Sunday, September 28, 2008

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - செப்டம்பர் 2008

போன தடவை சீக்கிரமாவே விடைகளை வெளியிட்டு விட்டேன். ஒரு வாரயிறுதியில் உட்கார்ந்து போடக் கூட வாய்ப்பில்லை என்று எல்லாம் மக்கள் ரொம்பவே திட்டினாங்க. அதனால இந்த முறை மொத்தமா பத்து நாட்கள் அவகாசம் தந்தாச்சு. அதுக்கு அப்புறமும் கீதாம்மாவுக்காக இன்னும் நாலு நாள் கூடுதலா அவகாசம் தந்தாச்சு. செஞ்சதுக்கு ஏத்த மாதிரி போன தடவை கலந்துக்கிட்டவங்களை விட இந்த முறை கலந்துக்கிட்டவங்க எண்ணிக்கை அதிகம். நுகர்வோர் சொல்வதை நினைவில் நிறுத்துங்கள் என்ற பாடத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

சென்ற முறை நான்கு பேர்கள் எல்லா விடைகளையும் சரியாகச் சொல்லி இருந்தார்கள். இந்த முறை இந்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்திருக்கிறது. சரியான விடைகளைச் சொன்ன பெனாத்தல் சுரேஷ், அரசு, வடகரை வேலன், வெட்டிப்பயல், கௌசிகன், யோசிப்பவர், பாலராஜன் கீதா, திவா ஆகிய எட்டு பேருக்கும் என் வாழ்த்துகள்! மதிப்பெண்கள் இந்த பக்கத்தில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. புதிரைப் பார்க்கவில்லையே எனச் சொல்பவர்கள் இங்கே போய்விட்டு வரவும்.

இனி விடைகள்.



இடமிருந்து வலம்

3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3)
பழநி
- படமும் தொடங்கி என்பதில் இருந்து ப, நிழலும் தொடங்கி என்பதில் இருந்து நிழ என்ற மூன்று எழுத்துக்களைச் சேர்த்தால் பழநி வரும். கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது பழநியிலே என்ற பாடல் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அது குறிப்பின் இரண்டாம் பாகம்.

5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)
நிலைக்காத
- ஸ்வரங்கள் என்றால் சரிகமபதநி இவைகளில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களோ வரும் என்பதற்கான குறிப்பு. இங்கு ’காதலைக்’ என்னும் சொல்லோடு ’நி’ என்ற ஸ்வரத்தைச் சேர்த்தோமானால் நிலைக்காத என்ற சொல்லின் எல்லா எழுத்துக்களும் கிடைக்கும். உறுதியில்லாத என்ற குறிப்பின் பகுதி நிலைக்காத என்பதற்கான நேர் பொருளைத் தரும்.

6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)
லாடு
- ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் என்ற உடன் பலருக்கும் நினைவில் தோசைதான் வந்திருக்கும். ஆனால் பொருத்தமாக இல்லையே என யோசித்திருப்பார்கள். லாடு என்பது லட்டுவைப் போன்று உருண்டை வடிவம், தித்திப்புச் சுவை கொண்ட ஒரு உணவுப் பொருள். தணலாடும் என்ற சொல்லின் உள்ளேயே விடை இருக்கிறது என்பதை உணர்த்ததான் பார்க்கலாம் என்ற சொல் இருக்கிறது. பலரும் லாடு என்றால் என்ன என கேட்டார்கள் என்பது எனக்கு ஆச்சரியமே.

7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)
சுயம்
- தானாய் வந்தது சுயம்பு. அது முடியாமல் போனதால் சுயம். தான் எனப் பொருள் உண்டு என்பதால் தன்னை அறிந்து கொள் என பொருள் வருமாறு குறிப்பைத் தந்திருந்தேன்.

