Sunday, January 18, 2026

கல்வியா? செல்வமா? வீரமா?

நிதம் எழுதும் குழுமத்தில் சொக்கன் உங்கள் நண்பர், உறவினர் வட்டாரத்திலிருந்து கல்விக்கு ஒருவர், செல்வத்துக்கு ஒருவர், வீரத்துக்கு ஒருவர் என்று மூன்று பேரைப்பற்றிச் சுருக்கமாக எழுதுங்கள் என்றார். எனக்கு மூவர் தேவைப்படவில்லை.
என் அம்மா பெயர் கோமதி. அவர் பிறந்து வளர்ந்த சமுதாயம் இன்றைய சமுதாயத்தை விட மிகவும் மாறுபட்டது. பெண்களுக்கு எவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்துவிட வேண்டும் என்றிருந்த காலம். என் தாத்தா அந்தக் காலத்து மனிதர் என்பதால் என் அம்மாவுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார். திருமணம் ஆகும் பொழுது அம்மாவுக்கு வயது பதினொன்று. கணவர், அவரின் சொந்த அத்தை மகன். இருவரும் கல்லிடைக்குறிச்சியில் ஒரே தெருவில் வாழ்ந்தவர்கள். அடுத்தடுத்த வீடுகள்தாம்.
அவரின் திருமண வாழ்வு அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி அமைந்துவிடவில்லை. பதினைந்து வயது ஆகும் பொழுது முதல் குழந்தை. அந்த மகன் பிறந்த சில வருடங்களிலேயே எதோ நோய்வாய்பட்டு நாற்காலியோடு கட்டிப் போடப்பட்ட சோகம். அதற்குப் பின் இன்னும் இரண்டு மகன்கள். அவர்களுக்கும் ஏதேதோ உடல்நலக் குறைவுகள். சொந்தத்திலேயே திருமணம், அதுவும் சிறுவயதிலேயே என்பதால் இது போன்ற பிரச்னைகள் என்று இன்றைக்குத் தெரிகிறது ஆனால் அன்றைக்கு அவ்வளவு விழிப்புணர்வு யாருக்குமே இல்லை.
இது போதாதென்று அப்பாவிற்கு ஒரு விபத்தில் காலில் பிரச்னை ஏற்பட்டு சரியாக நடக்க முடியாமல் போனது. அதனால் அவருக்கும் நிரந்தர வேலை ஒன்றும் இல்லாமல் ஆனது. ஏதோ சொற்ப வருமானத்தில்தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். இவை எல்லாம் நான் பிறக்கும் முன் நடந்தவை. நான் பிறந்த பொழுது அம்மாவுக்கு வயது முப்பத்து ஆறு, முதல் மகன் பிறந்து இருபத்தோரு வருடங்களுக்குப் பின்பு நான் பிறந்த பொழுது இரண்டாவது மகன் கல்லூரியிலும் மூன்றாவது மகன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.
கல்வி: அம்மா தொடக்கப்பள்ளி முடித்து இடைநிலைப் பள்ளிக்குக் கூடச் செல்லாதவர். ஆனால் அவர் கற்பதைக் கடைசிக் காலம் வரை நிறுத்தவே இல்லை. செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள், நாவல்கள், ஸ்லோகப் புத்தகங்கள் என்று எதையேனும் படித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு எத்தனையோ ஸ்லோகங்கள், பஜனைகள், பக்திப்பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும். கோயில் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அவற்றைச் சொல்வார். மெதுவாக ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் கூடக் கற்றுக் கொண்டார். அவருக்கு கர்நாடக இசையில் ஆர்வம் அதிகம். பாட்டுகளைக் கேட்டுக் கேட்டு ராகங்களைக் கண்டுபிடிக்கக் கற்றுக் கொண்டார். இசை நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்துடன் செல்வார். பெற்றோர்கள் தனக்கு முறையாகக் கர்நாடக இசையைக் கற்பிக்கவில்லை என்பது அவருக்குப் பெருங்குறை.

அம்மாவுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். என் பாட்டி இளவயதிலேயே இறந்துவிட்டதால் அம்மா சமைக்கக் கற்றுக் கொண்டதெல்லாம் அவரின் முயற்சியால்தான். புதிது புதிதாக என்னவெல்லாமோ முயன்று பார்ப்பாள். அப்பளம், வடாம், ஊறுகாய் என்று எதையேனும் செய்துகொண்டே இருப்பார். அம்மா செய்து என்றோ ஒரு நாள் உண்ட பதார்த்தத்தைப் பற்றி இன்று வரை பேசுபவர்கள் உண்டு. கைவினைப் பொருட்கள் செய்வதிலும் ஆர்வம் அதிகம். பிளாஸ்டிக் வயர்கள் கொண்டு கூடைகள் புனைவார். தைப்பது, எம்பிராய்டரி என்று பலதும் அவருக்குக் கைவந்த கலைகள். தோட்டத்தில் இருந்து பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுக்கத் தெரியும். குடும்பத்திலும் சரி, நண்பர்கள் வீடுகளிலும் சரி, எந்த நிகழ்ச்சியானாலும் அம்மாவுக்கு கோலம் போடும் பொறுப்பு வந்து சேர்ந்து விடும். பெரிது பெரிதாக, விதவிதமாக பொடிக் கோலம், மாக்கோலம் என்று அசத்துவார்.
இதெல்லாம் போதாது என்று காலம் மாற மாற மின்னணுப் பொருட்களைக் கையாள்வதிலும் தேர்ந்தார். போன், டேப்லட் எல்லாம் பயன்படுத்தக் கற்றுக் கொண்டார். வாட்ஸாப் போன்ற செயலிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டார். இறுதிக் காலம் வரை அவர் எதையேனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனே இருந்தார். அவரின் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எனக்கும் இறுதி வரை குறையாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா.

செல்வம்: செல்வம் பணத்தைச் சார்ந்தது அல்ல, மனத்தைச் சார்ந்தது என்பது அவர் சொல்லித் தந்த பாடம். அதை வெறும் வார்த்தைகளாகச் சொன்னதில்லை. செயலில்தான் காட்டினார். மிகக் குறைந்த வருவாய் இருந்தாலும் எதற்குமே குறையில்லாத மாதிரி ஒரு தோற்றத்தை அம்மா உருவாக்கி வைத்திருந்தார். விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். யாருக்கும் பசி இல்லாமல் பார்த்துக் கொள்வார். தனக்குக் கிடைத்தவற்றை முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு வாங்கிய பாலில் தயிர் செய்து, அதன் ஆடையை எடுத்து வெண்ணெய் கடைந்து, அதை உருக்கி நெய்யாக்கிக் கொண்டு வீட்டில் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் என்று குறைவில்லாமல் பார்த்துக் கொள்வார்.
சமயத்தில் பல வியாபாரங்களைச் செய்ததுண்டு. வீட்டில் இருந்து கொண்டே புடைவை வாங்கி விற்கும் வேலையை செய்தார். அப்பளம், ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்த காலமும் உண்டு. தான் செய்த பிளாஸ்டிக் கூடைகளையும் மற்ற கலைப்பொருட்களையும் விற்பனை செய்திருக்கிறார். தோட்டத்தில் இருக்கும் முருங்கை மரங்களில் இருந்து காயைப் பறித்து விற்பனை செய்ய என்னைத் தூண்டியது அவர்தான்.
தனக்கென்று வீடில்லை என்பது அவருக்குப் பெரிய குறை. பின்னாட்களில் மகன்கள் மூவர் சொந்த வீடு வாங்கிய பின்புதான் அந்தக் குறை அவருக்கு ஓரளவு தீர்ந்தது. அதுபோல நாங்கள் சொந்தமாக கார் வாங்கி அவரைக் கூட்டிச் சென்ற பொழுதும் பெரிதும் உவந்தார்.
நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை விட, நம்மைக் காட்டிலும் வறியவர்களுக்கு எப்படி உதவலாம் என்று நினைக்க அவர் சொல்லித் தந்ததை விட சிறந்த செல்வம் இல்லை என்றே நினைக்கிறேன்.
வீரம்: “வீரம்னா என்னான்னு தெரியுமா.. பயமில்லாத மாதிரி நடிக்கிறது..” என்பது குருதிப்புனல் என்ற திரைப்படத்தில் வரும் பிரபல வசனம். ஆனால் வீரம் என்பது வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகளை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதும்தான். அந்த விதத்தில் அம்மா பெரிய வீராங்கனைதான்.
சிறுவயதிலேயே திருமணம். பதினைந்து வயதில் பிறந்த முதல் மகன் தனக்கென்று ஒன்றும் செய்து கொள்ள முடியாமல் இருந்த அவலம். அவனையும் முப்பத்து ஏழு வருடங்கள் பார்த்துக் கொண்ட பின் அவன் இறந்து போன சோகத்தை எதிர்கொண்ட விதம். கணவருக்கு கால் முடங்கிப் போய் அவரும் வீட்டோடு இருக்க, கிடைத்த வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொண்ட விதம். மற்ற குழந்தைகளுக்கும் இருதய அறுவைச்சிகிச்சை, வாகன விபத்து என்று உடல்நலக் குறைகள் வந்த பொழுதும் அவற்றைக் கண்டு கலங்காமல் சமாளித்த விதம். மீண்டும் மீண்டும் சென்னை, கோவை, பெங்களூர், மும்பை என்று வேர் விட்டு எழும் பொழுதெல்லாம் ஏதோ காரணத்தால் இடம் மாறி மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க நேர்ந்தாலும் கவலைப்படாமல் தழைத்தெழுந்த விதம். கணவரைப் பறி கொடுத்த நேரத்தில் உடைந்துவிடாமல் மீண்டு எழுந்த விதம். தனக்கே புற்றுநோய் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்த விதம். எழுபது வயதான பின் மொழியும் தெரியாமல், யார் துணையும் இல்லாமல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சென்ற விதம்.
இப்படி வாழ்க்கையில் பிரச்னை வரும் பொழுதெல்லாம் அவர் காண்பித்த தைரியம் எனக்கெல்லாம் பாடம்தான். இவரையும் விட நான் அறிந்த வீரர் என்று யாரைச் சொல்ல?



இன்றைக்கு அவர் இருந்திருந்தால் தொண்ணூறு வயதானதைக் கொண்டாடி இருக்கலாம்.

0 comments: