Sunday, June 16, 2013

மீண்டு மீண்டும் வா!

அண்ணன் @mayavarathaan இன்று ஒரு அருமையான வெண்பாம் எழுதினார். வள்ளுவரின் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி ரேஞ்சுக்கு இருக்கும் வெண்பாம் இது.

முதலில் வெண்பாமைப் பார்த்துவிடலாம். 

திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப திரும்ப

படித்த உடன் அப்படியே மலைத்து நின்றுவிட்டேன். எவ்வளவு ஆழமான கருத்தை எத்துணை எளிமையாகச் சொல்லி இருக்கிறார். யார் வேண்டுமானாலும் ஒரு முறை படித்த உடனே நினைவில் வைத்துக் கொள்ளும்படியான அமைப்பு. 

ஆனால் இதனுள் புதைந்து இருக்கும் சிறப்பான கருத்தினைப் பார்க்கலாம். 

திரும்பத் திரும்ப - தன்னை விட்டு விலகிச் செல்லும் உயிர்களைக் கூட ஆசையோடு அரவணைத்து அவருக்கு மோட்சம் தருவது இறைவன் குணம். இந்து மதமாகட்டும், கிறுத்துவமாகட்டும், இஸ்லாமாகட்டும் இது குறித்த கதைகள் ஏராளம் உண்டு. இப்படி மந்தையில் இருந்து விலகிய ஆடுகள் மீண்டும் இறைவனைச் சேர என்பதையே திரும்பத் திரும்ப எனச் சொல்லி வெண்பாமைத் தொடங்குகிறார் அண்ணன். 

திரும்பத் திரும்ப - அப்படி மந்தையை விட்டு விலகிய ஆடானது சட்டென மனம் மாறி உடனே திரும்பிவிடுமா? அது நடக்கக்கூடிய விஷயமா என்று பார்த்தோமானால் இல்லை. எதோ ஒரு பொறியில் திரும்ப வேண்டும் எனத் தோன்றினாலும் அதனை புறக்கணித்துத் தன் வழியே செல்லவே துணியும். ஆனால் அந்தப் பொறி தோன்றியதில் இருந்து தான் செய்வது தவறோ என எண்ணி தன் செயல்களைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கத் தோன்றும்.அப்படி நினைக்கும் பொழுதிலெல்லாம் தன் வழியில் இருந்து விலகி மீண்டும் இறைவனை நோக்கிச் செல்லத் தொடங்குவதை வர்ணிக்கவே அண்ணன் திரும்ப திரும்ப என்று அந்த மெதுவான திருப்பத்தினைக் குறிக்கிறார். 

திரும்பத் திரும்ப திரும்ப 

இரண்டாம் அடியில் மிக அழகாக ஒரு திருப்பத்தினைத் தருகிறார். திருவின் கணவனாகிய திருமால் நம் மனத்தினுள் ரொம்பி இருக்க வேண்டுமானால் முதலடியில் சொன்னது போல் நம் வழியில் இருந்து திரும்ப வேண்டும் என்கிறார். 

மேற்கூறியவாறு திரும்ப, திரும்பதி ரொம்ப என்பதையே இரண்டாம் அடியாக திரும்பத் திரும்ப திரும்ப என்று எழுதி இருக்கிறார். மற்ற இடங்களில் திரும்பத் திரும்ப என வலி மிகுந்து எழுதியவர் கடைசி இரண்டு சொற்களை எழுதும் பொழுது வலி மிகாமல் எழுதியது அது திரும்பதி ரொம்ப என்று பிரிக்கப்பட வேண்டும் என்பதாலே. வெண்பாமின் ஓசை நயம் கருதி ரொம்ப என்பது ரும்ப என்று வருவது தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒரு வகைப் போலியே. 

அதே போல, நாள் மலர் காசு பிறப்பு என்ற அடிப்படையில் திரும்பு என்று முடிக்க வேண்டியது வெண்பாம் இலக்கணம் என்றாலும் இது திரும்புதல் பற்றிய வெண்பாம் என்பதால் அவ்விலக்கணத்தை மீறி திரும்ப என்றே முடித்திருப்பது அண்ணனின் அத்துமீறிய இலக்கிய வளத்தினையே பறை சாற்றுகிறது. 

சமகாலத்தில், இறைவனின் கைத்தலத்தில் ஐக்கியமாகிவிட்டாயா என்பதை ஜனரஞ்சகமாகச் சொன்ன “கையப் புடிச்சு இழுத்தியா? என்ன கையப் புடிச்சு இழுத்தியா?” என்ற திரை இலக்கியத்திலேயும் “திரும்பத் திரும்பப் பேசறே நீ” என்று இந்த வெண்பாம் எடுத்தாளப்பட்டிருப்பது எதேச்சையான நிகழ்வல்ல.



