எங்கள் தினம் எழுதும் குழுமத்தில் ஒரு நாள் தரப்பட்ட தலைப்பு - பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் ஓர் அறை. அதற்குள் மனிதர்கள், விலங்குகள் என யாரும் இல்லை. ஆனால், உங்கள் கற்பனை நுழையமுடியாத இடம் உண்டா என்ன? அந்த அறையை மனக்கண்ணில் பார்த்து நுணுக்கமாகக் காட்சிப்படுத்துங்கள்.
எத்தனை நாட்கள் தனியனாக எங்கோ வெளிநாட்டில் இருப்பது? இளம் வயதிலேயே மனைவியைக் கேன்சருக்குப் பலி கொடுத்த பின் வேலை வேலை என்று இருந்தாகிவிட்டது. இன்றைக்கு தேவைக்கும் மேல் பணம் இருக்கிறது ஆனால் நிம்மதிதான் இல்லை. வேலையை விட்டுவிட்டு ஊருக்குப் போகலாம்தான். ஆனால் சும்மா இருக்கும் வயதும் இல்லை மனமும் இல்லை.
ஊரில் இருக்கும் பழைய ஜமீந்தார் அரண்மனை விற்பனைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நினைத்துப் பார்க்காமல் முகவரிடம் பேசி வாங்கச் சொல்லிவிட்டேன். புலிப்பட்டி ஜமீன் என்றால் அந்தக் காலத்தில் அவ்வளவு மரியாதை. வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் தாத்தா அப்பாவெல்லாம் ஜமீனுக்குச் சென்றுதான் முதல் பத்திரிக்கை வைப்பார்கள். ஜமீந்தாரைப் பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். அவரொன்றும் பட்டு உடையும் தங்க நகையுமாகவெல்லாம் இருக்க மாட்டார். சாதாரணமான துணிமணி, நெற்றி நிறைய நீறு என இருந்தாலும் அவர் முகத்தில் இருக்கும் ஒளி நம்மைத் தானாகவே மரியாதை கொடுக்கச் செய்யும். ஆனால் வாரிசு இல்லாமல் அவர் இறந்து போக யார் யார் கையிலோ அவர் சொத்து சென்றடைந்து அரண்மனை விற்பனைக்கு என்பதில் வந்து நிற்கிறது.
சுற்றிப் பார்க்க அத்தனை இடங்கள் இருந்தாலும் தங்குவதற்கு நல்ல இடமில்லாமல் தொலைவில் இருக்கும் திருநெல்வேலியில் தங்க வேண்டியதாக இருக்கிறது. இந்த அரண்மனையை நல்ல தங்குமிடமாகச் செய்தால் செய்யத் தொழிலும் இருக்கும், ஊருக்குப் போன மாதிரி இருக்கும் என்பதுதான் என் திட்டம். ஒரு சுபயோக சுபதினத்தில் எல்லாவற்றையும் விற்றுவிட்டு மூட்டை முடிச்சோடு ஊருக்குக் கிளம்பிவிட்டேன்.
பரந்த இடத்தைச் சுற்றி பெரிய சுவர். உள்ளே நுழைய இரும்புக் கதவுகள். நுழைந்த உடன் அரண்மனை தெரியாத அளவு மரங்கள். அரண்மனையைச் சுற்றி அழகான புல்வெளி. பிரம்மாண்டமான நீள அகலத்தில் மூன்று மாடிகள் கொண்ட கட்டடம். இப்படித்தான் அரண்மனை என் நினைவில் இருக்கிறது. பராமரிப்பற்றுப் பாழடைந்து கிடந்தாலும் செப்பனிட்டால் பழைய கம்பீரத்தைக் கொண்டு வந்துவிடலாம். உள்ளே நுழைந்தால் பழைய படங்களில் வரும் பேய் பங்களாவைப் போல தூசும் ஒட்டடையுமாக இருந்தது. இருந்த அறைக்கலன்கள், கலைப்பொருட்களில் பாதிக்கு மேல் காணாமல் போயிருந்தாலும் மற்றவையாவது இருக்கிறதே என ஆசுவாசமாக இருந்தது. ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே மாடி ஏறினேன்.
ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு வரும் பொழுது அகலக் கால் வைத்து விட்டோமோ என்ற எண்ணம் எழுந்தது. நல்ல வேளை பணத்திற்குக் குறைவில்லை, யாருக்கும் வைத்து விட்டு போக வேண்டிய அவசியமும் இல்லை, நினைத்ததைச் செய்வோம் என்ற நினைத்துக் கொண்டே நடந்த பொழுது கால் இடறி சுவரில் முட்டிக் கொண்டேன். இடித்த வேகத்தில் பூச்சு பொலபொலவென்று உதிர்ந்து மறைக்கப்பட்டிருந்த ஒரு கதவு தெரிந்தது. இழுத்துத் திறக்க கைப்பிடி ஒன்றுமில்லாமல் அந்தக் கதவில் சாவியை நுழைக்க மட்டும் ஓர் ஓட்டை மட்டும் இருந்தது. அந்த ஓட்டையில் ஒரு கண்ணை வைத்துப் பார்த்தேன்.
