Wednesday, February 25, 2026

மெழுகுவத்தி


ஊரில் நான் வளர்ந்த காலத்தில் மின்சாரம் எப்பொழுதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. திட்டமிட்ட லோட் ஷெட்டிங், திட்டமிடாமல் நடக்கும் மின்சார வெட்டு என்று எப்பொழுதும் மின்சாரம் இருக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. காற்று அடித்தால் கரெண்ட் போய் விடும். மழை பெய்தால் மின்சாரம் இருக்காது. அது என்னவோ என்றைக்குப் புழுக்கமாக இருக்குமோ அன்றைக்குப் பார்த்து ப்யூஸ் பிடுங்கி விடுவார்கள். எங்கள் வீட்டு வாசலில் ஒரு மின்சாரக் கம்பம் நிற்கும். அதிலிருந்து யார் வீட்டுக்கு எந்த வயர் போகிறது என்று தெரியாத மாதிரி சிக்கலாக வயர்கள் தொங்கும். காக்கி உடை போட்ட மின்சாரத்துறை பணியாளர்கள் அதில் ஏறி எதையோ கழட்டி மாட்டுவது அடிக்கடி நடக்கும். எங்கள் வீட்டு மொட்டை மாடிக்குப் போக எனக்கு அந்த மின்சாரக் கம்பம்தான் குறுக்கு வழி. 


இப்படி மின்சாரம் இருந்தால் உண்டு என்று இருந்ததால் எல்லார் வீட்டிலும் ஹரிக்கேன் விளக்கு, சிம்னி விளக்கு, அகல் விளக்கு, டார்ச் லைட், மெழுகுவத்தி என்று இருக்கும். ஒவ்வொரு அறை மாடத்திலும் தீப்பெட்டியும் மெழுகுவத்தியும் கட்டாயம் இருக்கும். அதிக நேரம் எரிய வேண்டுமானால் ஹரிக்கேன் லைட்டைத்தான் ஏற்றுவார்கள். 


காற்றில் அணையாது, கைப்பிடி இருப்பதால் தூக்கிக் கொண்டு போவது எளிது என்று பல காரணங்களைச் சொல்லலாம். மண்ணெண்ணெய் ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்பது முக்கியக் காரணம். ஆனால் ஆஸ்துமாத் தொல்லையில் அவஸ்தைப்பட்ட எனக்கு அந்த மண்ணெண்ணெய்ப் புகை ஆகாது. அதன் அருகே சிறிது நேரம் அமர்ந்தாலே மூச்சு முட்டத் தொடங்கிவிடும். அதே காரணத்தினால் சிம்னி விளக்கும் எனக்குச் சரி வராது. 


வெளியில் செல்லும் பொழுதோ வீட்டுக்குள் நடமாடும் பொழுதோ மட்டும்தான் டார்ச் லைட். பேட்டரிக் கட்டை விலை அதிகம் என்பதால் அதை அதிக நேரம் போட மாட்டார்கள். அதிலிருந்து வரும் வெளிச்சம் ஒரு இடத்தில் குவிந்திருக்கும் என்பதால் அறை முழுவதுமெல்லாம் வெளிச்சம் வராது. அகல் விளக்குகளில் இருந்து வரும் வெளிச்சம் மிகக் குறைவாக இருக்கும். அதனால் நான் படிக்க வெளிச்சம் வேண்டுமென்றால் மெழுகுவத்திதான். எங்கள் ஊரிலே மெழுகுவத்தி செய்யும் நிறுவனங்கள் சில இருந்ததால் உள்ளூர் தயாரிப்புகளின் விலை குறைவாகத்தான் இருக்கும். 


