Tuesday, October 14, 2008

சினிமா! சினிமா! - தொடர் விளையாட்டு

மாயண்ணன் வந்தாக, மாப்ள மொக்கைச்சாமி வந்தாக அப்படின்னு அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்த சினிமா தொடர் விளையாட்டு நம்ம ஸ்ரீதர் அண்ணாச்சி புண்ணியத்தில நம்ம கிட்ட வந்திருக்கு. கிட்டத்தட்ட முழு நீளத் தேர்வு அளவு கேள்விகள். முக்கி முனகி முடிச்சுட்டேன். படிச்சுத் தொலைக்க வேண்டியது உங்க பொறுப்பு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதன் முதலில் என்ன படம் பார்த்தேன் என்பது எல்லாம் சத்தியமாக ஞாபகம் இல்லை. ஆனா சின்ன வயசில் அடிக்கடி சினிமா போய் இருக்கிறேன். வைராவி அண்ணா அப்படின்னு ஒரு டூரிங் டாக்கீஸ் இருக்கு (இருந்தது?). அதில் மீன் கொடி நாட்டிய தேவா அப்படி பாட்டு போட்ட உடனே வீட்டில் இருந்து ஓடினா நியூஸ் ரீல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி போயிடலாம். மணல், பெஞ்ச், இரும்பு சேர் என்று மூணு க்ளாஸ் உண்டு. அம்மா பெஞ்சுக்குக் காசு குடுத்தால் கூட தரை டிக்கெட் வாங்கிக்கிட்டு மீதி பைசாவில் முறுக்கு வாங்கி தின்பதுதான் நடக்கும். அங்க மண்ணைக் குவிச்சு உட்கார்ந்துக்கலாம். நாய் எல்லாம் வந்து உரசிக்கிட்டுப் போகும். சாயங்கால நேர காத்து சிலு சிலுன்னு அடிக்கும். எம்ஜியார் படங்கள்தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழில் தசாவதாரம்தான் பார்த்தேன்னு நினைக்கிறேன். அது பத்திதான் இங்க ஏற்கனவே பேசியாச்சே!

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சன் டிவியில் போட்ட ஆயிரம் பொய் என்ற படம்தான் கடைசியில் முழுதாக உட்கார்ந்து பார்த்ததுன்னு நினைக்கிறேன். இல்லை அதற்குப் பின் பார்த்த மைக்கேல் மதன காமராஜனா? சரியா ஞாபகம் இல்லையே. சபாபதி, பெண் ரெண்டும் பதிவு செஞ்சு வெச்சு இருக்கேன். பார்க்கணும். நேரமே இல்லை.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே. நாம அப்படி எல்லாம் உணர்ச்சிபூர்வமா எல்லாம் படம் பார்க்கறதே இல்லை. தேவர் மகன், குணா ரெண்டும் பார்த்தப்போ கொஞ்சம் பிரமிப்பா இருந்தது. அது தாக்கமான்னு எல்லாம் சொல்லத் தெரியலையே. அதிலும் தேவர் மகன் படத்தில் நவீன கமல் மாறி பெரிய மீசை வெச்சுக்கிட்டு கிராமத்துக் கமலாக மாறி வரும் சீன் பார்த்தப்போ ரொம்ப பிரமிப்பா இருந்தது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இது என்ன தாக்கம் தாக்கம் அப்படின்னே கேள்வி கேட்கறீங்க? தமிழ் சினிமா எல்லாம் சும்மா ரெண்டு மணிநேர பொழுது போக்கிற்காக பார்க்கும் ஆசாமிங்க நான். சீரியஸ் படமெல்லாம் பார்க்கக்கூட மாட்டேன். இந்த மாதிரி தாக்கம் எல்லாம் இல்லைன்னுதான் நினைக்கிறேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
சினிமா பார்த்துட்டு இவ்வளவு தாக்கம் வருமா? தாக்கிய சினிமா, தாக்கிய அரசியல், தாக்கிய தொழில்நுட்பம் அப்படின்னு தாக்கு தாக்குன்னு தாக்கறீங்களே! இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா நான் எல்லாம் என்னத்த சொல்ல? சின்ன வயசில் ஜெகன்மோகினி சினிமா பார்த்துட்டு ஜெயமாலினி அடுப்புக்குள்ள காலை விட்ட காட்சியை பத்தி ரொம்ப நாள் பேசிக்கிட்டது உண்டு. இதைச் சொன்னா இந்த கேள்விக்கு விடையா சேர்த்துப்பீங்களா?

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
நம்ம வாசிப்பு எல்லாம் லைட்ஸ் ஆன் சுனில் ரேஞ்சுக்குதாங்க. சமீப காலத்தில் சினிமாப் பொன்னையா எழுதறது எல்லாம் கூடப் படிக்கிறது இல்லைன்னாப் பார்த்துக்குங்களேன். :)

7.தமிழ்ச்சினிமா இசை?
இசை கேட்பது என்பது எப்பவுமே உண்டு. முன்னமே சொன்ன மாதிரி
தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். இப்போ வர சினிமாப் பாடல்களில் வெகு சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் வெறும் இரைச்சலாகவே இருப்பதால் அந்தப் பக்கமே போவதில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் படம் பார்த்தது மிகவும் குறைவுதான். அதுவும் பெரும்பாலும் சிரிப்பு வர வைக்கக்கூடிய படங்கள்தான் பார்ப்பது. ஆங்கிலத்தில் வெளி வரும் வரைசித்திரப் படங்களைப் பார்த்து வியந்து போவது என்பது ஒவ்வொரு முறையும் நிகழும் ஒன்று. ஸ்ரீதர் கிட்ட சொன்ன ப்ரெஞ்ச் படமெல்லாம் நான் பார்த்த ரெண்டு மூணு படங்களில் ஒன்று. அதுவும் நம்மைப் பற்றி தெரிந்த நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்துப் பார் எனச் சொன்னதுதான். விமானப் பயணங்களில் பொழுது போகாமல் சில வேற்று மொழிப் படங்களைக் கண்டது உண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
கல்லூரி காலத்தில் முத்து திரைப்படம் எடுத்த இடத்தில் ரஜினியோடு படம் எடுத்துக்கொண்டதுதான் சினிமா உலகுடனான நேரடி தொடர்பு. என்ன செஞ்சேனா? ரஜினி பக்கத்தில் நின்னேன். அவரு தோளில் கையைப் போட்டுக்கிட்டாரு. படம் எடுத்துக்கிட்டோம். பிடிச்சுதான்னா என்ன? பிடிச்சுதுதான். :) மீண்டுமா? வாய்ப்பு வந்தா செஞ்சுட்டாப் போச்சு. என்னோட சேர்ந்து ரஜினி படம் எடுத்துக்கிட்டதால தமிழ் சினிமா மேம்படுமான்னு கேட்டா என்ன பதில் சொல்ல? ;-)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த மாதிரி பார்முலாப் படங்கள் என்ற வட்டத்தில் இருந்து வெளி வரும் என்றே நினைக்கிறேன். ஆனால் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். ஒரே படத்தில் காமெடி சண்டை பாட்டு என்றெல்லாம் இல்லாமல் அந்தந்த வகையில் இருக்கும் படங்கள் வரத் தொடங்கினால் நன்றாக இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இப்பக்கூட நான் ரொம்ப எல்லாம் படிக்கிறது இல்லை. அதனால ரொம்ப பிரச்சனை இருக்காதுன்னுதான் நினைக்கிறேன். ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இது நடந்தா சினிமா மேல இருக்கும் அப்ஸெஷன் குறையலாம் என நினைக்கிறேன். நடக்குமா?