இந்த அருமையான வெண்பாம் தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமே இல்லை. 

வெண்பாம்: 
திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப திரும்ப

(https://twitter.com/mayavarathaan/status/346132235679834112)

கொத்தனார் உரை: 
தன் வழி விட்டு மீண்டும் இறைவனிடம் திரும்ப வேண்டி மனத்தினை மெதுவாக திருப்பி நல்வழியே திரும்பினால் திருவின்பதியான திருமால் நம் மனத்தினுள் நிறைந்திருப்பார்.

இந்த வெண்பாம் குறித்து சில பிரபல இலக்கியவாதிகளின் கருத்துகள்

எழுத்தாளர் ஜெயமோகன் 

அன்பின் ஜெ

திரும்பத் திரும்ப என்றொரு வெண்பாமைப்பற்றி நிறையப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

அயன்புரம் சத்தியநாராயணன்.

சத்தி,

இலக்கியம் என்பதன் உள்ளார்ந்த எழுச்சி கொஞ்சமும் எந்தத் திருக்குறளிலுமே இருந்தது கிடையாது. அது போலவே இந்த வெண்பாமிலும் இல்லை.

இந்து ஞானமரபில் மறுபிறவி பற்றிய வாதப்பிரதிவாதங்கள் அனேகம். அவற்றின் உள்ளொளி தரிசனம் சற்றும் இன்றி இயற்றப்பட்டிருக்கிறது இந்தப்பா. திரும்பத் திரும்ப என்பதையே திரும்பத் திரும்பச் சொல்வது ஒரு நல்ல உத்தியே தவிர இலக்கியம் ஆகிவிடாது.

திரிச்சி திரிச்சி என்று மலையாள இலக்கியத்தில் பலகாலமாக உள்ள பாடலே இது. அது ஒரு புறவயமான அகவெழுச்சியை முன்னுக்குக் கொண்டு வருவதாக சுந்தர ராமசாமி சொன்னபோது எதிரில் ஒரு மொண்ணை தும்மல் போட்டார். அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் அவருடைய மொண்ணைத்தனத்துக்காக என் கோபத்தையெல்லாம் காட்டி அவரை கன்னியாகுமரி ஜில்லாவைவிட்டே நாடுகடத்தினேன். இதற்கும் எதிர்வினைகள் வரும். அவற்றை நீங்களும் சுட்டிக்காட்டுவீர்கள், நான் அவற்றையெல்லாம் படிக்காமலேயே வரிக்கு வரி எதிர்வினை எழுதுவேன்.

ஜெ.

கவிஞர் மனுஷ்யபுத்ரன்
இந்தப்பாடலைப்பற்றிய என் கருத்தை சாட்டில் வந்த பெண் ஒருத்தி கேட்டார். என் நேரம்.. படுக்கையறையில் யாரோ ஒழிந்திருக்கிறார்கள் என்று நான் எழுதியதையெல்லாம் பற்றிக் கேட்காமல் இதைக் கேட்கிறார்கள். கேட்டது வேறு யாராவதாக இருந்தால் கண்டுக்காமல் விட்டிருக்கலாம். என் எல்லா போஸ்டுக்கும் லைக் போடும் பெண்ணாகிவிட்டதால் சொன்னேன்: இன்று மாலை 5-6 பொந்தி டிவியில் இதுபற்றிக் கலந்துரையாடுகிறேன். இரவு 2 மணிக்கு ஒளிபரப்பாகும். பார்த்துக்கொள் என்று. 

எழுத்தாளர் சாரு 

திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன்

தினமும் காலை 5 மணிக்கு எல்லாம் எழுந்துவிடுவேன். இன்று காலை அப்படி எழுந்துகொள்ளும்போதுதான் அவந்திகா “என்ன தினமும் 9 மணிக்குதானே எழுந்துக்குவே.. இன்னிக்கு ஏன் சீக்கிரமா?” என்றூ கேட்டாள். வீட்டில் காஃபிப்பொடி இல்லை. கடந்த 15 வருஷமாக நான் காஃபி குடிப்பதில்லை என்பதால் காஃபிப்பொடிக்காக கடைக்குச் சென்றேன். கடையில் ஒரு ஆள் பார்த்து “எப்படி இருக்கீங்க சார்?” என்றான். இவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டுமா? ஃப்ரான்ஸில் பிறந்திருந்தால் எனக்கு நோபல் பரிசு நிச்சயம். ஒரு லத்தீன் அமெரிக்க டீக்கடைக்காரன் இப்படித்தான் போர்ஹேவைப்பார்த்துக் கேட்டிருப்பானா? எல்லாம் இந்த நாட்டின் சாபக்கேடு.

என்ன கேட்டீர்கள்? இந்தப்பாட்டைப்பற்றியா? நான் இதையெல்லாம் கேட்பதில்லை. இந்த யூடூப்பில் உள்ள பாட்டைக்கேளுங்கள். 4:14-4:28க்குள் நீங்கள் செத்துப்போவதற்கு நான் காரண்டி.

எழுத்தாளர் ஞாநி 

தலைநகரில் பெண்களின் பாதுகாப்பின்மை, அரசியல் கொலைகள், தூக்கில் தொங்குவதே விதி எனக் காத்திருக்கும் கைதிகள், தண்ணீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை, அணு உலை என்ற பூதம் இப்படிப் பேச வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் பொழுது இப்படி திரும்பத் திரும்ப இந்த திரும்பத் திரும்ப வெண்பாம் போன்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டுமே சிலரால் எப்படி இயங்க முடிகிறது. 

இவ்வளவுக்கும் இதனை எழுதிய மாயவரத்தான் எனக்கு நன்கு அறிமுகமானவர்தான். என்னை விட இருபத்தியிரண்டு வயது இளையவர். அவர் பிரபல பத்திரிகையில் இளம் நிருபராக சேர்ந்த பொழுதே என்னைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். நானும் பல அறிவுரைகளைத் தந்திருக்கிறேன். அந்த அறிவுரைகளைத் தீட்டிய மரத்திலேயே கூர்பார்த்த வலியும் எனக்குப் பழக்கப்பட்டுப்போனதுதான். திண்ணைகளில் நடக்கும் அக்கப்போரில் நாங்கள் வேறு வேறு குரல்களில் பேசினாலும் அடிப்படையில் இருவரும் இலக்கியவாதிகள். தங்கள் கொள்கையில் தவறாது இருப்பவர்கள் எனவே அவர் எழுதியதைப் பற்றிப் பேச விமர்சிக்க எனக்குத்தான் அதிக உரிமை. ஆனால் அது பற்றிப் பேச வேண்டிய நேரம் இதுவல்ல. 

கட்டுரை.காம் ஆசிரியர் தேள் 

ஹி. ஹிஹிஹி..ஹிஹிஹிஹிஹி...

இலவசம் என்ற ஆசாமி திரும்பத் திரும்பக் கவிதைக்கு உரை எழுதி இருக்கிறார் என்று மாயவரத்தானின் உபிக்கள் கும்மாளமாகவும் குஜாலாகவும் இருக்கிறார்கள். இதுகுறித்து நம்முடைய நிருபர் படையை (கூகுள் சர்ச்தான்) அனுப்பி விசாரித்தோம்.

இலவசம் என்ற நபர் இதுவரை 234 விமர்சனங்கள் எழுதி இருக்கிறார். எல்லாமே இதுபோன்று யாருக்கும் புரியாத விமர்சனங்கள்தான். அவரைப்பற்றி பொதுவான பேச்சு என்னவென்றால் “எந்தக்குப்பையை அனுப்பினாலும் அதற்கு இவர் யாருக்கும் புரியாத விமர்சனம் ஒன்று எழுதிவிடுவார்: என்பதுதான்.

திரும்பத் திரும்ப பாடல் நல்ல பாடலாகவே இருக்கட்டும். ஆனால் இந்த உரையால் இந்தப்பாட்டுக்கு மரியாதை என்பது.. ஹி. ஹிஹிஹி..ஹிஹிஹிஹிஹி...

பிகு 1: நகர்படத்தில் குறிப்பிட்ட வசனம் பேசுபவர் மாயவரத்தான் இல்லை. காணப்படும் ஒற்றுமைகள் யதேச்சையான ஒன்றே!

பிகு 2: இலக்கியவாதிகளின் சிந்தனை ஓட்டம் பற்றி நன்கு அறிந்து, அவற்றினை எழுத்து வடிவத்தில் பெனாத்திய அண்ணன் @penathal அவர்களுக்கு கம்பெனியின் நன்றிகள்.

5 comments:

said...

ஹா.. ஹா.. ஹா.. ஹா..

வாழ்த்துக்கள்...

said...

Awesome.....

said...

Awesome...

said...


அதிரும் பத்திரும் என்கிறார். இதில் அ மறைந்து நின்றது. அது இரும் = அதிரும். எது பத்திக்கும்? பதிரும் பத்திரும். அதாவது நெல் பதர், அது பத்திக்கும். முக்கியமான விஷயம் என்கறதால அதை திரும்ப சொல்லறார். பதிரும் பத்திரும்பா திரும்ப. பத்திருப்பா ல நெடில் குறில் ஆச்சு. புரிஞ்சுதுங்களா?

இல்ல திரும் பத்திரும் என்கிறத bond james bond மாதிரியும் வெச்சுக்கலாம்.

said...

:-)))))))