8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2)
கறவை மாடு
- பால் தரன்னு சொன்ன உடனேயே கறவை மாடுன்னு நிறையா பேர் சொல்லிட்டாங்க. ஆனா குறிப்பின் மற்ற பகுதி கொஞ்சம் குழப்பமாவே இருக்குன்னும் சொல்லிட்டாங்க. அது எப்படின்னா கசப்புக்கு கடு என்ற ஒரு சொல் இருக்கிறது. கடு மாற வை என்ற எழுத்துக்களைச் சரியாகப் போட்டால் கறவை மாடு வரும். மாற வை என்ற எழுத்துக்களே, விடை மாற்றிப் போடும் போது வரும் எனக் குறிக்கவும் செய்கின்றன.

11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5)
அலைமகள்
- ரொம்ப எளிமையான குறிப்புன்னு நினைச்சேன். ஆனா நிறையா பேரு கஷ்டப்பட்டாங்க. திரை கடலோடியும் திரவியம் தேடுன்னு படிச்சது மறந்து போச்சு போல. திரைன்னா அலை. அலைகள் என்ற சொல்லின் இருக்கும் எழுத்துகள் விலகி ம (மங்கலம் தொடங்கி) என்ற எழுத்து சேர்கையில் இலக்குமி என்ற அலைமகள் வருவாள் என்பது குறிப்பு. இதில் மலைமகள் கலை மகள் எல்லாம் போட்டவங்க அலைமகளுக்குக் கஷ்டப்பட்டாங்க. எந்த விடை போட்டாலும் குறிப்பின் இரு பகுதிகளுக்கும் சரியா வருதான்னு பார்க்கணும். வந்தால்தான் சரியான விடை.

12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3)
அறுவை
- கிட்டத்தட்ட எல்லாரும் மாட்டின குறிப்பு இதுதான். வெட்டி = அறு. திட்டி = வை (திட்டுதல் = வைதல்). இது ரெண்டும் சேர்ந்தா அறுவை. ஆனா அது என்ன துணி? அறுவை என்றால் துணி எனப் பொருள். தெரியுமா?! நம்ம அகராதி என்ன சொல்லுது பாருங்க.

அறுவை (p. 43) [ aṟuvai ] , s. cloth, garment, 2. the 14th lunar mansion.

அறுவையர், weavers, cloth dealers
இந்த மாதிரி ஒரளவு விடை தெரிஞ்சா மாதிரி இருந்தா அகராதியில் போய் பார்த்தால் நமக்குத் தெரியாத பொருள் இருப்பது புரியும். நான் பயன் படுத்தும் அகராதி இது.

14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)
சகா
- அருமையான நண்பன் அப்படின்னு வந்த உடனே சகா அப்படின்னு சொல்லிட்டங்க. ஆகாச என்னும் வார்த்தையில் ஆ(பசு) என்ற மிருகம் போக சகா மிஞ்சுது. அது என்ன புளுகன் எனக் கேட்டவங்களுக்கு, ஒண்ணும் விசேஷமில்லை. ஆகாசப் புளுகன் அருமை நண்பன் என எழுத கவுஜ மாதிரி இருந்தது.

16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5)
கஸ்தூரிபா
- எனக்கு ரொம்ப பிடிச்ச குறிப்பு இது. மஞ்சள் என்ற உடன் கஸ்தூரி மஞ்சள் நினைவுக்கு வரும். மரபுக்கவிதை என்றால் ‘பா’. ஆக கஸ்தூரிபா - காந்தியின் மனைவி. கஸ்தூர்பா என ஹிந்திக்காரன் போல் எழுதிய கைப்ஸுக்கும் மதிப்பெண் குடுத்தாச்சு. மின்னரட்டையில் மஞ்சள் என்ற உடன் தோணுவது மஞ்சள் பத்திரிகை என்ற நண்பருக்கு - நல்லா இருடே!

17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)
துகள்
- வாழ்த்துகள் உள்ளவே துகள் இருக்கே. பொடிப்பொடியா ஆனாத் துகள்தானே.

மேலிருந்து கீழ்

1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2)
அநியாய விலை
- குறிப்பின் முதல் பகுதி ஒரு சொலவாடை. அநியாய விலை வைப்பதைப் பற்றி இப்படிச் சொல்வார்கள். ரேஷன் கடையைத் தமிழில் நியாய விலைக் கடை எனச் சொல்கிறோமே. அங்கு அநியாய விலை இருக்காதே.