இன்னும் ஐந்து பேரை சேர்க்கணுமாமே. நமக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் சேர்த்தாச்சு போல இருக்கே. இன்னும் யாரைச் சேர்க்க?

1) இந்த வார நட்சத்திரம் இளா
2)என்றென்றும் நட்சத்திரம் வல்லியம்மா
3) ஆன்மீக சூப்பர்ஸ்டார் குமரன்
4) ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணாமல் இருக்கும் சின்னவன்
5) பிட் போட்டிக்கு மட்டுமே பதிவு போடும் எங்கள் கைப்புள்ளை
நீங்க எல்லாம் நான் ஸ்ரீதரைத் திட்டின மாதிரி திட்டாம நல்லவங்களா எழுதி இந்தத் தொடர் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துங்கப்பா!

டிஸ்கி: இந்த மாதத்துக் குறுக்கெழுத்துப் புதிர் இன்னும் இரண்டு நாட்களில் வெளி வரும்!

Wednesday, October 08, 2008

புதசெவி - 10/08/2008

செப்டம்பர் மாதம் புதிர், சாரு அப்படின்னு விறுவிறுப்பா போனதினால புதசெவி போடாமா விட்டுப் போச்சு. அதான் இந்த மாத துவக்கத்திலேயே, பஞ்ச் அண்ணா காதைப் பிடிச்சு திருகறதுக்கு முன்னாடியே, இதை போட்டாச்சு.

செய்தி 1

இது நம்ம ஊர் செய்தி. ஆனா நம்ம ஊர் பத்திரிகைகளிலேயோ அல்லது பதிவுகளிலேயோ படிக்கவே இல்லை. தில்லி அருகே நோய்டாவில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கிட்டத்தட்ட நூறு பேர் பணி நீக்கம் செய்யப் பட்டார்களாம். அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த பொழுது தகராறு முற்றி அந்நிறுவனத்தின் தலைவரைப் போட்டுத் தள்ளிவிட்டனராம் அந்த ஊழியர்கள். முழு செய்திக்கு இங்கே போகலாம்.

பஞ்ச்:
வன்முறை மூலம் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு வராது என்பதிலும், தொழில்முனைவோர் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பதிலும், இவ்வாறு செய்பவர்கள் நம் மாநிலத்தைப் பின்னுக்கு இழுத்துச் செல்கிறார்கள் என்பதிலும் எள்ளளவும் சந்தேகமில்லை - யோவ் முதல்லியே சொல்றதில்லையா? நம்ம ஊர் இல்லைன்னு.. பிரச்சினையை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்த தொழிலாளச் சகோதரர்களுக்கு ஒரு செவ்வணக்கம்! பூர்ஷ்வாக்கள் தோழர்களின் ரத்தம் உறிஞ்சும்முன் சிந்திக்கவேண்டும் - இப்படி மாத்தி எழுதிக்கோ.


செய்தி 2

இது நேபாள் செய்தி. மனுசனுக்கு 49 வயசு ஆகுது. இதுவரை 24 கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டாரு. எதுவும் சரியா அமையலை. ஆனா சற்றும் மனம் தளராமல் 25ஆவது கல்யாணத்தையும் செஞ்சுக்கிட்டாரு. இந்தக் கல்யாணத்திற்கு அப்புறம் வாழ்வில் வசந்தம் வீசுதாம். பழைய மனைவிகள் பல பேரோட பெயர் கூட ஞாபகத்தில் இல்லையாம். ரொம்பவே சுவாரசியமான மனிதர்தான். நம்ம பெனாத்தல் வைப்பாலஜி வகுப்புக்கு வேணா பாடம் எடுக்க வரச் சொல்லலாம் போல இருக்கே! படத்தோட இருக்கும் செய்தி இங்கே.

பஞ்ச்: அந்தாளுக்கு அப்சசிவ் கம்பல்ஸிவ் டிஸ் ஆர்டர். இல்லாட்டி இத்தனை முறை தற்கொலை முயற்சி செய்வானா? பெர்ப்பெச்சுவல் ஹனிமூன்ல இருக்க ஆசைப்பட்டு பெர்ப்பெச்சுவல் நரகத்துல இருக்க பைத்தியக்காரன்! ஆனா ஒண்ணு.. இவரு நம்ம ஊருக்கு வந்தா அரசியல்வாதி ஆகறதுக்கான முதல் தகுதி பரிபூர்ணமா இருக்கு- எத்தனை மனைவி, துணைவி-- வாரிசு பத்தி ஒண்ணும் சொல்லல.. இல்லாமலா இருக்கும்?

செய்தி 3

இது சீனாவில் நடந்தது. இவருக்கு வயசு நாலுதான் ஆகுது. இவரை வழிக்குக் கொண்டு வர வாழைப் பழத்திற்குள் ஹெராயின் போதை மருந்தை அடைத்து குடுத்து இருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து நடந்ததால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் இவர். அதிகாரிகள் தக்க சமயத்தில் இவரைக் காப்பாற்றி போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுபட மருத்துவமனைக்கு அனுப்பி விட்டார்கள். அங்கு சாதாரணமாக தரப்படும் மருந்தைவிட ஐந்து மடங்கு அதிகம் வலிமையுடைய மருந்தினைத் தந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வருட சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் வெளியே வந்திருக்கிறார் இவர். இவர் சிகுவாங் என அழைக்கப்படும் ஒரு யானை! செய்தி இங்கே.

பஞ்ச்:
இதான்யா கட்டாய மதமாற்றம். மதங் கொண்ட யானைக்கு மாற்று மதத்தைக் காட்டறாங்க பாருங்க - அதுவும் ஸ்ட்ராங்கா!
ஆனா இங்க கட்டாய மத மாற்றச் சட்டம் கொண்டு வந்தா யாரும் எதிர்க்க மாட்டாங்க.

செய்தி 4

வீட்டைத் தலைகீழா செய்யறான் அப்படின்னு பல பேர் சொல்லிக் கேட்டு இருப்பீங்க. இந்த வீட்டின் சொந்தக்காரர் சின்ன வயசா இருக்கும் போது அப்படி அடிக்கடி பேச்சு வாங்கி இருப்பாரு போல. வீட்டையே தலைகீழா கட்டி இருக்காரு பாருங்க. கூரை தரையில் இருக்கு. வீட்டுக்குள்ள எல்லாமே தலைகீழா இருக்கு. அந்த பாத்ரூமைப் பயன்படுத்த மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்!! செய்தி இங்கே. இங்க இன்னும் கொஞ்சம் படங்கள்.

பஞ்ச்: மாவுபோ லேமே மாவுபோ ழேகீ ள்பிப்ஆ லடுட்வீ தந்அ.. ட்வுட ருஒ. ஸ்டார் ஹோட்டலுக்கு முதல்முறையா போய், க்ளீன் பண்ண வெளியாளைக் கூப்பிட்ட சர்தார்ஜி ஜோக் ஞாபகம் வருதே!

செய்தி 5

இந்த அம்மாவின் கதை வழக்கமான ஒரு வறுமையில் இருந்து வந்து கோடீஸ்வரி ஆன கதைதான். ஆனால் கதை முழுவதும் திருப்பங்கள். யாரோடும் ஒத்துப் போகாத குணம், தேவையற்ற ஆடம்பரம், அரசாங்கத்துடன் கூட வரி கட்டாமல் சண்டை என வாழ்ந்த இவர் சமீபத்தில் இறந்து விட்டார். அவரது உயிலின் படி அவருடைய நாய்க்குக் கிடைத்தப் பங்கு கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அது போக இவர் ஒரு ட்ரஸ்ட் மூலம் நாய்கள் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக தந்திருப்பது 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்! என்னாத்த சொல்ல. நீங்களே படிச்சுக்குங்க.

