைகள் அனைத்துமே திரைப்பட பெயர்கள்.

Monday, January 23, 2006

இலவசம் - நீண்ட ஆயுள்

"இந்த உலகத்தில் நடப்பது பலதும் புரிவதில்லையா? அடிக்கடி உங்களை பார்த்து பலரும் மூளை இருக்கிறதா என்று கேட்கிறார்களா? உங்களுக்கே மேல்மாடி காலி போல தோன்றுகிறதா?" இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் "ஆமாய்யா. ஆமா" என்று பதில் கூறுகிறீர்களா? இன்றிலிருந்து காலையும் மாலையும் சுடோகு புதிர் போட ஆரம்பியுங்கள்.

என்னடா இது. வெவரமில்லாம பேசறானேன்னு பாக்கறீங்களா? ரொம்ப வெவரமாத்தேன் சொல்லுதேன். யூனிவெர்சிட்டி ஆப் எடின்ப்ராவில் டாக்டர் ஹார்டிங்கம் நடத்திய ஒரு ஆராய்ச்சியின் முடிவில் "மூளையில் உள்ள உயிரணுக்கள் அதிகமான தூண்டுதலுக்குள்ளாகும் பொழுது அதிகம் உபயோகிக்கப்படாத மரபணுக்கள் விழித்தெழுகின்றன. இவ்வாறு விழித்தெழும் மரபணுக்கள் மூளையை மேலும் ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. மூளையை செயலிழக்க வைக்கும் நோய்களை அண்டவிடாமல் தடுக்க வகை செய்கின்றன." என்று ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளார்.

இதை நமது தினமலரில் அவர்களின் சொந்த சரக்கையும் சேர்த்து தங்களீஷில் பதிவு செய்துள்ளனர். இவ்விதழில் வரும் செய்திகளை நம்பாதவர்கள் இந்த ஆங்கில வலைத்தளதிற்கு செல்லலாம்.

அதென்னய்யா சுடோகு என்பவர்களுக்குத்தான் இந்த பதிவு. சுடோகு தெரியாதா இவன் என்னமோ எழுத வந்துட்டான் என பேசும் வீம்பிகள் இத்தளத்தில் தினமும் வரும் இலவச புதிரை போட பாருங்களேன்.

சுடோகு ஒரு ஜப்பானிய புதிர் விளையாட்டு. ஆனால் இதன் மூலம் நம்ம பாரதம்தான் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சேதி. நமது முன்னேர்கள் குருகுலத்தில் கிளாசெல்லாம் கட்டடிக்காமல் சரியாக படித்து பல வித்தைகளை அறிந்து வைத்திருந்தனர். கணிதத்தில் அபார தேர்ச்சி பெற்றிருந்தனர். அப்பொழுது பலவிதமான மாயக்கட்டங்களை கண்டுபிடித்திருந்தனர். அதில் ஒருவகைதான் இந்த சுடோகு.

9x9 சதுரங்களைக் கொண்டது சுடோகு கட்டம். இதில் இட வல வரிசைகளை R1-R9 ஆக குறித்துக் கொள்வோம். மேல்-கீழ் வரிசைகளை C1-C9 ஆகவும், தடித்த கோடுகளால் காட்ட பெற்றிருக்கும் 3x3 உட்கட்டங்களை B1-B9 ஆகவும் குறித்துக் கொள்வோம்.விதிகள்
1. ஒவ்வொரு இட-வல வரிசையிலும் (R1-R9), ஒவ்வொரு மேல்-கீழ் வரிசையிலும் (C1-C9) 1-9 என்ற எண்களை தலா ஒரு முறையே வருமாறு கட்டங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. இவைகளில் மட்டுமல்லாது, ஒவ்வொரு உட்கட்டத்திலும் (B1-B9) இவ்வெண்கள் ஒரு முறைக்கு மேல் வரக்கூடாது.
3. தொடக்கத்தில் சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
4. காலியாக இருக்கும் கட்டங்களை மேற்கூறிய விதிகளுக்கிணங்கி நிரப்ப வேண்டும். அவ்வளவுதான்.

ஒரு புதிர்


இந்த புதிரை எப்படி முடிப்பதென்று பார்ப்போம்.
உள்கட்டம் B4-ல் 1 இருக்கிறது. 2 எந்த கட்டத்தில் வரும்? R4-ல் ஏற்கனவே ஒரு 2 இருப்பதால் அங்கு இன்னுமொரு 2 வராது. எனவே மீதமிருக்கும் இரண்டு கட்டங்களில் எதாவது ஒன்றில்தான் வர வேண்டும். அதிலும் C2விலும் 2 இருப்பதால், வரக்கூடிய இடம் ஒன்றே ஒன்றுதான். அது C1,R5.


அடுத்து உள்கட்டம் B5-ல் பார்த்தீர்களானால் R4, R5 ஆகிய இரண்டு வரிசைகளிலும் 2 இருக்கிறது. எனவே C6,R6 என்ற கட்டத்தில்தான் 2 வரும்.


இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 4. வரிசை R5-ல் ஏற்கனவே 4 இருப்பதால், C4,R4 என்ற கட்டத்தில்தான் வரும்.


இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 5. இது மீதி இருக்கும் கட்டமான C5,R5 என்ற கட்டத்தில்தான் வரும்.


இதைப்போன்று அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்தால் விடை கீழ் காணும் படத்திலிருப்பது போல இருக்கும்.


இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்ததுதானே. மேலும் பல புதிர்களுக்கு மேற்கூறிய வலைத்தளத்திற்கு செல்லுங்கள். எடுத்துக்காட்டாக உபயோகித்த புதிர் இத்தளத்திலிருந்து எடுத்ததுதான். இன்னும் எத்தனையோ வலைப்பதிவுகளும் உண்டு.

சுடோகுவின் வரலாறு, இதன் வடிவமைப்பு பற்றிய செய்திகள், மேலும் பல தகவல்கள் வேண்டுமானால் பின்னூட்டமிடுங்கள், இன்னுமொரு பதிவு செய்கிறேன். நீங்கள் முயலும் புதிரில் அடுத்த அடி தெரியாமல் கஷ்டப்பட்டீர்களானால், எனக்கு தெரியப்படுத்துங்கள். சேர்ந்து முயலலாம்.

Saturday, January 21, 2006

தாய்க்குப் பின் தாரம் - சில எண்ணங்கள்

சத்தியமா இதை எதிர்பார்க்கலைங்க. நாலு நாளா பதிவே போடலையே. ஒரு பதிவைப் போட்டு விட்டு தூங்கப்போகலாம். காலையில் ஒரு நாலு பின்னூட்டங்கள் வந்திருக்கும். அதற்கு பதிலைப் போட்டுவிட்டு விடைகளை பதிவு செய்யலாம் என நினைத்து பதிவை தட்டிவிட்டேன். ஆனால் போன டெஸ்டை பார்க்க முடியாத குறை தீர்ந்து போச்சுங்க. ராகுல் டிராவிட்டும், செவாக்கும் விளாசியது போல் விளாசிவிட்டார்கள், ஜெயஸ்ரீயும் சின்னவனும். ஒரு பின்னூட்டத்தை படிச்சி பதில் எழுதறத்துக்குள்ள மேலும் மூணு பின்னூட்டம் போட்டாங்க. தலைப்பில் கொடுத்த ரீபஸ்ஸை 'இன்னா மேன், இவ்வளவு ஈசியா கொடுத்து எங்கள இன்ஸல்ட் பண்ணற'ன்னு சொல்லி சின்னவன் அடிச்சார் பாருங்க ஒரு சிக்ஸர். அது சூப்பர்.

இவரு பொறுமையா பாலை பார்த்து சாத்தினாருன்னா அந்தம்மா ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடிக்காத குறை. போட்டு அடி பின்னிட்டாங்க.மணியன் வந்து கடைசி பாலில் ஒரு சிக்ஸர், நம்ம தோணி மாதிரி. இதுக்கப்புறம் தூக்கமாவது ஓண்ணாவது. சிவராத்திரிதான். ரொம்ப தாங்ஸுங்கோ.

இதுலே ஒரு காமெடி. நான் இந்த பதிவை இட்டபின் தமிழ்மணம் சென்று பார்த்தால், முதல் பக்கத்தில் கடைசி பதிவாக, ஏற்கனவே இருந்த பதிவுகளின் கீழ், இப்பதிவு சேர்க்கப்பட்டிருந்தது. அடுத்த பதிவு வந்ததும், இப்பதிவை முதல் பக்கத்திலிருந்து காணவில்லை. இதைவிட பழைய பதிவுகளெல்லாம் இன்னும் இருக்கின்றன. நான் மட்டும் என்ன பாவம் செய்தேனோ. அந்த காசி விஸ்வநாதருக்கே வெளிச்சம். ஆனாலும் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்த வண்ணமே இருந்ததால், 'சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியில் இருந்துகொண்டே இருந்தது. இதனால் மேலும் பலர் வந்து பார்த்தனர். பாத்தீங்களா பின்னூட்டத்தின் மகிமையை. இட்ட அனைவருக்கும் நன்றி. மற்றவர்களை இனி இடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு நாலு நாள் பதிவே போடலை. பணி நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டேன். இது போன்ற சிறு இடைவெளிகள் வரும். அதற்கு வருந்துகிறேன். இதற்குள் ஒருவர், என்ன சார் புதிரே போடக்காணுமே என்று மடலெழுதிவிட்டார். உங்களுக்கு ஒரு தனி வருந்துகிறேன். இந்த கொத்தனார் வெறும் புதிர் போடத்தான் லாயக்கு என்று ஒரு முத்திரை குத்தி வேறென்ன எழுதினாலும் படிக்காமல் போய்விடப் போகிறீர்கள். அது மாதிரியெல்லாம் பண்ணாதீங்க.

