Showing posts with label recipe. Show all posts
Showing posts with label recipe. Show all posts

Tuesday, May 29, 2007

நட்சத்திர உப்புமா (அ) பெனாத்தலாருக்கு சமர்ப்பணம்

எல்லாரும் வித்தியாசமான பல விஷயங்கள் தரும் இந்த வாரத்தில் நமக்கென்று இருக்கற ஸ்டைலை விட்டு விடலாமா? அதனால மக்களே இந்த வாரம் நட்சத்திர உப்புமா! உப்புமா பதிவு என்பதால் நம்ம உப்புமா குரு, மின்னொளி மன்னன் பெனாத்தலாரிடம் அனுப்பி சரி பார்க்கச் சொன்னேன். அவர் தந்த உப்புமா குறிப்புகள் இங்க இருக்கு. தேடிப் பார்த்தீங்கன்னா கிடைக்கும். அப்படி கிடைக்கலைன்னா கேளுங்க சொல்லறேன். இனி பதிவு.

இன்னிக்கு ஆணி புடிங்கறவங்க மத்தியில வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமா இருக்கு. அல்சர், எரிச்சல், வாயுத் தொல்லை எனப் பல விதமான பிரச்சனை இவர்களைத் தாக்குது. அளவுக்கதிகமான காபி, எழுந்து நடமாடாமல் இருக்கும் இடத்திலேயே வேலை என்றெல்லாம் காரணிகள் இருந்தாலும் மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனைகளுக்குக் காரணமாகச் சொல்வது காலை உணவு உட்கொள்ளாததுதான். அதுனால இவங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் சமையற்குறிப்பு. அதிகமான பொருட்கள் வேண்டாம், சுலபமாகச் செய்திடலாம், அதிக நேரம் ஆகாது, சுவையாகவும் இருக்கும். இதுக்கு மேல் என்ன வேணும். சந்தோஷமா செய்து சாப்பிடுங்க மக்கா!

இன்னிக்கு பதிவெழுதறவங்க மத்தியிலே பலவிதமான பிரச்சனைகள் இருக்கு. ஜாதி மதம் போற்றும் / தூற்றும் பதிவுகள், வெள்ளீயம், காரீயம், இருத்தலீயம், பெரியாரீயம் னு பல ஈயம் தாங்கி வரும் பதிவுகள்னு நெறய வருது. இந்த ஹெவி பதிவெல்லாம் படிச்சு மனம் கனமாகிப்போயிடக் கூடாதுன்றதுக்காகத்தான் உப்புமா பதிவுகள் போட ஒரு ஸ்பெஷல் குறிப்பு. அதிகமா படிக்க வேண்டாம், சுலபமா செய்திடலாம், ஹிட்டும் வரும். இதுக்கு மேலே என்ன வேணும்? சந்தோஷமா உப்புமா கிண்ட ஆரம்பிங்க மக்கா!





தேவையான பொருட்கள்
அவல்இரண்டு கப் கணினி 1
உருளைக்கிழங்கு 1 மானிட்டர் 1
வெங்காயம்1 கீ போர்ட் 1
பச்சை மிளகாய்4 ஈ கலப்பை 1
எலுமிச்சம் பழம்1 லதா எழுத்துரு 1
மஞ்சள் பொடி1/2 தேக்கரண்டி இணைய இணைப்பு குறைந்தது 256Kbps
மிளகாய்ப் பொடி1 தேக்கரண்டி பிரவுஸர் 1
கொத்துமல்லிசிறிதளவு கிண்டல் தேவையான அளவு
கறிவேப்பிலைசிறிதளவு நையாண்டி தேவையான அளவு
உப்புதேவையான அளவு அறிவு பூர்வமான அணுகல் 0.00000%
தாளிக்க
வேர்க்கடலை2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு1 தேக்கரண்டி
எண்ணைசிறிதளவு


செய்முறை

1) வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், மாற்று போன்றவற்றை திறந்துவைத்துக்கொள்ளவும்.

2) அவலை நன்றாகக் தண்ணீரில் நனைத்து, களைந்து பின் நீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
அவற்றில் சூடான / அதிகம் பேர் பார்த்த / அதிக பின்னூட்டம் பெற்ற பதிவுகளை வடிகட்டி திறந்துவைத்துக்கொள்ளவும்.

3) களைந்தெடுத்த அவலில் உப்பும், மஞ்சள் பொடியையும் போட்டு நன்றாகப் பிரட்டி வைத்துக் கொள்ளவும்.

திறந்து வைத்த இடுகைகளில் இருந்து இன்றைய சூடான கருத்துக்களம் எது என தெரிந்து கொள்ளவும்.

4) வாணலியில் எண்ணெய்யை விட்டு அதில் தாளிக்க வைத்திருக்கும் சாமான்களையும் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக வெடிக்க விடவும்.

இ கலப்பையைத் திறந்து, சூடான கருத்துக்களத்தைப் பற்றி ஆறிப்போன சில வரிகளில் தொடங்கவும்.

5) அதன் பின் வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்றாகக் கிளறவும்.

பிறகு உங்களுடைய சொந்தமான சில சொதப்பல் வரிகளையும் சேர்க்கவும்.

6) சில நிமிடங்களுக்குப் பிறகு உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு ஒரு முறை முதல் 255 கேரக்டர்களைப் படித்துப் பார்க்கவும். பார்வையாளர்களை இழுக்கும் வன்மை இருக்கிறதா எனப் பார்க்கவும்.

7) காய்கறி நன்றாக வதங்கிய பின் அவலைப் போட்டு நன்றாக கிளறவும்.

பிறகு அற்புதமான ஒரு தலைப்பை பதிவுக்கு வைக்கவும். மிக முக்கியம், உப்புமா என்பது தலைப்பில் தெரிந்துவிடவே கூடாது.

8) 5 - 6 நிமிடங்கள் கிளறிய பின் அடுப்பை அணைத்திடவும்.
மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, பப்ளிஷ் பொத்தானை அமுக்கிவிடவும்

9) சற்றே ஆறிய பின் எலுமிச்சை ரசத்தைச் சேர்த்து கிளறவும். மேலே கொத்து மல்லியைத் தூவிவிடவும்.

இடுகையைத் திறந்து, திரட்டிகளுக்குத் தகவல் அனுப்பவும்.

தடித்த அவல், மெல்லிய அவல் என இரு வகைகள் கிடைக்கும். மெல்லிய அவல் எளிதில் குழைந்து விடும். அதனால் தடித்த அவலே நல்லது. சாப்பிட்டு விட்டு நல்லா இருக்கான்னு சொல்லுங்க!

ஹார்ம்லெஸ் உப்புமா, கைப்புள்ள உப்புமா என்று இரு வகைகள் உள்ளன. ஹார்ம்லெஸ் படித்துவிட்டு மனதிற்குள் திட்டிவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். கைப்புள்ள ஸ்டைலில் படித்தவர்கள் பின்னூட்டம் போட்டு சண்டை போட்டு ஆப்புக்கு உத்திரவாதம் அளிப்பார்கள். ஹார்ம்லெஸ் வகையே நல்லது. போட்டுவிட்டு ஹிட்டு ஏறியிருக்கா என்று சொல்லுங்க!

இதோட இன்றைய உப்புமா பதிவு இனிதே முடிந்தது.

Tuesday, March 27, 2007

எக் மசாலாவும் எடுபட்ட பயலும்!!

நம்ம வீட்டுல எல்லாருக்கும் பிடிச்ச ஒரு ஐட்டம் முட்டை மசாலா. தமிழில் சொல்லணுமுன்னா எக் மசாலா. முழு முட்டையை வேக வெச்சு, க்ரேவி செஞ்சு அதுல போட்டு சாப்பிடற ஒரு மேட்டர் அது. ஆனாப் பாருங்க, நமக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தின்னு டாக்டர் சொன்ன உடனே முதலில் கட் ஆனது இந்த முட்டைதான். மஞ்சள் கருவில் ரொம்ப கொலஸ்ட்ரால் ஜாஸ்தியாமே. முட்டை வாங்கறது நின்னு போனதுனால இந்த ஐட்டம் செய்ய முடியாமப் போச்சு.

அப்புறமா Egg Substitutes எனப்படும் பதப்படுத்தப்பட்ட வெள்ளைக்கருவை வாங்க ஆரம்பிச்சோம். இதுல வந்து கொலஸ்ட்ரால், கொழுப்புச்சத்து எதுவுமே கிடையாது. அது திரவ வடிவில் அட்டை டப்பாவில் கிடைக்கும் சமாச்சாரம். ஆம்லேட் போன்ற முட்டையை உடைத்து அடித்து உபயோகப்படுத்தும் ஐட்டங்களுக்கு இது சரி வரும். ஆனாலும் எக் மசாலா செய்ய முடியாமலேயே இருந்தது. இந்த வார இறுதியில் சரி, புதுசா எதுனா செய்து பார்க்கலாம் அப்படின்னு ஒரு ஐட்டம் செய்யப் போக அது சூப்பராவே வந்தது. அதை உங்களோட பகிர்ந்துக்கத்தான் இந்தப் பதிவு.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - மீடியம் 1
பட்டாணி (உரித்தது) - 1 சிறிய கப்
வெங்காயம் - பெரிது 1 1/2
தக்காளி - பெரிது 1
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிதளவு
கசகசா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பொரிகடலை - 2 தேக்கரண்டி
மிளகு - 8
கொத்துமல்லி இலைகள் - அரை கப்
கறிவேப்பில்லை - கால் கப்
மஞ்சள் பொடி - சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு, 2 மிளகாய்ப் பழம் - தாளிக்க
எண்ணெய், உப்பு தேவையான அளவு
முட்டை - 4

செய்முறை

  • உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டங்களாய் வெட்டி, பட்டாணியுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். அரைகுறையாக வெந்திருந்தால் போதும்.
  • முட்டையை உடைத்து கலக்கி வைத்துக் கொள்ளவும். வெறும் வெள்ளையை எடுத்து அடித்து வைத்தால் உடம்புக்கு நல்லது.
  • தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, பூண்டு, இஞ்சி, சீரகம், கசகசா எல்லாவற்றையும் வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கி வைத்ததுடன் கொத்துமல்லி, கறிவேப்பிலை, பொரிகடலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் அரைத்து வைத்துக் கொண்ட விழுதைப் போடவும். தேவையான அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் போடவும்.
  • அது நன்றாக காய்ந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் வேக வைத்த காய்கறிகளைப் போட்டு கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • நன்றாகக் கொதித்த பின் அதில் முட்டையை விட்டு நன்றாகக் கிளறவும்.
  • கொதிக்கும் க்ரேவி சட்டென்று நல்ல கெட்டியாகும். அதற்கேற்ற மாதிரி தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்.
  • சிறிது நேரம் கொதித்த பின் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம்.
  • கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்ப் பழத்தை தாளித்து க்ரேவியில் இடவும்.
  • காரம் வேண்டுபவர்கள் அதற்கேற்ப பச்சை மிளகாய் அதிகம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
  • உருளைக் கிழங்கு, பட்டாணியுடன் வேறு காய்கறிகளையும் போடலாம்.
  • அரைக்கும் பொழுது சிறிது தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.
சப்பாத்தி, ப்ரெட் போன்றவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும். தோசை, இட்லியுடனும் சாப்பிடலாம். இது நானே முயன்று செய்த ஒரு ஐட்டம். அதனால் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எனச் சொன்னால் தெரிந்து கொள்வேன். இதுவே தொட்டுக் கொள்ளும் ஐயிட்டம் என்பதால் தொட்டுக் கொள்ள ஒன்றும் சொல்லவில்லை!

Sunday, March 18, 2007

சடுதியில் சாம்பார் சாதம்!!

இந்த பதிவு நம்ம வெட்டிப் பயலுக்கு சமர்ப்பணம்! நம்ம முந்தைய சமையல் குறிப்பைப் பாராட்டினது மட்டும் இல்லாமல் அடிக்கடி பண்ணி சாப்பிடறோம் அப்படின்னு வேற சொல்லி நம்ம மனசைத் தொட்டுட்டாரு. அதனால நம்மளோட இந்த சமையல் குறிப்பு அவருக்காகவே!