பஞ்ச்: //யாரோடும் ஒத்துப் போகாத குணம், தேவையற்ற ஆடம்பரம், அரசாங்கத்துடன் கூட வரி கட்டாமல் சண்டை// பு த செ வி பதிவுல வழக்கமா நான் தான் லோக்கல் அரசியல் பேசுவேன் - இலவசம் - இப்ப நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா?

செய்தி 6

கடைசியா மீண்டும் நம்ம ஊர் மேட்டர். லக்னோ புகை வண்டி நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகமா இருக்காம். அவைகளை பயமுறுத்தி விரட்ட என்ன வழி அப்படின்னு யோசிச்ச பெரியவர்கள் கடைசியா மனுசன் ஒருத்தனுக்குக் குரங்கு வேஷம் போட்டுவிட்டு அங்க இங்க அலைய விட்டுட்டாங்களாம். இங்க போய் அந்த நகர்படத்தைப் பாருங்க. என்ன கொடுமை இது சரவணன்!

பஞ்ச்: சரியான ஐடியா! நாம் எத்தனை குரங்கைப் பாத்து மனுஷன்னு ஏமாந்திருக்கோம்! குரங்குகளுக்கும் ஏமாற ஒரு சான்ஸ் கொடுத்திருக்காங்க! பிரில்லியண்ட்! ஆனா சில சமயத்துல மத்த குரங்குகளுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்டணும். சில சமயத்துல காட்டக்கூடாது. தந்தி கொடுக்கவேண்டிய நேரத்துல சரியா கொடுத்திரணும். காலை வார வேண்டிய டயத்தில் அதையும் செய்யணும். இல்லாட்டி மத்த குரங்குங்க நம்ம இடத்தை ஆக்கிரமிச்சுடும். இதான்யா பகூத் அறிவு! அதை நல்லா எடுத்தாண்டு இருக்காங்க பாரு!

Sunday, September 28, 2008

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - செப்டம்பர் 2008

போன தடவை சீக்கிரமாவே விடைகளை வெளியிட்டு விட்டேன். ஒரு வாரயிறுதியில் உட்கார்ந்து போடக் கூட வாய்ப்பில்லை என்று எல்லாம் மக்கள் ரொம்பவே திட்டினாங்க. அதனால இந்த முறை மொத்தமா பத்து நாட்கள் அவகாசம் தந்தாச்சு. அதுக்கு அப்புறமும் கீதாம்மாவுக்காக இன்னும் நாலு நாள் கூடுதலா அவகாசம் தந்தாச்சு. செஞ்சதுக்கு ஏத்த மாதிரி போன தடவை கலந்துக்கிட்டவங்களை விட இந்த முறை கலந்துக்கிட்டவங்க எண்ணிக்கை அதிகம். நுகர்வோர் சொல்வதை நினைவில் நிறுத்துங்கள் என்ற பாடத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

சென்ற முறை நான்கு பேர்கள் எல்லா விடைகளையும் சரியாகச் சொல்லி இருந்தார்கள். இந்த முறை இந்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்திருக்கிறது. சரியான விடைகளைச் சொன்ன பெனாத்தல் சுரேஷ், அரசு, வடகரை வேலன், வெட்டிப்பயல், கௌசிகன், யோசிப்பவர், பாலராஜன் கீதா, திவா ஆகிய எட்டு பேருக்கும் என் வாழ்த்துகள்! மதிப்பெண்கள் இந்த பக்கத்தில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. புதிரைப் பார்க்கவில்லையே எனச் சொல்பவர்கள் இங்கே போய்விட்டு வரவும்.

இனி விடைகள்.



இடமிருந்து வலம்

3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3)
பழநி
- படமும் தொடங்கி என்பதில் இருந்து ப, நிழலும் தொடங்கி என்பதில் இருந்து நிழ என்ற மூன்று எழுத்துக்களைச் சேர்த்தால் பழநி வரும். கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது பழநியிலே என்ற பாடல் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அது குறிப்பின் இரண்டாம் பாகம்.

5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)
நிலைக்காத
- ஸ்வரங்கள் என்றால் சரிகமபதநி இவைகளில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களோ வரும் என்பதற்கான குறிப்பு. இங்கு ’காதலைக்’ என்னும் சொல்லோடு ’நி’ என்ற ஸ்வரத்தைச் சேர்த்தோமானால் நிலைக்காத என்ற சொல்லின் எல்லா எழுத்துக்களும் கிடைக்கும். உறுதியில்லாத என்ற குறிப்பின் பகுதி நிலைக்காத என்பதற்கான நேர் பொருளைத் தரும்.

6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)
லாடு
- ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் என்ற உடன் பலருக்கும் நினைவில் தோசைதான் வந்திருக்கும். ஆனால் பொருத்தமாக இல்லையே என யோசித்திருப்பார்கள். லாடு என்பது லட்டுவைப் போன்று உருண்டை வடிவம், தித்திப்புச் சுவை கொண்ட ஒரு உணவுப் பொருள். தணலாடும் என்ற சொல்லின் உள்ளேயே விடை இருக்கிறது என்பதை உணர்த்ததான் பார்க்கலாம் என்ற சொல் இருக்கிறது. பலரும் லாடு என்றால் என்ன என கேட்டார்கள் என்பது எனக்கு ஆச்சரியமே.

7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)
சுயம்
- தானாய் வந்தது சுயம்பு. அது முடியாமல் போனதால் சுயம். தான் எனப் பொருள் உண்டு என்பதால் தன்னை அறிந்து கொள் என பொருள் வருமாறு குறிப்பைத் தந்திருந்தேன்.

8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2)
கறவை மாடு
- பால் தரன்னு சொன்ன உடனேயே கறவை மாடுன்னு நிறையா பேர் சொல்லிட்டாங்க. ஆனா குறிப்பின் மற்ற பகுதி கொஞ்சம் குழப்பமாவே இருக்குன்னும் சொல்லிட்டாங்க. அது எப்படின்னா கசப்புக்கு கடு என்ற ஒரு சொல் இருக்கிறது. கடு மாற வை என்ற எழுத்துக்களைச் சரியாகப் போட்டால் கறவை மாடு வரும். மாற வை என்ற எழுத்துக்களே, விடை மாற்றிப் போடும் போது வரும் எனக் குறிக்கவும் செய்கின்றன.

11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5)
அலைமகள்
- ரொம்ப எளிமையான குறிப்புன்னு நினைச்சேன். ஆனா நிறையா பேரு கஷ்டப்பட்டாங்க. திரை கடலோடியும் திரவியம் தேடுன்னு படிச்சது மறந்து போச்சு போல. திரைன்னா அலை. அலைகள் என்ற சொல்லின் இருக்கும் எழுத்துகள் விலகி ம (மங்கலம் தொடங்கி) என்ற எழுத்து சேர்கையில் இலக்குமி என்ற அலைமகள் வருவாள் என்பது குறிப்பு. இதில் மலைமகள் கலை மகள் எல்லாம் போட்டவங்க அலைமகளுக்குக் கஷ்டப்பட்டாங்க. எந்த விடை போட்டாலும் குறிப்பின் இரு பகுதிகளுக்கும் சரியா வருதான்னு பார்க்கணும். வந்தால்தான் சரியான விடை.

12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3)
அறுவை
- கிட்டத்தட்ட எல்லாரும் மாட்டின குறிப்பு இதுதான். வெட்டி = அறு. திட்டி = வை (திட்டுதல் = வைதல்). இது ரெண்டும் சேர்ந்தா அறுவை. ஆனா அது என்ன துணி? அறுவை என்றால் துணி எனப் பொருள். தெரியுமா?! நம்ம அகராதி என்ன சொல்லுது பாருங்க.

அறுவை (p. 43) [ aṟuvai ] , s. cloth, garment, 2. the 14th lunar mansion.

