Tuesday, October 17, 2023

அழலாரம் - The Ring of Fire!

முன்னொரு சமயம்! 

சூரியன் உச்சி வானில் இருக்கும் மதிய நேரம். சூரியன் அஸ்தமனம் ஆகும் முன் தத்தம் வேலைகளை முடிக்க வேண்டும் என மக்கள் அனைவரும் அவர் அவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். திடீரென வானம் இருளத் தொடங்குகிறது. சில நிமிடங்களில் மொத்தமாக சூரிய வெளிச்சமே இல்லாமல் ஆகிறது. அப்பகல் இரவு போல மாறிவிடுகிறது. வானில் நட்சத்திரங்களைப் பார்க்க முடிகிறது. அன்று அமாவாசை. அதனால் நிலவையும் காணவில்லை. சூரியனுக்கு என்ன ஆனது? இனி சூரியனைப் பார்க்கவே முடியாதா? வெளிச்சம் இல்லாமல் எப்படி உயிர் வாழப் போகிறோம் எனக் கவலை கொண்டு அனைவரும் தத்தம் வேலைகளை அப்படியே போட்டபடி வானைப் பார்த்தபடி நிற்கின்றனர். சிறிது நேரத்தில் மீண்டும் சூரிய வெளிச்சம் வரத் தொடங்குகிறது. மதியத்தில் ஒரு விடியல் போல மெல்ல மெல்ல இருளை விரட்டியடித்து சூரியன் வானில் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறான். என்ன நடந்தது எனப் புரியாமல் குழம்பும் மக்கள் தங்கள் வழமையான வாழ்வுக்குத் திரும்புகின்றனர். 

இப்படி நடந்த அதிசயத்தைச் சும்மா விடமுடியுமா? அந்தக் காலத்து கதைசொல்லிகள் இதைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர். சூரியனை ஒரு பாம்பு விழுங்கி விட்டதாகவும் பின் சூரியன் தப்பி வந்ததாகவும் ஒரு கதையைச் சொல்கின்றனர். ஆனால் ஏன் பாம்பு விழுங்கியது என்பதைச் சொல்ல வேண்டாமா? அதற்கு ஒரு பின்கதையையும் புனைகின்றனர். 

விஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்து மேருமலையை தன் மேல் இருத்திக் கொள்ள, அம்மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தார்கள். அவர்கள் சமமாகப் பங்கு போட்டுக் கொள்வதாக ஒத்துக்கொண்டிருந்தாலும் முதலில் தேவர்களுக்குத் தரப்படுவதைக் கண்ட அசுரன் ஒருவன் தங்களுக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற எண்ணத்தில் தேவர்களிடையே வந்து அமர்ந்தான். அவன் பெயர் ஸ்வரபானு. கஷ்யப முனிவரின் மகள்வழிப் பேரன். அவன் அப்படி அமர்ந்தைக் கண்ட சூரியனும் சந்திரனும் அமிர்தத்தை வழங்கிக்கொண்டிருந்த மோகினியிடம் அதைச் சொல்வதற்குள் ஸ்வரபானுவிற்கு அமிர்தம் கிடைத்து அவன் அதைக் குடித்தும் விடுகிறான். சூரிய சந்திரர் சொன்னதைக் கேட்ட மோகினி இடம் மாறி அமர்ந்ததற்காக அமிர்தத்தை வழங்கிக் கொண்டிருந்த கரண்டியாலே அவனை தலை வேறு முண்டம் வேறெனத் துண்டித்துவிடுகிறாள்.

ஆனால் அமிர்தத்தை உண்ட அசுரனுக்கு இறப்பேது? அவன் பிரம்மாவை வேண்ட அவரும் ஒரு பாம்பினை வெட்டி பாம்பின் தலையை அவன் உடலோடும், அவன் தலையை பாம்பின் உடலோடும் சேர்த்துவிடுகிறார். மேலும் அவனுக்குத் தண்டனையாக பெருவெளியில் எதிரும் புதிருமாக இருக்க வேண்டும் எனச் சாபமும் பெறுகிறான் ஸ்வரபானு. இப்படிப் பாம்பும் மனிதனும் கலந்த இருவருக்குப் பெயர் ராகு, கேது. தன்னைக் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களைப் பழிவாங்க தன்னருகே அவர்கள் வரும் பொழுது அவர்களை ராகு கேது விழுங்கி விடுகிறார்கள். 