அதாவது ரொம்ப வேலை இல்லாம சாம்பார் சாதம் செஞ்சு சாப்பிடுவது எப்படின்னு பார்க்கலாம். சாம்பார் பொடி எல்லாம் இல்லாம, சீக்கிரமா ஆனா சுவையா சாம்பார் சாதம் செய்ய ஒரு குறிப்பு இது. முதலில் என்னென்ன சாமான் வேணும் அப்படின்னு பார்க்கலாமா?

குக்கரில் வைக்க
அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் பொடி
பெருங்காயம்

பொடி செய்து கொள்ள
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மல்லிவிதை - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பழம் - 4
மிளகு - 10
கசகசா - 1 தேக்கரண்டி

காய்கறிகள்
வெங்காயம் - பெரிதாக 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
கத்திரிக்காய் - சிறிதாக 2
காரட் - பெரிதாக 1
உருளைக்கிழங்கு - பெரிதாக 2

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை
கொத்து மல்லி

தாளிக்க
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு (வேண்டுமானால்)

எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கிட்டீங்களா? இப்போ என்ன செய்யணும் அப்படின்னு பார்க்கலாம். ரொம்ப மெனக்கட வேண்டாம். ஒரு பத்து, பனிரெண்டு ஸ்டெப்களில் சுவையான சாம்பார் சாதம் தயார் செய்யலாம் வாங்க.

  1. முதலில் அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் எல்லாத்தையும் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்துவிடுங்க. சாதாரணமாக சாதத்திற்கு வைப்பதை விட ஒன்று அல்லது இரண்டு விசில்கள் அதிகம் வரலாம்.
  2. பொடி செய்வதற்கு அப்படின்னு சொல்லி இருக்கிற சாமான்கள் அனைத்தையும் ஒரு வாணலியில் அப்படியே எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொள்ளவும்.
  3. காய்கறிகள் அனைத்தையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிழிந்து சாறெடுத்துக் கொள்ளவும்.
  5. குழம்பு செய்வதற்கான வாணலியை எடுத்துக் கொண்டு சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.
  6. அதில் முதலில் வெங்காயத்தையும் மிளகாயையும் போட்டு வதக்கவும்
  7. வெங்காயம் நன்றாக வதங்கிய பின் மீதமுள்ள காய்களைப் போட்டு வதக்கவும்.
  8. காய்கறிகள் வதங்கிய பின் அதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரை விட்டு , தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
  9. பச்சை வாசனை போன பின்னாடி, நாம் பொடி செய்து வைத்துள்ள பொடியைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  10. சிறிது கொதித்த பின் குக்கரில் இருக்கும் சாதம் பருப்பை எடுத்து இதில் சேர்த்து நன்றாகக் கிளரவும்.
  11. நன்றாகச் சேர்ந்தவுடன் அதன் மேல் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் போட்டு கிளறிவிடவும்.
  12. சாப்பிடும் முன் சிறிது நெய்யை விட்டு கிளறினால் வாசனையாக இருக்கும்.
இதில் காய்கறிகள் தேவையான அளவு கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பூண்டு, பீன்ஸ், பட்டாணி, கவிப்பூ (காலி பிளவர்) என பிடித்த காய்கறி எல்லாம் போடலாம். பொடி செய்து கொள்ளும் பொழுது அதிலும் சிறிது பெருங்காயம் போடலாம். புளித் தண்ணீருடம் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போடலாம்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் செய்து சாப்பிட்டு விட்டு, அதற்குப் பின் டீவி, தமிழ்மணம் என அலையாமல் ஒரு தூக்கம் போட்டால் சுகானுபவம்தான். செஞ்சு பார்த்திட்டுச் சொல்லுங்களேன். நீங்க எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா இதையும் பரோட்டா பதிவை விக்கியில் போட்டா மாதிரி இதையும் போட்டுடலாம்.