அறுவையர், weavers, cloth dealers
இந்த மாதிரி ஒரளவு விடை தெரிஞ்சா மாதிரி இருந்தா அகராதியில் போய் பார்த்தால் நமக்குத் தெரியாத பொருள் இருப்பது புரியும். நான் பயன் படுத்தும் அகராதி இது.

14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)
சகா
- அருமையான நண்பன் அப்படின்னு வந்த உடனே சகா அப்படின்னு சொல்லிட்டங்க. ஆகாச என்னும் வார்த்தையில் ஆ(பசு) என்ற மிருகம் போக சகா மிஞ்சுது. அது என்ன புளுகன் எனக் கேட்டவங்களுக்கு, ஒண்ணும் விசேஷமில்லை. ஆகாசப் புளுகன் அருமை நண்பன் என எழுத கவுஜ மாதிரி இருந்தது.

16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5)
கஸ்தூரிபா
- எனக்கு ரொம்ப பிடிச்ச குறிப்பு இது. மஞ்சள் என்ற உடன் கஸ்தூரி மஞ்சள் நினைவுக்கு வரும். மரபுக்கவிதை என்றால் ‘பா’. ஆக கஸ்தூரிபா - காந்தியின் மனைவி. கஸ்தூர்பா என ஹிந்திக்காரன் போல் எழுதிய கைப்ஸுக்கும் மதிப்பெண் குடுத்தாச்சு. மின்னரட்டையில் மஞ்சள் என்ற உடன் தோணுவது மஞ்சள் பத்திரிகை என்ற நண்பருக்கு - நல்லா இருடே!

17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)
துகள்
- வாழ்த்துகள் உள்ளவே துகள் இருக்கே. பொடிப்பொடியா ஆனாத் துகள்தானே.

மேலிருந்து கீழ்

1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2)
அநியாய விலை
- குறிப்பின் முதல் பகுதி ஒரு சொலவாடை. அநியாய விலை வைப்பதைப் பற்றி இப்படிச் சொல்வார்கள். ரேஷன் கடையைத் தமிழில் நியாய விலைக் கடை எனச் சொல்கிறோமே. அங்கு அநியாய விலை இருக்காதே.

2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3)
பாக்கு
- தாம்பூலத்தின் ஒரு பகுதி, தலைப்பாக்குள்ளே இருக்கு. மீண்டும் பாரு என்பது விடை உள்ளேயே இருப்பதைக் குறிக்கிறது.

3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5)
பதற்றம்
- தடுமாற்றம் என்பது பதற்றத்தைக் குறிப்பது. சுற்றத்தின் தலை போனதால் ற்றம் என்னும் எழுத்துக்களும் அதனோடு பத என்ற இரு ஸ்வரங்கள் சேர்ந்தால் பதற்றம் வருகிறது.

4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2)
நிலா
- சிவனின் தலையில் நிலா இருக்கும் நிழலா என்ற சொல்லின் இடையில் இருக்கும் எழுத்து போனால் நிலா வரும்.

9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6)
மாற்றுப்பாதை
- ஒரு இடத்துக்கு நேராகவும் போகலாம் இதிலும் போகலாம் என குறிப்பை எடுத்துக் கொண்டால் விடை எளிதாகத் தெரியும். நடுவில் இருப்பது வேறு கவிதை, அதாவது மாற்றுப்பா மற்றும் ஒரு மாதம் - தை!

10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5)
நகங்கள்
- வகைகளுக்கு வேறு சொல் தேடினால் ரகங்கள் என்ற சொல் கிடைக்கும். இதன் முதல் சொல்லை மாற்றினோமானால் ஆத்திரத்தில் கடித்துத் துப்பும் நகங்கள் வரும்.

13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3)
ஸ்தூபி
- இது ஒரு நேரடி குறிப்பு. இதுக்கு க்ரிப்டிக் முறையில் குறிப்பு ஒண்ணும் சரியா அமையலை. அதனால நேரடிக் குறிப்பாகவே குடுத்துட்டேன். இது போல ஒன்றிரண்டு குறிப்புகள் வரலாம்.

15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)
காது
- காதே சொல்லுவது போன்ற குறிப்பு இது. அதில் காது என்பதும் இருக்கிறது என்பது மேற்குறிப்பு.

இந்த மாதப் புதிர் எப்படி இருந்தது. இன்னும் அதிகம் பேரைச் சென்றடைய என்ன செய்யலாம் அப்படின்னு உங்க கருத்தைப் பின்னூட்டமாச் சொல்லுங்க. இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம்.

மீண்டும் அனைவருக்கும் நன்றி!

Thursday, September 25, 2008

பதிவுலக வாசனைகள் - ஜென் குருவின் பொன்மொழிகள்!

அதாகப்பட்டது என்னான்னா வலைப்பதியும் பொதுஜனங்களே, நாம எல்லாம் இப்போ வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த கலியுகத்திலே நம்மோட துக்கங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்துக்க, நம்மை ஒரு ஜென் குருவாக வழிநடத்த, பெருங்கருணையோடு அவதரித்து வந்திருக்கும் நோபிளஸ்ட் ரைட்டர் அவர்கள் இன்னிக்கு தந்தருளியிருக்கும் உபதேசம் என்னான்னா எல்லா எழுத்துக்கும் வாசனை உண்டு. அது அவரோட பருப்பான, சாரி பொறுப்பான எழுத்தா இருக்கட்டும், நீங்க எழுதும் பொறுப்பற்ற எழுத்தா இருக்கட்டும் எல்லாத்துக்கும் வாசனை இருக்கு. அவர் மேலும் சொல்லி இருக்கிறது என்னான்னா

//பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் சீனிவாசன் வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள் இந்த ப்ளாக்குகளில் எழுதுபவர்கள்...”

சீனிவாசன் சொல்வதில் எனக்குத் துளிக்கூட உடன்பாடு இல்லை. டாஸ்மாக்கில் குடிப்பவர்களாவது தங்கள் சொந்தப் பணத்தில் குடிக்கிறார்கள். பிளாக்கில் எழுதுபவர்கள் ஓசியில் ....பவர்கள். பிளாக்கை மட்டுமே படிப்பவர்கள் சீக்கிரம் மெண்டல் ஆவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சில பிளாக்குகளின் பின்னூட்டம் என்ற பகுதியைப் படித்தாலே அது உங்களுக்குப் புரிந்து போகும். பல ப்ளாக்குகள் தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் பொது கக்கூஸ்களைப் போல் நாறுகின்றன.

நான் எல்லா ப்ளாக்குகளையும் கூறவில்லை. நல்ல ப்ளாக்குகளும் உள்ளன. அவைகளைப் பற்றி அவ்வப்போது நான் அறிமுகப்படுத்தி வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.//

இன்னிக்கு எனக்கு கொஞ்சம் ஜல்ப்பாக இருப்பதால் எனக்கு என்னோட பதிவின் வாசனை எனக்குத் தெரியலை. இங்க வந்து படிக்கும் நீங்க என்ன வாசனை அடிக்குதுன்னு சொன்னாப் புண்ணியமாப் போகும். அதோட நீங்க எல்லாரும் அவங்க அவங்க வலைப்பதிவுகளைத் திறந்து ஒரு முறை நல்லா மூச்சை இழுத்து மோந்து பார்த்து என்ன வாசனை வருது என்பதை இங்க பின்னூட்டமாப் போடுங்கப்பா.

அப்படியே கீழ்கண்ட இந்தப் பதிவுகளையும் படிச்சு என்ன வாசனை வருதுன்னு சொல்லுங்க. இவைகள் ஜென் குரு நோபிளஸ்ட் எழுதினது அல்லது அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் எழுதினது.