இன்னுமொரு தனிமடலில் ரீபஸுக்கும் குறுக்கெழுத்து புதிரின் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம் ஒரு நண்பர் என்று கேட்டிருந்தார். சற்று நேரத்திலே சின்னவனும் இதையொட்டியே ஒரு பதிவும் போட்டுவிட்டார். என்ன வித்தியாசம் என்று சரியாக சொல்ல தெரியவில்லை. க்ரிப்டிக் குறிப்புகள் பொதுவாக இரு பாகங்களைக்கொண்டதாக இருக்கும்.

ஒரு பகுதி விடையின் நேரடி அர்த்தமாகவும், மற்றொன்று வேறொரு வழியில் அவ்விடையை அடைவதாகவும் இருக்கும். இதில் சில வார்த்தைகளை வெட்டியோ, ஒட்டியோ, கலைத்தோ விடையை கண்டுபிடிக்க வேண்டியது வரும். இப்பகுதி ரீபஸாகவும் இருக்கலாம். ரீபஸ் பொதுவாக வார்த்தைகள் வரும் முறை மாறக்கூடாது. உதாரணமாக, நம் பதிவின் தலைப்பை எடுத்துக்கொண்டால் அம்மா, கொடு ஓல்டு மாங்க் என்பதுதான் தாய்க்குப் பின் தாரம் என்று வரும். இதை அம்மா, ஓல்டு மாங்க் கொடு என்று மாற்றக்கூடாது. இது என் கருத்து. சரியா என்பதை நிபுணர்கள் கூறினால் தெரிந்து கொள்ளலாம்.

இம்முறை மேல் என்ற பதத்தையும் உள் என்ற பதத்தையும் ஒட்டியே பல புதிர்கள் வந்துவிட்டன. அடுத்த முறை இதுபோல் அமையாது பார்த்துக் கொள்கிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றி. பிரத்தியேக குறிப்பீடு பெற்ற நட்சத்திரங்களுக்கு மீண்டும் ஒரு 'ஓ'!

ஒவ்வொரு பதிவிற்கும் வந்து பின்னூட்டமிடும் G Raghavanனை இம்முறை காணவில்லை. I missed you Raghavan.

Friday, January 20, 2006

அம்மா, கொடு ஓல்டு மாங்க்

எவன்ன, மல்மல், வர்ளம்வர், குமழைடை, மனமத்தாப்பூசு .....என்னாடா இது மீண்டும் கருட புராணம் படிக்க ஆரம்பிச்சுட்டானேன்னு பாக்கறீங்களா? இதுவும் அது இல்ல. இந்த பதிவிலேயும் ஒரு புதிர் விளையாட்டைத்தான் பார்க்க போறோம். இந்த மாதிரி புதிருக்கு பெயர் ரீ-பஸ்.

உடனே அந்த ஸ-பஸ்ஸுக்கும் க-பஸ்ஸுக்கும் நடுவிலே வருமே, அந்த ரீ-பஸ்தானே அப்படின்னு கலாய்க்ககூடாது. இதன் ஆங்கில பெயர்தான் Rebus. தமிழ்க்குடிதாங்கிகளெல்லாம் அப்படியே ஒரு ஓரமாய் போய் இதற்கு 'மீண்டும் பேருந்து'-ன்னு பெயர் வைக்க வேண்டும்ன்னு கொரல் குடுங்க. ஆனா பாவம் மரத்தையெல்லாம் வெட்டாதீங்க. சரி, இப்போ விஷயத்திற்கு வருவோம்.

ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு சொற்றொடரையோ பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வேறொரு வார்த்தையாலோ அல்லது ஒரு படத்தாலோ குறிப்பிடுவதே ரீபஸ் புதிராகும். ரீபஸ் என்றால் லத்தீனில் பொருட்களின் மூலம் என்று அர்த்தமாம். பொருளாலும் (meaning) பொருட்களாலும் (things) ஒரு சொல்லையோ சொற்றொடரையோ குறிப்பிடுவதுதான் ரீபஸ். சில எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் இவை எளிதில் விளங்கும். முதலில் ஆங்கிலத்தில்.இவைகளின் விடைகள் முறையே - BACK DOOR, CROSS ROADS, SHUT UP AND SIT DOWN, SAILING OVER SEVEN SEAS, WHAT GOES UP MUST COME DOWN. புரிந்ததுதானே. இப்பொழுது தமிழில்.

1) வெட்டுதுண்டுதுண்டு
2) ர்பா
3)
பெண்
-------
மை
4) கோடுகோடு
5) மதராஸ், பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி

என்ன எல்லாத்தையும் கண்டுபிடிச்சீங்களா? ரொம்ப ஈசியாத்தானே இருந்தது. தெரியாதவங்களுக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா சொல்லறேன். அட, அதாங்க விடை. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, திரும்பிப் பார், அடிமைப் பெண், இரு கோடுகள்,மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி (மணிப்பிரவாள ரீபஸ்). என்ன செய்யறது. சினிமா பெயரா போட்டாதான் பின்னூட்டம் போடறீங்க.

இப்போ இந்த பதிவின் முதலில் இருக்கும் ஐந்து புதிர்களின் விடைகளை கண்டுபிடியுங்கள். கூடவே இவைகளையும்.