2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3)
பாக்கு
- தாம்பூலத்தின் ஒரு பகுதி, தலைப்பாக்குள்ளே இருக்கு. மீண்டும் பாரு என்பது விடை உள்ளேயே இருப்பதைக் குறிக்கிறது.

3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5)
பதற்றம்
- தடுமாற்றம் என்பது பதற்றத்தைக் குறிப்பது. சுற்றத்தின் தலை போனதால் ற்றம் என்னும் எழுத்துக்களும் அதனோடு பத என்ற இரு ஸ்வரங்கள் சேர்ந்தால் பதற்றம் வருகிறது.

4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2)
நிலா
- சிவனின் தலையில் நிலா இருக்கும் நிழலா என்ற சொல்லின் இடையில் இருக்கும் எழுத்து போனால் நிலா வரும்.

9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6)
மாற்றுப்பாதை
- ஒரு இடத்துக்கு நேராகவும் போகலாம் இதிலும் போகலாம் என குறிப்பை எடுத்துக் கொண்டால் விடை எளிதாகத் தெரியும். நடுவில் இருப்பது வேறு கவிதை, அதாவது மாற்றுப்பா மற்றும் ஒரு மாதம் - தை!

10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5)
நகங்கள்
- வகைகளுக்கு வேறு சொல் தேடினால் ரகங்கள் என்ற சொல் கிடைக்கும். இதன் முதல் சொல்லை மாற்றினோமானால் ஆத்திரத்தில் கடித்துத் துப்பும் நகங்கள் வரும்.

13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3)
ஸ்தூபி
- இது ஒரு நேரடி குறிப்பு. இதுக்கு க்ரிப்டிக் முறையில் குறிப்பு ஒண்ணும் சரியா அமையலை. அதனால நேரடிக் குறிப்பாகவே குடுத்துட்டேன். இது போல ஒன்றிரண்டு குறிப்புகள் வரலாம்.

15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)
காது
- காதே சொல்லுவது போன்ற குறிப்பு இது. அதில் காது என்பதும் இருக்கிறது என்பது மேற்குறிப்பு.

இந்த மாதப் புதிர் எப்படி இருந்தது. இன்னும் அதிகம் பேரைச் சென்றடைய என்ன செய்யலாம் அப்படின்னு உங்க கருத்தைப் பின்னூட்டமாச் சொல்லுங்க. இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம்.

மீண்டும் அனைவருக்கும் நன்றி!

23 comments:

said...

தொடர்ந்து மாதம் ஒரு முறை தர முயலலாமா? இதே போன்ற புதிர்களையே தரலாமா அல்லது வேறு விதம் வேண்டுமா? கருத்துக்களை அள்ளித் தெளியுங்க பப்ளிக்!

said...

வேறு விதம்னா எப்படி கொத்ஸ்.
விளக்கம் கொடுத்துப் புதிர் போடவும்.
கொஞ்சம் மூளையைக் கசக்கி விடை சொல்ல வைத்ததற்கு ரொம்ப நன்றிங்கோவ்.

said...

//இதில் மலைமகள் கலை மகள் எல்லாம் போட்டவங்க அலைமகளுக்குக் கஷ்டப்பட்டாங்க//

ஆமாங்க ஆமா .. !
:-)

//தொடர்ந்து மாதம் ஒரு முறை தர முயலலாமா? //

முயல வேண்டாம்; செய்யுங்கள் ப்ளீஸ்!!

//இதே போன்ற புதிர்களையே தரலாமா அல்லது வேறு விதம் வேண்டுமா//
variety is the spice of life

said...

அட, எனக்காகக் காத்திருக்கேன்னு சொல்லிட்டு இத்தனை சீக்கிரமாவா பதிலைக் கொடுக்கிறது?? போகட்டும், அடுத்த முறையாவது முழுக்க அனுப்ப முயல்கின்றேன். ஆனால் ஒண்ணு, நவராத்திரி முடியட்டும்! :))))) நொ.சா. எல்லாம் இல்லை, நிஜமான சாக்குத் தான்!

said...

அப்புறம் அந்த அலைமகள், நான் கலைமகள்னு நினைச்சுக் குழம்பிட்டு இருந்தேன்! :((((( எழுதி இருக்கலாம்!

said...

இந்த மாதப் புதிர் மிக நன்றாய் வந்திருந்தது. பலவற்றுக்கும் உடனடியாய் (பழநி, பாக்கு, துகள்) பதில் தெரிந்தாலும், அறுவை (அது எப்படி எனக்குத் தெரியாமல் போகலாம்!?!!) போன்றவைக்கு நேரம் எடுத்தது. பயணத்தில் இருந்தமையால், அதிக நேரம் செலவழிக்கவோ, வலையில் மாட்டி "முழி"க்கவோ முடியவில்லை.

இந்த புதிரைக் கட்டாயம் தொடருங்கள். வேறு விதம் என்றால் எப்படி? தருமி அய்யா சொன்னதையும் வழிமொழிகிறேன்.

said...

\\இந்த மாதப் புதிர் எப்படி இருந்தது. இன்னும் அதிகம் பேரைச் சென்றடைய என்ன செய்யலாம் அப்படின்னு உங்க கருத்தைப் பின்னூட்டமாச் சொல்லுங்க//
இத்தன நாளா புதிரைப்போட்டுட்டு நிம்மதியா காலத்தை ஓட்டிட்டு இருந்தேன். இப்போ எனக்கும் பதில் கண்டுபிடிக்கிற நிலமை வந்திடுச்சு. யோசிப்பவர் வேற ஆரம்பிச்சிடுறேன்னு பயமுறுத்துறாரு. இன்னும் எத்தினி பேரு கெளம்பிருக்கீங்கப்பா?. எனக்கெல்லாம் தருமி மாதிரி கேள்வி கேட்டுத்தான் பழக்கம், இப்போ கஷ்டப்படுறேன். கொஞ்சம் பாத்து போட்டு என்னோட மானத்தையும் காப்பத்துங்க சாமி!

---
"நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)" யாரது அந்த திமிர் பிடித்த ஆசாமி என்று கேட்கத் தோன்றிய கேள்வி.

"துட்டுக்கு எட்டு சட்டி ...."
நம்ப மண் வாசனை வரும் சொலவடையை வெச்சுப் பண்ணியிருக்கீங்க. நல்லா மசால்வடை சாப்பிட்டாப்ல இருக்கு.

"திரைகள் விலகி மங்கலம் தொடங்க
இலக்குமியும் வருவாளே"
முதல் காட்சியிலே கதாநாயகி வர படம் மாதிரி தாண வெச்சுட்டீங்க. கொஞ்சம் ஆடியோ சேர்த்து தாரை, தப்பட்டையெல்லாம் அடிச்சிருக்கலாம் :-)
"வெட்டித் திட்டு, துணியும் கிட்டும்"

வெட்டி = அறு அப்ப்டீன்னு வெச்சுக்கிட்டது கொஞ்சம் இடிக்குது. "வெட்டி=அறுத்து" என்றுதான் இருக்கணும். அல்லது "வெட்டு" என்று போட்டிருக்கலாம்.

"ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான்"
"புளுகனுக்கு" இந்த விடையில் வேலையில்லை.
இது மாதிரி வேலையில்லா வெட்டிப்பசங்களை வெட்டிவிட்டு குறிப்பு எழுதிடுங்க, நெறைய மார்க் கொடுக்குறேன்

said...

இ கொ,

வழக்கம்போல உங்கள் உழைப்பிற்கு ஒரு சல்யூட்.

இம்முறை சிலபல பிரச்சினைகளினால் முழுவதுமாக கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்தமுறை ஸ்பெஷல் லீவ் போட்டாவது புதிரை முடிக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். எனது 'உறுதி'யைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா :-0

இம்முறை சில புதிர்கள் (பாக்கு, லாடு போன்றவை) சுலபமாக புரிந்தது. பயிற்சி இருக்குங்களே :-)

கறவை மாடு அங்கே பொருந்தி வந்தாலும் க்ளூவில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். அறுவை, கடு போன்ற சொல்லிற்கான சில அர்த்தங்கள் தெரிந்து கொள்ள உதவியது.

ஆகாசப் புளுகன் சுலபமாக விடை கிடைத்தாலும், உங்கள் விளக்கத்தைப் படித்தத்வுடன் உங்களின் எண்ண நோக்கும் தெரிந்தது. மிகவும் அருமை.

துட்டுக்கு எட்டு சட்டி.... புதுமையான துப்பு.

ஒரு தீம் வைத்துக் கொண்டு கூட குஎ ப்புதிர் முயற்சி செய்யலாமே. உதா - பொருளாதாரம், மகாபாரதம் இப்படி ஒரு தீம்-ஆக வைத்துக் கொண்டு.

said...

மொத்தத்தில், மிகச்சிறப்பானதாக இருந்தது, வாழ்த்துக்கள். வாஞ்சி சாரின் புதிர்களில், மாதாமாதம் முயல்வேன், ஆனால் இரண்டு மூன்று தான் முடியும். இப்போது தங்களது புதிரை முயன்றபின், அவரது புதிரும் எளிதாக அவிழ்கிறது!

நகங்கள் - ஆத்திரத்தில் என்றில்லாமல் - மன அழுத்தத்தில் என்றிருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

said...

மாசம் ஒண்ணு போதும் சரியா இருக்கும் அப்படின்னு தோணுது.

said...

:)

said...

நல்ல முயற்சி. தொடர்ந்து செய்யுங்கள்.

said...

//வேறு விதம்னா எப்படி கொத்ஸ்.
விளக்கம் கொடுத்துப் புதிர் போடவும்.//

முன்னாடி ரீபஸ் என்ற விதமான புதிர்கள் போட்டு இருக்கோம். அது மாதிரி செய்யலாம். நீங்கள் வேறு எதாவது ஐடியா இருந்தால் செய்யலாம்.

//கொஞ்சம் மூளையைக் கசக்கி விடை சொல்ல வைத்ததற்கு ரொம்ப நன்றிங்கோவ்.//

தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி!

said...

//முயல வேண்டாம்; செய்யுங்கள் ப்ளீஸ்!!//

செய்யறேன் தலைவா!

//variety is the spice of life//

ஒரு ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது. If the plural of mouse is mice then that of spouse should be spice! :))

said...

//அட, எனக்காகக் காத்திருக்கேன்னு சொல்லிட்டு இத்தனை சீக்கிரமாவா பதிலைக் கொடுக்கிறது?? போகட்டும், அடுத்த முறையாவது முழுக்க அனுப்ப முயல்கின்றேன். ஆனால் ஒண்ணு, நவராத்திரி முடியட்டும்! :))))) நொ.சா. எல்லாம் இல்லை, நிஜமான சாக்குத் தான்!//

அது சரி. 25ஆம் தேதியே வெளியிட வேண்டிய பதில் உங்களுக்காக மூணு நாள் கழித்து வந்திருக்கிறது. தெரியுமா?

எல்லாம் அந்த நிஜ சாக்கு உள்ளயே போட்டு கட்டி வைக்கணும்.

said...

//அப்புறம் அந்த அலைமகள், நான் கலைமகள்னு நினைச்சுக் குழம்பிட்டு இருந்தேன்! :((((( எழுதி இருக்கலாம்!//

எல்லாமே விடைகள் வந்த பின்னாடி எழுதி இருக்கலாம் செஞ்சு இருக்கலாம் அப்படின்னு அடிச்சு விடறதுதானே!! :)))

said...

//ஒரு ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது. If the plural of mouse is mice then that of spouse should be spice! :))//

ஜோக் ஞாபகத்துக்கு வந்ததுன்னீங்களே. எங்களுக்கும் சொல்லுங்களேன்.

said...

spouse - spice ஜோக்கு வாசிச்சப்போ ஒண்ணு தெரிஞ்சிது - உங்க தங்கமணி உங்க பதிவுகளை வாசிக்கிறதே இல்லைன்னு. அதான் அம்புட்டு தகிரியம் .

