கஜானா தமிழ்ச் சொல்லா என்று ஒரு கேள்வி. அதில் ஜ என்ற வடமொழி எழுத்து வருவதால் அது தமிழ் இல்லை என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிடுகின்றனர். ஆனா அச்சொல்லின் மூலத்தைப் பார்த்தோமானால் அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பது எளிதில் விளங்கும்.
கல்தோன்றி மண்தோன்றா காலத்திலே எனத் தொடங்கும் சொற்றொடர் இன்று அரசியல்வாதிகளால் வேண்டாத இடங்களில் எடுத்தாளப்பட்டு அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டாலும் அதில் உண்மை இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி நம் தமிழ் மொழிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த கஜானா என்ற சொல்லுக்கும் மூலம் நம் தமிழ் மொழிதான் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பண்டைய காலங்களில் இன்று போலல்லாமல் நாணயங்களுக்கு முக்கிய இடம் இருந்தது. செப்பு நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், பொன் நாணயங்கள் என்று பலவித நாணயங்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. சங்க காலத்தில் ஒரு வெள்ளி நாணயத்திற்கு ஈடாக 4 செப்பு நாணயங்களும், ஒரு பொற்காசுக்கு ஈடாக 100 செப்பு நாணயங்களும் வழங்கி வந்திருப்பது வரலாறு.
இந்த நாணயங்களை வைத்திருக்கும் பெட்டியில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒன்றில் செப்பு நாணயங்கள், இரண்டாவதில் வெள்ளி மற்றும் மூன்றாவது பிரிவில் பொன் நாணயங்கள் எனப் பிரித்து வைத்திருப்பார்கள். இந்த பெட்டிகளில் ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியாக திறக்கும் வசதியும் உண்டு. அந்தந்தப் பிரிவின் முன் அந்த பிரிவில் இருக்கும் நாணயங்களின் மதிப்பாக 1, 4, 100 என்று எழுதி இருப்பார்கள். இவை தமிழ் எண்களின் படி முறையே க, ச, ன என வழங்கப்பட்டு வந்தது. ச மற்றும் னவுக்கான குறியீடு இவ்வெழுத்துக்களில் இருந்து சிறிதே வேறுபட்டு விளங்கினாலும் ஒரு எழுத்தாகப் படிக்கும் பொழுது அவை ச, ன என்றே வழங்கப்பட்டிருந்தது.
இம்மூன்று எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருக்கும் பெட்டியினை தமிழர்கள் கையாளுவதைக் கண்ட வடநாட்டினர் அவர்களுக்கு தெரிந்த தமிழைக் கொண்டு இதை கசன எனப் படித்து அதை அப்பெட்டிகளின் பெயராகவே வழங்கத் தொடங்கினர். இதை அவர்களுடைய உச்சரிப்பில் கஜானா என்றும் உச்சரிக்கத் தொடங்கினர். பணம் வைக்கும் பெட்டியை வழங்கப் பயன்படுத்தப்பட்ட இச்சொல் பிற்காலத்தில் கருவூலம் என்பதற்கு இணையான சொல்லாக வழங்க பட்டது.
தமிழகத்தில் மகளிர் தங்கள் கச்சுகளில் நாணயங்களை வைத்துக் கொண்டு கடைவீதிகளுக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. இன்றும் அதன் நீட்ச்சியாக பணப்பைகளை அங்கு வைத்துக் கொள்ளும் வழக்கம் இருப்பதை நாம் காண்கிறோம். அன்றைய நாணயங்கள் அணாக்கள் என்று அழைக்கப்பட்டதால், கச்சுகளில் வைத்திருந்த அணா, கச்சணா என்றும் அதுவே மருவி கஜானா ஆனது என்றும் வேடிக்கையாக கதை ஒன்று சொல்லப்படுவது உண்டு.
க/ச/ன -> கசன ->கஜானா என்பதுதான் இச்சொல்லின் வேர்வடிவம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட பெட்டிகளில் நாணயங்கள் வைக்கும் வழக்கத்தில் இருந்தே கஜானா என்ற சொல் வந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இனியும் கருவூலம் என்ற சொல்லைப் பயன்படுத்த தயக்கம் இருந்தால் கசன என்று தூயதமிழில் அதனை அழைக்கலாம் என்பதை நாம் உணர்வோம்.
11 comments:
அருமையான செய்தி
பகிர்வுக்கு நன்றிங்க
aaha...
abaram parimala...
mela sollu...
தாங்கள் "அறிவுக் கசன" என்பதில் எந்த ஐயமும் இல்லை அய்யா!
ஆஹான்னு தான் பின்னூட்டத்தைத் தொடங்கினேன், இந்த "ஆஹா"வின் தமிழ் மூலச் சொல்லும் சொல்லிவிட்டால், தனயை (தமக்கைன்னும் சொல்லலாம்:-) ஆவேன்.
இது வரை எனக்கு தமிழ் எண்களின் 8 என்பது அ போலிருக்கும் என்பது கால் என்பது வ போலிருக்கும் என்பதும் நன்றாக் தெரியும்
இனிமேல்
1,4,100ம் மறக்காது
--
அது என்ன எட்டும், காலும் என்று கேட்கிறீர்களா
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
அஞ்சறை பெட்டி என்பது அஞ்சு அறை பெட்டிதானா அல்லது வேறு ஏதாவது உள்ளதா
ஆஹா..... தமிழ்!!!
தமிழ்க் கடையில்தான் வாங்கணுமுன்னு முடிவே பண்ணிட்டேன். க ஜா னா..... இதோ...வ ரே ன்.
Wikipaiyan back in action :)
அண்ணாச்சி, கலக்கிப்புட்டீங்க! இந்தப் பதிவை இப்புடு தான் சூடிங்!
க ஜா னா = க ச ன =க லக் கல்! :)
ஒரு சிறு ஐயம்...
க = 1
௪ = 4
இது வரை சரி...
ஆனால் 100 = ௱ அல்லவா?
கசன-வா
கசள-வா?
<a href="http://tamilelibrary.org/teli/numeral.html>இங்கே பாருங்கள்</a>
ஆகா, கே ஆர் எஸ், முதல்ல சூடிங். அப்புறம் ஐயிங்? ஐ மீன் - ஐயம்?
ஒன்றரைக் கண் கொண்டு நன்றாகப் பாரும் அய்யா, ள எப்படி ன மாதிரியே தெரில? தமிழ் இலக்கணம் கரை கண்ட கோன், இலவசக் கொத்தனார். விவேகானந்தர் வழிவந்த இலவசக் கொத்தனார் அவர்களைக் கேள்வி கேட்கிறீர்களா?
(தொட்டில் ஆட்டிட்டு பிள்ளைய இன்னும் நல்லா கிள்ளிட்டு...), ரைட்டு. வரேன்.
நல்ல பகிர்வு நன்றி கொத்தனார்
Post a Comment