ஆணை
-----
தாய்

பூனை
----
சுவர்

அழகர்
------
குதிரை

ணகி

மங்கை
-------------
அலர்

ரஜினி : "பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்"

வெள்ளம்
-----------------
தலை

இதெல்லாம் சரி. இந்த பதிவிற்கும் இதன் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்? அதுவும் ஒரு ரீபஸ்தான். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பிரத்தியேக குறிப்பீடு (Special Mention) உண்டு. அட, அது இலவசமாத்தாங்க.

விடைகளை சில நாட்களுக்கு பின் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். இதெல்லாம் வெறும் சொற்களாலான ரீபஸ்கள். படங்கள், நிறங்கள் என்று புகுந்து விளையாடலாம். இடையில் உங்களுக்கு தோன்றும் ரீபஸ்களை பின்னூட்டத்தில் இடுங்களேன்.

இந்த பதிவிற்கு உதவிய இந்த பதிவிற்கு உதவிய ஹரிஹரன்ஸ் அவர்களுக்கு எனது நன்றி. அவர்களுக்கு எனது நன்றி.

Monday, January 16, 2006

தகதகதகதக தங்கவேட்டை

மனசாட்சி : முதலிலேயே சொல்லிவிடுகிறேன் இலவசமாய் தங்கமெல்லாம் கிடையாது.
நான் : திருப்திதானே மனசாட்சி. இனிமேலும் இதை யாராவது படிப்பாங்களா? படிச்சாலும் பின்னூட்டம் போடுவாங்களா...சரி வேணாம். ஜோசப் சார் ஏற்கனவே இன்னைக்கு கோட்டாவை எடுத்துக்கிட்டார். விஷயத்திற்கு போவோம்.
இப்போதான் சூரிய தொல்லைக்காட்சியில் (எழுத்துப் பிழை இல்லை) மற்றுமொரு தங்கவேட்டை பாகத்தை பார்த்துத் தொலைத்தேன். (எங்க பேட்டையில் ஒரு நாள் லேட்டா வருங்கோ.)
கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது.
"திப்பு சுல்தான் ஆட்சியில் தலைநகர் என்ன?" என்று ஒரு கேள்வி. அதற்கு கல்லூரி செல்லும் ஒரு பெண்ணின் பதில் "நியூ டெல்லி"! மற்றொரு கேள்வி "திருநெல்வேலி நகர் வழியாகச் செல்லும் நதி எது?" இதற்கு ஒரு பள்ளி சிறுமிக்கு பதில் தெரியவில்லை. அதற்கு அவரின் தாயார் தந்த துப்பு இராமநாதபுரம். (தவறான துப்பு).
இவைகள் மட்டும்தானென்று இல்லை, இன்று மட்டும்தானென்று இல்லை. அவ்வப்பொழுது இந்நிகழ்ச்சியை பார்கிறேன். பார்க்கும்பொழுதெல்லாம் இதே கூத்துதான். அறிவியலாகட்டும், புவியியலாகட்டும், வரலாறாகட்டும் இதே நிலைதான். சினிமா சம்பந்தபட்ட கேள்விகளுக்கு மட்டும் சிறுவர் சிறுமியர் மிகச் சரியாக பதிலுரைத்து விடுகின்றனர். இதிலும் இன்று ஒரு சிறுமி கோட்டைவிட்டு விட்டார்.
என் மனதில் சில கேள்விகள்.
1. இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்கள் ஒரு சரியான எடுமாதிரிதானா (representative sample)? 2. பெரும்பாலும் இச்சிறார்கள் ஆங்கிலத்தில் படிப்பதால் இந்தத் தகராறா? ஆனால் பல கேள்விகளை ஆங்கிலத்திலும் ரம்யா மொழிபெயர்த்துவிடுகிறாரே. 3.பொழுதுபோக்கு என்பதே தொலைகாட்சிதான் என்றாகிவிட்டது. அதில் உபயோகமான விஷயங்கள் எதுவுமில்லாமல் சினிமா என்ற அரைத்த மாவையே அரைப்பது இதற்கு ஒரு காரணமா? 4.பள்ளிகளில் வினாடி வினா நிகழ்ச்சிகளே நடைபெறுவதில்லையா?
இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன? இந்நிலை மாற என்ன செய்ய வேண்டும்? உங்கள் கருத்துகளை எழுதுங்களேன்.
மற்றபடி ரம்யா கிருஷ்ணனின் காட்டுக் கத்தல்களும், பகட்டான ஆனால் சுவையற்ற அரங்குகளும், பங்குபெறுபவர்கள் ஒரு சினிமா நட்சத்திரத்தை பார்த்ததால் வழியும் வழிசல்களும், வயதில் முதிர்ந்தவர்களை அழைத்து வந்து பாடச்செய்வதும் ஆடச்செய்வதும் பற்றிச் சொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை. Lack of Professionalism is very visible in the way this program is visualised and executed.
வெறும் சினிமா பற்றிய கேள்விகளை மட்டுமே கேட்கவில்லை என்பது ஒரு சிறு ஆறுதல்.