  1. ஜென் குரு கதை சாம்பிள் 1
  2. ஜென் குரு கதை சாம்பிள் 2
  3. ஜென் குரு கதை சாம்பிள் 3 (ஆனா இதோட ஒரிஜினல் தொலைஞ்சு போச்சு அதனால வெறும் மறுபதிப்புதான்.)
  4. ஜென் சிஷ்யன் கதை 1
  5. ஜென் சிஷயன் கதை 2
  6. இன்னும் ஒரு சுட்டியைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். வழக்கம் போல மூல நூல் காணாமல் போய்விட்டதா எனத் தெரியவில்லை. கிடைத்தால் தருகிறேன்.
  7. தேர்ட் டிகிரி, தேர்ட்டித் தேர்ட் டிகிரிங்கிற ரேஞ்சில் ஒரு காவியம் வேற இருக்காம். அதை நான் நல்ல வேளையா படிக்கலை. அதில் என்ன வாசம் அடிக்குதோ படிச்சவங்க சொல்லுங்கப்பா.

டிஸ்கி 1: கடைசியாகத் தந்திருக்கும் சுட்டிகளைச் சொடுக்கி வந்த வாசனையால் நீங்கள் மூர்ச்சையடைந்து விழுந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

டிஸ்கி 2: காலை வேளையில் இந்த நோபிளஸ்ட் அருளுரையின் சுட்டியைக் கொடுத்து இன்றைய தினத்தைக் கெடுத்த, நண்பன் எனச் சொல்லிக்கொண்டே கழுத்தறுக்கும் பாவியை கடவுள் ரட்சிப்பாராக.

டிஸ்கி 3: காசு குடித்துக் குடிப்பதைப் பற்றிக் கருத்துச் சொல்ல அடிப்படைத் தகுதி என்ன எனக் கேட்டால் நீர் இணையக் கிரிமினல் என்ற பட்டம் பெறுவீர் என்பதை நினைவில் கொள்வீராக.

Sunday, September 21, 2008

ஆர்வக்கோளாறும் பொறுப்பற்ற பதிவர்களும் !

இன்று தெருமுனைகளில் நிறைய பேர் கிரிக்கெட் ஆடுகிறார்கள். கிரிக்கெட் ஆடுவது என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை கிரிக்கெட் ஆட வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. பம்பரம் ஆட வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஒரு ஆக்கர், ரெண்டு ஆக்கர் அடிக்கும் அளவுக்கு ஆட்டம் கைவசப்படும். அதே மாதிரிதான் கோலிகுண்டும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், கிரிக்கெட். அதற்காகக் கோலிகுண்டை சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது கிரிக்கெட். அந்த விளையாட்டில் எடுத்தவுடன் ஒரு பந்து ஒரு மட்டை கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் சுவரில் மூன்று கோடுகள் வரைந்து கிரிக்கெட் ஆடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- கேரள ஓப்பனிங் பாட்ஸ்மென் வனோஜ்

இன்று பாத்ரூமில் நிறைய பேர் பாடுகிறார்கள். பாடுவது என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை பாட வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. மேஜையில் தாளம் போட வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் சுமாரான டப்பாங்குத்துப் பாட்டுக்குத் தாளம் போடும் அளவுக்கு தாளம் கைவசப்படும். அதே மாதிரிதான் விசில் அடிப்பதும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், பாட்டு. அதற்காக விசில் அடிப்பதைச் சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது பாட்டு. பாட ஒரு இடம் கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் ஷவரைத் திறந்து விட்டுக் கொண்டு பாடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- ஒரிய மொழிப் பாடகர் காமா சோமா

இன்று கிடைத்த பேப்பரில் எல்லாம் நிறைய பேர் நட்சத்திரம் வரைகிறார்கள். நட்சத்திரம் வரைவது என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை நட்சத்திரம் வரைய வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. கோடு போட வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஒரு வட்டம், ரெண்டு சதுரம் வரையும் அளவுக்கு கோடு கைவசப்படும். அதே மாதிரிதான் அம்புக்குறியும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், நட்சத்திரம் வரைதல். அதற்காக அம்புக்குறியை சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது நட்சத்திரம். எடுத்தவுடன் ஒரு பேப்பர் ஒரு பேனா கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் நட்சத்திரம் வரைவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- கன்னட நட்சத்திர ஓவியர் கேன்

இன்று இணைய தளங்களில் நிறைய பேர் எழுதுகிறார்கள். எழுத்து என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை எழுத வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஓர் உழைப்பு தேவைப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியைப் படிக்கவேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஷ்பானிஷில் ஒரு பக்கம், இரண்டு பக்கம், நாலு பக்கம் எழுதும் அளவுக்கு மொழி கைவசப்படும். அதே மாதிரிதான் இசையும். பல மணி நேரப் பயிற்சி அதற்குத் தேவை. இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், மொழி. அதற்காகச் சங்கீதத்தைச் சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது மொழி. அந்த மொழியில் எடுத்தவுடன் ஒரு இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் தட்டி அதை Blog-ல் போடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதா

டிஸ்கி 1: மேற்கண்ட ஸ்டேட்மெண்ட்களில் ஒன்றே ஒன்று மட்டும் நிஜம் என்பது உங்களுக்குப் புரிந்து இருக்கும். அந்த உரையை முழுதாக வாசித்தாக வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள் இங்கே போகலாம்.

டிஸ்கி 2: இந்த சந்திப்பில் பங்கெடுத்து ஆனால் இதைப் போன்ற Irresponsible Statements கூறப்பட்ட பொழுது கண்டனங்களைத் தெரிவிக்காத சகபதிவர்களுக்கு என் கண்டனங்கள்.

Sunday, September 14, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - செப்டம்பர் 2008

கொஞ்சம் பயந்துக்கிட்டே போட்ட போன மாத புதிருக்கு அமோகமான வரவேற்பு இருந்ததால இந்த மாதமும் அதைப் போன்ற ஒன்றினையே தரலாம் என நினைத்தேன். வழக்கம் போல வாஞ்சி அவர்களின் ஆலோசனைக்கு நன்றிகள் பல. கேஆர்எஸ் அண்ணாவைத் தொந்தரவு செய்யாமல் நானே இந்த முறை கட்டமும் போட்டுக்கிட்டேன். அதனால, ரவி அண்ணா, நீங்களும் போட்டியில் கலந்துக்கிடலாம்!

இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன். அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இந்தப் புதிரின் விடைகள் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். 


1234
56
789
10
1112
13
141516
17

இடமிருந்து வலம்

3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3)
5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)
6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)
7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)
8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2)
11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5)
12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3)
14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)
16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5)
17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)

மேலிருந்து கீழ்

1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2)
2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3)
3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5)
4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2)
9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6)
10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5)
13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3)
15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

Tuesday, September 09, 2008

தோழா கொடுத்திடு தோள் (வெ.வ.வா)

நான் சமீப காலமாக படிக்கத் தொடங்கி இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் இரா.முருகன். (நன்றி - ஸ்ரீதர் வெங்கட்). சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் அவரும் க்ரேஸி மோகனும் பல விதங்களில் விளையாடும் வெண்பா விளையாட்டைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இப்படி விளையாடி நூற்றுக்கும் மேற்பட்ட வெண்பா இயற்றி இருக்கிறாராம். இது பற்றி அவர் எழுதி இருப்பது. 
 
தினசரி எஸ்.எம்.எஸ்ஸில், தொலைபேசியில் வெண்பாவும், கேள்வி பதிலும், நகைச்சுவையும், ரசித்த இலக்கியமும், புதுக் கவிதையுமாக க்ரேஸி கலகலக்க வைக்காத நாள் இல்லை. அவருக்கு பதில் எழுதவே கிட்டத்தட்ட நூறு வெண்பா நானும் இயற்றி விட்டேன். 

