Showing posts with label Bank. Problem. Show all posts
Showing posts with label Bank. Problem. Show all posts

Tuesday, March 10, 2009

கட்டிங் கபாலியால் கவுந்த வங்கிகள்!

இடம்: ராயபுரம் டாஸ்மாக் பார்

மன்னாரும் கபாலியும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

கபாலி: தலைவா, மினிம்மா க்ளீன் பண்ணற ஆபீசில் என்னமோ பேசிக்கினு இருந்தாங்களாம். பெரிய பெரிய பேங்கு எல்லாம் அப்பீட் ஆவுதாமே. இன்னா மேட்டர் தல?

மன்னார்: சரியான மேட்டரைத்தான் புடிச்சு இட்டாந்துருக்க. நமக்கு பிரியற மாரி சொல்லணுமுன்னா, கொஞ்சம் வேற மாரி சொல்றேன் கேட்டுக்க.

தேர்தல் வரசொல்லதான் நம்ம கைல காசு பொரளும். ஆனா அதுவரை நம்ம வாயும் வயிறும் சும்மா இருக்குமா? இருக்காது. கட்டிங் கேக்காது? அப்போ நீ இன்னா செய்வே? நேரா நம்ம டாஸ்மேக் கோவாலாண்ட வந்து மாமே கொஞ்சம் கவ்னின்னுவே. செய்வதானே? உன்னிய மாரி எத்தினி பேரு அவனாண்ட வருவானுங்க. அவனும் சரின்னு சொல்லி ரெகுலர் பார்ட்டிங்க எல்லாம் அக்கவுண்ட் வெச்சு கட்டிங் அடிக்கலான்னு சொல்றான்.

உடனே நீ கோயிந்து பீட்டருன்னு உன் தோஸ்த் அல்லாரையும் கூட்டு சேத்துக்கினு கோவாலு கடையே கதின்னு கெடப்பதானே. கோவாலுக்கு பிஸ்னஸ் சும்மா பிச்சிக்கினு போவும். இதான் சாக்குன்னு அவனும் உங்களை மாரி கடனுக்கு குடிக்கிறவங்களுக்கு நைசா ரேட்டை வேற ஏத்திருவான்.

இந்த கடைக்கு எதுத்தா மாரி இருக்கிற பேங்குகாரன் இதைப் பாத்து, கோவாலு கோவாலு, உனக்கு சரக்கெடுக்க காசு தேவைப்படுது. இந்த மாதிரி கடனில் வர வேண்டிய காசை எல்லாம் வெச்சு என்னாண்ட லோன் வாங்கிக்கன்னு சொல்லறான். கோவாலுவும் கொஞ்சம் யோசிச்சு சரி ரொட்டேசனுக்கு காசு தேவப்படுதுன்னு நினைச்சு இவனாண்ட ஒரு லோன் எடுக்கறான்.

இப்போ இந்த பேங்கோட பெரிய ஆபீஸ்ல இருக்கிறவன் ஒருத்தன், நம்ம பேங்கு இருக்கிற காசை எல்லாம் இப்படிக் கடனா குடுத்தா எப்படி சரிப்படும்ன்னு நினைச்சு இந்த கடன் மூலமா வர வேண்டிய காசை எல்லாம் அடமானமா வெச்சு கடன்பத்திரம் தயாரிச்சு அதை பங்குச் சந்தையில் வித்துடறான். அங்க இந்த விவரமெல்லாம் தெரியாமா சொம்மா வாங்கி வாங்கி வித்து இந்த மாதிரி பத்திரங்க ரேட்டை எல்லாம் கன்னாப்பின்னான்னு ஏத்தி விடறாங்க. என்ன விலைக்கு வாங்கினாலும் அதுக்கும் மேல ரேட் ஏறாசொல்லோ அல்லாரும் ஹேப்பியா இருக்காங்க.

