Thursday, November 21, 2013

தேனீர் போடும் லாவகம்!

இன்று எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில், இலங்கையில் இருக்கும் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய அம்மா என்ற சிறுகதையைப் படித்தேன். நிற்க. இது அந்தக் கதையைப் பற்றிய விமர்சனம் அல்ல. 

நுவரெலியா தேயிலைத் தோட்டப் பகுதிகளில் நடப்பதாக எழுதப்பட்ட அக்கதையில் தொடர்ந்து தேனீர் என்றும் லாவகம் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதைப் படிக்கும் பொழுது என்னடா ஒரு பெரிய எழுத்தாளர் இப்படி எழுதுகிறாரே என்ற வருத்தம்தான் வந்தது.

தேயிலையின் சுருக்கம் தே. அந்தத் தேயிலையைக் கொதிக்க வைத்த நீர் என்ற வகையில் தே+நீர் என்பது தேநீர் என்றே ஆகும். தேனைச் சேர்த்த நீர் என்பதை வேண்டுமானால் தேன்+நீர் = தேனீர் என எழுதிக் கொள்ளலாம். 

அதே போல லகு என்ற சொல்லிற்கு நுண்மை என்ற ஒரு பொருள் உண்டு. மிகவும் நுண்மையாக ஒரு செயலைச் செய்வதற்கு லாகவமாகச் செய்கிறான் எனச் சொல்ல வேண்டும். லாவகம் என்ற ஒரு சொல்லிற்கு பொருள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

இதை நான் சுட்டிக் காட்ட, சுட்டிக் காட்டப்பட்டது சரியா தவறா என்ற சிந்தனையை விட்டு விட்டு, தன் ஆதர்ச எழுத்தாளரின் தளத்தில் வெளியிடப்பட்ட கதையில் குற்றம் கண்டுபிடிக்கலாமா என வெகுண்டு எனக்குப் ப்ரூப் ரீடர் பட்டம் கட்டி சமாதானமடையக் கிளம்புவர் சிலர். 

இணையத்தில் எத்தனையோ பேர் தவறாக எழுதி வருகிறார்கள். அவர்கள் எல்லாரையும் திருத்த நான் கிளம்பப் போவதில்லை. சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள ஆர்வமிருப்பவர்களிடம் மட்டுமே சொல்லி வருகிறேன். 

நான் இங்கு சொல்வது எந்த பெரிய எழுத்தாளர்களிடமும் போய்ச் சேரப் போவதுமில்லை. அப்படியே சேர்ந்தாலும் அவர்கள் அதிலிருக்கும் நியாயத்தை எடுத்துக் கொள்ளப் போவதுமில்லை. 

ஆனால் பெரிய எழுத்தாளர்கள் தொடர்ந்து தவறான சொற்களைப் பயன்படுத்தி வந்தால் அவர்களைப் படிப்பவர்கள் அதுவே சரியான சொல் என நினைத்து பயன்படுத்தத் தொடங்குவர். அந்தத் தவறான வடிவம் சரியான சொல்லின் மாற்று வடிவமாகவும் மாறிவிடும். 

அந்நேரம் அது தவறெனச் சுட்டிக் காட்டப்பட்டால், இந்த எழுத்தாளர்களின் எழுத்துகளே அந்த மாற்று வடிவமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றே என்பதற்கான சான்றாக முன் வைக்கப்படும். அங்கு தவறெனச் சுட்டிக் காட்டுபவர்களுக்கு மிகைதிருத்தப் பேர்வழிகள் என்ற பட்டமும், மொழிவளமையை குறைக்க வரும் ஆட்கள் என்ற சித்தரிப்புமே மிஞ்சும். 

இன்று பலரும் நாகரீகம் ஆன்மீகம் எனப் பிரபல எழுத்தாளர்கள் எழுதுவதைக் காட்டி அவரே அப்படித்தான் எழுதுகிறார், நீங்கள் மட்டும் ஏன் அவை தவறு எனச் சொல்கிறீர்கள் எனக் கேட்பது அடிக்கடி நடப்பதுதான். 

தவறாக எழுதித்தான் தமிழின் வளம் மேம்படவேண்டும் என்பதில்லை. இது போன்ற தவறான சொற்கள் மொழியில் நுழைவது தேவையும் இல்லை. எனவே இந்த ஒரு காரணத்திற்காகவாவது எழுத்தாளர்கள் சரியாக எழுத வேண்டும் அல்லது எழுதிய பின் அதனை யாரேனும் சரி பார்த்த பின் வெளியிட வேண்டும் என்பதே என் கோரிக்கை. 

ஊதும் சங்கை நான் ஊதிக்கொண்டே இருக்கிறேன். யார் காதிலாவது விழுந்தால் சரி. 

8 comments:

Dubukku said...

//ஆனால் பெரிய எழுத்தாளர்கள் தொடர்ந்து தவறான சொற்களைப் பயன்படுத்தி வந்தால் அவர்களைப் படிப்பவர்கள் அதுவே சரியான சொல் என நினைத்து பயன்படுத்தத் தொடங்குவர். //

உண்மை. Pls keep up your good work. Well done

maithriim said...

எப்பவும் போல நல்ல பதிவு, நன்றி.

amas32

Geetha Sambasivam said...

ஊதும் சங்கை ஊதிட்டே இருக்கலாம். என்னிக்காவது காதிலே விழும் இல்லையா? :))))

Sankar said...

என் ரீடரில் "இலவசம்(1) தேனீர் போடும் லாவகம்" என்று வந்தவுடன், "மாட்டினார் கொத்தனார். லாவகம் என்று எழுதி இருக்கிறார். ஊரையெல்லாம் இலாகவம் என்று எழுதச் சொல்லிவிட்டு. பின்னூட்டத்தில் பின்னிடனும்." என்று எண்ணிக் கொண்டேன். சுட்டியை அமுக்கி முழுதும் படித்த பின்னர் அசடுதான் வழிய முடிந்தது.

இலவசக்கொத்தனார் said...

தம்பி சங்கரு!

அப்போ தேனீர் தப்பாப் படலையா? :)

நான் லாகவம்ன்னு எழுதச் சொல்லி இருக்கேன். இலாகவம்ன்னு கட்டாயப்படுத்தினது இல்லை! :))

Sankar said...

தேனீரும் தப்புதான். ஆனால் அது சட்டென்று தோன்றவில்லை. லாவகம்தான் பளிச்சென்று கண்ணில் தென்பட்டது.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown said...

நல்ல பதிவு, நன்றி.