'என்ன, வெண்பா அம்பு விட்டுக்கறீங்களா தினமும் மோகனும் நீங்களும்?' கண்ணில் ஒரு மெல்லிய சிரிப்போடு விசாரிப்பார் கமல் எனக்கு முன்னால் என் வெண்பா க்ரேஸி உபயத்தில் அவரிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.
 
இது குறித்து நண்பர் சொக்கன் ட்விட்டரில் சொல்லி ரொம்ப சிலாகித்துப் பேச 
 
அன்பன் முருகனும் ஆசைமிகு மோகனும்
வெண்பாவில் விட்டாரே அம்பு
 
அப்படின்னு அவர் சொன்னதையே ஒரு குறள் வெண்பாவா மாத்தி அவருக்கு அனுப்பினேன். நல்லா இருக்கு அப்படின்னு சொன்னவரு உடனே ஒரு ஈற்றடியைக் குடுத்து இதுக்கு எழுது பார்ப்போம் அப்படின்னு உசுப்பேத்தி விட்டாரு. அப்படி அவர் குடுத்த ஈற்றடி -  தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
மண்ணிலே கஷ்டம் மறந்திட நீயுமே 
எண்ணியிங்கு ஏதேனும் செய்திட வேண்டித்தான் 
விண்ணில் பறந்திடும் விந்தை உணர்வுக்குத் 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
சொக்கனும் சொன்னாரே சோக்காய் ஒருவேலை 
மக்களை மாட்டிவிட்டு மெண்டலாய் ஆக்கிட 
எண்ணித்தான் தந்தார் எசப்பாட்டாய் ஈற்றடியே - 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
எண்ணியே சொன்னார் எசப்பாட்டாய் அண்ணனுமே 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
அப்படின்னு நானும் நாலு (சரி மூணு) வெண்பாக்களை எழுதி ட்விட்டரில் போட்டேன்.  அப்போ ரொம்ப நாள் ஆச்சே வெண்பாப் பதிவு போட்டு அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது. ஆனா என்னடா ஈற்றடி குடுக்க அப்படின்னு யோசிக்கும் பொழுதுதான் மீண்டும் இரா முருகனே கை குடுத்தார். அவரோட வலைத்தளத்தில் அழகா ஒரு ஆஞ்சநேயர் படம் ஒண்ணு போட்டு அதுக்குப் பக்கத்தில் அப்படத்திற்கு ஏற்ற மாதிரி க்ரேஸி மோகன் எழுதின ஒரு வெண்பாவையும் போட்டு இருந்தாரு. அது


ரொம்ப அருமையா வந்திருக்கு இல்லையா இந்த வெண்பா. ஆனா அவரு அவரோட தகுதிக்கு ஏத்த மாதிரி மனமென்ற ஆழியைத் தாண்ட உதவி கேட்கறாரு. நான் இன்னிக்கு நமக்கு இருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி அந்த ஆஞ்சநேயரின் உதவியைக் கேட்கலாமேன்னு 
 
மாசு மதச்சண்டை மாறா பிடுங்கல்கள்
லேசும்தான் ஆகுதப்பா சட்டைப்பை காசின்றி 
வாழ வழியில்லை ஆகவே வந்திங்கு
தோழா கொடுத்திடு தோள்.
 
அப்படின்னு ஒரு வெண்பாவை எழுதிப் போட்டேன். நீங்க இங்க இருக்கும் இரண்டு ஈற்றடிகளில் எதுக்கு வேணும்னாலும் எழுதலாம். எழுதிப் பாருங்களேன். வெண்பா எழுத கத்துக்க ஆசைப்படறவங்க இங்கேயும் இங்கேயும்  போய் எப்படி எழுதறதுன்னு பார்த்துக்கலாம். 
 

Thursday, August 28, 2008

புதசெவி - 8/28/2008

புதிர் போட்டி எல்லாம் போட்டா புதசெவியை மறந்து போயிடுவியான்னு பஞ்ச் அண்ணா விட்ட குத்து ஒண்ணோட விளைவா இந்த மாதத்துப் புதசெவி பதிவு. அதனால இந்தப் பதிவு பிடிச்சு இருந்தா அவருக்கு நன்றி சொல்லுங்க. தானிப்படையும் அவர் வீட்டுக்கே அனுப்பிடுங்க.

செய்தி - 1

வழக்கம் போல நம்ம நாட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம். நம்ம மத்திய அரசு கவிழாம இருக்க என்னென்னமோ பேரம் எல்லாம் நடந்து இருக்கு. மாநில அரசு, பல கோடி பணம் அப்படின்னு எல்லாம் நடந்தது எல்லாம் பற்றிப் படிச்சு இருப்பீங்க. ஆனா கடவுளோட போட்ட ஒரு ஒப்பந்தம் பற்றித் தெரியுமா? அரசைக் காப்பாற்ற கடவுளுக்குக் கொடுத்த விலை நாலு எருமைகளும் இருநூறு ஆடுகளும். நடந்தது அஸ்ஸாம் மாநிலத்தில். மேற்கொண்டு படிக்க இங்க போங்க.

பஞ்ச் : 4 எருமை, 200 ஆடா? சில பல கோழிகளையும் சேத்தா 271 வருதா பாரும் அய்யா! பலி ஆனதும் மேஜிக் பிகரா இருக்கும்! அது மட்டுமில்லாம சிவப்பு சட்டைக்காரங்க தோல்விக்கு கோயிலையே சிவப்பு சாயம் பூசிட்டாங்களாக்கும். நல்ல வேளை அஸ்ஸாமில் அம்மா ஆட்சி இல்லை.

செய்தி - 2

மாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடிச்சு இருக்காங்கன்னா பெரும்பாலான மாடுகள் மேயும் பொழுதோ, களைப்பாறும் பொழுதோ தெற்கு - வடக்காகத்தான் நிற்கின்றனவாம். இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் மேலும் மாடுகளுக்கு இயற்கையிலேயே வடதிசை அறியக் கூடிய ஆற்றல் இருக்கிறதா என சோதனைகள் மேற்கொள்ளப் போகிறார்களாம். தேனீக்கள், கறையான்கள் போன்றவற்றிக்கு இது போன்ற பூமியின் காந்தசக்தியின் உதவி கொண்டு வடதிசை அறியும் ஆற்றல் உண்டு என்பது நிரூபணமான ஒன்றாம். மாடுகள் தவிர்த்து மற்ற பெரிய மிருகங்களும் இது போன்ற ஆற்றல் உண்டா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவிருக்கிறதாம். செய்தி இங்கே.

பஞ்ச்: தெற்கு வடக்கா நின்னா மட்டும் மாட்டுக்கு ராஜ்யசபா சீட்டா கிடைக்கப்போவுது? யாராச்சும் கருணை காமிச்சு, நிதி கொடுத்து, பிச்சை போடணும்.. அட அட்லீஸ்ட் சரியான குடும்பத்திலாவது பிறக்கணும். அப்பதான் அதெல்லாம் நடக்கும்!

செய்தி - 3

லண்டனில் ஒருவர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பொழுது அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வர ஒரு ஓரமாய் ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அங்குள்ள தடங்களில் மின்சாரம் பாய்வதினால் அவர் சிறுநீர் கழிக்கையில் அதன் மூலம் கடத்தப்பட்ட மின்சாரம் அவர் உடலைத் தாக்கி அவர் இறந்தே விட்டார்! மனிதர் போலந்தில் இருந்து லண்டனைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த ஒரு உல்லாசப் பயணி. மேலும் விபரங்கள் இங்கே.

