Friday, April 01, 2016

சைவமும் வைணவமும் பின்னே கார் கம்பெனிக்காரனும்

ரொம்ப நாளாச்சு எழுதி. வழக்கம் போல நேரமெல்லாம் ட்விட்டரில் சிக்கனமாக எழுதுவதிலேயே கழிஞ்சு போயிடுது. இன்னிக்கும் ட்விட்டரில் நடந்த மேட்டர்தான். 

முதலில் செய்தி என்னான்னு பார்ப்போம். டெஸ்லான்னு ஒரு கார் கம்பெனி. மின்சாரத்தில் ஓடும் கார் ஒண்ணை அறிமுகப்படுத்தி ரொம்பப் பிரபலமானவங்க. ஆனா அந்தக் காரை எல்லாம் நாம படத்தில்தான் பார்க்க முடியும். அவ்வளவு விலை. வாங்கப் போனா கிட்டத்தட்ட ஒரு லட்சம் அமெரிக்க டாலராகிடும்.

அவங்க இன்னிக்கு, (பாதி ராத்திரி தாண்டிருச்சே, சரி நேத்து) மாடல்3 என்ற பெயரில் ஒரு புது மாடலை அறிமுகப்படுத்தி இருக்காங்க. இதோட விலை  அவங்க பழைய மாடலை பார்க்கும் போது ரொம்பவே சல்லிசு. வெறும் முப்பத்தி ஐந்தாயிரம் டாலர்தான். இன்னிக்கு அறிமுகம்னாலும் 2017 கடைசியில்தான் கார் வருமாம். ஆனா கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர், ஆளுக்கு ஆயிரம் டாலர் கட்டி முதல் நாளிலேயே முன்பதிவு செஞ்சிருக்காங்க. 

நான் அதை எல்லாம் விட்டுட்டு அவங்க இந்தக் காரை அறிமுகப்படுத்தும் பொழுது பயன்படுத்திய படத்தைதான் பார்த்தேன். நீங்களும் பாருங்க. 



இதைப் பார்த்த உடனே எனக்கு என்ன தோணிச்சுன்னா, திருவிளையாடல் படத்துல நம்ம சிவகாசி கணேசன், நெத்தியில நல்ல விபூதிப்பட்டை அடிச்சுக்கிட்டு சிவன் இல்லையேல் சக்தி இல்லைன்னு கர்ஜிப்பாரு இல்லா, அதான் தோணுச்சு. சரிதான்னு 

ஆக மொத்தம் டெஸ்லாக்காரன் சைவம். பார்த்துக்குங்கடே நாமக்காரப் பார்ட்டிகளா..

அப்படின்னு ஒரு பக்தி அரசியல் ட்விட்டு ஒண்ணைப் போட்டேன். கூடவே ஆணாதிக்கப் பெண்ணடிமை அரசியல் பத்தியும் ஒரு ட்விட்டு போட்டேன். 

பட்டையைப் போட்டானே தவிர பொட்டை வெச்சானா? அப்பேர்ப்பட்ட ஆணாதிக்கவாதி இந்த டெஸ்லாக்காரன். லேடீஸ் ஆப் தி வேர்ல்ட், யுனைட்!

இந்த ரெண்டுல சமய அரசியல் நல்லாப் பத்திக்கிச்சு. ஒரு நண்பர் வந்து மசராட்டி கூட சைவம்தானேன்னாரு. திரிசூலத்தை அவங்க சின்னமா வெச்சிருக்கிறதால சொல்லி இருப்பாரு போல. ஆனா நான் அப்படி நேராப் போகாம,

சிவனுக்குக் கிரீடம் எல்லாம் கிடையாது. அவன் ஆடும் பொழுது தலைமுடி அங்கும் இங்கும் ஆடும். மசுராட்டி என்ற அவன் பெயரே மருவி மஸராட்டி என்றானது. 

அப்படின்னேன். உடனே இன்னொரு நண்பர் அப்படின்னா Bugatti என்ற பெயருக்கு என்ன காரணம்ன்னாரு. நான் அதுக்கு 

அது அசைவம். ச்சே வைணவம். தண்ணீரில் மறைந்த பூவுலகை வெளிக்காட்டியவன் - பூ காட்டி. அதன் மருவிய வடிவமே புகாட்டி.