இப்டி அல்லாரும் சந்தோசமா இருக்கங்காட்டி, இந்த பேங்க்ல வேலை பாக்கிற ஒருத்தன் கோவாலாண்ட போயி கோவாலு கோவாலு கடன் ரொம்ப ஏறிப் போச்சே, கொஞ்சம் அசலைக் கட்டக்கூடாதான்னு கேட்ருதான். கோவாலு உன்னாண்ட வந்து கபாலி கொஞ்சம் காசு குடுறான்னு கேட்டா நீ இன்னா சொல்லுவே? அட என்னாண்ட இருந்தா தர மாட்டேனா பிரதர். கொஞ்சம் வெயிட் பண்ணு ரெண்டு மாசந்தள்ளி தேர்தல் வருது. மொத்த அக்கவுண்டையும் செட்டில் பண்றேம்ப. கோவாலு பேங்கு ஆள் கிட்ட போயி இப்போ என் கிட்ட காசு இல்லைன்னு சொல்லுவான். இந்த பேங்குகாரன் புத்தி எப்டி வேலை செய்யுமுன்னா உன்னாண்ட காசு இருக்கசொல்லோ கடனை வாங்கிக்கோன்னு கெஞ்சுவான். ஆனா உனக்கு எப்போ முடையாக்கீதோ அப்போ வந்து கடன கட்டுன்னு கயுத்து மேல கை வெப்பான். அந்தா மாரி கோவாலு காசு இல்லைன்னு சொன்னதுதான், உடனே கேசை போட்டு அத்தைப் போட்டு இத்தைப் போட்டு கோவாலை ஒரு வயி பண்ணிடுவான். கோவாலு ஒரு ஸ்டேஜ்ல போடாங்கோன்னு சொல்லி மஞ்சக் கடுதாசி குடுத்துட்டு கடையை மூடிக்கினு போயிடுவான்.

இப்போ கோவாலுக்கு நடந்ததுதான் அவனுக்கு கடன் குடுத்த பேங்குக்கும் நடக்கும். எப்போ கோவாலு மஞ்சக்கடுதாசி குடுத்தானோ, அப்போவே ஷேர்மார்க்கெட்டுக்கு நியூஸ் போயிரும். இந்தா மாரி இந்த பேங்கு குடுத்த கடன் வராது. அதனால அந்த பேங்கு பத்திரத்தை எல்லாம் வாங்காதீங்கோன்னு சொல்லிருவானுங்க. சக்கைப் போடு போட்டுக்கினு இருந்த பத்திரம் எல்லாம் குப்பையாயிரும். இந்த பேங்கு பத்திரம் எல்லாம் குப்பையாப் போச்சுன்னு நியூஸ் வந்தா உடனே, அதுல டெபாசிட் போட்டவனெல்லாம் உடனே வெளிய எடுக்கப் பாப்பான். ஆனா உடனடியா கேஷ் இருக்குமா? இருக்காது. ஆக அங்கேயும் ஆப்பு. உடனே அரசாங்கம் கைல கால்ல வியுந்து காசு வாங்கி இவங்களை செட்டில் பண்ணுவானுங்க. அரசாங்கமும் வரிப்பணத்தை எல்லாம் வாரி வயங்கி இவனுங்களைக் காப்பாத்தும். ஆனா பத்திரத்தை கடைசியா வாங்குன பரதேசிக்கு ஆப்புதான்.

இதெல்லாம் ஒரு சைடில் நடக்கும் போது, இன்னொரு பக்கம் கோவாலுக்கு கடனுக்கு சரக்கு குடுத்த கம்பெனிக்கும் இப்போ காசு வராதா? அவனுங்க எல்லாம் அப்பீட் ஆவானுங்க. 100 வருசமா இருக்கிற பிராந்தி கம்பெனி படுத்துக்கும். எதிர்கட்சிக்காரன் பீர் பேக்டரியை ஆளுங்கட்சிக்காரன் கம்பெனி வாங்கும். இந்த கம்பெனிக்காரன் கண்ட்ரோலில்கீற மத்த கம்பெனிங்களும் அடி வாங்கும். அவனுங்க செலவைக் கட்டுப்படுத்த ஆளுங்களை வீட்டுக்கு அனுப்புவானுங்க. இந்த வேலை போனவனுங்க வாங்குற கடைங்க, கைவண்டிங்க அல்லாருக்கும் வியாபாரம் படுத்துக்கும். இப்படி மொத்த ஊருக்குமே ஆப்புதான்.

இதுதாண்டா நடக்குதுன்னு சொல்லிக்கிட்டு கடனுக்குக் குடுத்த கோவாலு கட்டிங்கைத் திருப்பி கேட்குமுன் வாயில் கவுத்துக் கொண்டு மப்பானான் மன்னாரு.

டிஸ்கி 1:
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்பதால் ஒரு கபாலி, ஒரு கோவாலு, ஒரு வங்கி, ஒரு பத்திரம் எனச் சொல்லி இருக்கிறேன். உண்மையில் உள்ள சிக்கல் ரொம்பவே இடியாப்பம் ரேஞ்ச் என்பது எல்லாருக்கும் தெரியும். இதான் எனக்குத் தெரியுமே எனச் சொல்ல வரும் நிபுணர்களுக்காகவே இந்த டிஸ்கி.