தரையில் வைத்தால் அதன் வெளிச்சம் ஒரு சிறிய வட்டத்தில்தான் இருக்கும் என்பதால் அதற்குக் கொஞ்சம் உயரம் வேண்டும். கண்ணாடியில் செய்யப்பட்ட மெழுகுவத்தி ஸ்டாண்டுகள் உண்டு. மெழுகுவத்தியில் அடியில் கொஞ்சம் சூட்டைக் காட்டி லேசாக இளகச் செய்து இந்த ஸ்டாண்டுகளி ஒட்டி வைத்தால் அவற்றில் நெட்டுக்குத்தாக மெழுகுவத்தி நிற்கும். எரியும் பொழுது வழியும் மெழுகு இந்த ஸ்டாண்டுகள் இருக்கும் குழியில் சேரும். அதை இளக்கி ஒரு திரியை சொருகி மீண்டும் பயன்படுத்துவது உண்டு. ஸ்டாண்ட் கிடைக்காத நேரத்தில் பழைய பாட்டி ஒன்றைக் கவிழ்த்து அதன் மேல் மெழுகுவத்தியை நிறுத்துவதும் உண்டு. 



மெழுகுவத்தியின் அருகே அமர்ந்து கொண்டு வீட்டுப்பாடம் செய்யும் பொழுதோ, பள்ளிக்கூடப் புத்தகங்களைப் படிக்கும் பொழுதோ ஒன்றும் சொல்லாத அம்மா, கதைப்புத்தகங்கள் படித்தால் மட்டும் கண் கெட்டுப் போய்விடும் என்பார். அன்றைக்குக் கதைப்புத்தகங்கள்தான் அதிகம் படித்ததாலோ என்னவோ இன்றைக்குக் குறைவான பார்வையும் கண்ணாடியுமாக இருக்கிறேன். சமயத்தில் இந்த மெழுகுவத்தியைத் தூக்கிக்கொண்டு நடக்கும் பொழுது உருகிய மெழுகு நம் கைகளில் பட்டுவிடும். ஒரு நொடி சுட்டாலும் அதன் பின் அது நம் தோலில் ஒரு உறைந்து அதை உரித்து எடுப்பது விளையாட்டாகவே இருக்கும். அதற்காகவே மெழுகுவத்தியின் திரிக்கு அருகில் தொடுவதும் நடக்கும். 


மெழுகில் அதிகக் கலப்படம் கிடையாது என்பதால் மெழுகுவத்திப் புகை கருப்பாக வராது. லேசான நறுமணம் கூட இருக்கும். ஆனால் பின்னாட்களில் மெழுவத்திகளில் இருந்து கரும்புகை கிளம்புவதைப் பார்க்கும் பொழுது என்னவெல்லாம் கலந்திருக்கிறார்களோ என்று கவலையாகவே இருக்கும்.  ஆனால் ஒரு தாளை எடுத்து தீச்சுடரின் மேலே காட்டினால் லேசாக கரி படியும். அதன் பின் அதில் தீக்குச்சியை வைத்துப் படம் வரையலாம்.  


சென்னைக்கு வந்த பின் ஒரு நண்பனோடுதான் கிறுத்துமஸ் இரவுகள் கழியும். அப்பொழுது அவன் குடும்பத்தோடு சர்ச்சுக்குச் செல்லும் பொழுது மெழுகுவத்தி கொண்டு சென்று அங்கே ஏற்றி வைப்போம். சர்ச் முழுவதும் மெழுகுவத்தி வாசனை பரவி இருக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது அந்த ஊர்களில் உள்ள சர்ச்சுகளிலும் இதே அனுபவம் கிடைத்திருக்கிறது. 


இன்றைக்கு நானிருக்கும் இடத்தில் மின்சரத் தடை மிக அரிது என்பதால் வீட்டில் மெழுகுவத்தியே கிடையாது. தீப்பெட்டியே கூட எங்கோ ஒன்று இருக்கும் வீட்டில் மெழுகுவத்திக்கு ஏது இடம்? குழந்தைகளுக்குப் பிறந்தநாள் வரும் பொழுது கேக்கின் மேல் வைக்கத்தான் மெழுகுவத்தி வாங்குவது. அதை ஏற்றி உடனே ஊதி அணைத்துவிட்டு எங்கேனும் வைத்துவிட்டால் அது இருக்கும் இடம் மறந்துவிடும். அடுத்த வருடம் மீண்டும் வாங்குவோம். இப்பொழுது அவர்கள் பெரியவர்களாகிவிட்டதால் இதற்கும் தேவை இல்லாது போய்விட்டது. 


மெழுகுவத்தியின் வாசம் மட்டும் இன்னும் நினைவில் நிற்கிறது. 


Monday, February 23, 2026

அண்ணாச்சிக் கடை பார்சல்!

 

சில நாட்களுக்கு முன் நானும் மகளும் எங்கோ சென்றிருந்தோம். அவளுக்குக் கை நிறைய சாக்லேட்டுகள் கிடைத்தன. இரு கைகள் போதாமல் என்ன செய்ய என்று நின்றவளைப் பார்த்துச் சிரித்தேன். ஒரு செய்தித்தாளை எடுத்து ஒரு கூம்பாகச் செய்து அதில் அந்தச் சாக்லேட்டுகளைப் போட்டு மடித்துத் தந்தேன். கண்கள் விரிய இது எப்படி உனக்குத் தோன்றியது என்றாள். என் சிறு வயதுப் புராணத்தை ஆரம்பித்தேன். 

ஊரில் எல்லாம் பலசரக்குக் கடைகள் என்றாலே அண்ணாச்சிக் கடைதான். எங்கள் தெரு முக்கில் ஒரு பலசரக்குக் கடை. அண்ணாச்சி பெயர் சண்முக நாடார். தெருவில் இருந்து கடை முகப்புக்கு நான்கு படிகள் ஏற வேண்டும். கருங்கற்களால் ஆன படிகள். ஏறிப் போனோமானால் ஒரு நீள மரப்பலகை நமக்கும் கடைக்கும் நடுவே போடப்பட்டு இருக்கும். இடப்புறத்தில் சுவரில் சாய்ந்த மாதிரி அண்ணாச்சி அமர்ந்திருப்பார்கள். ஒரு கண் கடைக்குள்ளேயும் மறு கண் கடைக்கு வெளியே நிற்கும் நம்மைப் பார்த்தும் இருக்கும்படி இருப்பார். “சார்வாளுக்கு ஒரு கிலோ புளி போடு”, “இந்தி டீச்சர் நிக்காங்க பாரு, என்ன வேணும்ன்னு கேளு”, “கோமு மாமி பையன் தேங்காய்ப் பத்தை கேக்கான் பாரு” என்று உத்தரவுகள் பறந்து கொண்டே இருக்கும். கடைக்குள்ளே வேலை பார்க்கும் அண்ணன்மார் அவர் சொல்வதைக் கேட்டு சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

அந்த மரப்பலகைக்கு மேலே இரண்டு மூன்று இடங்களில் பெரிதாக வட்ட வடிவில் சுற்றப்பட்ட சணல் கயிறுகள் தொங்கும். பலகைக்குக் கீழே பழைய செய்தித்தாள்கள் வைக்கப்பட்டு இருக்கும். பலகைக்கு வெளிப்புறம் நம்மிடையே வந்து என்ன வேண்டும் என்று ஓர் அண்ணன் கேட்பார். ஒரு கிலோ சீனி என்றோமானால், பலகைக்கு அடியில் இருந்து ஒரு தாளை உருவி லாகவமாக ஒரு சுழற்று சுழற்றினார்கள் என்றால் அது ஒரு கூம்பாக வடிவெடுக்கும். அதன் கீழ் முனையை மடித்துச் சொருகினார்கள் என்றால் சீனி, ரவை, மாவு போன்ற சன்னமான பொருட்கள் கூடச் சிந்தாமல் இருக்கும். 



நாம் கேட்கும் பொருளை அந்தக் கூம்பில் நிரப்பி அதைத் தராசில் வைத்து நிறுப்பார்கள். கையோடு ஒரு கைப்பிடி வைத்த குவளையில் அந்தப் பொருளைக் கூடுதலாகக் கொண்டு வருவார்கள். எடைக்கேற்ப கூம்பில் கொஞ்சம் அதிகம் சேர்ப்பார்கள் அல்லது கொஞ்சம் வெளியே எடுப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் முதலில் வைத்த அளவு நாம் கேட்ட எடைக்கு மிக நெருக்கமாகவே இருக்கும். சரியான எடை போட்ட பின் அந்தக் கூம்பினை எடுத்து மேல் பகுதியை மடித்து தொங்கிக் கொண்டு இருக்கும் சணல் கயிற்றைப் பிடித்து இழுத்து சர் சர்ரெனச் சுத்துவர். போதுமான அளவு சுற்றிய பின் அந்த கயிற்றை பலமாக இழுத்தால் அந்தக் கயிறு அறுந்துவிடும். கூம்பில் இருக்கும் கயிற்றின் இரு முனைகளையும் அழுத்தி நன்றாகச் சுற்றிவிட்டார்கள் என்றால் நாமாகப் பிரிக்கும் வரைப் பிரியாமல்  இருக்கும். எடை குறைவாக இருந்தால் ஒரு தாள். எடை அதிகமாக இருந்தால் இரண்டு தாள்கள் என்றெல்லாம் அவர்களுக்கு இயல்பாகவே தெரிந்துவிடும். 


வெல்லம் போன்று பொடியாக இல்லாமல் இருக்கும் பொருட்களுக்கு கூம்பு வடிவம் கிடையாது. அவற்றைத் தாளில் பொதிந்து அப்படியே கயிற்றைச் சுற்றிவிடுவார்கள். பல பொருட்களை வாங்கினோம் என்றால் வீட்டில் இருந்து கட்டைப்பை எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையேல் அவர்கள் ஓர் அட்டைப்பெட்டியில் போட்டுத் தருவார்கள். எடை ரொம்பவே அதிகமாக இருந்தால் கடையில் நிற்கும் அண்ணன் ஒருவர் சைக்கிளில் எடுத்துக் கொண்டு போய் வீட்டில் தந்துவிடுவார். எண்ணெய் போன்ற திரவங்களுக்கு எல்லாம் தூக்குச்சட்டி எடுத்துப் போக வேண்டும். மூடி இருந்தால் தப்பித்தோம். இல்லை என்றால் சிந்தாமல் வீட்டுக் கொண்டு செல்லும் பொழுது நாரதர் கதைதான் ஞாபகத்திற்கு வரும். 


வீட்டுக்குச் சென்ற பின் அந்தப் பொட்டலங்களைப் பிரிப்பதும் ஒரு கலை. கயிற்றை மெதுவாகப் பிரித்து சிடுக்காகாமல் எடுத்து வைக்க வேண்டும். கூம்பின் கீழே பிரித்தால் கொட்டிவிடும். மேலே இருக்கும் மடிப்பினைப் பிரித்து ஒரு ஓரத்தை அளவாக விழும் படி மடித்தால் சிந்தாமல் சிதறாமல் டப்பாக்களில் கொட்ட முடியும். கொட்டிவிட்டு தாளை நன்றாக விரித்து, அழுத்தித் தேய்த்து மடித்து வைக்க வேண்டும். சணலை ஏற்கனவே இருக்கும் பந்தில் சுற்றி வைக்க வேண்டும். இவை எல்லாம் மறுசுழற்சி முறையில் வீட்டில் பயன்படும் அல்லது பயன்படுத்துவோருக்குத் தரப்படும். 

சொல்லச் சொல்ல மகளுக்கு ஒரே ஆச்சரியம். நெகிழிப்பயன்பாடு இல்லாமல், மக்கிப் போகும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி இருக்கிறீர்களே, அதையும் எவ்வளவு முறை பயன்படுத்தமுடியுமோ அப்படிச் செய்திருக்கிறீர்களே. இன்றைக்கு இங்கு பேப்பர் பையில் தருவது புதிய வழக்கமாகி இருக்கிறது ஆனால் அவை எல்லாம் நீங்கள் செய்தவைதாம் போல என்று ஆச்சரியப்பட்டாள். 

கடைசியாக ஒரு கேள்வி கேட்டாள். என்னிடம் அதற்கு மட்டும் விடையில்லை. அவள் கேட்டது, “இப்படி மக்கும் பொருட்கள், மறுசுழற்சி என்று இருந்த நாட்டில் இப்பொழுது ஏன் எங்கு பார்த்தாலும் குப்பையாக இருக்கிறது?” 


Thursday, February 19, 2026

பிள்ளையார் எழுத்து!

 

என் வீட்டில் பெற்றோரும் சரி அண்ணன்மாரும் சரி, எப்பொழுதுமே படிப்பதை உற்சாகப்படுத்துவார்கள். அந்தந்த வயதுக்கான தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் எப்பொழுதுமே வீட்டில் இறைந்து கிடக்கும். அதையும் தாண்டி மற்றவற்றைப் பற்றிக் கேட்டாலும் அதெல்லாம் உனக்கெதற்கு என்று தட்டிக் கழிக்காமல் பதிலும் சொல்வார்கள். படித்ததெல்லாம் ஆங்கில வழிக் கல்விதான் என்றாலும் நான் ஆங்கிலத்தைச் சரியாகக் கற்றுக் கொண்டது, வீட்டில் ‘தி இந்து’ நாளிதழைப் பார்த்துதான். கையில் பேப்பரும் பக்கத்தில் அகராதியுமாகத்தான் பொழுதுகள் விடியும். இதெல்லாம் பின்னாட்களில்.
சிறு வயதில் நமக்குத் தெரிந்த எழுத்துகள் அந்த நாளிதழில் காணக்கிடைக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சிதான் தொடர்ந்து நான் படிக்கக் காரணம் என்று மனமார நம்புகிறேன். ஆனந்த விகடனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அதில் தென்படும் ஆ என்ற எழுத்து எனக்குத் தெரிந்த ஒன்று என்பதால் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் காண்பிப்பேன். விகடன் தாத்தாவின் பொக்கை வாய்ச் சிரிப்பைப் போல என் முகத்திலும் சிரிப்பிருக்கும். அது போல இந்து பேப்பரில் தென்பட்ட ஆங்கில எழுத்துகளும், அவற்றைச் சேர்த்து சிறு சிறு சொற்களாகப் படிக்கும் பொழுதும் ஏற்பட்ட ஆச்சரியம் இன்னமும் என் நினைவில் தங்கி இருக்கிறது. இப்பொழுதும் எதேனும் புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுது விளம்பரப் பதாகைகளில் இருக்கும் எழுத்துகளைப் புரிந்து கொண்டு படித்துப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு.
அப்படி ஆங்கில எழுத்துகளைப் படிக்கும் பொழுது ஒரு சமயம் எதோ ஒரு வித்தியாசமான எழுத்து தென்பட அப்பாவிடம் போய், “பிள்ளையார் எழுத்தை என்ன சொல்ல வேண்டும்?” எனக் கேட்டேன்.
பிள்ளையார் எழுத்து என எதைச் சொல்கிறேன் என்றே அவருக்குப் புரியவில்லை. எதைச் சொல்கிறேன் என்று காட்டச் சொன்னார். நானும் நாளிதழை எடுத்துக் கொண்டு போய் அவரிடம் காட்டினேன். நான் சுட்டிக் காட்டிய எழுத்து - &. சின்னதாகத் தலையும், தொப்பையும், தும்பிக்கை போல வளைந்த பகுதியுமாய் இந்த எழுத்து எனக்குப் பிள்ளையாரை ஞாபகப்படுத்தியது ஆச்சரியமில்லை. அது எழுத்து இல்லை, அது and என்ற சொல்லுக்கான குறியீடு என்று அப்பா அன்றைக்குச் சொல்லித் தந்தார். அதன் பின் அவரோடு எங்கேனும் செல்லும் பொழுது கடைகளின் பதாகையில் ‘& சன்ஸ்’ என்றெல்லாம் பார்க்கும் பொழுது அவரிடம் பிள்ளையார் எழுத்து என்றே காண்பிப்பேன்.


அப்பா இதை and என்ற சொல்லுக்கான குறியீடு என்றாலும் அதற்கென்று ஒரு பெயர் உண்டு என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். அப்பெயர் ஆம்பெர்சேண்ட் (Ampersand). அதற்கும் பின்னர் மொழிகளின் மீது காதல் வந்து அவற்றைப் பற்றி விரும்பிப் படிக்கத் தொடங்கிய பொழுது ஆம்பர்செண்ட் பற்றிய ஆர்வம் மீண்டும் தலை தூக்கியது. ஏன் இந்தப் பிள்ளையார் வடிவம் என்று படிக்கத் தொடங்கினேன்.
உண்மையில் ஆம்பெர்சேண்ட் வெறும் குறியீடாகத் தொடங்கவில்லை. அது ஆங்கில எழுத்துகளில் ஒன்றாகவே இருந்தது. ஏபிசிடி எனச் சொல்ல ஆரம்பித்து எக்ஸ் வொய் ஸீ (இஸெட்) என்று அப்பொழுது முடிப்பதில்லை. “X, Y, Z, and per se and.” என்று சொல்லுவதே வழக்கமாக இருந்திருக்கிறது. per se என்ற லத்தீன் பதத்திற்கு அதாகவே என்று பொருள். எக்ஸ் வொய் ஸீ இவற்றுடன் அதாகவே and என்ற பொருட்படும்படிதான் “and, by itself, and.” என்று சொல்லி இருக்கிறார்கள். இது நாளடைவில் ampersand என்று மருவி வழங்கப்படுகிறது.
அப்படியானால் இதற்கு & என்ற வடிவம் எப்படி வாய்த்தது? அதற்கும் லத்தீன் மொழிதான் காரணம். அம்மொழியில் ‘et’ என்பது and என்ற பொருளுக்கான பதம். பதப்படுத்தப்பட்ட தோலிலும் பாபிரஸ் காகிதங்களிலும் எழுதும் பொழுது இவ்விரு எழுத்துகளைச் சேர்த்து எழுதத் தொடங்கினர். அப்படிச் சேர்த்து எழுதப்பட்ட வடிவம் உருமாறி உருமாறி இன்றைக்கு & என்று வந்து நிற்கிறது.
இன்னுமொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இதே ‘et’ என்ற பதம்தான் நாம் மற்ற பிற என்பதைக் குறிக்க எழுதும் ‘etc.’ என்பதில் இருக்கும் ‘et’! ‘etc.’ என்பது ‘et cetera’ என்பதன் குறுக்கம். ‘cetera’ என்ற சொல்லுக்கு மற்றயவை என்று பொருள் கொள்ளலாம். ‘et cetera’ என்றால் இவற்றோடு மற்றயவையும் என்பது பொருளாகும். இப்படி நாம் அடிக்கடி பயன்படுத்தும் & என்ற குறியீட்டுக்கும் ‘etc.’ என்ற குறுக்கத்திற்கும் ஒரே வேர் என்பது தெரியாமலேயேதான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
பொதுவாக முறை சார்ந்து எழுதும் பொழுது & என்ற குறியீட்டைப் பயன்படுத்துவது தவறு என்றே கருதப்படுகிறது. முறையாக எழுதும் தருணங்களில் இப்படிக் குறியீடுகளும் குறுக்கங்களும் பயன்படுத்து தவிர்க்க வேண்டிய ஒன்று என்றே விதிகள் சொல்கின்றன. ஆனால் மற்ற குறுக்கங்களும் குறியீடுகளும் தவிர்க்கப்பட்டாலும் & அதற்கான இடத்தைக் கொண்டே இருக்கிறது.
தமிழில் ஏதோவும் ஏதோவும் பின்னே ஞானும் என்பது போன்ற தலைப்புகள் பொதுவாக மனத்திற்குப் பிடித்தவை. அது போல நான் மிகவும் விரும்பிப் படித்த இலக்கண நூல் ஒன்றின் பெயர் - ‘Eats, Shoots & Leaves: The Zero Tolerance Approach to Punctuation’. இப்படி இலக்கண நூலின் தலைப்பில் கூட தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த ஆம்பர்சேண்ட்.
ஆனால் உலகமே இன்றைக்கு ஆம்பர்சேண்ட் என்றாலும் எனக்கு என்னவோ & என்பதைப் பார்க்கும் பொழுதெல்லாம் முதலில் பிள்ளையார்தான் ஞாபகத்திற்கு வருகிறார்!
பிகு: கணினி விசைப்பலகையில் உள்ள ̀~!@#$%^&*()_-+=;:"'|\{[}]<,>.?/ ஆகிய சிறப்பெழுத்துகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய உங்கள் கருத்துகளை, நினைவுகளை எழுதுங்கள் என்ற குறிப்புக்காக எழுதியது.