Friday, September 24, 2021

எடிட்டர் என்றோர் இனமுண்டு...

நான் பள்ளியில் படிக்கும் பொழுது என் கனவுவேலை நூலகராவதுதான். எந்நேரமும் புத்தகங்களோடு இருக்கலாம். எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் படிக்கலாம். இதைவிட சிறந்த வேலை என்ன இருக்க முடியும் என்று நினைத்த காலம் அது. இன்றும் நூலகங்களைக் கண்டால் பரவசம்தான். ஆனால் படிப்பது தாண்டி எழுதுவது, எழுதுவதை எப்படி மெருகேற்றுவது எனத் தேடல் விரிவடையும் பொழுது புத்தகங்கள் உருவாகும் செயல்முறையிலும் ஆர்வம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. அதில் கவனத்தை இழுத்தது இந்த எடிட்டிங் டிப்பார்ட்மெண்ட்தான்.

எடிட்டர். இந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியோ ஆசிரியர் என்ற சொல் கருதப்பட்டு இன்று இதழாசிரியர், பொறுப்பாசிரியர், தொகுப்பாசிரியர் என்று பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றில் எதுவுமே எடிட்டர் என்ற பதம் அளிக்கும் முழுப்பொருளையும் தருவதில்லை. எடிட்டரை ஆசிரியர் என்றால் எடிட்டிங் என்பதை எப்படிச் சொல்ல? இதனால்தான் என்னவோ இன்று தமிழ் பதிப்புலகத்தில் எடிட்டிங் என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது. இன்று எடிட்டர் என்றால் எழுத்து / இலக்கணப் பிழைகளைத் திருத்துபவர் என்ற தவறான புரிதல்தான் இருக்கின்றது.

ஆனால் என்னைக் கேட்டால் எடிட்டர் என்பவன் ஒரு மகா ரசிகன். ஒரு கதையையோ கட்டுரையையோ படித்துவிட்டு ஒரு ரசிகனாக தனக்கு எது உவப்பாக இருக்கிறதோ அதனை மேலும் மெருகேற்றி, தனக்கு உவப்பில்லாதவற்றை தவிர்த்து, ஓட்டம் சுணங்கும் இடங்களை நேராக்கி, ஏரணக் குறைபாடுகளை நீக்கி, அடுத்து படிக்க இருக்கும் வாசகனுக்குச் சீராக்கப்பட்டதை தருவதுதான் எடிட்டிங் என்பேன். எழுத்தாளர் தாய் போல. தான் எழுதியவற்றின் மேல் அதீத பாசம் கொள்ளுபவர். எப்படி இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது என எண்ணக் கூடியவர். எடிட்டர் தந்தை போல. கனிவு காட்ட வேண்டிய இடத்தில் கனிவாக இருந்து, கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்பினைக் காட்டி அந்தப் படைப்பினை சரியாகச் செய்வது அவர் கடமை. அப்படி தவறுகளை நீக்குவது, பலவீனங்களை மறைப்பது, நல்ல இடங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது என பல பரிமாணங்களைக் கொண்டது அவர் வேலை. தமிழில் நல்ல எடிட்டர்களுக்கு இன்று தட்டுப்பாடுதான்.

நல்ல எழுத்து படிப்பவனை தன்னுள் இழுத்துச் செல்ல வேண்டும். கதை நடக்கும் இடத்தில் படிப்பவன் ஒரு டைம் டிராவலர் போல் நின்று காட்சிகளைக் காண வேண்டும். முற்றிலும் தெரியாத கதைக்களனாக இருந்தால் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு எப்படி வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால் தெரிந்த இடங்கள், தெரிந்த சம்பவங்கள் மாற்றமில்லாமல்தான் வரவேண்டும். அதற்கான வடிவம் என்னுள்ளே ஏற்கனவே இருக்கும் பொழுது வேறு ஒரு பிம்பத்தைக் காட்டினால் அது ஒட்டாமல் போய்விடும். அதுதான் பெனாத்தல் சுட்டிக் காட்டிய சம்பவம். ஹாக்வேர்ட்ஸ் என்பது கற்பனை, என் ஹாக்வேர்ட்ஸும் உங்கள் ஹாக்வேர்ட்ஸும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் கூடக் கிடையாது ஆனால் கிங்க்ஸ் கிராஸ் ரயில் நிலையம் நான் நிதமும் புழங்குமிடம், அதன் வர்ணனை சரியாக இல்லை என்றால் நெருடும். இதே போலத்தான் வரலாற்றுச் சம்பவங்கள், மற்ற எல்லா ஏரணங்களுமே.

ஒரு முறை ஆங்கில எடிட்டர் ஒருவரின் அனுபவம் பற்றிப் படித்தேன். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றினை அவர் எடிட் செய்யும் பொழுது முதல் உலகப் போர் நிகழ்வு ஒன்றினைப் பற்றிய குறிப்பு வந்ததாம். அதனை அப்போர் முடிந்த சமயம் அப்போரில் சண்டையிட்ட வீரர் ஒருவர் சொல்லும் குறிப்பாக அது இருந்ததாம். இவர் கேட்ட கேள்வி, 'இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த பின்னால்தானே அந்தப் போர் முதலாம் உலகப் போர் என அழைக்கப்பெற்றது. ஆனால் அந்த வீரர் சொல்லும் காலத்தில் அதனை க்ரேட் வார் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும் அதனை எப்படி முதலாம் உலகப் போர் எனச் சொல்வதாக அமைக்கலாம்?' எனக் கேட்டாராம். இப்படி அல்லவா இருக்க வேண்டும் கவனம்!

அதே போல பாரா சொன்ன இறவான் புத்தகத்தில் ஒரு நிகழ்வு குறித்து வரும். கதை நிகழும் ஆண்டிலிருந்து பத்தாண்டுகள் முன்பு நடந்தது என்ற ஒரு வரி இருக்கும். கதைக்கு துளியும் சம்பந்தமில்லாத நிகழ்வுதான். ஆனால் அது எப்பொழுது நிகழ்ந்தது எனப் பார்த்தேன், சரியாக கதை நடக்கும் ஆண்டிற்குப் பத்தாண்டுகள் முன்னால் நிகழ்ந்ததாக இருந்தது. அதனை எழுதும் பொழுது அவர் இது சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதனைச் சரிபார்த்து எழுதி இருந்தால் மட்டுமே அது சாத்தியம். எவ்வளவு கவனமெடுத்து எழுதி இருக்கார் என்று ஆச்சரியப்பட்டேன். படிக்கும் பொழுது எனக்கும் இது போன்ற கவனம் தேவை என்பதையும் உணர்ந்தேன்.

பாராவும் பெனாத்தலும் என்னை எடிட்டர் என்றே சொல்லிவிட்டார்கள். அதற்கான முறையான பயிற்சி இல்லை என்பதால் அதனை நான் ஏற்க முடியாது ஆனால் ரசிகனாக எனக்கு அவர்கள் படைப்புகள் மீதான கருத்துகளை நேர்மையாகச் சொல்லிவிடுவேன். அவை கேள்விகளாக வரலாம், புரியவில்லை தெளிவாகச் சொல்லவும் எனத் தீர்ப்பாக வரலாம், இழையறுப்புகளைக் கண்டு சொல்வதாக இருக்கலாம், ஏரணக் குறைகளைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கலாம், அல்லது #HackThoo என நேராக் குப்பைக்கும் கூட அனுப்பலாம். ஆனால் நேர்மையாகச் செய்ய வேண்டும், அது அவசியம்.

எனக்குமே இது இடைஞ்சல்தான். சரியாக எழுதப்படாதவற்றைப் படிக்க முடிவதில்லை, ஆரம்பித்து முடிக்காமல் விட்ட கட்டுரைகள் ஏராளம். படிக்கும் பொழுது மனம் தானாக எடிட் செய்யத் தொடங்கி விடுகிறது. உன் கண்ணிற்கு மட்டும் எப்படி இது தெரிகிறது என்கிறார்கள். நான் அதற்காக விசேடமாகக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்ப்பதில்லை. ஆனால் இப்படி கவனிப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. எழுதியதை வாய் விட்டுப் படித்தால் இது எளிதில் தெரியும். அதே போல படிக்கப் படிக்கத்தான் நம் மொழிவளம் கூடும். அதுவும் மிக அவசியமான ஒன்று.

முன்பெல்லாம் எல்லாரிடமும் என் கருத்துகளைச் சொல்பவனாகவே இருந்தேன். ஆனால் இப்படியான தயவுதாட்சணியமில்லாத எதிர்வினைகளை ஏற்றுக்கொள்வது மிகச் சிலரே. பல நட்புகளைக் கூட இழக்க வேண்டியதாயிற்று. எனவே இப்பொழுது எல்லாம் மிகத் தெரிந்த சிலரிடம் மட்டுமே அவர்கள் படைப்புகள் பற்றிய என் கருத்துகளைச் சொல்கிறேன். அதே போல என் எழுத்துகளை மேம்படுத்த வழியில்லாத இணையத்தளங்களில் எழுதுவதையும் குறைத்துக் கொண்டு வருகிறேன்.

பாரா நடத்தும் எழுத்துப் பயிற்சி வகுப்பில் நான் ஆவலுடன் எதிர்பார்ப்பது எடிட்டிங் பற்றிய வகுப்புகளைத்தான். முறையாகக் கற்றுக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு. உங்களுக்கும்தான்.

பாராவின் பதிவு - https://writeroom.bukpet.com/?p=1609
பெனாத்தலின் பதிவு - https://www.facebook.com/1122840143/posts/10225206135316784/?d=n

3 comments:

said...

நான் என்றாவது கதை / நாவல் எழுதினால் உங்களிடம் கண்டிப்பாக ஒரு முறை ஆசிரிய அனுப்புவேன், உங்களுக்கு ஏற்பு இருந்தால். உங்களிடம் மட்டுமே அல்ல, இன்னும் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். தனித்தமிழ் நோக்கில் திருத்த ஒருவர், அறிவியல் ஆராய ஒருவர் என்று. ஆனால் வீடு, வேலை, அலைச்சல் என்று இந்த இயந்திர வாழ்வில் கதை எழுதத்தான் மனநிலை வாய்க்கவில்லை.

நூல்கள் / கட்டுரைகள் படிக்கும்போதே குறைகள் கண்ணில் படும் குறை (!?) எனக்கும் உண்டு. உங்கள் பதிவுகளிலேயே கூட சில முறை பிழைகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறேன் என்பதில் ஒரு சிறுதிமிரும் உண்டு ;-) தமிழில் எழுதுவதே அரிதாகிப் போய் விட்ட இக்காலத்தில் இருக்கும் சொற்ப தன்னார்வ எழுத்தாளர்களையும், பிழைகளைச் சுட்டிக் காட்டி ஓட வைக்க விரும்பவில்லை என்பதால், நன்கு தெரிந்த நபராக இருந்தால் மட்டுமே பிழைகளைச் சுட்டிக் காட்டுகிறேன்.

Editing = ஆசிரியம் ; ஆசு என்றால் பிழை; "ஆசிரியம்", "ஆசிரிய" என்று வைத்துக் கொள்ளலாம். "ஆசிரிக்க" என்று வைத்தால் காவிக்கட்சியினர், "பசு சிரிப்பதா ? எங்கள் கோமாதாவை அவமானப்படுத்திவிட்டாய்" என்று கம்பு தூக்கிக் கொண்டு வரலாம் என்பதால் அச்சொல்லை விட்டுவிடலாம்.

இலக்கியம், நூல்கள், தொழில்முறை எழுத்தாளர்கள் போன்ற இடங்களில் இலக்கணப்பிழை சுட்டிக் காட்டலாம். சமூகவலைத்தளங்கள், உணர்ச்சி வெளிப்பாடுப் பதிவுகள் போன்றவற்றில், இலக்கண மற்றும் சொற்பிழைகளைச் சுட்டிக் காட்டத் தேவையில்லை. சாதி, மதம், இலக்கணம், உணவு, இசை, மொழி என்று எதிலும் கறாரான தூய்மை வரையறைகளை நமக்கு நாமே வைத்துக் கொள்ளலாம். விருப்பமில்லாத அடுத்தவரிடம் அத்தூய்மையை எதிர்பார்ப்பது அவர்கள் நமக்கு என இருவருக்கும் எரிச்சலையே தரும். அதனால் அவர்கள் தமிழில் எழுதுவதையே தவிர்த்து விட வாய்ப்புண்டு. ஆனால், திரைப்படம் + பாடல்கள் போன்ற கலைப்படைப்புகளில் உள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டுதல் மொழிக்கு அவசியமானது. "ji" போட்டு பேசுவது போன்ற சமூக மாற்றங்களை கலை உருவாக்குகிறது. அதனால் திரைக்கலைஞர்களுக்கு பொறுப்பு அதிகம் உள்ளது. அவர்கள் பிழை செய்தால், இரக்கமில்லாமல் வெளுக்கலாம் :)

ரொம்ப நீளமாக நிறைய எழுதிவிட்டேன். அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். என் பதிவுகளில் எப்போது பிழை கண்டாலும், தயங்காமல் சுட்டிக் காட்டவும்.

said...

சங்கர், ஆசிரிய என்ற சொல் சரி வராது. இவ்வளவு எழுதின பின்னாடியும் எடிட்டிங் என்றால் பிழை திருத்தம் என்ற ரேஞ்சிலேயே பதில் எழுதினால் எப்படி? பேசாம பாரா எடுக்கும் வகுப்புகளில் சேர்ந்திடுங்க.

ஆக, எனக்கு தனித்தமிழும் அறிவியலும் தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்போ நான் எந்த நோக்கில் ஆசிரியணும்ன்னு சொல்லவே இல்லையே. :))

said...

> ஆக, எனக்கு தனித்தமிழும் அறிவியலும் தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க.
அவ்வ்வ். நான் சொன்ன அறிவியல் கொஞ்சம் ஆழமாக "Distributed systems, Consensus Protocols" வகையில். அது கூட உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம் என்று நான் நினைத்தது கூட ஓரளவு பிழைதான் :)



> அப்போ நான் எந்த நோக்கில் ஆசிரியணும்ன்னு சொல்லவே இல்லையே.
சொற்றொடர் அமைப்பு, சொற்களைக் கோக்கும் அழகு, ஒற்றுப்பிழைகள், சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பது, இன்ன பிற.