//ஜோக் ஞாபகத்துக்கு வந்ததுன்னீங்களே. எங்களுக்கும் சொல்லுங்களேன்.//

அப்போ ஸ்ரீதர் "அது" spicyதான் அப்டிங்கிறார் .. எல்லாத்துக்குமே தகிரியமா போச்சு. காலம் கெட்டுப் போச்சுங்க

said...

///தொடர்ந்து மாதம் ஒரு முறை தர முயலலாமா? இதே போன்ற புதிர்களையே தரலாமா///

சரி

said...

எங்களின் வாழ்வை மேம்படுத்தும் (அறிவை தூண்டும்) தமிழ் சினிமா, சீரியல்கள் , நடிகைகள் பற்றிய புதிர் இல்லாதது மிகவும் ஏமாற்றமாக உள்ளது.

அதுவும் டி வி சீரியல்கள், ஜோடி no1 , மான் ஆட மயில் ஆட பற்றி புதிர்கள் இல்லாதது கண்டு நண்பர் டுபுக்கு ஆழ்ந்த வருtthaத்தில் உள்ளார்.

தங்களுக்கு சில உதாரண கேள்விகள் தருகிறோம்:

6 மணிக்கு சூரிய தொலைகாட்சியில் கல்லூரி மாணவன் வேடம் போடும் இவர்,6.30 மணி nedunthodaril காவல் ஆணையர் வேடம் போடுவார். அந்த நடிகரின் பெயர் என்ன. ( 7 எழுத்து, வேணு aravindh)


௨. ராமன் தேடிய சீதை இந்த ............. திரை அரங்கில் தான் மிக அதிகமாக 12 நாட்கள் ஓடியது. (கெயிட்டி )

௩. இரண்டு எழுத்தில் ...... இருக்கும் இந்த அர்ஜுனரின் மொக்கை திரை படத்திற்கு தான் இது வரை 42 பேர் திரை விமர்சினம் பதிவு அளித்துள்ளனர்,. 488 பேர் பின்னோட்டம் எழுதி உள்ளனர். (துரை) .


7 மணிக்கு விஜய் டிவி யில் ஜோடி No1இல் ஆடும் இந்த நடிகை 8 மணிக்கு சன் டிவி யில் அந்த நடிகரின் தம்பியோடும் ஜோடி நடனம் ஆடுவார் ( நீபா)

said...

//ஜோக் ஞாபகத்துக்கு வந்ததுன்னீங்களே. எங்களுக்கும் சொல்லுங்களேன்.//

//அப்போ ஸ்ரீதர் "அது" spicyதான் அப்டிங்கிறார் .. எல்லாத்துக்குமே தகிரியமா போச்சு. காலம் கெட்டுப் போச்சுங்க//

தருமி ஐயா,

என்னா ஜோக்குனு கேட்டுது ஒரு குத்தமாய்யா? என்னமோ ரொம்ப 'காரமா' காரணம் எல்லாம் சொல்றீங்களேய்யா. நாங்க எல்லாம் அப்பிராணிங்கய்யா...

(கொத்தனார் தெகிரியமானவரு. ஆனா எங்கூட்ல படிக்கிறாங்கல்ல. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் :)))

said...

சொல்ல விட்டுப் போனது...

//ஒரு ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது. If the plural of mouse is mice then that of spouse should be spice! :))//

அதிக 'காரம்' உடம்புக்கு ஆவாது சாமி. எங்கூட்டு டாக்டரு சொல்லச் சொன்னாரு :-))

said...

//எங்கூட்டு டாக்டரு சொல்லச் சொன்னாரு :-))//

நாமல்லாம் ஆரு? நாம நம்ம சொல்றதையே கேக்க மாட்டோம்ல. அப்புறம் என்ன டாக்குடர்ரு...

(எங்க ஊட்ல இதையெல்லாம் வாசிக்கிறதேயில்லைன்ற தகிரியம்தான்)