அத்தனை பெரிய அறை எப்படி அங்கு இருக்க முடியும் என்றே புரியவில்லை. அரண்மனையின் வேறெந்த அறையும் அவ்வளவு பெரிதாக இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாடியின் அகல நீளத்தில் பாதி அளவிற்கு இருக்கும் போலிருந்தது. முதலில் கண்ணில் பட்டது அறையின் நடுவே இருந்தப் பளிங்குத் தரைதான். கருப்பும் வெள்ளையுமாகச் செஸ் பலகை போல இரண்டடிக்கு இரண்டடி கற்கள். ஆங்காங்கே கட்டிப் பிடித்தால் கைகளைக் கோக்க முடியாத பருமனில் மரத்தூண்கள். பார்த்தாலே பர்மா தேக்கு போன்ற உயர் ரக மரத்தால் செய்யப்பட்டவை என்று தெரிந்தது. நான்கு புறங்களிலும் தாழ்வாரம் போல அமைப்பு. நடுவில் இருக்கும் இடம் மட்டும் இரண்டு மாடி உயரம். எங்கிருந்தோ சூரிய ஒளி நுழைந்து வெளிச்சமும் இருட்டுமாய் அந்த அறையை பழங்காலப் படம் போலக் காட்சியளிக்கச் செய்து கொண்டிருந்தது. ஒரு திசையில் இருந்துதான் பார்க்க முடிந்தது என்றாலும் முழுவதும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முடிந்தது.
இந்த தாழ்வாரத்தின் கூரை முழுவதும் மரங்கள் உத்திரங்கள் போல அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே அமர்வதற்காக நாற்காலிகள். இரண்டு நாற்காலிகளுக்கு இடையே ஒரு டேபிள், அவற்றின் மேல் கேடயம், விளக்குகள் என ஏதேனும் கலைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் நீளமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொள்ளும் படியான நாற்காலிகள். பட்டுத்துணியால் கண்கவர் வண்ணங்களில் அவற்றின் இருக்கைகள் அமைந்திருந்தன. சுவர்களில் பெரிய பெரிய படங்கள். ஜமீன் பரம்பரையினரின் படங்களாக இருக்க வேண்டும். வலப்புறச் சுவர் முழுவதும் புத்தக அலமாரியாகச் செய்யப்பட்டிருந்தது. அவ்வளவு வெளிச்சம் இல்லை என்பதால் என்னென்னப் புத்தகங்கள் என்று தெரியவில்லை என்றாலும் நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் இருப்பது தெரிந்தது. நடக்குமிடத்தில் ஆங்காங்கே கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன.
கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால் நடுவில் இருக்கும் இடத்தைச் சுற்றித் தாழ்வாரத்திற்கு மேல் அழகிய மரவேலைப்பாடு கொண்ட உப்பரிகை போன்ற அமைப்பு தெரிந்தது. அதற்குப் பின் இருக்கும் சுவரில் மேலும் படங்கள். கொஞ்சம் வெளிச்சம் அதிகமிருந்ததால் அவற்றை நன்றாகப் பார்க்க முடிந்தது. ரவி வர்மா ஓவியங்களில் பிரதியாக இருக்கலாம். அவர் வரைந்த படங்களாகவே இருந்தாலும் ஆச்சரியமில்லை. நடுநாயகமாக ஒரு பெரிய ஷாண்டிலியர் விளக்கு சூரிய வெளிச்சத்தில் பளபளத்துக் கொண்டிருந்தது. இத்தனை பெரிய அரண்மனையை எப்படிப் பழைய கம்பீரத்திற்குக் கொண்டு வர, அதற்காகும் செலவைத் தாங்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையாக இந்த அறையில் இருந்த பொருட்கள் தோன்றின. ஒரு புறம் நிம்மதியாக இருந்தாலும் எதோ உறுத்திக் கொண்டே இருந்தது.
அறையின் ஒவ்வொரு இடமாக மீண்டும் பார்க்கும் பொழுதுதான் அது என்னவென்று உரைத்தது. மெல்லிய தூசுப் படலம் இருந்தாலும் அந்த அறையில் வெளியில் இருந்த தூசும் ஓட்டடையும் இல்லாமல் இருந்தது. கைவிடப்பட்ட அரண்மனை போலல்லாமல் யாரோ கொஞ்சம் நாள் ஊருக்குப் போயிருந்த மாதிரி அந்த அறை காட்சியளித்ததைக் கண்டு திகைப்பாக இருந்தது. காற்றே நுழைய வழி இல்லாத அந்த அறையில் நட்ட நடுவாகப் போடப்பட்டிருந்த ஆடும் நாற்காலி யாரோ அப்பொழுதுதான் எழுந்து சென்றதைப் போல லேசாக ஆடிக் கொண்டிருந்தது. ஜமீந்தார் வரும் பொழுது எழும் திருநீறும் ஜவ்வாதும் கலந்த வாசம் திடீரென என் நாசியை நிறைத்தது.
இதில் தரப்பட்ட விவரணையை ஆங்கிலத்தில் சாட்ஜிபிடியிடம் தந்தேன். அதற்கு அது வரைந்து தந்த படம் என் மனத்தில் இருந்ததிற்கு மிகவும் நெருக்கமாகவே அமைந்தது!

0 comments:
Post a Comment