இப்படி ராகுவும் கேதுவும் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதற்குக் கிரகணம் என்று பெயர் தரப்படுகிறது. சூரியன் மறைந்தால் சூரியக்கிரகணம். சந்திரன் மறைந்தால் சந்திரக்கிரகணம். அன்று நடந்ததும் அதுதான். ஒரு சூரியக்கிரகணம். மேலும், கிரகணத்தின் பொழுது வெளியே போகக்கூடாது, அச்சமயம் உண்ணக்கூடாது, குறிப்பாக கர்பிணிப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், கோவில்களை மூடி விட வேண்டும் என்றெல்லாம் இக்கதைகள் மூலம் சொல்லி இருக்கிறார்கள். 

இந்திய நாகரிகம் மட்டுமல்லாமல் வேறு சில நாகரிகங்களிலும் கூட கிரகணத்திற்கு இப்படி பாம்பு விழுங்கும் தொன்மக் கதைகள் கூறப்படுவதுண்டு. பூமியின் மறுபுறம் இருக்கும் அமெரிக்காவில், அந்நாட்டுப் பழங்குடிகளில் ஒன்றான நவாஹோ (Navajo) இனத்தவரும் கிரகணத்தின் பொழுது வெளியே செல்ல மாட்டோம், உண்ண மாட்டோம் என்கிறார்கள். வெகு தொலைவில் இருக்கும் இரு இனங்களில் நம்பிக்கை ஒன்றாக இருப்பது மனித மனம் சிந்திக்கும் விதம் ஒன்றுதான் என்பதற்கான உதாரணமே. 

தொன்மம் இருக்கட்டும். அறிவியல் என்ன சொல்கிறது? 

பூமி ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றுகிறது. நிலவு பூமியைச் சுற்றுகிறது. அப்படி சுற்றும் பொழுது நிலவானது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வருகையில் நிலவு சூரியனை மறைக்கின்றது. இது சூரிய கிரகணம், அதாவது சூரியன் மறையும் நிகழ்வு. இதுவே பூமி சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே வந்தால் சூரியனின் ஒளி நிலவில் படமுடியாமல் பூமி மறைத்து விடுகிறது. சூரியனின் ஒளியை பிரதிபலிக்க முடியாத நிலவு இருள்கிறது. இது சந்திர கிரகணம் என்று அழைக்கப் படுகிறது. சூரிய கிரகணங்கள் அமாவாசையிலும் சந்திர கிரகணங்கள் பௌர்ணமிகளிலும் நிகழும். ஆனால் எல்லா அமாவாசை பௌர்ணமிகளிலும் இது நிகழாது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வரும் பொழுது மட்டுமே கிரகணங்கள் நிகழும். 

நிலவு பூமியை விடச் சிறியது ஆனால் சூரியனோ பூமியை விடப் பல மடங்கு பெரியது. அப்படி இருக்கையில் நிலவினால் எப்படிச் சூரியனை மறைக்க முடிகிறது? அதற்குக் காரணம் பூமியில் இருந்து நிலவும் சூரியனும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதுதான். நிலவை விடச் சூரியன் சுமார் 400 மடங்கு பெரிது. ஆனால் பூமியில் இருந்து நிலவு இருக்கும் தூரத்தை விட சுமார் 400 மடங்கு தொலைவில் உள்ளது. எப்படி நம் கண் அருகே ஒரு விரலைக் கொண்டு வந்தால் சற்று தள்ளி இருக்கும் கட்டத்தை அந்த விரல் மறைக்கிறதோ அது போல அருகில் இருக்கும் சிறிய நிலவு தொலைவில் இருக்கும் பிரம்மாண்டமான சூரியனை மறைத்து விடுகிறது. 

PC - [Illustration by S. Larson from the internet]

நிலவு பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. அதனால் பூமிக்கும் அதற்குமான தொலைவு எப்பொழுது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நிலவு பூமியின் அருகே இருக்கும் பொழுது கிரகணம் நிகழ்ந்தால் நிலவு சூரியனை முழுவதுமாக மறைத்துவிடும். அப்பொழுது பூமியில் சூரிய வெளிச்சம் இல்லாமல் இரவு போலாகி நட்சத்திரங்களைக் கூடப் பார்க்க முடியும். இதனை முழுக்கிரகணம் (Total Eclipse) என்பார்கள். இந்தக் கணத்தில் இருந்து நிலவு லேசாக நகரத் தொடங்கும் பொழுது சூரியனின் ஒரு புள்ளி மட்டும் தெரியும். அக்காட்சி ஒரு வைர மோதிரத்தை ஒத்து இருக்கும். அக்கணத்தை ஆங்கிலத்தில் Diamond Ring என்றே அழைக்கிறார்கள். 