பஞ்ச்: தண்ணீரில் இருந்து ரிவர்ஸுல மின்சாரம் எடுக்க முயற்சித்த விஞ்ஞானியைப் பற்றி கிண்டலாகச் செய்தி வெளியிடும் கொத்தனாருக்கு பலத்த கண்டனங்களும், மின்சார மூச்சா போனவருக்கு அழ்ந்த அனுதாபங்களும்! ஆனா நம்ம ஊர் ரயில் நிலையங்கள் சுத்தமாக ஒரு வழி கிடைத்தாற்போல இருக்கிறதே!

செய்தி - 4

அப்படியே நம்ம துளசி ரீச்சர் ஊருக்குப் போகலாம். அங்க உள்ள நீதிமன்ற உத்தரவு ஒண்ணைப் பார்த்து புதுசா அப்பா அம்மா ஆகப் போறவங்களுக்கு எல்லாம் கலக்கமா இருக்காம். விஷயம் என்னன்னா, குழந்தைகளுக்கு கிறுக்குத்தனமான பெயரை எல்லாம் வைப்பது அவர்களுக்கு கொடுமை இழைப்பதாகும் அப்படின்னு சொல்லி அப்படி ஒரு பெயரை வைத்த பெற்றோரிடம் இருந்து குழந்தையைப் பிரித்தே விட்டார்கள். அதனால் வித்தியாசமாகப் பெயர் வைக்க வேண்டும் என நினைத்தவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்கிறார்களாம். செய்தி இங்கே.

பஞ்ச் : அப்ப நியூசிலாந்துல கிவிநிதி, நியூசிகொண்டான் அப்படின்னு எல்லாம் தலைவருங்க பேரு வைக்கறதில்லையா?அப்படியே பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப் படுத்தறேன் பேர்வழி எனச் சொல்லி நம்ம நாக்கை உடையச் செய்பவர்களுக்கும் இப்படி எதாவது செஞ்சாத் தேவலாம்.

செய்தி - 5

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி. ஜப்பானில், ஷிபுகாவா என்ற நகரில் சமீபத்தில் ஒரு திருவிழா நடைபெற்றது. தொப்புளின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இந்தத் திருவிழா நடைபெற்றதாம். உடலின் பாதியில் இருக்கும் தொப்புள் முக்கியமான ஒரு பாகமாக ஜப்பானில் கருதப்படுகிறதாம். அதனைக் கொண்டாடும் இந்த விழா நடைபெறும் இந்த நகரோ ஜப்பானில் நடுவாக உள்ள இடமாம். தொப்புளைப் பிரதானமாகக் காண்பிக்கும் வகையில் வயிற்றில் பலவித படங்கள் வரைந்து கொண்டு ஆட்டமும் பாட்டமுமாக அன்றையப் பொழுதைக் கழித்தார்களாம் இந்த விழாவில் பங்கு கொண்டவர்கள். மேலும் படிக்க.

பஞ்ச்: அட.. ஜப்பான் கரங்க எல்லாத்துலையும் லேட்டுதான். நாங்க பம்பரம் மட்டுமா வுட்டோம்? ஆம்லெட்டு சுட்டோம், தக்காளி உருட்டுனோம்.. தேமுதிக எப்ப ஜப்பான் கிளை ஆரம்பிக்கப்போறாங்க? சின்னக்கவுண்டர் டோக்யோ தலைமை மன்றத்துக்கு flex digital பேனருக்கு ஆர்டர் கொடுத்தாச்சா?

செய்தி - 6

இனப் பாகுபாடு காரணமாக தண்ணீர் கிடைக்காமல் தவித்த மக்களுக்கு நீதிமன்றம் இழப்பீடு தர உத்தரவு. தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதப்பட்டதால் மற்றவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட பொழுது இவர்களுக்கு இணைப்பு மறுக்கப்பட்டதாம். பொது நீர் இணைப்பு இல்லாததால் தங்கள் நிலத்தில் கிணறு தோண்டியோ அல்லது மழைத் தண்ணீரை சேர்த்து வைத்து அதனையே குடிக்க, குளிக்க, சமைக்க என்று உபயோகித்து வந்தனராம். எங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் இப்படியே செய்ததால் எனக்கு என் குழந்தைப் பருவத்தில் நாங்கள் செய்வது வித்தியாசமாகப் படவில்லை என்று சொல்கிறார் ஒருவர். இவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடக்கப்பட்டு அதன் மீது தீர்ப்பும் வந்துவிட்டது. இவர்களுக்கு இழப்பீடாக கிட்டத்தட்ட 44 கோடி ரூபாய் தர வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. மேலும் இது பற்றிப் படிக்க.

பஞ்ச் - ஈராயிரம் ஆண்டுகளாக எம்மக்களை வாட்டி வந்த கொடுமை எங்கெங்கிலும் வந்து ஏறியிருப்பதை முதலில் காணாமல் கொலை வாளினை எடுக்க உ பி களுக்கு ஆணை இட்டுவிட்டேனே! சரி போகட்டும்.. ஜனநாயக ஆட்சி அமையும் வரையில் அமைதி காக்கச் சொல்லி விட்டால் போகிறது!

கடைசியா ஒரு போனஸ்!

மெய்ப்புல அறைக்கூவலர் என்றால் என்ன? சரியான பதில் சொல்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகவும். மற்றவர்கள் இங்கே சொடுக்கிப் பார்க்கவும்.

பஞ்ச் - இதுக்கு மேல என்ன சொல்ல! மெய்ப்புல கைத்தொப்பியர் அப்படின்னு போடாம விட்டாங்களேன்னு வேணா சந்தோஷப்பட்டுக்குங்க. அம்புட்டுதான்.

Wednesday, August 20, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - விடைகள்

கொஞ்சம் பயந்துக்கிட்டேதான் புதிரைப் போட்டேன். தமிழில் குறுக்கெழுத்து என்பது எவ்வளவு தூரம் வரவேற்கப்படும்? ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படின்னு எஸ்கேப் ஆயிடுவாங்களோ? இல்லை என்னய்யா குறிப்பு இது அப்படின்னு துப்பிடுவாங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். ஆனா நிறையா பேரு ஆர்வமா கலந்துக்கிட்டதுல ரொம்ப மகிழ்ச்சி.

பொதுவா எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க, யார் யார் எந்தெந்த கேள்விக்கு சரியான விடைகள் சொல்லி இருக்காங்க அப்படின்னு எல்லாம் ஒரு கட்டம் போட்டு காட்டி இருப்பேன். இந்த தடவை அளவு கடந்த ஆணி. அதனால அதெல்லாம் செய்ய முடியலை. அடுத்த முறை நல்லாச் செஞ்சுடலாம். மன்னிச்சுடுங்க. எனக்குத் தெரிஞ்சு ஸ்ரீதர் நாராயணன், கைப்புள்ள, திவா, வடகரை வேலன் இவங்க நாலு பேரும்தான் எல்லா விடைகளையும் சரியாச் சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன். வாழ்த்துகள்!! வேற யாராவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்க. சரி பண்ணிடறேன்.

இனி விடைகள்.


இதுதான் நம்ம வலைப்பதிவில் முதல் முறை என்பதால் கொஞ்சம் விரிவாக விடைகளைப் பார்க்கலாம்.

இடமிருந்து வலம்

1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
வம்பு - தவம் என்ற வார்த்தையின் எல்லைகளான த மற்றும் ம் போனால் மிஞ்சுவது வ. இதனோடு மருந்துக்கு இன்னொரு சொல்லான களிம்பு என்னும் சொல்லை எடுத்து அதில் மகிழ்ச்சிக்கு இணையான களி என்ற பகுதியை நீக்கிவிட்டால் ம்பு என்பது மிஞ்சுகிறது. இவை இரண்டையும் சேர்த்தால் வம்பு என்னும் சொல் தீச்சொல் என்னும் பொருள் கொண்டு வருகிறது. வசவு என்ற விடையை பலரும் தந்திருந்தார்கள். ஆனால் அதற்கு குறிப்பு எப்படிப் பயன்படும் என்பதை யோசிக்கவே இல்லை.

2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3)
கருது - முதலில் கருணை என்பது கருணை என்னும் சொல்லின் முதல் எழுத்தைக் குறிக்கும் - க. இடபம் (ரிஷபம்) என்றால் எருது. அதில் தலையிழந்த என்று சொன்னதினால் ருது என்னும் எழுத்துகள் மிஞ்சுகின்றன. இவை இரண்டும் சேர்ந்தால் நினை என்னும் பொருள் வர கருது என்றாகிறது

4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2)
மலை - இது எளிதான குறிப்புதான். பெரிய குன்று என்பது மலை. பிரம்மிப்பது என்றால் மலைப்பது என்பது நமக்குத் தெரியும். ஆக பிரமி என்றாலும் மலை!

5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4)
கையூட்டு - இங்கு தாய் என்ற சொல் சரியாகப் பார்த்தால் தேவையே இல்லை. ஆனால் ஊட்டு என்பது உடனடியாகத் தெரிய வேண்டும் என்பதால் அதனைச் சேர்த்தேன். தன் கரத்தால் என்பது கை என்றும் உண்ணச் செய்வது என்பது ஊட்டு எனப் பொருள்படும்படிச் செய்தால் கையூட்டு என்பது ஊழல் என தெரிய வரும்.

7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3)
இதம் - இங்கிதம் என்ற சொல்லின் இடை ஒடிந்தால், அதாவது நடுவே இருக்கும் சில எழுத்துக்களைக் களைந்தால் இதம் என்று வருகிறது. இதம் என்ற சொல்லுக்கும் பொருள் இனிமை என்பதுதானே.

9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3)
அம்மா - அந்த மாம்பழம் என்பதைச் சொல்ல அம்மா என்று சொல்லலாம். அம்மா என்றாலே அன்புதானே.

10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
இந்தியா - வடமொழியா என்று கேட்பதை தமிழில் 'இந்தி'யா எனக் கேட்கலாம். இந்தியா என்பது ஒரு நாடு.

12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2)
காலை - நண்பகலுக்கு முன்பான நேரம் காலை. ஒருவரை வணங்க அவர் காலைத்தானே பிடிக்க வேண்டும்.

13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3)
திருடு - செல்வம் என்றால் திரு. கடைசியாக எடு என்றால் எடு என்ற சொல்லின் கடைசி எழுத்து டு. இவை சேர்ந்தால் திருடு என்றாகிறது. சொந்தக்காரருக்குத் தெரியாமல் எடுப்பது என்பது திருடுவதுதானே.

14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)
கரம் - கரம் என்ற சொல் குறிப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறதே! பலரும் இதை மரம் எனச் சொல்லி இருந்தார்கள். ஆனால் மரம் வர குறிப்பு ஒத்து போவதில்லையே.

மேலிருந்து கீழ்

1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3)
வருகை - ஒரு விதம் என்பதை வகை என்று சொல்லலாம். அதில் பாதி குரு அதாவது ரு என்ற எழுத்தைப் போட்டால் விஜயம் என்ற பொருள் வரக்கூடிய வருகை என்ற விடை கிடைக்கும்.

2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2)
கலை - சறுக்கலைப் பார்க்கும் பொழுது அதில் கலை என்ற சொல் தெரிகிறது. ஆயக் கலைகள் 64 என்பது நமக்குத் தெரியுமே.

3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4)
துயரம் - முதல் துன்பம் - து. முடிவில்லா ரம்யம் - ரம்ய. இவை கலைந்திருக்கின்றன து + ரம்ய = துயரம் = துக்கம்!

4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2)
மடு - ஓரமாய் மன்றாடு என்பது அச்சொல்லின் ஓரங்களைக் குறிக்கிறது = மடு. மடு என்றால் பள்ளம் என்ற பொருளில் இவ்விடை சரியாக வருகிறது.

6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3)
யூகம் - படை வகுப்பு வியூகம். அதில் ஒரு பகுதி யுத்தி என்ற பொருள் கொண்ட யூகம்.

8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3)
தந்தி - இருப்பதிலேயே எளிமையான குறிப்பு இதுதான் என நினைக்கிறேன். வதந்தியில் இருக்கும் தந்தி வீணையிலும் உண்டு.

9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4)
அந்தாதி - செவிலித்தாய் என்றால் தாதி. அந்த தாதி என்ற சொற்களில் இருக்கும் எழுத்துக்களை கலைத்துப் போட்டால் அந்தாதி வரும். ஆனால் ஒரு 'த' அதிகமிருக்கும். அதனைக் குறிப்பதற்காகத்தான் ஏறக்குறைய எனச் சொன்னது. அந்தாதி என்பதின் முடிவே தொடக்கமாக இருப்பதால் அது மாலை என்றும் அழைக்கப்படுகிறது.

10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2)
இலை - தழை என்பதைப் பார்த்து இலை என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இலை என்பதற்கு ருசியற்று என்ற பொருள் இருப்பது நமக்குத் தெரியுமா?
நான் பாவிக்கும் அகரமுதலி சொல்வதைப் பாருங்கள் -

இலை (p. 88) [ ilai ] , VI. v. i. be tasteless, ருசியற்றிரு; 2. lose taste for a thing, வாயரோசி.

இலைத்தகரி, a tasteless curry.

இலைத்தபேச்சு, a useless, vain talk.

இலைத்தல், being insipid or tasteless.

11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3)
யாகம் - இதுவும் எளிதுதான். கொடை என்றால் தியாகம். அதன் தலையை எடுத்தால் யாகம். அதாவது வேள்வி.

12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2)
காடு - முக்காடு என்ற சொல்லில் வனம் என்ற பொருள் கொண்ட விடை இருக்கிறது. அது உள்ளேயே இருக்கிறது என்று உணர்த்தத்தான் தெரியுமோ என்ற குறிப்பு.

இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம்.

மீண்டும் அனைவருக்கும் நன்றி!

Sunday, August 17, 2008

குறுக்கெழுத்துப் புதிர்!

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து. புதிர் போட்டும் ரொம்ப நாள் ஆச்சு. சரி நம்ம வாஞ்சி அண்ணா என்னும் புலியைப் பார்த்து நாமளும் சூடு போட்டுக்கலாமேன்னு ஒரு குறுக்கெழுத்து தயார் பண்ணியாச்சு. எல்லாம் செஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா கட்டம் 7x7 என்று இல்லாம 7X8 என்று ஆகிப் போச்சு. இதைத் தயார் செய்யும் பொழுதுதான் மனுசன் ஒவ்வொரு மாசமும் எவ்வளவு கஷ்டப்படறாருன்னு தெரியுது. Hats off to you, Vanchi!

இனி நான் தயார் செய்த புதிரைப் பாருங்க. இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.


1
23


4
56




78
9




1011

12

13
14

இடமிருந்து வலம்

1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3)
4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2)
5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4)
7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3)
9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3)
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2)
13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3)
14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)

மேலிருந்து கீழ்

1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3)
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2)
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4)
4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2)
6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3)
8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3)
9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4)
10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2)
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3)
12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2)

புதிருக்கான ஆலோசனைகளைத் தந்த வாஞ்சிக்கும் இது போன்று நிரப்பக் கூடிய கட்டங்களை செய்து தந்த கே.ஆர்.எஸ்ஸுக்கும் எனது நன்றிகள்.

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.