Friday, January 13, 2006

இதைப் படிங்க பார்ப்போம்

அக்னகவாக்னைகுதுல்ழ்கவம்பொநத்ள்ருஎங்ல்து

இல்லைங்க. இது கருட புராணத்திலிருந்து எடுத்தது இல்லை. பல பேர் Da Vinci Code படித்திருப்பீர்கள். பலரது வலைப்பூக்களில் Iris Rising போட்டிகளை முடித்துவிட்டதாக கூறியிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இது எளிதாகவே இருக்கும். தெரியவில்லை என்றால் விடை பின்னூட்டத்தில்.

Thursday, January 12, 2006

இலவசகொத்தனாரியல் - பாகம்2

இலவசகொத்தனாரியல் - பாகம்2

முதலில் இதைப்படியுங்களேன் - பாகம் 1

உறுப்பினர்
உறுப்பினராக விரும்புபவர் விண்ணப்பம் செய்து காத்திருக்க வேண்டியதுதான். லாட்ஜின் உறுப்பினர்கள் அதனை பரிசீலித்து அவரை சேர்த்துக்கொள்வதா என முடிவு செய்வார்கள். சேரும்பொழுது உறுதிமொழி, பல்வேறு சம்பிரதாயங்கள், தனிச்சின்னங்கள், சமிக்ஞைகள் (signs. படிக்கும் பொழுது இந்த வார்த்தையை உபயோகிப்பேன் என நினைத்ததேயில்லை. எழுத்துப்பிழை இல்லையே.) என்று பல சட்டதிட்டங்களும் உண்டு. மூன்று வகையான உறுப்பினர்கள் உண்டு. முதற்கட்ட உறுப்பினராய் சேர்ந்தபின் தனது தாய் லாட்ஜில் படித்து பட்டம் பெற்றே இரண்டாம், மூன்றாம் நிலையை அடைய முடியும். மூன்றாம் நிலை உறுப்பினராலேயே பங்காளி லாட்ஜுகளுக்கெல்லாம் செல்லமுடியும்.

யாரால் உறுப்பினராக முடியும்? இந்த பட்டியலைப் பாருங்கள்.

1.அவரின் சொந்த விருப்போடு வரவேண்டும்.
2.எல்லாம் வல்ல ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும்.
அவர்கள் எந்த மதத்தினராகவும் இருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கை
அவசியம். கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் பரவாயில்லை.
3.குறைந்தபட்ச வயதினை அடைந்திருக்க வேண்டும். பெரும்பாலும் 21.
4.நல்ல உடல், மன நலத்துடன், நற்பெயருடன் இருத்தல் அவசியம்.
5.சுதந்திரமாய் இருக்க வேண்டும். அடிமையாய் இருக்க கூடாது.

பாரம்பரியமாக இதில் பெண்களை சேர்த்துக்கொள்வது இல்லை. ஆயினும் சில பெண்கள் உறுப்பினராக இருந்திருக்கின்றனர். இப்பொழுது பெண்களுக்கான தனி லாட்ஜுகளும் இருக்கின்றன.

சர்ச்சைகள்

வரலாற்றில் இவர்களின் இடம் சர்ச்சைக்குறியதாகவே இருக்கிறது. இவர்களின் ரகசிய நடவடிக்கைகளே இதற்கு காரணம். பல்வேறு கட்டங்களில் இவர்கள் கிருத்துவதிற்கு எதிராக போதிக்கின்றனர் என்றும், அப்பொழுது இருந்த ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் இருந்துகொண்டே இருந்தன. இவர்களின் ரகசியத்தை சொல்ல முற்படுகின்றவர்களை கொன்றுவிடுகின்றனர் என்றும் சாத்தானையும் துர்தேவதைகளையும் வழிபடுகின்றனர் என்றும் கூட குற்றச்சாட்டுகள் உண்டு. இது போன்ற குற்றச்சாட்டுகளை இவர்கள் மறுத்தே வந்திருக்கின்றனர்.

இதற்கு மேல் இதைப்பற்றி எழுத விரும்பவில்லை. இன்றைக்கு வலையுலகில், இந்த சர்ச்சைகளை பற்றி கூகிளீர்களானல் பல்லாயிரக்கணக்கான வலைத்தளங்கள் கிடைக்கும். இவைகளில் இவ்வியக்கதை ஆதரித்தும் எதிர்த்தும் இருக்கும் வலைத்தளங்களின் எண்ணிக்கை சமமாகவே இருக்கும்.

நமக்கு தெரிந்த கொத்தனார்கள்

(பல்வேறு வலைத்தளங்களிலிருந்து தொகுத்தது. )

எழுத்தாளர்கள் - பைரன், ஆர்தர் கானன் டாயல், ராபர்ட் பேர்ன்ஸ், அலெக்ஸாண்டர் போப், வால்டர் ஸ்காட், ஜொனாதன் ஸ்ப்பிப்ட், ஆஸ்கர் வைல்ட், பி ஜி வேட்ஹௌஸ் என்று பலர்

ஜார்ஜ் வாஷிங்டனில் தொடங்கி கிட்டத்தட்ட 15 அமெரிக்க குடியரசு தலைவர்கள்

ஹென்றி போர்ட், சார்லஸ் ஹில்டன், வால்டர் கிரைஸ்லர், தாமஸ் லிப்டன், ஆண்ட்ரூ மெல்லான் போன்ற தொழிலதிபர்கள்

தனியாளாக விமானத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்ற சார்லஸ் லிண்ட்பெர்க்

துருவங்களில் சாகசம் புரிந்த ராபெர்ட் பியரி, ரோஆல்ட் அமுண்ஸன்

பீத்தோவன், ஹேடின், மோஸார்ட் போன்ற மேற்கத்திய பாரம்பரிய இசை வல்லுனர்கள்

லூயிஸ் ஆர்ம்ஸ்டராங், நாட் கிங் கோல் போன்ற தற்காலத்திய இசைக் கலைஞர்கள்

கிளார்க் கேபிள், ஜான் வெயின், டக்ளஸ் பேர்பாங்ஸ் போன்ற ஹாலிவுட் நடிகர்கள்

தற்காலத்திய விளையாட்டு வீரர்களான அர்னால்ட் பால்மர் (கால்ப்), ஸ்காட்டி பிப்பன் (கூடைப்பந்து)

சிங்கையின் தாமஸ் ராப்பிள்ஸ்

தென்னமெரிக்கர் டெஸ்மாண்ட் டுட்டு
இந்தியாவை பற்றி அதிகம் எழுதியுள்ள ருட்யார்ட் கிப்ளிங்
அன்னி பெசண்ட் அம்மையார்

மோதிலால் நேரு
ஸ்வாமி விவேகாநந்தர்
டி.ன்.டாட்டா
குடியரசு தலைவர்கள் - இரஜேந்திரபிரசாத், இராதாகிருஷ்ணன், பக்குரிதீன் அலி அஹமது
இராஜாஜி
சி.பி.இராமசாமி ஐயர்
மன்சூர் அலி கான் பட்டோடி
மாதவராவ் சிந்தியா
இன்னும் பல மகராஜாக்கள், நீதிபதிகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

Dan Brown-ன் Angels and Demons மற்றும் Da Vinci Code நாவல்களில் இவர்களது செயல்பாடுகளின் தாக்கம் அதிகமுள்ளது. இவரது அடுத்த புத்தகம் இவ்வியக்கத்தை பற்றிதான் என்று கேள்வி.

சென்னையிலே சுமார் 20 லாட்ஜுகள் இருப்பதாக கேள்வி.

Wednesday, January 11, 2006

இலவசகொத்தனாரியல் - பாகம்1

பதிவுக்கு இலவசம்ன்னு பேரை வச்சாச்சு. (இந்த பெயர் இதுவரை முன்பதிவு செய்யப்படாததே ஒரு சின்ன ஆச்சரியம்தான்.) மக்களை கவர அப்படின்னு சாக்கு போக்கு சொல்லியாச்சு. அதென்னய்யா இலவசகொத்தனாருன்னு உனக்கு பேரு அப்படீன்னு யாருமே கேக்கலையேன்னு நெனைச்சேன். நம்ம கைப்புள்ள வந்து கேட்டுப்புட்டாரு. ரொம்ப டாங்ஸுங்கோவ். (இதை வைத்து ஒரு பதிவு ஓட்டிவிடலாமே.ஹிஹி.) பாவம் விக்கிபீடியாவாண்டை எல்லாம் போயிக்கினு வந்திருக்காரு. நம்மளாண்டை கேட்டிருந்தா இன்னான்னு சொல்லாதியா இருப்பேன்.

இலவசம் அப்படீன்னு ஒரு தளம். அதை கட்டற ஆளு நானு. அதனாலத்தேன் நான் இலவசகொத்தனாரு. ஆங்கிலத்துல freemason அப்படீன்னு ஒரு பதம் இருக்கறது தெரியும். விவகாரமா ஒண்ணும் இல்லையேனு பாத்துட்டு அதையே பேரா போடுக்கிட்டேன். அவ்வளவுதான். இப்போ இவரு எங்க எங்கயோ போயி படிச்சுட்டு வந்துட்டாரு. அதனால இந்த பெயரை இன்னும் நியாயபடித்தவேண்டிய நிலைக்கு நம்மளை தள்ளிட்டாரே. சரி.

இலவசகொத்தனாரியல் - அட அதாங்க freemasonry - அப்படீன்னா என்னான்னும் பார்த்துட்டு அது நமக்கு எப்படி சரியாகுதுன்னு ஒரு கதை விட்டுருவோம்.

Freemasonry என்றால் என்ன?

இது சகோதரத்துவத்தை முன்னிறுத்தி செயல்படும் ஒரு ரகசிய கூட்டமைப்பு. (கைப்புள்ள, நம்மளைப்போய் இப்படியெல்லாம் எழுத வெச்சுட்டீங்களே. இப்போ திருப்திதானே.) இதன் துவக்கத்தை பற்றி அதிகம் தெரியவில்லை. 18-ம் நூற்றாண்டையொட்டி இங்கிலாந்தில் முறைபடுத்தபட்ட இயக்கம்.

பெரும்பாலும் கட்டிடக்கலை நிபுணர்களால் தொடங்கப்பட்டதாகவே ஒத்துக்கொள்ளபடுகிறது. மன்னர் சாலமனின் கோயிலை கட்டியவர்களால் தொடங்கப்பட்டது என்பது ஒரு ஐதீகம். இதன் ரகசிய நடவடிக்கைகளால் அச்சத்தையும் சந்தேகத்தையும் சம்பாதித்த ஒர் இயக்கம். அதானால், திரைகளை விலக்கி தங்கள் நடவடிக்கைகளை வெளிக்கொணர முயல்கிறது இவ்வியக்கத்தின் ஒரு பகுதி. 'சகோதரத்துவம், உண்மை, உதவி' - இதுதான் இவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.

அமைப்பு
இதன் அடிப்படை அமைப்பு Lodge எனப்படும். Lodge-ன்னா நம்ம போலீஸ்காரங்க அடிக்கடி ரெய்டெல்லாம் போவாங்களே, அது இல்லை. இவர்களின் ஒரு குழுமமே அப்படி அழைக்கப்படுகிறது. இவர்கள் எங்கு வேணுமானாலும் சந்திக்கலாம், லாட்ஜ் உள்பட. இவ்வாறு கூடும் இடத்தை கோயில் என்பர். இப்பொழுது இது சற்றே மாறி ஹால் என்றும் அழைக்கப்படுகிறது. லண்டனில் உள்ள Freemasons Hall மிக பிரச்சித்தம். ஒரு நாட்டில் இருக்கும் லாட்ஜுகளை ஒருங்கிணைப்பது Grand Lodge. இது பொது விதி. இங்கு அமெரிக்காவில் பார்த்தீர்களானால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கிராண்ட் லாட்ஜ் உண்டு. ஒவ்வொரு லாட்ஜும் தனக்கேயுள்ள விதிமுறைகளை பின்பற்றியே செயல்படுகிறது. லாட்ஜுக்கும், கிராண்ட் லாட்ஜுக்கும் தலைவர், உப தலைவர் போன்ற பதவிகளெல்லாமுண்டு.

ஒவ்வோரு லாட்ஜின் விதிமுறைகள் வித்தியாசப்படலாம். இவைகளுக்கு பங்காளி லாட்ஜுகள், பகையாளி லாட்ஜுகள் எல்லாமுண்டு. ஒரு லாட்ஜின் உறுப்பினர், அதன் பங்காளி லாட்ஜின் கூட்டத்திற்கு செல்லமுடியும். ஒரு லாட்ஜ், தனது பகையாளி லாட்ஜின் இருப்பையே ஒத்துக்கொள்ளாது.

இங்கும் நம் காங்கிரஸைப்போல பல கோஷ்டிகள் உண்டு. இங்கிலாந்து பாரம்பரியத்தை சார்ந்த அல்லது கண்ட ஐரோப்பிய பாரம்பரியத்தை சார்ந்த பிரிவுகள் (anglo-saxon vs continental european), நவீன கோட்பாட்டையோ சம்பிரதாய கோட்பாட்டையோ சார்ந்திருப்பவர்கள் (moderns vs ancients) என்றெல்லாம் பல பிரிவுகள்.

---------------------------------------------------------------------------------
பதிவு கொஞ்சம் பெருசா போச்சு. அதானால் ரெண்டு பாகமாய் பிரிச்சிருக்கேன். யார் உறுப்பினராகலாம், நமக்கு தெரிந்தவர்களில் யார் யார் உறுப்பினர் போன்றவையெல்லாம் அடுத்த பகுதியில். இன்றைய இலவசமும் அடுத்த பகுதியை படித்தால்தான்.

Tuesday, January 10, 2006

மொத்த ஆளுமை விலை

முன்பெல்லாம் வன்பொருள் வாங்கினால் பல்வேறு மென்பொருட்களை இலவசமாக தருவார்கள். இன்றைக்கோ நிலமை தலைகீழ். வன்பொருள் விலைகள் சடசடவென சரிய, மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதுவும் சில சமயம் சகாய விலையில் கிடைத்தாலும், upgrade செய்யும் பொழுது மூக்காலே அழ வேண்டியிருக்கிறது. ஜோசஃப் சாரை இது பற்றி விரிவாய் ஒரு பதிவு போட சொல்ல வேண்டியதுதான்.

மென்பொருள் என்றில்லை. ப்ரிண்டர்களை கிட்டதட்ட இலவசமாகவே கொடுத்து பின் அதற்கான கேபிள், மசி என்று கடனட்டையை நிரப்ப செய்யும் வியாபார யுக்திகள். இன்னும் சில தளங்களில், இலவசமாக உங்கள் புகைப்படத்தை அச்சிட்டு தருகிறோம், வெறும் தபால் கட்டணம் தந்தால் போதுமென விளம்பரம் செய்து பல மடங்கு கட்டணம் வசூல் செய்யும் வசூல்ராஜாக்கள். எங்களிடம் இரு வருட சேவைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால், இலவசமாய் razrயும் rokrயும் தருவோம் எனச்சொல்லி அதிக விலை திட்டங்களை தலையில் கட்டும் தொ(ல்)லைபேசி நிறுவனங்கள்.

இங்கு இதெல்லாம் போதாதென்று mail in rebate என்று ஒரு கொடுமை. (இதற்கு தனிப்பதிவுதான் போடவேண்டும்.)

எதற்காக இதெல்லாம் சொல்கிறேன் என்றால், இலவசமாய் கிடைக்கிறது, சகாய விலையில் கிடைக்கிறது என்று எதையாவது வாங்கிவிட்டு அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகாமல் கஷ்டப்படாதீர்கள்.

ரொம்ப சீரியஸாய் போச்சோ? வீட்டில் உள்ள (இலவசமாய் கிடைத்த) பிரிண்டரில் மசி தீர்ந்துவிட்டது. புதிய மசி தோட்டாவிற்கு (cartridge என்றால் தோட்டாதானுங்களே) கொடுத்த விலையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அதான். :)

இதற்கு பின் இன்றைய இலவசமாய் ஒரு நகைச்சுவை துணுக்கு. சற்றே அசைவ வகை. ஆகவே பிடிக்காதோர் மன்னித்துவிட்டு அடுத்த பதிவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை ஆங்கிலத்திலே சொல்வது சற்றே எளிதாக இருக்கிறது. ஆகவே மற்றுமோர் மன்னிப்பு.

"There is sex for money and there is sex for free. And sex for free costs more!"

புரிந்ததா. இதைத்தான் TCO - Total Cost of Ownership (தமிழிலே என்னங்க?) என்று குறிப்பிடுகின்றனரோ.

வந்துட்டான்யா வந்துட்டான்

இவ்வளவு நாள் மற்றவர்கள் பதிவுகளை படிப்பதும், பின்னூட்டமிடுவதுமாகவே இருந்துவிட்டு, இப்பொழுது நாமும் ஒரு பதிவு
தொடங்கினாலென்னவென்று ஒரு ஆசை. விதி யாரை விட்டது. சரி, புத்தாண்டில் தொடங்குவோம் என இருந்து இந்த வருடத்திலும் பத்து நாட்கள் ஓடிவிட்டன. இதோ தொடங்கிவிட்டேன். படிக்க வந்த அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

செய்ய வேண்டியது என்னவென்று பார்த்தால், முதலில் ஒரு பிளாக்கர் கணக்கு வேண்டும். தொடங்கியாயிற்று.

பின் ஒரு கவர்ச்சிகரமான பெயர் வேண்டும். ஆரம்பித்தது பிரச்சனை. என்ன எழுதபோகிறோம் என்று தெரிந்தால், அதனையொட்டி ஒரு பெயர் வைக்கலாம். சத்தியமாய் அது தெரியாது. என்னுலகம், உன்னுலகம், எண்ணம், வண்ணம், பார்வை, கோர்வை, பேசுகிறேன், எழுதுகிறேன் என்றெல்லாம் ஏற்கனவே பல பதிவுகள். ஒரு ஷாக் வேல்யூவிற்காக உளறல், வாந்தி, பேதி என்று வைக்க மனம் இடம் தரவில்லை. கவித்துவமான
பெயர் வைக்கலாமென்றால், நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். ஒரு சின்ன பெயருக்கே இவ்வளவு யோசனையா, நாமெல்லாம் என்ன எழுத
போகிறோம். இதெல்லாம் நமக்கு வராது. பேசாமல் பின்னூட்டங்களிலேயே காலந்தள்ளிவிட வேண்டியதுதான் என்று நினைக்கும்பொழுதுதான், காசா பணமா, எதேனும் ஒரு பெயர் வைப்போமே என்று ஒரு எண்ணம். காசு என்று நினைத்தவுடன், ஆகா, தமிழ் பேசும் நல்லுலகை கவர எளிதான ஒரு
வழி இருக்கிறதே என்று ஒரு பொறி.

அதனால்தான் பதிவிற்கு 'இலவசம்' என்று நாமகரணம். இந்த வார்த்தையை பார்த்துமா நம் மக்கள் வராமல் இருக்க போகிறார்கள்!

ஆக மொத்தம் பதிவு தொடங்கியாயிற்று. இனி வரும் பதிவுகளில் என்ன எழுதலாம் என்று பார்ப்போம்.
முதல் இலவசம் : Indibloggies-ல் டுபுக்கு ஜெயித்தால், நமக்கெல்லாம் ஒரு சொப்போ, ஸ்பூனோ தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். ஸ்பூன் வேண்டுமென்றால், டுபுக்குவின் சின்னத்தைப் பார்த்து போடுங்கைய்யா வோட்டு.