PC  - nasa.com

அப்படி அல்லாது நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமியில் இருந்து தொலைவில் இருக்கும் சமயத்தில் கிரகணம் நிகழ்ந்தால் அப்பொழுது நிலவு சூரியனை முழுவதுமாக மறைக்காது. மேலே சொன்ன உதாரணத்தில் நமது விரலை கண்ணிலிருந்து சற்று தள்ளி கொண்டு போனோமானால் கட்டடத்தை முழுமையாக மறைக்காமல் விரலைச் சுற்றிக் கட்டடத்தின் வெளிப்பகுதிகள் தெரியுமல்லவா, அது போல நிலவு சூரியனை மறைத்தாலும் நிலவினைச் சுற்றி ஒரு வட்டமாக சூரியன் தெரியும். கொஞ்சமாகச் சூரியன் தெரிவதால் முழுக்கிரகணம் போல இருள் கவியாது. இதற்கு வலையக்கிரகணம் (Annular Eclipse) என்று பெயரிட்டுள்ளனர். வலையக்கிரகணத்தின் பொழுது நிலவைச் சுற்றி சூரியன் ஓர் ஒளி வட்டமாகத் தெரியும். அந்த வட்டத்தைத்தான் அழலாரம் (Ring of Fire). ஆரம் என்றால் வட்டம். வட்டமாகத் தொடுக்கப்பட்ட பூமாலையை அதனால்தான் ஆரம் என்கிறோம். அழல் என்றால் நெருப்பு. நெருப்பினால் ஆன வட்டத்தை அழலாரம் எனலாம். 

PC - Jeff Cohen

PC - Jeff Cohen

இந்தப் படத்தில் பூமியில் இருக்கும் ஒருவர், நிலவு அருகில் இருக்கையில் முழுக்கிரகணமாகவும் தொலைவில் இருக்கும் பொழுது வலையக்கிரகணமாகவும் பார்ப்பதை விளக்கி உள்ளார்கள். அப்பொழுது அவர்கள் பார்க்கும் சூரியனின் வடிவம் எப்படி இருக்கும் என்பதையும் காண்பித்துள்ளார்கள். 

PC - [Illustration by S. Larson from the internet]

முழுக்கிரகணத்தின் பொழுதும், வலையக் கிரகணத்தின் பொழுதும் எடுக்கப்பட்ட படங்கள்.


இன்னுமொரு விதமும் கூட உண்டு. பூமி, நிலவு, சூரியன் மூன்றுமே ஒரே நேர்கோட்டில் இல்லாமல் சற்றே விலகி இருக்கையில் நிலவு சூரியனின் ஒரு பகுதியை மட்டும் மறைப்பதுண்டு. அதற்கு பாரிசக்கிரகணம் (Partial Eclipse) எனப் பெயர். கீழிருக்கும் படத்தில், நிலவு அருகில் இருக்கும் பொழுது பூமியில் A எனக் குறிப்பிட்டு இருக்கும் பகுதியில் இருப்பவர்களுக்கு முழுக்கிரகணமும், அதன் இருபக்கங்களிலும் இருக்கும் நிழல் பகுதியில் இருப்பவர்களுக்கும் பாரிசக்கிரகணமும் தெரியும். நிலவு தொலைவில் இருந்தால் B எனக் குறிப்பிடப்பட்ட பகுதியில் இருப்பவர்களுக்கு வலையக்கிரகணமும், அதன் இருபுறமும் இருக்கும் நிழற்பகுதிகளில் இருப்பவர்களுக்குப் பாரிசக்கிரகணமும் தெரியும். 

PC - researchgate.net

PC - Srinivas Patil

PC - Marco Rutiaga

Look at the sun spots! PC Brett Spangler

Stacked images of many clicks at different times. PC Adam Mendel

இதுவே பூமியில் இல்லாமல் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பார்ப்பது முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணமாக இருக்கும். அவர்களுக்கு பூமியின் மேல் நிலவின் நிழல் விழுவது தெரியும். 

PC Bloomberg.com

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 14, 2023) அன்று சூரியக்கிரகணம் நிகழ்ந்தது. நான் வசிக்கும் ஆஸ்டின் நகரில் அது பாரிசக்கிரகணமாகவும், சுமார் நூறு மைல் தொலைவு சென்றால் வலையக்கிரகணமாகவும் பார்க்கக் கிடைத்தது. என் மகன் வானியலில் மிகுந்த ஆர்வமுடையவன். அவனோடு சேர்ந்து நூறு மைல் தொலைவில் உள்ள கெர்வில் (Kerrville) என்ற ஊருக்குச் சென்று கிரகணத்தைப் பார்த்தோம். அந்த ஊரைத் தேர்ந்தெடுத்த காரணம் அங்கு நாஸா (NASA) கிரகணத்தைப் பார்க்கச் செய்திருந்த சிறப்பு ஏற்பாடுகளே காரணம். அவர்களோடு அந்த ஊர் நிர்வாகமும் சேர்ந்து செய்திருந்த ஏற்பாடுகளால் அந்த ஊரே விழாக்கோலம் பூண்டு இருந்தது. கிரகணத்தைக் கண்டதோடு நாஸாவின் விளக்கங்களைக் கேட்க முடிந்தது, அவர்கள் அளித்த கையேடுகளையும் படங்களையும் பெற்றது, அருகிலுள்ள டெக்ஸாஸ் மாநிலக் கல்லூரியின் வானியல் துறையினர் கொண்டு வந்திருந்த தொலைநோக்கிகள் மூலம் கிரகணத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது என்று மிகச் சிறப்பான ஒரு நாளாகக் கழிந்தது. 

Annularity! 

Through a telescope! 

வரும் ஏப்ரல் 8ஆம் தேதி, ஒரு முழுக்கிரகணம் நிகழ இருக்கிறது. இதை எங்கள் ஆஸ்டின் நகரில் இருந்தே பார்க்க முடியும். இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஊர்களில் முழுக்கிரகணத்திற்கான நேரம் அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு செல்ல முடிந்தால் செல்வோம். இந்த இரு கிரகணங்களுக்குப் பின் அமெரிக்காவில் தெரியக் கூடிய சூரியக்கிரகணம் 2044ஆம் ஆண்டில்தான் என்பதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நடந்த கிரகணத்தைக் கண்டு களித்தனர். அடுத்த ஆண்டுக்கு இப்பொழுதே ஆயத்தமாகத் தொடங்கிவிட்டனர். 

PC nasa.com

இறுதியாக இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும். பூமி சூரியனைச் சுற்றுகிறது. ஆனால் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது சூரியன் பூமியைச் சுற்றி வருவது போலத் தெரிகிறது. அந்தப் பாதைக்கு சூரியனின் தோற்றப் பாதை (Apparent Path of the Sun). இந்தப் பாதையை நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதை இரண்டு இடங்களில் கடக்கிறது. அந்த இடங்களுக்கு முறையே ஏறுமுகக் கணு மற்றும் இறங்கு முகக்கணு (Ascending and Descending Nodes) எனப் பெயர். இவற்றை வடக்கு நிலவுக்கணு, தெற்கு நிலவுக்கணு (North and South Lunar Nodes) என்றும் குறிப்பிடுவார்கள். இந்த இருக்கணுக்களில் அருகே நிலவு வரும் பொழுதுதான் கிரகணங்கள் நிகழும்.

PC eclipse geeks.com

இந்த இரு நிலவுக்கணுக்களுக்கு நம் சோதிடவியலில் என்ன பெயர்கள் தெரியுமா? சூரிய சந்திரர்களை முழுங்கும் எனப் பார்த்தோமே, அதே ராகு, கேது! 

1. இந்நிகழ்ச்சி குறித்த நாஸாவின் நேரலைக் காட்சியின் பதிவு - https://www.youtube.com/live/LlY79zjud-Q?si=P5w8XxL-uOowQ25R
2. அமெரிக்கப் பழங்குடியினரின் கிரகணம் பற்றிய நம்பிக்கைகளின் ஆவணப்படம் - https://vimeo.com/230453732

0 comments: