Tuesday, April 04, 2023

மாடலைத் தேடல்

"திராவிட மாடல், திராவிட மாடல் எனக் கதைக்கிறார்களே. அந்த மாடல் என்ற சொல்லிற்குத் தமிழ்ப் பதம் இல்லையா?" என வினவி இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர். Son of a gun என்பதை முன்பொருமுறை அவர் மொழிபெயர்த்தது போல இதற்கு மாதிரி, வடிவழகர் என்றெல்லாம் முன்மொழிவாரே என்று பயந்தேன். நல்ல வேளை, அவரே அழகன்/ அழகி அல்ல என்று தெரியும் எனச் சொல்லிவிட்டார். தமிழ் பிழைத்தது. மாடல் என்பவர் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுமே எவ்வளவு தவறான ஒன்று என்பதைச் சொல்ல வேண்டும். அதைப் பிறிதொரு சமயம் பார்ப்போம். 


மாடலுக்குத் தமிழ்ப் பதம் என்ன என்று எண்ணியதற்குப் பதிலாக மாடல் என்ற சொல்லை ஏன் இங்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று எண்ணி இருந்தால் அதன் பின் இருக்கும் ஏரணம் வசப்பட்டு இருக்கும். ஆனால் அது தமிழல்ல தவறான பயன்பாடு என்ற முன்முடிவை எடுத்துவிட்டதால் இப்படி ஒரு சிந்தனை அவருக்கு வராமல் போனதில் ஆச்சரியமில்லை. 

தமிழர் பண்பாடு இயற்கையை ஒட்டி அமைந்த ஒரு பண்பாடு. நிலத்தையும் அந்த நிலத்தை பண்படுத்திப் பயன்படுத்த உதவும் கருவிகளையும், அந்நிலத்தில் விவசாயம் செய்யவும் அதனை ஒட்டி இருக்கும் வாழ்வாதாரத்திற்கும் உதவும் கால்நடைகளை கடவுளாகவேப் போற்றிக் கொண்டாடும் பண்பாடு அது. மாடு மேய்ச்சலுக்குச் செல்லும் பொழுது, வீடு திரும்பும் பொழுது என தன் தினப்படி வேலைகள் நடக்கும் நேரங்களைக் கூட மாட்டோடு இணைத்துச் சொல்வதன் மூலம் தனக்கும் மாடுகளுக்கும் உண்டான உறவினை வெளிப்படுத்துவது தமிழர் பண்பாடு. 

அதனால்தான் குடியியலில் வள்ளுவர் உழவு என்ற ஓர் அதிகாரத்தையே படைத்து "உழந்தும் உழவே தலை" என உழவின் பெருமையைப் பாடியுள்ளார். குறிப்பாக மாடுகளைப் பற்றிப் பேசும் பொழுது ஆ என்றும் பகடு என்றும் பல சொற்களில் அவற்றைக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியராகட்டும் கம்பனாகட்டும் இளங்கோவாகட்டும், மாடுகளைப் பற்றிப் பாடாத கவிஞரே கிடையாது. தமிழர் பண்டிகையாம் பொங்கலின் ஒரு பகுதியாக இன்றும் நாம் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுவது இந்த பண்பாட்டின் நீட்சியே. தன் குலத்து முன்னோரை வணங்கும் பொழுது அவர்களுக்கு மாடன் என்ற பெயரினையே முன்வைத்தான் தமிழன். இன்றும் கூட மாடு மாதிரி வேலை பார்க்கிறான் என உழைப்பின் உருவகமாக மாட்டினையே சொல்கிறோம். 

அதனால்தான் தமிழில் செல்வம் என்பதற்கு இணையான சொல்லாக மாடு முன்வைக்கப்படுகிறது. பொன், மணி, இரத்தினம், செல்வம், இடம் என மதிப்பிற்குரிய அனைத்திற்கும் மாடு என்ற சொல் இணையாக முன்வைக்கப்படுகிறது. மாளிகைகளைச் சொல்லும் பொழுது மாட மாளிகை என்கிறோம். இப்படி பெருமதிப்பு கொண்ட பலவற்றிக்கும் மாடுகளை இணைத்தே சொல்லி வருகிறோம். 

மீண்டும் வள்ளுவரிடையே தஞ்சம் புகுந்தோமானால் ஒருவனுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்ற கருத்தினை முன்வைக்கும் பொழுது அவர் பொன்னல்ல மற்றையவை எனச் சொல்லவில்லை, பணமல்ல மற்றயவை எனச்சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் கேடில் விழுச் செல்வம் எனச் செல்வத்தைக் கூட நிலையற்றதாகச் சொல்லும் அவர் கல்வியினைச் சொல்லும் பொழுது மாடல்ல மற்றை யவை எனச் சொல்கிறார். மற்ற வகையான செல்வங்கள் நம்மை விட்டு விலகினாலும் கூட நிலைத்து இருக்கும் கல்வியே மாடு என்கிறார். மாட்டுக்கு அத்தனை மதிப்பு. 

