Showing posts with label நச். Show all posts
Showing posts with label நச். Show all posts

Tuesday, December 11, 2007

அவள் பறந்து போனாளே...! (ந.ஒ.க.)

காலையில் எழுந்து ஒரு நடை நடந்துவிட்டு அப்படியே காலையுணவையும் முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் இராகவன். கதவைத் திறக்கும் பொழுதே கண்ணில் பட்டது தரையில் கிடந்த அந்தக் கடிதம். உறையில் இருக்கும் கையெழுத்தைப் பார்த்த உடனேயே மலர்ந்தது அவன் முகம். கடிதம் வந்திருப்பது ஜானகியிடம் இருந்துதான். ஊரில் இருந்த வரை கூடவே இருந்தவளை இந்த சென்னைக்கு வந்த பின் பார்ப்பதே அரிதாகி விட்டது. தரையில் இருந்து கடிதத்தை எடுக்கும் பொழுதே அவன் மனம் ஊரை நோக்கிச் சென்றுவிட்டது.

ஜானகி அவனது பக்கத்து வீட்டுப் பெண்தான். அவனை விட இரு வயது சிறியவள். சிறுவயதில் இருந்தே இவனையே சுற்றி சுற்றி வந்தவள். ஊரார் அனைவரும் சிறு வயதில் இருந்தே அவர்களை கணவன் மனைவியாகக் கேலி செய்து வந்தது இருவர் மனதிலுமே ஆழமாக பதிந்து போய்விட்டது. பதின்ம வயது வந்த பின் ஜானகி முன்பு போல் அவனிடம் நெருங்கவில்லை என்றாலும் அவன் மீதான பிரியம் சற்றும் குறைந்ததில்லை. இவனுக்கும் அவளிடம் அன்றைய நிகழ்வுகளைச் சொல்லாமல் தூக்கம் வந்ததில்லை. அப்பொழுதுதான் இராகவன் வாழ்க்கையில் பேரிடியாக விழுந்தது அவன் தந்தையின் மரணம். படித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவன் தலையில் விழுந்தது.

படித்து பட்டம் வாங்கியவர்களுக்கே வேலை கிடைக்காத போது பாதியில் வந்த இவனுக்கு என்ன வேலை கிடைக்கப் போகிறது. ஊரில் ஒன்றும் சரிவர அமையாமல் சென்னைக்கு வந்தும் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. இருந்த சிறு நிலத்தையும் விற்றுதான் ஊரில் இருப்பவர்களும் இவனும் ஜீவனம் செய்து கொண்டிருக்கிறாகள். இந்த முறை சென்ற நேர்காணலில்தான் வேலை கிடைத்துவிடும் போல் இருக்கிறது. நாளை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். நாளையே வேலைக்குச் சேர்ந்துவிட்டு, இந்த வார இறுதியில் சென்று ஜானகியிடம் சொல்ல வேண்டும். விரைவில் திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டியதுதான்.

இவ்வாறாக நினைத்துக் கொண்டிருந்தவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது அவன் கையில் இருந்த கடிதம். திருமணம் பற்றிய நினைப்பால் எழுந்த புன்சிரிப்பு மாறாமல் கடிதத்தை படிக்கத் தொடங்கினான்.

அன்புள்ள ராகவனுக்கு,

என்னை மன்னித்து விடு. இப்படி ஒரு விஷயத்தை நேரில் கூட உன்னிடம் சொல்ல முடியாமல் கடிதம் எழுத வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டேன். இந்தக் கடிதத்தை நீ படிக்கும் பொழுது நான் ஊரை விட்டுச் சென்றிருப்பேன். உன்னைத் தவிர வேறு ஒருவரையும் தெரியாத நான் வேறு ஒருவருக்கு மனைவியாகி இருப்பேன்.


நீ இங்கு வேலை கிடைக்காமல் சென்னைக்கு சென்ற நாள் முதலாகவே அப்பா மாற ஆரம்பிச்சுட்டாரு. காரணம் இல்லாமல் எம்மேல எரிஞ்சு விழறதும் உன்னைப் பற்றிய பேச்சு வந்தால் ஒண்ணுக்கும் உதவாதவன் என்றும் ஒரு வேலை சம்பாதிக்க தெரியாதவன்னும் உன்னை திட்டுவாரு. அது மட்டுமில்லாமல் எனக்கு வெளியிடங்களில் மாப்பிள்ளை பார்க்கவும் ஆரம்பிச்சுட்டாரு. நான் எவ்வளோ சொல்லியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. ஒரு வேலை தேட துப்பில்லை அவன் கையில் உன்னைக் குடுத்து உன் வாழ்க்கையை சீரழிக்க மாட்டேன்னே சொல்லிக்கிட்டு இருப்பாரு.

தீவிரமா மாப்பிள்ளை தேடிக்கிட்டு இருந்த அவரு ஒரு நாள் அவர் நண்பர் குடும்பத்தோட வந்து என்னைப் பெண் பார்க்க ஏற்பாடு செஞ்சுட்டாரு. அவங்களும் பையன் அமெரிக்கா திரும்பப் போறதுக்கு முன்னாடி கல்யாணம் முடிக்கணும் அப்படின்னு அவசரப்பட்டு அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் நடத்தச் சொல்லிட்டாங்க. நான் எவ்வளவோ மாட்டேன்னு சொல்லியும் எங்கப்பா கல்யாணம் நடந்தே தீரும் அப்படின்னு சொல்லிட்டாரு. அன்னிக்கு ராத்திரி நான் ரொம்ப சண்டை போட்டதால பூச்சி மருந்தை குடிச்சு தற்கொலை செஞ்சுக்க போயிட்டாரு எங்க அப்பா. ஒண்ணு இந்த கல்யாணம் நடக்கணும் இல்லைன்னா செத்துடுவேன் என மிரட்டி என்னை கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சுட்டாரு. உன் கழுத்தில் ஒரு தாலி ஏறினாத்தான் என் கழுத்தில் தாலி நிக்கும். அதை செய்வியாடின்னு கேட்ட எங்கம்மாவிற்கு, செய்வேம்மான்னு சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லாமப் போச்சு. இப்படி கட்டாயப் படுத்தி என்னை அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சுட்டாங்க.

என்னை மறந்து விடுன்னு எல்லாம் என்னால சொல்ல முடியாது ராகவன். நானும் உன்னை மறக்க முடியாது. உன்னாலும் என்னை மறக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனால் வாழ்க்கைல நாம ஆசைப்பட்ட எவ்வளவோ நடக்காமல் போனாலும் நாம பாட்டுக்கு நம்ம வழியைப் பார்த்துக்கிட்டுப் போகலையா, அந்த மாதிரி இதையும் தாண்டி போகலாம். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்தால் நாம இருந்ததும் இழந்ததும் ஞாபகத்திற்கு வந்து நம்மை நிம்மதியாவே இருக்க விடாது. அதனால் இனி நமக்குள்ள தொடர்பே வேண்டாம்.


இப்படிக்கு
கண்ணீருடன்
ஜானகி


தொடர்ந்து பிரச்சனைகளையே சந்தித்துக் கொண்டிருந்த இராகவனுக்கு கடிதத்தின் ஒவ்வொரு வரியும் சாட்டையடியாக விழ உடைந்து போய் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான்.

அழுகுரல் சத்தத்தைக் கேட்டு துணுக்குற்ற புதிய காப்பாளர் " என்னய்யா இது, சேர்ந்த முதல் நாளே இப்படி அழுகைச் சத்தம், வா என்னான்னு பார்ப்போம்" எனக் கிளம்பினார். கூட இருந்த உதவியாளர், "அதெல்லாம் கவலைப்படாதீங்கய்யா. இது இந்த காப்பகத்தில் பத்து வருஷமா நடக்கறதுதான். காலையில் சாப்பாடு முடிஞ்ச உடனே வந்து அந்த பழைய கடிதாசியைப் படிப்பான். அப்புறம் நாள் பூரா ஓன்னு அழுவான். மத்தபடி ஆபத்தில்லாதவந்தான்யா." என்றார்.

(சர்வேசனின் நச் என்று ஒரு கதை போட்டிக்காக)