“ஐயா ராஜேஷ் அவர்களே, தீபாவளி நெருங்குகிறதே, தங்கள் இல்லத்தில் எத்துணைத் தித்திப்புப் பண்டங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?” என்று சங்கத்தமிழில் பேசிக்கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்தான் சுரேஷ்.
“என்னடா? தமிழ் எல்லாம் ரொம்ப பலமா இருக்கு? என்ன விஷயம்?”
“நீ வேற கதை, கட்டுரை, புத்தகம்ன்னு எழுத ஆரம்பிச்சுட்டியா? அதான் நானும் நல்ல தமிழில் பேசலாம்ன்னு பார்த்தேன்”.
“நினைச்சது சரிதான். ஆனா நீ பேசின தமிழில் ஒரு குழப்பம் இருக்கே”
“அப்படி என்னடா தப்பாப் பேசிட்டேன்?”
“எத்துணைத் தித்திப்புப் பண்டங்கள்ன்னு ஏன் கேட்ட? எத்தனைத் தித்திப்புப் பண்டங்கள்ன்னு ஏன் கேட்கலை?”
“இது என்னடா பிரச்சனையாப் போச்சு? எத்தனைன்னா பேச்சுத் தமிழ். எத்துணைன்னா இலக்கியத் தமிழ். அவ்வளவுதானே. இதுக்குப் போய் ஏன் இவ்வளவு அலட்டிக்கற?”
“அங்கதாண்டா விஷயமே இருக்கு. எத்தனை வேற, எத்துணை வேற. ஒரு கேள்வி கேட்கறோம். அதுக்கு விடை எண்ணாக இருந்தால் அப்போ கேள்வியில் எத்தனைன்னு இருக்கணும். ஆனா விடை அளவாக இருந்தால் அங்க எத்துணை வரணும்”.
“என்னடா குழப்பற? எனக்குப் புரியற மாதிரி எடுத்துக்காட்டோட சொல்லு”.
“பரோட்டாக் கடைக்குள்ள வந்து சூரி பரோட்டா தின்னுக்கிட்டு இருக்கும் போது அங்க கேட்க வேண்டிய கேள்வி, பரோட்டா சூரி எத்தனைப் பரோட்டா தின்னாருன்னுதான். இங்க எத்துணைப் பரோட்டா தின்னாருன்னு கேட்கக்கூடாது. ஏன்னா இருபத்து மூன்று பரோட்டாக்களை தின்றார், அதுக்கு அப்புறம் கோட்டை அழிச்சுட்டு திரும்பி முதலில் இருந்து ஆரம்பிச்சார்ன்னு சொல்லும் போது உன் கேள்விக்கு விடை இருபத்து மூன்றுன்னு எண்ணிக்கையா வருது பார்த்தியா. அப்போ அங்க கேள்வி எத்தனைன்னுதான் இருக்கணும்”.
“ஓஹோ, இது சரியான மேட்டரா இருக்கே. சரி, நம்பரா பதில் வரும்ன்னா கேள்வி எத்தனைன்னு இருக்கணும். இதே மாதிரி எத்துணைக்கு ஒண்ணு சொல்லு பார்ப்போம்”.
“அவ்வளவுதானே. லவ் டுடேன்னு ஒரு படம். அதுல எஸ்பிபி பாடற பாட்டு ஒண்ணு வரும். என்ன அழகு, எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகுன்னு கேட்க ரொம்ப நல்லா இருக்கிற பாட்டு. ஆனா நாம என்ன சொன்னோம். எத்தனைன்னு வந்தா பதில் எண்ணிக்கையில் இருக்கணும்ன்னு சொன்னோம். அப்போ எத்தனை அழகுன்னு கேட்டா அஞ்சு புள்ளி நாலு ஏழுன்னா சொல்லுவோம்? அங்க எத்தனை அழகுன்னு கேட்கக் கூடாது. எத்துணை அழகுன்னுதான் கேட்கணும். பாடல் எழுதின வைரமுத்துவுக்குத் தமிழ் தெரியாதா? அவர் மெட்டுக்கு அமையணும்ன்னு எத்தனை அழகுன்னு போட்டுட்டார். ஆனா ரொம்ப அழகு, மிகவும் பெரியது, ரொம்ப நேரம் ஆச்சுன்னு எண்ணிக்கையில் இல்லாம அளவாக பதில் வரும் இடத்தில்தான் எத்துணைதான் போடணும்”.
“புரியுது, அப்போ இந்த எவ்வளவு அப்படின்னு சொல்லறோமே அது?”
“அது நாம் பார்த்த ரெண்டுக்குமே பொதுவானது. உன் கையில் எவ்வளவு விரல்கள்ன்னு கேட்கலாம்? அதுக்கு ஐந்துன்னு எண்ணிக்கையில் பதில் வரும். எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கன்னு கேட்கலாம்? ரொம்ப நேரமா அல்லது கொஞ்ச நேரமாகத்தான்னு பதில் வரும். இதே மாதிரிதான் இத்தனை இத்துணை இவ்வளவு, அத்தனை அத்துணை அவ்வளவு எல்லாமே”.
“நன்றாகப் புரிகிறது ஐயா. எனக்கு இது இனிப் பிரச்சனையல்ல என்று நம்புகிறேன்”.
“ம்ஹூம். பிரச்சனை இருக்கு”.
“ஐயையோ, திரும்ப முதலேர்ந்தா? இப்போ என்ன செஞ்சேன்”.
“இது நீ மட்டும் இல்லைடா, பொதுவாகவே நிறையா பேரு செய்யற தப்புதான். பாக்கெட்ல காசு இருக்கான்னு கேட்டா, இருக்கு அல்லது இல்லை. அவ்வளவுதான். அந்த மாதிரி வேற ஆப்ஷன் இல்லாத இடத்தில்தான் இல்லைன்னு சொல்லணும். கேஸ் தீர்ந்து போச்சா? இருக்கு அல்லது இல்லை. அதோட ஓவர்.
ஆனா, நீ கமல் ரசிகனான்னு அந்த காலத்து ஆட்களைக் கேட்டா அவங்க ரஜினி ரசிகனா இருக்கும் பட்சத்துல நான் கமல் ரசிகனல்லன், ரஜினி ரசிகன்னு சொல்லணும். அங்க நான் கமல் ரசிகனில்லைன்னு சொன்னாச் சரி வராது. அதனாலதான் கவிஞர் எப்படிப் பாட்டு எழுதினார் நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை. அங்க இல்லை, அவ்வளவுதான் அதுக்கு மேல ஒண்ணும் கிடையாது.
ஆனா அவரே வேற ஒரு பாட்டு எழுதும் பொழுது வான் நிலா நிலா அல்ல அப்படின்னு எழுதினாரு. ஏன்னா அதுக்கு மாற்றா அடுத்த வரியில் உன் வாலிபம் நிலான்னு எழுதினாரு பாரு. அப்போ வானத்துல இருக்கிற நிலாவுக்கு மாற்றா வாலிபத்தைச் சொல்லும் பொழுது அங்க வான் நிலா நிலா இல்லைன்னு எழுதலை நிலா அல்லன்னு எழுதினாரு. இதெல்லாம் அவரு பாட்டா எழுதி அதுக்கு மெட்டுப் போட்டாங்களா அல்லது மெட்டுக்கு இவர் பாட்டு எழுதினாரான்னு தெரியாது. ஆனா இலக்கணத்தை மீறாம பாட்டு எழுதினதுனாலதான் அவர் கவிஞர். அவருக்கு ஈடு வேற யாரும் ‘இல்லை’. அவ்வளவுதான் மேட்டர்”.
“இரு இரு. நாம பேச ஆரம்பிச்சது அல்ல, ஆனா நீ சொன்ன உதாரணத்தில் ஏன் ரசிகன் அல்லன்னு இருக்கு?”
“வெரி குட். நல்லாத்தான் கவனிக்கற. அல்ல என்பதை எல்லாத்துக்கும் சொல்லக் கூடாது. பேசப்படறது அஃறிணைப் பொருளா, உயர்திணையா, ஒருமையா, பன்மையான்னு எல்லாம் பார்த்து அதுக்கு எது சரியான சொல்லோ அதைத்தான் பயன்படுத்தணும்.
அஃறிணை ஒருமைன்னா அன்று - நான் பார்த்த ஆடு அதுவன்று”.
“டேய், இலக்கணம் சொல்லச் சொன்னா ஆடுன்னு அரசியலை எல்லாம் இழுக்கற?”
“அடப்பாவி. அக்கிரமம் பண்ணாதீங்கடா. சொல்ல வந்ததைச் சொல்ல விடு.
ஆடு - அன்று. சரியா? அதையே ஆடுகள்ன்னு பன்மையில் சொன்னோம்ன்னா அதுக்குத்தான் அல்ல. நான் பார்த்த ஆடுகள் அவையல்ல அப்படின்னு சொல்லற மாதிரி.
இதையே உயர்திணையை எடுத்துக்கிட்டா மூணு விதம் இருக்கு. ஒருமை ஆண், ஒருமை பெண், பன்மை. இந்த மூணும் வரும் போது அதே வரிசைல அல்லன், அல்லள், அல்லர் அப்படின்னு வரணும். உதாரணத்துக்கு
நான் பார்த்த பெண் இவள் அல்லள்
நான் பார்த்த ஆண் இவன் அல்லன்
நான் பார்த்த காவலர்கள் இவர்கள் அல்லர்.
இப்படி மொத்தம் அஞ்சு விதம் இருக்கு”.
“அல்லன், அல்லள், அல்லரா? எனக்கு இந்த அல்லலே வேண்டாம். தலை சுத்துது. இவ்வளவு குழப்பம் இல்லாத வேற எதையாவது சொல்லுடா”.
“உலகத்துல ஆர்வமா இலக்கணம் கத்துக்கறதுன்னா நீ ஒருத்தனாத்தான் இருப்ப போல”.
“இந்த மாதிரி சினிமா உதாரணமெல்லாம் வெச்சுச் சொல்லித் தந்திருந்தா பள்ளிக்கூடத்தில் தமிழ் வாத்தியாருக்குச் சில்லரய சிதற விட்டு இருக்கலாமேடா”
“மூணாவதா இதையே எடுத்துப்போம். சில்லறையா சில்லரையான்னு பலபேருக்குக் குழப்பம் வரும். பெரிய நோட்டுக்குச் சில்லறை, சின்ன நோட்டுக்குச் சில்லரைன்னு கம்பர் காலத்திலேர்ந்து கடி ஜோக் வேற சொல்லுவாங்க. ஆனா இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சா இந்தக் குழப்பமே வராது”.
“சரி, சொல்லு. அதையும் தெரிஞ்சுக்கறேன்”.
“முழுசா இருக்கிற ஒண்ணை, சிறிய பகுதிகளா மாத்திக்கறதுக்குப் பேருதானே சில்லறை. ஒரு நூறு ரூபாய் நோட்டுக்குச் சில்லறை குடுங்கன்னு கேட்டா, பத்து பத்து ரூபாய் காயின் வரலாம், அஞ்சு இருபது ரூபாய் நோட்டு வரலாம். அம்பது ரூவா நோட்டு ஒண்ணு, அஞ்சு ரூவா காயின் பத்து கூட கிடைக்கலாம். இல்லையா? இப்படி முழுசா இருக்கிற ஒண்ணைப் பல பகுதிகளாக்கறதுக்குப் பேருதான் சில்லறை.
பகுதிக்கு அறைன்னு ஒரு சொல் இருக்கு. அதனாலதான் முழுசா இருக்கிற வீட்டின் ஒரு பகுதியை சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறைன்னு பிரிக்கறோம். சில அறைகள் என்பதைச் சேர்த்தா சில்லறைன்னு வருது பாரு. அதுதான் சரியான சொல்.
அரைன்னா என்ன? பாதி. மேல சொன்ன மாதிரி நூறு ரூபாய்க்குச் சில்லறை கேட்டா எப்பவுமே சரி பாதியா ரெண்டு அம்பது மட்டும்தான் தருவாங்களா என்ன? அதனால சில்லரைன்னு சொன்னாத் தப்புதான்”.
“சூப்பர்டா. அம்மா ஸ்வீட் ரெடி ஆயிருச்சு வந்து டேஸ்ட் பாருன்னு கூப்பிடுவாங்கன்னுதான் உன் வாயைப்புடுங்கிக்கிட்டு இருந்தேன். வாசனை வருது. ரெடி ஆயிருச்சுன்னு நினைக்கறேன். நான் அங்க போய் என்ன நடக்குதுன்னு பார்க்கறேன். ஓக்கே பை!”
0 comments:
Post a Comment