மாடு என்றால் செல்வம். நிலைத்திருக்காத செல்வம் என்பதை மாடல்ல என்பது வள்ளுவர் வாக்கு. இதனை மனத்தில் இருத்தியிருந்தால் மாடல் என்ற சொல்லிற்குத் தமிழ் இணைத் தேடப் போக வேண்டிய அவசியமே இருந்திருக்காது. எதற்கும் ஒரு முறை நாம் அகராதியையும் புரட்டிப் பார்ப்போம். செய்தல் என்ற ஒரு சொல்லைப் பற்றிப் பேசும் பொழுது அழைத்தல், அயர்தல், ஆடல், ஆற்றல், இழைத்தல், குயிறல், குயிற்றல், சமைத்தல், செய்கைபண்ணல், புரிதல், மாடல், வனைதல், அன்றியுமிக்கசெயல் ஊராண்மை, அரியசெயல், பேராண்மை, தொழிற்பயில்வு, தொறு என அடுக்கிக் கொண்டே போகிறது அகராதி. இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளவேண்டியது செய்தல் என்பதற்கு மாடல் என்ற இணைச் சொல் தமிழில் உண்டு என்பதே. 

பத்திரிகையாளர் சொல்லும் திராவிட மாடல் என்றால் என்ன என்று பார்க்கலாம். இந்த மாடலின் சாதனைகளாகச் சொல்லப்படுவதில் சில, நிலையான செல்வமாம் கல்வியை இலவசமாக அளிப்பது, தகுதியுடைய பெண்டிருக்கும், மாணவிகளுக்கும், திருநங்கைகளுக்கும் உதவித்தொகை தந்து செல்வம் பெருக்க வகை செய்வது, உழவர்களுக்கு இலவச மின்சாரம் தந்து உழவினை ஆதரிப்பது, நீர்வளம் பெருக்க வழிகள் என்று வாழ்வின் தரம் உயர வழி செய்யும் பல திட்டங்களை முன்வைப்பதுதானே திராவிட மாடல். இப்படி தமிழினம் உயர பல பணிகளைச் செய்வதுதான் திராவிட மாடல். 

திராவிடத்தால் செய்யப்படுவது, திராவிடர்களுக்குச் செய்யப்படுவது, திராவிடத்தில் செய்யப்படுவது என யாரால் செய்யப்படுகிறது, யாருக்காகச் செய்யப்படுகிறது, எங்கு செய்யப்படுகிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடையாக செய்தல் என்பதற்கு இணையான மாடல் என்ற சொல்லை எடுத்தாண்டுச் சமைக்கப்பட்டதே திராவிட மாடல் என்ற பதம். எல்லாமே தமிழ்தான் என்ற புரிதல் இருந்தால் பத்திரிகையாளருக்கு இந்தக் கேள்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை. தமிழின் போதாமை என்பது தயிரை விடுத்து தஹியைப் புசிக்கும் பத்திரிகையாளரின் மனத்தில் இருந்ததால்தான் இது தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் என்ற சிறு ஐயம் கூட எழாமல் தமிழில் இணைச் சொல் தேட முனைய வேண்டியதாகி விட்டது. 

மக்களால் நான் மக்களுக்கான நான் என்றார் ஒரு திராவிடத் தலைவர். அது போல திராவிடர்களால்  திராவிடர்களுக்காக திராவிடத்தில் செய்தலே திராவிட மாடல். செய்தலே மாடல். முன்மாதிரி என்பதற்கு ஆங்கிலத்தில் மாடல் என்பதற்கு இந்தத் தமிழ்ச் சொல்தான் வேரோ என்னவோ. 

திராவிடம் தமிழ்ச் சொல்லா என்ற பஞ்சாயத்து இன்னொரு நாளுக்கானதாம். வரட்டும். அதையும் ஒரு கை பார்த்துவிடலாம். எல்லாமே தமிழ் எனச் செய்வது என் மாடல்தானே. 

3 comments:

said...

திராவிட மாடல்னா தமிழனை தமிழன் அல்லாத தெலுங்கன், மலையாளி மற்றும் கன்னடன் ஆள்வதுதான். திராவிட தலைவர்னா கட்டுமரக்குடும்பத்து கொத்தடிமையாக இருப்பதுதான் .

said...

திராவிட மாடல்னா தமிழனை தமிழன் அல்லாத தெலுங்கன், மலையாளி மற்றும் கன்னடன் ஆள்வதுதான். திராவிட தலைவர்னா கட்டுமரக்குடும்பத்து கொத்தடிமையாக இருப்பதுதான் .

said...

மாற்றுப் பார்வை:
கோலம் போடும் போது மாவை புள்ளிக் கணக்கோடு இடுவது வழக்கம். செல்வக் கோலம் என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். கோலத்தைச் சுருக்கமாக மா இடல் என்றும் சொல்லலாம். அது புணரும் போது மாடல் என்று கோலத்தையும் அதன் மூலமாக செல்வத்தையும் குறிக்கும் வார்த்தையாக அமைகிறது. செல்வத்துள் செல்வம் மகளிர் செல்வம். அந்த மகளிர் அழகிய கோலத்தில் காணப்பட்டால் அவரை மாடல் என்பது தமிழ்ப் பண்பாடு.