அப்படின்னு விளக்கம் தர வேண்டியதாப் போச்சு. அவரும் விடாம அப்போ சண்டை போட்டு விரலால டூ விட்டுக் காட்டினவனாலதான் பைக் கம்பெனி பேரு Ducati ஆச்சான்னாரு. என்னடா இது சைவ வைணவச் சண்டையா ஊதி விடற நேரத்துல இவரு சின்னப் பையன் மாதிரி டூ விட்டு விளையாடறாரே. இவருக்கு இப்படி எல்லாம் சொன்னா விளங்காது. கொஞ்சம் விளக்கமாத்தேன் சொல்லணும்ன்னு நினைச்சு, 

நண்பரே, மானாட மழுவாடன்னு நடராசர் ஆடும் பொழுது என்னவெல்லாம் ஆடிச்சுன்னு ஒருத்தர் மளிகைச்சாமானுக்கு சீட்டு எழுதற மாதிரி பாட்டு எழுதினாரு. அவரு சொல்லாதது மானும் மழுவும் போக இன்னொரு கையில் உடுக்கையை வெச்சுக்கிட்டு இருப்பாரு நம்ம நடராசர். உடுக்கைக்கு இன்னொரு பேரு உடுக்கு. அந்த உடுக்கை இப்படி அப்படி அசைக்கும் பொழுது அது அவர் ஆடும் தாளத்துக்கு ஏத்த மாதிரி டப டப டப டபன்னு சத்தம் தரும். 

அந்த சத்தம் மாதிரியே இந்த கம்பெனிக்காரன் தயாரிச்ச பைக்கும் சத்தம் போடறதுனால சிவன் பெயரை வைக்கலாமேன்னு நினைச்சு உடுக்காட்டின்னு வெச்சாங்க. ரோமத்தை உரோமம்ன்னு தமிழில் எழுதற மாதிரி உடுக்காட்டின்னு இருக்கறதைப் பார்த்து அவங்க தவறுதலா டுக்காட்டின்னு மாத்திட்டாங்கன்னேன். 

அப்போ புகாட்டிலேயும் டுக்காட்டிலேயும் ஏறிப் பறந்தவங்கதான். போகட்டும். இன்னும் ஆவுடையார் பிள்ளை, வினாயகரைக் குறிக்க ஆப்பிள்ளை என்றதே ஆப்பிள் ஆனது, மயிலோன் குரோதம் சாயந்ததுதான் மைக்ரோசாப்ட் போன்ற பல விஷயங்களைச் சொல்லணும். அதுக்கு முன்னாடி உங்க யாருக்கேனும் வேற எதாவது பெயரில் சந்தேகம் இருந்தக் கேளுங்க. சொல்லறேன். 


8 comments:

பினாத்தல் சுரேஷ் said...

எல்லாக் காரும் ஓதும் மார்க்கம் பக்தி மார்க்கம்தான் என்பதை அழகாக எடுத்துச் சொல்லிவிட்டீர்கள்.

எஞ்சின் செயலிழந்தால் அமைதி மார்க்கமாகவும் மாறும், அல்லவா?

இலவசக்கொத்தனார் said...

எஞ்சினே இல்லாமல் மோட்டார் கொண்டு ஓடும் மின்சாரக் கார்களே அமைதி மார்க்க கார்களாகும்.
மற்றவை எல்லாம் ஓடாவிட்டாலும் டமால் டுமால் எனச் சத்தம் வரும் அவ்வளவு அமைதி இல்லா கார்களே!

writerpara said...

:>

Naga Chokkanathan said...

Super!!!

RRSLM said...

:)

Anonymous said...

$35000தான் என்றால் சைவத்துக்கு மாறுவதில் தவறில்லை. அல்லது நமக்கு சைவம்தான் நடைமுறை சாத்தியம்.

maithriim said...

iconographyயில் நீங்க பலே ஆள் என்று நிருபித்து விட்டீர்கள். எல்லாரும் இனி காருக்குப் பெயர் வைப்பதற்கு முன் உங்களை consult செய்ய வேண்டும். Consultancy charges may vary according to the one consulting you is a Vaishnavite or a Saivite :D

amas32

சதீஷ் குமார் said...

தாறு மாறு.

ஹாரிசாண்டல் கிரில் வெச்சதெல்லாம் சைவம். வெர்டிக்கல் கிரில்னா வைணவம்னு புரிஞ்சு வெச்சிருந்தேன்