சில நாட்களுக்கு முன் நானும் மகளும் எங்கோ சென்றிருந்தோம். அவளுக்குக் கை நிறைய சாக்லேட்டுகள் கிடைத்தன. இரு கைகள் போதாமல் என்ன செய்ய என்று நின்றவளைப் பார்த்துச் சிரித்தேன். ஒரு செய்தித்தாளை எடுத்து ஒரு கூம்பாகச் செய்து அதில் அந்தச் சாக்லேட்டுகளைப் போட்டு மடித்துத் தந்தேன். கண்கள் விரிய இது எப்படி உனக்குத் தோன்றியது என்றாள். என் சிறு வயதுப் புராணத்தை ஆரம்பித்தேன்.
ஊரில் எல்லாம் பலசரக்குக் கடைகள் என்றாலே அண்ணாச்சிக் கடைதான். எங்கள் தெரு முக்கில் ஒரு பலசரக்குக் கடை. அண்ணாச்சி பெயர் சண்முக நாடார். தெருவில் இருந்து கடை முகப்புக்கு நான்கு படிகள் ஏற வேண்டும். கருங்கற்களால் ஆன படிகள். ஏறிப் போனோமானால் ஒரு நீள மரப்பலகை நமக்கும் கடைக்கும் நடுவே போடப்பட்டு இருக்கும். இடப்புறத்தில் சுவரில் சாய்ந்த மாதிரி அண்ணாச்சி அமர்ந்திருப்பார்கள். ஒரு கண் கடைக்குள்ளேயும் மறு கண் கடைக்கு வெளியே நிற்கும் நம்மைப் பார்த்தும் இருக்கும்படி இருப்பார். “சார்வாளுக்கு ஒரு கிலோ புளி போடு”, “இந்தி டீச்சர் நிக்காங்க பாரு, என்ன வேணும்ன்னு கேளு”, “கோமு மாமி பையன் தேங்காய்ப் பத்தை கேக்கான் பாரு” என்று உத்தரவுகள் பறந்து கொண்டே இருக்கும். கடைக்குள்ளே வேலை பார்க்கும் அண்ணன்மார் அவர் சொல்வதைக் கேட்டு சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த மரப்பலகைக்கு மேலே இரண்டு மூன்று இடங்களில் பெரிதாக வட்ட வடிவில் சுற்றப்பட்ட சணல் கயிறுகள் தொங்கும். பலகைக்குக் கீழே பழைய செய்தித்தாள்கள் வைக்கப்பட்டு இருக்கும். பலகைக்கு வெளிப்புறம் நம்மிடையே வந்து என்ன வேண்டும் என்று ஓர் அண்ணன் கேட்பார். ஒரு கிலோ சீனி என்றோமானால், பலகைக்கு அடியில் இருந்து ஒரு தாளை உருவி லாகவமாக ஒரு சுழற்று சுழற்றினார்கள் என்றால் அது ஒரு கூம்பாக வடிவெடுக்கும். அதன் கீழ் முனையை மடித்துச் சொருகினார்கள் என்றால் சீனி, ரவை, மாவு போன்ற சன்னமான பொருட்கள் கூடச் சிந்தாமல் இருக்கும்.
நாம் கேட்கும் பொருளை அந்தக் கூம்பில் நிரப்பி அதைத் தராசில் வைத்து நிறுப்பார்கள். கையோடு ஒரு கைப்பிடி வைத்த குவளையில் அந்தப் பொருளைக் கூடுதலாகக் கொண்டு வருவார்கள். எடைக்கேற்ப கூம்பில் கொஞ்சம் அதிகம் சேர்ப்பார்கள் அல்லது கொஞ்சம் வெளியே எடுப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் முதலில் வைத்த அளவு நாம் கேட்ட எடைக்கு மிக நெருக்கமாகவே இருக்கும். சரியான எடை போட்ட பின் அந்தக் கூம்பினை எடுத்து மேல் பகுதியை மடித்து தொங்கிக் கொண்டு இருக்கும் சணல் கயிற்றைப் பிடித்து இழுத்து சர் சர்ரெனச் சுத்துவர். போதுமான அளவு சுற்றிய பின் அந்த கயிற்றை பலமாக இழுத்தால் அந்தக் கயிறு அறுந்துவிடும். கூம்பில் இருக்கும் கயிற்றின் இரு முனைகளையும் அழுத்தி நன்றாகச் சுற்றிவிட்டார்கள் என்றால் நாமாகப் பிரிக்கும் வரைப் பிரியாமல் இருக்கும். எடை குறைவாக இருந்தால் ஒரு தாள். எடை அதிகமாக இருந்தால் இரண்டு தாள்கள் என்றெல்லாம் அவர்களுக்கு இயல்பாகவே தெரிந்துவிடும்.
வெல்லம் போன்று பொடியாக இல்லாமல் இருக்கும் பொருட்களுக்கு கூம்பு வடிவம் கிடையாது. அவற்றைத் தாளில் பொதிந்து அப்படியே கயிற்றைச் சுற்றிவிடுவார்கள். பல பொருட்களை வாங்கினோம் என்றால் வீட்டில் இருந்து கட்டைப்பை எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையேல் அவர்கள் ஓர் அட்டைப்பெட்டியில் போட்டுத் தருவார்கள். எடை ரொம்பவே அதிகமாக இருந்தால் கடையில் நிற்கும் அண்ணன் ஒருவர் சைக்கிளில் எடுத்துக் கொண்டு போய் வீட்டில் தந்துவிடுவார். எண்ணெய் போன்ற திரவங்களுக்கு எல்லாம் தூக்குச்சட்டி எடுத்துப் போக வேண்டும். மூடி இருந்தால் தப்பித்தோம். இல்லை என்றால் சிந்தாமல் வீட்டுக் கொண்டு செல்லும் பொழுது நாரதர் கதைதான் ஞாபகத்திற்கு வரும்.
வீட்டுக்குச் சென்ற பின் அந்தப் பொட்டலங்களைப் பிரிப்பதும் ஒரு கலை. கயிற்றை மெதுவாகப் பிரித்து சிடுக்காகாமல் எடுத்து வைக்க வேண்டும். கூம்பின் கீழே பிரித்தால் கொட்டிவிடும். மேலே இருக்கும் மடிப்பினைப் பிரித்து ஒரு ஓரத்தை அளவாக விழும் படி மடித்தால் சிந்தாமல் சிதறாமல் டப்பாக்களில் கொட்ட முடியும். கொட்டிவிட்டு தாளை நன்றாக விரித்து, அழுத்தித் தேய்த்து மடித்து வைக்க வேண்டும். சணலை ஏற்கனவே இருக்கும் பந்தில் சுற்றி வைக்க வேண்டும். இவை எல்லாம் மறுசுழற்சி முறையில் வீட்டில் பயன்படும் அல்லது பயன்படுத்துவோருக்குத் தரப்படும்.
சொல்லச் சொல்ல மகளுக்கு ஒரே ஆச்சரியம். நெகிழிப்பயன்பாடு இல்லாமல், மக்கிப் போகும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி இருக்கிறீர்களே, அதையும் எவ்வளவு முறை பயன்படுத்தமுடியுமோ அப்படிச் செய்திருக்கிறீர்களே. இன்றைக்கு இங்கு பேப்பர் பையில் தருவது புதிய வழக்கமாகி இருக்கிறது ஆனால் அவை எல்லாம் நீங்கள் செய்தவைதாம் போல என்று ஆச்சரியப்பட்டாள்.
கடைசியாக ஒரு கேள்வி கேட்டாள். என்னிடம் அதற்கு மட்டும் விடையில்லை. அவள் கேட்டது, “இப்படி மக்கும் பொருட்கள், மறுசுழற்சி என்று இருந்த நாட்டில் இப்பொழுது ஏன் எங்கு பார்த்தாலும் குப்பையாக இருக்கிறது?”

0 comments:
Post a Comment