Friday, August 28, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - ஆகஸ்ட் 2009

இந்த மாத புதிரின் விடைகள்




விடைகள் வந்த விதத்தை விளக்கமாகப் பார்த்தோமானால்

குறுக்கு

3 முடியாத சலாம் போட வா என சுற்றி சுற்றி வந்த கேள்வியா (3)
சவாலா - கேள்வியா என்பதற்கு மற்றொரு சொல் சவாலா. முடியாத சலாம் என்பது சலா. அது வா என்னும் எழுத்தைச் சுற்றி வருவதனால் சவாலா.

5 மாலையின் பின்னே ராசி இடை மாற வரும் பொறுப்புணர்வு (5)
தார்மீகம் - பொறுப்புணர்வு என பொருள் கொண்ட சொல். தார் என்றால் மாலை என்ற பொருள் உண்டு. ராசிகள் பன்னிரெண்டில் ஒன்று மீனம். அதன் இடைமாறி மீகம் என வர தார்மீகம் என்ற சொல் கிடைக்கும்.

6 பாதி திப்பிலி தடுமாறியதைச் சொல்லும் எழுத்து (2)
லிபி - லிபி என்றால் எழுத்து. திப்பிலி என்ற சொல்லில் பாதி பிலி. தடுமாற என்பது அந்த எழுத்துகள் இடம் மாறுவதைக் குறிக்கிறது.

7 பல் மருத்துவரோடு பலரும் தேடுவது (3)
சொத்தை - பல் மருத்துவர் பற்களில் சொத்தை இருக்கிறதா எனப் பார்ப்பார். வாழ்வில் பலரும் சொத்தை தேடித்தானே செய்கிறார்கள்.

8 முடிவில்லா கிஸ்தியை தீயிலிட்டு மகிழ் (5)
சுகப்படு - மகிழ் என்ற பொருள் தரும் சொல். தீயில் என்பது சுடு எனக் குறிக்கிறது. கப்பம் என்றால் கிஸ்தி. அது முடியாமல் போனதால் கப்ப. இந்த சொல்லை தீயில் இட்டு அதாவது சுடு என்பதில் இட்டால் சுகப்படு என்றாகிறது.

11 வேஷம் போட பத்துமாம் என்றதில் குழப்பம் (5)
பம்மாத்து - வேஷம் போடுவதையே பம்மாத்து என்பர். இது பத்துமாம் என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் குழப்பினால் வருவது.

12 இறந்தவர் சடங்கு நடக்க பெரும்பாலும் ஒலிக்க வேண்டியது (3)
சங்கு - இறந்தவருக்கான சடங்குகள் செய்யப்படும் பொழுது ஒலிப்பது சங்கு. சடங்கு என்ற சொல்லில் உள்ள பெரும்பான்மையான எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் சங்கு என வரும்.

14 குப்பி தா என அப்பாவைக் கேட்கலாமோ (2)
பிதா - அப்பாவை குறிக்கும் இந்த சொல் குறிப்பின் உள்ளேயே ஒளிந்துள்ளது.

16 முக்கால் கலயம் கலையும் முன் நடராஜர் காலில் விழுந்தவன் (5)
முயலகன் - நடராஜர் சிலைகளின் அவரின் காலின் கீழே இருக்கும் அசுரனின் பெயர் முயலகன். கலயம் என்ற சொல்லின் முக்கால்வாசி எழுத்துகள் கலய. இவற்றோடு முன் என்ற இரு எழுத்துகள் சேர்ந்து கலைந்து வந்தால் முயலகன் என்ற விடை கிட்டும்.

17 ஆலின் காலில் அரைகுறையாய் விழுந்து ஆவதென்ன (3)
விழுது - ஆல் என்றால் ஆல மரம். ஆல மரத்தின் காலாக விழுதுகளைக் கருதலாம். விழுந்து என்ற சொல்லை அரைகுறையாக, அதாவது அச்சொல்லின் எழுத்துக்களில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டால் விழுது என்ற விடை கிடைக்கும்.

நெடுக்கு

1 பர்தாவைக் கலைத்து மொத்தம் தலையிழக்கத் தரும் தின்பண்டம் (6)
பதார்த்தம் - தின்பண்டம் என்பது பொருள். பர்தா என்ற சொல்லின் எழுத்துக்களை இடம் மாற்றி மொத்தம் என்ற சொல்லின் முதல் எழுத்தை மட்டும் விட்டு (தலை இழந்து) மற்ற எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் பதார்த்தம் என்ற விடை வரும்.

2 ஆமைபோல் வீட்டை அழிப்பவன் உகாண்டா தலைவனா? (3)
அமீனா - உகாண்டாவின் தலைவன் இடி அமீன். தலைவனா எனக் கேள்வியாக மாற்றினால் அமீனா என்று விடையையும் கேள்வியாகத் தர வேண்டும். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது பழமொழி. ஆக ஆமை போல் அழிப்பவன் அமீனா.

3 சிவனைக் கூப்பிட்டால் பெரும்பாலும் சுகம் என சேர்ந்திடு (5)
சம்போகம் - சிவனை கூப்பிடுவதில் ஒரு விதம் சம்போ மகாதேவா என்பது. சம்போ என்பதை எடுத்துக் கொண்டு அதன் பின் சுகம் என்பதில் இருந்து கம் என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் சம்போகம் என்றாகும். சேர்ந்திருப்பது சம்போகம்.

4 லலிதா கொடு எனக் கேட்காமல் நீட்டி முழக்கிப் பாடியது நான் தூங்கவா? (2)
லாலி - லலிதா என்பதில் கொடு என கேட்காமல், அதாவது தா என்பது இல்லாமல் ஆனால் லலி. அதை நீட்டி முழக்கினால் லாலி. தூங்கப் பாடுவது லாலி.

9 சின்னஞ்சிறு செடியா இல்லை துள்ளி வரும் குட்டியா (6)
பசுங்கன்று - பலரையும் படுத்திய குறிப்பு இது. பசுவின் கன்று பசுங்கன்று. பசுமையான செடியும் பசுங்கன்று. இந்த சிலேடையைப் பயன்படுத்தி வந்த குறிப்பு.

10 இளமை கதவை சாத்த முதுமை கொண்டு வரும் ரசம் (5)
சாத்தமுது - ஐயங்கார் வீடுகளில் ரசத்தினை சாத்தமுது என்பர். இந்த விடை குறிப்பின் உள்ளேயே ஒளிந்திருக்கிறது.

13 வாராவதி உடைந்ததால் உறுதி ஆனதா (3)
பலம் - வாராவதி என்றால் பாலம். அது உடைந்தால் பலம் என்றாகும். பலம் என்றால் உறுதி.

15 மேதாவி குதித்தா விழுந்தான் (2)
தாவி - குதித்து விழுவதை தாவி என்கலாம். குறிப்பின் உள்ளே இரு முறை தாவி என்ற சொல் ஒளிந்து கொண்டிருக்கிறது. குறிப்பை சற்று மாற்றி மீண்டும் மீண்டும் மேதாவி குதித்தா விழுந்தான் எனக் கேட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

புதிரை முழுமையாக விடுவித்த அனைவருக்கும் வாழ்த்துகள். முயற்சி செய்த அனைவருக்கும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த புதிருடன் சந்திக்கலாம். விடைகளை இந்த வார திண்ணை இதழில் பார்க்க இங்கு சொடுக்கவும்.

6 comments:

said...

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

said...

டெக்னிக்கல்லி மீ த ஃப்ர்ஸ்ட்... :)

//3 சிவனைக் கூப்பிட்டால் பெரும்பாலும் சுகம் என சேர்ந்திடு (5)
சம்போகம் - சிவனை கூப்பிடுவதில் ஒரு விதம் சம்போ மகாதேவா என்பது. சம்போ என்பதை எடுத்துக் கொண்டு அதன் பின் சுகம் என்பதில் இருந்து கம் என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் சம்போகம் என்றாகும். சேர்ந்திருப்பது சம்போகம்./

இதுதான் என்னை பாடாபடுத்தி விட்டுருச்சு.. :)

said...

என்னையும் ஒரு ரெண்டு 3 இடங்களில் பாடாபடுத்தி விட்டுருச்சு.. :) :)

மீ த செகண்டு:)))

said...

சூப்பர்!

அப்ப அடுத்த மாதமும் குஎழுத்து உண்டல்லவா? :)

said...

நெடுக்காக 3 சம்போகம் என்ற விடை எளிதில் கிடைத்து விட்டது. ஆனாலும், புதிரும் விடையும், கடவுள் பெயரை கொச்சைப் படுத்துவது போல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
சுப்ரமணியன் வடக்கன்தரா ( வசுப்ரதா)

said...

வசுப்ரதா அவர்களுக்கு,

//புதிரும் விடையும், கடவுள் பெயரை கொச்சைப் படுத்துவது போல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.//

இதில் கொச்சைப்படுத்துவதற்கு என்ன இருக்கிறது? சம்போகம் என்பது இறைவனால் அருவருக்கப்படத்தக்கது என்றா எண்ணுகிறீர்கள்?!!